» 2008/04/25 Fire accident, some of 10 STD papers burnt .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Thursday 24 April 2008

2008/04/25 Fire accident, some of 10 STD papers burnt

எரிந்து போன எதிர்காலம்!
10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எரிப்பில் சதி?

வேலூர்: பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த வேலூர் ஊரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் விடைத்தாள்கள் எரிந்து சேதமடைந்தன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.

மொத்தம் உள்ள 1.06 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 450 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் அங்குள்ள பெரிய அறையில் விடைத்தாள்களை வைத்துப் பூட்டி சீல் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில்தான் அந்த அறையைத் திறப்பார்கள்.

நேற்றும் இரவு 7 மணியளவில் விடைத்தாள்கள் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த அறையை பாதுகாக்கும் பணியில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் உள்பட இருவர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு 10 மணியளவில், பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து புகை வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த, காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் போராடித் தீயை அணைத்துவிட்டாலும் தீயில் பொசுங்கியும் நீரில் நனைந்தும் 30 ஆயிரம் விடைத்தாள்கள் நாசமாகிவிட்டன.

இந்த தீவிபத்தில் எரிந்து போன விடைத்தாள்களில் 23,649 விடைத்தாள்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை என்றும் அவை ஆங்கிலம் இரண்டாம் தாள்கள் என்றும் கூறப்படுகிறது

விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சார வசதி கூட கிடையாது. எனவே மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட வாய்ப்பில்லை.ஆக, இந்த தீவிபத்திற்கு பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

Related Post

Leave a Reply