Saturday, 6 Jun 2009
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப, நெடுமாறன் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் வசித்து வரும் 2 லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கைக்கு இந்தியா திருப்பி அனுப்பும் முயற்சி கண்டிக்கத்தக்கது என்று கூறியிருக்கிறார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாகக் கூறி தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்த பொறுப்பிலும் வாழ்ந்து வரும் சுமார் 2 லட்சம் ஈழத் தமிழர்களையும், போராளிகள் என்ற பொய்யானக் குற்றச்சாற்றின் பேரில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெறுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
1983 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 35 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். உரிமைகள் இல்லாமலும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு இடையிலும் வாழ்ந்து வரும் அவர்களை இப்போது திருப்பி அனுப்புவது அவர்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் செயலாகும்.
இந்திய அரசின் இச்செயல் உலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் பல லட்சம் ஈழத் தமிழர்களை அந்த நாடுகள் வெளியேற்றுவதற்குத் தூண்டுகோலாக அமையும். எனவே மனித நேயமற்ற இம்முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையில் போர் முடிவடைந்து விட்டாலும் உள்நாட்டில் அமைதி திரும்பவில்லை. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு போதுமான உணவோ, மருந்துகளோ இல்லாமலும் சித்ரவதைகளுக்கு ஆளாகியும் நலிவடைந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இங்கிருக்கும் ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்புவது அவர்களைக் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்குச் சமமாகும்.
ஏற்கனவே 1992ஆம் ஆண்டில் இதைப்போன்ற முயற்சி நடைபெற்ற போது ராமதாசும், நானும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அகதிகளை அனுப்புவதற்கு தடை ஆணைப் பெற்றிருக்கிறோம். அகதிகள் அவர்களாக திரும்பிச் செல்ல விரும்பினால் ஒழிய யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்துள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
Wednesday, 3 Jun 2009
இலங்கைத் தமிழர் படுகொலை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கேட்கிறார் ராமதாஸ்
இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு உடந்தையாக இருந்த இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
”இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரங்களை ஏற்படுத்துவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இப்போது எங்களுக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க கவலை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
முதலாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா போற்றப்படுகிற போதிலும், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், இலங்கை போன்ற அண்டை நாடுகளின் எதேச்சதிகார, சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக அது செயல்பட்டு வருகிறது. இதில் சீனாவுக்கு இந்தியா ஒத்தூதி வருகிறது.
இரண்டாவது, வலுவான அரசியல் மதிப்பீடுகள் அல்லது பாதுகாப்பு அக்கறைகளின் அடிப்படையில் அல்லாமல், ஒரு சார்பான அதிகாரவர்க்க சக்திகளால் நமது வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை அமைப்புகளை சேர்ந்த உயரதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப்புக்கு தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்கள். நேபாளத்தின் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக அந்நாட்டின் மன்னருக்கும், இலங்கையின் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் சமுதாயத்தில் இருந்து வருகிற அறிவார்ந்த கருத்துகளை எடுத்துக் கொள்ளுதல், பொது விவாதம், கலந்தாய்வு ஆகியவற்றுக்கு வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் இடமில்லாமல் இருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கடந்த மே 22-ம் தேதி வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட பெருந்தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை அமைந்திருந்தது. வன்னிப்பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26-ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது.
தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.
இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும் ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது. இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.
வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் ‘தமிழர்களை அழித்தொழிக்கும்’ இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும். ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.
இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்’
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அதில் கூறியுள்ளார்.
Monday, 1 Jun 2009
தமிழ் ஈழம்: வன்முறையற்ற வழியில் போராட விடுதலைப் புலிகள் அழைப்பு
வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி பூண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுப் பிரிவின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ளதாக புதினம் இணையதளத்தில் வெளிவந்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாதாவது:
‘சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழங்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது.
அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும், எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும், உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது.
தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் ‘மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும்’ என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை, சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு, தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் சிறிலங்காவின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் முன்நகர்த்தியுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.
இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும், தடுப்பு முகாம்களிலும், சிறைகளுக்குள்ளும், சித்ரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள எம்மவர்களை விடுவித்து செழுமையும், சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.
கள யதார்த்தத்தின் அடிப்படையிலும், மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும், அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும், அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.
இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.
இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.
இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sunday, 31 May 2009
விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளை ஒடுக்கவேண்டும்:
உலக நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள்

இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறும் இலங்கை அரசு, சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகளை ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்கப்பூர் தலைநகர் சிங்கப்பூர் சிட்டியில் உலக நாடுகளின் ராணுவ அதிகாரிகளின் ஆண்டுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாம் கலந்துகொண்டார். அப்போது அவர் இலங்கையின் வேண்டுகோளை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பொகலகாமா பேசுகையில்,
”இலங்கையில் விடுதலைப் புலிகளை ராணுவம் ஒடுக்கிவிட்டது. ஆனால் அந்த இயக்கத்துக்கு உலக அளவில் உள்ள ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகள் இன்னமும் அப்படியே உள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலையெடுக்க செய்வதற்காக இந்த ஆதரவு இயக்கத்தின் தலைவர்கள் உலக நாடுகள் பலவற்றில், அரசியல் ரீதியாகத் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். சர்வதேச அளவிலான இந்த விடுதலைப் புலிகள் ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகளை ஒடுக்க, உலகநாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ் ஈழத்திற்கான போராட்டம் தொடங்கிய 1972 ஆம் ஆண்டு முதலே போராட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டித்தந்தது உலகம் முழுக்க பரவியுள்ள ஈழத் தமிழர்கள் தான் என்பதால், விடுதலைப் புலிகள்ஆதரவு அமைப்புகளை ஒடுக்க சர்வதேச நாடுகள் உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் பொகலகாமா.
Friday, 29 May 2009
தமிழர் விரோதப் போக்கு: மத்திய அரசு விலை தரவேண்டியிருக்கும் - வீரமணி எச்சரிக்கை
ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு இலங்கையை ஆதரித்த செயல் பச்சைத் தமிழர் விரோத நிலைப்பாடு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான மக்களை சித்ரவதை செய்து மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தி சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
சீனா போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசும் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பச்சைத் தமிழர் விரோத மனித நேயத்துக்கு எதிரான நிலைப்பாடாகும்.
இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்காக பழியை சுமந்து தமிழர்களின் ஆவேசத்துக்கும் ஆளாகியுள்ள கருணாநிதியின் கருத்தை அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
முதல்வரின் உணர்வு தமிழர்களின் உணர்வாகும். அதை அலட்சியப்படுத்தினால், அதற்காக கொடுக்க வேண்டிய விலை பற்றி பின்னால் வருந்த வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.
Friday, 29 May 2009
ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம்: வைகோ
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானத்தில் வாக்களித்து, ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு மீண்டும் துரோகம் இழைத்துள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலில் இன்று (மே 28) நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில்,
”இலங்கையில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்றவுடன் வேறு எதையும் கற்பனை செய்து விட வேண்டாம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.
துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம், இலங்கைத் தமிழர்களை கருவறுக்கும் இந்தச் செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதைதான் துயரம் என்றேன்.
இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீரச்சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஐ.நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டுள்ளது. உலகில் யாருக்கும் ஏற்படாத கொடுமை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது தற்காலிக வெற்றிதான். அதுவும் இந்தியா உதவி செய்து ஆயுதங்களை, வீரர்களை அனுப்பியதால் கிடைத்த வெற்றி. கடந்த 5 மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். மூன்றரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.
இது, இந்திய அரசின் துரோகம். இதிலிருந்து அவர்கள் விரைவில் மீளுவார்கள். முதலில் பிரபாகரன் தப்பி ஓடும்போது சுட்டதாக கூறினார்கள். அதன் பிறகு உடலை கண்டு பிடித்ததாக கூறினார்கள். உண்மையில் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றிருந்தால் மரபணு சோதனை நடத்தி இருக்கலாமே. இன்னும் பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை உயிரோடு இருக்கிறார். அப்படியிருந்தும் மரபணு சோதனை நடத்த ஏன் முன்வரவில்லை.
பிரபாகரன் மறுப்பு தெரிவிக்கவில்லையே என்று கூறுகிறார்கள். மறுப்பு அறிக்கை வெளியிட அவர் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார். அவரது குரல் வெளியே வந்தாலே அவரை அழிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே, நாங்கள் ஆராய்ந்து இந்த முடிவை வெளியே சொன்னோம்,” என்றார் வைகோ.
Thursday, 28 May 2009
ஐ.நா., வில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு: தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்: பழ.நெடுமாறன்
ஐ.நா., வில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளரான அவர் திருநெல்வேலியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியி்ல்,
”இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர் குறித்து விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
அத்துடன், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக மற்ற சில நாடுகளையும் வாக்களிக்குமாறு இந்தியா வற்புறுத்தியுள்ளது. இந்தியாவின் இச் செயல், நேரு காலத்தில் இருந்து இந்திய அரசு பின்பற்றி வந்துள்ள கொள்கைகளுக்கு முரணானது.
மனித உரிமைகளை மீறி, ராஜபக்சேவின் சிங்கள ராணுவம் தமிழர்களை இனப் படுகொலை செய்துள்ளது. இந்திய அரசு அதற்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட அவருக்கு உரிமை இல்லை. பத்மநாதன் இலங்கையில் இல்லை. சர்வதேசப் போலீஸார் தேடி வரும் ஒரு குற்றவாளி அவர்.
பிரபாகரன் உடன் நின்று போரிட்ட புலிகள் இதைச் சொல்லி இருந்தால் நம்பலாம். அவர்கள் அதைப் பற்றி கூறவில்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். குறித்த நேரத்தில் அவர் வெளியே வருவார். இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் அவர் தலைமையில் ஈழப் போர் தொடரும்” என்று கூறினார்.
Thursday, 28 May 2009
ஐ.நா., விசாரணை: இலங்கைக்கு வெற்றி
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின்போது அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை விபசாரி்க்கவும், போர்க்குற்றத்திற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை தண்டிக்கவும் நடந்த விவாதத்தை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடக்கூடாது என்று இலங்கையும் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. இதற்கு ஆதரவாக சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐ.நா., கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் சுமுகமான முடிவை எட்டும் வகையில் சில மாற்றங்களுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதேவேளை, இலங்கையை புனரமைக்க சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது.
அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
Wednesday, 27 May 2009

மனித உரிமை மீறல்களை விசாரி்ப்பதுதான் இலங்கைக்கு நல்லது: ஐ.நா., கருத்து
இலங்கைப் போரின்போது அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரி்ப்பதுதான் இலங்கையின் எதிர்காலத்திற்கு நல்லது என்று ஐ.நா.சபையின் மனித உரிமை மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியன குறித்து விவாதிக்க ஐ.நா., சபையின் மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று ஜெனிவாவில் துவங்கியது.
இக்கூட்டத்தில் விடியோ மூலம் உரையாற்றிய ஐ.நா. சபையின் மனித உரிமை மன்ற தலைவர் நவி பிள்ளை,
”சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அப்பாவி மக்கள் தொடர்பான அடிப்படை சமூக உரிமைகளை இரு தரப்பினரும் மீறியுள்ளதாக நம்புவதற்கு இடமுள்ளது. அது குறித்து சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த பன்னாட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், அங்கு எந்த அளவிற்கு சர்வதேச மனித உரிமை சட்டங்களும், மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன என்பதையும், அதற்கு காரணமாகவர்களையும் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க வேண்டும்.
போர் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதைத் தடுத்து, அவர்களை மனித கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்றும், அப்பகுதியில் இருந்து வெளியேற முற்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்றும் அவர்கள் மீது குற்றம் சாற்றுப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மிகக் குறுகியப் பகுதியில் நெருக்கமான தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு இலங்கை ராணுவம் தாக்கியுள்ளது. அப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று அளித்த உறுதிமொழியை மீறிய நடவடிக்கை இது.
அதுமட்டுமின்றி, போரின் இறுதி கட்டத்தில் பொது மக்கள் அடைக்கலம் ஆகியிருந்த பகுதியில் இருந்த மருத்துவமனை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது இலங்கை இராணுவம். சரண்டைய வந்த விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றது போர் சட்டங்களை மீறிய நடவடிக்கையாகும். எனவே அங்கு நடந்தது என்ன என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இப்படிப்பட்ட விரிவான, ஆழமான அணுகுமுறையை மேற்கொண்டு அங்கு மனித உரிமைகளும், முழு சுதந்திரமும் உறுதி செய்யப்பபடுவதுதான் இலங்கையின் எதிர்காலத்திற்கு உதவும்” என்றார்.
Tuesday, 26 May 2009
இலங்கை மீது ஐ.நா., விசாரணை: தமிழர்கள் நலனுக்கு ஏற்ப இந்தியா முடிவு எடுக்க வேண்டும்: கருணாநிதி
இலங்கையில் போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா., மனித உரிமைகள் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறுகிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடந்தபோது, ஈவு இரக்கமின்றி அப்பாவித் தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.
கடைசி நாட்களில் நடந்த தாக்குதல்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
முல்லைத்தீவு பகுதியில் கொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் பலியானதை அமெரிக்கா தன் உளவு சாடிலைட் மூலம் படம் பிடித்துள்ளது. அந்த படங்களை ஆதாரமாக வைத்து இலங்கை மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறி உள்ளது.
இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சர்வதேச அளவில் இலங்கை ஆதரவு திரட்டி வருகிறது. ரஷியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் தீர்மானம் தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது போல உள்ளது என்று இலங்கை கூறி உள்ளதால், இந்த விவகாரத்தில் இந்தியாவும், இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதற்கு தமிழகத் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.
































