» movie review .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Tamil Padam : Movie Review

Posted on Tuesday 2 February 2010

தமிழ்ப் படம் : திரை விமர்சனம்

tamil-padam1.jpg

தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்து வந்திருக்கும் படம்தான் ‘தமிழ்ப் படம்’.

மதுரைக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமத்தின் ஒரு பெயர் சினிமாபட்டி. இந்த கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடுகின்றனர். காரணம், இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் நடிக்க கோடம்பாக்கம் போய் விடுகிறார்கள். கொஞ்சம் பெரிய ஆள் ஆனவுடன் ‘அடுத்த முதல்வர்’ எனச் சொல்லிக் கொண்டு அரசியலிலும் நுழைகின்றனர். இதனால் கடுப்பாகும் அரசுகள் இந்த கிராமத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் கடுப்படுக்கின்றன. அதனால் பஞ்சாயத்தில் எடுத்த தீர்மானப்படி ஆண் சிசுக் கொலை நடத்தப்படுகிறது.

பெரியார்தாசனின் மனைவிக்குப் பிறக்கும் ஆண் குழந்தையை, மருத்துவச்சி பரவை முனியம்மா காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். பெரியவனாகும் அந்த குழந்தைதான் கதாநாயகன் ஷிவா. குடிசைப் பகுதியில் வசிக்கும் அவர், ரகசிய போலீசில் வேலைப் பார்ப்பதால் ரவுடிகளை அடித்துத் துவைக்கிறார். க்ளைமாக்சில் தாதாக்களின் தலைவனை கைது செய்து நீதிமன்றத்தில், நீதிக்காக நிறுத்துகிறார்.

காலம் மாறினாலும் தன்னை மாற்றிக்கொள்ளாத தமிழ்ப் படங்களை ஒவ்வொரு காட்சியிலும் காய்ச்சி எடுக்கிறார்கள் ‘தமிழ்ப் படம்’ படத்தில். கருத்தம்மா படத்தைப் போல் துவங்கும் கதையில், பெண் சிசு கள்ளிப்பாலால் கொல்லப்படுகிறது என்றால் இதில் ஆண் சிசு –கள்ளிப்பால் எனத் துவங்குகிறது. முதல் காட்சியே சொல்லிவிடுகிறது கதை எந்த வழியில் பயணிக்கப்போகிறது என்று.

ரவுடிகளின் அட்டகாசத்தை கண்டு விட்டு ஓடி வரும் சிறுவன் பாட்டியிடம் கூற, ‘நீ பெரியவனா ஆகனும்னா சைக்கிள் பெடலை சுத்து’ என்கிறார் பாட்டி. அவனும் சைக்கிள் பெடலைச் சுற்ற சில நொடிகளில் பெரியவனாகிவிடுகிறான். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களை துவைத்தெடுத்து, நாட்டில் உள்ள அத்தனை ஆக்ஷன் நாயகர்களையும் நெற்றிப்பொட்டில்அடிக்கிறார்.

கதாநாயகி திஷா பாண்டேவுடன் ஷிவா பாடும் காதல் பாட்டான ‘ஓ மகசியா’ பாடல் பல பாடல்களில் வரும் ஹம்மிங்கையெல்லாம் வைத்து முழுப்பாடலாக்கப்பட்டு கிண்டல் அடிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியின் அம்மா அழகு கதாநாயகனிடம், ‘என் பொண்ணு கோடீஸ்வரி. நீயோ ஏழை. உனக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது?’ என்கிறார். அத்துடன் வேலைக்காரனிடம் ‘காபி கொண்டா’ என்கிறார். ‘கோடீஸ்வரன் ஆகிக் காட்டுகிறேன்!’ என்று சவால்விடும் நாயகன் இஸ்த்ரி போட்டும், பேப்பர் போட்டும், பால் விற்றும் கோடீஸ்வரனாகி அழகு வீட்டுக்குச் செல்கிறார். அப்போது வேலைக்காரன் காபி கொண்டுவர, ‘அடடே, காபி கைக்கு வர்றதுக்குள்ள கோடீஸ்வரனாயிட்டியே!’ என்று அழகு சொல்லும்போது சிரிப்பால் நம் அடி வயிறு வலிப்பது நிஜம்.

ஒட்டுமொத்தமாகத் தமிழ்ப் படங்களை, அதன் அபத்தமான காட்சிகளை சுட்டிக்காட்டி துகிலுரித்திருக்கிறார்கள். கடைசியில் புது வில்லன் வருவார் என எதிர்பார்க்கும் நிலையில், பரவை முனியம்மாவை ரவுடிகளின் பாஸ் போல காண்பித்து அங்கும் நையாண்டியை நிலை நாட்டியிருக்கிறார்கள்.

நீதிமன்றத்திற்கு வரும் வழக்கை சில நொடிகளில் விசாரிக்கும் நீதிபதி வி.எஸ் .ராகவன், ‘தீர்ப்பை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கலாம் என்றுதான் நினைத்தேன். அன்றைக்கு என் அக்கா வீட்டில் ஒரு விழா இருப்பதால் இப்பவே தீர்ப்பை சொல்லிடறேன்’ என்று தீர்ப்பு சொல்வது சூப்பர்ரக காமெடி.

தமிழ்ப் படங்களை கிண்டல் அடித்தே தமிழ்ப்படம் கொடுத்திருக்கும் இயக்குநர் அமுதன் துணிச்சலானவர் மட்டுமல்ல திறமையானவரும் கூட.

admin @ 1:09 am
Filed under: Review
Goa : Movie review

Posted on Sunday 31 January 2010

கோவா : திரை விமர்சனம்

goa-movie.jpg

கோவா போவது இளைஞர்களின் கனவு. அப்படி கோவா போன மூன்று இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘கோவா’.

மதுரை பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் மூவரும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி, வெளியூரு சென்று சினிமா பார்த்த குற்றத்திற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். மூன்று பேரும் மறுபடியும் ஊரை விட்டு ஓடுகிறார்கள்.

மதுரையில் நண்பர் ஒருவன் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதைப் பார்ப்பவர்கள், கோவா போய் தாங்களும் வெளிநாட்டுப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று குருட்டுக் கணக்கு போடுகிறார்கள். அதன்படி கோவாவுக்குச் செல்கின்றனர்.

ஜெய், பாடகி பியாவை விரும்புகிறார். வைபவ், சிநேகாவிடம் சரண்டர் ஆகிறார். பிரேம்ஜி, வெள்ளைக்காரப் பெண்ணிடம் மனத்தை பறிகொடுக்கிறார். மூன்று பேரும தங்கள் காதலை ஜெயித்தெடுத்தார்களா என்பது மீதிக் கதை.

ஒரு மது - நடன மேடையில் தோன்றி விட்டு காணாமல்போகும் சிநேகா மீண்டும் எப்போது வருவார், யாருடன் ஜோடி சேருவார் என எதிர்பார்க்க வைக்கிறார். உல்லாச கப்பலுக்கு சொந்தக்காரரான அவர், பிரசன்னாவை அடித்துத் துரத்திவிட்டு வைபவ்வை திருமணம் செய்துகொள்வதும், கோபம் வரும் போதெல்லாம் வைபவ்வை அடிப்பதும்… சிநேகாவுக்கு வித்தியாசமான ரோல்தான்.

ஊர் அம்மன் கோயிலில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை வைபவ் சிநேகாவிடம் கொடுப்பதும் பிறகு, அவற்றை மீட்க கப்பலுக்குள் நுழைந்து போராடுவதும் திகிலுடன் கலந்த திருப்பு முனைகள்.

ஜெய் - பியா, வைபவ் - சிநேகா ஜோடிகளை விட பிரேம்ஜி அமரன் - வெள்ளைக்காரப் பெண் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் கதையை நகர்த்திய இயக்குநர் வெங்கட் பிரபு இடையில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியில் சுதாரித்துக்கொண்டு பிரமிப்பூட்டுகிறார். அவருக்குப் பக்கபலமாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் இருந்திருக்கிறார்கள்.

கோவா என்றாலே சரக்கு அடிப்பதும், சைட் அடிப்பதும்தானா என்று எழும் கேள்வியை அடக்காமல் இருக்க முடியவில்லை.

admin @ 11:01 pm
Filed under: Review
Aairathil Oruvan : Movie review

Posted on Tuesday 19 January 2010

ஆயிரத்தில் ஒருவன் : திரை விமர்சனம்

aayirathil-oruvan.jpg

யிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மக்களுடன் தப்பிச் செல்லும் சோழ இளவரசனை கண்டுபிடிக்கும் கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்கள் படையெடுப்புக்குப் பிறகு, வியட்நாம் அருகிலுள்ள தீவு ஒன்றுக்கு மக்களுடன் ஓடுகிறான் கடைசி சோழன். அப்போது பாண்டியனின் குல தெய்வத்தையும் திருடிக்கொண்டு செல்கிறான்.

அவரையும் அந்த சிலையை தேடி ஆராயும் பலரில் தொல்லியல் ஆய்வாளர் பிரதாப்பும் ஒருவர். அவரும் நாடு திரும்பவில்லை. அவரைத் தேடி கண்டுபிடிக்க பாதுகாப்பு அதிகாரி ரீமாசென் தலைமையில் ரகசியப் படையை அனுப்புகிறது அரசு. அவர்களுக்கு வழிகாட்ட பிரதாப்பின் மகளும் இளம் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியா செல்கிறார். இவர்களுக்கு உதவி செய்ய செல்லும் கூலிப்படையின் தலைவனாக கார்த்தி.

காடு, மலை, கடல், பாலைவனவெல்லாம் தாண்டி செல்கிறது இந்த படை. அவ்வளவு எளிதாகத் தன்னைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வழியெங்கும் 7 ஆபத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறார் கடைசி சோழனாக வரும் பார்த்திபன். இதையெல்லாம் கடந்து சோழனின் இருப்பிடத்தை அடைகிறது ரீமாசென் தலைமையிலான படை. சோழனின் பிடியில் மூவரும் சிக்குகின்றனர். சோழ வம்சத்தைச் சேர்ந்த தூதர் எனச் சொல்லும் ரீமாசென் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும், சோழனிடம் சிக்கியுள்ள பாண்டியச் சிலையை மீட்க வந்தவர் என்பதும் பின்னர் தெரிகிறது. அவருக்கு சிலை கிடைத்ததா? சோழனும் அவனுடைய மக்களும் என்ன ஆனார்கள்? கார்த்தி ஆண்ட்ரியா என்ன ஆனார்கள் என்பதும் மீதிக்கதை.

ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்பட்டுள்ள கதையில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மூவரின் ரொமாண்டிக் காட்சிகளும் உண்டு. மாயாஜாலமும் பின்னுகிறது.

முன்பாதியில் கலகலவென செல்லும் கதை பின்பாதி யில் குழப்பக்குட்டையாக தேங்கி நிற்கிறது. மக்களை துன்புறுத்தும் சோழ மன்னன் பார்த்திபன் நல்லவனா கெட்டவனா? வறுமையில் வாடி வரும் அவனுடைய மக்கள் அதுவரை தாக்குப் பிடித்தது எப்படி? இருண்ட குகைக்குள் நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

ஆபத்துகளை கடந்து செல்லும் காட்சிகள் அற்புதம் என்றாலும், ஒரு போன் அடித்தால் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவார்கள் என்றால், அந்த ஆபத்துகளைச் சந்திக்காமலேயே அந்த இடத்திற்கு கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா குழுவும் வந்திறங்கிறங்கிருக்கலாமே?

கார்த்தி தனது நடிப்புத் திறமையை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார். ரீமாசென்னும் தன்னுடை பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. பார்த்திபனுக்கு வித்தியாசமான வேடம் என்றாலும் அவர் செய்யும் கொடூர சேட்டைகளை தாங்க முடியவில்லை.

பாடல்களில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பின்னணி இசையில் காணாமல் போய்விட்டார். ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.சந்தானத்தின் கலையும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

வித்தியாசமான முயற்சித்தான் என்றாலும் ஆயிரத்தில் ஒருவனை குழப்பமில்லாமல் கொடுத்திருந்தால் ஆயிரத்தில் ஒரு அபூர்வ இயக்குநராக செல்வராகவன் மாறியிருப்பார்..

admin @ 11:07 pm
Filed under: Review and kollywood
Naan Avan Illai-2 : Movie review

Posted on Monday 30 November 2009

நான் அவன் இல்லை - இரண்டு : திரை விமர்சனம்

naan-avan-illai-2.jpg

ஜீவன் நடித்து வெளிவந்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இதிலும் அவர் பெண்களை ஏமாற்றும் கதைதான். ஆனால் இதில் நல்ல காரியத்திற்காகப் பெண்களை ஏமாற்றுகிறார் ஜீவன்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா, பணக்கார இளைஞனை காதலித்து மணக்கிறார். இந்நிலையில் அவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதற்காக கணவரின் குடும்பத்தாரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம்  பெற்றுக்கொண்டு செல்கிறார். திடீரென நடக்கும் தாக்குதலில் சங்கீதாவின் கணவர் இறந்துவிட, அவரைக் கடத்துகிறது கணவனின் குடும்பம். கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாகக் கூறுகிறது. இதைப்பார்த்து இரக்கப்படும் ஜீவன், சங்கீதாவை மீட்க தேவைப்படும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

அதற்காக பெண்களை ஏமாற்றி பணம், நகையை  பறிக்கிறார். பணத்தை க்கொடுத்து சங்கீதாவை மீட்கிறார். ஏமாந்த  பெண்களோ ஜீவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்றனர். ஜீவன் தப்பித்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

நான் அவன் இல்லை பாகம் ஒன்றில் கடைசியாக ஜீவன் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார். அதனால் இரண்டாம் பாகம், வெளிநாட்டில்  இருந்து கதை தொடங்குகிறது. அதே கதைதான். ஆனால், கதாநாயகிகள் மட்டும் வேறு.

ஜீவனை தன்னுடைய கடவுளாக ஆராதிக்கும் பெண் துறவி ரக்ஷனாவிடம் ஏமாற்றப்பட்ட பெண்கள், ஜீவன் பற்றி  விசாரிக்கிறார்கள். தாங்கள்  ஏமாந்த கதையை அவரிடம் கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் சொத்து வாங்க நினைக்கும் லட்சுமி ராயிடம் கோடிஸ்வரன் போல நடித்து ஏமாற்றுகிறார் ஜீவன். ஜொள்ளு பார்ட்டிகளை பார்ட்டிக்கு அழைத்து, அவர்களை அவர்களுடைய மனைவிகளிடம் மாட்டிவிடும் ஸ்வேதா மேனனிடம் மாட்டிக்கொள்ளும் ஜீவன், தான் ஏமாற்றாமால் ஸ்வேதாவை ஏமாற்றி, பணம், தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துக்  கொண்டு தப்பிக்கிறார்.
தன்னுடைய வருங்காலக் கணவன் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் ஆந்திரப் பெண் ஸ்ருதியின் மனத்தில் அழகாக இடம் பிடிக்கிறார் ஜீவன். அங்கேயும் கை வைத்தப்பிறகு தப்பிக்கிறார். பெண் தாதா ரக்ஷனாவிம் பாடலாசிரியர் வாலியாக ஆக்ட் கொடுக்கும் ஜீவன், அவருடைய பாடல் வரிகளை சொல்லிக்காட்டி ரக்ஷனாவை பெண் துறவியாக மாற்றி விடுகிறார்.

ஜீவன் பெண்களை ஏமாற்றுவதற்கு இலங்கைப் பெண் சங்கீதாவின் கதையைக் காரணமாக்கி, ஜீவனின் ஏமாற்று வேலைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார் இயக்குநர் செல்வா.
.
சரி, இத்துடன் ஜீவனின் ‘நான் அவன் இல்லை’ கதையெல்லாம் முடிந்தது என்று பார்த்தால் கடைசியில் குளம் அருகில் நிற்கும் ஜீவனிடம் வரும் ஒரு பெண் தன்னை ‘வ்ள்ளி’ என அறிமுகம் செய்துகொள்ள,  ‘என் பேர் முருகன்’ என்று ஜீவன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதைப் பார்த்தால் ‘நான் அவன் இல்லை’ பாகம் மூன்றுக்கு இப்போதே அடித்தளம் போட்டு விட்டது போலிருக்கிறது.

admin @ 12:31 am
Filed under: Review
Vamanan - movie review

Posted on Saturday 18 July 2009

வாமணன் - திரை விமர்சனம்
vamanan.jpg
சினிமா நடிகராகும் ஆசையில் சென்னை வரும் ஜெய் கொலைப்பழியில் சிக்குகிறார். அதிலிருந்து மீள்வதுதான் கதை. நடுவே காதல், லந்து எல்லாம் உண்டு.

ரவுடிகள் தாக்குதலில் காயம் அடையும் லட்சுமிராயை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றுகிறார். இருவரும் சினேகம் ஆகிறார்கள். மறுநாள் லட்சுமிராய் வீட்டுக்கு செல்லும் ஜெய் அங்கு அவர் கொலையாகி கிடப்பதை பார்த்து அதிர்கிறார்.

ஜெய் கொலையாளி என போலீஸ் துரத்துகிறது. அரசியல்வாதிகளின் பதவிச் சண்டையில் டெல்லிகணேஷ் கொல்லப்பட அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கருதி வில்லன் கூட்டமும் போலீசும் பிடிக்க அலைவதை உணர்கிறார் ஜெய். லட்சுமிராயை கொன்றவனையும் கண்டுபிடிக்கிறார்.

ஆதாரத்தை தேடி பிடித்து கொலைப்பழியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கதையின் முடிவு.

கதாநாயகனுக்குரிய எவ்வித சாகசமும் செய்யாமல் பளிச்சிடுகிறார் ஜெய். நண்பன் காசில் டிரெஸ், செல்போன் என ஜாலி ரவுண்ட் கட்டுவதும் சினிமா கம்பெனிகளில் நடித்து காட்டி திட்டு வாங்கி விரட்டியடிக்கப்படுவதும் ரகளை.

பூட்டிய வீடுகளுக்குள் ரகுமானுடன் நுழைந்து பதறுவதிலும் ப்ரியா மேல் காதல் வலை வீசுவதிலும் அழுத்தம் பதிக்கிறார்.

லட்சுமிராய் கொலையாகி ஜெய்யை போலீஸ் விரட்ட துவங்கியதும் கதை  வேகம் பிடிக்கிறது. அடுக்குமாடி விளிம்பில் ஜெய், ரகுமான் மோதும் சண்டை காட்சி பதற வைக்கிறது.

டேப் ஆதாரம் தேடும் ரவுடிகளையும் போதை மருந்து கடத்தல் கூட்டத்தையும் நேருக்கு நேர் மோத விட்டு வீழ்த்தும் தந்திரம் சூப்பருங்க.

புதுமுகம் ப்ரியா கவர்கிறார். லட்சுமிராய் கவர்ச்சியாக சாகிறார். சந்தானம் காமெடி பெரிய பலம்.

காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் அஹமத். யுவன் சங்கர்ராஜா இசையும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

admin @ 3:14 am
Filed under: Review and kollywood
Nadodigal - Movie Review

Posted on Saturday 4 July 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்

naadodigal

சசிகுமார், விஜய், பரணி மூவரும் நண்பர்கள். இளைஞர்களுக்கே உரிய சந்தோஷச் சமாசாரங்களும் திரிகிறார்கள். சசிகுமார்
உறவுப் பெண்ணான அனன்யாவை காதலிக்கிறார். மகளை கட்டிக்க அரசு வேலையுடன் வர மாமனார் நிர்ப்பந்திக்கிறார். இதற்காக தேர்வுகள் எழுதுகிறார். விஜய் சசிகுமார் தங்கையை காதலிக்கிறார்.

சசிக்குமாரின் பழைய நண்பர் ரங்கா இவர்கள் வாழ்க்கையில் வந்து சேர திருப்பம். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயலும் இவரை காப்பாற்றி காரணம் கேட்கின்றனர். காதல் தோல்வி என்கிறார்.

நாமக்கல் தொழில் அதிபர் மகளான காதலியை ரங்காவுடன் சேர்த்து வைக்க நண்பர்கள் கிளம்புகின்றனர். காதலியைக் கடத்தி ரங்காவுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். சண்டையில் விஜய் ஒரு காலை இழக்கிறார். பரணி காது செவிடாகிறது. சசிகுமார் காதலியை இழக்கிறார்.

மூவரும் ஜெயிலில் இருந்து திரும்புகின்றனர். நண்பன் காதலை நினைத்து தங்கள் இழப்புகளை மறக்கின்றனர். மீண்டும் பழைய வாழ்வை துவங்கும்போது காதல் ஜோடி ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள் என்ற செய்தி இடியாக வந்து தாக்குகிறது.

தங்கள் உழைப்பு, தியாகம் அத்தனையும் மதிப்பிழந்து போனது கண்டு துடிக்கின்றனர். இருவரையும் கடத்தி கொன்று விடலாம் என பரணி ஆவேசமாக கத்துகிறார். மீண்டும் ஒரு கடத்தலுக்கு தயாராவது பரபரப்பான கிளைமாக்ஸ்.

முறைப்பெண்ணை மணக்க வேலை தேடும் சசிகுமார் யதார்த்த நடிப்பில் பளிச்சிடுகிறார்.

தந்தை யோசனைபடி காதலிக்கும் விஜய் கலகலப்பூட்டுகிறார். காருக்கு அடியில் சிக்கி காலை இழந்து துடிக்கையில் அனுதாபப்பட வைக்கிறார். கஞ்சா கருப்பும், பரணியும் காமெடியில் பட்டையை கிளப்புகின்றனர். முகத்தை கோணி, சிரித்து துறுதுறுவென வரும் அனன்யா அனைவர் மனதில் ஒட்டிக் கொள்கிறார். அபிநயாவும் ஓகே.

நண்பர்களின் கலாட்டாவுடன் தொடங்கும் கதை காதலுக்கு உதவ நாமக்கல் சென்றதும் பறக்கிறது.

வித்தியாசமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை என புதுப்படையல் இட்டு, முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.

இசையில் சுந்தர்.சி. பாபுவும், ஒளிப்பதிவில் எஸ்.ஆர்.கதிரும் தங்கள் திறமையைக் காட்டி அசத்தியிருக்கிறார்கள்.

admin @ 4:31 am
Filed under: Review
Ayan - Movie review

Posted on Tuesday 7 April 2009

அயன் - திரை விமர்சனம்

ayan.jpg

நடிப்பு: சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன், ஆக்ஷிப் செகால்
ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு
வசனம்: சுபா
சண்டைப்பயிற்சி: கனல்கண்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கதை, திரைக்கதை, இயக்கம்: கே.வி.ஆனந்த்
தயாரிப்பு: சன் பிரதர்ஸ், ஏவி.எம்.

வேகம், விறுவிறுப்பு, ஜில் காதல் என மசாலாக்கள் எல்லாம் சமமாகக் கலந்து, கே.வி.ஆனந்த் படைத்திருக்கும் சூப்பர் விருந்துதான் சூர்யாவின் அயன்.

வழக்கமான கடத்தல் கும்பல் கதைதான் என்றாலும் கொடுத்த விதம் புதுசு.

மெத்த படித்த சூர்யா விதவிதமான் பெயர்களில், பாஸ்போர்ட் கோல்மால்கள் செய்து வெளிநாடுகளுக்குப் பறந்து பறந்து பொருட்களைக் கடத்திவந்து பிரபுவிடம் தருகிறார். பிரபு, சூர்யா கும்பல் கடத்தலில் நம்பர் ஒன்னாக இருப்பது எதிரி ஆக்ஷிப் செகாலுக்கு பிடிக்கவில்லை.நம்பர் ஒன்னாக குறுக்குசால் ஓட்டுகிறார்.சூர்யா செல்லுமிடமெல்லாம் தன் ஆட்களை அனுப்பி வம்பிழுக்கிறார்.

சூர்யா அடியாளாக இருக்கும்பிரபு கும்பலிடம் ஜெகனும் வந்து சேர்கிறார். அவருடன் நட்பு பாராட்டும் சூர்யாவுக்கு, ஜெகனின் தங்கையான தமன்னா மீது காதல் பிறந்து விடுகிறது (வேற வழி!).

ஒருகட்டத்தில், செகால் அனுப்பிய உளவாளிதான் ஜெகன் என்பது தெரியவருகிறது.காதலை உதறி, பிரபுவுக்கு விசுவாசம் காட்டுகிறார் சூர்யா.

சூர்யாவும் ஜெகனும் ஒரே சமயத்தில் மலேஷியா பயணிக்க நேர்கிறது.கேப்சூல்களில் போதை மருந்தை அடைத்து, அதை வயிற்றுக்குள் வைத்து கடத்துகிறார் ஜெகன். மலேஷிய விமான நிலையத்தில் வயிற்றுக்குள் கேப்சூல் ஒன்று வெடித்துவிட, அவரை கடத்திச் செல்லும் கடத்தல் கும்பல் அவருடைய வயிற்றைக் கிழித்து போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அவரை குற்றுயிராக போட்டுவிட்டுச் செல்கிறது.

நண்பன் ஜெகன் தன் கண்ணெதிரேயே துள்ளத்துடிக்க இறப்பதைக் காண்கிறார் சூர்யா. நண்பனின் வேண்டுகோளின்படி அவரை யாருக்கு தெரியாமல் எரித்துவிட்டு சென்னை திரும்பும் சூர்யாவை ஜெகனைக் கொன்றதாகக் கூறி, காவல்துறை கைது செய்கிறது.
(எல்லாம் நம்ம வில்லன் ஏற்பாடுதான்). அதன்பிறகு சூர்யா எப்படி மீள்கிறார், எதிரியை அழிக்கிறார் என்பது மீதிக்கதை.

அயன் சூர்யா அயர்ன் போட்ட சட்டையை கசக்கி போட்டால் எப்படி இருக்குமோ அப்படி வருகிறார்.சூர்யாவின் சேட்டைகள், காதல் குறும்புகளைப் பார்த்தால் அவருக்கு அடிதடியெல்லாம் வருமா என சந்தேகம் வருகிறது. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் ஆக்ரோஷம்… யப்பா… சிலிர்க்கிறது. சண்டைக்காட்சிகள் புதிய  பரிமாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமன்னா அழகில் மட்டுமல்லாது நடிப்பிலும் கொஞ்சம் முன்னேற்றம் காண்பிக்கிறார்.

ஒரு வார நரைத்த தாடியுடன் மிடுக்காக வளைய வரும் பிரபு கெட்டப், தமிழ்த் திரைக்கு புதுசு. படத்தில் ஜெகன், கருணாஸ் என நிறைவாக செய்திருப்பவர்கள் நிறைய.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மூன்று பாடல்கள் கோடை காலத்திற்கேற்ற குளுமையைத் தருகின்றன. கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது.

கே.வி.ஆனந்த் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்றாலும் ஒளிப்பதிவு பொறுப்பை எம்.எஸ்.பிரபுவிடம் ஒப்படைத்தது சிறந்த முடிவு. சூர்யா, கே.வி.ஆனந்த் இவர்களுக்கு அடுத்த நாயகனாக இவருடைய ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.

கனா கண்டேன் என்ற ரசனைமிக்க படம் கொடுத்த கே.வி.ஆனந்த், ரசனைக் குறையாமல் மசாலா படமும் தரமுடியும் என நிரூபித்துவிட்டார்.

admin @ 12:09 am
Filed under: Review and kollywood
Pattalam - Movie Review

Posted on Sunday 29 March 2009

பட்டாளம் - திரை விமர்சனம்

pattalam.jpg

நடிப்பு: நதியா, அருண், பாலாஜி, கிருபா
தயாரிப்பு: லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்
இயக்கம்: ரோஹன் கிருஷ்ணா
இசை: ஜாஸி கிப்ட்

ட்டாளம்… நல்ல தலைப்பு. பொருத்தமான தலைப்பு. ராணுவத்திற்கு சமமானது மாணவர்களின் பட்டாளம். சிலநேரம் ராணுவத்தை விட பலமடங்கு சக்தி காட்டி மாணவர் பட்டாளம் ஒரு நாட்டையே திருப்பிப்போடும்.

மாணவர் பட்டாளத்தின் உலகை காட்ட வந்திருக்கிறது பட்டாளம்.

நதியாதான் அழகான தலைமை ஆசிரியர். பள்ளியில் ப்ளஸ்டூ பயிலும் மாணவர்களில் 8 பேர் இரு அணிகளாகப் பிரிந்து மோதி க்கொள்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை. கடுகடுவென திரிகிறார்கள்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மாணவர்கள் அங்கேயும் மோதிக்கொள்கிறார்கள். நதியா அவமானத்தால் தலைகுனிகிறார். போட்டியில் இருந்து விலகிவிட தீர்மானிக்கிறார். இதை அறிந்ததும் மாணவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுகிறது. இந்த ஒற்றுமை அவர்கள் தொடர்ந்தார்களா, போட்டியில் வென்றார்களா என்பது க்ளைமாக்ஸ்.

மாணவர்கள் என்றாலே சுறுசுறுப்பு, வேகம், குறும்பு, குசும்பு எல்லாம் உண்டுதானே… பட்டாளத்திலும் உண்டு. ஒற்றுமையின்மையால் அவமானம் அடையும் மாணவர்கள், ஒற்றுமையை மீட்டெடுத்தால் வெற்றி பெறமுடியும் என உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியராக, மிடுக்காக வருகிறார் நதியா. மாணவர்கள் மீது கோபப்படுவதாகட்டும், மாணவர்களை கொடுமைப்படுத்தும் ஆசிரியரை டிஸ்மிஸ் செய்வதாக இருக்கட்டும் அன்பும், கண்டிப்பும் கலந்த ஆசிரியராக மிளிர்கிறார்.

மாணவர்கள் என்றால் படிப்பு மட்டுமல்ல காதலும்தான் என்பதை தவறவிடாமல், காதலையும் கலந்து பட்டாளத்தை உலவ விட்டிருக்கிறார் இயக்குநர் ரோஹன் கிருஷ்ணா.

லஜ்ஜாவதியே பாட்டு மூலம் இசை ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஜாஸி கிப்ட்தான் இசை. பட்டாளத்திலும் பாடல்களில் பின்னியிருக்கிறார்.பத்திரிகையாளர் நெல்லைபாரதி இஸ்பகராராரா பாடல் மூலம் பாடலாசிரியராக கோலிவுட்டில் காலடி எடுத்து  வைத்திருக்கிறார்.

admin @ 10:11 pm
Filed under: Review
Aadatha Aattamellam - Movie Review

Posted on Friday 27 March 2009

ஆடாத ஆட்டமெல்லாம் - திரை விமர்சனம்

aadatha-aattamellam.jpg

நடிப்பு: ரவி கணேஷ், பாரதி, ஜெனி ஜாஸ்மின், ஸ்ரீநாத்
இசை: ஏ.ஆர். ரெஹானா
இயக்கம்: அழகர்

க்கா தம்பி பாசத்தை கொஞ்சம் அசை போட்டிருக்கும் டம் ஆடாத ஆட்டமெல்லாம்.

ஜெனி ஜாஸ்மினும் ரவிகணேசும் பாசமிக்க அக்கா தம்பி. ஜெனியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ரிஷி. தம்பிதான் முக்கியம் என்று காதலையும் திருமணத்தையும் மறுக்கிறார் ஜெனி. கடைசியில் தம்பியையும் கூட வைத்துக்கொள்வதாக இருந்தால் திருமணம் என்று இறங்கி வருகிறார். அதற்கு மாமியார் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் மனம் வெறுத்துப் போகும் ரவி, போதைக்கு (கஞ்சா) அடிமையாகிறார். அந்தப் பழக்கத்தால் கல்லூரி படிப்பும பாழாகிறது. இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் க்ளைமாக்ஸ் கண்கலங்க வைக்கிறது.

போதைக்கு பழக்கமாகி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார் ரவிகணேஷ். போதைப் பொருள் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்று மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அழகர். போதைக்காக, காதலி பாரதியைக் கூட தள்ளி வைக்கும் ரவி கணேஷின் நடிப்பு சாலப் பொருந்துகிறது.

ரவிகணேஷின் காதலியாக வரும் பாரதியை சில காட்சிகளில் துகிலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். பாசமிக்க அக்காவாக ஜெனி ஜாஸமின். தம்பியே உலகம் என்று வாழும் அக்காவின் உலகை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்சமே வந்தாலும், போலீஸ் மன்சூர் அலிகான் இன்னும் கொஞ்சம் என்று நம்மை கெஞ்ச வைக்கிறார்.

ஏ.ஆர்.ரெஹானா பாடல் மற்றும் பின்னணி இசையில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியிருசக்கலாம். அக்கா, தம்பி பாசத்தை அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் அழகர், அதை கொஞ்சம் ஆழமாகச் சொல்லவும் முயற்சி செய்திருக்கலாம்.

admin @ 10:25 pm
Filed under: Review
Aarupadai - Movie Review

Posted on Monday 16 March 2009

ஆறுபடை - திரை விமர்சனம்  
 
arupadai.jpg

நடிப்பு: குரு, ஆஷா, மாளவிகா, மயில்சாமி, கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு: வில்லாளன் 
இசை: ஆழ்வார்ஸ்ரீ
இயக்கம்: சர்வதீர்த்தவன்

னாதை ஆசிரமம் நடத்தி வரும் தாதா ஒருவன் அங்கு வரும் பெண்களை தனது உடல்பசிக்குத் தீனியாக்கிக் கொ(ல்)ள்கிறான்.

அவனுடைய மகன் மாடலிங் ஸ்டூடியோ வைத்து உடை மாற்றும் பெண்களை ரகசிய கேமராவில் பார்த்து ரசிக்கிறான். அங்கு போட்டாகிராபராக வேலைக்கு சேர்கிறார் குரு.

அவருக்கும் தாய், தந்தையின்றி வளரும் ஆஷாவுக்கும் காதல் பிறக்கிறது. ஸ்டூடியோவில் போட்டோ எடுக்க வரும் ஆஷாவையும் உடை மாற்றும் போது கேமராவில் ரசிக்கிறான் வில்லன். பிறகு கற்பழிக்கவும் முயற்சிக்கிறான்.
 
குரு அவனுடன் ஆவேசமாக மோதி சண்டையிட வில்லன் கொல்லப்படுகிறான். இதனால் தந்தை தாதா வெறியாகிறான் குருவை அடித்துத் துவைத்து செத்துவிட்டதாகக் கருதி சகதியில் வீசுகிறான். காதலியையும் தீர்த்து கட்ட தேடுகிறான். உயிர் பிழைக்கும் குரு காதலியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தப்பி ஓடுகிறார். அங்கும் ரவுடி கும்பல் துரத்துகிறது. காதல் ஜோடிகள் தப்பித்ததா, தாதா கும்பலிடம் சிக்கி சீரழிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

அழகான காதலை ரவுடிகள், வெட்டு, குத்து, சண்டையில் கலந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சர்வதீர்த்தவன்.

குரு காதலிக்கவும் சண்டை போடவும் செய்கிறார். ஆஷா காதலியாக வந்து விட்டு போகிறார். மாளவிகா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார். மயில்சாமி, கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கின்றனர்.

வில்லாளன் ஒளிப்பதிவும், ஆழ்வார்ஸ்ரீ இசையும் ஆறுபடையை தூக்கி நிறுத்தும் இரண்டு படை.

வில்லன் மகனை கொல்வது யார் என்ற சஸ்பென்சிலும், நெகிழ வைக்கும் கிளைமாக்சிலும் இயக்குநரின் முத்திரை தெரிகிறது. 

admin @ 1:30 am
Filed under: kollywood