Posted on Friday 27 March 2009
சிங்கத்தை அடக்குவது எப்படி?

ரிங் மாஸ்டர் காட்டு ராஜா சிங்கத்தை எப்படி அடக்குகிறார்? ரொம்ப சிம்பிள்!
எகிறிக்கொண்டேயிருக்கும் ரவுடி மாணவனை ஒரு ஆசிரியர் எப்படி கையாள்கிறாரோ அப்படி.
கோபத்துடன் கச்சா முச்சா என்று கத்தும் வாடிக்கையாளரை வியாபாரிகள் எப்படி கையாள்கிறார்களோ அப்படி.
அத்துமீறும் வயசுப்பசங்கள அவர்களுடைய பெற்றோர்கள் எப்படி கையாள்கிறார்களோ அப்படி.
சிங்கத்தை அடக்குவது என்பது, சொல் பேச்சு கேட்காத, நம்மை விட பலசாலியை நம்முடைய சாதுர்யத்தால் அதன் ஆக்ரோஷத்தை
கைவிடச் செய்து நாம் சொல்வதை செய்ய வைப்பதுதான்.
சிங்கத்தை அடக்குதலை ஆங்கிலத்தில் lion taming என்பார்கள் இந்த tame என்பது இப்போது வெறும் train என்றாகிவிட்டது. நாம் கூறவருவது என்னவென்றால், சிங்கத்தை train பண்ண முடியாது tame தான் பண்ணமுடியும்.
சரி சிங்கத்தை அடக்கி, கையாள ஒரு ரிங் மாஸ்டர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?
சிங்கத்தை நாய்க்குட்டியைப் போல பழக்கியவர் பிரான்ஸை சேர்ந்த ஹென்றி மார்ட்டின். 1819இல் பிரெஞ்ச் சர்க்கஸில் புலி ஒன்றை கூண்டிற்குள் அடைத்து வைத்து கூடாரத்துக்குள் அவிழ்த்துவிட்டு, மார்ட்டின் அதை ஆட்டுவித்ததைக் கண்டு மக்கள் மிரண்டு போனார்கள்.
சாதாரண குதிரைப் பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்ற மார்ட்டின், புலி ஒன்றை பழக்கி தான் இடும் சின்ன சின்ன கட்டளைகளுக்கு பணிய வைத்தார். ஆக, இவர்தான் காட்டு மிருகம் ஒன்றை பழக்கிய உலகின் முதல் ரிங் மாஸ்டர்.
பெரிய பூனைகளான புலிகளின் அருகில் இவர் கொஞ்ச கொஞ்சமாகத்தான் நெருங்குவார். அன்பாக பழகுவதுபோல் பழகி, தான் சொல்வதை கேட்க வைத்துவிடுவார். புலிக்குட்டி பிறகு பூனைக்குட்டிதான்!
சிங்கத்தை, புலியை பணிய வைக்கும் பயிற்சி காலபோக்கில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
முதல் ரிங் மாஸ்டரான ஹென்றி மார்ட்டின், புலிகளுக்கு முதலில் தம்மிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவார். கூண்டுக்கு வெளியில் இருந்து கம்பிகளுக்கு இடையே புலிகளிடம் சன்னமாக உரையாடுவாராம். சில நேரம் அதன் உறுமல் மார்ட்டினின் காதை கிழித்திருக்கின்றன.
அப்புறம் என்ன செய்வார் தெரியுமா. புலி இருக்கும் கூண்டிற்குள்ளேயே நுழைந்துவிடுவார். ஆனால், அந்தக் கூண்டுக்குள்ளே அவரை புலியிடமிருந்து பிரிக்கும் வகையில் கூண்டுக்குள் ஒரு கூண்டு இருக்கும்.
அவர் இருக்கும் பகுதியில் இருந்து புலி இருக்கும் பக்கம் முதலில் தன் தலையை விடுவார் மார்ட்டின். அப்புறம் தோள், கை, கால் என்று உடலையே நுழைத்து புலிக்கு பக்கத்திலேயே போய்விடுவார். இப்போது மார்ட்டின் வருகையை, அருகாமையை புலி பெரிதாக நினைக்காது. அவருடைய அருகாமையை விரும்பவும் தொடங்கிவிடும்.
இப்படித்தான் காட்டுமிருகங்களை மனிதன் பணிய வைக்கும் வித்தைகள் அரங்கேறின.
ஆனால், இந்த அன்பு, அருகாமை, கொஞ்சல் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். ஐசக் வான் அம்பர்க் வந்தார். அதிரடி ஆசாமியான இவர் புலிகளை பணிய வைக்க வன்முறையை கையாளத் துவங்கினார். இவருக்குப் பிறகு வந்த கிளைடே பீட்டி என்பவர் சாட்டை மற்றும் துப்பபாக்கியுடன் களம் இறங்கினார்.
சர்க்கஸ்ஸில் சிங்கத்திற்கு முன்னால் ஒரு நாற்காலி போடப்படுகிறதே ஏன் தெரியுமா? சிங்கத்திற்கு அதெல்லாம் தூசு இல்லையா? இல்லைங்க! நாற்காலி போடப்படுவது சிங்கத்தின் கவனத்தைத் திசை திருப்பவே. சிங்கம், புலி போன்ற பூனை இனத்தைச் சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு சமயத்தில் ஒரு மனநிலைதான் இருக்கும். தன் எதிரே நான்கு கால்களுடன் ஒன்று நிற்பதைக் கண்டு அவை குழம்பும்.
குட்டையைக் குழப்பி விரால் பிடிப்பது போல், சிங்கத்தின் இந்த குழம்பிய மனநிலையை ரிங் மாஸ்டர் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வார்.
தற்சமயம் சிங்கங்களை பயிற்சிப்பதில் பல புதிய தந்திரங்கள், உபாயங்கள் கையாளப்படுகின்றன. ரிங் மாஸ்டர் கைகளில் துப்பாக்கியும், சாட்டையும் இருந்தாலும் மனித(மிருக)நேயம் கடைபிடிக்கப்படுகிறது. அவற்றை கொடுமைப்படுத்தும் வழிமுறைகளை அனைவருமே கைவிட்டுவிட்டார்கள்.
மார்ட்டின் கடைப்பிடித்த வழிமுறைகளைத்தான் இன்றைய ரிங் மாஸ்டர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
சாட்டையை ஓங்கி அடிப்பது போல் இருந்தாலும் சிங்கத்திற்கும், தங்களுக்கும் இடைப்பட்ட இடத்தில்தான் சாட்டையை விசிறுவார்கள்.வளர்ந்த சிங்கத்தை பழக்குவதைவிட, அதை குட்டியில் இருந்தே பழகி பயிற்சி அளிப்பது எளிது. இதைதான் பெரும்பாலான ரிங் மாஸ்டர்கள் செய்து வருகிறார்கள். நீங்கள் சர்க்கஸில் பார்க்கும் சிங்கம், புலிகளில் பெரும்பாலானைவை அங்கேயே பிறந்து, வளர்ந்தவையாகத்தான் இருக்கும்.
ரிங் மாஸ்டர்கள் எல்லாம் காட்டு மிருகடங்களை பழக்குகையில் ‘ஆபரண்ட் கண்டிஷனிங்’ என்கிற பழக்கும் வழிமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இந்த வழிமுறையை பி.எஃப். ஸ்கின்னர் என்கிற மனநல மருத்துவர் கண்டுபிடித்தார். இந்த வழிமுறையில் மிருகங்களை எளிதாக பழக்கிவிட முடிகிறது.
இதன்படி குறிப்பை(சிக்னல்) புரிந்து கொள்ளல்,சரியான முறையில் நடந்துகொண்டால் அதற்கு பதில் அந்த மிருகத்திற்கு பிடித்த ஒன்றை தருதல்,சொன்னதை சரியாக செய்ய வரும்வரை மிருகங்களுக்கு தேவையானவற்றை செய்து தருதல், அதற்குப் பிடித்த உணவை வஞ்சனை இல்லாமல் தருவார்கள்.
இப்போது ஒரு சிங்கத்தை வளையம் ஒன்றில் தவ்வ வைக்கவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் குறிப்பு(சிக்னல்) தந்தவுடன் சரியான திசையில் அது ஒரு ஸ்டெப் வைத்தாலும் ஒரு துண்டு மாட்டுக்கறியை தரலாம். சிங்கத்திற்கு குஜாலாகிவிடும். அதன் மனம் அடுத்த துண்டுக்கறியைப்பற்றி யோசிக்கும்போதே, அடுத்த ஸ்டெப்பை சரியாக வைக்கவும் தயாராகிவிடும். அப்பதானே உணவு கிடைக்கும் என்பது அந்த ஐந்தறிவுக்கு தெரியும். இப்படி ஒவ்வொரு சரியான மூவ்களுக்கும் அதற்கு பரிசு அளித்தபடி இருந்தால், அது கச்சிதமாக நம் சிக்னலின்படி செயலை செய்து முடித்துவிடும்.
இதுதாங்க சிங்கத்தை அடக்குற சூட்சுமம். இந்த முறையை வைத்து பொண்டாட்டியை அடக்க முடியுமான்னு கேட்டுறாதீங்க. அதுக்கெல்லாம் வழி இன்னும் கண்டுபிடிக்கவில்லையாம். அதுவரைக்கும் அவங்கதாங்க ரிங் மாஸ்டர்!
-கிருஷ்ணாசேகர்
































