Archive for the 'Review' Category
Tuesday, 2 Feb 2010
தமிழ்ப் படம் : திரை விமர்சனம்

தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்து வந்திருக்கும் படம்தான் ‘தமிழ்ப் படம்’.
மதுரைக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமத்தின் ஒரு பெயர் சினிமாபட்டி. இந்த கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடுகின்றனர். காரணம், இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் நடிக்க கோடம்பாக்கம் போய் விடுகிறார்கள். கொஞ்சம் பெரிய ஆள் ஆனவுடன் ‘அடுத்த முதல்வர்’ எனச் சொல்லிக் கொண்டு அரசியலிலும் நுழைகின்றனர். இதனால் கடுப்பாகும் அரசுகள் இந்த கிராமத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் கடுப்படுக்கின்றன. அதனால் பஞ்சாயத்தில் எடுத்த தீர்மானப்படி ஆண் சிசுக் கொலை நடத்தப்படுகிறது.
பெரியார்தாசனின் மனைவிக்குப் பிறக்கும் ஆண் குழந்தையை, மருத்துவச்சி பரவை முனியம்மா காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். பெரியவனாகும் அந்த குழந்தைதான் கதாநாயகன் ஷிவா. குடிசைப் பகுதியில் வசிக்கும் அவர், ரகசிய போலீசில் வேலைப் பார்ப்பதால் ரவுடிகளை அடித்துத் துவைக்கிறார். க்ளைமாக்சில் தாதாக்களின் தலைவனை கைது செய்து நீதிமன்றத்தில், நீதிக்காக நிறுத்துகிறார்.
காலம் மாறினாலும் தன்னை மாற்றிக்கொள்ளாத தமிழ்ப் படங்களை ஒவ்வொரு காட்சியிலும் காய்ச்சி எடுக்கிறார்கள் ‘தமிழ்ப் படம்’ படத்தில். கருத்தம்மா படத்தைப் போல் துவங்கும் கதையில், பெண் சிசு கள்ளிப்பாலால் கொல்லப்படுகிறது என்றால் இதில் ஆண் சிசு –கள்ளிப்பால் எனத் துவங்குகிறது. முதல் காட்சியே சொல்லிவிடுகிறது கதை எந்த வழியில் பயணிக்கப்போகிறது என்று.
ரவுடிகளின் அட்டகாசத்தை கண்டு விட்டு ஓடி வரும் சிறுவன் பாட்டியிடம் கூற, ‘நீ பெரியவனா ஆகனும்னா சைக்கிள் பெடலை சுத்து’ என்கிறார் பாட்டி. அவனும் சைக்கிள் பெடலைச் சுற்ற சில நொடிகளில் பெரியவனாகிவிடுகிறான். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களை துவைத்தெடுத்து, நாட்டில் உள்ள அத்தனை ஆக்ஷன் நாயகர்களையும் நெற்றிப்பொட்டில்அடிக்கிறார்.
கதாநாயகி திஷா பாண்டேவுடன் ஷிவா பாடும் காதல் பாட்டான ‘ஓ மகசியா’ பாடல் பல பாடல்களில் வரும் ஹம்மிங்கையெல்லாம் வைத்து முழுப்பாடலாக்கப்பட்டு கிண்டல் அடிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியின் அம்மா அழகு கதாநாயகனிடம், ‘என் பொண்ணு கோடீஸ்வரி. நீயோ ஏழை. உனக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது?’ என்கிறார். அத்துடன் வேலைக்காரனிடம் ‘காபி கொண்டா’ என்கிறார். ‘கோடீஸ்வரன் ஆகிக் காட்டுகிறேன்!’ என்று சவால்விடும் நாயகன் இஸ்த்ரி போட்டும், பேப்பர் போட்டும், பால் விற்றும் கோடீஸ்வரனாகி அழகு வீட்டுக்குச் செல்கிறார். அப்போது வேலைக்காரன் காபி கொண்டுவர, ‘அடடே, காபி கைக்கு வர்றதுக்குள்ள கோடீஸ்வரனாயிட்டியே!’ என்று அழகு சொல்லும்போது சிரிப்பால் நம் அடி வயிறு வலிப்பது நிஜம்.
ஒட்டுமொத்தமாகத் தமிழ்ப் படங்களை, அதன் அபத்தமான காட்சிகளை சுட்டிக்காட்டி துகிலுரித்திருக்கிறார்கள். கடைசியில் புது வில்லன் வருவார் என எதிர்பார்க்கும் நிலையில், பரவை முனியம்மாவை ரவுடிகளின் பாஸ் போல காண்பித்து அங்கும் நையாண்டியை நிலை நாட்டியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்திற்கு வரும் வழக்கை சில நொடிகளில் விசாரிக்கும் நீதிபதி வி.எஸ் .ராகவன், ‘தீர்ப்பை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கலாம் என்றுதான் நினைத்தேன். அன்றைக்கு என் அக்கா வீட்டில் ஒரு விழா இருப்பதால் இப்பவே தீர்ப்பை சொல்லிடறேன்’ என்று தீர்ப்பு சொல்வது சூப்பர்ரக காமெடி.
தமிழ்ப் படங்களை கிண்டல் அடித்தே தமிழ்ப்படம் கொடுத்திருக்கும் இயக்குநர் அமுதன் துணிச்சலானவர் மட்டுமல்ல திறமையானவரும் கூட.
Tags: movie review, Review, Tamil Padam, தமிழ்ப் படம்
Sunday, 31 Jan 2010
கோவா : திரை விமர்சனம்

கோவா போவது இளைஞர்களின் கனவு. அப்படி கோவா போன மூன்று இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘கோவா’.
மதுரை பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் மூவரும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி, வெளியூரு சென்று சினிமா பார்த்த குற்றத்திற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். மூன்று பேரும் மறுபடியும் ஊரை விட்டு ஓடுகிறார்கள்.
மதுரையில் நண்பர் ஒருவன் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதைப் பார்ப்பவர்கள், கோவா போய் தாங்களும் வெளிநாட்டுப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று குருட்டுக் கணக்கு போடுகிறார்கள். அதன்படி கோவாவுக்குச் செல்கின்றனர்.
ஜெய், பாடகி பியாவை விரும்புகிறார். வைபவ், சிநேகாவிடம் சரண்டர் ஆகிறார். பிரேம்ஜி, வெள்ளைக்காரப் பெண்ணிடம் மனத்தை பறிகொடுக்கிறார். மூன்று பேரும தங்கள் காதலை ஜெயித்தெடுத்தார்களா என்பது மீதிக் கதை.
ஒரு மது - நடன மேடையில் தோன்றி விட்டு காணாமல்போகும் சிநேகா மீண்டும் எப்போது வருவார், யாருடன் ஜோடி சேருவார் என எதிர்பார்க்க வைக்கிறார். உல்லாச கப்பலுக்கு சொந்தக்காரரான அவர், பிரசன்னாவை அடித்துத் துரத்திவிட்டு வைபவ்வை திருமணம் செய்துகொள்வதும், கோபம் வரும் போதெல்லாம் வைபவ்வை அடிப்பதும்… சிநேகாவுக்கு வித்தியாசமான ரோல்தான்.
ஊர் அம்மன் கோயிலில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை வைபவ் சிநேகாவிடம் கொடுப்பதும் பிறகு, அவற்றை மீட்க கப்பலுக்குள் நுழைந்து போராடுவதும் திகிலுடன் கலந்த திருப்பு முனைகள்.
ஜெய் - பியா, வைபவ் - சிநேகா ஜோடிகளை விட பிரேம்ஜி அமரன் - வெள்ளைக்காரப் பெண் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் கதையை நகர்த்திய இயக்குநர் வெங்கட் பிரபு இடையில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியில் சுதாரித்துக்கொண்டு பிரமிப்பூட்டுகிறார். அவருக்குப் பக்கபலமாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் இருந்திருக்கிறார்கள்.
கோவா என்றாலே சரக்கு அடிப்பதும், சைட் அடிப்பதும்தானா என்று எழும் கேள்வியை அடக்காமல் இருக்க முடியவில்லை.
Tags: goa, movie review, Review, கோவா
Tuesday, 19 Jan 2010
ஆயிரத்தில் ஒருவன் : திரை விமர்சனம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மக்களுடன் தப்பிச் செல்லும் சோழ இளவரசனை கண்டுபிடிக்கும் கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்கள் படையெடுப்புக்குப் பிறகு, வியட்நாம் அருகிலுள்ள தீவு ஒன்றுக்கு மக்களுடன் ஓடுகிறான் கடைசி சோழன். அப்போது பாண்டியனின் குல தெய்வத்தையும் திருடிக்கொண்டு செல்கிறான்.
அவரையும் அந்த சிலையை தேடி ஆராயும் பலரில் தொல்லியல் ஆய்வாளர் பிரதாப்பும் ஒருவர். அவரும் நாடு திரும்பவில்லை. அவரைத் தேடி கண்டுபிடிக்க பாதுகாப்பு அதிகாரி ரீமாசென் தலைமையில் ரகசியப் படையை அனுப்புகிறது அரசு. அவர்களுக்கு வழிகாட்ட பிரதாப்பின் மகளும் இளம் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியா செல்கிறார். இவர்களுக்கு உதவி செய்ய செல்லும் கூலிப்படையின் தலைவனாக கார்த்தி.
காடு, மலை, கடல், பாலைவனவெல்லாம் தாண்டி செல்கிறது இந்த படை. அவ்வளவு எளிதாகத் தன்னைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வழியெங்கும் 7 ஆபத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறார் கடைசி சோழனாக வரும் பார்த்திபன். இதையெல்லாம் கடந்து சோழனின் இருப்பிடத்தை அடைகிறது ரீமாசென் தலைமையிலான படை. சோழனின் பிடியில் மூவரும் சிக்குகின்றனர். சோழ வம்சத்தைச் சேர்ந்த தூதர் எனச் சொல்லும் ரீமாசென் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும், சோழனிடம் சிக்கியுள்ள பாண்டியச் சிலையை மீட்க வந்தவர் என்பதும் பின்னர் தெரிகிறது. அவருக்கு சிலை கிடைத்ததா? சோழனும் அவனுடைய மக்களும் என்ன ஆனார்கள்? கார்த்தி ஆண்ட்ரியா என்ன ஆனார்கள் என்பதும் மீதிக்கதை.
ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்பட்டுள்ள கதையில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மூவரின் ரொமாண்டிக் காட்சிகளும் உண்டு. மாயாஜாலமும் பின்னுகிறது.
முன்பாதியில் கலகலவென செல்லும் கதை பின்பாதி யில் குழப்பக்குட்டையாக தேங்கி நிற்கிறது. மக்களை துன்புறுத்தும் சோழ மன்னன் பார்த்திபன் நல்லவனா கெட்டவனா? வறுமையில் வாடி வரும் அவனுடைய மக்கள் அதுவரை தாக்குப் பிடித்தது எப்படி? இருண்ட குகைக்குள் நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
ஆபத்துகளை கடந்து செல்லும் காட்சிகள் அற்புதம் என்றாலும், ஒரு போன் அடித்தால் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவார்கள் என்றால், அந்த ஆபத்துகளைச் சந்திக்காமலேயே அந்த இடத்திற்கு கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா குழுவும் வந்திறங்கிறங்கிருக்கலாமே?
கார்த்தி தனது நடிப்புத் திறமையை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார். ரீமாசென்னும் தன்னுடை பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. பார்த்திபனுக்கு வித்தியாசமான வேடம் என்றாலும் அவர் செய்யும் கொடூர சேட்டைகளை தாங்க முடியவில்லை.
பாடல்களில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பின்னணி இசையில் காணாமல் போய்விட்டார். ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.சந்தானத்தின் கலையும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
வித்தியாசமான முயற்சித்தான் என்றாலும் ஆயிரத்தில் ஒருவனை குழப்பமில்லாமல் கொடுத்திருந்தால் ஆயிரத்தில் ஒரு அபூர்வ இயக்குநராக செல்வராகவன் மாறியிருப்பார்..
Sunday, 3 Jan 2010
துணிச்சல் : திரைப்பட விமர்சனம்

அருண் விஜய்யும் ஷிவா முன்ஜாலும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அதேசமயம் ஒருவரை ஒருவரை கொல்லவும் துடிக்கிறார்கள். இதற்கு காரணம், ரமணாவின் சதித்திட்டம். ஷிவாவை ஒருதலையாகக் காதலிக்கிறார் ரமணா. ஷிவா முன்ஜால் அருண் விஜய்யை திருமணம் செய்யப் போவதை அறிந்து, தன்னுடைய காதலுக்கு குறுக்கே வந்தவர்களை தீர்த்துக்கட்ட எண்ணி ஒரு சதித் திட்டம் தீட்டுகிறார். அதில் ஒரு பகுதிதான் அருண் விஜய்யும் ஷிவா முன்ஜாலும் ஒருவரை ஒருவர் கொல்ல எடுக்கும் முயற்சிகள். ரமணாவின் சதித்திட்டம் ஜெயித்ததா, அதைப் பின்னுக்குத் தள்ளி அருண் - ஷிவா காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.
ஷிவாவை உருகி உருகி காதலிப்பதும், அவரை கொலை வெறியுடன் பார்ப்பதும், சண்டைக்காட்சிகளிலும் எதிரிகளை பந்தாடுவதும்… அருண் விஜய் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
அருண் விஜய்யை காதலிக்கும் போது அழகாக இருக்கும் ஷிவா முன்ஜால் கொலைகாரியாக மாறும்போது கோட்டை விடுகிறார். விட்டால் நடிப்பு என்ன விலை எனக் கேட்பார் போலிருக்கிறது.
ரமணா வில்லத்தனம் செய்கிறாரா அல்லது காமெடி கீமெடி செய்கிறாரா என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசை (ஏதோ) அமைத்துள்ளார். இளவரசு, கதா. கணேசனின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள், சுவாதிகாவின் கவர்ச்சி இவற்றின் துணையோடு மசாலா படம் தரும் முயற்சியில் கொஞ்சமாகத்தான் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஏ.மஜீத்.
Tags: Arun Vijay, Review, Shiva munjal, Thunichal, அருண் விஜய், திரைப்பட விமர்சனம், துணிச்சல், ஷிவா முன்ஜால்
Monday, 30 Nov 2009
நான் அவன் இல்லை - இரண்டு : திரை விமர்சனம்

ஜீவன் நடித்து வெளிவந்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இதிலும் அவர் பெண்களை ஏமாற்றும் கதைதான். ஆனால் இதில் நல்ல காரியத்திற்காகப் பெண்களை ஏமாற்றுகிறார் ஜீவன்.
இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா, பணக்கார இளைஞனை காதலித்து மணக்கிறார். இந்நிலையில் அவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதற்காக கணவரின் குடும்பத்தாரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு செல்கிறார். திடீரென நடக்கும் தாக்குதலில் சங்கீதாவின் கணவர் இறந்துவிட, அவரைக் கடத்துகிறது கணவனின் குடும்பம். கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாகக் கூறுகிறது. இதைப்பார்த்து இரக்கப்படும் ஜீவன், சங்கீதாவை மீட்க தேவைப்படும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.
அதற்காக பெண்களை ஏமாற்றி பணம், நகையை பறிக்கிறார். பணத்தை க்கொடுத்து சங்கீதாவை மீட்கிறார். ஏமாந்த பெண்களோ ஜீவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்றனர். ஜீவன் தப்பித்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
நான் அவன் இல்லை பாகம் ஒன்றில் கடைசியாக ஜீவன் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார். அதனால் இரண்டாம் பாகம், வெளிநாட்டில் இருந்து கதை தொடங்குகிறது. அதே கதைதான். ஆனால், கதாநாயகிகள் மட்டும் வேறு.
ஜீவனை தன்னுடைய கடவுளாக ஆராதிக்கும் பெண் துறவி ரக்ஷனாவிடம் ஏமாற்றப்பட்ட பெண்கள், ஜீவன் பற்றி விசாரிக்கிறார்கள். தாங்கள் ஏமாந்த கதையை அவரிடம் கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் சொத்து வாங்க நினைக்கும் லட்சுமி ராயிடம் கோடிஸ்வரன் போல நடித்து ஏமாற்றுகிறார் ஜீவன். ஜொள்ளு பார்ட்டிகளை பார்ட்டிக்கு அழைத்து, அவர்களை அவர்களுடைய மனைவிகளிடம் மாட்டிவிடும் ஸ்வேதா மேனனிடம் மாட்டிக்கொள்ளும் ஜீவன், தான் ஏமாற்றாமால் ஸ்வேதாவை ஏமாற்றி, பணம், தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிக்கிறார்.
தன்னுடைய வருங்காலக் கணவன் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் ஆந்திரப் பெண் ஸ்ருதியின் மனத்தில் அழகாக இடம் பிடிக்கிறார் ஜீவன். அங்கேயும் கை வைத்தப்பிறகு தப்பிக்கிறார். பெண் தாதா ரக்ஷனாவிம் பாடலாசிரியர் வாலியாக ஆக்ட் கொடுக்கும் ஜீவன், அவருடைய பாடல் வரிகளை சொல்லிக்காட்டி ரக்ஷனாவை பெண் துறவியாக மாற்றி விடுகிறார்.
ஜீவன் பெண்களை ஏமாற்றுவதற்கு இலங்கைப் பெண் சங்கீதாவின் கதையைக் காரணமாக்கி, ஜீவனின் ஏமாற்று வேலைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார் இயக்குநர் செல்வா.
.
சரி, இத்துடன் ஜீவனின் ‘நான் அவன் இல்லை’ கதையெல்லாம் முடிந்தது என்று பார்த்தால் கடைசியில் குளம் அருகில் நிற்கும் ஜீவனிடம் வரும் ஒரு பெண் தன்னை ‘வ்ள்ளி’ என அறிமுகம் செய்துகொள்ள, ‘என் பேர் முருகன்’ என்று ஜீவன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதைப் பார்த்தால் ‘நான் அவன் இல்லை’ பாகம் மூன்றுக்கு இப்போதே அடித்தளம் போட்டு விட்டது போலிருக்கிறது.
Tags: Jeevan, laxmi roy, movie review, naan avan illai 2, Review, swetha menon, திரை விமர்சனம், நான் அவன் இல்லை - இரண்டு
Tuesday, 10 Nov 2009
பாலைவனச்சோலை: திரை விமர்சனம்
நடிப்பு: நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன், கார்த்திகா, வெ.ஆ. மூர்த்தி
இசை: இ.கே. பாபி
இயக்கம்: எஸ் தயாளன்
நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். தெருமுனையில் உள்ள சுவரில் அமர்ந்து அரட்டை அடிப்பவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுகிறார் கார்த்திகா. அழகான அவருக்குள் அமர்ந்துள்ள இதயநோயை நண்பர்கள் அறியவில்லை. ஐவரும் கார்த்திகா தங்களை காதலிப்பாரா என்று காத்திருக்க, அவரோ நட்பு டன் பழகுகிறார். தொழிலில் நேரும் நஷ்டத்தின்போது ஐவருக்கும் ஆறுதல் கூறுகிறார். ஒரு கட்டத்தில் கார்த்திகா - நிதின் சத்யா இடையே காதல் மலர்கிறது.
இந்நிலையில் சஞ்சீவியின் தங்கை திருமணம் பணம் இல்லாமல் நின்றுவிடுகிறது. அதைக் கண்டு மனம வருந்தும் கார்த்திகா, தனது காதலை தியாகம் செய்து நிதினை சமாதானப்படுத்தி, சஞ்சீவியின் தங்கையை மணக்க வைக்கிறார். அனைவருக்கும் நல்லவரான கார்த்திகா இறுதியில் உயிர் விடுகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘பாலைவனச்சோலை’ படத்தைத்தான் மீண்டும் அதே பெயரில் எடுத்துள்ளனர். பழையப் படத்தின் நாயகி சுகாசினிக்கு அதில் புற்றுநோய் இருக்கும். இதில் கார்த்திகாக்கு இதய நோய். மற்றபடி காட்சிகளில் எந்த வித்தியாசமும் இல்லை.
நண்பர்களை எல்லாக் காட்சிகளிலும் காட்ட வேண்டும் என்ற நெருக்கடியால், படம் முழுக்க அவர்களை க் காட்டி கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர். சினிமாவில் நுழைய ஆசைப்படும் சத்யனின் நகைச்சுவை ஓகே. தங்கையின் திருமணம் பணம் இல்லாமல் நிற்பதைக் கண்டும் சஞ்சீவியின் முகத்தில் பதற்றம் இல்லாதது ஆச்சரியம். அதேசமயம் அங்கிருக்கும் நிதின் சத்யாவை மாடிக்கு அழைத்துச் சென்று தனக்கு இருக்கும் இதயநோயை சொல்லும் கார்த்திகா, சஞ்சீவியின் தங்கையை மணக்க சொல்லும் காட்சியில் நிதினும் கார்த்திகாவும் நடிப்பில் உருகிப் போகிறார்கள். முதலில் மறுத்தாலும் பின்னர் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் நிதினின் நிலையில் செண்டிமெண்ட் குறைந்துவிடுகிறது.
மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் கார்த்திகாவை காப்பாற்ற பணம் தராத அப்பா கே. ராஜனை மீறி,பீரோவில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் அபிநய், வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் ஜூனியராக வேலை பார்க்கும், வழக்காட தனக்கு ஒரு வாய்ப்பு தராததை சொல்லி புலம்பும சாம்ஸ் என மற்ற நண்பர் களும் சில காட்சிகளில் மின்னுகிறார்கள்.
கார்த்திகா தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளில் சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி கொண்டு மின்னுகிறார். இதயநோய் என்றதும் காட்ட வேண்டிய உருக்கத்தில் பாதி கூட அவர் காட்டவில்லை.
இ.கே. பாபியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். மூர்த்தியின் ஒளிப்பதிவு ஜாடிக்கேற்ற மூடியாக அமைந்திருக்கிறது.
பழையப் படத்தை புது நடிகர், நடிகைகளை வைத்து எடுத்திருக்கும் இயக்குநர் பற்றி சொல்ல புதிதாக எதுவும் இல்லை.
Tags: Palaivana Cholai, Review, அபிநய், இ.கே. பாபி, எஸ்.தயாளன், கார்த்திகா, சஞ்சீவ், சத்யன், சாம்ஸ், நிதின் சத்யா, பாலைவனச்சோலை, வெ.ஆ. மூர்த்தி
Thursday, 22 Oct 2009
ஆதவன் - திரைப்பட விமர்சனம்

வாரணம் ஆயிரம் சூர்யாவா ஆதவனில் நடித்திருப்பது? ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமான மசாலா சினிமா சூர்யாவையும் உள்ளே இழுத்துவிட்டு விட்டது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரும் நம்மை ஏமாற்றி விட்டார். புதுசாக எதாவது தருவார் என்று போனால் ரமேஷ்கண்ணாவின் அரதப் பழசான கதையை நவீன மசாலாவாக்கி கொடுத்திருக்கிறார். சரி நம்ம விமர்சனம் இருக்கட்டும்… கதைக்குள் போவோமா.
சூர்யா ஒரு கூலிக் கொலையாளி. காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கொல்வார்.
குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளை லவட்டும் கும்பல் தொடர்பான வழக்கு நீதிபதி முரளியிடம் வருகிறது. இதை அறியும் வில்லன் ராகுல்தேவ் முரளியைக் கொல்ல முடிவெடுக்கிறார். அந்துப் பொறுப்பு சூர்யாவிடம் வந்து சேர்கிறது. சூர்யாவின் கொலை முயற்சியில் இருந்து முரளி தப்பிவிடுகிறார். கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டை முடிக்க வேண்டுமே. உடனே சூர்யா, சமையல்காரன் வேடத்தில் நீதிபதி முரளி வீட்டில் நுழைகிறார். அங்குள்ள சரோஜாதேவி, நயன்தாரா போன்றோரின் அன்பையும் பெறுகிறார். கிடாருக்குள் அவர் வைக்கும் டைம்பாம் வெடித்துவிட, நயன்தாராவிடம் சிக்குகிறார். உடனே சூர்யா தான் தான் அந்த வீட்டில் இருந்து ஓடிப்போன நீதிபதியின் மகன் என்று சமாளிக்கிறார். அதுதான் உண்மை என்றும் தெரிய வருகிறது.
முரளி தன்னுடைய அப்பா என்பதை அறிந்ததும் வில்லனிடம் இருந்து அவரைக் காப்பாற்றும் பொறுப்பு அதுவரை வில்லனாக இருக்கும் சூர்யாவுக்கு வருகிறது. அவர் முரளியைக் காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்.
நடிப்பு, சண்டைக்காட்சிகள் என சூர்யா ஆதவனிலும் மின்னியிருக்கிறார். நயன்தாராவைப் பார்த்தால் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என கேட்க வேண்டும் போலிருக்கு. காதல் குழப்பத்தில் மெலிந்துவிட்டாரோ என்னவோ?
நகைச்சுவையில் வடிவேலுடன் அலெக்ஸ், சத்யன், மனோபாலா, ஈரோடு சவுந்தர் ஆகியோரும் இணைந்து கலகலப்பூட்டுகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் கணேஷ்ஷின் ஒளிப்பதிவும் இதம்.
கே.எஸ். ரவிக்குமார் - சூர்யா கூட்டணியிடம் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
Tags: Review
Tuesday, 20 Oct 2009
பேராண்மை - திரைப்பட விமர்சனம்

ஜெயம் ரவி ஐந்து நாயகிகளுடன் இணைந்து, நாட்டுக்கு எதிரானச் சதிகாரர்களை ஒழித்து தனது பேராண்மையை நிரூபிக்கும் திரைப்படம் தான் பேராண்மை..
அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் துருவன் நன்றாகப் படித்து, பல கலைகளையும் அறிந்து அதே பகுதியில் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., பயிற்சிக்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணி துருவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் துருவனை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவிகள். அவர்களுடைய கொட்டத்தை அடக்கி, அவர்களில் 5 பேரை காட்டுக்கு அழைத்துப் போகும் துருவன், இந்தியா அனுப்ப உள்ள ராக்கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் 16 பேர் கொண்ட அயல்நாட்டு சதிகாரர்களை இந்த 5 மாணவிகள் உதவியுடன் தீர்த்து கட்டுகிறார்.
துருவனாக ஹீரோ ஜெயம் ரவி கட்டுமஸ்த்தான ராணுவ வீரர் போல் மிரட்டியிருக்கிறார். இதுவரையில் மரத்தைச் சுற்றி வந்து, காதல் பாட்டு பாடிக் கொண்டிருந்தவரிடம் ஆண்மையை மிளிரச் செய்ததில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பங்கு அதிகம்..
நாயகிகள்ஐவர் என்றாலும் நாயகனைத் தவிர எவரும் மிளிரவில்லை. கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக ச்செய்திருக்கிறார்கள்என்ற திருப்தி மட்டுமே ஏற்படுகிறது
தவிர கதாநாயகனின் உயரதிகாரியாக வரும் பொன்வண்ணன், என்.சி.சி. டீச்சராக வரும் ஊர்வசி ஆகியோர் நல்ல தேர்வு.
ஜெயம் ரவியை ஜாதிப்பெயரைச் சொல்லி மட்டம் தட்டுவதுடன், அவருடைய கிராமத்தையே காட்டில் இருந்து காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவி குவிக்கும் வெற்றிகளை தனதாக்கிக் கொண்டு குடியரசுத் தலைவரிடம் விருதுபெறுகிறார். இதன் மூலம் மற்றவர் வெற்றியை தனதாக்கிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் சுயநலவாதிகளை தோலுரிக்கிறார் இயக்குநர். இது போன்று படமெங்கும் மேல்தட்டு, கீழ்த்தட்டு வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் வகையில் கம்யூனிசத் தத்துவங்களை இறைத்திருக்கிறார் இயக்குநர்.
கல்லூரி பியூனாக வரும் வடிவேலுவின் நகைச்சுவை வழக்கம் போல் நம்மை சிரிக்க வைக்கிறது.
பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் 16 வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம். கோலிவுட்டை இவர்கள் ஹாலிவுட்டாக்கிறார்கள். சமூக அவலங்களை வசனமாக்கியதன் மூலம் தன்னை பளிச்சென காட்டிக்கொள்கிறார் இயக்குநர் ஜனநாதன். வித்யாசாகரின் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகளும், ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், எடிட்டர் விஜயனின் பணியும் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளது.
பின்பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும், முன்பாதியிலும் இருந்திருந்தால் பேராண்மை இன்னும் பலமாக வெளிப்பட்டிருக்கும்.
பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் வேகமும், முன்பாதியிலும் இருந்திருந்தால் பேராண்மை இன்னும் பெரும் ஆண்மையாக இருந்திருக்கும். என்றாலும் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, படமாகியிருக்கும் பேராண்மை இயக்குனர் - நாயகன் - தயாரிப்பாளர் மூவரது துணிச்சல்களால் போற்றும் ஆண்மைதான்.
Tags: Review
Tuesday, 22 Sep 2009
கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ - திரை விமர்சனம்

தீவிரவாதம் என்கிற பெயரில் அப்பாவிகளைக் கொல்லும் தீவிரவாதக்குழுக்களுக்கு சவுக்கடி தரும் வகையில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை இந்தியில் இருந்து தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார் கமல்.
கட்டி முடிக்கப்படாத உயரமான கட்டடத்தின் உச்சியில் அமரும் கமல், நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் மாநகர காவல்துறை ஆணையரிடம் தொலைபேசியில் பேசுகிறார். நகரில் ஐந்து இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கேட்கும் தீவிரவாதிகள் நால்வரை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் அவை வெடிக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
காவல்துறை ஆணையர் மோகன்லால் கமலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். கடைசியில் கமலின் வேண்டுகோளின்படி நான்கு தீவிரவாதிகளை கமல் சொல்லும் இடத்திற்கு கொண்டுவருகிறார். ஜீப் ஒன்றில் அதில் மூவரை ஏற்ற, அந்த ஜீப் வெடித்து தீவிரவாதிகள் இறக்கின்றனர். மற்ற ஒருவனை காவல்துறையே கொன்றுவிட வேண்டும் என கமல் மீண்டும் எச்சரிக்க, அவருடைய நல்ல எண்ணம் புரிந்த ஆணையர் மிச்ச தீவிரவாதியை எண்கெளண்டரில் போட்டுத்தள்ளுகிறார். படம் நிறைவடைகிறது.
ஆணையர் மோகன்லால் திரும்பிப் பார்ப்பதாக கதை தொடங்குகிறது. ஒரே இடத்தில் இருந்தபடி கதையை சுவாரஷ்யப்படுத்துகிறார் கமல். தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நிதானமாகச் செயல்பட்டு காரியத்தைச் சாதிக்கும் அவர் தன்னுடைய எண்ணம் சமுக நன்மைக்கே என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார். தீவிரவாதத்தை ஒழிக்க அதே தீவிரவாதம் தான் வழி என புதுப்பாதை போடுகிறார்.
காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் தன்னைப் போன்ற சாமான்யனாலும் நாட்டுக்கு நல்லது செய்யமுடியும் என்பதையும், நல்ல நோக்கத்திற்காகப் போராடும் எந்த தனிமனிதனையும் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்த்தியிருக்கிறார் கமல்.
கமலைவிட அதிக வாய்ப்பு மோகன்லாலுக்குக் கிடைத்திருக்கிறது. கடமைத் தவறாத காவல்துறை அதிகாரியாக படம் முழுக்க மிடுக்காக வந்துச் செல்கிறார்.
லட்சுமி, ஸ்ரீமன், பிரேம்குமார், எம்.எஸ். பாஸ்கர் என சிறிய நடிகர் பட்டாளமும் இருக்கிறது. அவரவர் பணியை சமர்த்தாக செய்து விட்டுச்செல்கின்றனர்.
கமல் படத்தில் கமல் மட்டும் தான் முத்திரைப் பதிப்பாரா என்ன? அவருடைய வாரிசான ஸ்ருதி கமல் பின்னணி இசையில பின்னி எடுத்திருக்கிறார். இயக்குநர் சக்ரி டோலேட்டின் இயக்கம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் ரயிலைப்போல ஒரே இலக்கை நோக்கி வேகமாக பறக்கிறது. எந்த இடத்திலும் பிசிறடிக்காத விதத்தில மிக நேர்த்தியாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.
கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ உங்களையும் பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் என்பதால் பார்த்தே தீர வேண்டிய படமும் கூட.
Monday, 10 Aug 2009
அழகர் மலை - திரை விமர்சனம்

நடிப்பு: ஆர்.கே.,பானு, நெப்போலியன், வடிவேலு, லால், ஸ்ரீவித்யா
இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்
இசை: இளையராஜா
அழகர் மலை என்ற ஊரைச் சேர்ந்த நெப்போலியனும் லாலுவும் எதிர் எதிர் துருவங்கள்.ஆனால், இருவரும் திருமணம் செய்துகொள்ளாத பிரம்மச்சாரிகள். நெப்போலியன் தனது தம்பியான ஆர்கேவுக்கு திருமணம் செய்து பார்க்க நினைக்கிறார்.அதை தடுக்க நினைக்கிறார் லால்.
ஆர்கே வடிவேலுடன் சேர்ந்து குடி,கும்மாளம் என்று திரிகிறார்.அதனால் அவருக்கு அந்த ஊரில் பெண் தர யாரும் தயாராக இல்லை.
இந்நிலையில் லாலுவின் தங்கை ஸ்ரீவித்யா,ஆர்கே மீது கற்பழிப்பு புகார் தருகிறார். தம்பிக்காக, பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் நெப்போலியன்.அண்ணனின் நல்ல மனசைக் கண்டு நெகிழும் ஆர்கே திருந்துகிறார்.
திருவிழாவுக்கு தனனுடைய தோழி வீட்டுக்கு வரும் நாயகி பானு,ஆர்கே மீது காதலில் விழுகிறார். அவரை திருமணம் செய்து அழைத்து வருமாறு ஆர்கேவை சென்னைக்கு அனுப்புகிறார் அண்ணன் நெப்போலியன்.ஆர்கேவை தீர்த்துக்கட்டிவிட்டு வருமாறு, ஆள் அனுப்புகிறார் லாலு.
அப்புறம் என்னாச்சு… க்ளைமாக்சில் தெரிஞ்சுகோங்க.
எல்லாம் அவன் செயல் படத்திற்கு அடுத்ததாக தனக்கு தோதான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் ஆர்கே. அடிதடி, காமெடி, காதல் என்று எல்லா ஏரியாவிலும் தேர்ந்த நடிகராக மின்னுகிறார். அவர், வடிவேலுவுடன் சேர்ந்து பண்ணும் காமெடி கலாட்டா நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.
தாமிரபரணி திரைப்படத்திற்கு பிறகு நாம் அனைவரும் தேடிக்கொண்டிருந்த நாயகி பானு இதில் ரீ என்ட்ரி. அழகு மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார். அழகாக வில்லியாக ஸ்ரீவித்யா.
ஆர்கேவுக்கு சமமாக வருகிறார் வடிவேலு. அவருடைய லொள்ளில் திரையரங்கம் அதிர்கிறது. தண்ணி அடிப்பதை நிறுத்துவது பற்றியும் முதலிரவு பற்றியும் அவர் எடுக்கும் காமெடி வகுப்பு கலக்கல். காமெடி, கவர்ச்சி இரண்டும் வேண்டும் என்றால் இனி,வடிவேலுவின் ஜோடியாக வரும் சோனாவை கூப்பிடலாம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே இனிக்கின்றன என்றாலும் ‘கருகமணி, கருகமணி’ பாடல் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிற ரகம்.
இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தன்னுடைய வெற்றிப்பட்டியலில் அழகர் மலையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
































