Posted on Friday 6 February 2009
நான் கடவுள்: திரை விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, பூஜா, ராஜேந்திரன், அழகம் தமிழ்மணி, கவிஞர் விக்ரமாதித்யன் மற்றும் 175க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
இசை: இளையராஜா
சண்டைக் காட்சிகள்: சூப்பர் சுப்பராயன்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஷ்
வசனம்: ஜெயமோகன்
பாடல்கள்: வாலி
கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா
தயாரிப்பு: வாசன் விஷூவல் வென்சர், கே.எஸ். சீனிவாசன்
ஆன்மிக பற்று மற்றும் ஜோதிட மோகம் காரணமாக ஆசையாகப் பெற்றெடுத்த மகனை வீட்டை விட்டே துரத்துகிறார் தந்தை . தமிழ்நாட்டை விட்டே ஓடும் மகன் காசியில் அடைக்கலமாகிறான். சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கிடையே வளர்ந்து பெரியவனாகிறான்(ஆர்யா). நீண்ட தலைமுடியும், அகோர பசி கொண்ட கண்களுடன் அழகான அகோரி வாலிபனாக அவன் காட்சித் தருகிறான்.
இதற்கிடையே தான் செய்த தவறை உணரும் தந்தை ஆர்யாவைத் தேடி வாரணாசிக்கு வருகிறார். ஆர்யாவை அந்தக் கோலத்தில் பார்ப்பவர் அதிர்ந்து போகிறார. இருந்தாலும், தன்னுடன் ஆர்யாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வருகிறார்.
இங்கு வந்த பின்னர், ஆர்யாவின் வாழ்க்கையில் நேரும் திருப்பங்களும் அவர் மீண்டும் காசிக்கே திரும்புவதும்தான் கதை.
அழகான அகோரியாக வரும் ஆர்யா பாலாவின் சிறந்த சாய்ஸ். ஆர்யாவின் உருண்டு திரண்ட உடம்பும், அசுர வேகமும், ஆக்ரோஷ தாக்குதலும் தமிழ்த் திரைக்குப் புதுசு. ஆர்யாவின் சினிமா க்ராப்பை நான் கடவுள் நிச்சயம் மாற்றி வைக்கும். அந்த அளவுக்கு ஆர்யா அசத்தியிருக்கிறார்.
பார்வையற்ற பெண்ணாக பரிதாபம் தேடிக் கொள்ளும் பூஜா சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்.
தசாவதாரத்தில் கடவுள் விஷ்ணுவைப் போற்றி பாடல் எழுதிய வாலி, நான் கடவுளுக்காக சிவனைப் போற்றி எழுதியிருக்கிறார்.
க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் 26 நாட்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பாலாவைத் தவிர சிங்கம்புலி, ஆச்சார்யா ரவி, ராசய்யா கண்ணன் ஆகிய மூன்று இயக்குநர்கள் பணியாற்றி உள்ளனர்.
இளையராஜாவின் பின்னணி நேர்த்தியாக இருந்தாலும் பாடல்களில் பழைய வாசனை அதிகம் அடிக்கிறது. புதிதாக ஒன்றுமில்லை என்பதே மாஸ்ட்ரோவை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.
சேது, நந்தா, பிதாமகன் திரைப்படங்களுக்கு அடுத்ததாக பாலா செய்யும் நான்காவது திரைப்படம் நான் கடவுள். தன்னுடைய முந்தைய ப் படங்களுக்கு கதை, திரைக்கதை, இயக்கத்தோடு வசனத்தையும் எழுதிய பாலா நான் கடவுள் திரைப்படத்தின் வசனபொறுப்பை எழுத்தாளர் ஜெயமோகனிடம் ஒப்படைத்து விட்டார்.
ஜெயமோகனின் வசனம் சில இடங்களில் பேசவைக்கிறது சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.
யாரும் தொட அஞ்சும், தொட்டிராத கதைக்களத்தைத் தொட்டதுடன் அதில் நம்மையும் ஆழ்த்திவிடும் பாலா வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். முந்தைய பாலாவின் படங்களும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டவையே என்றாலும், பார்க்கும் ரசிகர்களுக்கிடையே எந்தப் பிரிவையும் ஏற்படுத்தவில்லை (ஏ,பி,சி, யை சொல்கிறோம்). ஆனால் நான் கடவுள் ஏதோ ஒரு பிரிவுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தயாரிப்பாளர் ஜாக்கிரதை.
நான் கடவுள் மூலம் தான் நான் ஒரு வித்தியாசமான 8216;கலை8217;ஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பாலா. வேறு என்னத்தா சொல்றது.
































