» Personality Development .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Thunivae Thunai- Tamilvanan

Posted on Monday 23 March 2009

துணிவே துணை - தமிழ்வாணன்

6. உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் நீங்க….

வாழ்க்கையில் நமக்குப் பல கடமைகள் இருப்பது போலவே, உரிமைகளும் இருக்கின்றன.அந்த உரிமைகள் பறி போவதற்கான சூழ்நிலைகள் உருவாகுமாயின் அப்போதும் நம் உள்ளத்திலே அச்சம் பிறக்கிறது. உரிமைகள் என்னும்போது உடைமைகளும்கூட அதில் அடங்கும் என்று சொல்லலாம்.

உடமைகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்லலாம் அல்லது பகைவர்கள் வழக்காடிப் பறித்துக் கொள்ளலாம். ஒரு சில சமயங்களில், நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்கூட அவற்றிற்குச் சேதம் ஏற்படலாம். இம்மாதிரியெல்லாம் ஏற்படாதபடிக்கு, நம்மால் முடிந்த வரையில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வது நம் கடமையாகும்.

அந்தக் கடமையை நாம் செவ்வனே செய்து வரும்போது, அதையும்மீறி அவ்வுடைமைகள் பறிபோய் விடுவதுண்டு. அவ்வாறு பறி போகுமாயின், அதுபற்றிக் கவலைப்படுவதால் அடையத் தகுந்த பயன் ஏதும் கிடையாது. அவை இன்னமும் பறிபோகாதிருக்கையிலே, எதிர்காலத்தில் பறி போய்விடுமோ என்று நாமாகவே கற்பனை செய்து கொண்டு அச்சம் அடைவது, அதனினும் பயனற்ற ஓர் அறியாமைச் செயலாகும். இந்த உண்மையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டால், அத்தகைய அச்சங்கள் நாளடைவில் நம் உள்ளத்தைவிட்டே ஒழிந்து போய்விடும்.

உரிமைகளும் ஒரு வகையான உடைமைகளே என்றாலும், இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறை முற்றிலும் வேறானதாகும். நமக்குள்ள ஒவ்வோர் உரிமையுடனும் கூடவே, ஒரு கடமையையும், ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது. ஆகையால், ஒரு குறிப்பிட்ட உரிமையை நாம் இழக்காதிருக்க வேண்டுமானால், அதனோடு ஒட்டிய கடமையையும் நாம் கைவிடாது காக்க வேண்டும்.

தநதையினுடைய சொத்துகளிலே மைந்தனுக்கு உரிமையுண்டு என்றால், அவர் பட்ட கடன்களைத் தீர்க்க வேண்டிய கடமையும் அவனுக்கு உண்டு.அந்தக் கடமையை ஏற்றுக்கொள்ள விரும்பாதவன், அவரது சொத்துக்களின்மீது மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இப்படியே, மனைவியின்மீது கணவனுக்குச் சில உரிமைகள் உண்டு என்றால், அவள்பால் தனக்குள்ள கடமைகளையும் அவன் வழுவாது நிறைவேற்ற வேண்டும். ‘கடமையை நான் நிறைவேற்ற மாட்டேன். ஆனால், உரிமை மட்டும் எனக்கு வேண்டும்’ என்று எதிரிபார்ப்பது, எட்டாத கனிக்குக் கொட்டாவி விடுவது போலாகும்.

தந்தை-மகன், கணவன்-மனைவி என்ற பந்தங்களிலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் போலவே, உலகிலுள்ள எல்லாவகையான பந்தங்களிலும் உரிமைகளும் எப்போதுமே சற்று இனிப்பாகவும், கடமைகள் கசப்பாகவும் இருப்பது இயல்பு. அப்படியின்றி, உரிமைகளைப் போலவே கடமைகளும் எவனுக்கு இனிப்பாக இருக்கின்றனவோ, அவனுடைய எந்த உரிமைக்கும் எந்தக் காலத்தில் எவராலும் ஆபத்து விளைவிக்க இயலாது.

உரிமைகளுக்கு என்று நாம் தனியாகப் பாடுபட வேண்டிய அவசியமே கிடையாது. அப்படிப் பாடுபட்டாலும் அதனால் பலன் ஏற்படமாட்டாது. நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சற்றும் முணுமுணுக்காமல் நாம் முகமலர்ச்சியோடு செய்து வருவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்து வந்தால், நம் உரிமைகள் தாமாகவே நம்மை வந்து அடைந்துவிடும்.

எனவே, தன்னுடைய உரிமைகள் பறிபோய் விடும்போல் தோன்றுகிற ஒரு சூழ்நிலை ஒருவனுக்கு ஏற்படுமாயின், இவன் ஏதோ ஒரு கடமையைச் செய்யத் தவறிவிட்டான் என்பதே அதன் பொருளாகும். இந்த உண்மையை உணர்ந்து தான் செய்யத் தவறிய அந்தக் கடமையை அவன் செய்து முடிக்க முற்பட்டால், தன்னுடைய உரிமை பறி போய்விடுமோ என்ற பயத்திலிருந்து அவன் அப்போதே விடுபட்டுவிடலாம்.

உரிமைகளுக்குக் கூறப்பட்ட இந்த நியதி, பதவிகளுக்கும் நூற்றுக்குநூறு பொருந்தி வரும். உரிமைகளுக்கு இருப்பதுபோலவே, ஒவ்வொரு பதவியை ஒட்டியும் சில பல கடமைகள் இயல்பாகவே அமைந்திருக்கின்றன. அந்தக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கும் வரையில், எந்த மனிதனும் தன் பதவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே நேராது.

கடமைகளைச் செய்யத் தவறினால் பதவி கைநழுவிப் போய்விடுவதற்தான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கும். அப்போது அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயிரம் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையாண்டாலும், அவை பயன் அளிக்கமாட்டா. அத்தகைய குறுக்கு வழிகளில் சிந்தனையைச் செலுத்தாமல் நேர்மையான முறையில் கடமைகளைச் செய்வதுதான், அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி ஆகும்.

எனவே, பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்திற்கு ஒருவன் ஆளாகாது இருக்க வேண்டுமானால், அந்தப் பதவியோடு ஒட்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் அல்லும் பகலும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

உரிமைகளையும் கடமைகளையும் இழக்க நேருவது போலவே, நமக்கு மிகவும் பிரியமான ஒருவரது அன்பை அல்லது நட்பை இழந்துவிட நேருமோ என்ற ஐயப்பாடும் நம் உள்ளத்திலே அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். அந்த அச்சம் நமக்கு வராது இருப்பதற்கு உண்மையான அன்பு அல்லது நட்பின் இலக்கணத்தை நாம் செவ்வனே புரிந்து கொள்ள வேண்டும்.

admin @ 11:32 pm
Filed under: Tamilvanan
Thunivae Thunai- Tamilvanan

Posted on Wednesday 11 March 2009

துணிவே துணை - தமிழ்வாணன்

5. நம்மைப்பற்றித் தவறாக எண்ணுவார்களோ
   என்பதான அச்சம் நீங்க

பிறர், தம்மைக் குறை கூறுவதை யாருமே விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். அந்தப் புகழோ பாராட்டவோ கிடைக்காதபோது அதை எதிர்பார்த்திருந்தவன் ஏமாற்றத்திற்கும் மனச்சோர்வுக்கும் ஆளாகிறான்.

ஒரு விஷயம் அறிந்த இரசிகன், இடமறிந்து ‘சபாஷ்!’ என்று சொன்னால் அதனை ஓர் ஆயிர ரூபாய் சன்மானத்தைக் காட்டிலும் அதிகமாக மதித்து மகிழ்ச்சி அடைவார். ஓர் உண்மையான சங்கீத வித்வான் இசைக் கலைஞர்கள் மட்டுமல்ல நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், சொற்பொழிவாளர்கள் போன்ற எல்லோருமே, மேடைக்கு வந்ததும், சபையிலே நல்ல இரசிகர் யார் யார் வந்திருக்கிறார்கள்

என்பதைத் தம் கண்களால் தேடிப் பார்ப்பதற்கு இதுவே காரணமாகும். இரசிகர்கள் இல்லாவிட்டால் கலைஞர்களுக்கு உற்சாகம் இராது.

உற்சாகம் இல்லாவிட்டால் அந்தக் கலைஞனின் மனோதைரியம் எனப்படுகிற கற்பனாசக்தி வெளிப்பட மாட்டாது. அப்போது அந்தக் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக அமையாது. ஏதோ கடனுக்காகப் பாடிவிட்டு அல்லது ஆடிவிட்டு, தம்மால் முடிந்த அளவில் விரைவாகவே மேடையைக் காலி செய்துவிடுவார். சபையினரும் அவரைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்து கொண்டு வெளியேறுவார்கள்.

இந்த மட்டமான விமர்சனத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்றுதான், ஓர் உண்மைக் கலைஞன் கவலைப்படுகிறான். காரணம், அது, அவனுடைய கலை வாழ்க்கைக்கே உலை வைப்பதாக இருக்கும்!

கலைஞர்கள் மட்டுமல்ல, நம் போன்ற சாதாரணமான மனிதர்களுமே, நம்மைப் பற்றிப் பிறர் மட்டமாக விமர்சனம் செய்துவிடக்கூடாது என்றுதான் அஞ்சுகிறோம். அப்படி அஞ்சுவது நியாயமே. அது அவசியமானதும்கூட!

ஏனென்றால், வாழ்க்கையின் எந்தத் துறையைச் சேர்ந்தவராய் இருந்தாலும், ஒரு மனிதர் புகழோடு வாழவேண்டும். அப்படி முடியாதவர்கள் இந் நிலவுகளில் பிறந்திருக்கவே வேண்டியது இல்லை என்கிறார் திருவள்ளுவர். நாம் பிறவி எடுத்ததன் தலையாய பயனே புகழை ஈட்டுவதுதான் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.

முடிந்தால் புகழைத் தேடிக் கொள்தற்கு நாம் பாடுபடலாம். அது முடிக்காவிட்டால், இகழையாவது தேடிக் கொள்ளாமல் இருப்பதற்கு, நம்மால் இயன்றவரையில் பாடுபட்டே ஆக வேண்டும். இது நாம் வாழ்க்கையில் மறவாமல் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நெறிகளில் ஒன்று ஆகும்.

இகழைக் தேடிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சான்றுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும. அப்போது உலகில் எவருமே நம்மைக் குறை கூற முற்படமாட்டார்கள் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

பிறர் நம்மை எப்போது குறை கூறுகிறார்கள் தெரியுமா? முதலில், நம்முடைய மனச்சான்றே நம்மைக் குற்றம் சாட்ட வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நம்மீது குற்றம் சாட்டமுடியும். மனச்சான்று நம்மைக் குறை கூறாது இருக்கும் வரையில், உலகில் எவராலுமே நம்மைக் குறை கூற இயலாது.

ஆனால், நாம் நம்முடைய சிந்தனையிலோ செயலிலோ எந்த ஒரு தவறுக்கும் ஆளாகாமல் நேர்மையாக நடக்கும் வரையில் நம்முடைய

மனச்சான்றும் நம்மைக் குறை கூறமாட்டாது. நேர்மை தவறும் போதுதான் அது குறை கூறத் தொடங்குகிறது. அதனை அடுத்து, உலகமும் நம்மைக் குறை கூற முற்படுகிறது.

உலகத்துக்குத் தெரியாமல், நாம் சில தவறுகளைச் செய்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். உலகத்துக்கு மறைக்கப்பட்ட அந்தத் தவற்றை, நம் உள்ளத்திற்கும் மறைத்துவிட முடியுமானால், நாம் அதைப்பற்றி கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். ஆனால், நாம் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்தாலும் நாம் செய்யும் ஒரு சிறு தவற்றைக்கூட நம் உள்ளத்திற்குத் தெரியாமல் மறைத்துவிட முடியாது.

உண்மையில் நம்மையும் அறியாமல் எப்போதோ சில சமயங்களில் செய்யப்படுகிற சிற்சில தவறுகளைத் தவிர மற்றப் பிழைகள் அனைத்தையும் நாம் உளமாரத்தான் செய்து வருகிறோம். அப்படிச் செய்யும்போது, அந்தத் தவறுகளைப் பற்றிய நினைவு அடிக்கடி நம் உள்ளத்தை உறுத்துகிறது. அதன் எதிரொலியாக உலகம் நம்மைப் பழி தூற்றுகிறது.

‘நாம் செய்த தவறுதான் உலகத்துக்குத் தெரியாதே, அப்படி இருக்க, உலகம் நம்மை எந்த ஆதாரத்தின்மீது பழி தூற்றமுடியும்?’ என்று கேட்கப்படலாம். இந்த இடத்தில்தான், இயற்கை நியதியின் ஒரு முக்கியமான இரகசியம் அடங்கியிருக்கிறது!

மனித உள்ளத்திலே உணர்வு மனம் என்றும், உள்ளுணர்வு மனம் என்றும் இரண்டு பகுதிகள் இருப்பதாக இன்றைய மனஇயல் விஞ்ஞானம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இவற்றுள், ஒரு மனிதனுடைய உணர்வு மனத்திற்கும், மற்றொருவனுடைய உணர்வு மனத்திற்கும் தொடர்பு கிடையாது. அதாவது, ஒருவன் தன்னுடைய உணர்வு மனத்தில் என்ன நினைக்கிறான் என்பது, இன்னொருவனுடைய உணர்வு மனத்திற்குத் தெரியாது.

ஆனால் உள்ளுணர்வு மனங்களின் தன்மை அப்படிப்பட்டது அல்ல. ஒரு மனிதனுடைய உள்உணர்வு மனத்திற்கும், அவனோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ள இன்னொரு மனிதனுடைய உள்ளுணர்வு மனத்திற்குமிடையே, ஒரு நுணுக்கமான இணைப்பு அமைந்துவிடுகிறது. அதாவது, நாம் பிறரோடு ஒரு சிறிது நேரம் பழக நேர்ந்தாலும், அல்லது பிறர் கவனத்தை ஒரு சிறிது நேரம் காக்க நேர்ந்தாலும், அப்போதே அந்தப் பிறருக்கும் நமக்கும் உள்ளுணர்விலே ஒரு தொடர்பு உருவாகி விடுகிறது.

அதன் விளைவு என்னவென்றால், நம் உணர்வு மனத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ நம் உள்ளுணர்வு மனத்தில் நிகழுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும், அந்த மற்றவர்களது உள்ளுணர்வு மனத்திலும் தாமாகவே பிரதிபலிப்பதை நம்மால் ஒருபோதும் தடுத்துவிட இயலாது.

எனவே, நம் உள்ளுணர்வு மனத்தில் ஒரு குற்ற உணர்ச்சி பிறந்து, ‘நீ ஒரு குற்றவாளி!’ என்று நம் மனச்சான்று நம்மைக் குற்றம் சாட்டும்போது, நம்மோடு தொடர்பு கொண்ட மற்றவர்களது உள்ளுணர்விலும் அது உடனே பிரதிபலித்துவிடுகிறது. அதன் காரணமாக அந்த மற்றவர்களாலும் நாம் குற்றவாளிகள் என்பதை உணர முடிகிறது.

ஆனால், அந்த உணர்ச்சி அவர்களது உணர்வு மனத்தின் எல்லைக்குள் வருவது இல்லை. வந்தால், நாம் செய்தது என்ன குற்றம் என்பது அவர்களுக்கு தெளிவாகப் புலப்பட்டுவிடும். அப்படியின்றி அது அவர்களுடைய உள்ளுணர்வு மனத்தின் எல்லைக்குள்ளேயே அடங்கிருப்பதால் நாம் செய்தது என்ன குற்றம் என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. எனினும், நாம் எதோ ஒரு குற்றத்தைச் செய்திருக்கிறோம் என்ற உணர்வு மட்டும் அவர்களிடத்தே மிகவும் உறுதியாக உருவாகி விடுகிறது.

அடுத்தபடியாக, நாம் செய்த குற்றம் எதுவாக இருக்கக்கூடும் என்ற யூகத்திலே, அவர்களுடைய உணர்வு மனம் தீவிரமாக ஈடுபடத் தொடங்குகிறது. அந்த முயற்சியில் அது ஒரு சரியான முடிவுக்கும் வரக்கூடும்; அன்றி ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிடக்கூடும். அது அவ்வப்போது ஏற்படுகிற சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தது. சரியான முடிவுக்கு வந்தால், அவர்கள் நாம் மறைவாகச் செய்த தவற்றை உள்ளது உள்ளபடியே கண்டுபிடித்தவர்களாகவிடுகிறார்கள். அவர்களது யூகத்தின் முடிவு பிழைபட்டதாய் இருக்குமானால், நாம் செய்த உண்மையான தவற்றை அவர்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக வேறொரு தவற்றைக் கண்டு பிடிப்பார்கள்; அதாவது, நாம் செய்த தவற்றை விட்டுவிட்டு, நாம் செய்யாத ஒரு தவற்றிற்காக நம்மீது பழி சுமத்துவார்கள். இதுதான் இயற்கையின் நியதி.

இதன்படி, ஒருவன் திருடாமல் இருக்கையிலேயே அவன்மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்படலாம். ஒருவன் கொலை செய்யாமல் இருக்கையிலேயே அவன்மீது க் குற்றம் சுமத்தப்படலாம். ஒழுக்கம் தவறாது இருக்கையிலேயே ஒரு பெண்மணியின் மீது அபவாதங்கள் கூறப்படலாம். அப்படியானால் அதன் பொருள் என்ன?

திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவர், போலீசார் கூறுகிற அந்தக் குறிப்பிட்ட திருட்டை செய்யாதவராய் இருக்கலாம். ஆனால், போலீசாருக்கோ மற்றவர்களுக்கோ தெரியாமல், அந்தத் திருட்டுக் குற்றத்திற்குச் சமமான வேறொரு குற்றத்தை அவர் இரகசியமாகக் செய்திருக்கிறார் என்பதே அதன் பொருள் ஆகும்.

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர் போலீசார் கூறுகிற அந்தக் குறிப்பிட்ட கொலையைச் செய்யாதவராய் இருக்கலாம். ஆனால், போலீசாருக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாமல் அந்தக் கொலைக் குற்றத்திற்குச் சமமான வேறொரு குற்றத்தை அவர் இரகசியமாகச் செய்திருக்கலாம்.

அபவாதத்திற்கு ஆளாகின்ற பெண்மணி, ஊரார் பழி தூற்றுகிற அந்தக் குறிப்பிட்ட தவற்றைச் செய்யாதவராய் இருக்கலாம். ஆனால் ஊரிலுள்ள எவருக்குமே தெரியாமல் அந்தக் குற்றத்திற்குச் சமமான வேறொரு குற்றத்தை அவர் இரகசியமாகச் செய்திருக்கலாம்.

எனவே, ‘நான் தவறு செய்யாதிருக்கும்போதே என்மீது வீண் பழி சுமத்துகிறார்கள்!’ என்று அந்தப் பெண்மணி கூறுவது வெறும் போலி உரையே ஆகும்.

அதேபோல், ‘நான் திருடாமல் இருக்கும் போதே போலீசார் என்மீது திருட்டுக் குற்றம் சுமத்துகிறார்கள்!’ ‘நான் கொலை செய்யாமல் இருக்கும்போதே என் மீது கொலைக் குற்றம் சாட்டுகிறார்கள்!’ என்று மற்றவர்கள் அங்கலாய்ப்பதும் வெறும் போலி உரைகளே.

அதுமட்டுமல்ல, நாம் மறைவாகச் செய்த ஒரு குற்றமானது உடனேயும் வெளிப்படலாம்; பத்து நாட்களுக்குப் பிறகும் வெளிப்படலாம்; அல்லது பத்து ஆண்டுகள் சென்ற பிறகும் வெளிப்படலாம் அல்லவா?

அவ்வாறே, நாம் செய்யாத குற்றத்திற்குச் சுமத்தப்படுகிற பழிக்குக் காரணமாக நம்மால் உண்மையிலேயே இழைக்கப்பட்ட அந்த இரகசியக் குற்றமானது, உடனேயும் பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். பத்து நாட்கள் கழித்தோ அல்லது பத்து ஆண்டுகள் கழித்தோகூடப் பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எப்படியும், சற்று முன்னதாகவோ பின்னதாகவோ அது பலன் தரப்போவது உறுதி. எனவே, ‘நாம் அந்தக் குறிப்பிட்ட குற்றத்தைச் செய்து மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. இனிமேல் நாம் அதனால் பாதிக்கப்பட மாட்டோம்’ என்று கருதுவது தவறு. அங்ஙனமே, ‘நாம் இப்போதுதான் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்திருக்கிறோம். ஆகையால், இதனுடைய பின் விளைவுகள் நம்மை வந்து பற்றித் துன்புறுத்துவதற்கு இன்னும் மிக நீண்ட காலமாகும்!’ என்று எண்ணுவதும் தவறே ஆகும்.

இந்த உண்மையானது நம்முடைய உணர்வு மனத்திற்குத் தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமல் போகலாம். ஆனால் உள்ளுணர்வு மனத்திற்கு இது மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அதனால்தான் அது நம்மை அவ்வப்போது உறுத்திக்கொண்டு வருகிறது. அந்த உறுத்தல்தான் அச்சம் என்ற வடிவத்தில் நம்மால் அறியப்படுகிறது.

ஆகவே, பிறரால் குற்றம் சாட்டப்படுதல் அல்லது குறை கூறப்படுதல் என்ற நிலைகளுக்கு நாம் ஆளாகாது இருக்க வேண்டுமாயின், நாம் எந்தக் காலத்திலும் வெளிப்படையாகவோ அன்றி இரகசியமாகவோ எந்த ஒரு குற்றத்தையும் செய்யாதிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நாம் நாலு பேர் அறிய வெளிப்படையாகச் செய்த குற்றங்களைக் காட்டிலும், மறைமுகமாகச் செய்த குற்றங்கள்தாம் நம் மனத்தை அதிகமாக உறுத்துகின்றன. அந்த உறுத்தலிலிருந்து விடுபட வேண்டுமாயின் நாம் செய்த அந்த ரகசியக் குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதே அதற்குரிய சரியான வழியாகும்.

காந்தியடிகள் தாம் சிறுவராய் இருந்தபொழுது இரகசியமாக மாமிசம் சாப்பிட்டார். அது அவருடைய மனத்தைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்தது. அந்த உறுத்தலைப் பொறுக்கமாட்டாமல் தம் தந்தையிடம் சென்று அவர் உண்மையைத் தெரிவித்தார். உடனே அவருடைய மனம் சாந்தியடைந்தது. மனச்சாந்தி பெறுவதற்கு உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதைப் போன்ற உபாயம் இன்னொன்று இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், உண்மையை ஒப்புக் கொள்வதற்கும் ஓர் அபாரமான தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளம் வயதிலேயே காந்தியடிகளிடம் இருந்தது. அதனால்தான் பிற்காலத்தில் அவர் ஒரு மகாத்மாவாகப் பரிணமிக்க முடிந்தது.

நாம் எல்லாம் அம்மாதிரி மகாத்மாக்கள் அல்லவே! உரியவரிடம் சென்ற உண்மையை ஒப்புக்கொளளக்கூடிய தைரியத்தை நம் போன்ற சராசரி மனிதர்களிடத்தில் எதிர்பார்க்க முடியாது!

இதைக் கருத்தில் கொண்டுதான், கிறிஸ்துவர்கள் பாவ மன்னிப்பு என்ற ஒரு சடஙகை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை பாதிரியாரிடம் சென்று தாம் செய்த பாவங்களை எல்லாம் மனம் திறந்து வெளியிட்டு அவர் மூலமாக அவர்கள், இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கை மனப்பூர்வமானதாய் இருக்குமாயின், இறைவன் அவர்களை நிச்சயம் மன்னித்து விடுகிறார் என்பதில் ஐயமில்லை. அந்த மன்னிப்பை நாம் பெற்றுவிட்டோம் என்ற நம்பிக்கையில், அவர்களுடைய மனம் சாந்தி அடைகிறது.

இவ்வாறு சாந்தி அடைந்துவிட்டால், அப்புறம் அந்த மனத்திலே எந்த ஓர் உறுத்தலும் ஏற்பட மாட்டாது. உறுத்தல் என்ற குற்ற உணர்ச்சி மறைந்துவிட்டால் அந்தக் குற்றத்தின் பின் விளைவுகளைப் பற்றிய அச்சமும் நம் உள்ளத்தை விட்டு மறைந்துவிடும்.

இறைவனிடமிருந்து இத்தகைய பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு, கிறிஸ்தவர்கள் மட்டும்தான் உரியவர்களா? அல்லவே அல்ல. மனிதராகப் பிறந்த எல்லாருமே அதற்கு உரியவர்கள்தாம். அதுமட்டுமல்ல, இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்கு இடையிலே ஒரு பாதிரியாரோ அல்லது அவரைப் போன்ற ஒரு தெய்வீகப் பெரியாரோ கிடைத்தால் மிகவும் நல்லதுதான். அப்படி கிடைக்காவிட்டால், அதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எங்கும் நிறைந்துள்ளவர் இறைவன். நம் உள்ளத்தின் உள்ளேயும் இருக்கத்தான் செய்கிறார். நாம் செய்த பாவங்களை எண்ணி நாம் உளமார உருகி வருந்திக் கண்ணீர்விட்டால், அவர் அதை உணராமல் போகமாட்டார். உணர்ந்து, நம்மைக் கருணையோடு மன்னிப்பார் என்பதில் நாம் கடுகளவும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை.

நாம் அவ்வாறு வருந்திக் கண்ணீர் விடும் போதே, நம் உள்ளத்தில் ஒரு சாந்தி பிறந்துவிடும். இறைவன் நம் தவறுகளை மன்னித்துவிட்டார் என்பதற்கு அந்தச் சாந்தியே சான்று ஆகும். நம் உள்ளத்தில் அத்தகைய சாந்தி பிறந்துவிட்டால் நாம் செய்த தவறு அல்லது செய்யாத தவறுகளுக்காக நம்மீது குற்றம் சாட்ட முற்படுகிற மற்றவர்கள் உள்ளத்திலும் (நம்மைப் பொறுத்த அளவில்) சாந்தி ஏற்பட்டுவிடும்.

அதாவது, அவர்களது உள்ளுணர்வில் நம்மீது உருவாகி இருந்த வெறுப்பு உணர்ச்சி அல்லது பகைமை உணர்ச்சி அவர்களையும் அறியாமல் தானாகவே மறைந்துவிடும்.

உலகியல் வாழ்க்கையில் ஒரு மனிதன் தெரிந்தோ தெரியாமலோ சில குற்றங்களைச் செய்துவிடுகிற கட்டாயத்திற்கு ஆளாகி விடுவதைத் தவிர்க்க முடியாது; தடுக்கவும் முடியாது. ‘பிழையிலான் கடவுள் அன்றி; மனிதரில் எவரும் இலர்!’ என்பது ஆன்றோர் கருத்து. குற்றங்கள் செய்வது மனித இயல்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவ்வாறு குற்றங்களைச் செய்யும்போது, நாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறோம். அதாவது, நம்முடைய மனச்சான்று நம்மைக் குறை கூறுகிறது. அந்த மனச்சான்றின் எதிரொலியாக மற்றவர்களும் நம்மைக் குறை கூறுகிறார்கள்.

மற்றவர்கள் அவ்வாறு குறை கூறுவதற்குச் சற்று கால தாமதம் ஆனால்கூட அதுபற்றிய அச்சம் இப்போது முதலே நம் உள்ளத்தைக் கவ்வத் தொடங்கிவிடுகிறது. அந்த அச்சத்திலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்குரிய சிறப்பான வழி ஒன்றுதான். அதாவது, நாம் செய்த குற்றத்தை நினைத்து உளமார வருந்தி கண்ணீர் வடிக்க வேண்டும். அப்படி வடித்தால், உடனே நம் உள்ளத்தைப் பற்றிக் கொண்டிருந்த அச்சம் அகன்று சாந்தி பிறக்கும்.

அங்ஙனம் நம்முடைய உள்ளுணர்விலே ஒரு சாந்தி பிறந்துவிடுமாயின், நம்மைக் குறை கூறுபவர்கள் அல்லது குற்றம் சாட்டுபவர்களின் உள்ளத்திலும் நம்மீது உள்ள எதிர்ப்பு உணர்ச்சி மறைந்து (நம்மைப் பொறுத்தமட்டில்) சாந்தி பிறந்துவிடும். அப்புறம் அவர்களை எண்ணி நாம் கவலைப்பட்டுக் கொள்ள வேண்டிய அவசியமே இராது. இதுவே, இதற்கு முந்தின பக்கங்களில் நாம் விரிவாக ஆராய்ந்து வந்த விஷயங்களின் சாரம்.

ஆனால், செய்த தவறுக்காக உளமார வருந்திக் கண்ணீர் விடுதல் என்பது, எல்லோராலும் எளிதிலேயே இயலக்கூடிய காரியம் அல்ல. அதற்கு ஒரு சிறப்பான மனப்பக்குவம் வேண்டும். அவ்வாறு ஒரு முறை கண்ணீர் விட்டவர்கள், தாம் எந்தக் குற்றத்திற்காக கண்ணீர் விட்டார்களோ, அந்தக் குற்றத்தை மட்டுமல்ல; மற்றைய எல்லாக் குற்றங்களையுமே செய்வதற்கு அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களது அரும் துணையாக நின்று காப்பாற்றும்.

சுருக்கமாகச் சொன்னால், நம்மால் இயன்ற வரையில் எந்த ஒரு தவறுக்குமே ஆளாகாமல் வாழ்க்கை நடத்த நாம் அல்லும் பகலும் மிகவும் விழிப்புணர்ச்சியோடு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தும் சில தவறுகள் அவ்வப்போது நேர்ந்து விடுமாயின்,

அவற்றிற்கான போலிச் சமாதானங்களை நமக்கு நாமே சொல்லிக் கொள்ளாமல், அந்தத் தவறுகளை எண்ணி எண்ணி வருந்தப் பழக வேண்டும். இந்தப் பழக்கம்தான் நமக்குப் பரிபக்குவத்தைத் தரும். அந்தப் பரிபக்குவம் முதிர முதிர, நாமும் காந்தியடிகளைப் போல் ஒரு மகாத்மாவாக வளர்வதற்கான வாய்ப்புகள் கூட உருவாகிவிடலாம் என்றால், அது மிகையாகாது.

அப்படிப் பார்க்கும்போது, நாம் செய்யும் குற்றங்களே நம்மை ஒரு புனிதமான மனிதராகப் பரிணாமப்படுவதற்கு உதவி புரியக்கூடும் என்று ஆகிறது அல்லவா? ஆம்! சில சமயங்களில் விஷ மருந்துகளே கொடிய நோய்களைக் குணமாக்கப் பயன்படுவதுபோல், நமது குற்றங்களும், அவற்றிற்குச் சரியான முறையில் நாம் பரிகாரம் தேடும் போது, நம்மைக் குணவான்களாக ஆக்கப் பயன்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க,நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சில காரியங்களைச் செய்யத் தவறியதாக, மற்றவர்கள் நம்மைக் குறைகூறும் சந்தர்ப்பங்களும் வாழ்க்கையிலேயே ஏற்படுவதுண்டு. அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் ஆளாகிவிடுவோமோ என்ற அச்சம் அப்போது நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் தன்னால் முடிந்த வரையில் படிக்கிறான், பரீட்சை எழுதுகிறான். அந்தப் பரீட்சையிலே அவன் சிறிதும் எதிர்பாராத கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கு அவனால் சரியான விடை எழுத முடியாமல் போய்விடுகிறது. அதன் விளைவாக அவன் தேர்வு எழுதிய நாளிலிருந்து, பத்திரிகைகளிலே அதனுடைய முடிவு வெளிவருகின்ற நாள் வரையிலே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சங்கீத வித்வானுக்குத் திடீரென்று தொண்டை கம்மிவிடுகிறது. அதன் விளைவாக அவரால் நன்றாகப் பாடமுடியவில்லை. அந்தக் கச்சேரி அவருக்கு ஒரு தோல்வியாகிவிடுகிறது. அதுபற்றி அவர் மிகவும் வருத்தமடைகிறார். பத்திரிகைகள் தம்மைப் பற்றி மிகவும் மட்டமாக எழுதுமோ என்று அவர் அச்சம் அடைகிறார். பத்திரிகைகள் அப்படி எழுதிவிட்டால், தமக்கு அடுத்தாற்போல் வரக்கூடிய வாய்ப்புகளை அது பாதிக்குமோ என்று அவர் மேலும் பயப்படுகிறார். இந்த மாதிரி அச்சங்களுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது.

ஒரு முடவனால் விரைவாக ஓடமுடியவில்லை என்றால், அது அவனுடைய குற்றமல்ல. ஓர் ஊமையால் செம்மையாகப் பேசமுடியவில்லை என்றால், அது அவனுடைய குற்றமல்ல. முடவன் ஓடுவான் என்றும், யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி யாரேனும் எதிர்பார்த்தால் அது அவர்களுடைய குற்றம்.

சங்கீத வித்வானால் அன்று அவ்வளவுதான் பாட முடிந்தது. அது அவருடைய குற்றமல்ல. தொண்டை கம்மிய நிலையில் அவர் சிறப்பாகப் பாடுவார் என்று விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தால், அது அவர்களுடைய குற்றமே!

அதேபோல், மந்த மதி படைத்த ஒரு மாணவனால் தேர்விலே தேற முடியவில்லை என்றால், அது அவனுடைய குற்றமல்ல. அவனால் முடிந்தது அவ்வளவுதான்.அவன் எப்படியும் தேறிவிடுவான் என்று அவனது பெற்றோர்களோ மற்றவர்களோ எதிர்பார்த்திருந்தால, அது அவர்களுடைய குற்றமே!

மந்த மதியினனாக இருந்தபோதிலும்கூட அவன் தன்னால் இயன்ற வரையில் முயன்று படித்திருக்கிறான். அதற்குமேல் அவனால் என்ன செய்ய முடியும்?

தொண்டை கம்மிய நிலையிலும், அந்த சங்கீத வித்வான் தன்னால் இயன்றவரையில் முயன்று பாடியிருக்கிறார். அதற்குமேல் அவரால் என்ன செய்ய முடியும்?

இப்படியே, உலகியல் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு நம்மால் இயன்றவரையில் முயன்று பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபட்டு நல்லபலன் கிடைக்காமற் போனல், அது நம்முடைய குற்றமல்ல. அதுபற்றி யாரும் நம்மைக் குறை கூறுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

‘நம்மீது குற்றமில்லை. ஆகையால் நாம் யாருக்கும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என்ற உண்மை நம் உணர்வு மனதிற்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும், உள்ளுணர்வு மனம் அச்சம் அடைகிறது. அதற்குக் காரணம் என்ன என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காரணம் வேறொன்றுமில்லை. இன்று நாம் நம்முடைய இயலாமையால், தோல்வி அடைவது போல, இதற்கு முன்னால் மற்றவர்கள் நம்முடைய இயலாமையால் தோல்வி அடைந்த சமயங்களில், அவர்களைப் பார்த்து நாம் பரிகாசம் பண்ணியிருக்கிறோம். அவர்களைக் குறை கூறி இழிவுபடுத்தி இருக்கிறோம். அதற்குப் பழியாக, நம்முடைய இந்தத் தோல்வியைக் கண்டு, மற்றவர்கள் நம்மை பரிகசிப்பார்களோ, அல்லது இழிவுபடுத்துவார்களோ என்று நமது உள்ளுணர்வு அச்சம் அடைகிறது. அவ்வளவுதான் விஷயம்.

நாம் கிண்டல் செய்தோமோ, அவரே தான் இப்போது நம்முடைய தோல்வியைக் கண்டு கிண்டல் செய்ய வேண்டும் என்ற நியதி இல்லை. நம்மால் பழிக்கப்பட்டவர், பதிலுக்கு நம்மைப் பழிக்க விரும்பாத பெருந்தன்மை படைத்தவராக இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் தப்பித்துவிட முடியாது. சமுதாயம் என்பது ஒரு முழுமையான அமைப்பு. அதில் எந்த ஓர் அங்கத்தை நாம் தாக்கினாலும் மற்றைய அங்கங்கள் நம்மைத் திருப்பித் தாக்க முனைந்து முற்படும். எளியவரை வலியார் வாட்டினால், அந்த வலியாரை அவரினும் வலியவர்கள் வாட்டாமல் விடமார்கள் என்பது இயற்கையின் நியதி.

இந்த நியதி நம் உணர்வு மனதிற்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உள்ளுணர்வு மனதிற்கு அது கட்டாயம் தெரிந்தே இருக்கும். ஆகவே தான் அது அச்சம் அடைகிறது. அந்த உள்ளுணர்வு மனம் எதை எண்ணி அஞ்சுகிறதோ, அது நடந்தே தீரும் என்பது இயற்கையின் மற்றொரு நியதி. அத்தகைய ஒரு மாபெரும் ஆற்றல், நம் உள்ளுணர்வு மனதிற்கு இயல்பிலேயே அமைந்துள்ளது.

இவ்வாறு, நம் உள்ளுணர்வு மனம் அச்சமடையாது இருக்க வேண்டுமாயின், அதற்கு ஒரே வழிதான் உண்டு. அதாவது, இனிமேலாயினும் நாம் பிறருடைய இயலாமையைக் கண்டு, நையாண்டி செய்யாமலும், குற்றம் சுமத்தாமலும் இருக்கப் பழகவேண்டும். அந்தப் பழக்கம் நன்கு உறுதிப்பட்டு விடுமானால், அதற்கப்புறம் நம்முடைய தோல்விகளைப் பற்றிய அச்சமோ, கவலையோ, நம் உள்ளத்திலே ஒருநாளும் தலைதூக்கமாட்டாது. ஆனால் ஒன்று. உண்மையிலேயே நம்முடைய இயலாமையின் காரணமாக ஏற்படும் தோல்விகளுக்கு மட்டும்தான் இந்தப் பரிகாரம் பொருந்தும். நம்முடைய கவனக் குறைவாலோ அல்லது அக்கறையின்மையாலோ ஏற்படுகிற தோல்விகளுக்கு இது கொஞ்சமும் பொருந்தாது.

எடுத்துக்காட்டாக, நாம் மேலே குறிப்பிட்ட மாணவன், இயல்பிலேயே மந்தமதியினனாக இராமல், நல்ல நுண்ணறிவு படைத்தவனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அவன் தேர்விலே தோல்வி அடைவதற்கு நியாயமில்லை. இருந்தாலும் பாடங்களை அக்கறையோடு படிக்காமல், படிக்கவேண்டிய நேரத்தில் ஊரைச் சுற்றிவிட்டு, அல்லது சினிமா பார்த்தவிட்டு, வீண் பொழுது போக்கியதன் காரணமாக அவன் தோல்வி அடைவானாயின் அவன் நிந்திக்கப்பட வேண்டியவனே!

அதே போன்று, சங்கீத வித்வானுக்குத் தொண்டை சரியாக இருந்தும், அவர் அளவுக்கு மிஞ்சி குடித்துவிட்டு மேடையில் வந்து தாறுமாறாகப் பாடி கச்சேரியைப் பாழ்படுத்தி விடுகிறார் என்றால், அவரும் கண்டனத்துக்குரியவரே எனபதை எவராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்டவர்கள் தம் தவற்றுக்குரிய தண்டனையை அதாவது பிறரால் கடுமையாக விமர்சிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்தத் தண்டனையை அவ்வாறு ஏற்றுக் கொள்ள ஆயுத்தமாகி விடுவது ஒன்றுதான் அது பற்றிய அச்சத்திலிருந்து அவர்கள் விடுபவதற்குரிய வழியாகும்.

சுருக்கமாகச் சொன்னால், எந்தக் காரியத்தையும் நம்மால் முடிந்தவரையில் சிறப்பாகச் செய்வதற்கு உளமார முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சி செய்வதோடு நம்முடைய கடமை தீர்ந்துவிடுகிறது. அந்த முயற்சி நல்ல வெற்றியை அளிக்குமானால், அதுபற்றி மகிழ்ச்சி அடைவதில் தவறில்லை; தோல்வி அடையுமானால் அதுபற்றிக் கவலைப்படுவதில் பொருளில்லை. இறுதியான வெற்றி அல்லது தோல்வி அறியப்படுவதற்கு முன்னதாகவே தோல்வியை எண்ணி அச்சம் அடைவது கொஞ்சமும் அறிவுடைமை ஆகாது. ‘வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், நீ உன் காரியங்களைச் செய்து கொண்டிரு!’ என்கிறது பகவத்கீதை.

-தொடரும்

admin @ 2:31 am
Filed under: news
Thunivae Thunai- Tamilvanan

Posted on Tuesday 10 March 2009

துணிவே துணை - தமிழ்வாணன்

4. உடல்நலம் பற்றிய அச்சம் நீங்க….

த்தகைய அச்சத்திலும் இரண்டு வகைகள் இருக்கின்றன.

தமக்கு இல்லாத நோய்களையெல்லாம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அந்த அச்சத்திலேயே வாடி வருந்துபவர்கள் சமுதாயத்தில் மிகப் பலர் இருக்கிறார்கள். மற்றபடி தம் இடத்தே உண்மையான சில குணங்குறிகளைக் கண்டு, தமக்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற அஞ்சுகிறவர்களும் உண்டு. இவர்களுள், பிந்தியவர்களின் அச்சத்தைக் காட்டிலும் முந்தியவர்களின் அச்சம்தான் எளிதில் போக்க இயலாததாக இருக்கும்.

உண்மையிலேயே ஒருவருக்கு நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுமானால், அந்த நோயை வராமலே தடுத்துவிடலாம். அல்லது, வந்தாலும் போக்கிவிடலாம். ஆனால், நோயின் அறிகுறிகளைத் தாமாகவே கற்பனை செய்து கொண்டு கஷ்டப்படுபவர்களை எப்படிக் குணப்படுத்துவது? அவ்வாறு கற்பனை செய்வதே ஒரு மனநோயின் அடையாளமாகும். ஆகையால், அதனை ஒரு மனஇயல் மருத்துவரைக் கொண்டுதான் குணப்படுத்த வேண்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி? நோய்களின் குணங்களைப்பற்றி விரிவாக விளக்கிக் கூறுகிற புத்தகங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்லூரியின் மாணவர் அல்லாத ஒருவர் முதன் முறையாக அத்தகைய புத்தகங்களில் ஒன்றைப் படிப்பாரானால் அதில் பேசப்பட்டுள்ள பல நோய்களின் அறிகுறிகள் தம்மிடத்து ஏற்கெனவே இருந்து வருவது போன்ற மனப்பிராந்தி அவருக்கு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் இம்மாதிரிப் புத்தகங்களைப் படிக்கவே கூடாது. இது தேவையா அவருக்கு?!

காலரா இருக்கும் ஊர்களுக்குச் சென்றால், ஒரு சிலருக்கு வயிற்றைக் கலக்குவதுபோல் இருக்கும். வாந்தி வருவதுபோல் தோன்றும். இவை இரண்டும் காலரா நோயின் அறிகுறிகள். ஆனால், உண்மையில் அந்த நோய்க் கிருமிகள் அவர்களது உடலுக்குள்ளே புகுந்திருக்கமாட்டா. அந்த நோயும் அவர்களுக்கு வரமாட்டாது. இருந்தாலும், அந்த நோய் வந்துவிட்டது போன்ற ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டுவிடும். ஒரு சிலருக்குத் தலைசுற்றலும்கூட ஏற்படக்கூடும். இவை எல்லாம் ஒரு பலவீனமான உள்ளத்தின் அடையாளங்கள். இப்படிப்பட்டவர்கள் தமக்கு அச்சத்தைத் தருகிற நோய்கள் நிலவும் இடத்திற்கு அருகில்கூட செல்லக்கூடாது.

அவ்வாறாயின், அந்தப் பலவீனமான உள்ளத்துடனேயே அவர்கள் கடைசி வரையில் வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மனத்திற்கு நல்ல வலிமையைத் தேடிக் கொள்வதையே அவர்கள் தம் முதற் கடமையாகக் கருதவேண்டும். அதற்கு எத்தனையோ வழிவகைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இங்கு விவரிப்பது என்றால் இடம் போதாது. உரிய நூல்களைப் படித்து, அல்லது உரிய வல்லுநர்களைக் கேட்டு அவர்கள் மூலம் அந்த வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அளவு மனோவலிமையைப் பெற்றிருப்பவர்கள் கூடத் தமக்கு ஏதேனும் நோய் வந்துவிடக் கூடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவது உண்டு. அத்தகைய அச்சத்தின் காரணமாகவே, உலகெங்கிலும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் பலவகையான நோய்த் தடுப்பு முறைகளையும், மருந்துகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னமும் கண்டுபிடித்து வருகின்றனர். காலராத் தடுப்பு மருந்து, அம்மைத் தடுப்பு மருந்து போன்றவை எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவையே.

எந்த நோயையும் வந்தபின் குணப்படுத்துவதைவிட வரும் முன் காப்பதே சிறப்பானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அத்தகைய பாதுகாப்பு உணர்ச்சியின் காரணமாகச் சில நோய்த் தடுப்பு முறைகளை வாழ்க்கையில் ஒருவர் கடைப்பிடிப்பாராயின், அவரைப் பயங்கொள்ளி என்று குறைகூற முடியாது. இன்னும் சொல்லப்போனால், நோயைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாகி விடாமல் தம்மைக் காத்துக் கொள்வதற்காகவே அத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார். அது உண்மையில் வரவேற்கத்தக்கதே ஆகும்.

பஸ்ஸிலே நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் ஒரு தொழுநோயாளி என்று தெரிந்தால், உடனே நம் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்படுகிறது. அவருடைய கையோ காலோ தற்செயலாக நம் உடம்பில் பட்டிருக்குமானால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் ஒரு சிறு நமைச்சல் ஏற்படுவது போன்ற உணர்ச்சிகூடக் காணப்படலாம். அது வெறும் பிரமையே தவிர, வேறு அல்ல. இருந்தாலும், நாம் அதை அப்படிக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக, அந்த மனிதருடைய தொழுநோய் நம்மைத் தொற்றிக்கொண்டுவிட்டதோ என்று அஞ்சுகிறோம்.

ஆனால், உண்மையில் தொழுநோய் என்பது அவ்வளவு எளிதாகத் தொற்றிக்கொள்ளக்கூடியது அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்துகொண்டு, பல்லாண்டு காலமாய் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வருகிற கணவன் மனைவியிரிடையே கூட ஒருவரைப் பீடித்துள்ள தொழுநோய் இன்னொருவரைப் பற்றாமல் இருப்பதைப் பல இடங்களில் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அப்படியிருந்தும், ஒரு சில நிமிடங்கள் அந்த நோயாளியின் அருகிலே நாம் உட்கர்ந்திருக்க நேர்ந்த காரணத்தால், நம் உள்ளத்திலே ஓர் அச்சம் தோன்றிவிடுகிறது.

புற்றுநோய் கண்டவர்களை நாம் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்தால், நம் உள்ளத்தில் ஏதோ ஒருவகையான பயம் தோன்றுகிறது. அந்த நேரத்தில், நம் உடம்பிலே எங்கேனும் ஒரு சிறு கட்டி புறப்பட்டால்கூட, உடனே நமக்கும் அந்த நோய் வந்துவிட்டதோ என்று நாம் நடுங்கிச் சாகிறோம்.

இதேபோல் காசநோய், மலேரியா, டைஃபாய்டு உள்ள நோயளிகளோடு நெருங்கிப் பழக நேருகிற சமயங்களிலும், நாம் இவ்விதமே அச்சத்துக்கு ஆளாகிறோம். ஆனால், இது ஒரு தேவையில்லாத அச்சமாகும்.

தமக்கு நோய் வந்துவிட்டதோ, வந்துவிடுமோ என்ற நியாயமான அச்சம் ஒருவருக்கு ஏற்படுமானால், உடனே அவர் ஒரு திறமை வாய்ந்த டாக்டரிடம் சென்று தம் உடம்பைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அந்தப் பரிசோதனையின் போது உடம்பில் உண்மையிலேயே நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். உடம்பில் நோய் எதுவுமே இல்லை என்று தெரிந்தால் அப்புறம் அதைப்பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா?

ஒரு சிலரால் அப்படி நிம்மதியாக இருக்க முடிவதில்லை. ‘இப்போது நோய் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இனிமேலும் அது வரமாட்டாது என்பது என்ன நிச்சயம்?’ என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தை உறுத்தத் தொடங்கும்.

அப்படிப்பட்டவர்கள்தாம், அஞ்சுகின்ற நோய்களை வராமலே தடுத்து நிறுத்தத்கூடிய தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பு ஊசிகளுக்குக் கட்டுப்படாத நோய்களாய் இருந்தால் அவர்கள் தம் உடம்பில் இயல்பாகவே அமைந்துள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, பிராணாயாமம் இவற்றை ஒழுங்காகச் செய்துவருவது, மற்றும் ஆரோக்கிய விதிகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருவது, இவையெல்லாம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான சிறப்பான உத்திகளாகும். இவற்றோடுகூட, மருத்துவ நிபுணரால் பரிந்து உரைக்கப்பட்ட டானிக்குகளையும் சாப்பிடலாம்.

இப்படியெல்லாம் செய்து வந்தால், நாம் நோய்களைப் பற்றிய அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வரலாம். அப்படியும் ஒருவருக்கு அச்சம் போகவில்லை, நிம்மதி வரவில்லை என்றால், ஒரு வகையான மனநோய்க்கு மன இயல் நிபுணர்களைத்தான் அணுகவேண்டும்.

‘ஆரேக்கிய விதிகளைக் கடைப்பிடிப்பது போன்ற உத்திகளால் ஒருவர் தம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே அவர் நோய்களிலிருந்து தப்பிவிட முடியுமா?’ என்று கேட்கப்படலாம். ஓருவர் எவ்வளவுதான் ஆரோக்கிய விதிகளைக் கடைப்பிடித்தாலும் டானிக்குகளையும் சத்தான உணவுகளையும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும், அப்போதுகூட அவருக்குச் சில நோய்கள் வந்துவிடக் கூடும் என்பது உண்மையே. ஆனால், அதற்காக இப்போதே ஏன் கவலைப்பட வேண்டும்? நோய்கள் வந்தபிறகு உரிய மருந்துகளைச் சாப்பிட்டு அவற்றைக் குணப்படுத்திக்கொண்டால் போகிறது. அப்படியும் குணமாகாத நோய்களாக அவை இருந்து விடுமாயின், அதற்கு யாரால் என்ன செய்ய முடியும்? தீராத இல்லாளோடு இல்லறம் நடத்துவதுபோல, அவற்றோடு தொடர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கே நாம் தயாராகி விடவேண்டும். ஒருவேளை அது நம் உயிருக்கே உலை வைக்கக் கூடிய நோயாக இருப்பின், அந்நோயின் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கப்போகிற அந்த மரணத்தை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும்.

தவிர்க்கமுடியாதது எதுவாய் இருந்தாலும், அதை சகித்துக் கொள்வதற்கு ஆயத்தமாகிவிடுவதே அறிவுடமை ஆகும். அப்படியின்றி, அதை எண்ணி அஞ்சி அஞ்சி சாவது விவேகம் ஆக மாட்டாது.

உடம்பு என்று இருந்தால், நோய்கள் வரத்தான் செய்யும்; உடம்பு உள்ள வரையில் நோய் உண்டு. உடம்பு போய்விட்டால், அப்புறம் நோயே இராது. இது இயற்கையின் நியதி.

ஆனால், அதற்காக நாம் எப்போதும் நோய்களை எதிர்பார்த்த வண்ணமே வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு நாம் ஆசைப்படுவது தவறு அல்ல. உண்மையில் நோயற்ற வாழ்வுதான் நமது நியாயமான குறிக்கோளாக இருக்க வேண்டும். அத்தகைய வாழ்வைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் ஊக்கத்தோடு மேற்கொள்ளவும் வேண்டும். நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல், சத்தான உணவுகளையும் டானிக்குகளையும் சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல், பிராணாயாமம் பயிலுதல் இவையெல்லாம் அத்தகைய முயற்சிகளே ஆகும்.

இந்த முயற்சிகளுக்குப் பிறகு நோய் வருமானால், அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படக்கூடாது. ‘நம்மால் ஆனதை எல்லாம் செய்துவிட்டோம். இனிமேல், எது வந்தாலும் வரட்டும்!’ என்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்வதுதான் அச்சத்தை வெல்லுதற்கு உரிய சரியான வழியாகும்.

‘மனத்தை மட்டும் அப்படித் திடப்படுத்திக் கொண்டால் நோய் போய்விடுமா?’ என்று கேட்கப்படலாம். மருந்துகளால் குணமாகாத பல வியாதிகள் மனோவலிமையால் குணமாகிவிடுவது உண்டு என்பதை இக்காலத்திய மருத்துவ விஞ்ஞானமே மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. அதன்படி உரிய முறையில் நம்முடைய மனோவலிமையை பெருக்கிக் கொள்வோமானால், அதுவே நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றிவிடக்கூடும். அப்படிக் காப்பாற்றவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அச்சத்தால் மட்டும் நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி விடமுடியுமா?

நம்முடைய அச்சமானது வருகிற நோயை வராமல் தடுத்துவிடாது; வந்த நோயையும் குணப்படுத்திவிடாது. இன்னும் சொல்லப் போனால் வராத நோயை விரைவில் வரவழைப்பதற்கும், வந்த நோயைக் குணமாகவிடாமல் தடுப்பதற்கும் மட்டுமே அச்சம் உதவி புரியும். இந்த உண்மையை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வதே நோய்களைப் பற்றிய அச்சத்திலிருந்தும் நாம் விடுபடுவதற்கு உதவி புரியும்

admin @ 2:40 am
Filed under: Tamilvanan
Thunivae Thunai- Tamilvanan

Posted on Monday 9 March 2009

துணிவே துணை - தமிழ்வாணன்

3. வறுமை பற்றிய அச்சம் நீங்க….

ந்த அச்சம் நியாயமாக ஏழைகளிடம்தான் காணப்படவேண்டும். ஆனால், ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்களிடத்தில்தான் இது அதிகமாகக் காணப்படுகிறது.

நாளைய உணவுக்கு என்ன செய்வோம் என்று ஏழைகள் கவலைப்பட்டால், அதை யாரும் தவறு என்று கூற முடியாது. ஆனால், ஓரளவு பணம் வைத்திருப்பவர்கள், தாம் வறுமைக்கு ஆளாகிவிட நேருமோ என்று அஞ்சுகிறார்கள். இதைப் போன்ற ஒரு விபரீதம் வேறு என்ன இருக்கிறது?

வறுமைக்கோட்டிற்குக் கீழேயே தம் வாழ்நாள் அனைத்தையும் கழித்துக் கொண்டிருக்கிற ஏழைகள்; பெரும்பாலும் தம் வறுமையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. இப்படிச் சொல்வது, உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. காரணம், அவர்கள் வறுமையிலேயே பழகிப் போனவர்கள். தலைமுறை தலைமுறையாகப் பழகிப் போனவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.

கடலில் சென்று மீன் பிடிப்பதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் மீனவர்கள் எப்படிக் கடலைக் கண்டு பயப்படுவதில்லையோ, பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட பாம்பாட்டிகள் எப்படிப் பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லையோ, காடுகளிலேயே கூடாரம் அடித்து வாழ்கின்ற குருவிக்காரர்கள் எப்படி நரியைக் கண்டு பயப்படுவதில்லையோ, மயானங்களின் நுழைவாயில்களிலேயே குடியிருக்கின்ற மயானக் காவலர்கள் எப்படிப் பேய், பிசாசுகளுக்குப் பயப்படுவதில்லையோ, திருடர்கள் எப்படி இருட்டைக் கண்டு பயப்படுவதில்லையோ, சாக்கஸ் வித்தைக்காரர்கள் எப்படி அங்குள்ள சிங்கத்தையும் புலியையும் கண்டு பயப்படுவதில்லையோ, போர் வீரர்கள் எப்படித் துப்பாக்கியைக் கண்டு பயப்படுவதில்லையோ, அப்படியே ஏழைகளும் வறுமையைக் கண்டு பயப்படுவதில்லை.

ஆனால், பணக்காரர்கள் அதைக் கண்டு உண்மையிலேயே அச்சம் கொள்கிறார்கள். நம்மைச் சூழ்ந்து உள்ள ஏழை எளியவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து என்றேனும் ஒரு நாள் நமக்கும் அதே போன்ற ஒரு நிலை வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அச்சம் அடைகிறார்கள்.

துணிவுள்ள சிந்தனையாளர்களோ, அந்த ஏழைகளைப் போலவே உண்ண உணவில்லாமல், உடுத்த உடை இல்லாமல், குடியிருக்க ஓர் குடிசை இல்லாமல் தாமும் ஓர் இழிநிலை எய்தி விடக்கூடும் என்று அச்சம் கொள்வதில்லை. அந்த அச்சம் அவர்களுடைய உணர்வு மனத்தில் பிறப்பதில்லை. அதனால் அத்தகைய அச்சம் ஒன்று தமக்கு இருப்பதாகவே அவர்கள் ஒரு நாளும் உணர்வதில்லை. அப்படி அவர்களால் உணர முடிந்தால், அடுத்த நிமிடத்திலேயே அதனைத் தம்முடைய விவேகமான சிந்தனைகளின் துணையால் அவர்கள் போக்கிக் கொண்டுவிட முடியும்.

உண்மையில் அவ்வித அச்சமானது துணிவில்லாத ஒருவரது உள்ளுணர்வு மனத்தில்தான் சுரந்து உறைகின்றது. உள்ளுணர்வு மனம் என்பது, பகுத்தறிவுக்கோ அல்லது சிந்தனா சக்திக்கோ அப்பாற்பட்ட ஆழத்தில் இருப்பது. ஆகையால், அங்குள்ள அச்சத்தை பகுத்தறிவாலோ, சிந்தனா சக்தியாலோ போக்கிக் கொள்ள இயலாது. அவ்வாறாயின், அந்த அச்சத்தை அகற்றுவதற்கான வழிதான் என்ன?

உள்ளுணர்வு மனத்திலுள்ள அச்சத்தை உணர்வு மனத்திற்கு இழுத்து வரவேண்டும். பிறகு அறிவார்ந்த சிந்தனைகளைக் கொண்டு அந்த உணர்வு மனத்திலிருந்து அதனைக் களைந்தெறிய வேண்டும். உள்ளுணர்வு மனத்தில் ஒளிந்து கிடக்கும் அச்சங்கள், உணர்வு மனத்திற்கு எழும்பி வரத் துணை புரிபவைதான் இம்மாதிரிப் புத்தகங்கள்.

எவ்வளவு பெரிய செல்வமும் அழிந்துவிடலாம் என்பது வெறும் வேதாந்த வாக்கியம் அல்ல. அன்றாட வாழ்க்கையில் தாம் கண்கூடாகக் காண்கின்ற அனுபவம் அது. பெரிய கோடீஸ்வரர்கள் கோவணாண்டிகளாக மாறுவதும், குடிசைவாசி ஒருவன் மாளிகை வாசியாக வளர்வதும், கதைகளில் மட்டுமே வருகின்ற கற்பனைகள் அல்ல; நாம் கண்ணெதிரே காண்கின்ற உண்மைகள்.

செல்வம் நிலை இல்லாதது. ஆகையால், அது உங்களிடம் வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடையாதீர்கள்! அது உங்களை விட்டுப் போவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்! ஏனென்றால், போவது மீண்டும் உங்களைத் தேடி வராது என்று சொல்வதிற்கில்லை. அவ்வாறே, வந்ததும் உங்களைவிட்டு என்று மீண்டும் விலகிப்போகும் என்றும் சொல்வதற்கில்லை.

உங்களுடைய திறமையால் உங்கள் செல்வத்தை நிரந்தரமாகக் காப்பாற்றிவிட முடியாது. உங்களைவிட மிகப் பெரிய திறமைசாலிகள் பலர் அதை அப்படிக் காப்பாற்ற முடியாமல் இழந்திருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்று. அதேபோல், உங்களுடைய திறமைக் குறைவால் செல்வத்தை இழந்துவிடுகிறீர்கள் என்பதும் இல்லை. உங்களைத் காட்டிலும் திறமையில் குறைந்த பலர் அதை இழக்காமல் வைத்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று!

ஆகையால், செல்வத்தைப் பாதுகாப்பதற்கோ அன்றிப் பறிகொடுப்பதற்கோ, அதனை அடைவதற்கோ, அன்றி இழப்பதற்கோ, வெறும் திறமை அல்லது திறமையின்னை காரணமாகிவிடாது. உங்களுடைய கணக்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத எத்தனையோ சந்தர்ப்பச் சூழ்நிலைகள் உங்களைத் திடீரென்று ஏழையாக்கிவிடலாம் அல்லது பணக்காரன் ஆக்கிவிடவும் செய்யலாம்!

ஆகையால், உங்களுடைய ஏழ்மையை அல்லது செல்வத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், ஏழைகள் வரும்போது நெஞ்சம் துவளாமல், செல்வம் வரும்போது உள்ளம் துள்ளாமல் அன்பு, அறம், அறிவு இவற்றையே உங்களுடைய வழிகாட்டிகளாகக் கொண்டு நீங்கள் வாழ்க்கை நடத்துங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், வறுமையிலே நம் இதயம் துவளக்கூடாது. செல்வத்திலே நம் உள்ளம் துள்ளக் கூடாது. செல்வம், வறுமை இவ்விரண்டு நிலைகளிலும் ஒரே படித்தாக, ஒரே மாதிரியாக, நிதானம் தவறாமல் நாம் செயல்பட்டு வர வேண்டும் என்பது அற நூல்களின் சாரம்.

அது மட்டுமல்ல, நம்முடைய செல்வமும், வறுமையும் எவ்வாறு நிலையற்றனவோ, அவ்வாறே எதிரியின் செல்வமும் வறுமையும்கூட நிலையற்றவைதாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (எதிரி என்றால், இங்கே பகைவன் என்று பொருள் கொள்ளக்கூடாது. தன் நிலையிலுள்ள வேறொருவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்) எதிரியிடம் இன்றைக்கு நிரம்பப் பணம் இருக்கிறது என்பதற்காக அவனை உயர்வாக மதிப்பது, எதிரியிடம் இப்போது பணம் இல்லை என்பதற்காக அவனைக் குறைவாக (தாழ்வாக) மதிப்பது இவ்விரண்டுமே தவறு என்பதும் நான் மேலே குறிப்பிட்ட அறநூல்களின் சாரமாகும்.

ஒருவன் செல்வத்தின் நிலையற்ற தன்மையை உலகியலில் கண்கூடாகக் காண்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த உயரிய வாழக்கை நெறியைத்தான் அவன் மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், சமுதாயத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விபரீதமான மனப்போக்கை மேற்கொண்டு விடுகிறார்கள். நேற்று இலட்சாதிபதியாக இருந்த ஒருவன் இன்றைக்கு பிட்சாதிபதியாக பிச்சைக்காரனாக மாறியதைக் கண்டதும் ‘இன்று நம்மிடம் இருக்கும் செல்வமும், அந்த இலட்சாதிபதியின் செல்வத்தைப் போலவே நாளை நம்மை விட்டுப் போய்விடுமோ! நாமும் அவனைப் போலவே பிச்சைக்காரனாகி விடுவோமே!’ என்ற திகில் அவர்களையும் அறியாமலே அவர்களது உள்ளுணர்வில் தோன்றிவிடுகிறது.

உடனே, அப்போதிருக்கும் இந்தச் செல்வத்தை நாம் நம்பிப் பயனில்லை! என்ற முடிவுக்கு அவர்களது உள்ளுணர்வு வந்துவிடுகிறது.

‘ஆகையால், வேறொரு புதிய செல்வத்தை நாம் எப்படியேனும் விரைவில் தேடிக்கொண்டு ஆகவேண்டும்!’ என்று அந்த உள்ளுணர்வு உறுதி பூணுகிறது.

இவ்வளவும் முழுக்க உள்ளுணர்வின் நிகழ்ச்சிகள்தாம் என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. அப்படியின்றி, இது உணர்வு மனத்தின் எண்ணங்களாய் இருந்தால், ‘இப்போது இருக்கும் செல்வம் எப்படி நிலையற்றதாய் இருக்கிறதோ, அதேபோல் இனிமேல் நாம் தேடப்போகும் செல்வமும் நிலையற்றதாகக்தானே இருக்க முடியும்? ஆகையால், இந்தச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காத நாம், இனிமேல் வரப்போகும் செல்வத்தை மட்டும் எப்படி நம்ப முடியும்?!’ என்று பகுத்தறிவுக் கேள்விகள் அங்கேயே பிறந்து, அந்த மனக் குழப்பத்தை அப்போதே போக்கிவிடும். அப்படிப் போக்கிவிட்டால் அறிவிலே ஒரு தெளிவும் பிறந்துவிடும்.

செல்வம் நிலையில்லாததாய் இருக்கலாம். நம்முடைய செல்வத்தை வஞ்சகர்களோ, திருடர்களோ கொண்டுவிடலாம். ஆனால், செல்வத்தைக் தேடிக் கொள்வதற்கான திறமை என ஒன்று இருக்கிறது அல்லவா? அந்தத் திறமையை நம்மிடமிருந்து யாராலும் பறித்துக் கொண்டு விடமுடியாது!

ஆகையால், அத் திறமையை நாம் எப்பாடுபட்டேனும் தேடிக்கொள்ள வேண்டும். அந்தத் திறமையை நாம் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் திறமையை, இடையறாத உழைப்பின் வாயிலாக, நாம் செவ்வனே பயன்படுத்தி வரவேண்டும். வறுமை காரணமாகத் தோன்றக்கூடிய அச்சத்திலிருந்து விடுபடுவதற்கு, இது ஒன்றுதான் வழி.

முன்னோர்கள் ஏராளமாக சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுப் போகிறார்கள். அந்தக் குடும்பத்தில் சில பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்கள் செல்லமாக வளர்க்கப்படுகிறார்கள்.

பெரியவர்கள் தேடிவைத்த பெருஞ் செல்வத்தை எப்படி எப்படியெல்லாம் சீரழிக்கலாம் எனபதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்களே தவிர, தாமாக எதையும் சம்பாதிக்கக்கூடிய திறமையை அவர்கள் தேடிக்கொள்வதில்லை. அதனால், அந்த முன்னோர்கள் செல்வம் சிதைந்து ஒழிந்த பிறகு, அவர்கள் தெருவில் நிற்க வேண்டிய பரிதாப நிலை வந்துவிடுகிறது.

அப்படியின்றி, பெரியோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தமக்கென்ற தாமே பொருள் தேடிக் கொள்ளக்கூடிய திறமையை இவர்கள் தம்மிடத்தே வளர்த்துக் கொண்டிருப்பார்களாயின், அவ்வாறு தெருவில் நிற்கவேண்டிய இழிநிலை அவர்களுக்கு எந்தக் காலத்திலுமே ஏற்படமாட்டாது.

ஒரு சிலர் நல்ல திறமையை வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதைச் செவ்வனே பயன்படுத்த மாட்டார்கள். பொற்கொல்லர்கள், தையற்காரர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் போன்ற பல வர்க்கத்தினரிடையேயும், இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறார்கள். தத்தம் தொழில்களில் அல்லது கலைகளில் அவர்கள் தலைசிறந்த வல்லுநர்களாக இருக்கக் கூடும். ஆனாலும், சோம்பலின் காரணமாக அவர்கள் தீவிரமான உழைப்பிலே ஈடுபடமாட்டார்கள். ஒருமுறை உழைத்துக் கிடைத்த பணம் தீர்ந்துபோய் பிறகு கடன் வாங்கிச் செலவு செய்து, இனிமேல் கடனும் வாங்க முடியாது என்ற நிலைமை வரும்வரையில் அவர்கள் தம்முடைய அடுத்த உழைப்பைத் தொடங்கமாட்டார்கள்.

அவர்களிடம் முன்பணம் கொடுத்துவிட்டு அவர்களைத் தேடி நடையாய் நட்ப்பவர்களுக்கெல்லாம், அவர்கள் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலம் கடத்துவார்களே தவிர காரியத்தைச் செய்து முடித்து மீதிப் பணத்தைக் கையில் வாங்கமாட்டார்கள். வீண் பொழுது போக்குவதிலே இவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓரளவு தொழில் திறமை அல்லது கலைத்திறமை இருக்கும். அந்தத் திறமைக்குத் தக்கபடி வருமானமும் வந்து கொண்டிருக்கும். ஆனால் அந்த வருமானம் அவர்களுடைய வாழ்க்கை வசதிகளுக்குப் போதுமானதாய் இராது.

அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? தம்முடைய வறுமையான வாழ்விலிருந்து விடுபட்டு வசதிமிக்க வாழ்வை நடத்துவதற்குத் தேவையான அளவு, வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள அவர்கள் முயல வேண்டும். இதையே வேறு விதமாகச் சொல்வது என்றால், வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு முதல்படியாக, அவர்கள் தம் தொழில் திறமையை வளர்த்துக்கொள் வேண்டும்.

அதாவது, தம் தொழிலிலும், கலையிலும் அவர்கள் புதிய உத்திகளைக் கற்றக்கொண்டு, அவற்றில் தேர்ச்சி பெறவேண்டும். அல்லது, தம்முடைய தேவைக்கு ஏற்ற வருமானத்தைத் தரக்கூடிய ஒரு புதிய தொழிலை அல்லது கலையை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கக் காரியாலயங்களில் பணி புரிபவர்கள் புதிய டெஸ்டுகளை எழுதித் தேர்வு பெற்று, பதவி உயர்வுகளையும் அவற்றின் மூலம் ஊதிய உயர்வுகளையும் பெறுவதற்குப் பாடுபட வேண்டும்.

இவ்வாறாக பணம் சம்பாதிக்கும் திறமையைத் தேடிக் கொள்பவர்கள், அதனை முயன்று வளர்த்துக் கொள்பவர்கள், அதனை உழைப்பின் வாயிலாகச் செவ்வனே பயன்படுத்துபவர்கள் ஆகிய இம்மூவகையினரும் மட்டுமே, வறுமையை எண்ணி அஞ்சவேண்டிய அவசியம் இல்லாதவர்காக விளங்கமுடியும். மற்றபடி, ஒருவர் எவ்வளவு பெரிய குபேரசம்பத்தை உடையவராக இருந்தாலும் அவர் என்றென்றைக்கும் அந்த அச்சத்திற்கு ஆளாகியே தீரவேண்டும் என்பதில் ஐயமில்லை.

-தொடரும்

admin @ 2:29 am
Filed under: Tamilvanan
Thunivae thunai - Tamilvanan

Posted on Friday 9 January 2009

tamilvanan.jpgதுணிவே துணை - தமிழ்வாணன்
அன்பு
அறிவு
ஆண்டவன்
துணிவே துணை

து என்னுடைய சிறுவயது முதற்கொண்டே என்னுடைய உயிர்க் கொள்கையாக இருந்து வருகிறது.

நீ துணிவு உடையவனாக இரு. உன்னைத் துணிவு உடையவனாக நீ ஆக்கிக் கொள். துணிந்து செயல்படு. அப்படிச் செயல்பட்டால், வாழ்க்கையில் நீ முன்னேறுவாய் என்று அந்தக் காலத்தில் எனக்கு எவரும் சொல்லித் தரவில்லை!

சிலருக்கு இயல்பாகவே காரச்சுவை அல்லது கசப்புச் சுவையில் வேட்கை இருப்பதுபோல என் உள்ளத்திற்கு இயல்பாகவே இந்தத் துணிவுச் சுவையில் ஓர் ஈடுபாடு இருந்தது. அந்த ஈடுபாடு, எவ்வளவு நன்மையையும் நலத்தையும் நயத்தையும் பயக்கக்கூடியது என்பது, பின்னால்

நான் பல ஆங்கில மனயியல் நூல்களைப் படிக்கும்போது தெளிவாக விளங்கியது. அந்த நூல்கள் என்னுடைய இயல்பான துணிவுச் சுவையை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணை செய்தன. இன்னமும் உறுதுணையாக இருந்து வருகின்றேன்.

அந்த நூல்களில் நான் படித்த கருத்துக்களே என்னுடைய அன்றாட வாழ்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அனுபவங்கள்தாம் ஒரு மனிதனுடைய உயர்வுக்கு ஏணிப்படியாக அமைகின்றன. இது உறுதி; உறுதியிலும் உறுதி.

அன்பே துணை.

அறிவே துணை.

அண்ணாமலையார் துணை.

இந்த மாதிரி ஏதாவது ஒரு துணையைப்பற்றிக் கொள்ளாமல் நீங்கள் ஏன் துணிவையே துணையாகக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பலர் என்னைக் கேட்டார்கள்! அன்பு, அறிவு, ஆண்டவன் இந்த மூன்றையும்விடத் துணிவில் அவ்வளவு பெரிய சிறப்பு என்ன இருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து!

———-

அன்பே துணை
அறிவே துணை
கடவுள் துணை
என்பதை விட…

ன்பைக் காட்டிலும் துணிவு பெரிது, அறிவைக் காட்டிலும் துணிவு பெரிது. ஆண்டவனைக் காட்டிலும் துணிவு பெரிது என்று நான் சொல்லவில்லை.

அன்பு என்பது, ஒரு மனிதனுடைய உயிரைப் போன்றது. அறிவு என்பது, ஒருவனுடைய கண்களைப் போன்றது. கண்ணைக்கொண்டு ஒரு மாமரத்தின் உச்சியிலுள பழுத்த மாம்பழத்தைப் பார்க்கத்தான் முடியுமே தவிர, அந்த மாம்பழத்தை எட்டிப் பறிக்க முடியாது. மரத்தில் ஏறிப் போய் அந்தக் கனியைப் பறிப்பதற்கு, வலுவான கைகளையும், கால்களையும் அவன் பெற்றிருக்க வேண்டும். துணிவு என்பது, அந்தக் கைகளைப் போன்றது.

ஒரு மனிதன் தன் கை கால்களால் உழைத்துச் சாப்பிடுகிறான். நான் உயிர் வாழ்வதற்கு வேறு எவர் துணையையும் நம்பி இருக்கவில்லை. என் கை கால்களையே நான் நம்பியிருக்கிறேன் என்று அவன் சொல்லுகிறான்.

அவனைப் பார்த்து, நீ ஏன் உன் கை கால்களை நம்ப வேண்டும்? உன்னுடைய உயிரை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது உன் கண்களை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது கடவுளை மட்டுமே நம்பியிருந்தால் போதாதா? உயிரையும் கண்ணையும்விட, கை கால்களுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? என்று எவராவது கேட்பார்களா?

கேட்கமாட்டார்கள்.

காரணம் நாம் எல்லோருமே கை கால்களை முழு அளவுக்குப் பயன்படுத்தி வருபவர்கள். நமக்கு உயிர் இருந்தாலும், கண் இருந்தாலும், கை கால்கள் இல்லாவிட்டால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்! தெளிவாக அறிந்திருக்கிறோம்.

ஆனால்,துணிவைப் பற்றி அத்தகைய அனுபவம் நம்மில் பெரும்பாலோருக்குக் கிடையாது. அதனால்தான் அவர்கள் அன்பை மட்டும் துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அல்லது அறிவை மட்டுமே துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அன்பே சிவம் அல்லவா? அறிவே இறைவன் அல்லவா? அன்புக்கும் அறிவுக்கும் இல்லாத சக்தி துணிவுக்கு இருக்கிறதா, என்றெல்லாம் கேட்கிறார்கள்!

துணிவு என்கிற சொல்லுக்கு நம்மிலே பலர் தவறான பொருள் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

துணிவு என்றால், எதற்கும் அஞ்சாத முரட்டுத் தனம் அல்லது கண்மூடித்தனமான அசட்டுத் தைரியம் என்று பொருள் அல்ல. அஞ்ச வேண்டுவதற்கு அஞ்ச வேண்டும்; அஞ்சக்கூடாதவற்றுக்குச் சிறிதும் அஞ்சக்கூடாது. இதுவே துணிவின் அடிப்படை இலக்கணம்.

இளங்கன்று பயம் அறியாது என்று சொல்கிறோம். ஒரு தவழும் குழந்தை ஊர்ந்து செல்கிற பாம்பைப் பிடித்து விடலாம். அப்படிப் பிடித்துவிட்டால், அது ஒரு துணிவுள்ள குழந்தை என்பது பொருள் அல்ல.

பாம்பைப் பிடித்தால், அது கடிக்கும்; பாம்பு கடித்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் அது பாம்மைப் பிடிக்காது!

அதே போல், ஒரு காரியத்தில் ஈடுபடுவதனால் எத்தகைய ஆபத்துகள் நேரக்கூடும் என்பதை உணராமலே சிலர் ஈடுபட்டு விடுகிறார்கள் அல்லவா? அப்படி ஈடுபடுவது மூடத்தனத்தின் அடையாளம், துணிவின் அடையாளம் அல்ல!

நம்மில் பலர், துணிவு என்ற சொல்லுக்கு அத்தகைய மூடத்தனத்தையே பொருளாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, துணிவைத் துணையாகக் கொள்ளாதே அறிவைத் துணையாகக் கொள் என்று அவர்கள் கூறுவது, ‘மூடத்தனத்தைத் துணையாகக் கொள்ளாதே - அறிவுடைமையைத் துணையாகக் கொள்’ என்ற கருத்திலேதான!

ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு அதனால் விளையக்கூடிய நன்மை தீமைகளை நன்றாகச் சீர்தூக்கிக் பார்த்து, அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும் என்றான் வள்ளுவன். அப்படிச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள கருவியே அறிவு. இந்த அறிவு, ஒருவனுக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவன் தீர்க்கதரிசியாக விளங்குவான். அதாவது, பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே ஊகித்து உணரக் கூடியவனாக இருப்பான்.

அமைச்சர்களாய் இருப்பவர்களுக்கு இந்த அறிவின் திறம் பெரும் அளவுக்கு அமைந்திருக்க வேண்டும் என்கிறான் அதிவீரராம பாண்டியன். அதேபோல், தானைத் தலைவர்கள் அதாவது, ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கி நடத்துகிற சேனாதிபதிகள் போர்க்களத்தில் மிகுந்த துணிவு உடையவர்களாக விளங்கவேண்டும் என்று அவன் சொல்கிறான்.

இன்றைய உலகில் நம்முடைய அன்றாட வாழக்கை ஒரு போர்க்களம் போல் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் ஆதரவுச் சக்திகளும் எதிர்ப்புச் சக்திகளும் கலந்து காணப்படுகின்றன. இதிலே ஆதரவுச் சக்திகளின் துணையைக் கொண்டு எதிர்ப்புச் சக்திகளை நாம் வெல்ல வேண்டும். அப்படி வெல்லாவிட்டால், வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்துவிடுவோம்.

ஓர் அரசாங்கத்திற்கு, மந்திரி சேனாதிபதி ஆகிய இருவரும் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அப்படி நம் உலகில் வாழ்க்கைக்கு அறிவும் துணிவும் இன்றியமையாதவை!

போர் நடத்துவதா, அல்லது போரிட முடியாமல் எதிரியுடன் சமாதானமாகப் போய் விடுவதா? என்பதை முடிவு செய்வதிலே பெரும் பொறுப்பு மந்திரிக்குத்தான் உண்டு. போருக்குப் போவது என்று மந்திரி முடிவுசெய்து விட்டாரானால், அந்தப் போரை எப்படி நடத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை சேனாதிபதியைச் சேர்ந்தது.

இந்த மாதிரி, ஒரு காரியத்தில் நாம் இறங்குவதா வேண்டாமா என்பதை நம்முடைய அறிவு முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை நம்முடைய துணிவு செயல்படுத்த வேண்டும். கிடைக்கப்போவது வெற்றி!

———–

உயரத்திலிருந்து குதிப்பதெல்லாம் துணிவாகிவிடாது!

ருவன் தன்னுடைய துணிச்சலை உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பி, மிக உயர்ந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்துக் காட்டுகிறேன் என்று கூட்டத்தை கூட்டி, குதிக்க முற்படுவானேயானால் அவனை எந்த இரகத்தில் சேர்ப்பது? அப்படிக் குதித்தால் உயிரை இழக்க நேரிடும். அல்லது கைகால் உடைந்துபோகும் என்பதை உணர்பவனாக இருக்க வேண்டும். அவ்வாற அவன் உணராது போனால், அதைவிட மடத்தனமான செயல் எதுவுமே இருக்க முடியாது.

அதே நேரத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திலிருந்து பாரசூட் உதவியுடன் குதிப்பது என்பது உண்மையிலேயே துணிச்சலான காரியம். பாரசூட்டின் உதவியுடன் பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பது என்பது எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய செயலல்ல. அப்படிக் குதிப்பவர்களின் துணிச்சல் இருக்கிறதே, அது மற்றவர்களால் பாராட்டக்கூடிய ஒன்றுதான்.

அதில் எள்ளளவும் ஐயமில்லை. கட்டடத்தின் உயரத்தில் இருந்து குதிப்பதற்கும் விமானத்திலிருந்து குதிப்பதற்கும் தேவையான துணிச்சல் முற்றிலும் வேறுபாடானது.

முன்னது, மடத்தனமான துணிச்சல; பின்னது, உண்மையான துணிச்சல். அறிவும் துணிவும் இணைந்து அதனால் செயலாற்றப்படுகின்ற காரியங்களே உண்மையான துணிவின் இலக்கணம்.

ஒருமுறை பாரசூட்டிலிருந்து குதித்த ஓர் இளைஞரை ஒரு மனஇயல் நிபுணர் அணுகிப் பேசினார். பாரசூட்டில் இருந்து குதித்த நேரத்தில், இளைஞருடைய மனநிலை எப்படி இருந்தது எனக் கேட்டார்.

”ஒரு கயிற்றையும் ஒரு வலையையும் நம்பி பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பதாவது? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அப்படிக் குதிப்பதனால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது? நாம் ஒன்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் குதிக்கப் போவதில்லையே? வெறும் விளையாட்டுத்தானே? நான்கு பேர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்குத்தானே? பாராட்டிற்காகவும் விளையாட்டிற்காகவும் உயிரைப் பணயம் வைப்பதாவது? என்றெல்லாம் என் மனம் எண்ணியது. கீழே நோக்கினேன். கண்ணுக்கு எட்டிய வரையில் தரையே தெரியவில்லை. கோடு கோடாக ஏதோ தெரிந்தன. அவை ஆறுகள் என்று ஊகித்துக்கொண்டேன். கருமையும் வெண்மையும் கலந்த மேகக்கூட்டங்கள். பார்க்கவே அச்சமாக இருந்தது. எனக்குப் பின்னால் குதிக்க வேண்டும் என்று இரண்டுபேர் காத்திருந்தார்கள். அவர்கள் என்னை கேலியாகப் பார்த்தார்கள். என்னுடைய இயேசுவை நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் குதித்த பலர் பாதுகாப்புடன் தரையை அடைந்ததையும் நினைத்துக் கொண்டேன். அந்தக் குறுகிய நேரத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.

”என்ன நினைத்தேனோ தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு டக்கென்று குதித்துவிட்டேன். இனம் புரியாத ஓர் உணர்வு. வானத்தில் மிதக்கும்போது ஏற்பட்ட என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். சிறிது நேரத்திற்கெல்லாம் எனக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. தரையை விரைவில் எட்டிவிடக் கூடாது. மிதந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியது என் மனம். என்னையும் அறியாமல் ஏதோ ஓர் உற்சாகம் பிறந்துவிட்டது. பத்திரமாகத் தரையில் இறங்கினேன். அதற்குப் பிறகு பலமுறை குதித்துப் பழகினேன். இன்று என்னுடைய விருப்பமான பொழுதுபோக்கு விமானத்தில் இருந்து குதிப்பதுதான். எந்த ஒரு செயல் என்னுடைய பய உணர்வைத் தூண்டியதோ அதுவே இன்று எனக்குப் பொழுது போக்காகிவிட்டது.

”என்னைப் பொறுத்தவரையில் பயம் என்பது பழகும் வரைக்கும்தான். பழகிவிட்டால் அதுவே பொழுதுபோக்கு. அறிவுபூர்வமான ஒரு துணிச்சல் இத்தகைய ஓர் உற்சாகத்தைத் தரக்கூடியதே. அத்தகைய ஒரு துணிச்சல் மற்றவர்களால் பாராட்டப்படும்போது அதனால் கிடைக்கும் இன்பமே தனி” என்று பதிலளித்தார் அந்த இளைஞர்.

————

அறிவும் துணிவும் இணைய வேண்டும்

ருவருக்கு நல்ல அறிவு இருக்கிறது. ஆனால், அந்த அறிவின் முடிவுகளைச் செயல்படுத்துவதற்கான துணிவு அவரிடம இல்லை என்றால், அவரால் எந்த ஓர் அரிய காரியத்தையும் சாதிக்க முடியாது.

முடியும், ஓர் ஆட்சியிலே அறிவிற் சிறந்த மந்திரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய ஓர் இராணுவம் கிடையாது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இராணுவ பலம் வாய்ந்த ஒரு சிறிய நாடு கூட எளிதில் அந்த நாட்டைக் கைப்பற்றித் தனக்கு அடிமையாக்கிக் கொண்டுவிடும் அல்லவா?

அதுபோலவே, ஒரு மனிதன் இருந்தானானால், செயல் திறன் வாய்ந்த ஒரு சாதாரண மனிதன் கூட வாழக்கைப் போராட்டத்தில் அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் முன்னுக்கு வந்துவிடுவான். இந்தச் செயல்திறன் துணிவு. ஒருவனிடத்தில் துணிவு மட்டும் இல்லை. ஆனால் மற்ற சிறப்புகளெல்லாம் இருக்கின்றன என்றால், பயன் இல்லை. இராணுவம் இல்லாத நாடு இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே!

‘திறனோடு செயல்படுவதே தர்மயோகத்தின் இலக்கணம்’ என்று பேசுகிறது பகவத்கீதை.

இந்த அடிப்படையில் பார்த்தால் துணிவுடமை என்பது இந்த உலகத்தில் வெற்றிக்கு மட்டுமல்ல. இறைவனை நோக்கி ஆன்மா முன்னேறிச் செல்வதற்கும் கூட அதாவது சாதாரண மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுள் தன்மையை அடைவதற்குக்கூட துணிவே வேண்டும்.

துணிவு இருந்தால் எல்லாம் உண்டு. துணிவு இல்லாவிட்டால் எதுவும் இல்லை!

சில அரசியல் கட்சிகளில் நன்றாக உழைக்கும் தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டி, சரியான துணிவைக் கொடுத்து அவர்களை அழைத்துச் செல்லக்கூடிய தலைவர்கள் இருக்கமாட்டார்கள். வெறும் உழைப்பு மட்டும் இருந்து இந்த உழைப்பைச் சரியான துணிவுள்ள வழியில் பயன்படுத்துதற்குரிய அறிவுத் திறனைப் பெற்றிராத மனிதன் அந்த அரசியல் கட்சியைப் போன்றவனகாவேயிருப்பான். சும்மா உழைத்துக் கொண்டேயிருந்து என்ன பிரயோஜனம்? மாடு மாதிரி!

வேறு சில கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் அறிவுத் திறன் உள்ள தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி நிறைவேற்றுவதற்குரிய தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல அறிவுத்திறன் இருந்தும் துணிவில்லாத காரணத்தினால் இந்தக் கட்சி மாதிரி முன்னேறாமலேயே கிடந்து நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டிருப்பார்கள்.

————

ஃபோர்டி-ன் துணிச்சல்

லகில் ஃபோர்ட் காரைப் பற்றித் தெரிந்திராதவர்கள் இருக்க முடியாது. ஃபோர்டு பரம்பரைப் பணக்காரர் அல்லர். சாதாரணமாக குடும்பத்தில் பிறந்தவர். அவர் தம்முடைய வாழ்க்கையைத தொடங்கும்போது மிக எளிமையாகத் தான் தொடங்கினார்.

ஆனால் இன்று - உலகில் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளத்தக்க பணக்காரர்களுள் ஃபோர்டும் ஒருவர். ஃபோர்டு கம்பெனி ஒரு நிமிடத்திற்கு ஒரு காரை உற்பத்தி செய்கிறது. அந்த அளவிற்கு அவரது வளர்ச்சிக்குக் காரணம்?

துணிவு!

அறிவு!

செயல்திறன்!

அவரிடம் இந்த மூன்றுமிருந்தன. அறிவையும் செயல் திறனையும்விடத் துணிவே அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

அவருக்கு தாமே கார்த் தொழிற்சாலையைச் சிறிய அளவில் தொடங்கி நடத்தினால் என்ன என்று ஓர் எண்ணம்.

இவருக்கு முன்னரே வெற்றிகரமாக நடந்து வந்த கார்த் தொழிற்சாலையை அணுகினார். அவர்கள், அந்தத் தொழிற்சாலையில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சொன்னார்களே தவிர, அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எதையும் சொல்லிவிடவில்லை. காரை முழுமையாக்கி வெளிக்கொண்டு வருவதற்கான உதிரிப்பொருள்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று பலரும் எடுத்துச் சொன்னார்கள். போர்டு தயங்கவில்லை. திட்டங்களை வகுத்தார். அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். எந்த இடத்திலும் அவர் தவறான கணக்கைப் போடவில்லை. சிறிய அளவில் தொடங்கிய அவருடைய துணிவும் திறமையும் செயல்திறனும் சிறிதும் குறையவில்லை. வளர்ந்துவிட்டதே என்று அவர் சும்மா இருக்கவில்லை. புதுமைகள் பலவற்றைப் புகுத்தினார். உலக மக்களைக் கவர்ந்தார். வெற்றி கண்டார். இன்று உலகில் அவருடைய கார் ஓடாத நாடுகளே இல்லை.

————

செயல் திறனும் வேண்டும்

றிவுத்திறன், செயல்திறன் இந்த இரண்டும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை. இந்த இரண்டில் அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். இருந்தாலும்கூட, திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்தாவது, அந்தத் தவறுகிலிருந்து கிடைக்கிற அனுபவத்தின் அடிப்படையிலே, ஒரு மனிதன் தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் செயல்திறன் குறைவாக இருந்தால், வெறும் சிந்தனையால் மட்டும் அதை வளர்த்துக் கொள்ள முடியாது. சரியாகவோ, தவறாகவோ செயல்படும் போது மட்டுமே, ஒருவனுடைய செயல்திறன் வளர்ச்சி அடைகிறது. செயல்படாமலே சும்மா இருக்கிற மனிதன் இயல்பிலேயே ஒரு பேரறிவாளனாக இருந்தாலும்கூட, அந்தப் பேரறிவு அவனுக்குப் பயன்படாமல் பிறருக்கும் பயன்படாமல் மங்குகிறது. துருப்பிடிக்கிறது. நாளடைவில் மறைந்து விடுகிறது.

இந்த முறையில் பார்க்கும்போது ஒருவனுக்கு அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாய் இருந்தாலும் குற்றம் இல்லை. துணிவுதான் அவனிடம் குறைவில்லாமல் இருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

துணிவின் துணை மட்டும் உறுதியாக இருக்குமேயானால் அறிவில் குறைந்தவன்கூட நாளடைவில் ஒரு பேரறிஞனாக வளர்ச்சியடைந்துவிடலாம். இதனாலே தான், நான் துணிவே துணை என்பதை என் உயிர்க் கொள்கையாகக் கொண்டு நிற்கிறேன்.

———-

தாய்மார்கள் பால் மட்டுமா புகட்டுகிறார்கள்?
பயத்தையுமல்லவா புகட்டுகிறார்கள்!

ய உணர்வு என்பது திடீரென்று முளைத்துக் கிளர்ந்து எழுவது அல்ல. அது இளம் வயது முதலே ஊட்டப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் தாய்மார்களால்தான் ஊட்டப்படுகிறது.

பிள்ளை அடம்பிடித்தவுடனேயே அவர்கள் கையில் இருக்கும் மருந்து ‘பூச்சாண்டி’ என்ற வார்த்தைதான். பூச்சாண்டி பூச்சாண்டி என்று சொல்லியே பிள்ளைகளைப் பயமுறுத்தி வைக்கிறார்கள். பூனை, மாடு இப்படி ஏதாவது ஒன்றைச் சுட்டிக் காட்டியும் பயமுறுத்துவது உண்டு.

இத்தகைய பிள்ளைகள் மெல்ல மெல்லத் துணிவு மனப்பான்மையை இழந்துவிடுகின்றன. இந்த மனநிலை, வளர்ந்துவிட்ட வாழ்க்கை நிலையிலும் தொடர்கிறது. அதன் காரணமாக அவர்கள் திறமையற்றவர்களாகி விடுகிறார்கள். எப்போதும் ஓர் அச்ச உணர்வு அவர்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. தன்னம்பிக்கையை இழக்கும் நிலையும் வருகிறது. தாய்மார்கள், அடம்பிடிக்கும் பிள்ளைகளை வேறு வழிகளில் சமாதானப்படுத்த முயல வேண்டுமேயொழிய கண்டவற்றையும் சொல்லிப் பயமுறுத்தக் கூடாது.

———

பூச்சி-பூரானைக் கண்டாலும் பயம்

ர்த்தமில்லாத பயங்களுள் இந்த வகையும் ஒன்று. மனிதன் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தைப் பிடித்தக் கூண்டிலடைத்து, பழக்கித் தன் வழிக்குக் கொண்டுவந்து சர்க்கஸ் வித்தையைச் செய்துகாட்டச் செய்து அதன் வாய்க்குள் தலையை விட்டுக் காட்டிக் காசு சேர்த்து விடுகிறார். அத்தகைய திறமை மனிதனிடத்தே இருக்கிறது. இத்தகைய மனிதர்களோடு பிறந்தவர்கள்தாம் நாமும்.

அப்படியிருக்கும்போது பூச்சியையும் பூரானையும் பார்த்துப் பயப்படுவது என்பது எத்தகைய ஒரு கேலிக்குரிய செயல்? நம்மிடம் அறிவு இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குத் திறமை இருக்கிறது. ஒரு விளக்குமாறு, ஒரு செருப்பு இவை போதுமே பூச்சியையும் பூரானையும் சமாளிக்க! உயிர்களைக் கொல்வது பாவம் என்பதை உங்கள் மனம் எண்ணினால் விலகிச் செல்ல வேண்டியதுதானே! ஏன் இந்தப் பதற்றமும் ‘ஆ’ ‘ஓ’ என்ற கூச்சலும்?

———–

நாம் எந்த வகையான முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறோம்

துணிந்து செயல்படுவதால் மனிதன் முன்னேற்றம் அடைகிறான் என்று சொல்லப்படும் பொழுது, முன்னேற்றம் என்ற சொல்லின் பொருளைச் சிலர் சரியாகப் புரிந்து கொள்வது இல்லை. முன்னேற்றம் என்றால் என்ன? பொருளாதார முன்னேற்றமா? வாழ்க்கை வசதிகளில் முன்னேற்றமா? ஆன்மீக முன்னேற்றமா? இவற்றுள் எந்த முன்னேற்றத்தை நம்மவர்கள் முன்னேற்றம் என்று நினைக்கிறார்கள்?

ஆன்மீக முன்னேற்றத்துக்குக்கூடத் துணிவின் துணை வேண்டும். ஆனால், ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள்தாம் நம் சமுதாயத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆகையால் ஆன்மீகத்தில் துணிவின் துணையைக் கொண்டு முன்னேறுவது எப்படி என்பதை இப்போது சொல்லுவதில் பயன் இல்லை.

அதே போல,மன வலிமையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றி நாம் இப்போது ஆராய வேண்டாம். ஏனென்றால் மன வலிமை என்றால் என்ன?

அதை ஏன் ஒரு மனிதன் முயன்று தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பேர் அறிந்திருந்தாலும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!

புகழில் ஏற்படுகிற முன்னேற்றத்தைப் பற்றியும் நம்மவர்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. புகழுக்குரிய காரியங்களைச் செய்யவேண்டும். அவற்றின் மூலம் புகழைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் உயர்ந்த குறிக்கோள். அந்தக் குறிக்கோள்களை நோக்கிச் செல்வதற்குத் தேவையான ஆர்வம், தினசரி வாழ்க்கைப் போராட்டத்தல் தவித்துக் கொண்டிருக்கிற நம்மவர்களுக்கு இருக்கும் என்று இன்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகையால், அது பற்றியும் இங்கே இப்போது பேசிப் பயன் இல்லை.

முன்னேற்றம் என்ற உடனேயே, பொருளாதார முன்னேற்றமும், அந்தப் பொருளைக் கொண்டு அடையக் கூடிய வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றமும்தான் நம்மில் பெரும்பாலோரது நினைவுக்கு வருகின்றன. அந்த இரண்டு முன்னேற்றங்களையும் அடைவதற்குத் துணிவுடமை துணை புரியுமானால் அதை வரவேற்பதற்கு நாம் தயாராக இருக்கலாம் அல்லவா?

——-

துணிவு என்பதற்குச் சிலர் புரிந்துகொள்ளும் விபரீதமான கருத்துகள்

லைவலியால் சங்கடப்படுகிறவன், எந்த மருந்தைக் கொண்டாவது அந்தத் தலைவலியைப் போக்கிக்கொள் வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறான். வயிற்று வலியால் துடிதுடிப்பவன், அதைப் போக்கிக் கொள்வதற்கு எந்த மருந்தை வேண்டுமானாலும் சாப்பிடுவதற்குத் தயாராகி விடுகிறான். இந்தத் தலைவலியையும் இந்த வயிற்றுவலியையும் போலவே சமுதாயத்திலுள்ள பெரும்பாலான மக்கள், வறுமை என்ற நோயினால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் துணிவையே துணையாகக் கொண்டு தன் வறுமையைப் போக்கிக் கொண்டுவிடலாம் என்று அவர்களிடம் போய்ச் சொன்னால் உடனே அதற்கு அவர்கள் கொள்கிற அர்த்தம் விபரீதமானதாக இருக்கிறது.

பயந்துகொண்டே இருந்தால் நாம் ஒரு நாளும் பணத்தைப் பார்க்க முடியாது. துணிந்து இறங்கினால் தான் ஒரு கணிசமான பணத்தை நாம் நம் வாழ்நாளில் கண்ணால் பார்க்க முடியும் என்ற பாணியில் பேசுகிறவர் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம்!

சூதாட்டத்தில் ஏற்கெனவே மெல்ல மெல்லத் தன் செல்வத்தையெல்லாம் இழந்த ஒரு மனிதன், கடைசியில் மன் மனைவியின் கழுத்திலே தங்கத் தாலிக்குப் பதிலாக மஞ்சள் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு அந்தத் தங்கத் தாலியை விற்றுச் சூதாடப் போகிறான். வந்தாலும் சரி, போனாலும் சரி என்று துணிந்து அந்தக் காரியத்தைச் செய்வதாக அவன் எண்ணிக் கொள்கிறான். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவன் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!

வருகிற வருமானத்தையெல்லாம் ஒழுங்காகக் கணக்கு எழுதிக் காட்டினால், அதில் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் வருமான வரியாக எடுத்துக் கொண்டு விடுமே என்பதற்காக, பொய்க் கணக்கு எழுதிக் கறுப்புப் பணத்தைச் சோக்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பொய்க் கணக்கு எழுதுவது சட்டப்படிக் குற்றம் என்பது அவர்களுக்குத் தெரியும். தெளிவாகத் தெரியும். இருந்தாலும் அந்தக் குற்றத்தைத் துணிந்து செய்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!

அதிகார பீடத்தில் இருக்கிறவர்கள் இலஞ்சம் வாங்குவது ஒரு மாபெரும் குற்றம். இது அவர்களுக்குத் தெரியும். நன்றாகத் தெரியும்.

இருந்தாலும் இலஞ்சம் வாங்காமல், அரசாங்கம் கொடுக்கிற சம்பளம் ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால், எந்தக் காலத்திலும் தங்களுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் துணிந்து இலஞ்சம் வாங்குகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது.

———

இதுவா துணிவு?

ங்களுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு வாழக்கை வசதிகளிலும், பொருளாதாரத்திலும் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு பலர் துணிந்து திருடுகிறார்கள். பலர் துணிந்து கொள்ளை அடிக்கிறார்கள்.

பலர் துணிந்து பொய்க் கையெழுத்துப் போடுகிறார்கள். பலர் துணிந்து பொய்யான ரிக்கார்டுகளைத் தயார் செய்கிறார்கள். பலர் துணிந்து பொய் சாட்சி சொல்கிறார்கள்.

பலர் துணிந்து துரோகம் செய்கிறவர்கள், பலர் துணிந்து இழிசெயல்களில் இறங்குகிறார்கள். பலர் துணிந்து கொலை கூடச் செய்துவிடுகிறார்கள்! துணிவு என்ற சொல்லுக்கு இதுவா அர்த்தம்?

இவையெல்லாம் துணிவு மிக்கச் செயல்களே அல்ல. வடிகட்டின முட்டாள்தனமான செயல்கள் இவை. இந்த மடத்தனமான செயல்களையெல்லாம் துணிவான செயல்கள் என்று எண்ணிக் கொள்வதும் அறிவீனம்!

உழைப்பைக் கண்டு அஞ்சுகிற கோழைதான் சூதாட்டத்தில் இறங்குகிறான். உழைப்பைக் கண்டு பயப்படுகிற கோழைதான் கள்ள நோட்டு அச்சடிக்கிறான். ஏற்கெனவே பெரும்செல்வம் இருக்கும்போது அவன் எதற்காகச் சூதாட வேண்டும்? எதற்காகக் கள்ளநோட்டு அச்சடிக்க வேண்டும்?

செல்வம் நிலையில்லாதது என்று அவர்களுடைய உள்ளுணர்வு சொல்லுகிறது. அந்த நிலையற்ற தன்மையின் காரணமாக அவர்கள் கையில் இருக்கும் செல்வம் எல்லாம் கரைந்து போய் விடுமானால், அதற்கப்புறம் தாங்கள் வறுமைக்கு ஆளாக நேர்ந்துவிடுமே என்ற பயம் அவர்களை உறுத்தத் தொடங்குகிறது. அதனாலேயே அவர்கள் சூதாடுகிறார்கள்! கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்.

இருக்கிற செல்வம் போய்விட்டாலும், தங்களால் புதிய செல்வத்தை நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் உள்ளத்தில் கோழைத்தனம் பிறக்கிறது. அதுவே குற்றம் செய்யத் தூண்டுகிறது. துணிந்து குற்றம் செய்வதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். தங்கள் துணிவைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள்.

இது மடத்தனமான துணிவு!

——–

கொள்ளைக்காரர்கள் எல்லாம் வீரர்களா?

ங்கள் உயிரையே ஒரு பொருட்டாகக் கருதாத குற்றவாளிகள் உலகத்தில் மிகப் பலர் இருக்கிறார்கள். பெரிய கொலைக்காரர்கள்,

கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோரெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே பெரும் துணிவு உடையவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இறுமாப்பு அடைகிறார்கள். விவரம் தெரியாத மக்களும் அவர்களுடைய வீர சாகசச் செயல்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். உண்மை என்ன? இவர்களில் எவருமே உண்மையான வீரர்கள் அல்லர். முதல்தரமான கோழைகள் இவர்கள்!

இவர்களிடம் நிரம்பப் பணபலம் இருக்கலாம். படை பலம் இருக்கலாம். ஆனால், அந்தப் பணத்தையும் படையையும் நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை, இவர்களுக்கு இயல்பிலே கிடையாது.

தன்னம்பிக்கை இன்மைதான் கோழைத்தனத்தின் அடிப்படை இலக்கணம்.

கோழைத்தனம் - குற்றம் இந்த இரண்டும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள், கோழைத்தனம் உள்ள இடத்தில் குற்றம் இருக்கும். குற்றம் உள்ள இடத்தில் கோழைத்தனம் இருக்கும். இது இயற்கை.

கோழைத்தனத்தின் காரணமாக மனிதன் முதலில் ஒரு சிறு குற்றத்தைச் செய்கிறான். அந்தச் சிறு குற்றம் அவனுடைய கோழைத்தனத்தைக் கூடுதல் ஆக்குகிறது! அந்தக் கூடுதல் கோழைத்தனம் அவனைப் பெரும் குற்றம் செய்யத் தூண்டுகிறது. அந்தப் பெரும் குற்றம் அவனைப் பெரும் கோழை ஆக்குகிறது. இப்படியாக, ஒரு விஷமச் சூழல் உருவாகி அவனை மேலும் மேலும் கோழையாகவும் குற்றவாளியாகவும் ஆக்கிக்கொண்டே போகிறது.

———–

வெளியே வீரன்; உள்ளே கோழை!

ண்மையான துணிவு என்பது ஒருவனுடைய உள்ளுணர்வுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர வெளி உலகத்துக்குத் தெரியாது. வெளி உலகம் அவனை ஒரு மாவீரன் என்று போற்றும். சந்தனத் தேவன், கட்டபொம்மன், ஜம்பு லிங்கம் போன்றவர்களெல்லாம் நம் தமிழகத்திலே இப்படிப் போற்றப்பட்டவர்கள்.

இன்றைக்குப் பெரிய பெரிய கொள்ளைக்காரர்களைப் பற்றிய கதைகள் பெரும் செலவில் திரைப்படமாக்கப்படுகின்றன. அந்த மாதிரிப் படங்களை நம் நாட்டு ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்! மக்கள், அப்படி ஆர்வத்தோடு பார்ப்பதற்குக் காரணம் என்ன? அந்தக் கொள்ளைக்காரர்களின் பயங்கர அட்டகாசங்களை மக்கள் துணிவுடைமை என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள்.

உண்மையான துணிவு உடையவனை அவனுடைய பகைவனும் புகழ்ந்து போற்றுவானே, அந்த முறையில் தான் கொள்ளைக்காரர்கள் உயர்ந்த மதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

இப்படிப் போற்றப்படுகிற அந்தக் கொள்ளைக்காரர்கள், உண்மையில் தங்களை உயர்ந்த வீரர்கள் என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். ”நீ ஒரு கோழை” என்று கூறிக் கொண்டிருக்கிற அவர்களுடைய உள்ளுணர்வை, மக்களின் பாராட்டுக்கள் வாயடைக்கச் செய்துவிடுகின்றன!

அதனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பொருளாதார வசதி, வாழ்க்கை வசதி, புகழ் போன்றவற்றில், மேலும் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி முயற்சி செய்யாமல் இருப்பவன் நாளடைவில் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவனாகிவிடுகிறான். மங்கிப் போய்விடுகின்றான், மக்கிப் போய்விடுகிறான்!

அறிவும் ஆற்றலும் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த இரண்டும் நமக்கு முழுக்க முழுக்கப் பயன் உள்ளவையாக அமையும்!

-தொடரும்

admin @ 5:18 am
Filed under: Tamilvanan