Wednesday, 28 Jan 2009
பொய் ‘சத்தியமும்’ இந்திய பொருளாதாரமும்!
-சாரு நிவேதிதா-எழுத்தாளர், விமர்சகர்
ககடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவில் நடந்து வரும் சமூக மாறுதல்களை உற்று கவனித்து வரும் ஒருவருக்கு, இந்தியச் சமூகம், எந்த உயர்ந்த மதிப்பீடுகளும் அற்ற ஒரு மேம்போக்கான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்; இதன் காரணமாக, தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. ஜன., 16 அன்று கூட, சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தங்களின் ஆடம்பர வாழ்விலிருந்து சிறிதளவு சறுக்கல் ஏற்பட்டால் கூட அதைத் தாங்கிக் கொள்ளும் மனோபலம் இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்ன செய்வதன்றே தெரியாமல், தற்கொலைக்குத் துணிந்து விடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறை என்பது, மக்களின் ஞாபகத்திலிருந்தே மறக்கடிக்கப்பட்டு விட்டது.சமீப ஆண்டுகளில் நடந்த, தகவல் துறைப் புரட்சியின் காரணமாக, மனித உறவுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சிக்கலாகி விட்டது. ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, ஒரு பெண்ணும், ஆணும் கணிப்பொறி மூலமே அறிமுகமாகின்றனர். அதன் மூலமே பல மணி நேரம், “சேட்’ செய்து, அதிலுள்ள புகைப்படக் கருவி மூலமே ஒருவரை ஒருவர் நிழல் உருவங்களாகப் பார்த்து மகிழ்கின்றனர். திருமணம் கூட செய்து கொள்ளும் விபரீதமெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது!
மக்களிடையே சகிப்புத்தன்மை என்பது மறைந்து போனதால், மனநோய் முன்பை விட பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. இரவில் வேலை செய்து, பகலில் உறங்கும் புதிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இவர்கள் பணிபுரிவது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக. இந்தியாவின் இரவு, அமெரிக்காவின் பகல் என்பதால், இந்திய இளைஞர்கள் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு விட்டனர். இப்படி இந்தியச் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் விபரீதங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
தேகத்தின் எல்லா பாகங்களும் போதுமான போஷாக்கின்றி சூம்பிக் கொண்டிருக்கும் போது, வயிறு மட்டும் உப்பிக் கொண்டே போனால் என்ன ஆகும்? வெடித்து விடும். அது தான் இப்போது சத்யம் நிறுவனம் மூலம் நடந்துள்ளது. இன்றும், தனியார் பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்குச் சம்பளம் 2,000 ரூபாய். நகரத்தில் ஒரு கால் சென்டரில் அல்லது ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்.எப்படி உருப்படும் இந்த நாடு? இந்தியாவின் ஐ.டி., தொழில் வளர்ச்சியைப் பார்த்து நாடே வியந்தது. இந்தியாவின் உள்நாட்டு நிலவரம் தெரியாமல், உலகமும் வியப்படைந்தது. “இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா சூப்பர் பவராக உயர்ந்து விடுமாக்கும்’ என்றெல்லாம் எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒரு சீரிய சமுதாயத்தை உருவாக்கக்கூடிய பாடத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் உருவாக்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போன்ற, செயற்கையான இளைய சமுதாயம் ஒன்று தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சத்யம் நிறுவனம் உலகின் பெரிய ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றாகத் தெரிய ஆரம்பித்தது. அதன் தலைவரான ராமலிங்க ராஜு ஒரு மகா மனிதராகக் கருதப்பட்டார். உலகிலேயே ஐ.டி., துறையின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது ஐதராபாத். அப்போதைய ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவே ராமலிங்க ராஜுவைப் பார்க்க வேண்டுமானால், முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால் தான் அது முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான பில் கேட்சிலிருந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் வரை, ஐதராபாத் வந்து, ராமலிங்க ராஜுவைச் சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.ஆனால், அதே கால கட்டத்தில் தான் ஆந்திரப் பிரதேசத்தில் வறுமையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். அந்தக் காரணத்தினாலேயே, அப்போதைய தேர்தலில், சந்திரபாபு நாயுடு தோல்வியைத் தழுவ நேர்ந்தது.ஆனாலும், அந்தத் தோல்வியால் ஆட்சியாளர்களும், ஐ.டி., அதிபர்களும், அந்தத் தொழிலைச் சார்ந்திருந்தவர்களும் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை.பஸ்சில் பயணச்சீட்டு வாங்காமல் செல்லும் ஒருவரை பரிசோதகர்கள் பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் பாங்கை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஏதோ பயங்கரவாதியைப் பிடிப்பது போல் பிடிப்பர். ஐந்து ரூபாய் பயணச்சீட்டு வாங்காமல், பயணம் செய்தால், அது இங்கே கொடூரமான குற்றம்.
ஆனால், மக்கள் பணமான 100 கோடி ரூபாயைக் கையாடல் செய்தால், ஜாமீனில் வெளியே வந்து விடலாம். இதுதான், இந்தியச் சமூகத்தின் நடைமுறை.சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு செய்திருக்கும் மோசடி 8,000 கோடி ரூபாய். இதற்காக அவருக்கு என்ன தண்டனை கொடுத்து விடப் போகின்றனர்? மேலும், இவ்வளவு பெரிய மோசடியை ராமலிங்க ராஜு என்ற ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியுமா? ஆக, நடந்திருப்பது எல்லாமே ஒரு கூட்டு மோசடி.அரசுத் துறையோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும், மக்களின் மதிப்பீடுகள் உயர்வாகவும், அவர்களின் அணுகுமுறை நேர்மையாகவும் இருந்தால் தான் ஒரு சமூகம் முன்னேற முடியும்.சில ஆண்டுகளுக்கு முன், பாரிஸ் நகரின் காய்கறி அங்காடி ஒன்றுக்குச் சென்று இருந்தேன். அது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. நம் ஊரில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளும் அங்கே விற்பனைக்கு இருந்தன.
‘தமிழகத்திலிருந்து வருகிறதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. ப்ரெஞ்சுக்காரர்களுக்கு மாம்பழம் பிடிக்கும் என்பதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தனராம். அப்போது, பார்சலின் மேல் பகுதியில் மாம்பழங்களும் அதற்கு உள்ளே வெறும் இலை தழைகளும் சென்றதாம். ஒரு முறை, இருமுறை அல்ல… பல முறை அப்படி நடந்ததும், அவர்கள், இப்போது மொராக்கோவிலிருந்து மாம்பழங்களையும், மற்ற காய்கறிகளையும் வாங்கிக் கொள்கின்றனராம். அந்தக் காய்கறிகளைத் தான் நான் பார்த்தது.ராமலிங்க ராஜு செய்த மோசடியால், உலகம் முழுவதிலும் இந்தியாவின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
இதை மாற்ற வேண்டுமானால், நமது அணுகுமுறையும், மதிப்பீடுகளும் மாற வேண்டும். ஐந்து ரூபாய்க்கு பஸ் டிக்கெட் எடுக்காதவனுக்கு என்ன தண்டனை கிடைக்கிறதோ, அதை விட பல மடங்கு தண்டனை 5,000 கோடி ரூபாய் ஊழல் செய்தவனுக்குக் கிடைக்க வேண்டும். பணம் ஒன்றே குறி என்ற பார்வை மாற வேண்டும். இதெல்லாம் எப்போது நடக்கிறதோ, அப்போது தான், இந்தியா முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பதாகச் சொல்ல முடியும்.
நன்றி: தினமலர்
Tuesday, 27 Jan 2009
கொள்ளையடிக்க குத்தகைக்கு எடுத்தது போல நடக்கிறது அரசு
-வி.கல்யாணம்
சுதந்திர போராட்ட தியாகி, மகாத்மா காந்தியின் தனிச்செயலர்
காந்தி மேலும் கொஞ்ச காலம் உயிருடன் இருந்திருந்தால், உண்மையும், சத்தியமும், ஒப்புயற்வற்று உயர்ந்து நின்றிருக்கும், மதக்கலவரம் ஏற்பட்டிருக்காது. ‘சத்திய மேவ ஜெயதே’ என்கிற வாசகத்தின் பொருளுக்கு தகுந்த விளக்கத்தை, தனது பொது வாழ்க்கை மூலம் உணர்த்தி இருப்பார். மேலும், அவர் இந்திய அரசின் தலைமை பொறுப்பை ஏற்று, அவர் ஆணையிட்டால் எல்லாம் நடக்கும் என்ற அதிகாரம் அவர் கையில் இருந்திருந்தால், இப்ப நடக்கிற அவலங்கள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்.
நம் நாடு விடுதலை அடைந்தபோது, நாடெங்கும் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. காந்தி, தன்னுடன் கிழக்கு வங்க முக்கிய அமைச்சர் ஸஹித் சக்கரவர்த்தியை உடன் வைத்துக் கொண்டு அந்த பெரிய மதக்கலவரத்தை அடக்கினார். அவரது பேச்சை கேட்ட இருதரப்பு கலவரக்காரர்களும் பெட்டி பாம்பாக அடங்கி போயினர். கலவரம் நின்றது.
இந்தியாவைப் பற்றிய அவரின் கனவை அவருடன் இருந்தவர்களும், அவர் ஆதரவுடன் செயல்பட்ட காங்கிரஸ் பேரியக்கமும் அவர் வழி நடக்க தவறிவிட்டது. உண்மையும், சத்தியமும்தான் அனைத்தும் என அவர் நம்பினார். உலகமே அமைதி அடைய வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்தார்.
‘போரிட்டு வெற்றி அடைதல்’ அல்லது சரணாகதி அடைந்து அடிமையாதல், இந்த இரு தத்துவங்களின் கீழ் உருவான உலக சமுதாயமும், நாடுகளும் வியக்கும் வகையில், நியாயமான கோரிக்கைகளை சாத்வீக முறையில் எதிர்கொண்டு, ‘அஹிம்சா’ என்கிற ஒரு பலம் வாய்ந்த ஆயுதத்தை பயன்படுத்தி உலகத்தையே மாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை உலகுக்கு உணர்த்தியவர் காந்திஅடிகள். அவர், தன்னைப் போலவே பிறரையும் எண்ணினார். ஆனால், அவருடன் இருந்தவர்களில் மிக சிலரை தவிர பலர் அவரை ஏமாற்றிவிட்டனர்.
தென் ஆப்பிரிக்காவில் பிரஜா உரிமை போராட்டத்தில் நீதிபதியின் முன் போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட காந்தியடிகளை கண்ட வெள்ளைக்கார நீதிபதி, அவரை பார்த்து, இருக்கையில் இருந்து எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தியது உலகில் எந்த மனிதருக்கும் கிடைத்திருக்காது. இனியும் யாருக்கும் கிடைக்க போவதுமில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தபின் இந்திய விடுதலைக்கு பாடுபட்டார்; சுதந்திரம் கிடைத்து.
சுதந்திர இந்தியாவை பற்றிய அவரின் கனவு வித்தியாசமாகவே இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தை கலைந்துவிடலாம். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு காங்கிரஸ் மட்டும் காரணமல்ல, அனைத்து தரப்பினரும் ஆதரவும், ஒற்றுமையுமே காரணம் என்று சொல்லி பார்த்தார். லோக் சேவாஷங் என்ற பெயரில் சேவை ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பணிகளை மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு, சேவை செய்யும் நபர்களை அமர்த்தி, அதில் எல்லாரும் பங்குபெற்று நடத்தலாம் என அறிவுரை வழங்கினார். ஆனால், உடன் இருந்தவர்களில் பலர் இதற்கு உடன்படவில்லை. அதனால், அது நடைபெறவில்லை. அந்த கனவு நனவாகவில்லை.
ஆனால், காந்தி ஒருவேளை உயிருடன் கொஞ்சகாலம் இருந்திருந்து, அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி இருந்தால், மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு சொந்தமான பொது சொத்துக்களை, மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள் சுயநலத்தோடு கபளிகரம் செய்ய ஒதுபோதும் தைரியம் வந்திருக்காது.
மாறாக, எளிமையாக வாழ அரசியல்வாதிகளுக்கு கற்று கொடுத்திருப்பார். ஆசையை அறவே ஒழித்திருப்பார். இப்போது நடக்கிற கொலை, கொள்ளை, ஈவ்-டீசிங், குழந்தைகளை கடத்தி பணம் பறிப்பது போன்றவை ஒருபோதும் நடந்திருக்காது. இவை நடப்பதற்கான சூழ்நிலையை தவிர்த்திருப்பார். 50 சதவீதம் மக்கள், இன்னும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலை மாறியிருக்கும். இந்தியா குடியரசானதிலிருந்து இன்று வரை நடக்கும் ஊழல்கள் நடந்திருக்காது. சாதாரண மக்கள் அரசியல்வாதிகளை கண்டு அஞ்சும் நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.
இப்போது அரசியல்வாதிகளை மக்கள் மதிப்பது போலும், வணங்குவதும் போலுமே பாவனை செய்கின்றனர். உண்மையாக அல்ல. மக்களின் ஒரு சிலர், சுயநலத்துக்காகவே அவர்கள் பின் அலைகின்றனர். கோடி, கோடியாக செலவு செய்து தேர்தல்களில் போட்டியிடுவது, ஜெயித்த பின் அதிகாரத்தை பயன்படுத்தி பலமடங்கு சம்பாதிப்பது, சுருக்கமாக சொன்னால், நாட்டை ஐந்து ஆண்டுகள் கொள்ளை அடிக்க குத்தகைக்கு எடுத்தது போல், இப்போது நடைபெறுகிறது.
தற்போது நடந்து முடிந்த திருமங்கலம் இடைத் தேர்தல் ராணுவத்தை வைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் இருந்தது. இதற்காகவா நாம் சுதந்திரம் வாங்கினோம். இதே மதுரையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டால், எப்போதும் அவர்தான் ஜெயிப்பார். தேர்தலுக்கு போய் பிரசாரம் பண்ணாமலேயே ஜெயித்திருக்கிறார். இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், தனது ஊதியத்தில் பாதியை மாத்திரமே பெற்றுக் கொண்டார். சதாரா ஆசிரமத்தில் போய் தங்கினார். சாகும்போது கையில் காலணா கிடையாது. ‘லால்பகதூர் சாஸ்திரி தனக்கு அரசாங்கத்தில் தரும் ஊதியம் மக்களுக்கு சேவை செய்ய தரப்படுகிறது. அது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளுக்கு மிச்சம் இருக்குமேயானால், அந்த தொகையை குறைத்து கொள்ள வேண்டும்’ என தனக்கு வரும் ஊதியத்தை குறைத்து வழங்க அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார். அது போல், சர்தார் வல்லபாய்
பட்டேல், ராஜாஜி, கித்வாய், மவுலானா ஆசாத் ஆகியோர் வாழ்ந்தனர். தற்காலிக பிரதமராக இரண்டு முறை இருந்த குல்சாரிலால் நந்தா அரசியலை விட்டு ஓய்வு பெற்றபின் அவரிடம் காலணா இல்லை.
இதை எல்லாம் அரசியல்வாதிகள் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு தனி நபருக்கு எதற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் தோட்டம், ஊர் ஊராக பங்களா? ஒவ்வொரு பங்களாவுக்கும் 50 அறைகள், 100 அறைகள் எதற்கு? ஒவ்வொரு குடும்பம் பல்லாயிரம் கோடி சேமிக்க ஏன் ஆசை வரணும்.
காந்தியை பின்பற்றியவர்களில், காந்தியைப் போல சிலர் வாழ்ந்தனர். ஆனால், கோட்சே ரூபத்தில் காந்தியின் உயிரை எமன் பறித்துச் சென்றுவிட்டான். எந்த விலை கொடுத்தேனும் இந்திய பிரிவினையை தடுக்க காந்தி முயற்சித்தார். எதுவும் நிறைவேறவில்லை.
காந்தியின் உலகளாவிய பார்வையையும், உன்னதமான எண்ணத்தையும் புரியாத கோட்சே, அவசரப்பட்டு ஒரு வினாடியில் காந்தியை சுட்டுவிட்டான். அவர் உயிரும் ஒரு வினாடியில் பிரிந்துவிட்டது. அந்த கோட்சே செய்ததைவிட, இப்போதைய அரசியல்வாதிகள் நடந்து கொள்வது, குறிப்பாக காங்கிரசார்கள் அவருக்கு 60 ஆண்டுகளாக துரோகம் செய்து அணு, அணுவாக சித்திரவதை செய்து வருகின்றனர்.
காந்திக்கோ, உலக மக்கள் தான் சொத்து. அவரிடம் ஒரு கண்ணாடி, இரண்டு வேஷ்டி, கைக்கடிகாரம், செருப்பு, அவர் படுத்த படுக்கை இதை தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. அவரைப் போலவே அவரின் பிள்ளைகள். பேரக் குழந்தைகள் அனைவரும் காந்தியின் பெயரை சொல்லி எந்த உதவியையும் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கவில்லை. அவர் பெயரை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் உலா வருகிற செய்தியும் மக்களுக்கு தெரியும். இனிமேலாவது நாட்டையும், எதிர்கால சந்ததியினருக்காவது குறிப்பாக, இப்போது ஆட்டம் போடுகிற அரசியலவாதிகளின் சந்ததிகளை நினைத்துப் பார்த்து மாற வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் எப்படி இருந்தார். இப்போது என்ன ஆனார். பேராசையிலும், கேளிக்கைகளிலும் நாட்டம் கொண்ட ரோமப் பேரரசே ஒரு நாள் வீழ்ச்சி அடையவில்லையா? நாடு வாழ வேண்டும்; தர்மம் நிலைக்க வேண்டும்; காந்திய கொள்கைகள் பின்பற்றப்பட்ட வேண்டும்.
சுதந்திரத்திற்கு பின் ஐந்தரை மாதங்கள் மட்டுமே காந்தி உயிருடன் இருந்தார். அரசாங்கம் நடைபெறுகிற லட்சணத்தை பார்த்து இரவு நேரங்களில் கண்ணீர் வடித்திருக்கிறார். அஹிம்சாவை ஆயுதமாக எடுத்து காந்தி போரிட்டது போல், சாபத்தை ஆயுதமாக எடுத்து நான் போரிட்டு வருகிறேன்.
நான் தினமும் சபிக்கிறேன். வயதானவர்களின் சாபம் பலிப்பது உண்மையானால், 87 வயதான என் சாபம் பலிக்கட்டும். பொது சேவை என்று பெயரில், அரசியல் விசுவாச பிரமாணம் எடுத்துக்கொண்டு, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் சொத்துக்களை கபளிகரம் செய்பவர்கள் ஒருபோதும் உருப்படமாட்டார்கள்.
நரகம் என்ற ஒன்று உண்டு என்றால், அவர்கள் அங்குதான் செல்வர். அவர்கள் குறுக்கு வழியில் சம்பாதித்த சொத்து, அவர்கள் சந்ததிக்கு கிடைக்காது என சாபம் விடுகிறேன்.
நன்றி: தினமலர்
Friday, 23 Jan 2009
இலங்கைத் தமிழர் பிரச்னை: சோனியாவுக்கு பழ. நெடுமாறன் கடிதம்
பாராமுகம் ஏனம்மா?
-பழ. நெடுமாறன்

மதிப்பிற்குரிய சோனியா காந்தி அவர்களே! உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பராம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும். இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும்.
மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருநத நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்து கொண்டிருக்கிறீர்கள்.
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 37 ஆணடு காலமாகப் பதவி வகித்து உள்ளனர். நேருவின் குடும்பம் நாட்டுக்குச் செய்த தியாகத்தை மதித்து மக்கள் அளித்த பரிசு இதுவாகும்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆசிய - ஆப்பிரிக்க நாடுகல் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தந்தது. நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது உலகெங்கும் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்தார்கள். ஆனால், அவர்கள் வழி நடத்திய கட்சிக்குத் தலைவராக விளங்கும் நீங்கள் அண்டை நாடான இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதற்கு மெளன சாட்சியாக விளங்குவது காலத்தின் கோலம்தான்.
இந்திரா காந்தி பதவியில் இருந்த காலத்திலும் பதவியில் இல்லாத காலத்திலும் ஈழத் தமிழர் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறைகளை இன்றைக்கும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
1977ம் ஆண்டில் காங்கிரஸ கட்சி தேர்தலில் தோற்று இந்திரா பதவியை இழந்திருந்த நேரம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அ.அமிர்தலிங்கம் சென்னைக்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துக் தங்கள் பிரச்னைக்கு அதரவு திரட்டினார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். என்னையும் அவர் சந்திக்க விரும்பியபோது உடனடியாகச் சென்று சந்தித்தேன். ஈழத் தமிழர் பிரச்னை குறித்து விரிவாக எனக்கு எடுத்துக் கூறினார். அப்போது நான் அவரிடம் ‘நாங்களும் தமிழர்கள் என்ற முறையில் முற்றிலுமாக உங்களை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் எங்கள் கையில் எந்த அதிகாரமும் இல்லை. எனவே நீங்கள் தில்லிக்குச் சென்று அகில இந்தியத் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது நல்ல விளைவைத் தரும்’ என்று கூறினேன்.
தில்லியில் யாரையும் தனக்குத் தெரியாதால் அதற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது நானும் சம்மதித்தேன். உடனடியாக இந்திரா காந்தியிடம் தொடர்பு கொண்டு பேசி அவரது ஒப்புதலையும் பெற்றேன். பின்னர் அவர் குறிப்பிட்ட தேதியில் அமிர்தலிங்கம் தம்பதியினரை தில்லிக்கு அழைத்துச் சென்று இந்திராவைச் சந்திக்க வைத்தேன். சுமாரி 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் அமிர்தலிங்கம் கூறியவற்றுக்குப் பொறுமையாக செவி சாய்த்த இந்திரா, அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுவது முக்கியம் என்று கூறியதோடு முக்கிய நாடுகளில் யார்யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். சர்வதேச ஆதரவு திரளும் போது இந்தியா தலையிடுவது எளிதாகும். அதற்கு முன்பாக தலையிட்டால் பெரிய நாடான இந்தியா சிறிய நாடான இலங்கையை மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழும். எனவே அதற்கு இடமளிக்காத வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையெல்லாம் தெளிவாக எடுத்துக் கூறினர். ஒரு பேராசிரியை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல அவர் அன்று கூறியதையெல்லாம் அமிர்தலிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார்.
பிறகு என்னை அழைத்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அமிர்தலிங்கத்தை அதில் பேச வைக்க வேண்டும். அதற்கானவற்றை உடனடியாகக் செய்யும்படி அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ஏ.ஆர். அந்துலேவிடம் கூறும்படி பணித்தார். அன்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தங்கள் பிரச்னையை விளக்கி அமிர்தலிங்கம் முதலில் பேசினார். பிறகு பல தலைவர்களும் பல கேள்விகளைக் கேட்டனர். எல்லாவற்றிற்கும் அமிர்தலிங்கம் திருப்திகரமான பதிலை அளித்தார். நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருநத ஓய்.பி.சவான் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
”நீங்கள் இநதியாவிலிருந்து சென்று குடியேறியவர்கள். அங்கே போய் தனிநாடு கேட்பது எந்த வகையில் நியாயமானது” என அவர் கேட்டார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்கக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர் கேட்டதற்கு அமிர்தலிஙகம் தக்க விடையளித்தார்.
பின்னர் இரவில் இந்திராவைச் சந்தித்து நடந்த விவரங்களை நான் தெரிவித்தேன். சவான் கேட்ட கேள்வியை கூறிவிட்டு அண்டை நாட்டின் பிரச்னை பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளாத இவரை வெளிநாட்டு அமைச்சராக வைத்திருந்தீர்களே எனக் கேட்டபோது இந்திரா வாய்விட்டுச் சிரித்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
பயிற்சி பெற்ற இந்தப் போராளிகளைக் கொண்டு சிங்கள அரசுக்குப் பாடம் கற்பிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் எதிர்பாரதவிதமாக இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக வேண்டாத விளைவுகள் பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்டன. இந்திரா காலத்தில் இந்திய மண்ணில் ஈழப்போராளிகளின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசோ இந்திய அரசோ அவற்றைத் தடை செய்யவில்லை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? படுகொலை செய்ய இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது. ஆலோசனை வழங்க ராணுவ அதிகாரிகளை அனுப்புகிறது. இலங்கையில் நடைபெறும் போரைப் பின் நின்று நடத்துவது இந்திய அரசுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இந்தியாவின் அருகில் தெற்கே இருக்கக்கூடிய இலங்கை நாட்டில் எந்த அன்னிய வல்லரசும் பேரழிவைத் தரும் என்பதை இந்திரா தெளிவாக உணர்ந்து இருந்தார். அதற்கு ஏற்ப இலங்கை அணுகுமுறையை அமைத்துக்கொண்டார்.
இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தானை ராணுவ ரீதியில் வலிமையாக்க அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுதங்கள் அள்ளி அள்ளித் தந்தது. பிரதமர் நேரு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அந்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற வாக்குறுதியை அமெரிக்கா அளித்தது. ஆனால் என்ன நடந்தது? இநதியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து முறைகள் நடைபெற்ற போர்களில் அமெரிக்க ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன. இந்த உண்மையை சோனியா காந்தியே நினைத்துப் பாருங்கள்.
இன்று பாகிஸ்தான் வழியாக இலங்கையில் குவிக்கப்படும் அமெரிக்க ஆயுதங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களை ஒழித்துக்கட்டிய பிறகு, இந்தியாவை மிரட்டுவதற்குப் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு முன்னோட்டம்தான் இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை குறிவைத்துச் சுடுவதாகும்.
உங்களால் நியமிக்கப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. அவர் அரசின் உயர் அதிகாரிகளான எல்.கே. நாராயணன், சிவசங்கர மேனன் போன்றோர்களுக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை. மனிதநேயமும் இல்லை. இத்தகைய அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளின் பேரில் பிரதமர் மன்மோகன் வழி நடத்தப்படுகிறார். இந்தியாவின் தென்பகுதியில் எதிர்காலத்தில் வரப்போகும் அபாயத்தை பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் அங்கு காலூன்றிவரும் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் திட்டங்கள் குறித்தும் கவலையில்லாமல் இவர்கள் பேரினவாதிகளின் கொலை வெறிக்கு துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அப்பாவி அராபிய மக்களை இஸ்ரேலியர் கொன்று குவிப்பதற்கு எதிராக நீங்களும் உங்களின் கண்டன அறிக்கைகளை கொடுத்துள்ளீர்கள். அதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். ஆனால் மிக அருகே இருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை பொறுத்துத்தான் தமிழகத்தில் உங்கள் கட்சியின் எதிர்காலம் அமையும்.
தங்களின் கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இந்திராவோடு மிக நெருங்கிப் பழகிய எனக்கு அது தீராத மனவலியை அளித்தது. அதே வேளையில் இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர எண்ணுகிறேன். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது உடனிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அங்கிருந்து நழுவி விட்டார்களே ஏன் என்பதனை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா? உங்கள் கட்சியைச் சேராதவரும் தோழமைக் கட்சியை சேர்ந்தவருமான தா.பாண்டியன் படுகாயம் அடைந்து பல மாதங்கள் மருத்துவமனையில் கிடந்தாரே. இன்னமும் அவரது உடலில் குண்டுத் துணுக்குகள் பதிந்துள்ளனவே, அத்தகைய ஒருவரே ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற்றுவதற்குக் குரல் கொடுக்கிறார். ஆனால் தங்கள் கணவர் ராஜீவின் உயிரை விடத் தங்கள் உயிரைப் பெரிதாக நினைத்து ஓடி ஒளிந்து கொண்ட தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளை நம்பி நீங்கள் செயல்படுவது சரிதானா?
1978ம் ஆண்டு மதுரைக்கு வந்த இந்திராவைச் சூழந்துகொண்டு திமுகவினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியபோது அவர் மீது ஓர் அடியும் விழாமல் பாதுகாத்தவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். தலைவரின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்தாவது தலைவரின் உயிரைத் காப்பாற்றுவது ஓர் உண்மைத் தொண்டனின் கடமையாகும். ஆனால் தங்கள் கணவர் ராஜீவைச் சூழ்ந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் குண்டுவெடிப்பின்போது மட்டும் மாயமாய் மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். அவர்களின் வார்த்தைகளை நம்பி ஈழத் தமிழர்களின் பிரச்னையில் தவறாகச் செயல்பட வேண்டாமென உங்களை நான் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோதே அந்த இளைஞர்களுக்குக் கருணை காட்டும்படி நானும் மற்ற நண்பர்களும் உங்களுக்கு விடுத்த வேண்டுகோளை மதித்து அவர்களுக்குக் கருணை காட்டும்வகையில் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தீர்கள். அதற்காக நானும் மற்ற நண்பர்களும் தில்லியில் உங்களைச் சந்தித்து நன்றி கூறினோம்.
அந்தப் பெருந்தன்மையான உள்ளம் உங்களிடம் நிறையவே உள்ளது. சீக்கியர்களின் பொற்கோவிலுக்குச் சென்று சீக்கிய சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்திராவின் படுகொலையை ஒட்டி நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்தப் பேருள்ளத்தை சீக்கிய சமூகம் பாராட்டியது. அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரைப் பிரதமர் நாற்காலியில் அமர வைத்து உள்ளீர்கள். இப்படியெல்லாம் நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டும் நீங்கள் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறீர்கள்.
சிங்கள வல்லரக்கர்களால் தினமும் கொன்று குவிக்கப்படும் எங்கள் சகோதரர்களின் பிரச்னையில் தலையிட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள். இந்திரா காந்தியால் மகனே என அழைக்கப்பட்ட ஒருவன் எழுதும் இந்த கடிதத்திற்கு உரிய மதிப்புக் கொடுத்து இலங்கை பற்றிய தங்களின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி: தினமணி நாளிதழ்
Sunday, 4 Jan 2009

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதம் - சாருநிவேதிதா
தமிழர்களிடம் காணக் கிடைக்கும் ஒரு வினோதமான பழக்கம் என்னவென்றால், உலகத்திலேயே சிறந்த மொழி, சிறந்த கலாச்சாரம், சிறந்த கலை, சிறந்த இலக்கியம் – இன்னும் என்னென்ன சிறந்த விஷயங்கள் உண்டோ அத்தனை சிறந்தவைகளுக்கும் தாங்களே சொந்தக்காரர்கள் என்று நம்புவது. சமயங்களில் சில கவிஞர்களும் தமிழர்களின் இந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு வளர்ப்பதுண்டு. கவிஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்றோ, இதே கவிஞர் சீனாவில் பிறந்திருந்தால் ‘இந்த உலகத்திலேயே இனிமையான மொழி சீன மொழிதான் ’ என்று சத்தியம் செய்யக் கூடியவர் என்றோ நினைத்துப் பார்க்கும் அளவுக்குத் தமிழர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல.
உலகில் எந்தப் பகுதியிலும் அறிஞர், நாவலர், கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர், நடிகர் திலகம், கவிப் பேரரசு போன்ற பட்டங்களை நாம் காண இயலாது. காவியங்களில் காணக் கூடிய அளவுக்கு சாகசத்தன்மைகளைக் கொண்டிருந்த மாபெரும் புரட்சிக்காரனாகவும், இன்றைக்கும் உலகிலுள்ள புரட்சி இயக்கங்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியவனாகவும் விளங்கும் சே குவேராவையே யாரும் புரட்சித்தலைவன் என்று அழைத்தது கிடையாது. ஆனால் தமிழ் நாட்டில் சினிமாவில் திறமையாக ஸ்டண்ட் செய்பவர்கள்தான் புரட்சிக்காரர்கள்.
தமிழ்நாட்டில் உருவாகும் எந்த ஒரு பிரபலமான நபரும் இந்த இமேஜ் என்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருந்ததில்லை. சினிமாவை எடுத்துக் கொண்டால், சிவாஜி. (எம்ஜியார் அரசியலுக்குள் போய் விட்டதால் அவரை விட்டு விடுவோம்). சிவாஜியைத் தமிழ்நாடே நடிகர் திலகம் என்று கொண்டாடியது. ஆனால் அவருடைய பெயர் தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே தெரியவில்லை. உண்மையிலேயே உலகின் தலைசிறந்த எந்த நடிகனோடும் ஒப்பிடும் அளவுக்கு நடிப்புத் திறமை கொண்ட கணேசன் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே தரத்தில் மிகத் தாழ்ந்த வர்த்தக சினிமாவிலேயே தொடர்ந்து நடித்ததன் காரணமாக இன்று சாதாரண ஆட்களால் கூடப் பகடி செய்யப் படும் அளவுக்கு கேலிப் பொருள் ஆகி விட்டார். தனது கடைசிக் காலத்தில் அவர் நடித்த ’ முதல் மரியாதை ’ என்ற படம் மட்டுமே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது என்றால் அது அவரது நீண்ட கால சினிமா அனுபவத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்!
காரணம், உலகின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக விளங்கினாலும் சிவாஜிக்கு உலகின் தரமான சினிமா பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்காதது மட்டும் அல்ல; சினிமா மேதைகளுள் ஒருவராக உலகமே கொண்டாடும் சத்யஜித் ரேயை சிவாஜியும், எம்ஜியாரும், ராஜ் கபூரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள் என்பது வரலாறு.
சிவாஜியை அடிக்கடி பலரும் மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்லன் ப்ராண்டோ A Street Car Named Desire (1951), Julies Ceasar (1953), On The Waterfront (1954) போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களைத் தந்து கொண்டிருந்த போது சிவாஜி எதிர் பாராதது, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, மனோகரா போன்ற வர்த்தக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். ’ மனோகரா தமிழ் சினிமாவின் முக்கியமான படமாயிற்றே? ’ என்று சிலர் கேட்கலாம். அந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய ’ பொறுத்தது போதும் பொங்கியெழு ’ போன்ற வசனங்களும், பின்னர் அவர் முதல் மந்திரியாக ஆனதும் திராவிட இயக்க வரலாற்றில் வேண்டுமானால் முக்கியமான நிகழ்வாக இருக்கலாமே ஒழிய உலக சினிமா வரலாற்றில் இது போன்ற படங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. கவனியுங்கள். மனோகரா வெளியான ஆண்டு 1954. இதற்கு அடுத்த ஆண்டு வெளியான சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி உலக சினிமாவின் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பின்னணியை அறிந்து கொண்டால்தான் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் இடத்தையும், சினிமாவின் உலக நாயகனாக விரும்பும் அவரது ஆர்வத்தில் இருக்கக்கூடிய அசட்டுத்தனத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
கமல்ஹாசன் தனது முன்னோடியான சிவாஜி கணேசனின் பாதையையே பின்பற்றுவதுதான் அவரது முயற்சிகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் கணேசனுக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம், கமலுக்கு உலக சினிமா தெரியும் என்பதுதான். இருந்தாலும், இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. காரணம், கமல் தனது உலக சினிமா அறிவைத் தமிழ் சினிமாவை செழுமைப் படுத்துவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, நகலெடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார். உதாரணம், நாயகன் (1987) படத்தில் கமல் தலையைக் கோதும் ஸ்டைல் கூட காட்ஃபாதரில் (1972) மார்லன் ப்ராண்டோ தனது தலையைக் கோதும் மேனரிஸத்திலிருந்து அப்பட்டமாக நகல் எடுத்துக் கொண்டதுதான். நாயகனோடு முடியவில்லை இந்த நகல் சமாச்சாரம்; தேவர் மகனிலும் (1992) அது தொடர்ந்தது.
கமலின் அவ்வை சண்முகி (1996) ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs. Doubtfire என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கமலின் உலக சினிமா அறிவு இப்படி நகலெடுக்க மட்டும்தான் பயன்படுகிறது என்றால், தான் வாழும் சமூக, அரசியல், கலாச்சார சூழலை அவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்; எவ்வாறு தனது படங்களில் கையாளுகிறார் என்று பார்த்தால் அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. குருதிப் புனலில் (1996) வரும் நகஸல் போராளி ஒரு சிறுமியைப் பாலியல் நோக்கத்துடன் பார்க்கிறான். அவனுடைய மனைவி ஒரு விபச்சாரியைப் போல் சித்தரிக்கப் படுகிறாள்.
வன்முறையைத் தங்கள் வழியாகக் கொண்டு போராடும் தீவிரவாதிகளோடு ஒருவருக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அந்தத் தீவிரவாதிக்கும் ஒரு ஜேப்படித் திருடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மனித வெடிகுண்டாக மாறி மக்களைக் கொல்லும் ஒரு தீவிரவாதி நிச்சயமாக ஒரு சமூக விரோதிதான். ஆனால் அவன் தான் நம்பும் ஒரு கொள்கைக்காகத்தானே தன்னையே சாகடித்துக் கொள்ளத் தயாராகிறான்? அப்படியானால் அவன் ஒரு ஐடியலிஸ்ட்தானே? இந்தப் புரிதல் இல்லாமல் ஒரு சராசரி மனிதனின் பார்வையோடு அணுகியதால்தான் குருதிப் புனலில் வரும் போராளி கேவலமான முறையில் சித்திரிக்கப் பட்டிருகிறான்.
சராசரி மனிதனின் பார்வை என்றால் என்ன என்ற சந்தேகம் எழலாம். இதோ உதாரணம்: வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியா சிறப்பாக இருந்தது; ராஜாங்கம் நன்றாக நடந்தது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும். (பாகிஸ்தானில் ஏதோ ரொம்ப அற்புதமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது போல் இவர்களுக்கு நினைப்பு!)
இப்படிப்பட்ட சராசரி மனிதனின் அணுகுமுறைதான் கமலின் பல்வேறு படங்களில் வெளிப்படுகிறது. தசாவதாரத்தில் வரும் முஸ்லீம் பாத்திரம் மற்றொரு உதாரணம்.
கமல் படங்களில் கையாளப்படும் சமூகப் பிரச்சினைகள் சராசரித் தன்மையோடு இருப்பதன் மற்றொரு காரணம், கமல் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள். உதாரணமாக, தசாவதாரத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் அமிதாப் பச்சன் நடித்து உலக அளவில் பேசப்பட்டு வரும் லாஸ்ட் லியர் வெளியாகியுள்ளது. இதை இயக்கியவர் ரிதுபர்னோ கோஷ். வங்காள மாற்று சினிமாவில் ( alternate cinema) ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பெயர். அமிதாப் பச்சன் என்ற இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரிதுபர்னோ கோஷ் என்ற யாருக்குமே தெரியாத ஒரு வங்காள இளைஞனை நோக்கி ஓட வேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் சினிமா பற்றிய அமிதாபின் அக்கறை.
கமல்ஹாசனால் இப்படி ஒரு இளைஞனிடம் பணியாற்ற முடியுமா? பிரச்சினை என்னவென்றால், கமலுக்கு இளைஞர்களுடனும், சம காலத்தோடும் தொடர்பே அற்று விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (ஆனால் கமலின் நண்பராக இருந்த சுஜாதாவின் எழுத்து அவரது கடைசிக் காலம் வரை இளமைத் துடிப்புடனும், சமகாலத் தன்மையோடும் விளங்கியது என்பதை இங்கே நாம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்). ஏஸி காரில் செல்லும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு டவுன் பஸ்ஸில் செல்லும் கொடுமை பற்றி ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்குக் கமலும் தனது சமகாலத்திலிருந்தும், சமகாலப் பிரச்சினைகளிலிருந்தும் அந்நியமாகி விட்டார் என்று அவரது படங்களிலிருந்து தெரிகிறது.
விருமாண்டி என்ற படத்தையும், இதே கதைக் களனைக் கொண்ட பருத்தி வீரனையும் எடுத்துக் கொள்வோம். உலக சினிமாவை அறிந்த கமல்ஹாசனின் ’ விருமாண்டி ’ ஒரு சராசரி கமர்ஷியல் படமாகவும், உலக சினிமா பற்றி எதுவுமே அறியாத அமீரின் ’ பருத்தி வீரன் ’ ஒரு கலைப் படைப்பாகவும் உருவானது எப்படி? சினிமாக்காரர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான அதிர்ஷ்டமா? இல்லை. கமல் மட்டும் அல்ல; எத்தனையோ ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த யாருமே அமீர் உருவாக்கியது போன்றதொரு கலைப் படைப்பை உருவாக்கியதில்லை என்பதுதான் நிஜம். அமீர் மட்டுமல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய பாரதிராஜாவும் கூட உலக சினிமா புத்திஜீவி அல்ல என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தனக்கு இலக்கியமும் தெரியாது என்று மற்றொரு அதிர்ச்சியையும் தருகிறார் அமீர். மறுபடியும் பாரதிராஜா கதைதான். அவரும் சமகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் அல்ல. ஆனால் கமலுக்கு ஞானக் கூத்தனிலிருந்து மனுஷ்ய புத்திரன் வரை நண்பர்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஒரு கலைப் படைப்புமே வெறும் அறிவினால் மட்டுமே உருவாகக் கூடியதல்ல. ’ அப்படியானால் வேறு என்ன தேவைப் படுகிறது? வாழ்க்கை பற்றிய கூரிய அவதானமா? ’ என்றெல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் அது ஒவ்வொரு கலைஞனுக்கும் வேறு படுகிறது.
பருத்தி வீரனைப் போல் அல்லாமல் விருமாண்டி தோற்றுப் போனதற்கு மற்றொரு காரணம், கமலின் தன்முனைப்பு. விருமாண்டியில் மட்டும் அல்ல; கமலின் எல்லாப் படங்களிலுமே அவர் தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்கள் அடிபட்டுப் போய் கமல்ஹாசன் என்ற பிரம்மாண்டமான நட்சத்திரமே நம் முன் ரூபமெடுக்கிறார். இதனாலேயே அவருடைய நோக்கம் வெற்றியடையாமல் போகிறது. ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இமேஜ் பொறி என்று குறிப்பிட்டேன். இப்போது ரிதுபர்னோ கோஷுக்கு வருவோம். யாருக்குமே தெரியாத இந்த வங்காள இளைஞனின் இருப்பிடத்தை நோக்கி மும்பையிலிருந்து கொல்கொத்தா நோக்கிச் செல்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக கேட்டைக் கூட ரிதுபர்னோ கோஷ் போன்ற ஒரு இளம் இயக்குனரால் தொட முடியுமா என்பது சந்தேகம்.
கமலும் அவரது சகாவான ரஜினியைப் போலவே நடிகர் என்ற இடத்திலிருந்து நட்சத்திரம் என்ற தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். 1978- ஆம் ஆண்டு தீபாவளி அன்று ஐந்து படங்கள் வெளியாயின. அதில் அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா? என்ற மூன்று படங்களில் கமல் ஹீரோ. ஆனால் அதே நாளில் வெளிவந்த பாலச்சந்தரின் தப்புத் தாளங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் கமல் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளனாக வருகிறார். இதை கமல் அவரது குருநாதரான பாலச்சந்தருக்காக அப்போது செய்தார். இப்படி தனது ஹீரோ அந்தஸ்தைத் துறந்து விட்டு ஒரு நடிகனாக மட்டுமே கமல் இப்போது இதைச் செய்யத் துணிவாரா? அமிதாப் செய்கிறார்.
மேலும் ஒரு விஷயம், கமலின் குருநாதர் பாலச்சந்தர் பற்றி. நேற்று வந்த ரிதுபர்னோ கோஷ் பற்றியும், ஷ்யாம் பெனகலின் சமீபத்திய படம் வெல்கம் டு சஜ்ஜன்பூர் பற்றியும், சந்தோஷ் சிவனின் தஹான் பற்றியும் உலக சினிமா அரங்கில் விவாதிக்கிறார்கள். காரணம், இவர்கள் சினிமாவை ஒரு கலையாக வெளிப்படுத்தியவர்கள். ஆனால் பாலச்சந்தர்? தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்காவது இந்த இயக்குனர் சிகரத்தின் பெயர் தெரியுமா? பாலச்சந்தர் பற்றி 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெங்கட் சாமிநாதன் கூறினார், ”பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சுதான் பாலச்சந்தர்” என்று. இப்படிப்பட்ட ஒருவரை குருநாதராக வரித்துக் கொண்டு எங்கிருந்து சீரியஸ் சினிமாவை உருவாக்குவது?
இப்போதும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை. கமல்ஹாசன் தன்னை ஒரு நட்சத்திரம் என்பதை மறந்து விட்டு, அமீர், சசிகுமார் போன்ற இயக்குனர்களிடம் தன்னை ஒரு அறிமுக நடிகனைப் போல் முழுமையாக ஒப்படைத்தால் உலக அளவில் கவனத்தைத் திருப்பக் கூடிய கலைப் படைப்புகளை உருவாக்க முடியும்.
இறுதியாக, இவ்வளவு விமர்சனங்களையும் கமல்ஹாசன் என்பதால் மட்டுமே திறந்த மனதுடன் முன் வைத்திருக்கிறேன் ; அவரை எனது சஹ்ருதயர் என்று கருதுவதால். வேறு நடிகர் என்றால் ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டேன்.
நன்றி : இந்தியா டுடே, http://www.charuonline.com
Monday, 29 Dec 2008
நல்லாதான் சொன்னாங்க
காவல்துறை செயல்பட வேண்டும்; செயல்பட விடப்பட வேண்டும்.
-ஆர். நடராஜ், தலைமை இயக்குனர் - சிறைத்துறை

உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
-மும்பையில் நடந்த கொடூர தாக்குதல் தொடர்பாக பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பழிசுமத்தி தங்களைப் பொறுத்தவரையில் தவறொன்றுமில்லை எனறு கூறியது மேற்சொன்ன பாடலைத்தான் நினைவுபடுத்தியது.
ஒவ்வொரு அரசு அமைப்பும் தான் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாக தற்காப்பு தன்னிலை விளக்கங்கள் மக்களை சலிப்படையச் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது பொறுப்பை சரிவர செய்திருந்தால் ஏன் இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது?
விரல் விட்டு எண்ணக்கூடிய தற்கொலைப் படையினர் ஒரு கொடிய போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளைவிட, பயங்கரமான பாதிப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்பது நிதர்சன உண்மை.
காவல்துறை வளாகத்தையே பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் அளவிற்கு காவல்துறை கவனக் குறைவாக இருந்துள்ளது. மீன் பிடிக்கும் துறைமுகத்தில் சந்தேகப்படும் வகையில், மூட்டைகளை சுமந்து சிலர் இறங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
அசாதாரணமான நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முக்கியத் துறைகள் கூடி அவசர நிலைக்குழு செயல்படவில்லை. தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பணிகளை மேற்கொள்ள பல மணி நேரத்திற்கும் மேற்பட்ட கால தாமதமாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிகளின் பொறுப்பற்ற விமரிசனங்கள், பாதுகாப்புப் படையினரின் பணிகளில் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அசம்பாவிதம் நிகழக்கூடிய இடங்களில், உயர் அதிகாரிகள் ஒரே வாகனத்தில் பயணிக்கக்கூடாது என்ற விதிகள் இருந்தும் மூன்று அதிகாரிகள் ஒரே வாகனத்தில் சென்று, பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.
இந்த தவறுகள் நமக்கு பாடம் புகட்ட வேண்டும்.
துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலையச் செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இதற்கு முடிவு தான் என்ன?
நாடு கடந்த பயங்கரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைக் கண்காணித்தல், பயங்கரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்களால்தான் முடியும்.
மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்புப் பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால், உள்ளூர் காவல் துறையினர் சந்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவலகள் சேகரித்து நடைவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
மும்பை நகரம் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும், முக்கியமாக 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பில் 252 பேர் உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு. துப்பாக்கிச் சண்டை துவங்கி 12 மணிநேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த 2005ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் பயங்கரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை காவல்துறை திறம்பட செயல்பட்டு, இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து, நகரத்தைப் பாதுகாத்தனர். பயங்கரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வைப் பாதுகாத்து, வழிநடத்திச் செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.
இனியாவது பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என்று, சமுதாயத்தில் உணர்வு மேலோங்குவது வரவேற்கத்தக்கது. என்னதான் நவீன கருவிகள் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கொடுத்தாலும், ஜனரஞ்சகத் தகவல் சேகரிப்பு முறை கைவிட முடியாது.
மும்பை நிகழ்வில், மீன்பிடித் துறையில் மூட்டைகளுடன் இற்ங்கிய பயங்கரவாதிகளை சந்தேகப்பட்டு காவல்துறைக்கு மீனவப் பெண் கொடுத்த தகவலை, உள்ளூர் காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை.
உத்திரப்பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் படையின் முகாமின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் உத்திரப்பிரதேச காவல்துறையினர் பாஹிம் என்பவனை இந்த வருடம் பிப்ரவரியில் கைது செய்தனர். அவனிடமிருந்து தெற்கு மும்பையின் பல முக்கிய பொது இடங்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. அவனும் பாகிஸ்தானில் உள்ள முரிஷிதாபாத்தில் பயிற்சி பெற்றவன்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் நடக்கக்கூடும் என்ற தகவல், சிவல் காவல்துறையினருக்கு பரிமாற்றம் செய்து சரிவர அவர்கள் உணர்த்தப்படாதது மற்றொரு தவறு. இதற்கு மேற்பார்வையிடும் அதகாரிகளே பொறுப்பு.
இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகும், ஒரு பத்திரிகையாளர் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் சந்தேகப்படும் பொருட்களோடு படகில் அதே மீனிபிடித் துறையில் இறங்கியுள்ளார். எவரும் அவரை சந்தேகிக்கவில்லை. ரயில் நிலைய சோதனையையும் மீறி கையில் துப்பாக்கியோடு கடந்திருக்கிறார். இது நமது கடைநிலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை உணர்த்துகிறது.
இப்போது காவல்துறை பிடியில் உள்ள பயங்கரவாதி அசல் அமீர் காசப் என்பவர் லத்தி மட்டும் ஏந்திய சில சமயோஜித காவலர்களால் பிடிக்கப்பட்டான் என்பது செய்தி. நெஞ்சுறுதியும், கடமையுணர்வும்தான் நவீன துப்பாக்கிகளைவிட பலமான ஆயுதம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்.
மும்பைக்கு ஆபத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை எவ்வாறு தவிர்ப்பது, எதிர்கொள்வது என்பதில் கோட்டைவிட்டு விட்டோம். எல்லா நிலையிலும் காவல்துறை அரசாளுமை, சமுதாயம், ஊடகங்கள் என ஒன்று சேர்ந்து செயலிழந்தன.
தனது உயிரை பணயம் வைத்து பங்கரவாதிகளை எதிர்த்து, பல உயிர்களைப் காப்பாற்றி ரத்தம் சிந்திய ரத்தின திலகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாகுபாடின்றி பயங்கரவாதத்தை முறியடிப்போம். இனியாவது விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும். செயல்பட விடப்பட வேண்டும்.
நன்றி: தினமலர்
Wednesday, 10 Dec 2008
தேசப்பற்றுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் தீர்வு!
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் செளரி பேச்சு
”சட்டப் பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேசப்பற்றுவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் செளரி கூறினார்.
‘இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம்’ குறித்து சென்னையில் ‘விஜில்’ அமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவர் பேசியது:
”இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்தும் நமக்கு அபாயகரமான வகையாக விளங்குகின்றன. சிறிய நாடுகளான வங்கதேசம், மியான்மர் போன்றவை சீனாவுடன் ராணுவ ரீதியிலான உறவு வைத்துள்ளன. சிட்டகாங் துறைமுகத்தை தமது கடற்படைத்தளமாக சீனா பயன்படுத்தி வருகிறது.
மியான்மரின் எல்லைக்குள்பட்ட தீவை சீனா குத்தகைக்கு எடுத்து அங்கே தனது கண்காணிப்பு பிரிவை வைத்திருக்கிறது. அதன் மூலம் இந்தியாவைத் தனது கண்காணிப்பில் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானை தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு மேற்கு எல்லையில் தொந்தரவு தருவதை வழக்கமாக வைத்திருக்கிறது சீனா.
பாகிஸ்தானில் லாகூருக்கு 60 கி.மீ. தொலைவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இயங்கி வருகிறது. 20 முதல் 30 லட்சம் பேர் அந்த இயக்கதில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இது உலகறிந்த ரகசியம். இந்தியாவை சீர்குலைப்பதுதான் தனது லட்சியம் என்று அந்த அமைப்பு வெளிப்படையாகவே கூறுகிறது. அது நமது அரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் நாம் பேசாமல் இருந்தால் எப்படி?
பள்ளிகளில் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்வதற்கு முன்பே, அவர்கள் தங்களது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் நிலை உடையவர்களா? என்று பாகிஸ்தானில் இனம் காணப்படுகின்றனர். பாகிஸ்தானை ஓர் எதிரி நாடாக நாம் பார்ப்பதில்லை. அது பலவீனப்படும்போது நாம் பரிதவிப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்களோ இந்தியாவை பலவீனப்படுத்துவதுதான் லட்சியம் என்கிற வகையில், குழந்தைகளின் மனதில் நஞ்சைப் புகுத்தி வளர்க்கிறார்கள்.
தொடர்ந்து தகவல் வந்த போதும்… கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்துள்ளது. இதை, அதிகாரிகளுடனான பல்வேறு கூட்டங்களிலும், நாடாளுமன்றத்திலும் மத்திய உள்துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மீது கடல்வழித் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள் என்று நாடாளுமன்றத்திலும், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அதைத் தடுப்பது பற்றிக் கவலைப்படவில்லை.
கடந்த 2007-ம் ஆண்டு மார்ச்சில், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ராணுவ அமைச்சர், ”கடல் வழியே ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உறவு அமைப்புகள் எச்சரித்துள்ளன” என்றார். பாகிஸ்தான் வங்கதேச எல்லையில் பயங்கரவாதத்தைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உருவாகியுள்ளதாக, மியான்மரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பாக கருத்தரங்கில் பேசினார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பு, தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய பிரதமர் அதற்கு எதிரான நடவடிக்கைக் தொடரும் என்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ‘இந்தியாவுக்குள் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது’ என்றார். இவ்வளவு தகவல்கள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
என்ன செய்ய வேண்டும்? பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்றி தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
திறமையான மற்றும் தேசத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்” என்றார் அருண் செளரி.
பின்னர், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘ஊடகங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் பகுதியாக இல்லாமல், பிரச்னைகளின் ஒருபகுதியாகவே திகழ்கின்றன. எனவே, இணையதளம், சி.டி. போன்ற புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்’ என்றார்.
Monday, 8 Dec 2008
நாம் தயார் நிலையில் இல்லையே? ஏன்?
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்
”பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் வார்த்தை ஜாலம் காட்டாமல் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ‘தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் குறித்து, சென்னையில் ‘விஜில்’ அமைப்பு திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பேசியது:
”பயங்கரவாதத்தால் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல.
ஆனால், இப்போது கடல் வழியாக பயங்கரவாதம் இந்தியாவுக்குள் நுழையத் தொடங்கி இருப்பதுதான் அதிர்ச்சி தரும் திருப்பம்.
மும்பையில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் புதிதல்ல. கடந்த 1993-ம் ஆண்டு இதேபோன்ற தாக்குதல் சம்பவத்தை மும்பை நகரம் எதிர் கொண்டது. பல நூறு பேர் உயிரிழந்தனர். 15 ஆண்டுக் கடந்துவிட்டபோதும், அவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தயார் நிலையில் இல்லையே, ஏன்?
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பயங்கரவாதிகளால் ஒரு முறை தாக்கப்படும்போது அவர்களது உளவு அமைப்புகள் உஷாராகின்றன. மேலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆனால் நமது நாட்டில் பயங்கரவாத சம்பவம் நடைபெற்றால் அடுத்த இரண்டு நாள்களுக்கு தீவிர பாதுகாப்பு இருக்கும். அவ்வளவுதான்.
200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மும்பை நகரமே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தார்மிகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்வதா வேண்டாமா என்று யோசிப்பதற்கே நான்கு நாள்கள் தேவைப்பட்ட ஒருவர், உள்துறை அமைச்சராக இருந்தால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பார்களா என்ன? வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வருகின்றனர், அவர்கள் இந்தியா முழுவதும் ஊடுருவி இருக்கிறார்கள். மும்பை மற்றும் குஜராத் பகுதிகளின் படகுகளை ஓட்டுபவர்கள் பலரும் வங்கதேச அகதிகள். அவர்கள் பாகிஸ்தானில் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளின் உளவாளிகளாகவும், ஏவலாளிகளாகவும் செயல்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமான வங்கதேச அகதிகள் தங்கியிருக்கிறார்கள். அசாம் முதல்வரோ, அகதிகளை வரவேற்கிறார். உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இப்படி இருந்தால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பார்களா?
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் தைரியமுள்ள, கடுமையான நடவடிக்கைகளை எடுப்பவர்கள் என்கிற பயத்தை ஏற்படுத்தும் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்தால் மட்டும்தான் பயங்கரவாதத்தை தடுக்க முடியும்” என்றார் வைத்தியநாதன்.
Thursday, 27 Nov 2008
தினமலர் நாளிதழில் இந்த வாரம் வெளிவந்த உரத்த சிந்தனை பகுதியி்ல் எழுத்தாளரும் விமரிசகருமான சாரு நிவேதிதா, சட்டக்கல்லூரி வன்முறை குறித்து விளாசியிருக்கிறார். படித்து உணருங்கள்…
வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் :
சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த வன்முறையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களையும் பார்த்து மிஸ்டர் மிடில் கிளாஸ் பொதுஜனம், ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம், தமிழகத்தில் நடப்பது ஜனநாயகம் என்றும், எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது என்றும் நம்பிக் கொண்டிருப்பது தான். என்ன… இந்த மின்வெட்டால் தான் கொஞ்சம் பிரச்னை; மற்றபடி எல்லாமே இன்ப மயம்!
- இப்படி ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும். ஆனால், நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்திருக்காது. ஒரு உதாரணம்: திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் ஒரு போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்றால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசாங்கம் ஒருநாள் கூலியாக 80 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளோ, ‘40 ரூபாய் தான் கொடுப்போம்’ என்று சொல்ல, தொழிலாளர்கள், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்று தர்ணா செய்தனர். உடனே போலீஸ் வந்தது. தர்ணா செய்த தொழிலாளிகளைக் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து நொறுக்கியது. பல தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
ஒரு நாள் பூராவும் உடல் உழைப்பில் ஈடுபட்டால் அதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கூலி 80 ரூபாய். அதிலும், அதிகாரிகள் தருவது 40 ரூபாய்; எதிர்த்துக் கேட்டால் போலீசை விட்டு அடிப்பர். இந்தச் செய்தியும் தினசரிகளில் புகைப்படத்துடன் தான் வந்திருந்தது. ஆனால், இது நம்மில் யாரிடமும் ஒருவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அங்கே 40 ரூபாய் ஒருநாள் கூலி; இங்கே காபி ஷாப்பில், ஒரு காபி விலை 40 ரூபாய். இப்படிப்பட்ட அதல பாதாள வித்தியாசம், இந்த உலகில் எந்த நாட்டிலுமே இல்லை என்று சொல்வேன். மீண்டும் சட்டக் கல்லூரி சம்பவத்துக்கு வருவோம்… அங்கே நடந்தது, நம் சமூகத்தில் நிலவும் ஜாதிக் கொடுமையின், ஜாதி ஒடுக்குமுறையின் ஒரு விபரீத விளைவு தான். இன்றும் சில கிராமங்களில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
அப்படி நுழைந்தால் கலெக்டர் முன்னிலையில் தான் நுழைய வேண்டியிருக்கிறது. அதுவும் 100 பேர் நுழைவதாக இருந்தால், 500 பேர் கொண்ட போலீஸ் படை பாதுகாப்பு. ஒரு தலித், கோவிலுக்குள் நுழைந்தால், அது ஒரு பெரிய அதிசய செய்தி என்ற அளவில் இருக்கிறது நம் நாடு. மேல வளவுவில் நடந்த கதையும் நமக்குத் தெரியும். ஒரு தலித் ஊராட்சித் தலைவராகி விட்டார் என்பதற்காக, அவரது தலையை வெட்டி உருட்டி விட்டனர். இத்தகைய வன்முறையின் ஒரு வெளிப்பாடு தான் சட்டக் கல்லூரி சம்பவம். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, கிராமங்களில் ஜாதிரீதியான ஒடுக்குமுறை நிலவுவதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முதலில் நிறுத்த வேண்டும். கல்லூரிகளிலும் ஜாதி ரீதியான விடுதிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கக் கூடாது. இப்படிப் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஏன் இது போன்ற ஜாதிக் கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடப்பதில்லை? இதே போன்ற நிர்வாக முறையை சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும். இதேபோல், சென்னையில் மற்றொரு தனியார் கல்லூரியில் ஒரு வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இரவு உணவில் மாட்டுக் கறியைச் சேர்த்து விட்டனர் என்பதைக் காரண மாக வைத்து, பெரும் கலவரம் நடந்துள்ளது. தமிழக மாணவர்கள் மாட்டுக் கறிக்கு ஆதரவு; வட மாநில மாணவர்கள் எதிர்ப்பு. தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டனர்; இதுவும் கிட்டத்தட்ட ஜாதிக் கலவரத்தை ஒத்தது தான். மாட்டுக் கறி உண்பவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் இருப்பவர்; அதை எதிர்க்கும் வட மாநிலத்தவர் மேல் தட்டு. எந்தத் துறையையும் தனியார் வசம் விட்டால் அது அரசுத் துறையை விட மேம்பட்டதாக இருக்கும் என்று ஒரு கட்டுக் கதை நிலவுகிறது. கலவரம் நடந்த அந்தக் கல்லூரி தனியார் கல்லூரி தான். மேலும், பல கல்லூரி நிர்வாகங்கள் வட மாநில மாணவர்களை ஒரு விதமாகவும், தமிழக மாணவர்களை அவர்களைவிடத் தாழ்வாகவும் நடத்துகின்றனர் என்பது மாணவர்களிடையே நிலவும் குற்றச்சாட்டு.
சட்டக் கல்லூரி சம்பவத்தில் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சி அடைந்த மற்றொரு விஷயம், அந்தக் கொலைபாதகச் செயலை போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான். இதற்கு நாம் குற்றம் சொல்ல வேண்டியது போலீஸ்காரர்களை அல்ல; அரசியல்வாதிகளைத் தான். காவல் துறை என்பது தமிழக ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஏவல் துறையாக மாறி, வெகுகாலம் ஆகிவிட்டது. காரணம், ஆளுகிற அரசியல்வாதி நினைத்தால் போலீசை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தத் தண்ணியில்லாக் காட்டுக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போஸ்டிங்கே போடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எடுபிடிகளைப் போல் தான் ஆக்கப்பட்டு விட்டனர். உதாரணமாக, ஒரு அரசியல்வாதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், அவருக்கு மலர்மாலை போட எத்தனை போலீஸ் அதிகாரிகள் யூனிபார்முடன் கியூவில் நிற்கின்றனர் என்று நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். ஏன் இப்படி… எந்த அதிகாரி அதிகமாக காக்கா பிடிக்கிறாரோ, அந்த அதிகாரிக்கே, ‘நல்ல’ துறை கிடைக்கும். இந்த, ‘நல்ல’ என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சில போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் காலில் விழுவதைக் கூட பார்க்கிறோம்.
வேறொரு கால கட்டத்துக்குச் செல்வோம்… காமராஜர் முதல்வராக இருந்த நேரம். கக்கன் போலீஸ் அமைச்சர். அப்போது நேரு தமிழகத்திற்கு வருகிறார். அந்த விழாவில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு கக்கனும் செல்கிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்க வேண்டும். கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பது போலீஸ்காரருக்குத் தெரியாது. ”பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது” என்கிறார் போலீஸ்காரர். உடனே, காரிலிருந்து கக்கன் இறங்கி, விடுவிடு என்று ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார். அந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் இரண்டு பர்லாங் தூரம். அப்போது கக்கன் சொன்னார், ”அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?”
இப்போது இப்படி நடக்குமா… நடந்திருந்தால் அந்தப் போலீஸ்காரரின் நிலைமை என்ன ஆகும்? எப்போதோ, ஒருநாள் மயிலாப்பூரில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த இடமே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி இருந்தது… ஒரே போலீஸ் மயம். பார்த்தால், பாரதிய வித்யா பவனுக்கு முதல்வர் வருகிறாராம். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன்… இங்கே நடப்பது ஜனநாயகம் அல்ல என்று. அமெரிக்காவில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அவரது மகள் சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது டிரைவிங் லைசென்ஸ் பறிக்கப்பட்டது. இதுபோல், தமிழகத்தில் நடக்க முடியுமானால், அப்போது தான் இதை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். அதுவரைப் போலீஸ்காரர்கள், மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறதா என்று கைப்பேசி அழைப்புக்காக காத்துகொண்டு தான் இருப்பர்; கண் முன்னே ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும்… மொத்தத்தில் சொல்லப் போனால், சமூக அளவில் - இப்போதைக்கு ஜாதியை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது; அதுவரை ஒவ்வொரு ஜாதியையும் மற்றொரு ஜாதி சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். அரசியலைப் பொறுத்தமட்டில், போலீஸ், கல்வி, நீதிமன்றம் போன்ற மிக அடிப்படையான துறைகள், அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். அப்போது தான் நம்மால் நல்லதொரு சமூகச் சூழ்நிலையை உருவாக்க முடியும்.
-சாரு நிவேதிதா
எழுத்தாளர், விமர்சகர்
நன்றி: தினமலர்
Friday, 14 Nov 2008
நல்லா தான் சொன்னாங்க!
மாணவர்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்
- ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் அறிவுரை
மாணவர்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்று ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் அறிவுரை கூறினார்.
சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் போட்டி சனிக்கிழமை நடந்தது.
உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நடந்த ‘இன்னோவேட் 08′ என்ற அறிவியல் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுக்கோப்பைகளையும் ‘தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன் வழங்கினார்.
முன்னதாக ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆற்றிய சிறப்புரை :
”இங்கு பரிசு பெறக் காத்திருக்கும் வருங்கால இந்தியாவின் சிற்பிகளான மாணவச் செல்வங்களே! சவால் நிறைந்த 21-ம் நூற்றாண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். நூறாண்டுக்கு முன்பு பெரியதொரு தகவல் தொழில்நுட்பப் புரட்சியோ, வளர்ச்சியோ இருக்கவில்லை. வாழ்க்கையில் இன்றைக்கு இருப்பதைப் போல வசதிகள் இருக்கவில்லை.
ஆனால், அந்தக் காலக் கட்டங்களில் வாழ்ந்தவர்களிடம் தனி மனித ஒழுக்கம் இருந்தது. எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடும் நேர்ம்மையும் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சியும் வசதி வாய்ப்புகளும் அதிகரித்ததாலோ என்னவோ தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டது.
தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாலைகளில் எங்கு பார்த்தாலும் கார்களும், வாகனங்களும் ஓடுகின்றன. வானுயர்ந்த கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
சாலைகளில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி மனிதர்கள் கற்று கொண்டுவிட்டனர். பொது இடங்களில் எப்படிப் பழகுவது என்பதை நாகரிக உலகம் புரிந்து கொண்டிருக்கிறது.
ஆனால் பணம் சம்பாதிப்பதும், வசதிகளைப் பெருக்கிக் கொள்வதும் மட்டுமே வாழ்க்கை என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. எவ்வளவு சம்பாதித்தாய் என்பது மட்டும் முக்கியமாக இருக்கிறதே தவிர, எப்படிச் சம்பாதித்தாய் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை.
சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்வது என்ற தனி மனித ஒழுக்கம் இல்லாமல் இருப்பது கவலை அடைய வைக்கிறது.
மாணவப் பருவத்தில் இரக்க குணம் உடையவர்களாக இருக்கும் குழந்தைகள், வளர்ந்ததும் கார், பங்களா, தங்களின் குழந்தைகளை பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது என்ற சுயநலத்துடன் நடந்து கொள்கிறார்களே தவிர சமூக சிந்தனையுடனும் பொது நல்எண்ணத்துடனும் நடந்து கொள்வதில்லை.
பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதும் என்ற போக்குக்கு மாணவர்கள் மாறிவிடுவார்களோ என்று அச்சம் ஏற்படுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. பணமும் வாழ்கைக்குக் தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்பு, பண்பு, கடமை உணர்வு, கடவுள் நம்பிக்கை ஆகியவை இல்லாமல் பணம் மட்டுமே இருப்பதால் எந்தவித பயனோ நன்மையோ இல்லை. இளைய தலைமுறை மாணவர்கள் தனி மனித ஒழுக்கத்துடன் திகழ்ந்து சமுதாயத்தைப் பேணிக் காத்திட வேண்டும். புதியதோர் சமுதாயம் படைக்க வேண்டும்” என்றார்.
பத்திரிகைகளுக்கு அத்வானியின் 2 அறிவுரைகள்!
சாதாரணமான செய்தியைக் கூட மிகைப்படுத்தி வெளியிடுவதையும், எல்லாவற்றையும் பரபரப்பாக வழங்க முயல்வதையும் பத்திரிகைகள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி கேட்டுக் கொண்டார்.
லூதியானாவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய செய்தி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசினார்.
அப்போது அவர்,
”அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் விமானம் கொண்டு தகர்த்த பிறகு அமெரிக்காவின் செய்தித்தாள்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் எப்படி கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன என்பதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
இறந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்ததையோ, அங்கே இருந்த கோரக் காட்சிகளையோ அவர்கள் எழுத்திலும் வர்ணிக்கவில்லை. புகைப்படங்களாகவும் பிரசுரித்து பக்கங்களை நிரப்பவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக போலீஸார் தந்த தகவலுக்கு மேல் எதையும் வெளியிடவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் புகைப்படம் எடுத்தோ, பேட்டி கண்டோ இம்சிக்கவில்லை.
ஆனால் நாமோ எல்லா தகவல்களையும் தெரிவிக்கும் உரிமை இருப்பதாகக் கருதி தனி மனித உரிமைகளை மீறுகிறோம். ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் ஐந்தாவது தூண்கள்தான் பத்திரிகைகள்.
ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஒரு சில பத்திரிகைகளைத் தவிர மற்றவை எல்லாம் தெண்டனிட்டு தாள் பணிந்தன.
பத்திரிகையாளர் தனக்கு ஒரு தகவல் கிடைத்தது எப்படி என்பதைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறுகிறது பெரோஸ் காந்தி சட்டம். (பெரோஸ் காந்தி இந்திரா காந்தியின் கணவர், ராஜீவ் காந்தியின் தந்தையார்). அந்தச் சட்டமே நெருக்கடி நிலை அமல் காலத்தில் ரத்தானது. ஜனதா அரசு ஏற்பட்ட பிறகு செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சராகி அச் சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டினேன்.
இணையதளம், கணினி போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை ஜனநாயகத்தைக் காக்கவும் நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும்தான் நாம் பயன்படுத்த வேண்டும்” என்றார் அத்வானி.
செய்தி வாசிப்பாளர்களும் பாடகர்களும் நினைத்தால் நல்ல தமிழை வளர்க்கலாம் - கவிஞர் வைரமுத்து
”வானொலி, தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களும், திரையிசைப் பாடகர்களும் நினைத்தால் நல்ல தமிழை வளர்க்கலாம்” என்றார் கவிஞர் வைரமுத்து.
சரண் இயக்கத்தில் வினய், காஜல் அகர்வால் நடிக்கும் ‘மோதி விளையாடு’ படத்தின் இசையமைப்பாளர்களான ஹரிஹரன் வெஸ்லி ஆகியோரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிஞர்வைரமுத்து பேசியதாவது:
”பின்னணிப் பாடகர் ஹரிஹரனும், இசை ஆல்ப உலகில் முன்னணியில் உள்ள வெஸ்லியும் இணைந்து முதல்முறையாக ‘மோதி விளையாடு’ படத்துக்கு இசையமைக்கிறார்கள். இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருந்தாலும் இயக்குநர் சரண் கேட்டுக் கொண்டதற்காக இந்த நிகழச்சியில் கலந்து கொண்டேன்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கஜல் ஆகியவற்றில் பெரும் புலமை பெற்றவர் ஹரிஹரன், அதேபோல மேற்கத்திய இசையிலும் நாட்டுப்புற இசையிலும் பெரும் சாதனை படைத்தவர் வெஸ்லி.
இந்த இரண்டு ஜாம்பவான்களும் சரிவிகிதத்தில் சங்கமிக்கும் போது சப்தங்களில் புது ஜாலம் உருவாகி புதியதொரு இசை வடிவம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
என்னிடம் பாடலைப் பெறுவதற்கு இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் இருவிதமாக முயற்சி செய்வார்கள். பூவில் இருந்து வண்டு தேன் எடுப்பது ஒரு வகை; கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பது இன்னொரு வகை. அவரவருக்கு ஏற்றவாறு தேவையான பாடல் வரிகளைத் தந்திருக்கிறேன். ஹரிஹரன், வெஸ்லி, சரண் ஆகியோர் பூவிலிருந்து வண்டு தேன் எடுப்பதைப் போல் என்னிடம் பாடல் வரிகளைப் பெற்றார்கள்.
ஒரு பாடல் வெற்றி பெற உச்சரிப்பு அவசியம். தமிழ்ப் பாடல்களில் அது மிக அவசியம். அது ஹரிஹரனுக்கு சிறப்பாக கைவரப் பெற்ற ஒன்று. இன்றைய சூழ்நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களும் பாடகர்களும் நினைத்தால் நல்ல தமிழை வளர்க்க முடியும்.
பல சோதனைகளைத் தாண்டி இந்தப் படத்தை சரண் எடுத்து வந்ததை நான் அறிவேன். தன்னுடைய சினிமா வாழ்க்கையை மோதி விளையாட்டுக்குமுன், மோதி விளையாட்டுக்குப்பின் என பிரித்தறியும் இந்தப் படத்தை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சரனுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சிறகு வெட்டப்பட்டவர் அல்ல, இறகு வெட்டப்பட்டவர். கீழே விழுந்தாலும் நீர்வீழ்ச்சியாக உருமாறி வெற்றி என்ற மின்சாரத்தை உருவாக்க பயன்படுவீர்கள்” என வாழ்த்தினார்.
































