Archive for the 'srilanka news' Category


Wednesday, 3 Feb 2010

Katrina tops the Femina’s ‘Most Beautiful’ list

அழகிகளுக்கெல்லாம் அழகி காட்ரீனா கைஃப்!

katrina.jpg

பிரபல பெண்கள் பத்திரிகையான ஃபெமினா இந்தியாவின் 50 அழகுப் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அழகிகள் பட்டியலில் முதல் இடத்தை இந்தி நடிகை காத்ரீனா கைஃப் கைப்பற்றியுள்ளார்.

பல்வேறு தளங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் காத்ரீனா கைஃப்புக்கே முதல் இடம் தரப்பட்டது. இவர், தன்னுடைய சக போட்டியாளர்களான பிரியங்கா சோப்ரா மற்றும் கரீனா கபூர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, முதல் அழகி இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, இந்த முதல் 50 அழகிகள் பட்டியலில் நடிகைகள் கல்கி கோசெலின், பிரீத்தி ஜிந்தா, பெண் எழுத்தாளர் ஜும்பா லகிரி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வால், பிரியங்கா காந்தி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

Tags: , , ,


Tuesday, 6 Oct 2009

Citizenship to Lanka Tamil refugees, Jaya opposes

இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:
தி.மு.க.,வின் கோரிக்கைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

ந்திய குடியுரிமை வழங்குவதால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய தலையீடு அவசியமாகிறது.

மு.க. ஸ்டாலின் தன்னுடைய தீர்மானத்தில், 1984 முதல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி ‘செம்மொழி’ பிரகடனத்தைப்போல் கூடுதலாக எந்தப் பயனும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை.

‘நிரந்தரக் குடியுரிமை’ என்ற தகுதி காரணமாக அவர்களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்? இல்லையெனில், 1960-ஆம் ஆண்டு சிரிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின் படி, அகதிகளாக இந்தியாவிற்கு வந்து, இன்று இந்தியாவில் கொத்தடிமைகளாக அருவருக்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ‘இந்திய வழி தமிழர்களை’ விட கூடுதல் முன்னேற்றம் கிடைக்குமா?

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், பங்களா தேஷ், பர்மா (மியன்மார்) மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமை தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?

இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு நன்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இந்தப் பிரச்சினையை எழுப்பி, இது ‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.

அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950-களில் ‘சிங்களர்கள் மட்டும்’, மற்றும் ‘தரப்படுத்தல்’ கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Tags:


Friday, 2 Oct 2009

Nedumaran and Vaiko oppose vice-ambassador for Lanka

அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலைகள் அல்ல!:
இலங்கைத் துணைத் தூதருக்கு பழ. நெடுமாறன், வைகோ  எதிர்ப்பு

லங்கையில் உள்ள அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலைகள் அல்ல என்று கருத்துத் தெரிவித்திருந்த இலங்கைத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்திக்கு தங்களுடைய கடும் கண்டனங்களை பழ நெடுமாறனும் வைகோவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

“இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைப் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல” என இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கையிலுள்ள முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார். இந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கொண்டே, அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு தமிழக முதல்வரை மட்டுமின்றி, ஆறரை கோடி தமிழ் மக்களையும் அவமதிக்கும் போக்காகும்.  தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது பற்றி குறிப்பிடும்போது, “இலங்கை இறையாண்மை உள்ள நாடு; கடல் எல்லையைத் தாண்டி யார் வந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறியிருக்கிறார்.

எந்த நாட்டுத் தூதரும் இவ்வாறு பேசியதில்லை. எனவே இலங்கை துணைத் தூதரை உடனே வெளியேற்ற வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்திய அரசை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். .

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை தாக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, சித்திரவதை செய்து, இலங்கைச் சிறைகளில் அடைத்து வைத்ததை உலகமே அறியும்.

இந்நிலையில், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதாகக் கூறுவது பொய்ச் செய்தி என்றும், அப்படி நடக்கவே இல்லை என்றும் இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

கச்சத் தீவுக்கு அருகில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையே இல்லை என்றும், நமது மீனவர்களை இலங்கைக் கடற்படை பாதுகாக்கிறது என்றும் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் துன்பத்தில் வதைபடும் கொடுமைகளை ஐ.நா. அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். சர்வதேசப் பத்திரிகையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் அந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்க, முகாம்களைப் பார்வையிட தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு, “முகாம்களைப் பார்வையிட அவைகள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல”என துணைத் தூதர் கூறியுள்ளார். தமிழ் இனத்தையே இழிவுபடுத்தும் விதத்தில், ஏளன வார்த்தைகளை வீசிய துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை பகிரங்க மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும்.

உடனடியாக இந்தியாவில் இருந்து அவரை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags:


Friday, 25 Sep 2009

I​ndia should save Lanka Tamils, talk in Delhi meet

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் : அமெரிக்க மருத்துவர் ஆதங்கம்

லங்கையில் வதை முகாமில் விலங்குகளைப் போல வதைப்பட்டு வரும் தமிழர்களை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக உலக நாடுகள் காப்பாற்ற வேண்டும் என, டெல்லியில் நடைபெற்ற இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்த கருத்தரங்கில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த, டாக்டர் எலின் சந்தர் நேரடியாகக்  கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. அவருக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் இருந்தபடியே அவர் டெலிகான்பரன்சிங் மூலம் கூட்டத்தினரிடையே பேசினார்.

அப்போது அவர் குறிப்பிட்டு கூறியதாவது:

“சுனாமியின்போது இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பை நேரடியாகக் கண்டேன். அப்படிப்பட்டவர்கள், இன்று உடமைகள் இழந்து தவிக்கின்றனர். முகாம்கள் என்ற பெயரில், முள்வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அவலம் நடந்துள்ளது. தண்ணீர் வசதி அந்த முகாமில் இல்லை. மூன்றரை லட்சம் பேருக்கு வெறும் ஐநூறு கழிவறைகள்தான் உள்ளன. முகாமைச் சுற்றிலும் மனிதக் கழிவுகள் கிடக்கின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையால் சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்களுக்கு பலரும் பலியாகின்றனர். திறந்தவெளி பிரசவங்கள் நடக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் உதவ வந்தும் அதை அரசு தடுக்கிறது. உணவு,மருந்து தட்டுப்பாடு உள்ளது. வெறும் 50 டாக்டர்கள்தான் உள்ளனர். உறவினர்களை பார்க்க அனுமதியில்லை. விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல இவர்களை ஒரு வனவிலங்கு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும். முகாம் இருக்கும் வன்னி பகுதி மிகவும் தாழ்வான பகுதி. எனவே மழைநீர் பெரியஅளவில் தேங்கும் வாய்ப்புள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. வடக்கு பகுதி,முல்லைத்தீவு போன்றவற்றில் கண்ணிவெடியெல்லாம் கிடையாது. போஸ்னியாவில் செர்பியர்கள் தாக்கப்பட்டபோது, சிலமணி நேரங்களில் ஐக்கியநாடுகள் சபை செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, யாருமே கண்டுகொள்ளவில்லை. ஐ.நா., வை செயல்படவிடாமல் ஒருசில நாடுகள் செய்துவிட்டன. இவ் விஷயத்தில், இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசும்போது,”இலங்கைத் தமிழர்கள் படும் அனைத்து துயரங்களுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பு. இலங்கைக்கு இந்தியா அளித்த 500 கோடி ரூபாய் மற்றும் உதவிப் பொருட்கள் என்ன ஆனது என்பதே தெரியவில்லை,’ என்று கேள்வி எழுப்பினார்.

Tags:


Tuesday, 22 Sep 2009

Fight for Lanka Tamils right, Jaya calls

இலங்கைத் தமிழரின் நல்வாழ்வை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: ஜெயலலிதா

முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை, டில்லியிலுள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடக்கும் கொடூரமான உரிமை மீறல்களுக்கு எதிராக, அ.தி.மு.க., ஒத்தக் கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

‘இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத் தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இதுபோன்ற ஒட்டுமொத்தக் கொடுமையை, எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை. இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டித் தனமானது, மனிதத்தன்மையற்றது.

போரின் போது சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களைக் கொலை செய்வது, தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், 25 மைல் தொலைவில் உள்ள இலங்கையில் நடத்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து, தி.மு.க., அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.,விற்கு இல்லை. அருவருக்கத்தக்க சூழலில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை, டில்லியிலுள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இல்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடக்கும் கொடூரமான உரிமை மீறல்களுக்கு எதிராக, அ.தி.மு.க., ஒத்தக் கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

Tags:


Monday, 21 Sep 2009

Stop the new dam in Mullaperiyar river, Jaya ask state

முல்லைப் பெரியாரின் குறுக்கே புதிய அணை : தடுத்த நிறுத்த ஜெயலலிதா வலியுறுத்தல்

mullaperiyar.jpg

முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என,  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,

‘கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாகத்தான் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், ஆய்வுக்கு பின்னர் படிப்படியாக 152 அடி வரை நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து எனது ஆட்சிக்காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை துரிதப்படுத்தி, மத்திய அரசின் உதவியுடன் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை அன்றைக்கே முடிந்திருக்கும். ஆனால், கருணாநிதி அதைச் செய்யத் தவறிவிட்டார்.

கேரளாவிலும், மத்தியிலும் மாறுபட்ட கருத்துகளைக்கொண்ட அரசுகள் ஆட்சியில் இருந்தாலும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவறு என்று தெரிந்தும் கேரள அரசு எடுத்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும், மத்தியிலும் ஒருமித்த கருத்துகளைக் கொண்ட அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கருணாநிதி உறுதியற்ற தன்மையை கொண்டுள்ளார் என்பது கேரள அரசிற்கும், மத்திய அரசிற்கும் நன்கு தெரியும். அந்த தைரியத்தில் தான், மத்திய அரசின் ஆதரவோடு கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை தீட்டியுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி கொடுத்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால் கருணாநிதியோ, புதிய அணை கட்டுவது குறித்த தன்னுடைய கேள்வி -பதில் அறிக்கையில், ‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும்.
எனவே, கேரள அரசுக்கு இதைப்போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்’ என்று சமாதானத் தொனியில் கூறியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து கொண்டு, மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்துக்கொண்டு, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளாமல், ‘மத்திய அரசு அனுமதி கொடுத்து இருக்காது என்று நம்புவதாக’ அறிக்கை விடுவது கண்டனத்திற்குரியது.

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட பின்னர் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பேசிய கருணாநிதி, 1974 ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இது போன்ற நிலைமை கருணாநிதிக்கு மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் எதிர்க்கட்சி சார்பில் எச்சரிக்கை விடப்படுகிறது. இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்தால், கிடைத்துக்கொண்டிருக்கின்ற தண்ணீரும் தமிழகத்திற்கு வராமல் போய்விடும் சூழ்நிலை ஏற்படும்! முல்லைப்பெரியாறு அணையை ஒட்டியுள்ள பல மாவட்டங்கள் வறட்சியால் தத்தளிக்கும் நிலைமை உருவாகும்!

‘வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்’ என்ற பழமொழிற்கேற்ப, ஆபத்து வரும் முன்பே அதைத்தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், தமிழக மக்களின் உரிமை பறி போவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறியுள்ளார்

Tags: ,


Sunday, 20 Sep 2009

Tamils issue, India warns Lanka

தமிழர்களை குடியமர்த்தாவிட்டால்… இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!!

லங்கையில் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவரவர் ஊர்களில் குடியமர்த்த தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும் என இலங்கையை இந்தியா எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகளை போரில் வீழ்த்திய இலங்கை அரசு அப்பாவித் தமிழர்கள் 3 லட்சம் பேரை அகதிகள் முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளாக்க ப்பட்டு வருவதாகவும் இத்தகைய நிலை தமிழக தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

நிலைமை கைமீறிச் செல்வதாகவும், தமிழர்கள் கெளரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும், தொழிலில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் கடும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிரதமர், இலங்கை அரசிடம் நிலைமையை எடுத்துக் கூறுமாறு இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இலங்கை அதிபரைச் சந்தித்து, தமிழர்களை அவரவர் ஊர்களில் குடியமர்த்துமாறு கேட்டுக்கொண்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறினார்.

தமிழர்களை அவரவர் ஊர்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தமிழர்கள் விஷயத்தில் அமைதியாக இருப்பதை இந்தியா வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்காது என்று இலங்கைக்கு இந்தியா உணர்த்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Tags:


Friday, 4 Sep 2009

Why the world drops tamil community?-Pazha. Nedumaran

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? - தினமணி கட்டுரை

பழ. நெடுமாறன்

‘விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?’ என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடியதற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும்கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சொல்லொணாத சித்திரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவம் மட்டுமல்ல, இயற்கையும் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந்திருக்கிறது.

கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக்கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தைகள் உள்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்குக் கடந்த சில நாள்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத்திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்குப் பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் சிங்கள அரசு அனுமதிக்காததை சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச்சாட்டையும் சர்வதேசப் பொது மன்னிப்பு சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமி ழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததைக் காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதலைத் தீவிரப்

படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19-ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் இடுகாடு எதுவும் காணப்படவில்லை என்றும், ஆனால் போர் முடிவடைந்த பிறகு மே 24-ம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதைக் காண முடிகிறது என்றும், ஒவ்வொரு சவக்குழியிலும் நூற்றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

ஐ.நா. பேரவையோ அல்லது உலக நாடுகளோ இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் குறைந்தபட்சம் ஏன் என்று கேட்கவும்கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத்திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

ஐ.நா. அமைப்பு: இரண்டாம் உலகப்போரின்போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவானார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த ஐ.நா. பேரவை ஐ.நா. அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவதென முடிவு செய்தது.

அப்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் UNHCR ஆகும். 1951-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட்டில் அகதிகள் உருவானாலும் அவர்களுடைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட்டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஐ.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே ஐ.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்னையில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

1948-ம் ஆண்டு ஐ.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப் பிரகடனம் மிகமிக
முக்கியமானதாகும். சொந்த நாட்டில் வாழ இயலாத நிலையில் அன்னிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்டரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அடைக்கலம் புகுந்த நாட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் தமிழ் அகதிகளை ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன.

இரு நாடுகளிலும் உள்ள தமிழ் அகதிகள் உரிமைகளை இழந்து போதுமான அளவுக்கு உணவு மற்றும்
உதவிகள் இல்லாமல் தவிக்கும் அவல நிலையை உலகம் அறிந்துவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு ஐ.நா. அமைப்பின் தலையீட்டை இந்நாடுகள் அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளைத் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது. இதையும் உலகம் தட்டிக் கேட்கத் தவறியது ஏன்?

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபெத் அகதிகள் சுதந்திரமாக நடமாடவும் சொந்தமாகத் தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அன்னிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இந்தியாவில் அவர்களின் குடியிருப்புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னை தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடுகளும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் -நிக்கோபார் தீவுகளில் குடியேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப்பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபெத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க அகதிகள் 5,35,000 பேர்களும், இலங்கை அகதிகள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந்திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. 1965-ம் ஆண்டு ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழ முடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்த மான் தீவுகளில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்க வேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 1982-ம் ஆண்டில் அனைத்துக்கட்சிக் குழு, தில்லி சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்து வலியுறுத்தியது.

ஆனால் அந்தக் கோரிக்கை இன்று வரையி லும் நிறைவேற்றப்படவில்லை. 1983-ம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவ வெறியர்களின் தாக்குதல்களுக்குத் தப்பிப் படகுகள் மூலம் தமிழகத்துக்கு ஓடிவரும் ஈழத் தமிழர்களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்திச் சுடுகிறது. அதில் தப்பி ராமேஸ்வரம் வந்து சேரும் அகதிகளை தமிழகப் போலீஸாரும், இந்திய அரசின் உளவுத்துறையினரும் மிகக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற  பெயரில் சிறைச்சாலைக ளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சொல்ல முடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண்டுக்கணக்கில் விசாரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்குப் பொருள்களைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும், அரசு அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது.

சட்டவிரோதமான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துத் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து சில நாள்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருந்தவர்களை தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனிடம் நான் புகார் செய்தபோது, கமிஷனின் தலைவராக இருந்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, வேலூர் சிறப்பு முகாமுக்கு வந்து அவர்களை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலை செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இலங்கையில் மின்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை உடனடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாகப் பதில் கூறுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும்போது, நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டுகளில் குடியுரிமையே வழங்கப்படுகிறது. வேறுபல ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

இலங்கையும், இந்தியாவும் தமிழ் அகதிகளை நடத்தும் விதத்தை உலகம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல லட்சம் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு.

ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக ஐ.நா. பேரவை அடியோடு செயலற்றுப் போயிற்றே, அது ஏன்? இந்தக் கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன. 1991-ம் ஆண்டில் இராக்கின் வடபகுதியிலிருந்து 15 லட்சம் குர்தீஷ் இன மக்கள் இராக்கிய ராணுவத்தினரால் சுற்றி
வளைத்துக் கொள்ளப்பட்டபோது, 5-4-1991-ல் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான உதவியும் செய்ய வேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

மேலும் ஐ.நா.பட்டயத்தின் ஏழாவது பிரிவில் கூறியுள்ள படி, குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும் என்றும், அதற்காக வான், கடல், நில வழியாகப் படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவ வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வலியுறுத்திற்று. அதன்படி ஐ.நா. படை அனுப்பப்பட்டது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஐ.நா. அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைப்போல முன்னாள் யுகோஸ்லோவாகியாவில் இணைந்திருந்த போஸ்னியாவைச் சேர்ந்த சரயேவோ நகரில் சிக்கிக்
கொண்ட ஐந்து லட்சம் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. பாதுகாப்புப் படையை அனுப்புவது என பாதுகாப்புக்குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷியாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

போஸ்னியா நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருள்களை வீசி, அவர்களைப் பாதுகாக்கும் கடமையையும் ஐ.நா. செய்தது. இந்தப் பணியில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வாறெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் இலங்கையில் சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே, ஏன்?

மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா, இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்குக் காரணமா?

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உன்னதமான தத்துவத்தை உலகுக்கு அளித்த இனம், தமிழினம். அதுமட்டுமல்ல; சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலகக் கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உருவாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்துக்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த, தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை எதிர்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.

Tags:


Wednesday, 2 Sep 2009

K Veeramani arrest in chennai

ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி ரயில் மறியல்:
கி. வீரமணி உள்பட 500 பேர் சென்னையில் கைது

லங்கைத் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுவதை கண்டித்தும் அவர்களை விடுவிக்கக்கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

இதற்காக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் குவிந்தனர்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தடையை மீறி வீரமணி, தலைமையில், பொருளாளர் சாமிதுரை, பொதுச்செயலாளர்கள் கலி பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணை பொதுச்செயலாளர்கள் குணசேகரன், துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் புறப்பட்டனர்.

ஈ.வி.கே. சம்பத்சாலையில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னதாக கி. வீரமணி தொண்டர்களிடையில் பேசுகையில்,

“3 லட்சம் ஈழத்தமிழர்களை ராஜபக்சே அரசு முள்வேலியில் அடைத்து வைத்துள்ளது. அவர்களை உடனே அங்கிருந்து அகற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளுக்கு விரோதமாக பல லட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்களர்கள் குடியேறக்கூடாது, ஓரிரு மாதங்களில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து இங்குள்ள மாநில அரசை குற்றம் சாட்டுகிறார்கள். ஈழத்தமிழர் களுக்காக இங்குள்ளவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால் குற்றம் சாட்ட வேண்டாம்.

இலங்கை தமிழர்களுக்காக முதல்- அமைச்சர் கருணாநிதி 2 முறை பொறுப்புகளை இழந்தார். ஆட்சியை துறந்தார். அவர் இதில் காட்டும் ஈடுபாடு தெளிவானவை. அதை பயன்படுத்தி கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுமானால் தமிழக மக்கள் ஒன்றுபட்டு தகுந்த பாடம் கொடுக்கும். இங்குள்ள அரசியல் போட்டிகளை வைத்துக்கொண்டு இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற ஒத்தகுரல் கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு உதவுவது யார் என்பதை பார்த்து பயன் படுத்தி கொள்ள வேண்டாமா? முதல்- அமைச்சர் தலைமையில் முள்வேலியை அகற்றும் தெம்பும் திராணியும் எங்களுக்கு உண்டு.

நமக்குள் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை இலங்கை பிரச்சினையில் பயன்படுத்த லாமா? இலங்கை அரசை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டக்கூடிய சக்தி இந்த அமைப்புக்கு உண்டு.

இது தேர்தலுக்காக கூடும் கூட்டம் அல்ல. லட்சியத்தை நம்புகிற கூட்டம். ஒத்த கருத்துள்ள ஒரு அரசு இருந் தும் மத்திய அரசு அலட்சியம் செய்கிறது.

இது அறப்போராட்டம். அடுத்ததாக இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்தப்படும்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேறுபக்கம் போகவேண்டாம். வேறுபக்கம் திசைதிருப்பாதீர்கள். முதல்- அமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன குற்றம் செய்தார். உணவு, உடை அனுப்பியது குற்றமா? போட்டி போடவேறு அரசியல்களம் இருக்கிறது. இலங்கை தமிழர்களை பணயம் வைத்து பேசாதீர்கள்” என்றார்.

Tags:


Monday, 31 Aug 2009

Lanka Tamil journalist gets 20 years sentence

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறை

லங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.

‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவரும், தனி இணையதளத்தை நடத்தியவருமான ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்த ‘நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு’ என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசநாயகம் கைது செய்யப்பட்டார்.

புலிகளின் வெளியீடுகளுக்கு நிதி சேகரிப்பதில் திசநாயகத்திற்கு முக்கிய பங்கு இருந்ததாகவும், முக்கிய புலித் தலைவர்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததாகவும் இலங்கை அரசின் நாளிதழ் ஒன்று கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது.

அரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கடந்த ஜனவரியில் அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1982 ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அதன் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதல் நபர் திசநாயகம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதாக திசநாயகத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

திசநாயகத்தின் மீதான கைது நடவடிக்கையின் போது, இலங்கையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள்  கைது செய்யப்படுவது பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:


Page 1 of 3912345»...Last »