Archive for the 'Tamilvanan' Category


Monday, 23 Mar 2009

Thunivae Thunai- Tamilvanan

துணிவே துணை - தமிழ்வாணன்

6. உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் நீங்க….

வாழ்க்கையில் நமக்குப் பல கடமைகள் இருப்பது போலவே, உரிமைகளும் இருக்கின்றன.அந்த உரிமைகள் பறி போவதற்கான சூழ்நிலைகள் உருவாகுமாயின் அப்போதும் நம் உள்ளத்திலே அச்சம் பிறக்கிறது. உரிமைகள் என்னும்போது உடைமைகளும்கூட அதில் அடங்கும் என்று சொல்லலாம்.

உடமைகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்லலாம் அல்லது பகைவர்கள் வழக்காடிப் பறித்துக் கொள்ளலாம். ஒரு சில சமயங்களில், நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்கூட அவற்றிற்குச் சேதம் ஏற்படலாம். இம்மாதிரியெல்லாம் ஏற்படாதபடிக்கு, நம்மால் முடிந்த வரையில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வது நம் கடமையாகும்.

அந்தக் கடமையை நாம் செவ்வனே செய்து வரும்போது, அதையும்மீறி அவ்வுடைமைகள் பறிபோய் விடுவதுண்டு. அவ்வாறு பறி போகுமாயின், அதுபற்றிக் கவலைப்படுவதால் அடையத் தகுந்த பயன் ஏதும் கிடையாது. அவை இன்னமும் பறிபோகாதிருக்கையிலே, எதிர்காலத்தில் பறி போய்விடுமோ என்று நாமாகவே கற்பனை செய்து கொண்டு அச்சம் அடைவது, அதனினும் பயனற்ற ஓர் அறியாமைச் செயலாகும். இந்த உண்மையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டால், அத்தகைய அச்சங்கள் நாளடைவில் நம் உள்ளத்தைவிட்டே ஒழிந்து போய்விடும்.

உரிமைகளும் ஒரு வகையான உடைமைகளே என்றாலும், இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறை முற்றிலும் வேறானதாகும். நமக்குள்ள ஒவ்வோர் உரிமையுடனும் கூடவே, ஒரு கடமையையும், ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது. ஆகையால், ஒரு குறிப்பிட்ட உரிமையை நாம் இழக்காதிருக்க வேண்டுமானால், அதனோடு ஒட்டிய கடமையையும் நாம் கைவிடாது காக்க வேண்டும்.

தநதையினுடைய சொத்துகளிலே மைந்தனுக்கு உரிமையுண்டு என்றால், அவர் பட்ட கடன்களைத் தீர்க்க வேண்டிய கடமையும் அவனுக்கு உண்டு.அந்தக் கடமையை ஏற்றுக்கொள்ள விரும்பாதவன், அவரது சொத்துக்களின்மீது மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இப்படியே, மனைவியின்மீது கணவனுக்குச் சில உரிமைகள் உண்டு என்றால், அவள்பால் தனக்குள்ள கடமைகளையும் அவன் வழுவாது நிறைவேற்ற வேண்டும். ‘கடமையை நான் நிறைவேற்ற மாட்டேன். ஆனால், உரிமை மட்டும் எனக்கு வேண்டும்’ என்று எதிரிபார்ப்பது, எட்டாத கனிக்குக் கொட்டாவி விடுவது போலாகும்.

தந்தை-மகன், கணவன்-மனைவி என்ற பந்தங்களிலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் போலவே, உலகிலுள்ள எல்லாவகையான பந்தங்களிலும் உரிமைகளும் எப்போதுமே சற்று இனிப்பாகவும், கடமைகள் கசப்பாகவும் இருப்பது இயல்பு. அப்படியின்றி, உரிமைகளைப் போலவே கடமைகளும் எவனுக்கு இனிப்பாக இருக்கின்றனவோ, அவனுடைய எந்த உரிமைக்கும் எந்தக் காலத்தில் எவராலும் ஆபத்து விளைவிக்க இயலாது.

உரிமைகளுக்கு என்று நாம் தனியாகப் பாடுபட வேண்டிய அவசியமே கிடையாது. அப்படிப் பாடுபட்டாலும் அதனால் பலன் ஏற்படமாட்டாது. நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சற்றும் முணுமுணுக்காமல் நாம் முகமலர்ச்சியோடு செய்து வருவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்து வந்தால், நம் உரிமைகள் தாமாகவே நம்மை வந்து அடைந்துவிடும்.

எனவே, தன்னுடைய உரிமைகள் பறிபோய் விடும்போல் தோன்றுகிற ஒரு சூழ்நிலை ஒருவனுக்கு ஏற்படுமாயின், இவன் ஏதோ ஒரு கடமையைச் செய்யத் தவறிவிட்டான் என்பதே அதன் பொருளாகும். இந்த உண்மையை உணர்ந்து தான் செய்யத் தவறிய அந்தக் கடமையை அவன் செய்து முடிக்க முற்பட்டால், தன்னுடைய உரிமை பறி போய்விடுமோ என்ற பயத்திலிருந்து அவன் அப்போதே விடுபட்டுவிடலாம்.

உரிமைகளுக்குக் கூறப்பட்ட இந்த நியதி, பதவிகளுக்கும் நூற்றுக்குநூறு பொருந்தி வரும். உரிமைகளுக்கு இருப்பதுபோலவே, ஒவ்வொரு பதவியை ஒட்டியும் சில பல கடமைகள் இயல்பாகவே அமைந்திருக்கின்றன. அந்தக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கும் வரையில், எந்த மனிதனும் தன் பதவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே நேராது.

கடமைகளைச் செய்யத் தவறினால் பதவி கைநழுவிப் போய்விடுவதற்தான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கும். அப்போது அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயிரம் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையாண்டாலும், அவை பயன் அளிக்கமாட்டா. அத்தகைய குறுக்கு வழிகளில் சிந்தனையைச் செலுத்தாமல் நேர்மையான முறையில் கடமைகளைச் செய்வதுதான், அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி ஆகும்.

எனவே, பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்திற்கு ஒருவன் ஆளாகாது இருக்க வேண்டுமானால், அந்தப் பதவியோடு ஒட்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் அல்லும் பகலும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

உரிமைகளையும் கடமைகளையும் இழக்க நேருவது போலவே, நமக்கு மிகவும் பிரியமான ஒருவரது அன்பை அல்லது நட்பை இழந்துவிட நேருமோ என்ற ஐயப்பாடும் நம் உள்ளத்திலே அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். அந்த அச்சம் நமக்கு வராது இருப்பதற்கு உண்மையான அன்பு அல்லது நட்பின் இலக்கணத்தை நாம் செவ்வனே புரிந்து கொள்ள வேண்டும்.

Tags: , , , , , , , , ,


Tuesday, 10 Mar 2009

Thunivae Thunai- Tamilvanan

துணிவே துணை - தமிழ்வாணன்

4. உடல்நலம் பற்றிய அச்சம் நீங்க….

த்தகைய அச்சத்திலும் இரண்டு வகைகள் இருக்கின்றன.

தமக்கு இல்லாத நோய்களையெல்லாம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அந்த அச்சத்திலேயே வாடி வருந்துபவர்கள் சமுதாயத்தில் மிகப் பலர் இருக்கிறார்கள். மற்றபடி தம் இடத்தே உண்மையான சில குணங்குறிகளைக் கண்டு, தமக்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற அஞ்சுகிறவர்களும் உண்டு. இவர்களுள், பிந்தியவர்களின் அச்சத்தைக் காட்டிலும் முந்தியவர்களின் அச்சம்தான் எளிதில் போக்க இயலாததாக இருக்கும்.

உண்மையிலேயே ஒருவருக்கு நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுமானால், அந்த நோயை வராமலே தடுத்துவிடலாம். அல்லது, வந்தாலும் போக்கிவிடலாம். ஆனால், நோயின் அறிகுறிகளைத் தாமாகவே கற்பனை செய்து கொண்டு கஷ்டப்படுபவர்களை எப்படிக் குணப்படுத்துவது? அவ்வாறு கற்பனை செய்வதே ஒரு மனநோயின் அடையாளமாகும். ஆகையால், அதனை ஒரு மனஇயல் மருத்துவரைக் கொண்டுதான் குணப்படுத்த வேண்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி? நோய்களின் குணங்களைப்பற்றி விரிவாக விளக்கிக் கூறுகிற புத்தகங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்லூரியின் மாணவர் அல்லாத ஒருவர் முதன் முறையாக அத்தகைய புத்தகங்களில் ஒன்றைப் படிப்பாரானால் அதில் பேசப்பட்டுள்ள பல நோய்களின் அறிகுறிகள் தம்மிடத்து ஏற்கெனவே இருந்து வருவது போன்ற மனப்பிராந்தி அவருக்கு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் இம்மாதிரிப் புத்தகங்களைப் படிக்கவே கூடாது. இது தேவையா அவருக்கு?!

காலரா இருக்கும் ஊர்களுக்குச் சென்றால், ஒரு சிலருக்கு வயிற்றைக் கலக்குவதுபோல் இருக்கும். வாந்தி வருவதுபோல் தோன்றும். இவை இரண்டும் காலரா நோயின் அறிகுறிகள். ஆனால், உண்மையில் அந்த நோய்க் கிருமிகள் அவர்களது உடலுக்குள்ளே புகுந்திருக்கமாட்டா. அந்த நோயும் அவர்களுக்கு வரமாட்டாது. இருந்தாலும், அந்த நோய் வந்துவிட்டது போன்ற ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டுவிடும். ஒரு சிலருக்குத் தலைசுற்றலும்கூட ஏற்படக்கூடும். இவை எல்லாம் ஒரு பலவீனமான உள்ளத்தின் அடையாளங்கள். இப்படிப்பட்டவர்கள் தமக்கு அச்சத்தைத் தருகிற நோய்கள் நிலவும் இடத்திற்கு அருகில்கூட செல்லக்கூடாது.

அவ்வாறாயின், அந்தப் பலவீனமான உள்ளத்துடனேயே அவர்கள் கடைசி வரையில் வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மனத்திற்கு நல்ல வலிமையைத் தேடிக் கொள்வதையே அவர்கள் தம் முதற் கடமையாகக் கருதவேண்டும். அதற்கு எத்தனையோ வழிவகைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இங்கு விவரிப்பது என்றால் இடம் போதாது. உரிய நூல்களைப் படித்து, அல்லது உரிய வல்லுநர்களைக் கேட்டு அவர்கள் மூலம் அந்த வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அளவு மனோவலிமையைப் பெற்றிருப்பவர்கள் கூடத் தமக்கு ஏதேனும் நோய் வந்துவிடக் கூடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவது உண்டு. அத்தகைய அச்சத்தின் காரணமாகவே, உலகெங்கிலும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் பலவகையான நோய்த் தடுப்பு முறைகளையும், மருந்துகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னமும் கண்டுபிடித்து வருகின்றனர். காலராத் தடுப்பு மருந்து, அம்மைத் தடுப்பு மருந்து போன்றவை எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவையே.

எந்த நோயையும் வந்தபின் குணப்படுத்துவதைவிட வரும் முன் காப்பதே சிறப்பானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அத்தகைய பாதுகாப்பு உணர்ச்சியின் காரணமாகச் சில நோய்த் தடுப்பு முறைகளை வாழ்க்கையில் ஒருவர் கடைப்பிடிப்பாராயின், அவரைப் பயங்கொள்ளி என்று குறைகூற முடியாது. இன்னும் சொல்லப்போனால், நோயைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாகி விடாமல் தம்மைக் காத்துக் கொள்வதற்காகவே அத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார். அது உண்மையில் வரவேற்கத்தக்கதே ஆகும்.

பஸ்ஸிலே நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் ஒரு தொழுநோயாளி என்று தெரிந்தால், உடனே நம் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்படுகிறது. அவருடைய கையோ காலோ தற்செயலாக நம் உடம்பில் பட்டிருக்குமானால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் ஒரு சிறு நமைச்சல் ஏற்படுவது போன்ற உணர்ச்சிகூடக் காணப்படலாம். அது வெறும் பிரமையே தவிர, வேறு அல்ல. இருந்தாலும், நாம் அதை அப்படிக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக, அந்த மனிதருடைய தொழுநோய் நம்மைத் தொற்றிக்கொண்டுவிட்டதோ என்று அஞ்சுகிறோம்.

ஆனால், உண்மையில் தொழுநோய் என்பது அவ்வளவு எளிதாகத் தொற்றிக்கொள்ளக்கூடியது அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்துகொண்டு, பல்லாண்டு காலமாய் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வருகிற கணவன் மனைவியிரிடையே கூட ஒருவரைப் பீடித்துள்ள தொழுநோய் இன்னொருவரைப் பற்றாமல் இருப்பதைப் பல இடங்களில் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அப்படியிருந்தும், ஒரு சில நிமிடங்கள் அந்த நோயாளியின் அருகிலே நாம் உட்கர்ந்திருக்க நேர்ந்த காரணத்தால், நம் உள்ளத்திலே ஓர் அச்சம் தோன்றிவிடுகிறது.

புற்றுநோய் கண்டவர்களை நாம் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்தால், நம் உள்ளத்தில் ஏதோ ஒருவகையான பயம் தோன்றுகிறது. அந்த நேரத்தில், நம் உடம்பிலே எங்கேனும் ஒரு சிறு கட்டி புறப்பட்டால்கூட, உடனே நமக்கும் அந்த நோய் வந்துவிட்டதோ என்று நாம் நடுங்கிச் சாகிறோம்.

இதேபோல் காசநோய், மலேரியா, டைஃபாய்டு உள்ள நோயளிகளோடு நெருங்கிப் பழக நேருகிற சமயங்களிலும், நாம் இவ்விதமே அச்சத்துக்கு ஆளாகிறோம். ஆனால், இது ஒரு தேவையில்லாத அச்சமாகும்.

தமக்கு நோய் வந்துவிட்டதோ, வந்துவிடுமோ என்ற நியாயமான அச்சம் ஒருவருக்கு ஏற்படுமானால், உடனே அவர் ஒரு திறமை வாய்ந்த டாக்டரிடம் சென்று தம் உடம்பைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அந்தப் பரிசோதனையின் போது உடம்பில் உண்மையிலேயே நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். உடம்பில் நோய் எதுவுமே இல்லை என்று தெரிந்தால் அப்புறம் அதைப்பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா?

ஒரு சிலரால் அப்படி நிம்மதியாக இருக்க முடிவதில்லை. ‘இப்போது நோய் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இனிமேலும் அது வரமாட்டாது என்பது என்ன நிச்சயம்?’ என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தை உறுத்தத் தொடங்கும்.

அப்படிப்பட்டவர்கள்தாம், அஞ்சுகின்ற நோய்களை வராமலே தடுத்து நிறுத்தத்கூடிய தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பு ஊசிகளுக்குக் கட்டுப்படாத நோய்களாய் இருந்தால் அவர்கள் தம் உடம்பில் இயல்பாகவே அமைந்துள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, பிராணாயாமம் இவற்றை ஒழுங்காகச் செய்துவருவது, மற்றும் ஆரோக்கிய விதிகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருவது, இவையெல்லாம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான சிறப்பான உத்திகளாகும். இவற்றோடுகூட, மருத்துவ நிபுணரால் பரிந்து உரைக்கப்பட்ட டானிக்குகளையும் சாப்பிடலாம்.

இப்படியெல்லாம் செய்து வந்தால், நாம் நோய்களைப் பற்றிய அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வரலாம். அப்படியும் ஒருவருக்கு அச்சம் போகவில்லை, நிம்மதி வரவில்லை என்றால், ஒரு வகையான மனநோய்க்கு மன இயல் நிபுணர்களைத்தான் அணுகவேண்டும்.

‘ஆரேக்கிய விதிகளைக் கடைப்பிடிப்பது போன்ற உத்திகளால் ஒருவர் தம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே அவர் நோய்களிலிருந்து தப்பிவிட முடியுமா?’ என்று கேட்கப்படலாம். ஓருவர் எவ்வளவுதான் ஆரோக்கிய விதிகளைக் கடைப்பிடித்தாலும் டானிக்குகளையும் சத்தான உணவுகளையும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும், அப்போதுகூட அவருக்குச் சில நோய்கள் வந்துவிடக் கூடும் என்பது உண்மையே. ஆனால், அதற்காக இப்போதே ஏன் கவலைப்பட வேண்டும்? நோய்கள் வந்தபிறகு உரிய மருந்துகளைச் சாப்பிட்டு அவற்றைக் குணப்படுத்திக்கொண்டால் போகிறது. அப்படியும் குணமாகாத நோய்களாக அவை இருந்து விடுமாயின், அதற்கு யாரால் என்ன செய்ய முடியும்? தீராத இல்லாளோடு இல்லறம் நடத்துவதுபோல, அவற்றோடு தொடர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கே நாம் தயாராகி விடவேண்டும். ஒருவேளை அது நம் உயிருக்கே உலை வைக்கக் கூடிய நோயாக இருப்பின், அந்நோயின் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கப்போகிற அந்த மரணத்தை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும்.

தவிர்க்கமுடியாதது எதுவாய் இருந்தாலும், அதை சகித்துக் கொள்வதற்கு ஆயத்தமாகிவிடுவதே அறிவுடமை ஆகும். அப்படியின்றி, அதை எண்ணி அஞ்சி அஞ்சி சாவது விவேகம் ஆக மாட்டாது.

உடம்பு என்று இருந்தால், நோய்கள் வரத்தான் செய்யும்; உடம்பு உள்ள வரையில் நோய் உண்டு. உடம்பு போய்விட்டால், அப்புறம் நோயே இராது. இது இயற்கையின் நியதி.

ஆனால், அதற்காக நாம் எப்போதும் நோய்களை எதிர்பார்த்த வண்ணமே வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு நாம் ஆசைப்படுவது தவறு அல்ல. உண்மையில் நோயற்ற வாழ்வுதான் நமது நியாயமான குறிக்கோளாக இருக்க வேண்டும். அத்தகைய வாழ்வைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் ஊக்கத்தோடு மேற்கொள்ளவும் வேண்டும். நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல், சத்தான உணவுகளையும் டானிக்குகளையும் சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல், பிராணாயாமம் பயிலுதல் இவையெல்லாம் அத்தகைய முயற்சிகளே ஆகும்.

இந்த முயற்சிகளுக்குப் பிறகு நோய் வருமானால், அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படக்கூடாது. ‘நம்மால் ஆனதை எல்லாம் செய்துவிட்டோம். இனிமேல், எது வந்தாலும் வரட்டும்!’ என்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்வதுதான் அச்சத்தை வெல்லுதற்கு உரிய சரியான வழியாகும்.

‘மனத்தை மட்டும் அப்படித் திடப்படுத்திக் கொண்டால் நோய் போய்விடுமா?’ என்று கேட்கப்படலாம். மருந்துகளால் குணமாகாத பல வியாதிகள் மனோவலிமையால் குணமாகிவிடுவது உண்டு என்பதை இக்காலத்திய மருத்துவ விஞ்ஞானமே மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. அதன்படி உரிய முறையில் நம்முடைய மனோவலிமையை பெருக்கிக் கொள்வோமானால், அதுவே நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றிவிடக்கூடும். அப்படிக் காப்பாற்றவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அச்சத்தால் மட்டும் நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி விடமுடியுமா?

நம்முடைய அச்சமானது வருகிற நோயை வராமல் தடுத்துவிடாது; வந்த நோயையும் குணப்படுத்திவிடாது. இன்னும் சொல்லப் போனால் வராத நோயை விரைவில் வரவழைப்பதற்கும், வந்த நோயைக் குணமாகவிடாமல் தடுப்பதற்கும் மட்டுமே அச்சம் உதவி புரியும். இந்த உண்மையை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வதே நோய்களைப் பற்றிய அச்சத்திலிருந்தும் நாம் விடுபடுவதற்கு உதவி புரியும்

Tags: , , , , , , , , ,


Monday, 9 Mar 2009

Thunivae Thunai- Tamilvanan

துணிவே துணை - தமிழ்வாணன்

3. வறுமை பற்றிய அச்சம் நீங்க….

ந்த அச்சம் நியாயமாக ஏழைகளிடம்தான் காணப்படவேண்டும். ஆனால், ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்களிடத்தில்தான் இது அதிகமாகக் காணப்படுகிறது.

நாளைய உணவுக்கு என்ன செய்வோம் என்று ஏழைகள் கவலைப்பட்டால், அதை யாரும் தவறு என்று கூற முடியாது. ஆனால், ஓரளவு பணம் வைத்திருப்பவர்கள், தாம் வறுமைக்கு ஆளாகிவிட நேருமோ என்று அஞ்சுகிறார்கள். இதைப் போன்ற ஒரு விபரீதம் வேறு என்ன இருக்கிறது?

வறுமைக்கோட்டிற்குக் கீழேயே தம் வாழ்நாள் அனைத்தையும் கழித்துக் கொண்டிருக்கிற ஏழைகள்; பெரும்பாலும் தம் வறுமையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. இப்படிச் சொல்வது, உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. காரணம், அவர்கள் வறுமையிலேயே பழகிப் போனவர்கள். தலைமுறை தலைமுறையாகப் பழகிப் போனவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.

கடலில் சென்று மீன் பிடிப்பதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் மீனவர்கள் எப்படிக் கடலைக் கண்டு பயப்படுவதில்லையோ, பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்ட பாம்பாட்டிகள் எப்படிப் பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லையோ, காடுகளிலேயே கூடாரம் அடித்து வாழ்கின்ற குருவிக்காரர்கள் எப்படி நரியைக் கண்டு பயப்படுவதில்லையோ, மயானங்களின் நுழைவாயில்களிலேயே குடியிருக்கின்ற மயானக் காவலர்கள் எப்படிப் பேய், பிசாசுகளுக்குப் பயப்படுவதில்லையோ, திருடர்கள் எப்படி இருட்டைக் கண்டு பயப்படுவதில்லையோ, சாக்கஸ் வித்தைக்காரர்கள் எப்படி அங்குள்ள சிங்கத்தையும் புலியையும் கண்டு பயப்படுவதில்லையோ, போர் வீரர்கள் எப்படித் துப்பாக்கியைக் கண்டு பயப்படுவதில்லையோ, அப்படியே ஏழைகளும் வறுமையைக் கண்டு பயப்படுவதில்லை.

ஆனால், பணக்காரர்கள் அதைக் கண்டு உண்மையிலேயே அச்சம் கொள்கிறார்கள். நம்மைச் சூழ்ந்து உள்ள ஏழை எளியவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து என்றேனும் ஒரு நாள் நமக்கும் அதே போன்ற ஒரு நிலை வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அச்சம் அடைகிறார்கள்.

துணிவுள்ள சிந்தனையாளர்களோ, அந்த ஏழைகளைப் போலவே உண்ண உணவில்லாமல், உடுத்த உடை இல்லாமல், குடியிருக்க ஓர் குடிசை இல்லாமல் தாமும் ஓர் இழிநிலை எய்தி விடக்கூடும் என்று அச்சம் கொள்வதில்லை. அந்த அச்சம் அவர்களுடைய உணர்வு மனத்தில் பிறப்பதில்லை. அதனால் அத்தகைய அச்சம் ஒன்று தமக்கு இருப்பதாகவே அவர்கள் ஒரு நாளும் உணர்வதில்லை. அப்படி அவர்களால் உணர முடிந்தால், அடுத்த நிமிடத்திலேயே அதனைத் தம்முடைய விவேகமான சிந்தனைகளின் துணையால் அவர்கள் போக்கிக் கொண்டுவிட முடியும்.

உண்மையில் அவ்வித அச்சமானது துணிவில்லாத ஒருவரது உள்ளுணர்வு மனத்தில்தான் சுரந்து உறைகின்றது. உள்ளுணர்வு மனம் என்பது, பகுத்தறிவுக்கோ அல்லது சிந்தனா சக்திக்கோ அப்பாற்பட்ட ஆழத்தில் இருப்பது. ஆகையால், அங்குள்ள அச்சத்தை பகுத்தறிவாலோ, சிந்தனா சக்தியாலோ போக்கிக் கொள்ள இயலாது. அவ்வாறாயின், அந்த அச்சத்தை அகற்றுவதற்கான வழிதான் என்ன?

உள்ளுணர்வு மனத்திலுள்ள அச்சத்தை உணர்வு மனத்திற்கு இழுத்து வரவேண்டும். பிறகு அறிவார்ந்த சிந்தனைகளைக் கொண்டு அந்த உணர்வு மனத்திலிருந்து அதனைக் களைந்தெறிய வேண்டும். உள்ளுணர்வு மனத்தில் ஒளிந்து கிடக்கும் அச்சங்கள், உணர்வு மனத்திற்கு எழும்பி வரத் துணை புரிபவைதான் இம்மாதிரிப் புத்தகங்கள்.

எவ்வளவு பெரிய செல்வமும் அழிந்துவிடலாம் என்பது வெறும் வேதாந்த வாக்கியம் அல்ல. அன்றாட வாழ்க்கையில் தாம் கண்கூடாகக் காண்கின்ற அனுபவம் அது. பெரிய கோடீஸ்வரர்கள் கோவணாண்டிகளாக மாறுவதும், குடிசைவாசி ஒருவன் மாளிகை வாசியாக வளர்வதும், கதைகளில் மட்டுமே வருகின்ற கற்பனைகள் அல்ல; நாம் கண்ணெதிரே காண்கின்ற உண்மைகள்.

செல்வம் நிலை இல்லாதது. ஆகையால், அது உங்களிடம் வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடையாதீர்கள்! அது உங்களை விட்டுப் போவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்! ஏனென்றால், போவது மீண்டும் உங்களைத் தேடி வராது என்று சொல்வதிற்கில்லை. அவ்வாறே, வந்ததும் உங்களைவிட்டு என்று மீண்டும் விலகிப்போகும் என்றும் சொல்வதற்கில்லை.

உங்களுடைய திறமையால் உங்கள் செல்வத்தை நிரந்தரமாகக் காப்பாற்றிவிட முடியாது. உங்களைவிட மிகப் பெரிய திறமைசாலிகள் பலர் அதை அப்படிக் காப்பாற்ற முடியாமல் இழந்திருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்று. அதேபோல், உங்களுடைய திறமைக் குறைவால் செல்வத்தை இழந்துவிடுகிறீர்கள் என்பதும் இல்லை. உங்களைத் காட்டிலும் திறமையில் குறைந்த பலர் அதை இழக்காமல் வைத்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று!

ஆகையால், செல்வத்தைப் பாதுகாப்பதற்கோ அன்றிப் பறிகொடுப்பதற்கோ, அதனை அடைவதற்கோ, அன்றி இழப்பதற்கோ, வெறும் திறமை அல்லது திறமையின்னை காரணமாகிவிடாது. உங்களுடைய கணக்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத எத்தனையோ சந்தர்ப்பச் சூழ்நிலைகள் உங்களைத் திடீரென்று ஏழையாக்கிவிடலாம் அல்லது பணக்காரன் ஆக்கிவிடவும் செய்யலாம்!

ஆகையால், உங்களுடைய ஏழ்மையை அல்லது செல்வத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், ஏழைகள் வரும்போது நெஞ்சம் துவளாமல், செல்வம் வரும்போது உள்ளம் துள்ளாமல் அன்பு, அறம், அறிவு இவற்றையே உங்களுடைய வழிகாட்டிகளாகக் கொண்டு நீங்கள் வாழ்க்கை நடத்துங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், வறுமையிலே நம் இதயம் துவளக்கூடாது. செல்வத்திலே நம் உள்ளம் துள்ளக் கூடாது. செல்வம், வறுமை இவ்விரண்டு நிலைகளிலும் ஒரே படித்தாக, ஒரே மாதிரியாக, நிதானம் தவறாமல் நாம் செயல்பட்டு வர வேண்டும் என்பது அற நூல்களின் சாரம்.

அது மட்டுமல்ல, நம்முடைய செல்வமும், வறுமையும் எவ்வாறு நிலையற்றனவோ, அவ்வாறே எதிரியின் செல்வமும் வறுமையும்கூட நிலையற்றவைதாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (எதிரி என்றால், இங்கே பகைவன் என்று பொருள் கொள்ளக்கூடாது. தன் நிலையிலுள்ள வேறொருவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்) எதிரியிடம் இன்றைக்கு நிரம்பப் பணம் இருக்கிறது என்பதற்காக அவனை உயர்வாக மதிப்பது, எதிரியிடம் இப்போது பணம் இல்லை என்பதற்காக அவனைக் குறைவாக (தாழ்வாக) மதிப்பது இவ்விரண்டுமே தவறு என்பதும் நான் மேலே குறிப்பிட்ட அறநூல்களின் சாரமாகும்.

ஒருவன் செல்வத்தின் நிலையற்ற தன்மையை உலகியலில் கண்கூடாகக் காண்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த உயரிய வாழக்கை நெறியைத்தான் அவன் மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், சமுதாயத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விபரீதமான மனப்போக்கை மேற்கொண்டு விடுகிறார்கள். நேற்று இலட்சாதிபதியாக இருந்த ஒருவன் இன்றைக்கு பிட்சாதிபதியாக பிச்சைக்காரனாக மாறியதைக் கண்டதும் ‘இன்று நம்மிடம் இருக்கும் செல்வமும், அந்த இலட்சாதிபதியின் செல்வத்தைப் போலவே நாளை நம்மை விட்டுப் போய்விடுமோ! நாமும் அவனைப் போலவே பிச்சைக்காரனாகி விடுவோமே!’ என்ற திகில் அவர்களையும் அறியாமலே அவர்களது உள்ளுணர்வில் தோன்றிவிடுகிறது.

உடனே, அப்போதிருக்கும் இந்தச் செல்வத்தை நாம் நம்பிப் பயனில்லை! என்ற முடிவுக்கு அவர்களது உள்ளுணர்வு வந்துவிடுகிறது.

‘ஆகையால், வேறொரு புதிய செல்வத்தை நாம் எப்படியேனும் விரைவில் தேடிக்கொண்டு ஆகவேண்டும்!’ என்று அந்த உள்ளுணர்வு உறுதி பூணுகிறது.

இவ்வளவும் முழுக்க உள்ளுணர்வின் நிகழ்ச்சிகள்தாம் என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. அப்படியின்றி, இது உணர்வு மனத்தின் எண்ணங்களாய் இருந்தால், ‘இப்போது இருக்கும் செல்வம் எப்படி நிலையற்றதாய் இருக்கிறதோ, அதேபோல் இனிமேல் நாம் தேடப்போகும் செல்வமும் நிலையற்றதாகக்தானே இருக்க முடியும்? ஆகையால், இந்தச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காத நாம், இனிமேல் வரப்போகும் செல்வத்தை மட்டும் எப்படி நம்ப முடியும்?!’ என்று பகுத்தறிவுக் கேள்விகள் அங்கேயே பிறந்து, அந்த மனக் குழப்பத்தை அப்போதே போக்கிவிடும். அப்படிப் போக்கிவிட்டால் அறிவிலே ஒரு தெளிவும் பிறந்துவிடும்.

செல்வம் நிலையில்லாததாய் இருக்கலாம். நம்முடைய செல்வத்தை வஞ்சகர்களோ, திருடர்களோ கொண்டுவிடலாம். ஆனால், செல்வத்தைக் தேடிக் கொள்வதற்கான திறமை என ஒன்று இருக்கிறது அல்லவா? அந்தத் திறமையை நம்மிடமிருந்து யாராலும் பறித்துக் கொண்டு விடமுடியாது!

ஆகையால், அத் திறமையை நாம் எப்பாடுபட்டேனும் தேடிக்கொள்ள வேண்டும். அந்தத் திறமையை நாம் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் திறமையை, இடையறாத உழைப்பின் வாயிலாக, நாம் செவ்வனே பயன்படுத்தி வரவேண்டும். வறுமை காரணமாகத் தோன்றக்கூடிய அச்சத்திலிருந்து விடுபடுவதற்கு, இது ஒன்றுதான் வழி.

முன்னோர்கள் ஏராளமாக சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுப் போகிறார்கள். அந்தக் குடும்பத்தில் சில பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்கள் செல்லமாக வளர்க்கப்படுகிறார்கள்.

பெரியவர்கள் தேடிவைத்த பெருஞ் செல்வத்தை எப்படி எப்படியெல்லாம் சீரழிக்கலாம் எனபதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்களே தவிர, தாமாக எதையும் சம்பாதிக்கக்கூடிய திறமையை அவர்கள் தேடிக்கொள்வதில்லை. அதனால், அந்த முன்னோர்கள் செல்வம் சிதைந்து ஒழிந்த பிறகு, அவர்கள் தெருவில் நிற்க வேண்டிய பரிதாப நிலை வந்துவிடுகிறது.

அப்படியின்றி, பெரியோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தமக்கென்ற தாமே பொருள் தேடிக் கொள்ளக்கூடிய திறமையை இவர்கள் தம்மிடத்தே வளர்த்துக் கொண்டிருப்பார்களாயின், அவ்வாறு தெருவில் நிற்கவேண்டிய இழிநிலை அவர்களுக்கு எந்தக் காலத்திலுமே ஏற்படமாட்டாது.

ஒரு சிலர் நல்ல திறமையை வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதைச் செவ்வனே பயன்படுத்த மாட்டார்கள். பொற்கொல்லர்கள், தையற்காரர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் போன்ற பல வர்க்கத்தினரிடையேயும், இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறார்கள். தத்தம் தொழில்களில் அல்லது கலைகளில் அவர்கள் தலைசிறந்த வல்லுநர்களாக இருக்கக் கூடும். ஆனாலும், சோம்பலின் காரணமாக அவர்கள் தீவிரமான உழைப்பிலே ஈடுபடமாட்டார்கள். ஒருமுறை உழைத்துக் கிடைத்த பணம் தீர்ந்துபோய் பிறகு கடன் வாங்கிச் செலவு செய்து, இனிமேல் கடனும் வாங்க முடியாது என்ற நிலைமை வரும்வரையில் அவர்கள் தம்முடைய அடுத்த உழைப்பைத் தொடங்கமாட்டார்கள்.

அவர்களிடம் முன்பணம் கொடுத்துவிட்டு அவர்களைத் தேடி நடையாய் நட்ப்பவர்களுக்கெல்லாம், அவர்கள் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலம் கடத்துவார்களே தவிர காரியத்தைச் செய்து முடித்து மீதிப் பணத்தைக் கையில் வாங்கமாட்டார்கள். வீண் பொழுது போக்குவதிலே இவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓரளவு தொழில் திறமை அல்லது கலைத்திறமை இருக்கும். அந்தத் திறமைக்குத் தக்கபடி வருமானமும் வந்து கொண்டிருக்கும். ஆனால் அந்த வருமானம் அவர்களுடைய வாழ்க்கை வசதிகளுக்குப் போதுமானதாய் இராது.

அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? தம்முடைய வறுமையான வாழ்விலிருந்து விடுபட்டு வசதிமிக்க வாழ்வை நடத்துவதற்குத் தேவையான அளவு, வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள அவர்கள் முயல வேண்டும். இதையே வேறு விதமாகச் சொல்வது என்றால், வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு முதல்படியாக, அவர்கள் தம் தொழில் திறமையை வளர்த்துக்கொள் வேண்டும்.

அதாவது, தம் தொழிலிலும், கலையிலும் அவர்கள் புதிய உத்திகளைக் கற்றக்கொண்டு, அவற்றில் தேர்ச்சி பெறவேண்டும். அல்லது, தம்முடைய தேவைக்கு ஏற்ற வருமானத்தைத் தரக்கூடிய ஒரு புதிய தொழிலை அல்லது கலையை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கக் காரியாலயங்களில் பணி புரிபவர்கள் புதிய டெஸ்டுகளை எழுதித் தேர்வு பெற்று, பதவி உயர்வுகளையும் அவற்றின் மூலம் ஊதிய உயர்வுகளையும் பெறுவதற்குப் பாடுபட வேண்டும்.

இவ்வாறாக பணம் சம்பாதிக்கும் திறமையைத் தேடிக் கொள்பவர்கள், அதனை முயன்று வளர்த்துக் கொள்பவர்கள், அதனை உழைப்பின் வாயிலாகச் செவ்வனே பயன்படுத்துபவர்கள் ஆகிய இம்மூவகையினரும் மட்டுமே, வறுமையை எண்ணி அஞ்சவேண்டிய அவசியம் இல்லாதவர்காக விளங்கமுடியும். மற்றபடி, ஒருவர் எவ்வளவு பெரிய குபேரசம்பத்தை உடையவராக இருந்தாலும் அவர் என்றென்றைக்கும் அந்த அச்சத்திற்கு ஆளாகியே தீரவேண்டும் என்பதில் ஐயமில்லை.

-தொடரும்

Tags: , , , , , , , , ,


Wednesday, 28 Jan 2009

Thunivae Thunai - Tamilvanan

துணிவே துணை!
- தமிழ்வாணன்

தன்னம்பிக்கை கட்டுரை தொடர்

அச்சமும் துணிவும்
மாறுபட்ட மனநிலைகளா?

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு, அச்சமே செவிலித் தாயாக அமைகிறது!

அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனிதனை ஆபத்துகள் சூழும்போதுதான் அச்சம் தோன்றுகிறது.

அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன?

நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகிறோம். அப்போது திடீரென்று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே, நம் உள்ளத்திலும் உடலிலும் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

புலி நம்மீது பாயப் போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற தீவிர உணர்ச்சிதான் அச்சம். அந்த அச்சம் வந்தவுடன், தம் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள சகல சக்திகளும், நொடிப் பொழுதுக்குள் எழுச்சி பெற்று விடுகின்றன. நம்முடைய சிந்தனையும் செயல்களும், புலியிடமிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே ஒரு குறிக்கோளை நோக்கியே ஒருமுனைப்படுகின்றன. இந்த நேரத்தில் நம் உடம்பிலுள்ள சில சுரப்பிகள் அபரிதமான அளவில் சுரக்கின்றன. உடனே நம்மில் இயல்பாகவே குடி கொண்டுள்ள சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் பளிச்சென்று மறைந்து, ஒரு புதுமையான விறுவிறுப்பும் ஆற்றலும் நம் நாடி நரம்புகளை அசைக்கின்றன. ஆட்டுகின்றன. நாம் ஒரு நோயாளியாக இருந்தால்கூட, அந்நேரத்தில் அந்த நோய் பறந்துவிடுகிறது. ஒருவன் முட்டாளாய் இருந்தால்கூட அந்த நேரத்தில் அவனுடைய முட்டாள்தனம் ஒழிந்துபோய், புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அந்தப் புலியிடமிருந்து தப்புவதற்கான ஏதாவது ஒரு யுக்தி, நம் உள்ளத்திலே மின்னல் வேகத்தில் தோன்றுகிறது. அப்படித் தோன்றுகிற அந்தக் கணத்திலேயே, நாம் அதைச் செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம்.

அச்சத்தைத் துணிவுடைமை ஆக்கும் வழி என்னவென்று புரிகிறதல்லவா?

நம்முள்
உறங்கிக் கிடக்கும் சக்திகள்
எப்போது
எழுச்சி பெறுகின்றன?

புலியினால் கொல்லப்படுவதற்குப் பதிலாக ஒருவன் வெள்ளத்தினால் கொல்லப்படுவானானால் அவனை அந்த வெள்ளத்திலே குதிக்கவைத்த துணிவினால் அவன் உண்மையிலேயே ஒரு பயனையும் அடைந்தவனாய் ஆகமாட்டானே? என்று கேட்கப்படலாம்.

சாதாரண மனநிலையில் இருக்கும்போது அந்த வெள்ளத்திலே குதித்து இருப்பானானால் அந்த வெள்ளத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் அவனுடைய உடம்பிலோ உள்ளத்திலோ இருந்திருக்கமாட்டா. ஆனால், அவன் இப்போது புலிக்குப் பயந்து அல்லவா வெள்ளத்தில் குதித்து இருக்கிறான்? அந்தப் புலியைக் கண்டவுடன் அவன் உடம்பிலும் உள்ளத்திலும் எத்தனையோ விதமான சக்திகள் எழுச்சி பெறுகின்றன.

பலவிதமான சக்திகள் எழுச்சி பெற்ற நிலையில் உள்ள மனிதனுக்கும், சாதாரண நிலையிலுள்ள அதே மனிதனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண நிலையில் உள்ளபோது குதித்திருந்தால் அவன் வெள்ளத்தால் விழுங்கப்படுவான். தன்னுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து செயல்படுகிற நிலையில் குதித்தவன் அந்த வெள்ளத்தை வென்று கரையேறி விடுவான். இங்கு அவனுக்குத் துணிவே துணையாக நிற்கிறது. துணிவே துணை!

நாம்
செயற்கரிய
காரியங்களைச் செய்வதற்கு
முயல வேண்டும்

மனிதன் செயற்கரிய காரியங்களைச் செய்து பழகவேண்டும். அப்போதுதான் அவன் பெருமைக்குரியவனாக வளரமுடியும். வாழ முடியும்!

செயற்கரிய காரியங்களை முயற்சியுடன் செய்யும்போதுதான் மேலும் மேலும் அவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கிறது. தன்னுடைய முயற்சிகளில் வெற்றி அடையும்போதெல்லாம் வாழ்க்கையில் அவனுக்கு உள்ள தன்னம்பிக்கை உறுதிப்படுகிறது. தன்னம்பிக்கை எந்த அளவுக்கு உறுதிப்படுகிறதோ, அந்த அளவுக்கு அவன் தான் எண்ணியதையெல்லாம் எண்ணியபடியே முடிக்கக்கூடிய பேராற்றலைப் பெற்றுவிடுகிறான்.

இந்தப் பேராற்றலை ஒருவன் பெற வேண்டுமானால், அதற்கு முதலிலே அவன் செயற்கரிய காரியங்களைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

செயற்கரிய காரியங்கள் என்பது என்ன?

எவராலும் செய்வதற்கு அரிய காரியங்கள் என்பது அதன் பொருள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல்களை கருத்திலே கொண்டு பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்ற முடிவுக்கு வருகிறான் அல்லவா? அப்படி ஒரு முடிவுக்கு வரும்போது தன்னால் முடியாத காரியங்கள் என்று அவன் எவற்றை நினைக்கிறானோ அவற்றை விட்டு விட்டு, தன்னால் முடியக் கூடிய காரியங்கள் என்று எவற்றை நினைக்கிறானோ அவற்றை மட்டுமே செய்ய முயற்சி செய்வதுதான் இன்று சமுதாயத்திலே காணப்படுகிறது.

தங்களால் முடியக்கூடிய காரியங்களில் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள் ஆற்றலிலோ அல்லது புகழிலோ என்றைக்கும் சிறியவர்களாகத்தான் இருப்பார்களே தவிர பெரியவர்களாக வளர அவர்களால் முடியாது.

மிருகங்களிடமிருந்து
பயில வேண்டிய
பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடிவிடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

உதாரணமாகப் பூனையை எடுத்துக் கொள்வோம்.

பூனை, திறந்த வெளியில் நம்மைக் கண்டால் ஓடிவிடும். சாதாரணச் சைகையாலேயே அதை ஓட்டிவிடலாம். இதை வைத்துப் பலர் பூனையைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதாவது பூனை ஒரு சாதுவான பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல.

தோற்றத்தால் அது எளிமை வாய்ந்த பிராணியாக இருக்கலாம்.

ஆனால், அதன் மனம் மிக உறுதி வாய்ந்தது.

‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்ற பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

போலித்தனமான குணங்களைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு லஞ்சம் தீர்க்கும் மனிதர்களை இந்தப் பழமொழியால் குறிப்பிடுவதுண்டு.

ஆனால், இந்தப் பழமொழி முக்கியமாகப் பூனையின் இயல்பையும் குறிக்கின்றது என்று அறியமாட்டார்கள்.

பூனை, பார்ப்பதற்குத்தான் பூனை. ஆனால், அது பாயத் தொடங்கிவிட்டால் செயலில் புலியைப்போல் இயங்கும்.

அதாவது, ஒரு பூனையைத் தனி அறையில் அடைத்துவிட்டு, ஒரு மனிதன் அந்த அறையில் தடி ஒன்றுடன் நுழைந்துவிட்டான் என்றால், அப்போதுதான் அவனால் பூனையின் இயல்பை உணர முடியும்.

பூனை அந்த அறையினுள் கொடிய விலங்காகிவிடும். அடிபட்டுச் செத்துப் போவது உறுதி என்றாலும் நமக்கிருக்கும் ஒரே வழி துணிந்து இந்த மனிதனுடன் போராடுவதுதான் என்ற முடிவுக்கு அது வந்துவிடும்.

மனிதன் வெல்வானா பூனை வெல்லுமா என்பதல்ல பிரச்னை. ஆனால், இந்தப் பூனையின் இயல்பிலே மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய ஒர் உண்மை இருக்கிறது. எந்தச் செயலிலும் வேறு வழியே இல்லையென்றால் துணிந்துவிட வேண்டியதுதான். துணிவு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். ஆனால் அந்தத் துணிவு முன்னர் குறிப்பிட்டதுபோல் அறிவு பூர்வமாகவும் நாணயமானதாகவும் இருக்க வேண்டும். வெற்றி நமக்குத்தான்.

பொருளாசை
எப்போது
போற்றத்தக்கது?

புகழாசையைப் போற்றுகிறவர்கள், பொருளாசையையும் காதல் வேட்கையையும் இழிவாக எண்ணுகிறார்கள். இவை இழிவானவை அல்ல. உயர்ந்தவையே!

காதல் வேட்கையினாலோ பொருளாசையினாலோ ஒரு மனிதன் கீழ்த்தரமான செயல்களில் இறங்குவானானால் அது கண்டிக்கத்தக்கது. அதற்கு மாறாக, ஒருவன் செயற்கரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அந்த இரண்டு ஆசைகளும் துணை செய்யுமானால், அவை போற்றத் தக்கனவே.

செயற்கரிய செயல்களைச் செய்யத் தூண்டுகிற அளவுக்கு ஒரு சராசரி மனிதனுடைய உள்ளத்திலே காதல் வேட்கையோ, பொருளாசையோ, புகழாசையோ அவ்வளவு தீவிரமாக எழுவது இல்லை. அது தீவிரமாக எழாத நிலையில் ஒரு மனிதன் தோல்வியைக் கண்டு அஞ்சுகிறவனாக இருக்கிறான். ஒருவன் தோல்வியைக் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கும் வரையில், அவனால் எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து செயல்பட முடியாது. முடியவே முடியாது!

நாம் செய்ய நினைப்பதோ, எளிதிலே கைகூட இயலாத காரியம். எனவே, அந்தக் காரியத்தில் நமக்குள்ள வெற்றி வாய்ப்புகளைக் காட்டிலும், தோல்வி வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு வேளை வெற்றி கிடைத்துவிட்டால், அது மிகவும் பெருமைக்குரியதுதான். ஆனால், தோல்வி வந்துவிட்டாலோ, நாம் தாங்கமுடியாத துன்பத்திற்கு ஆளாகி விடுவோமே என்று தயங்குவது ஒரு சராசரி மனிதனுடைய குணம்.

தோல்வியினால் ஏற்படக்கூடிய அவமானத்தை எண்ணி மனிதன் அஞ்சுகிறான். இந்த அச்சம் உள்ளத்தில் இருக்கும் வரையில் பொருள் ஈட்டும் செயல்களில் இறங்குவதற்கான துணிவு வராது; வரவே வராது.

தோல்வியை எண்ணி அஞ்சுகிறவன், தன்னையும் அறியாமல் தோல்வியையே எதிர்பார்க்கிறான். உள் உணர்வு தோல்வியை எதிர்பார்த்தால், மேலும் மேலும் தோல்விகள் வந்துகொண்டே இருக்கும்.

தீவிரமான ஆசைகளின்
இலக்கணம்

வெற்றியையோ தோல்வியையோ பொருட்படுத்தாத அளவுக்கு ஆசை தீவிரமானதாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு, அது நம் உள்ளுணர்விலும் வேரூன்றி நிற்க வேண்டும். அப்போதுதான், வெற்றியிலே சந்தேகப்படுகிற தோல்வி மனப்பான்மையிலிருந்து, அந்த உள் உணர்வு அறவே விடுபட முடியும். அது அப்படி விடுபட்டுவிட்டால், அப்புறம் அந்த மனிதன் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவனாக ஆகி விடுகிறான்.

மேல் மனத்தையும் கடந்து உள்ளுணர்வில் போய் வேரூன்றி விளங்கும் அளவுக்கு, எந்த ஓர் ஆசையையும் நாமே முயற்சி செய்து வளர்த்துக் கொள்வது என்பது அரிது. அது எல்லாராலும் முடியாது. அப்படி முடியாதவர்கள் எல்லாம் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி?

முடியாதவர்களும் முன்னேற வேண்டும் என்பதற்காகவே வாழ்க்கையில் பல சிறிய பெரிய ஆபத்துக்களும் சோதனைகளும், நம் விருப்பத்தின் பேரிலோ முயற்சியின் பேரிலோ வருபவை அல்ல. அவை தாமாகவே வந்து நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன.

ஆபத்துகள் எப்படி நம்முடைய துணிவை வளர்க்கின்றனவோ, அப்படியே சோதனைகளும் நம் துணிவை வளர்க்கின்றன.

ஒரு தொழில் அதிபருக்குப் பொருளாதார நெருக்கடி வந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நெருக்கடியை அவர் எப்படிச் சமாளிப்பது?

தான் அதுவரை நடத்திவந்த பாணியிலேயே அந்தத் தொழிலை அவர் நடத்திக்கொண்டு செல்லுவாரானால் அவர் மேற்கொண்டு இழப்புகளுக்கு ஆளாவாரே தவிர, முன்னேற்றம் காண முடியாது. நெருக்கடியை சமாளிப்பதற்காக அவர் ஏதாவது ஒரு புதிய வழியைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.

துணிந்து
செயல்பட
வைக்கும்
சூழ்நிலைகள்

புதிய வழி என்கிறபோது, அதுவரையில் அவர் செய்து பழக்கமில்லாத ஒரு வழியாகத்தான் இருக்கும். பழக்கமில்லாத எந்த ஒரு காரியத்தையும் முதல் தடவையாகச் செய்யும்போது, அதற்குத் துணிவு தேவை.

ஏற்கனவே அடைந்துள்ள ஓர் இழப்பை ஈடு செய்வது என்றால், அதற்காகச் செய்யப்படுகிற முயற்சி, ஒரு பெரிய இலாபத்தைத் தரக்கூடியதாக அமைய வேண்டும். சிறிய இலாபத்தைக் தரக்கூடிய சிறு முயற்சிகளால், அவருடைய நெருக்கடி தீரப் போவது இல்லை. எனவே, அவர் இறங்கியே ஆக வேண்டும்!

பெரிய முயற்சிகளின் மூலமாகத்தான் பெரிய இலாபங்களை அடைய முடியும். அப்படி இருந்தும், இதுவரை அவர் ஏன் பெரிய முயற்சிகளில் இறங்காமல் இருந்தார்?

காரணம், பெரிய முயற்சிகளின் மூலமாகப் பெரிய இலாபங்களை அடைவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு வாய்ப்பு பெரிய நஷ்டங்களை அடைவதற்கும் அதிலே இருக்கிறது! பெரிய இலாபங்கள் வருமானால் அது மகிழ்ச்சிக்கு உரியதே; ஆனால் பெரிய நஷ்டங்கள் வந்தால் என்ன செய்வது? இந்த பயத்தில்தான் அவர் இதுவரை எந்த ஒரு செயல் முயற்சியிலும் இறங்காமல், சாதாரண முறையிலேயே தன்னுடைய தொழிலை நடத்திக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

எதாவது ஓர் ஆபத்தான முயற்சியை மேற்கொள்வதன் மூலமாகத்தான், அவர் தன்னுடைய நெருக்கடிகளை இப்போது சமாளிக்க முடியும். இதுபோன்ற கட்டாயத்துக்கு ஆளான பிறகு, அவர் இனியும் தயங்கிக் கொண்டிருக்க முடியாது. தன்னுடைய பொருளாதார அழிவைத் தவிர்ப்பதற்காக, அவர் துணிந்து செயல்பட்டுத்தான் ஆகவேண்டும், வேறு வழி இல்லை.

துணிவினால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதற்கு, இப்போது அவருக்கு நேரம் கிடையாது. புலியால் துரத்தப்படுகிறவன் தண்ணீரில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? அதேபோல் அவரும் தன்னுடைய புதிய முயற்சியால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்க முடியாது.

புதிய முயற்சி ஒன்றைச் செய்யாமல் இருந்தால்தான் வீழ்ச்சயடைவது உறுதி என்று அவர் உணர்கிறார். புதிய முயற்சியைச் செய்வதால் ஒருவேளை அந்த வீழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பிவிடலாம் அல்லவா? அந்த ஒரு நம்பிக்கையால் அவர் துணிவுடன் அந்தப் புதிய முயற்சியில் இறங்கித்தான் ஆகவேண்டும்.

வெற்றியும் தோல்வியும்
எப்படி வருகின்றன?

அந்தப் புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி.

நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக் கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும்.

முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் காட்டிலும் படுமோசமாகப் போய்விடுமே என்று சந்தேகப்பட்டால் - என்று பயந்தால் தோல்விதான். வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

சுருக்கமாகச் சொன்னால்…

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் - எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும்.

‘நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,’ என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும்; மேலும் மேலும் சூழும், சூழ்ந்து சூழ்ந்து நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது.

இதே கருத்தைத்தான், மனம்போல வாழ்வு என்ற பழமொழி பேசுகிறது.

தீயசக்திகள் படுவீழ்ச்சி அடைந்துவிடும். இது உறுதி. தீயசக்தியின் அந்த வீழ்ச்சி நாளை எதிர் நோக்கி அமைதியாகக் காத்திருந்தால் நம்முடைய தன்னம்பிக்கை நம்மைவிட்டுப் போகாது!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன.

தன்னம்பிக்கை
நன்னம்பிக்கையோடு
தெய்வ நம்பிக்கையும்
வேண்டும்

தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் இழந்தவர்கள் தங்களையும் அறியாமலேயே தெய்வ நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். தெய்வ நம்பிக்கையை இழந்த ஒருவன் எல்லாவற்றையும் இழந்தவனாக ஆகிவிடுகிறான்.

தெய்வம் என்பது என்ன?

முஸ்லீம்கள் வழிபடுகின்ற அல்லாவையோ, இந்துக்கள் வழிபடுகிற பரமசிவன், பார்வதி, முருகன், கணபதி, அனுமார் போன்ற தெய்வங்களையோ, கிறிஸ்துவர்கள் வழிபடுகிற இயேசுநாதர், கன்னிமேரி போன்ற தெய்வங்களையோ, மற்ற மதத்தினர்கள் வழிபடுகின்ற எண்ணற்ற தெய்வங்களையோ சொல்லவில்லை.

பெயர்களையும் வடிவங்களையும் உடைய இந்தத் தெய்ங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில், எந்த ஒரு பெயரும் வடிவமும் அற்றதாய், எங்கும் நிறைந்ததாய், தோற்றம் - இறுதி இல்லாததாய், அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமாய், அனைத்து ஆற்றல்களையும் பெற்றுள்ளதாய் உயிர்க்குலங்கள் அனைத்திற்குள்ளேயும உயிருக்கு உயிராய் ஒளிர்வதாய் அன்பும் அறிவும் ஆனந்தமுமே தன் வடிவமாகக் கொண்டதாய் விங்குகின்ற பரம்பொருள் எதுவோ, அதையே தெய்வம் என்று நான் சொல்லுகிறேன்.

நான் சொல்லுகிற இந்தத் தெய்வத்தை எவரும் தங்கள் கண்ணால் கண்டதில்லை.காணவும் முடியாது. ஆனால், பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே இந்த உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருக்கின்ற கதிரவனைப் போல, நான் குறிப்பிடுகிற இந்த இறைவனும் நம்முடைய மனம், வாக்கு, காயம் ஆகிய எல்லாவற்றிற்கும் அப்பால் இருந்து கொண்டு, தன்னுடைய கருணை நோக்கினால் நம்மை இடைவிடாமல் கண்காணித்தும் காப்பாற்றியும் வருகிறார் என்ற உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வே உண்மையான தெய்வம். அந்த உண்மைத் தெய்வத்தின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்.

நீதி வேறு
தெய்வம் வேறு
அல்ல

நீதி எனப்படுகிற தருமத்தின் வடிவிலே அனைத்து உலக இயக்கங்களுக்கும் தெய்வம் ஆதாரமாக விளங்குகிறது.

சுருக்கமாகச் சொன்னால்,
நீதி வேறு தெய்வம் வேறு அல்ல, இரண்டும் ஒன்றே.
நீதியே தெய்வம்.
எனவே,

ஒருவருக்கு நீதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமானால், அவரை நாம் தெய்வ நம்பிக்கை உடையவர்களின் கணக்கிலே தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

பெளத்த மதத்தையும் சமண மதத்தையும் சேர்ந்த பெரியவர்கள் இந்த நம்பிக்கையை உடையவர்கள். இதனால் இஸ்லாம் மதத்தையும் பெளத்த மதத்தையும் சமண மதத்தையும் சேர்ந்தவர்கள் உருவத்தின் மூலம் தெய்வத்தை வணங்குவது இல்லை! இந்த உலகத்திலுள் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தெய்வம் ஆதாரமாக இருக்கிறது. தண்டவாளத்திலிருந்து கீழே தடம் தவறி இறங்கி விடுகிற இரயில் வண்டி எப்படி விபத்துக்கு ஆளாகிவிடுகிறதோ, அப்படியே தெய்வத்தை மறந்த மனிதனுடைய வாழ்க்கையும் ஆபத்துகளுக்கு ஆட்பட்டுவிடுகிறது.

குழந்தை, இருட்டைக் கண்டால் பயப்படுகிறது, அந்த இருட்டிலும்கூட அன்னை அருகில் இருப்பாளானால், அது தன் பயம் தெளிந்து நிம்மதியாக இருக்கிறது. அன்னை அருகில் இருக்கிறாள் என்கிற வெறும் உணர்வு அதன் அச்சத்தைப் போக்கிவிடுகிறது. அந்த மாதிரியே தெய்வம் நமக்குத் துணையாக இருக்கிறது என்ற உணர்வு ஆபத்துக் காலங்களில் நம் அச்சத்தைப் போக்குகிறது!

தெய்வம்
நமக்கு
எதுவுமே
செய்ய வேண்டாம்
ஆனால்
தெய்வம் என்ன செய்கிறது?

நமக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் செயல்கள் அல்ல என்றே வைத்துக் கொள்வோம்.

இரவில் தாயின் அருகே படுத்து உறங்கும் குழந்தை, திடீரென கண் விழிக்கிறது. அப்போது சுற்றும் முற்றும் சூழ்ந்திருக்கிற இருளைக் கண்டு அது அச்சம் அடைகிறது. அச்சம் தோன்றியதும் உடனே அதற்குத் தாயின் நினைவு வருகிறது. அந்தத் தாய் எங்கே இருக்கிறாள் என்று தன் கைகளால் தடவிப் பார்க்கிறது. அவள் தன் அருகிலேயே படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டதும் அது அச்சம் நீங்கி ஆறுதல் அடைகிறது. அப்போது அந்தத் தாய் என்ன செய்துவிட்டாள்? அவள் ஒன்றுமே செய்யவில்லை. அந்தக் குழந்தை கண் விழித்ததோ அல்லது கைகளால் அது தன்னைத் தடவிப் பார்த்ததோ எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவள் தன்னையும் தன் குழந்தையையும் மறந்தவளாய் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும் அவள் தன் அருகில் இருக்கிறாள் என்ற உணர்வு ஒன்றே, குழந்தையின் அச்சத்தைப் போக்கி அதற்கு ஆறுதலை அளித்து விட்டது.

இது மாதிரி,

‘தெய்வம் நமக்கு எதுவுமே செய்ய வேண்டாம்; தெய்வம் நமக்குத் துணையாக இருக்கிறது’ என்ற உணர்வு ஒன்றே நம்முடைய அச்சங்களைப் போக்கும் ஆறுதலை நமக்கு அளிக்கும்!

பச்சோந்தியும்
பச்சை மயிலும்

பழங்காலத்துத் திரைப்பட நடிகை ஒருவர் கரப்பான் பூச்சியைக் கண்டால் மிரண்டுவிடுவாராம். கரப்பான்பூச்சியைக் காணவேண்டும் என்பது கூட அவசியமில்லை அதன் பெயரைக் கேட்டாலே இவர் கை கால் உதறுமாம்.

இந்த நடிகைக்கு இயல்பிலேயே ஓரளவு சிந்தனா சக்தி உண்டு. அப்படி இருந்தும், கரப்பான் பூச்சியால் தன்னுடைய உயிருக்கோ உடைமைக்கோ எந்த ஓர் ஆபத்தும் ஏற்படமாட்டாது என்பதை அவர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எப்போதாவது அவர் அப்படி சிந்தித்துப் பார்த்திருந்தால், கரப்பான் பூச்சி என்ற பெயரைக் கேட்டதும் அவர் தம் நிலைகுலைந்து பதறித் துடிக்க மாட்டார்.

ஒரு பெரிய மதயானைகூட, நல்லபாம்பு கடித்தால் இறந்துவிடுமாம்! யானையைக் கொல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்த அந்தப் பாம்மை, ஒரு மயில் கண்டால் தம் அலகினால் குத்திக் கொன்றுவிடும். அப்பேர்ப்பட்ட மயிலானது, தூரத்தே ஒரு பச்சோந்தியைக் கண்டுவிட்டால் பயத்தால் கதிகலங்கிப் போய்விடுமாம்.

பச்சோந்தியால் மயிலைத் துரத்திப் பிடிக்க முடியாது. அப்படியே துரத்தி வந்தாலும்; நல்ல பாம்பை குத்திக் கொல்லுகிற அதே அலகினால், மயிலானது பச்சோந்தியை மண்டையில் குத்திக் கொன்றுவிட முடியும். ஆனால் அந்தப் பச்சோந்தியைக் கண்டவுடன் மயில் என்ன செய்யும் தெரியுமா?

மயிலுக்கு இறகுகள் இருந்தாலும் அவற்றின் துணை கொண்டு அது பறந்தோட முயல்வதில்லை. பச்சோந்தி எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு மயில் தான் நின்ற இடத்திலேயே நின்றுவிடும். அது மட்டுமல்ல. சிறிது நேரத்தில் அது அந்தப் பச்சோந்தியை நோக்கி நடந்து செல்லவும் முற்படும். நடந்து சென்று தன்னுடைய கண்களைக் கொண்டுபோய் அந்தப் பச்சோந்திக்கு வலியக் கொடுக்கும். உடனே பச்சோந்தி அந்தக் கண்களைப் பறித்துச் சாப்பிட்டுவிடும். இப்படி ஒரு நம்பிக்கை நாட்டுப்புறங்களில் நிலவுகிறது!

உள்ளதை உள்ளபடி அறிந்தால்,
உள்ளம் கலங்கமாட்டாது

பச்சோந்தியைக் கண்டு மிரளுகிற மயிலைப் போலவே அற்ப விஷயங்களைக் கண்டு மிரளுகிற மனிதர்களும் நிரம்பப் பேர்கள் இருக்கிறார்கள். எதையும் நன்கு சிந்தித்துப் பார்த்து, உள்ளதை உள்ளபடி அறிகின்ற ஆற்றல் படைத்தவர்கள் இவ்வாறு ஒரு நாளும் மிரளமாட்டார்கள். எனவே, ஒரு துன்பத்தை அல்லது சோதனையை நாம் சமாளிக்க விரும்பினால், முதலில் அதனால் விளையக் கூடிய அதிகபட்சமான தீமைகள் யாவை என்பதை நாம் சற்று அமைதியோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அமைதியற்று பதற்றத்தோடு சிந்தித்துப் பார்ப்போமாயின், ஒரு சிறிய ஆபத்து கூடப் பேராபத்தைப்போல் நமக்குப் பூச்சாண்டி காட்டும்.

ஆபத்து வரும் காலத்தில் மனத்தைக் கொஞ்சமும் கலங்கவிடாமல், புத்தியைச் சிறிதும் சிதறவிடாமல், அந்த ஆபத்தால் விளையக்கூடிய பலாபலன்களை மிகத் தெளிவாக அறிவோடு நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அப்படிச் சிந்தித்துப் பார்த்தால், அந்த ஆபத்தின் உண்மையான தன்மை நமக்குத் தெற்றெனப் புலப்படும். அது மட்டுமல்ல அந்த ஆபத்திலிருந்து தப்புவதற்கான உத்திகளும் கூடவே நம் இதயத்தில் உதயமாகும். உத்திகள் உதயமாகிவிட்டால், நமக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் தோன்றும். அதற்கப்புறம் அந்த உத்திகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பது ஒரு பெரிய காரியமாகத் தோன்றாது.

அந்தி மயங்கிய வேளையில் நாம் ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்கிறோம். அப்போது பாதையின் குறுக்கே ஒரு நீளமான கயிறு கிடக்கிறது. ஆனால் நாம் அதை பாம்பு என்று தவறாக நினைத்து அச்சம் அடைகிறோம்.

எதிர்ப்புறத்திலிருந்து ஒரு மனிதன் வருகிறான். அவனைப் பார்த்து, ”ஐயா, அங்கேயே நில்லும்! வழியிலே பாம்பு கிடக்கிறது!” என்று எச்சரிக்கை விடுகிறோம். நல்ல வேளையாக, அந்த மனிதன் கையில் ஒரு டார்ச் விளக்கு இருக்கிறது. நாம் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி அவன் அதன் வெளிச்சத்தை செலுத்துகிறான். அப்போதுதான் அங்கு கிடப்பது பாம்பு அல்ல. வெறும் கயிறுதான் என்ற உண்மை நமக்குப் புலனாகிறது.

அந்த டார்ச் விளக்கைப் போன்றதுதான் நம்முடைய சிந்தனா சக்தி. நாம் சரியாகச் சிந்தித்துப் பார்க்காத சமயங்களில், கயிறு போன்ற பிரச்னைகூடப் பாம்பாகக் காட்சியளிப்பது உண்டு. ஆனால் சிந்தனை என்ற ‘ஒளி விளக்கை’ச் செலுத்திப் பார்ப்போமாயின், அப்போதுதான் அதன் உண்மையான தன்மை நமக்குப் புலப்படலாகும்.

பெரும்பாலான சமயங்களில், நாம் கண்டு அச்சம் அடைகின்ற தீமைகளும், ஆபத்துகளும் தீங்கற்ற வெறும் கயிறுகளாகவே ஆகிவிடுகின்றன. அப்படியின்றி, உண்மையிலேயே தீங்கு விளைவிக்கக்கூடிய ஓர் ஆபத்தை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அதைக்கண்டு மனம் கலங்காமல் நாம் நிதானமாகச் சிந்திப்போமாயின், அப்போதே அந்த ஆபத்தில் ஐம்பது சதவிகிதத்தை நாம் வென்று விட்டவர்கள் ஆகிவிடுவோம்!

தவிர்க்க முடியாததைச்
சகித்துக் கொள்ள வேண்டும்

அடுத்தபடியாக, எந்த வகையிலும் தப்ப முடியாத ஒரு பேராபத்திற்கே நாம் உண்மையிலும் ஆளாகிவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வது?

அந்தச் சமயத்திலும்கூட, அஞ்சி நடுங்குவதால் நமக்கு யாதொரு பயனும் விளையப்போவதில்லை. ஆகையால், அந்த ஆபத்தை நாம் அச்சமின்றிதான் எதிர்நோக்க வேண்டும்.

‘தவிர்க்க முடியாததைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்!’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. அந்தப் பழமொழியின் அறிவுரைப்படி நம்மால் தப்பமுடியாத அந்த ஆபத்தின் விளைவுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஆயத்தமாகிவிட வேண்டும்.

‘உனக்கு வரும் இடுக்கண்களை நீ புன்னகையோடு ஏற்றுக்கொள். அந்த இடுக்கண்களை வெல்வதற்கு அதனைக் காட்டிலும் சிறந்த ஒரு வழி வேறு எதுவுமே இல்லை!’ என்கிறார் நம் தெய்வப் புலவர்.

ஆபத்துகள், துன்பங்கள், சோதனைகள் ஆகிய எல்லாவற்றிற்குமே, ஒரு பொதுப்படையான இயல்பு உண்டு என்பதை நான் முன்னமேயே கூறியுள்ளேன். அதாவது அவற்றைக் கண்டு நாம் எவ்வளவு அஞ்சுகிறோமோ, அவ்வளவு வலிமையுடையனவாய் அவை ஆகிவிடுகின்றன. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நாம் துணிந்துவிட்டால், அவை நம் வலிமையை அறவே இழந்து விடுகின்றன.

பொதுவாக, ஓர் ஆபத்தின் வலிமையே நம் உள்ளத்தில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது என்று கருதப்படுகிறது அல்லவா? இது ஒரு முழுமையான உண்மை அல்ல; அரை குறையான உண்மையே!

நம்முடைய அச்சம்தான் ஆபத்துகளுக்கு வலிமையூட்டுகின்றது என்பதே முழுமையான உண்மை.

நமக்கு உகந்த சூழ்நிலைகளை
நாமே உருவாக்கிக் கொள்லாம்!

நம் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள்தாம் எதிரியின் உள்ளத்திலும் பிரதிபலிக்கின்றன என்பதை முன்பு கண்டோம் அல்லவா? எதிரியின் உள்ளத்தில் மட்டும் அல்ல, நமது சூழ்நிலைகளிலும்கூட நம் உணர்ச்சிகள் தாம் பிரதிபலிக்கின்றன. அந்த முறையில், நம்முடைய சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல், இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கொள்வது தவறாகாது.

நம் உள்ளத்தில் பயம் குடிகொண்டிருக்கு ஆயின், நமது சூழ்நிலைகளும் மிகப் பயங்கரமாகக் காட்சியளிக்கும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டுதான் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ என்ற முதுமொழி எழவாயிற்று.

நம் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்குமானால், அந்த நம்பிக்கையை வலுப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளும் நமது சூழ்நிலையிலே காட்சியளிக்கத் தொடங்கும்.

நம்பிக்கையில் தன்னம்பிக்கை என்றும், நன்னம்பிக்கை எனறும் இரண்டு வகைகள் உண்டு என்பதை நாம் முன்னமேயே கண்டோம்.

அறத்தின் ஆற்றலிலும், இறைவனின் கருணையிலும் நமக்குள்ள நம்பிக்கைகள் நன்னம்பிக்கைகள். அவற்றைத் தவிர இன்னொரு வகையான நன்னம்பிக்கையிலும் நாம் பயிற்சிபெற வேண்டும்.

அதாவது, ‘உலகிலுள்ள எல்லா மனிதர்களுமே தம் இயல்பால் நல்லவர்கள்தாம். ஏதோ சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் சில பல சமயங்களில் தீயவர்களாக நடந்து கொள்ளலாம். அதற்காக, அவர்களைத் தீயவர்கள் என்றே நாம் முடிவு கட்டிவிடலாகாது. அதற்கு மாறாக, அவர்கள் எல்லோரும் நல்லவரே என்று நாம் நம்ப வேண்டும்!’ என்ற மனப்பான்மையே அந்த மூன்றாவது வகையான நன்னம்பிக்கையாகும்.

எதிரியின்மீது இத்தகைய ஒரு நன்னம்பிக்கை நமக்கு ஏற்பட்டு விடுமானால், உலகத்துக்கு எல்லாம் அவன் கொடியவனாகக் காட்சியளித்தாலும், நம்மைப் பொறுத்த வரையில் அவன் மிக நல்லவனாகவே நடந்துகொள்வான்.

அதற்கு மாறாக, ‘எதிரி தீயவன், அவன் நமக்குத் தீமையே செய்வான். ஆகையால், அவனிடம் நாம் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்’ என்ற உணர்வு நம் உள்ளத்திலே குடிகொண்டிருக்குமானால், ஊருக்கெல்லாம் நல்லவன் என்று பெயரெடுத்தவன்கூட, நம்மைப் பொறுத்தவரையில் மிகப் பொல்லாதவனாகவே நடந்து கொள்வான்.

எனவே, நம்மோடு தொடர்பு கொள்பவர்களை நமக்கு நண்பர்களாக்குவதும், நம்முடைய மனப்பான்மையே தவிர, வேறு எதுவும் அல்ல.

நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்வதா?

பகைவர்கள் இல்லாத இடத்தில்தாம் பயம் இல்லாமல் வாழலாம். பகைவர்களும் தீயவர்களும் இருக்கும் இடத்தில்தான், நமக்கு ஆபத்துக்களைத் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாகின்றன. எனவே, நாம் ஆபத்துகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகாமல் வாழ விரும்பினால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரையும் நல்லவர்களாக்கி விடுவதுதான் அதற்குரிய ஒரே வழி.

அவர்கள் நல்லவர்களே என்றும், அவர்கள் நமது நண்பர்களே என்றும், நாம் உளமார நம்பும் போதும், பழகும்போதும், அதை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் உண்மையிலேயே, நமக்கு நல்லவர்களாகவும், நண்பர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆனால், ‘ஒருவன் தீயவன் என்று கண்கூடாகத் தெரியும்போது, அவனை நல்லவன் என்று எப்படி நம்பமுடியும்? தீயவனை நல்லவன் என்று நம்புவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா?’ என்று கேட்கப்படலாம்.

உலகில் நூற்றுக்கு நூறு நல்லவர்களும் கிடையாது! நூற்றுக்கு நூறு தீயவர்களும் கிடையாது. ஒவ்வொரு மனிதனிடத்திலும் நற்குணங்களும் தீக்குணங்களும் கலந்தே இருக்கும். நற்குணங்கள் பெரும்பான்மையாகவும், தீக்குணங்கள் சிறுபான்மையாகவும் உள்ள மனிதர்களை நாம் நல்லவர்கள் என்கிறோம். அதேபோல, தீக்குணங்கள் பெரும்பான்மையாகவும், நற்குணங்கள் சிறுபான்மையாகவும் உள்ள மனிதர்களை நாம் தீயவர்கள் என்கிறோம். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவ்வளவுதான் வேறுபாடு.

மிகச் சிறந்த பெரியவர்கள் என்று போற்றப்படுகிற நல்லவர்களிடத்திலும்கூட, ஏதேனும் ஒரு சில தீக்குணங்கள் இருக்கத்தான் செய்யும். அது போலவே, மிகக் கொடிய தீயவர்கள் என்று தூற்றப்படுகிற இழிதகையினரிடத்திலும், ஏதேனும் ஒன்றிரண்டு உயர் பண்புகள் காணப்படுவது இயல்பு.

அந்த ஒன்றிரண்டு உயர் பண்புகளை மட்டும் கருத்திற்கொண்டு, (மற்ற தீய பண்புகளையெல்லாம் நினைவிற்கொள்ளாமல்) அவர்களோடு நாம் நெருங்கிப் பழகுவோமாயின், அவர்கள் நம்மைப் பொறுத்தவரையில் நல்லவர்களாக நடந்து கொள்வார்கள் என்பது மட்டுமல்ல; நாளடைவில் தம்முடைய தீய பண்புகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு உலகத்திற்கும் அவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

அவ்வாறே, பெரியவர்களிடம் காணப்படுகிற ஒன்றிரண்டு இழி பண்புகளையே நாம் அடிக்கடி நினைவு கூர்ந்து அவர்களாடு நெருங்கிப் பழகி வருவோமாயின், நம்மைப் பொறுத்தவரையில் அவர்கள் மேலும் மேலும் இழிதகையினராகவே நடந்து கொள்வார்கள். அதுமட்டுமல்ல; அவர்களுடைய நற்குணங்கள் எல்லாம் நாளடைவில் சிறிது சிறிதாக மங்கி மறைந்து, முடிவில் நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அவர்கள் தீயவர்களாக மாறிவிடுகிறார்கள்.

நாம் செய்யவேண்டிய
ஒரே முயற்சி

நம்மைச் சூழ்ந்துள்ள எதிர்ப்புகளையும் முரண்பாடுகளையும் அகற்றிவிட்டு வாழ்வில் நாம் முன்னேறிச் செல்வதற்கு வேறு எந்த ஒரு முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை. நம்மைச் சுற்றிலும் உள்ள மற்றவர்கள் நமக்கு இடையூறு செய்யாவண்ணம், அவர்களை நம் வசப்படுத்துவதற்கு வேறு எந்த ஓர் உத்தியையும் கையாள வேண்டியது இல்லை. நம்மிடத்தே உள்ள தீக்குணங்களை முயன்று ஒழித்துவிட்டு நற்குணங்களை முயன்று வளர்த்துக் கொண்டால், அது ஒன்றே போதுமானது.

நம்மிடம் உள்ள தீக்குணங்கள்தாம் சூழ்நிலையில் எதிர்ப்புகளையும் இடையூறுகளாகவும் பிரதிபலித்துக் காட்சியளிக்கின்றன. நமது தீக்குணங்கள் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு நமக்குள்ள இடையூறுகளும் எதிர்ப்புகளும் தாமாகவே மறைந்துவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அவ்வாறே நமது நற்குணங்கள்தாம் நம்முடைய சூழ்நிலையின் ஆதரவுகளாகவும் அனுகூலங்களாகவும் பிரதிபலித்துக் காட்சியளிக்கின்றன. அந்த நற்குணங்களை நாம் எந்த அளவுக்குப் பாடுபட்டு வளர்த்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இயற்கையும் மனிதர்களும் நமக்குத் துணை நிற்பார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இயற்கையும் மனிதர்களும் நம்மை எதிர்க்கும் போதுதானே, நம்மைத் துன்பங்களும் தொடர்கின்றன? அந்த எதிர்ப்பு மறைந்துவிட்டால், அவை தாமாகவே விலகிவிடும் அல்லவா?

ஆகையால், ஆபத்துகள், சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், இடுக்கண்கள் இவற்றில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல் நாம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு வழி ஒன்றே ஒன்றுதான்; அதாவது, நம்மை நல்லவர்களாக்கிக் கொள்வதற்கு, நம்மிடத்தே நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு, நாம் அயராது பாடுபட வேண்டும்!

தீக்குணங்கள் நம்மிடம் எப்படி உருவாகின்றன என்பதையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

சோதனைகளில்
இரண்டு வகைகள்

சோதனைகளும் ஆபத்துகளும் தாம் நம் உள்ளே உறங்கிக் கிடக்கும் சக்திகளைத் துயில் எழுப்பிவிட்டு அவற்றிற்கு ஆக்கம் அளிக்கின்றன.

சோதனைகளும் ஆபத்துகளும்தாம் உலகியல் சேற்றிலிருந்து நம்மை விடுவித்து இறைவன் பக்கம் திருப்பி விடுகின்றன.

நல்லவர்களுக்கும், தெய்வ நம்பிக்கை உடையவர்களுக்கும்கூட வாழ்க்கையில் சோதனைகளும், ஆபத்துகளும் துன்பங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அந்தச் சோதனைகளுக்கும் தீயவர்கள், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள், பலவீனமான இதயம் படைத்தவர்கள் ஆகியோருக்கு ஏற்படுகிற சோதனைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு.

ஒருவன் புலியைக் கண்டு அஞ்சி ஓடுகிறான். இன்னொருவன் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஓட்டப் பந்தயத்திலே கலந்து கொண்டு ஓடுகிறான். இருவரும் தம்முடைய சக்தி முழுவதையும் பயன்படுத்தி, தம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாகவே ஓடுகிறார்கள். அதற்காக அந்த இரண்டு ஓட்டங்களும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியுமா?

புலிக்குப் பயந்து ஓடுகிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறான். அப்போது அவனுடைய சிந்தனையும், செயலும் நூற்றுக்கு நூறு அச்சத்தினாலேயே ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால், ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் அம்மாதிரியான அச்சம் எதற்கும் ஆளானவன் அல்லன். பந்தயத்தில் எப்படியும் வெல்ல வேண்டும் என்ற ஊக்கத்தினால் மட்டுமே அவன் ஆட்கொள்ளப்பட்டவனாய் இருக்கிறான். அந்த ஊக்கம் அவனுக்கு உற்சாகத்தைத் தருகிறது.

இதைப்போலவே, நல்லவர்களுக்கு ஏற்படுகிற சோதனைகள், ஒரு பந்தய விளையாட்டைப் போன்று, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும், அளிப்பனவாய் அமைந்திருக்கும். நல்லவர்கள் அல்லாத மற்ற எல்லோருக்கும் ஏற்படுகிற சோதனைகள், அவர்களுக்கு அச்சத்தையும் வீழ்ச்சியையும் அளிப்பனவாக அமைந்திருக்கும்.

எனவே, சோதனைகளிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன. அவ்விரண்டு வகையான சோதனைகளுமே நம்முடைய சக்திகளை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன; நம்மை இறைவன் பக்கமாகவும் திருப்பிவிடுகின்றன என்பது உண்மையே. ஆனால், நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனையானது, அதனைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிற முயற்சிகளை இன்பகரமாக்கக் கூடியது. மற்றவர்களுக்கு ஏற்படுகிற சோதனை, அம்முயற்சிகளையே துன்பகரமாக்கக் கூடியது. இதுதான் அவ்விரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.

-தொடரும்

Tags: , , , , , ,


Wednesday, 28 Jan 2009

Tamilvanan Photo Gallery

தமிழ்வாணன் - புகைப்படத் தொகுப்பு

தமிழ்வாணன்…பெயரில் மட்டுமல்ல நடை, உடை, பாவனை என அனைத்திலும 60களிலேயே வித்தியாசம் காட்டியவர்.

உடையில் நவீனத்தைக் கடைப்பிடித்த அவர், கடற்கரைக்குச் சென்றால் மீனவரோடு மீனவராக அந்த வாழ்வையும் அனுபவித்தவர்.

அவர் அணிந்த தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், மணிக்கட்டு பட்டையும் மர்மம் நிறைந்தவை. மற்றவர்களை எட்ட இருந்து ஆச்சர்யம் கலந்து பார்க்க வைத்தவை.

அவருடையப் புகைப்படத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

Tags: , , , , ,


Friday, 9 Jan 2009

Thunivae thunai - Tamilvanan

tamilvanan.jpgதுணிவே துணை - தமிழ்வாணன்
அன்பு
அறிவு
ஆண்டவன்
துணிவே துணை

து என்னுடைய சிறுவயது முதற்கொண்டே என்னுடைய உயிர்க் கொள்கையாக இருந்து வருகிறது.

நீ துணிவு உடையவனாக இரு. உன்னைத் துணிவு உடையவனாக நீ ஆக்கிக் கொள். துணிந்து செயல்படு. அப்படிச் செயல்பட்டால், வாழ்க்கையில் நீ முன்னேறுவாய் என்று அந்தக் காலத்தில் எனக்கு எவரும் சொல்லித் தரவில்லை!

சிலருக்கு இயல்பாகவே காரச்சுவை அல்லது கசப்புச் சுவையில் வேட்கை இருப்பதுபோல என் உள்ளத்திற்கு இயல்பாகவே இந்தத் துணிவுச் சுவையில் ஓர் ஈடுபாடு இருந்தது. அந்த ஈடுபாடு, எவ்வளவு நன்மையையும் நலத்தையும் நயத்தையும் பயக்கக்கூடியது என்பது, பின்னால்

நான் பல ஆங்கில மனயியல் நூல்களைப் படிக்கும்போது தெளிவாக விளங்கியது. அந்த நூல்கள் என்னுடைய இயல்பான துணிவுச் சுவையை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணை செய்தன. இன்னமும் உறுதுணையாக இருந்து வருகின்றேன்.

அந்த நூல்களில் நான் படித்த கருத்துக்களே என்னுடைய அன்றாட வாழ்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அனுபவங்கள்தாம் ஒரு மனிதனுடைய உயர்வுக்கு ஏணிப்படியாக அமைகின்றன. இது உறுதி; உறுதியிலும் உறுதி.

அன்பே துணை.

அறிவே துணை.

அண்ணாமலையார் துணை.

இந்த மாதிரி ஏதாவது ஒரு துணையைப்பற்றிக் கொள்ளாமல் நீங்கள் ஏன் துணிவையே துணையாகக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பலர் என்னைக் கேட்டார்கள்! அன்பு, அறிவு, ஆண்டவன் இந்த மூன்றையும்விடத் துணிவில் அவ்வளவு பெரிய சிறப்பு என்ன இருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து!

———-

அன்பே துணை
அறிவே துணை
கடவுள் துணை
என்பதை விட…

ன்பைக் காட்டிலும் துணிவு பெரிது, அறிவைக் காட்டிலும் துணிவு பெரிது. ஆண்டவனைக் காட்டிலும் துணிவு பெரிது என்று நான் சொல்லவில்லை.

அன்பு என்பது, ஒரு மனிதனுடைய உயிரைப் போன்றது. அறிவு என்பது, ஒருவனுடைய கண்களைப் போன்றது. கண்ணைக்கொண்டு ஒரு மாமரத்தின் உச்சியிலுள பழுத்த மாம்பழத்தைப் பார்க்கத்தான் முடியுமே தவிர, அந்த மாம்பழத்தை எட்டிப் பறிக்க முடியாது. மரத்தில் ஏறிப் போய் அந்தக் கனியைப் பறிப்பதற்கு, வலுவான கைகளையும், கால்களையும் அவன் பெற்றிருக்க வேண்டும். துணிவு என்பது, அந்தக் கைகளைப் போன்றது.

ஒரு மனிதன் தன் கை கால்களால் உழைத்துச் சாப்பிடுகிறான். நான் உயிர் வாழ்வதற்கு வேறு எவர் துணையையும் நம்பி இருக்கவில்லை. என் கை கால்களையே நான் நம்பியிருக்கிறேன் என்று அவன் சொல்லுகிறான்.

அவனைப் பார்த்து, நீ ஏன் உன் கை கால்களை நம்ப வேண்டும்? உன்னுடைய உயிரை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது உன் கண்களை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது கடவுளை மட்டுமே நம்பியிருந்தால் போதாதா? உயிரையும் கண்ணையும்விட, கை கால்களுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? என்று எவராவது கேட்பார்களா?

கேட்கமாட்டார்கள்.

காரணம் நாம் எல்லோருமே கை கால்களை முழு அளவுக்குப் பயன்படுத்தி வருபவர்கள். நமக்கு உயிர் இருந்தாலும், கண் இருந்தாலும், கை கால்கள் இல்லாவிட்டால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்! தெளிவாக அறிந்திருக்கிறோம்.

ஆனால்,துணிவைப் பற்றி அத்தகைய அனுபவம் நம்மில் பெரும்பாலோருக்குக் கிடையாது. அதனால்தான் அவர்கள் அன்பை மட்டும் துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அல்லது அறிவை மட்டுமே துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அன்பே சிவம் அல்லவா? அறிவே இறைவன் அல்லவா? அன்புக்கும் அறிவுக்கும் இல்லாத சக்தி துணிவுக்கு இருக்கிறதா, என்றெல்லாம் கேட்கிறார்கள்!

துணிவு என்கிற சொல்லுக்கு நம்மிலே பலர் தவறான பொருள் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

துணிவு என்றால், எதற்கும் அஞ்சாத முரட்டுத் தனம் அல்லது கண்மூடித்தனமான அசட்டுத் தைரியம் என்று பொருள் அல்ல. அஞ்ச வேண்டுவதற்கு அஞ்ச வேண்டும்; அஞ்சக்கூடாதவற்றுக்குச் சிறிதும் அஞ்சக்கூடாது. இதுவே துணிவின் அடிப்படை இலக்கணம்.

இளங்கன்று பயம் அறியாது என்று சொல்கிறோம். ஒரு தவழும் குழந்தை ஊர்ந்து செல்கிற பாம்பைப் பிடித்து விடலாம். அப்படிப் பிடித்துவிட்டால், அது ஒரு துணிவுள்ள குழந்தை என்பது பொருள் அல்ல.

பாம்பைப் பிடித்தால், அது கடிக்கும்; பாம்பு கடித்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் அது பாம்மைப் பிடிக்காது!

அதே போல், ஒரு காரியத்தில் ஈடுபடுவதனால் எத்தகைய ஆபத்துகள் நேரக்கூடும் என்பதை உணராமலே சிலர் ஈடுபட்டு விடுகிறார்கள் அல்லவா? அப்படி ஈடுபடுவது மூடத்தனத்தின் அடையாளம், துணிவின் அடையாளம் அல்ல!

நம்மில் பலர், துணிவு என்ற சொல்லுக்கு அத்தகைய மூடத்தனத்தையே பொருளாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, துணிவைத் துணையாகக் கொள்ளாதே அறிவைத் துணையாகக் கொள் என்று அவர்கள் கூறுவது, ‘மூடத்தனத்தைத் துணையாகக் கொள்ளாதே - அறிவுடைமையைத் துணையாகக் கொள்’ என்ற கருத்திலேதான!

ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு அதனால் விளையக்கூடிய நன்மை தீமைகளை நன்றாகச் சீர்தூக்கிக் பார்த்து, அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும் என்றான் வள்ளுவன். அப்படிச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள கருவியே அறிவு. இந்த அறிவு, ஒருவனுக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவன் தீர்க்கதரிசியாக விளங்குவான். அதாவது, பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே ஊகித்து உணரக் கூடியவனாக இருப்பான்.

அமைச்சர்களாய் இருப்பவர்களுக்கு இந்த அறிவின் திறம் பெரும் அளவுக்கு அமைந்திருக்க வேண்டும் என்கிறான் அதிவீரராம பாண்டியன். அதேபோல், தானைத் தலைவர்கள் அதாவது, ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கி நடத்துகிற சேனாதிபதிகள் போர்க்களத்தில் மிகுந்த துணிவு உடையவர்களாக விளங்கவேண்டும் என்று அவன் சொல்கிறான்.

இன்றைய உலகில் நம்முடைய அன்றாட வாழக்கை ஒரு போர்க்களம் போல் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் ஆதரவுச் சக்திகளும் எதிர்ப்புச் சக்திகளும் கலந்து காணப்படுகின்றன. இதிலே ஆதரவுச் சக்திகளின் துணையைக் கொண்டு எதிர்ப்புச் சக்திகளை நாம் வெல்ல வேண்டும். அப்படி வெல்லாவிட்டால், வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்துவிடுவோம்.

ஓர் அரசாங்கத்திற்கு, மந்திரி சேனாதிபதி ஆகிய இருவரும் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அப்படி நம் உலகில் வாழ்க்கைக்கு அறிவும் துணிவும் இன்றியமையாதவை!

போர் நடத்துவதா, அல்லது போரிட முடியாமல் எதிரியுடன் சமாதானமாகப் போய் விடுவதா? என்பதை முடிவு செய்வதிலே பெரும் பொறுப்பு மந்திரிக்குத்தான் உண்டு. போருக்குப் போவது என்று மந்திரி முடிவுசெய்து விட்டாரானால், அந்தப் போரை எப்படி நடத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை சேனாதிபதியைச் சேர்ந்தது.

இந்த மாதிரி, ஒரு காரியத்தில் நாம் இறங்குவதா வேண்டாமா என்பதை நம்முடைய அறிவு முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை நம்முடைய துணிவு செயல்படுத்த வேண்டும். கிடைக்கப்போவது வெற்றி!

———–

உயரத்திலிருந்து குதிப்பதெல்லாம் துணிவாகிவிடாது!

ருவன் தன்னுடைய துணிச்சலை உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பி, மிக உயர்ந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்துக் காட்டுகிறேன் என்று கூட்டத்தை கூட்டி, குதிக்க முற்படுவானேயானால் அவனை எந்த இரகத்தில் சேர்ப்பது? அப்படிக் குதித்தால் உயிரை இழக்க நேரிடும். அல்லது கைகால் உடைந்துபோகும் என்பதை உணர்பவனாக இருக்க வேண்டும். அவ்வாற அவன் உணராது போனால், அதைவிட மடத்தனமான செயல் எதுவுமே இருக்க முடியாது.

அதே நேரத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திலிருந்து பாரசூட் உதவியுடன் குதிப்பது என்பது உண்மையிலேயே துணிச்சலான காரியம். பாரசூட்டின் உதவியுடன் பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பது என்பது எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய செயலல்ல. அப்படிக் குதிப்பவர்களின் துணிச்சல் இருக்கிறதே, அது மற்றவர்களால் பாராட்டக்கூடிய ஒன்றுதான்.

அதில் எள்ளளவும் ஐயமில்லை. கட்டடத்தின் உயரத்தில் இருந்து குதிப்பதற்கும் விமானத்திலிருந்து குதிப்பதற்கும் தேவையான துணிச்சல் முற்றிலும் வேறுபாடானது.

முன்னது, மடத்தனமான துணிச்சல; பின்னது, உண்மையான துணிச்சல். அறிவும் துணிவும் இணைந்து அதனால் செயலாற்றப்படுகின்ற காரியங்களே உண்மையான துணிவின் இலக்கணம்.

ஒருமுறை பாரசூட்டிலிருந்து குதித்த ஓர் இளைஞரை ஒரு மனஇயல் நிபுணர் அணுகிப் பேசினார். பாரசூட்டில் இருந்து குதித்த நேரத்தில், இளைஞருடைய மனநிலை எப்படி இருந்தது எனக் கேட்டார்.

”ஒரு கயிற்றையும் ஒரு வலையையும் நம்பி பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பதாவது? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அப்படிக் குதிப்பதனால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது? நாம் ஒன்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் குதிக்கப் போவதில்லையே? வெறும் விளையாட்டுத்தானே? நான்கு பேர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்குத்தானே? பாராட்டிற்காகவும் விளையாட்டிற்காகவும் உயிரைப் பணயம் வைப்பதாவது? என்றெல்லாம் என் மனம் எண்ணியது. கீழே நோக்கினேன். கண்ணுக்கு எட்டிய வரையில் தரையே தெரியவில்லை. கோடு கோடாக ஏதோ தெரிந்தன. அவை ஆறுகள் என்று ஊகித்துக்கொண்டேன். கருமையும் வெண்மையும் கலந்த மேகக்கூட்டங்கள். பார்க்கவே அச்சமாக இருந்தது. எனக்குப் பின்னால் குதிக்க வேண்டும் என்று இரண்டுபேர் காத்திருந்தார்கள். அவர்கள் என்னை கேலியாகப் பார்த்தார்கள். என்னுடைய இயேசுவை நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் குதித்த பலர் பாதுகாப்புடன் தரையை அடைந்ததையும் நினைத்துக் கொண்டேன். அந்தக் குறுகிய நேரத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.

”என்ன நினைத்தேனோ தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு டக்கென்று குதித்துவிட்டேன். இனம் புரியாத ஓர் உணர்வு. வானத்தில் மிதக்கும்போது ஏற்பட்ட என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். சிறிது நேரத்திற்கெல்லாம் எனக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. தரையை விரைவில் எட்டிவிடக் கூடாது. மிதந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியது என் மனம். என்னையும் அறியாமல் ஏதோ ஓர் உற்சாகம் பிறந்துவிட்டது. பத்திரமாகத் தரையில் இறங்கினேன். அதற்குப் பிறகு பலமுறை குதித்துப் பழகினேன். இன்று என்னுடைய விருப்பமான பொழுதுபோக்கு விமானத்தில் இருந்து குதிப்பதுதான். எந்த ஒரு செயல் என்னுடைய பய உணர்வைத் தூண்டியதோ அதுவே இன்று எனக்குப் பொழுது போக்காகிவிட்டது.

”என்னைப் பொறுத்தவரையில் பயம் என்பது பழகும் வரைக்கும்தான். பழகிவிட்டால் அதுவே பொழுதுபோக்கு. அறிவுபூர்வமான ஒரு துணிச்சல் இத்தகைய ஓர் உற்சாகத்தைத் தரக்கூடியதே. அத்தகைய ஒரு துணிச்சல் மற்றவர்களால் பாராட்டப்படும்போது அதனால் கிடைக்கும் இன்பமே தனி” என்று பதிலளித்தார் அந்த இளைஞர்.

————

அறிவும் துணிவும் இணைய வேண்டும்

ருவருக்கு நல்ல அறிவு இருக்கிறது. ஆனால், அந்த அறிவின் முடிவுகளைச் செயல்படுத்துவதற்கான துணிவு அவரிடம இல்லை என்றால், அவரால் எந்த ஓர் அரிய காரியத்தையும் சாதிக்க முடியாது.

முடியும், ஓர் ஆட்சியிலே அறிவிற் சிறந்த மந்திரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய ஓர் இராணுவம் கிடையாது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இராணுவ பலம் வாய்ந்த ஒரு சிறிய நாடு கூட எளிதில் அந்த நாட்டைக் கைப்பற்றித் தனக்கு அடிமையாக்கிக் கொண்டுவிடும் அல்லவா?

அதுபோலவே, ஒரு மனிதன் இருந்தானானால், செயல் திறன் வாய்ந்த ஒரு சாதாரண மனிதன் கூட வாழக்கைப் போராட்டத்தில் அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் முன்னுக்கு வந்துவிடுவான். இந்தச் செயல்திறன் துணிவு. ஒருவனிடத்தில் துணிவு மட்டும் இல்லை. ஆனால் மற்ற சிறப்புகளெல்லாம் இருக்கின்றன என்றால், பயன் இல்லை. இராணுவம் இல்லாத நாடு இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே!

‘திறனோடு செயல்படுவதே தர்மயோகத்தின் இலக்கணம்’ என்று பேசுகிறது பகவத்கீதை.

இந்த அடிப்படையில் பார்த்தால் துணிவுடமை என்பது இந்த உலகத்தில் வெற்றிக்கு மட்டுமல்ல. இறைவனை நோக்கி ஆன்மா முன்னேறிச் செல்வதற்கும் கூட அதாவது சாதாரண மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுள் தன்மையை அடைவதற்குக்கூட துணிவே வேண்டும்.

துணிவு இருந்தால் எல்லாம் உண்டு. துணிவு இல்லாவிட்டால் எதுவும் இல்லை!

சில அரசியல் கட்சிகளில் நன்றாக உழைக்கும் தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டி, சரியான துணிவைக் கொடுத்து அவர்களை அழைத்துச் செல்லக்கூடிய தலைவர்கள் இருக்கமாட்டார்கள். வெறும் உழைப்பு மட்டும் இருந்து இந்த உழைப்பைச் சரியான துணிவுள்ள வழியில் பயன்படுத்துதற்குரிய அறிவுத் திறனைப் பெற்றிராத மனிதன் அந்த அரசியல் கட்சியைப் போன்றவனகாவேயிருப்பான். சும்மா உழைத்துக் கொண்டேயிருந்து என்ன பிரயோஜனம்? மாடு மாதிரி!

வேறு சில கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் அறிவுத் திறன் உள்ள தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி நிறைவேற்றுவதற்குரிய தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல அறிவுத்திறன் இருந்தும் துணிவில்லாத காரணத்தினால் இந்தக் கட்சி மாதிரி முன்னேறாமலேயே கிடந்து நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டிருப்பார்கள்.

————

ஃபோர்டி-ன் துணிச்சல்

லகில் ஃபோர்ட் காரைப் பற்றித் தெரிந்திராதவர்கள் இருக்க முடியாது. ஃபோர்டு பரம்பரைப் பணக்காரர் அல்லர். சாதாரணமாக குடும்பத்தில் பிறந்தவர். அவர் தம்முடைய வாழ்க்கையைத தொடங்கும்போது மிக எளிமையாகத் தான் தொடங்கினார்.

ஆனால் இன்று - உலகில் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளத்தக்க பணக்காரர்களுள் ஃபோர்டும் ஒருவர். ஃபோர்டு கம்பெனி ஒரு நிமிடத்திற்கு ஒரு காரை உற்பத்தி செய்கிறது. அந்த அளவிற்கு அவரது வளர்ச்சிக்குக் காரணம்?

துணிவு!

அறிவு!

செயல்திறன்!

அவரிடம் இந்த மூன்றுமிருந்தன. அறிவையும் செயல் திறனையும்விடத் துணிவே அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

அவருக்கு தாமே கார்த் தொழிற்சாலையைச் சிறிய அளவில் தொடங்கி நடத்தினால் என்ன என்று ஓர் எண்ணம்.

இவருக்கு முன்னரே வெற்றிகரமாக நடந்து வந்த கார்த் தொழிற்சாலையை அணுகினார். அவர்கள், அந்தத் தொழிற்சாலையில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சொன்னார்களே தவிர, அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எதையும் சொல்லிவிடவில்லை. காரை முழுமையாக்கி வெளிக்கொண்டு வருவதற்கான உதிரிப்பொருள்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று பலரும் எடுத்துச் சொன்னார்கள். போர்டு தயங்கவில்லை. திட்டங்களை வகுத்தார். அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். எந்த இடத்திலும் அவர் தவறான கணக்கைப் போடவில்லை. சிறிய அளவில் தொடங்கிய அவருடைய துணிவும் திறமையும் செயல்திறனும் சிறிதும் குறையவில்லை. வளர்ந்துவிட்டதே என்று அவர் சும்மா இருக்கவில்லை. புதுமைகள் பலவற்றைப் புகுத்தினார். உலக மக்களைக் கவர்ந்தார். வெற்றி கண்டார். இன்று உலகில் அவருடைய கார் ஓடாத நாடுகளே இல்லை.

————

செயல் திறனும் வேண்டும்

றிவுத்திறன், செயல்திறன் இந்த இரண்டும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை. இந்த இரண்டில் அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். இருந்தாலும்கூட, திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்தாவது, அந்தத் தவறுகிலிருந்து கிடைக்கிற அனுபவத்தின் அடிப்படையிலே, ஒரு மனிதன் தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் செயல்திறன் குறைவாக இருந்தால், வெறும் சிந்தனையால் மட்டும் அதை வளர்த்துக் கொள்ள முடியாது. சரியாகவோ, தவறாகவோ செயல்படும் போது மட்டுமே, ஒருவனுடைய செயல்திறன் வளர்ச்சி அடைகிறது. செயல்படாமலே சும்மா இருக்கிற மனிதன் இயல்பிலேயே ஒரு பேரறிவாளனாக இருந்தாலும்கூட, அந்தப் பேரறிவு அவனுக்குப் பயன்படாமல் பிறருக்கும் பயன்படாமல் மங்குகிறது. துருப்பிடிக்கிறது. நாளடைவில் மறைந்து விடுகிறது.

இந்த முறையில் பார்க்கும்போது ஒருவனுக்கு அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாய் இருந்தாலும் குற்றம் இல்லை. துணிவுதான் அவனிடம் குறைவில்லாமல் இருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

துணிவின் துணை மட்டும் உறுதியாக இருக்குமேயானால் அறிவில் குறைந்தவன்கூட நாளடைவில் ஒரு பேரறிஞனாக வளர்ச்சியடைந்துவிடலாம். இதனாலே தான், நான் துணிவே துணை என்பதை என் உயிர்க் கொள்கையாகக் கொண்டு நிற்கிறேன்.

———-

தாய்மார்கள் பால் மட்டுமா புகட்டுகிறார்கள்?
பயத்தையுமல்லவா புகட்டுகிறார்கள்!

ய உணர்வு என்பது திடீரென்று முளைத்துக் கிளர்ந்து எழுவது அல்ல. அது இளம் வயது முதலே ஊட்டப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் தாய்மார்களால்தான் ஊட்டப்படுகிறது.

பிள்ளை அடம்பிடித்தவுடனேயே அவர்கள் கையில் இருக்கும் மருந்து ‘பூச்சாண்டி’ என்ற வார்த்தைதான். பூச்சாண்டி பூச்சாண்டி என்று சொல்லியே பிள்ளைகளைப் பயமுறுத்தி வைக்கிறார்கள். பூனை, மாடு இப்படி ஏதாவது ஒன்றைச் சுட்டிக் காட்டியும் பயமுறுத்துவது உண்டு.

இத்தகைய பிள்ளைகள் மெல்ல மெல்லத் துணிவு மனப்பான்மையை இழந்துவிடுகின்றன. இந்த மனநிலை, வளர்ந்துவிட்ட வாழ்க்கை நிலையிலும் தொடர்கிறது. அதன் காரணமாக அவர்கள் திறமையற்றவர்களாகி விடுகிறார்கள். எப்போதும் ஓர் அச்ச உணர்வு அவர்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. தன்னம்பிக்கையை இழக்கும் நிலையும் வருகிறது. தாய்மார்கள், அடம்பிடிக்கும் பிள்ளைகளை வேறு வழிகளில் சமாதானப்படுத்த முயல வேண்டுமேயொழிய கண்டவற்றையும் சொல்லிப் பயமுறுத்தக் கூடாது.

———

பூச்சி-பூரானைக் கண்டாலும் பயம்

ர்த்தமில்லாத பயங்களுள் இந்த வகையும் ஒன்று. மனிதன் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தைப் பிடித்தக் கூண்டிலடைத்து, பழக்கித் தன் வழிக்குக் கொண்டுவந்து சர்க்கஸ் வித்தையைச் செய்துகாட்டச் செய்து அதன் வாய்க்குள் தலையை விட்டுக் காட்டிக் காசு சேர்த்து விடுகிறார். அத்தகைய திறமை மனிதனிடத்தே இருக்கிறது. இத்தகைய மனிதர்களோடு பிறந்தவர்கள்தாம் நாமும்.

அப்படியிருக்கும்போது பூச்சியையும் பூரானையும் பார்த்துப் பயப்படுவது என்பது எத்தகைய ஒரு கேலிக்குரிய செயல்? நம்மிடம் அறிவு இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குத் திறமை இருக்கிறது. ஒரு விளக்குமாறு, ஒரு செருப்பு இவை போதுமே பூச்சியையும் பூரானையும் சமாளிக்க! உயிர்களைக் கொல்வது பாவம் என்பதை உங்கள் மனம் எண்ணினால் விலகிச் செல்ல வேண்டியதுதானே! ஏன் இந்தப் பதற்றமும் ‘ஆ’ ‘ஓ’ என்ற கூச்சலும்?

———–

நாம் எந்த வகையான முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறோம்

துணிந்து செயல்படுவதால் மனிதன் முன்னேற்றம் அடைகிறான் என்று சொல்லப்படும் பொழுது, முன்னேற்றம் என்ற சொல்லின் பொருளைச் சிலர் சரியாகப் புரிந்து கொள்வது இல்லை. முன்னேற்றம் என்றால் என்ன? பொருளாதார முன்னேற்றமா? வாழ்க்கை வசதிகளில் முன்னேற்றமா? ஆன்மீக முன்னேற்றமா? இவற்றுள் எந்த முன்னேற்றத்தை நம்மவர்கள் முன்னேற்றம் என்று நினைக்கிறார்கள்?

ஆன்மீக முன்னேற்றத்துக்குக்கூடத் துணிவின் துணை வேண்டும். ஆனால், ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள்தாம் நம் சமுதாயத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆகையால் ஆன்மீகத்தில் துணிவின் துணையைக் கொண்டு முன்னேறுவது எப்படி என்பதை இப்போது சொல்லுவதில் பயன் இல்லை.

அதே போல,மன வலிமையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றி நாம் இப்போது ஆராய வேண்டாம். ஏனென்றால் மன வலிமை என்றால் என்ன?

அதை ஏன் ஒரு மனிதன் முயன்று தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பேர் அறிந்திருந்தாலும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!

புகழில் ஏற்படுகிற முன்னேற்றத்தைப் பற்றியும் நம்மவர்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. புகழுக்குரிய காரியங்களைச் செய்யவேண்டும். அவற்றின் மூலம் புகழைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் உயர்ந்த குறிக்கோள். அந்தக் குறிக்கோள்களை நோக்கிச் செல்வதற்குத் தேவையான ஆர்வம், தினசரி வாழ்க்கைப் போராட்டத்தல் தவித்துக் கொண்டிருக்கிற நம்மவர்களுக்கு இருக்கும் என்று இன்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகையால், அது பற்றியும் இங்கே இப்போது பேசிப் பயன் இல்லை.

முன்னேற்றம் என்ற உடனேயே, பொருளாதார முன்னேற்றமும், அந்தப் பொருளைக் கொண்டு அடையக் கூடிய வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றமும்தான் நம்மில் பெரும்பாலோரது நினைவுக்கு வருகின்றன. அந்த இரண்டு முன்னேற்றங்களையும் அடைவதற்குத் துணிவுடமை துணை புரியுமானால் அதை வரவேற்பதற்கு நாம் தயாராக இருக்கலாம் அல்லவா?

——-

துணிவு என்பதற்குச் சிலர் புரிந்துகொள்ளும் விபரீதமான கருத்துகள்

லைவலியால் சங்கடப்படுகிறவன், எந்த மருந்தைக் கொண்டாவது அந்தத் தலைவலியைப் போக்கிக்கொள் வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறான். வயிற்று வலியால் துடிதுடிப்பவன், அதைப் போக்கிக் கொள்வதற்கு எந்த மருந்தை வேண்டுமானாலும் சாப்பிடுவதற்குத் தயாராகி விடுகிறான். இந்தத் தலைவலியையும் இந்த வயிற்றுவலியையும் போலவே சமுதாயத்திலுள்ள பெரும்பாலான மக்கள், வறுமை என்ற நோயினால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் துணிவையே துணையாகக் கொண்டு தன் வறுமையைப் போக்கிக் கொண்டுவிடலாம் என்று அவர்களிடம் போய்ச் சொன்னால் உடனே அதற்கு அவர்கள் கொள்கிற அர்த்தம் விபரீதமானதாக இருக்கிறது.

பயந்துகொண்டே இருந்தால் நாம் ஒரு நாளும் பணத்தைப் பார்க்க முடியாது. துணிந்து இறங்கினால் தான் ஒரு கணிசமான பணத்தை நாம் நம் வாழ்நாளில் கண்ணால் பார்க்க முடியும் என்ற பாணியில் பேசுகிறவர் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம்!

சூதாட்டத்தில் ஏற்கெனவே மெல்ல மெல்லத் தன் செல்வத்தையெல்லாம் இழந்த ஒரு மனிதன், கடைசியில் மன் மனைவியின் கழுத்திலே தங்கத் தாலிக்குப் பதிலாக மஞ்சள் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு அந்தத் தங்கத் தாலியை விற்றுச் சூதாடப் போகிறான். வந்தாலும் சரி, போனாலும் சரி என்று துணிந்து அந்தக் காரியத்தைச் செய்வதாக அவன் எண்ணிக் கொள்கிறான். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவன் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!

வருகிற வருமானத்தையெல்லாம் ஒழுங்காகக் கணக்கு எழுதிக் காட்டினால், அதில் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் வருமான வரியாக எடுத்துக் கொண்டு விடுமே என்பதற்காக, பொய்க் கணக்கு எழுதிக் கறுப்புப் பணத்தைச் சோக்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பொய்க் கணக்கு எழுதுவது சட்டப்படிக் குற்றம் என்பது அவர்களுக்குத் தெரியும். தெளிவாகத் தெரியும். இருந்தாலும் அந்தக் குற்றத்தைத் துணிந்து செய்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!

அதிகார பீடத்தில் இருக்கிறவர்கள் இலஞ்சம் வாங்குவது ஒரு மாபெரும் குற்றம். இது அவர்களுக்குத் தெரியும். நன்றாகத் தெரியும்.

இருந்தாலும் இலஞ்சம் வாங்காமல், அரசாங்கம் கொடுக்கிற சம்பளம் ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால், எந்தக் காலத்திலும் தங்களுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் துணிந்து இலஞ்சம் வாங்குகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.

இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது.

———

இதுவா துணிவு?

ங்களுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு வாழக்கை வசதிகளிலும், பொருளாதாரத்திலும் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு பலர் துணிந்து திருடுகிறார்கள். பலர் துணிந்து கொள்ளை அடிக்கிறார்கள்.

பலர் துணிந்து பொய்க் கையெழுத்துப் போடுகிறார்கள். பலர் துணிந்து பொய்யான ரிக்கார்டுகளைத் தயார் செய்கிறார்கள். பலர் துணிந்து பொய் சாட்சி சொல்கிறார்கள்.

பலர் துணிந்து துரோகம் செய்கிறவர்கள், பலர் துணிந்து இழிசெயல்களில் இறங்குகிறார்கள். பலர் துணிந்து கொலை கூடச் செய்துவிடுகிறார்கள்! துணிவு என்ற சொல்லுக்கு இதுவா அர்த்தம்?

இவையெல்லாம் துணிவு மிக்கச் செயல்களே அல்ல. வடிகட்டின முட்டாள்தனமான செயல்கள் இவை. இந்த மடத்தனமான செயல்களையெல்லாம் துணிவான செயல்கள் என்று எண்ணிக் கொள்வதும் அறிவீனம்!

உழைப்பைக் கண்டு அஞ்சுகிற கோழைதான் சூதாட்டத்தில் இறங்குகிறான். உழைப்பைக் கண்டு பயப்படுகிற கோழைதான் கள்ள நோட்டு அச்சடிக்கிறான். ஏற்கெனவே பெரும்செல்வம் இருக்கும்போது அவன் எதற்காகச் சூதாட வேண்டும்? எதற்காகக் கள்ளநோட்டு அச்சடிக்க வேண்டும்?

செல்வம் நிலையில்லாதது என்று அவர்களுடைய உள்ளுணர்வு சொல்லுகிறது. அந்த நிலையற்ற தன்மையின் காரணமாக அவர்கள் கையில் இருக்கும் செல்வம் எல்லாம் கரைந்து போய் விடுமானால், அதற்கப்புறம் தாங்கள் வறுமைக்கு ஆளாக நேர்ந்துவிடுமே என்ற பயம் அவர்களை உறுத்தத் தொடங்குகிறது. அதனாலேயே அவர்கள் சூதாடுகிறார்கள்! கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்.

இருக்கிற செல்வம் போய்விட்டாலும், தங்களால் புதிய செல்வத்தை நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் உள்ளத்தில் கோழைத்தனம் பிறக்கிறது. அதுவே குற்றம் செய்யத் தூண்டுகிறது. துணிந்து குற்றம் செய்வதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். தங்கள் துணிவைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள்.

இது மடத்தனமான துணிவு!

——–

கொள்ளைக்காரர்கள் எல்லாம் வீரர்களா?

ங்கள் உயிரையே ஒரு பொருட்டாகக் கருதாத குற்றவாளிகள் உலகத்தில் மிகப் பலர் இருக்கிறார்கள். பெரிய கொலைக்காரர்கள்,

கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோரெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே பெரும் துணிவு உடையவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இறுமாப்பு அடைகிறார்கள். விவரம் தெரியாத மக்களும் அவர்களுடைய வீர சாகசச் செயல்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். உண்மை என்ன? இவர்களில் எவருமே உண்மையான வீரர்கள் அல்லர். முதல்தரமான கோழைகள் இவர்கள்!

இவர்களிடம் நிரம்பப் பணபலம் இருக்கலாம். படை பலம் இருக்கலாம். ஆனால், அந்தப் பணத்தையும் படையையும் நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை, இவர்களுக்கு இயல்பிலே கிடையாது.

தன்னம்பிக்கை இன்மைதான் கோழைத்தனத்தின் அடிப்படை இலக்கணம்.

கோழைத்தனம் - குற்றம் இந்த இரண்டும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள், கோழைத்தனம் உள்ள இடத்தில் குற்றம் இருக்கும். குற்றம் உள்ள இடத்தில் கோழைத்தனம் இருக்கும். இது இயற்கை.

கோழைத்தனத்தின் காரணமாக மனிதன் முதலில் ஒரு சிறு குற்றத்தைச் செய்கிறான். அந்தச் சிறு குற்றம் அவனுடைய கோழைத்தனத்தைக் கூடுதல் ஆக்குகிறது! அந்தக் கூடுதல் கோழைத்தனம் அவனைப் பெரும் குற்றம் செய்யத் தூண்டுகிறது. அந்தப் பெரும் குற்றம் அவனைப் பெரும் கோழை ஆக்குகிறது. இப்படியாக, ஒரு விஷமச் சூழல் உருவாகி அவனை மேலும் மேலும் கோழையாகவும் குற்றவாளியாகவும் ஆக்கிக்கொண்டே போகிறது.

———–

வெளியே வீரன்; உள்ளே கோழை!

ண்மையான துணிவு என்பது ஒருவனுடைய உள்ளுணர்வுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர வெளி உலகத்துக்குத் தெரியாது. வெளி உலகம் அவனை ஒரு மாவீரன் என்று போற்றும். சந்தனத் தேவன், கட்டபொம்மன், ஜம்பு லிங்கம் போன்றவர்களெல்லாம் நம் தமிழகத்திலே இப்படிப் போற்றப்பட்டவர்கள்.

இன்றைக்குப் பெரிய பெரிய கொள்ளைக்காரர்களைப் பற்றிய கதைகள் பெரும் செலவில் திரைப்படமாக்கப்படுகின்றன. அந்த மாதிரிப் படங்களை நம் நாட்டு ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்! மக்கள், அப்படி ஆர்வத்தோடு பார்ப்பதற்குக் காரணம் என்ன? அந்தக் கொள்ளைக்காரர்களின் பயங்கர அட்டகாசங்களை மக்கள் துணிவுடைமை என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள்.

உண்மையான துணிவு உடையவனை அவனுடைய பகைவனும் புகழ்ந்து போற்றுவானே, அந்த முறையில் தான் கொள்ளைக்காரர்கள் உயர்ந்த மதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

இப்படிப் போற்றப்படுகிற அந்தக் கொள்ளைக்காரர்கள், உண்மையில் தங்களை உயர்ந்த வீரர்கள் என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். ”நீ ஒரு கோழை” என்று கூறிக் கொண்டிருக்கிற அவர்களுடைய உள்ளுணர்வை, மக்களின் பாராட்டுக்கள் வாயடைக்கச் செய்துவிடுகின்றன!

அதனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பொருளாதார வசதி, வாழ்க்கை வசதி, புகழ் போன்றவற்றில், மேலும் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி முயற்சி செய்யாமல் இருப்பவன் நாளடைவில் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவனாகிவிடுகிறான். மங்கிப் போய்விடுகின்றான், மக்கிப் போய்விடுகிறான்!

அறிவும் ஆற்றலும் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த இரண்டும் நமக்கு முழுக்க முழுக்கப் பயன் உள்ளவையாக அமையும்!

-தொடரும்

Tags: , , , , , , ,


Friday, 7 Nov 2008

Infond memory of Tamilvanan

தமிழ்வாணனுக்கு நினைவஞ்சலி. தோற்றம்: 5.5.1926 மறைவு: 10.11.1977

tamilvanan-image0001.jpg

ஓயாமல் எழுதிய கை
-ஏ.வி.எஸ்.ஹாஜா

ஏ.வி.எஸ்.ஹாஜா கல்கண்டில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார்.. இவரின் முதல் கதை 1957-இல் கல்கண்டில் பிரசுரமானது. (கல்வி - சிங்கப்பூரிலும் கோலாம்பூரிலும். தொழில்- மலேசியாவில் வணிகம்).

”அப்பொழுது நான் சின்னப் பையன். கல்கண்டில் மர்ம மனிதன் என்ற பரபரப்பான தொடர்கதையை தமிழ்வாணன் எழுதி வந்தார். கல்கண்டு வரும் நாளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக் கதையில் துப்பறியும் நிபுணர் சங்கர்லால் வருவார். வர்ணம்தான் அந்தக் கதாபாத்திரத்திற்குச் சித்திரம் வரைந்தவர். சங்கர்லால் ரொம்பவும் ஸ்டைலாக இருப்பார். சிலசமயம் தமிழ்வாணன்தான் சங்கர்லாலோ என்று கூட இளம் உள்ளங்கள் நினைக்கும்.

எல்லா இளம் உள்ளங்களுக்கும் சங்கர்லால் ஒரு ஹீரோ. ‘சங்கர்லால் நிஜமானவர்! அவர் மெட்ராஸில் வசிக்கிறார்!’ என்று கூடப் பேசிக் கொள்ளுவோம். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இளம் உள்ளங்களில் உலவவிட்டவர் தமிழ்வாணன்.

நான் சிங்கப்பூரில் அப்பொழுது ‘பிரைமரி’ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் கப்பலில்தான் வரும். ‘சங்கர்லால் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்! என்பதை அறிய ஆவலோடு காத்துக் கொண்டிருப்பேன்! சில சமயங்களில் சில இதழ்கள் இடை இடையே விட்டுப் போய்விடும்! அப்பொபது மனம் துடியாய்த் துடிக்கும்.

‘மர்ம மனிதனுக்கு’ பிறகு சங்கர்லாலை வைத்தே பல மர்மத் தொடர்கதைகள் எழுதி வந்தார். வாசகர் மத்தியில் நீண்ட காலம் நிலைத்து நின்ற கதாபாத்திரம் சங்கர்லால் என்றே சொல்ல வேண்டும்!

தமிழ்வாணன் எப்பொழுமே எல்லாருமே நல்ல தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர். அவர் ‘டிப் டாப்பாகத் தொப்பி அணிந்து கொண்டு, சலவை கலையாத ‘பேண்டோடு’ நிற்கும் பொழுது வர்ணம் வரைந்த சங்கர்லாலே அங்கே நிற்பது போல் தோன்றும். ‘அழகாய் இருப்பது எப்படி?’ என்ற நூலை எழுதியவரும் அவரே! அப்பொழுது அதிகம் விற்பனையான பிரபல புத்தகமாகும்.

பின்பு பல அறிவு நூல்களை வெளியிட்டார். ஒரு மேடையில் தமிழ்வாணனைப் புகழ்ந்து பேசிய ஒருவர், ”முதன் முதலில் அறிவு நூல்களை எழுதிய பெருமை தமிழ்வாணனையே சாரும்!” என்று கூறியதை உடனே மறுத்துப் பேசிய தமிழ்வாணன், ”மதிப்புக்குரிய ரஹிம் அவர்கள்தான் முதன் முதலில் அறிவு நூல்கள் எழுதியவர்!” என்று சொன்னார். தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழக்கம் தமிழ்வாணனிடம் கிடையாது.

அவருடைய கேள்வி-பதில் பகுதியில் தன்முனை ஊக்குவிப்பு எப்பொழுமே தொட்டு நிற்கும் ”எனக்கு எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது” என்று ஒரு இளைஞர் கேட்டிருந்த கேள்விக்கு ”என் படத்தை உன் அறையில் தொங்க வை’ பயமெல்லாம் ஓடிப் போய்விடும்!” என்ற துணிச்சலான பதிலைக் கொடுத்திருந்தார்.

மனத்தில் பட்டதைப் பட்டென்று சொல்லும் அந்தத் துணிச்சல், சில சமயங்களில் அவருக்குப் பிரச்னையையும் உண்டாக்கியிருக்கிறது..

1964ஆம் ஆண்டு ஆபட்ஸ்பரியில் ஆதித்தனார் விழாவில் இவர் கலந்து கொண்ட பொழுது, இவருடைய காரின் கண்ணாடிகளைச் சிலர் உடைத்துச் சேதப்படுத்திவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பத்திரிக்கைகள், ‘தமிழ்வாணனின் கார் நொறுக்கப்பட்டது’ என்று பரபரப்போடு எழுதியிருந்தன.. இதற்கு நான் நலம் விசாரித்துக் தமிழ்வாணனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

”ஆபட்ஸ்பரியில் ஆதித்தனார் விழாவில் ஏற்பட்ட நிகழ்ச்சி சாதாரணமானது. அதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அந்த நிகழ்ச்சியில் எவருக்கும் எந்தவிதமான துன்பமும் ஏற்படவில்லை. நான் அரங்கிற்குள் நுழைந்தவுடன் கூட்டத்திலிருந்தவர்களெல்லாம் கை தட்டினார்கள். இதைப் பொறுக்காத அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள, கட்சி சார்பாக கொஞ்சம் காரமாகப் பேசிவிட்டார்கள். அவ்வளவுதான்!” என்று பதில் எழுதியிருந்தார்.

என்னை எழுத்தாளனாக்கிய பெருமை தமிழ்வாணனையே சேரும். என்னுடைய முதல் சிறுகதை 1957-இல் கல்கண்டில் வந்தது. அதன் பிறகு நிறைய எழுதினேன். ‘கல்கண்டு’ தீபாவளி மலருக்கு கதை அனுப்பச் சொல்லியிருந்தார். தீபாவளி வரும் மாதமும் மலேயாவில் பரிட்சை நேரமும் ஒரே சமயத்தில் வரும். அதனால் நேரப்படி கதையை என்னால் அனுப்ப முடியவில்லை. அதனால் என்னுடைய கதை தீபாவளி மலரில் வராமல் போய்விடும். நான் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக எப்போதோ எழுதிய கதையை அட்டைப்படக் கதையாக வெளியிட்டார்.

நான் 1960-இல் எழுதிய ‘பேயாண்டித் தீவு’ என்ற முழு நீளக் கதையை கல்கண்டில் அட்டைப் படமெல்லாம் போட்டு வந்தது. அதை வெளியிடுவதற்கு முன் எனக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

”பேயாண்டித் தீவு நல்ல கதை. அட்டைப் படமெல்லாம் போட்டு அச்சாகக் காத்திருக்கிறது. நீங்கள் எழுதும் விதத்தைப் பார்த்தால், என்னையே மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது.”

ஊக்க மூட்டிய அந்தக் கடிதம்தான் நான் நிறையக் கதைகளையும் தொடர்கதைகளையும் எழுதத் தூண்டியது.

என்னுடைய தொடர்கதை மலேசிய பத்திரிகையான தமிழ்நேசனில் வந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகையின் அப்போதைய நிர்வாக ஆசிரியர் புலவர் சேதுராமன் பேச்சுவாக்கில், ”தமிழ்வாணனைத் தமிழ் நேசனுக்கு எழுதச் சொல்லுங்களேன்! சம்மதிப்பாரா?” என்று கேட்டார்.

தமிழ்வாணனிடம் தொலைபேசியில் கேட்டபொழுது, ”மலேசியாவில் எனக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள்! தமிழ்நேசனில் எழுதுவது எனக்குப் பெருமை!” என்றார்.

புலவர் சேதுராமனுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் என்ன தொகை கொடுப்பது என்று அவருக்குத் தெரியாததால் தமிழ்வாணனிடமே அதைக் கேட்கச் சொன்னார்.

”நானும் பத்திரிகை ஆசிரியர் அவரும் பத்திரிகை ஆசிரியர். எனவே புலவரே முடிவு செய்து கொள்ளட்டும்” என்றார் தமிழ்வாணன் பெருந்தன்மையாக.

கடைசியில் நானே ஒரு தொகையை சிபாரிசு செய்தேன். இருவருமே ஏற்றுக் கொண்டார்கள். ‘மலர்க்கொடி, உன்னை மறப்பதெப்படி?’ என்ற தொடர்கதை மலேசியா வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து 1965-இல் தமிழ்வாணன் மலேசியா வந்தார். அவரின் மலேயா வருகைக்கு ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன்.

தமிழ்நேசன் நிர்வாகம் அவரின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்கள். தமிழ்நேசன் உரிமையாளர் நாகப்பன், நிர்வாக ஆசிரியர் மு. சேதுராமன், பொறுப்பாசிரியர் முருகு சுப்பிரமணியும், துணையாசிரியர்கள் முரு. சொ. நாகப்பன், சந்திரகாந்தம் அனைவரும் அவர் வருகையை வெற்றிகரமாக்கினார்கள்.

தமிழ்வாணன் மலேசியாவெங்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார். பெரும் வரவேற்பு. இன்றைய தமிழ்நேசன் ஞாயிறு பொறுப்பாசிரியர் சந்திரகாந்தம் இன்னும் அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

1957-இல் சென்னை செல்லவிருந்தேன். நான் தமிழ்வாணனைச் சந்திக்கப்போவது என் நண்பர்களுக்குத் தெரிய வந்தது. ”கறுப்புக் கண்ணாடி ஏன் அணிந்திருக்கிறார்? கண்ணில் கோளாறா? அவர் கை நொண்டிக்கை தானா?” என்று துப்பறிந்து வரச் சொல்லியிருந்தார்கள்..

அவரைச் சந்தித்த பொழுது அவர் கறுப்புக் கண்ணாடியே அணியவில்லை. கண்ணில் கோளாறுமில்லை. ஆனால் கை மணிக்கட்டில் பிளாஸ்டிக் பட்டை அணிந்திருந்தார். அதைச் கழற்றிவிட்டு கையை முழுதாக மடக்கிக் காட்டினார். இணைப்பு இல்லாத மணிக்கட்டுப் போலிருந்தது. அப்பொழுது அங்கு வந்த ஓவியர் ராகியும் அறிமுகப்படுத்தினார். ”உங்கள் கதைகளுக்குப் படம் போட்டவர் இவர்தான்!” என்றும்.

இரண்டாவது தடவை நான் சென்னை வந்தது 1972-இல். நான் தங்கிய சோழா ஷெராட்டன் ஹோட்டலுக்கு நேராக வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வாசகர்களோடும் படைப்பாளர்களோடும் அந்த அளவிற்கு நெருக்கம் கொண்ட ஒரு பத்திரிகை ஆசிரியரைக் காண முடியாது.

தமிழ்வாணன் மறைந்த செய்தி எனக்கு ஒரு மாதம் கழித்துத்தான் தெரியவந்தது. அப்பொழுது வெளிநாட்டில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். மலேசியா திரும்பி வந்ததும் இந்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது. அவர் மறைந்த நாள் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளும் நாள். நல்ல நாளில் அந்த நல்ல மனிதர் மறைந்தது ஒரு விநோதமான விஷயம்தான்!

அவர் ஆட்டோகிராபில் கையெழுத்திட்டு எழுதிய வாசகம் இன்னும் என் நினைவில் நிற்கிறது. ‘வானத்தில் பறக்கும் வல்லூறுகளைத் தடுக்க முடியாது. ஆனால் அவை நம் தலையில் கூடு கட்டாமல் தடுக்க முடியுமல்லவா?”.

நன்றி: கல்கண்டு

Tags: , , ,