Archive for the 'Nallathan sonnanga' Category
Monday, 28 Sep 2009
இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே:
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
மக்களின் இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே என்று ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசினார்.
சென்னை மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ‘ஈத் பெருநாள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில்,இ
“கூடாரங்கள் வெவ்வேறாக இருக்கட்டும். இதயங்கள் இணைந்தால் போதும்’ என்று மத நல்லிணக்கத்துக்கு இலக்கணம் வகுத்தவர் நபிகள் நாயகம். அசைக்க முடியாத இறை நம்பிக்கையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பது இஸ்லாம்.
இறைநம்பிக்கை இல்லாதவர்கள் நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இறைவனையே ஏற்க மறுக்கும், நம்பிக்கை என்பதே இல்லாமல் இருக்கும் இவர்கள் எதிர்மறைச் சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களால் சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர்கள் கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
அரசியல் ஆதாயத்துக்காக மனிதனை மதம் பிடிக்கச் செய்கிறார்கள். அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். அதில், அரசியல் ஆதாயம் தேடட்டும். ஆனால், நாம் ஒற்றுமையாக இருப்போம். நல்லிணக்கத்தை வளர்ப்போம்.
எனக்கு முன்பு பேசிய, டாக்டர் ஹபீப் முகம்மது, சொன்னது போல, தீயவர்கள் ஐந்து சதவீதம் தான். அதை எதிர்ப்பவர்களும் ஐந்து சதவீதம் தான். மீதி 90 சதவீதம் பேர் தீமை நடப்பதை கண்டும் காணாமலும் நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள். இப்படி இருப்பதும் ஒரு வகையில் தீமைக்கு சமம் தான். அதைத் தான் புனிதக் குர்ரான் கூறுகிறது.
நல்லது செய்ய நினைப்பதை அன்றே செய்திட வேண்டும் என்கிறது புனிதக் குர்ரான். ஏனைய மத நூல்களும் இதைத்தான் கூறுகின்றன. காரணம், நாளை என்பது நம்மிடம் இல்லை. வள்ளுவப் பேராசான் கூறுவது போல, உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
மனிதன் தான் நிரந்தரமானவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே அவனது அகந்தையும், தான் என்கிற ஆணவமும் அழிந்து விடும். நம்மில் ஒருவர் கூட இந்த உலகுக்கு நிரந்தர விசாவில் வரவில்லை. இதைப் புரிந்து கொண்டாலே நமக்குள் கருத்து வேறுபாடுகளும், கோபதாபங்களும் அகன்று விடும். இதைத்தான் திருக்குர்ரானும் ஏனைய மத நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. இதை நமது மதவாதிகள் மக்களுக்கு உணர்த்தினாலே மதமாச்சரியங்களும் மனமாச்சரியங்களும் மறைந்து விடும்.
மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் ஒருவரை வெறுப்பதையும், பழிப்பதையும் விடப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் எதுவுமே இருக்க முடியாது. வேடிக்கை என்னவென்றால் ஜாதியின் பெயரால் பழிப்பவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தான். இங்கே நம்மில் எவராவது ஒருவர் விரும்பிப் பெற்றோமா நமது பிறப்பை? எனக்கு இந்த ஜாதியில், இந்த மதத்தில் பிறக்க வேண்டும் என்று மனுப் போட்டுப் பெற்றோமா? ஜாதியும், மதமும் கடைச்சரக்காக வாங்கியதா?
பிறப்பு என்பதே ஒரு விபத்து. சில நொடிப் பொழுது மாறியிருந்தால் நமது ஜாதியும், மதமும், நாடும், மொழியும், கூட மாறியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் போது, ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மனிதன் சண்டை போட்டுக் கொள்வதை விட முட்டாள்தனம் வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், ராமேசுவரத்திலிருந்து காசிக்குப் போகும் இந்து யாத்திரிகர் யாரிடமும் எந்த நவாபும், ராஜாவும் விசா, பாஸ்போர்ட் கேட்டதில்லை. அதேபோல, தாக்காவிலிருந்து அஜ்மீர் ஷெரீப் செல்லும் இஸ்லாமிய யாத்ரிகர்களை எந்த ராஜாவும் தடுத்ததில்லை. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு. நமது ரத்தத்தில் ஊறிய உணர்வு.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர், பௌத்தர் என்ற வேறுபாடில்லாமல் இங்கே நாமெல்லாம் கூடியிருப்பது போல, இந்தியர்களாக நாம் எல்லா விழாக்களிலும் ஒன்று கூட வேண்டும். இதை எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். எல்லா பள்ளி வாசலிலும், கோயில்களிலும், மாதா கோயில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். பிறகு, நம்மை அரசியல்வாதிகளும், மத வெறியர்களும் பிரிக்க முடியாது ” என்றார் வைத்தியநாதன்.
Tags: Nallathan sonnanga
Sunday, 20 Sep 2009
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? - தினமணி கட்டுரை
-அர்ஜுன் சம்பத்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாளதுவரை பெரும்பான்மையான காலகட்டங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்களே குறிப்பாக, நேரு குடும்பத்தினரே மத்தியில் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்கும் இடத்தில் இருந்துள்ளனர்.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவராக இருந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான வெளியுறவுக் கொள்கைகளில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்திய தேசத்துக்குச் சொந்தமான 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. மூன்றில் ஒருபங்கு காஷ்மீரத்தை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்தியாவுக்குச் சொந்தமான, இந்திய மக்களின் யாத்திரைத் தலமான - சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படும் - கைலாச மலை உள்பட அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. நாளதுவரை சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
நேருவுக்குப் பிறகு அவரது புதல்வி இந்திராகாந்தியால் இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது போர் தொடுத்து இந்திய ராணுவம் வெற்றி பெற்ற பிறகும்கூட, பாகிஸ்தானின் இந்திய விரோதப் போக்குக்கு முடிவு கட்டப்படவில்லை. இந்திராகாந்திக்குப் பிறகு அவரது புதல்வர் ராஜீவ் காந்தியால் கடைபிடிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளாலும் எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை.
ராஜீவ் காந்திக்குப் பிறகு மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நேரு பாணியிலான வெளியுறவுக் கொள்கைகளே பின்பற்றப்பட்டன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகும் ராஜீவ் காந்தி குடும்பத்தாரின் வழிகாட்டுதலிலேயே வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.
சமீபகாலமாக உலகம் முழுவதும் இந்தியர்கள் தாக்கப்படுவதும் இந்திய வம்சாவளியினர் பெரும் துன்பத்துக்கு ஆளாவதும், இந்து சமயம் அவமதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்திய அரசாங்கத்திடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.
இதே நேரத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிய மருத்துவர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்வதற்காக இந்திய அரசாங்கம் பெரும் முயற்சி செய்தது. அவர் விடுதலை ஆகும் வரை தனக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லையென நமது பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாகக் கூறினார்.
மலேசியாவில் இந்து தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டபோதும், மலேசியத் தமிழர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இந்துக் கடவுள்கள் அவமதிப்பு மற்றும் இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறபோதெல்லாம் இந்திய அரசாங்கம் அமைதி காத்து வருகிறது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரி விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிராக பயங்கரவாத முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் தொடரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசாங்கம் மறைமுகமாக ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுடன் பகைமை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே ஒழிய நிரந்தரத் தீர்வு ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
வங்கதேசத்தில் பலநூறு ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் துணையுடன் இடிக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, வங்கதேசத்தில் இருந்து கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்தவண்ணம் உள்ளனர்.
நம்மால் உருவாக்கப்பட்ட வங்கதேசம் இன்று நமக்கு ஓர் எதிரி நாடாகத்தான் இருந்து வருகிறது. இந்திய விரோத நடவடிக்கைகள் வங்கதேசத்தில் மிகத் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைச் சொல்லி மாளாது.
நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக இருந்தது. சீன அரசாங்கத்தின் தூண்டுதல் மற்றும் உதவியின்பேரில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு முழுமையான இந்திய விரோத நாடாக நேபாளத்தை மாற்றி வருகின்றனர். அதன் எதிரொலியாக சமீபத்தில் நேபாளத்தில் உலகப்புகழ் பெற்ற பசுபதிநாதர் கோயிலில் பாரம்பரிய மரபுப்படி பணியில் அமர்த்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பூசாரிகள் தாக்கப்பட்டனர்; அவர்களின் குடுமியைக் கத்தரித்தும், பூணூலை அறுத்தும், உடைகளைக் கிழித்தும் அவமரியாதை செய்துள்ளனர்.
நேபாளம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய மரபு மற்றும் கலாசாரங்களோடு பிரிக்க முடியாத இணைப்பு கொண்டதாகும். நேபாளத்தில் உள்ள பெரும்பான்மையான ஆலயங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாகப் பணிபுரிவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மரபாகும். அதுபோல, இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக தென்னிந்தியாவில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.
ராமேசுவரம் திருக்கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யும் உரிமை நேபாள நாட்டு மன்னருக்கு உரியதாகும். நேபாளத்தில் தற்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பாரம்பரிய இந்து ஒருமைப்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
இலங்கையில் இந்திய வம்சாவளியினர் மற்றும் இலங்கையின் பூர்வகுடிகளாக உள்ள தமிழ் இந்துக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெளத்த மத ஆதிக்கம் நிரம்பிய சிங்கள அரசாங்கத்தால் கொடுந் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கே இந்துத் தமிழர்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
புகழ்பெற்ற இந்து ஆலயங்கள், பெளத்த விகாரங்களாக மாற்றப்படுகின்றன. சமீபத்தில்கூட கதிர்காமம் முருகன் கோயில் பெளத்த விகாரமாக மாற்றப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இலங்கையோடு பல்வேறு காலகட்டங்களில் இந்திய அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதுவுமே பயன் தரவில்லை. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ் இந்துக்களுக்கு இலங்கையில் சமஉரிமையுடன் கூடிய அமைதியான வாழ்க்கையை இந்திய அரசாங்கத்தால் பெற்றுத் தர இயலவில்லை. இலங்கையில் யுத்தங்களின்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் இந்துக்கள் பலியாகியுள்ளனர். 3 லட்சம் தமிழ் இந்துக்கள் முள்வேலி கம்பிகளுக்குள் சொந்த நாட்டில் அகதிகளாகச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்குப் பின்பும் இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற வெளியுறவுக் கொள்கைகள், இலங்கை அரசுக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றன. இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த தவறான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக நாளது வரை இலங்கைப் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
கேரளத்துக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய நாடான மாலத்தீவில்கூட இந்திய விரோத நடவடிக்கைகள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. தடுப்பார் யாருமில்லை.
இந்திய நாட்டைச் சுற்றி இருக்கின்ற எந்தவொரு நாட்டுடனும் நமக்குச் சுமுகமான நட்புறவு கிடையாது. பொதுவாக இந்திய நாட்டைச் சுற்றியிருக்கும் எல்லா நாடுகளுமே ஒருகாலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன.
நம்மிடம் இருந்து மதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்ற அவர்கள், தற்போது நமக்கு எதிரி நாடுகளாக இருக்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுமே மதச்சார்புடைய நாடுகள். இலங்கை பெளத்த நாடு, மாலத்தீவு இஸ்லாமிய நாடு, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, நேபாளம் கம்யூனிஸ நாடு, வங்கதேசம் முஸ்லிம் நாடு, சீனா கம்யூனிஸ நாடு, இவைகளுக்கு மத்தியில் இந்தியா மட்டும் ஒரு மதச் சார்பற்ற நாடு.
உலகின் எந்தவொரு மூலையிலும் ஓர் அமெரிக்கன் தாக்கப்பட்டால் அமெரிக்க நாடு யுத்தம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதேபோல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் 40-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகள் ஒன்றுகூடி கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஒன்றுகூடி இஸ்லாமியர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
இலங்கை ஒரு பெளத்த மத நாடு என்கிற காரணத்தால் உலகில் உள்ள எல்லா பெளத்த மத நாடுகளும் சிங்கள அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா பின்பற்றுகின்ற போலி மதச்சார்பின்மைக் கொள்கைகளாலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளாலும் இந்திய மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்பதுதான் நாம் கண்டறிந்த, நமக்குச் சரித்திரம் உணர்த்தி இருக்கிற உண்மை.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் பெரும்பாலும் சிறுபான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் அரசியல் சுயலாபங்களுக்காகவும் கம்யூனிஸ்டுகளின் நிர்பந்தங்கள் மற்றும் தவறான ஆலோசனைகளின்பேரிலும் வெளியுறவுக் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அண்டைநாடுகள் உடனான வெளியுறவுக் கொள்கைகளை முடிவு எடுக்கும்போது இந்திய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு இந்திய மக்களின் நலன் ஆகியவற்றை மையமாக வைத்து முடிவு எடுப்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நிர்பந்தங்களின்பேரில் வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். இந்திய நாட்டின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் பகை நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்யும் அணுகுமுறையோடு கொள்கைகளை வகுக்க வேண்டும். இனிமேலாவது நேரு பாணியிலான வெளியுறவுக் கொள்கைகளைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் இந்திய மக்களின் கெüரவத்துக்கும் நன்மை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கைகளை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டிய தருணம் இது.
அதைவிடுத்து, அந்நிய சக்திகளுக்குப் பயந்து அல்லது அடிபணிந்து நடப்போமேயானால் இந்தியா இருக்காது என்பது மட்டுமல்ல, நமது சுதந்திரமும், ஜனநாயகமும் கூடக் கேள்விக்குறியாகிவிடும்!
நன்றி: தினமணி
Tags: Nallathan sonnanga
Tuesday, 8 Sep 2009
காத்திருக்கும் ஆபத்து…
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்
அப்பப்பா என்ன வெயில்? தாங்க முடியவில்லையே! மலை வாசஸ்தலங்களிலும் வெயிலின் சூடு தாங்க முடியவில்லை என்ற பேச்சு எல்லா இடங்களிலும் நமக்குக் கேட்கிறது. பூமிப்பந்து ஆபத்தான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்பூவுலகில் இதனால் மக்கள்தொகையே குறைந்துவிடும் என்கிற அபாய அறிகுறிகளும் தென்படுகின்றன.
2040-ம் ஆண்டில் ஆர்டிக் போன்ற பனிப் பாறைகள் மட்டுமல்லாமல் இமயத்தில் உள்ள பனிப்பாறைகளும் உருகி, இல்லாமல் போய்விடும் என்ற ஆராய்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளான பூமத்திய ரேகைக்குத் தென் பகுதியில் உள்ள நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் புவி வெப்பத்தால் பெரும் அபாயத்திற்கு உள்ளாக இருக்கின்றனர். இந்தக் கொடிய இயற்கைச் சூழலை மாற்ற உலக சமுதாயம் உடனே நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறான பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலுக்குக் காரணம் என்ன என்று பார்த்தால் மக்காத - அழியாத கழிவுகளை பூமியில் சேர்ப்பது, அணு சோதனை, அணுக்கழிவுகளால் ஏற்படும் வெப்பமும் அதனுடைய விஞ்ஞான மாற்றங்கள் போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணிகளாக அமைந்துள்ளன. கார்பன் டை ஆக்சைடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்படுவதால் சூரிய வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டிய ஓசோன் படலத்தில் பல இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஓட்டைகளுக்குக் காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஓடும் மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு ஆகும். இன்றைக்கு உள்ள வெப்பத்தைவிட இன்னும் 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் உலகம் பெரும் கேட்டிற்கு உள்ளாகும். மானுடம் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த ஆபத்துகள் நமக்கு எதிராக நாமே உருவாக்கியவை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
இந்த இயற்கைச் சூழல் குறித்து உலக அளவில் பேசப்பட்டும், நடவடிக்கைகள் வேண்டும் என்று முயற்சிகள் எடுத்தும் இதுவரை அவையெல்லாம் முயற்சிகளாகவே தொடர்கின்றனவே தவிர செயல்பாட்டில் இல்லை. மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத உற்பத்தி, போர்க்கருவிகள் போன்றவற்றால் இந்தத் தேவையற்ற ஆபத்தான இயற்கைச் சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சூழல் குறித்து 10-15 ஆண்டுகளாக உலக அளவில் உச்சி மாநாடுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
ஆர்ஜென்டினா தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாட்டில் பசுமைப் பாதுகாப்புப் பற்றியும், உலகத்தில் வெப்பத்தாக்குதல் பற்றியும் முதன்முதலில் பேசப்பட்டன. தொடர்ந்து க்யூட்டோ மாநாட்டில் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் நடந்த மாநாட்டில் இதுகுறித்து பேசியபோது, அமெரிக்கா தெளிவான விளக்கங்களை அளிக்காமல் கருத்துச் சொல்வதையே தவிர்த்துவிட்டது. அப்போது மற்ற நாடுகள் இதைக் கண்டிக்கவும் செய்தன.
ஒபாமா தேர்தலில் போட்டியிட்டபொழுது புவி வெப்பத்தைக் குறைப்பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பின் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவையில் இதுகுறித்து விவாதித்து உரிய திட்டங்களும், சட்டங்களும் வரையறுக்கப்பட்டன. கடந்த ஜூன் 8-ல் இத்தாலியில் நடைபெற்ற ஜி-8 நாடுகள் மாநாட்டில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 17 நாடுகள் கூடி புவி வெப்பத்தைத் தணிப்பது குறித்து விவாதித்து செயல் திட்டங்களை வரையறுத்தன.
கடந்த தொழிற்புரட்சி காலத்துக்கு முன்னால் இருந்த வெப்பநிலையைக் காட்டிலும் சற்று கூடுதலாகப் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ்க்குக் குறைக்க நடவடிக்கைகளில் இறங்குவது என்பதில் அனைவரும் கருத்து ஒற்றுமை தெரிவிக்கிறோம். ஆனால், இது எப்போது சாத்தியமாகும் என்கிற காலவரையறையை நிர்ணயிப்பதில் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. 2050-ம் ஆண்டு என்ற காலவரையறை சரியாக வராது என்றும் குறைந்தபட்சம் 2030-க்குள் இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஓரளவு வெப்பத்திலிருந்து பூமியைக் காக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளால்தான் இந்தக் கேடுகள் யாவும் ஏற்பட்டன. ஜி-8 நாடுகள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஈடுபட வேண்டும். பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு நிறைந்த வாயுக்களைக் கட்டுப்படுத்துவது பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும். 4.50 டன் அளவுக்கு ஒரு தனி மனிதன் மூலம் இந்த மாசு வாயுக்கள் வெளியேறுகின்றன. இது எதிர்காலத்தில் கூடுதலாகிவிடும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, சீனா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் இந்த மாசு வாயுக்களைக் குறைத்தாலே ஓரளவு பிரச்னையை எதிர்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் இந்தப் பிரச்னையைத் தட்டிக் கழிக்கின்றன. இந்தியா போன்ற முன்னேறும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் இதுகுறித்து தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. வளரும் நாடுகளுக்கு இடையே பன்னாட்டு ஒப்பந்தங்களில் வளர்ந்த நாடுகள் விதிக்கும் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தப் பிரச்னைக்குத் தாங்கள் முயற்சி எதுவும் மேற்கொள்ள மறுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற நிலைதான்.
அமெரிக்கா 93 சதவிகிதம் தன்னுடைய இந்த மாசுக்களைக் குறைத்தால் போதும். அமெரிக்கா இந்தியாவைக் காட்டிலும் 20 மடங்குக்கு அதிகமாக இந்த விஷ மாசுபடுகின்ற வாயுக்களை வெளியேற்றுகிறது. அப்படி இருக்கும்போது, இந்தியா மற்றும் வளரும் நாடுகள் 2050-க்குள் 80 சதவீதம் இந்த மாசு வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் உத்தரவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஒருபுறம் வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது வளர்ச்சியில் பாதிப்பே இல்லாமல் தங்களைக் காத்துக் கொள்ளும். தான் மட்டும் தவறு செய்யலாம். மற்றவர்கள் தவறைக் குறைக்க வேண்டும் என்று வல்லான் வகுத்த விதிபோல் அமெரிக்காவும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளும் இந்தப் புவி வெப்பத்தைக் குறைக்க வேண்டி வளரும் நாடுகளின் விஷயத்தில் நடந்து கொள்வதை வன்மையாகக் கண்டிக்காமல் இருக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் 2050-க்குள் இதுகுறித்து கால நிர்ணயம் செய்யப்பட்டு இடைக்காலத்தில் இலக்குகள், நடவடிக்கைகள் என்ன என்பது ஜி-8 மாநாட்டில் குறிப்பிடாதது பெரிய சறுக்கல். இதை ஐ.நா. மன்றமும் வலியுறுத்தி உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை வரையறுப்பதற்கு எந்த ஆண்டை அடிப்படையாகக் கொள்வது என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. க்யூட்டோ மாநாடு 1990 என்று அறிவித்தது.
இந்த அடிப்படையை அமெரிக்கா 2005-க்கு மாற்றிவிட்டது. அப்படியானால் 2005-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டால் முடிவு செய்யப்பட்ட இலக்கும், பணிகளும் 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது மிகக் குறைந்த அளவுகோலாகிவிடும்.
இந்த நடவடிக்கைக்கு உரிய நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், சர்வதேசச் சட்டங்களில் மாற்றம், அதற்கான ஒருங்கிணைப்புகள் குறித்து ஜி-8 மாநாட்டில் எந்தவிதமான திட்டங்களும் இல்லை. அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்போ ஒற்றுமையோ இல்லாத நிலையில் இதற்கான தீர்வு எப்படிக் கிடைக்கும் என்பதும் இன்றைய கேள்விக்குறி. புவி வெப்பத்தைத் தடுக்க உலக அளவில் உச்சி மாநாடுகள், விவாதங்கள், ஆய்வுகள் நடந்தவண்ணம் இருந்தாலும் இதுவரை ஆக்கபூர்வமான ஒரு முடிவை எட்டவில்லை என்பதும் வேதனையைத் தருகிறது.
இந்தக் கொடிய இயற்கைச் சூழலுக்குக் காரணமான, அதனால் லாபம் அடையும் நாடுகள் ஏதோ வேண்டா வெறுப்பாக அதனைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகளால் ஏற்பட்ட கொடூர நிகழ்வுகளைவிட இந்த வெப்பம் தாக்குவதால் ஏற்பட இருக்கும் அழிவு அதிகம். அதுமட்டுமல்லாமல், மனிதகுலம் அழிந்து பூவுலகம் அழிவதற்குத்தான் தேவையற்ற விஞ்ஞானமா என்கிற கேள்வியும் எழுகிறது. புவியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க எரிமலைகள் வெடிக்கும். நில அதிர்வுகள், பூகம்பங்கள், சுனாமி, வறட்சி என்ற இயற்கைச் சீர்கேடுகள் ஏற்படும். இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லையே, ஏன்?
அணுசோதனை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குத் தேவை என்பதை மறுக்கவில்லை. ஆனால் இன்று பன்னாட்டு அளவில் அணுசக்தி அழிவு சக்தியாக மட்டுமே பயன்படுகிறது என்பதுதானே உண்மை நிலை. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்ட வசதிகள் அனைத்தும் பேரழிவுக்கு வழிகாட்டும் சக்திகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. இவ்வளவு கார்கள் தேவையா? மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கழிவு வாயு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவில்லை. இன்று குளிர் சாதன அறைகள் (ஏ.சி), குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத வீடுகள் பணக்கார, மேல் மத்தியதர வகுப்பினர் மத்தியில் இல்லை. இதன் மூலம் வெளிப்படும் வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிக்கச் செய்கிறது என்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள்?
உலக சமாதானம், உலக ஒத்துழைப்பு என்று உதட்டளவு அக்கறையுடன் நின்றுவிடாமல், இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தி இருக்கும் செயற்கை சவாலான பெரும் அபாயத்தைத் தீர்க்க உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் ஒரு குரலாகவும் ஓரினமாகவும் இணைவது காலத்தின் கட்டாயம்.
இதை உணர மறுத்தால், நமது வருங்காலச் சந்ததியினர் சந்திக்க நேரும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.
நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு உலகத்தை, நல்ல காற்று, நல்ல மண், நல்ல தண்ணீர் என்று வளமான உலகத்தை விட்டுச் சென்றனர். தொழிற்புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் நாம் பூமிப் பந்தை மாசுபடுத்தி ஓர் ஆபத்தான உலகை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாமல் போனால், நாம் ‘மனிதன்’ என்கிற பெயரில் அழைக்கப்படக்கூடத் தகுதி அற்றவர்கள். சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இதுவே. தாமதித்தால் ஆபத்து காத்திருக்கிறது…
நன்றி: தினமணி
Tags: Nallathan sonnanga
Tuesday, 11 Aug 2009
லட்சியத்தை அடைய புத்தகமே வழி : அப்துல் கலாம்

வாழ்வில் லட்சியம் வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு, புத்தகமே என, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில்,
“ஈரோடு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்; என்னுடன் சேர்ந்து நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெற்றோர் சொல்ல வேண்டிய உறுதிமொழி.
“என் வீட்டில் பூஜை அறை அல்லது பிரார்த்தனை இடத்துக்கு அருகில் 20 நல்ல புத்தகத்தை வைத்து சிறு நூலகத்தை உருவாக்குவேன். என் வளர்ந்த மகன் அல்லது மகள் 20 நூல் கொண்ட நூலகத்தை 200 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்ற உறுதியாக இருப்பார். என் பேரன், பேத்திகள் 200 புத்தகத்தை 2,000 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்றுவார். எங்கள் குடும்பம் நூலகத்தை தினமும் பயன்படுத்தி, இன்று முதல் நல்ல புத்தகங்கள் படிக்க ஆளாக்குவேன். எங்கள் வீட்டு நூலகம் தான் பரம்பரை சொத்து; அறிவு களஞ்சியம்; தமிழகத்தின் அறிவு புரட்சிக்கு ஆதாரமாக அது அமையும்” என்று அப்துல்கலாம் கூறக்கூற கூடியிருந்தமக்களும்உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்..
உறுதிமொழியைத் தொடர்ந்து அப்துல் கலாம் பேசுகையில்,
“நல்ல புத்தகங்கள் கற்பனை சக்தியை வளர்க்கும். கற்பனை சக்தி சிந்தனையை வளர்க்கும். சிந்தனை அறிவு நம்மை மேம்படுத்த உதவும். மூத்த பத்திரிகையாளர்கள் அதிகளவு புத்தகங்களை படைக்க வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நல்வழிப்படுத்த ஆங்கிலம், தமிழ் பதிப்பகங்கள் முன்வர வேண்டும்.
நான் சிறுவனாக இருந்த போது ராமேஸ்வரத்தில் தொடர்ந்து படிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது. பின்னர் மேல்படிப்புக்கு செல்ல முடியுமா என நினைத்தேன். ராமநாதபுரத்தில் ஒன்பதாவது முடித்து, பத்தாவது சேர்ந்ததும் எனக்கு அருமையான பொக்கிஷம் கிடைத்தது. அதுதான் எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர். எனது வாழ்க்கையில் புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்தன.எனது வாழ்க்கையை மூன்று புத்தகங்கள்தான் வழிநடத்தி சென்றன. 1954ம் ஆண்டு சென்னை மூர் மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை நான் இன்றும் வைத்துள்ளேன்.
மனநிலையை சரிப்படுத்துவது புத்தகமே.திருவள்ளுவர் தந்த திருக்குறள், நாகரிகம் கற்று கொடுத்தது. இன்றும், நாளையும், என்றும் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும் நூலாக அது அமைந்துள்ளது. வாழ்க்கையின் வழிகாட்டியாக உள்ளது. அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. இதுபோன்ற தகவல்களை தந்தது திருக்குறள்.
“எம்ப்யர் இன் மைண்ட்’ என்ற புத்தகத்தில் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன், மகள் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்கவராகவும், விஞ்ஞானியாகவும், டாக்டராகவும், பொறியாளராகவும் வர வேண்டும் என கனவு காண்பர்.நல்ல புத்தகங்கள் மட்டுமே எப்போதும் உற்ற நண்பனாக இருக்கும். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சென்னை எம்.ஐ.டி., கல்லூரியில் 1955-56ல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, விடுதியில் இருந்த மாணவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டனர். நான் மட்டும் தனியாக விடுதியில் இருந்தேன். அப்போது எனது உறவினர் அகமது ஜலாலீன் என்பவர் ஃபோன் செய்து; ‘ராமேஸ்வரத்தை புயல் தாக்கிவிட்டது’ எனக் கூறினார். உடனே ஊருக்கு செல்ல எனது மனம் துடித்தது. ஆனால், கையில் பணம் இல்லை. ‘என்ன செய்வது’ என யோசித்தேன்.பேராசிரியர் லட்சுமணசாமி முதலியார் எனக்கு பரிசாக கொடுத்த 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் என் கையில் இருந்தது. அதை மூர்மார்க்கெட்டில் விற்று விட்டு ராமேஸ்வரம் சென்று குடும்பதை பார்த்து விட வேண்டும் என நினைத்தேன்.அதன்படி, மூர்மார்க்கெட் சென்று, அங்கு குடுமி வைத்த பிராமணர் ஒருவரிடம் புத்தகத்தை கொடுத்து பணம் கேட்டேன்.
உடனே அவர், ‘நீங்கள் அவசரமாக செல்ல இருப்பதால் பணம் கேட்பது போல் தெரிகிறது. இந்த புத்தகம் இங்கே இருக்கட்டும்; உங்களுக்கு நான் பணம் தருகிறேன்’ எனக்கூறி 60 ரூபாய் கொடுத்தார்.அந்த பணத்தின் மூலம் நான் ராமேஸ்வரம் வந்தேன். பெற்றோரை பார்த்து விட்டு பழைய புத்தகக்கடைக்கு வந்தேன். ‘புத்தகத்தை யாரும் எடுத்து சென்று விடக்கூடாது’ என மனது அலை பாய்ந்தது. அங்கு வந்ததும் அந்த பிராமணர் புத்தகத்தை கொடுத்தார். நான் அவருக்கு 60 ரூபாயை கொடுத்தேன். ‘புத்தகத்தின் மீது நீ வைத்திருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நீ நன்றாக வர வேண்டும்’ என வாழ்த்தினார்.புத்தகங்கள் வாழ்க்கையில் இன்றியமையாதவை. சில சமயம் பணம் வாங்கவும் உதவி செய்கிறது.அறிவின் இலக்கணம் என்பது என்ன? அறிவு என்பது கற்பனை சக்தி, ப்ளஸ் மனத்தூய்மை, ப்ளஸ் உறுதி.கற்றல்; கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி; சிந்தனையை வளர்க்கிறது.
சிந்தனை; அறிவை வளர்க்கிறது. அறிவு மகானாக்குகிறது. ஒவ்வொருவர் உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். மனத்தூய்மையை மூன்று பேரிடம் பெற முடியும். பெற்றோர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர், உன்னிடம் உள்ள உறுதி. இவை மூன்றும்தான் மனத்தூய்மையின் அடையாளம்.
‘எனக்கென்று புது பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன்; முடியாது என்று சொல்வதை முடியும் என நினைக்க வேண்டும். என் கடின உழைப்பாலும், உறுதியாலும் தோல்வியை தோல்வியடையச் செய்து வெற்றியை உண்டாக்குவேன்’ என இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக வேண்டும் என்றால் 54 கோடி இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன் வர வேண்டும். தடைக்கற்களை தாண்டி வர வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக வர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
அது உங்களின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.இதற்கு நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி தேவை. 2020ல் எப்படி வளமான நாடாகும் என நான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளேன். அதாவது, சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி கிடைக்கும் அளவுக்கு இந்தியாவை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட வேண்டும். தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். ஊழல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும். பாதுகாப்பான, சுகாதாரமான பீடு நடைபோடும் நாடாக மாற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும். 54 கோடி இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி.கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க முன்வர வேண்டும்.
வருங்காலத்தை பற்றி பயப்படாமல் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் தேவை. பூமி சூரியனை வலம் வர ஓராண்டாகிறது. நிமிடம், வினாடி, வாரம், மாதங்கள் பறக்கும். நம்மால் இதை கட்டுப்படுத்த முடியாது. பறக்கும் நாட்களை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பயனடைய செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.விண்ணில் இருக்கும் விண்மீனை பார்க்கிறேன்; நாம் அதை அடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயம் வந்தடையும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு புத்தகமே. அனைவரும் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும்” என்றார்.
Tags: Nallathan sonnanga
Friday, 24 Jul 2009
இந்தியாவின் வல்லரசுக் கனவு…
-என். கணபதி
இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே இருக்கிறது. அத்தனை பேருக்கும் உணவளிக்க வேண்டிய விவசாயத் துறை நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே போகிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி.
முன்பு, பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்த நம் முன்னோர்கள், இன்று பசுமைப் புரட்சி விவசாயத்தால் பெரிய அளவில் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாகிவிட்டது விவசாயம். அதனால், லாபமில்லாத தொழிலாக மாறிவிட்ட விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்த கிராமவாசிகள், விவசாயத்தை விட்டு நகரத்தை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில், நீர்ப்பாசன வசதி இருப்பதாகக் கருதப்படுகிற நிலம் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்ப் பாசன வசதியற்ற, வானம்பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேராகும்.
அதாவது, மொத்த நிலப்பரப்பான 130 ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர்தான் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 90 லட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் உணவு தானியங்களைப் பயிர் செய்தால் அதிக நஷ்டம் வருகிறது என்பதால் விவசாயிகளுக்கு உணவு தானியமற்ற பணப்பயிர் என்று சொல்லக்கூடிய விவசாய உற்பத்திப் பொருள்களின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது.
1970-ம் ஆண்டு வரையிலும்கூட சுமார் 25 சத நிலங்கள்தான் இப்படி உணவு தானியமற்ற மற்றவற்றை உற்பத்தி செய்யும் நிலங்களாக இருந்தன. இப்போது சுமார் 45 சதமாக இது மாறிய அதேவேளையில், உணவு தானிய உற்பத்தியில் இருந்த விவசாய நிலங்கள் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்து விட்டன.
காரணம், நாட்டின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குகிறோம் என்று கூறி வீரிய விதைகள், மலட்டு விதை போன்றவற்றைப் பயன்படுத்தி, குறைந்த நிலத்தில் நிறைந்த விவசாயம் செய்தல் போன்ற இயற்கைக்கு மாறான செயல்பாட்டால், இன்று விளைநிலங்கள் எல்லாம் பாழ்பட்டுள்ளன. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் விவசாய செலவு அதிகரித்ததே தவிர, விவசாயத்தால் லாபம் கிடைத்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
கிராமப்புறங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரம் இல்லாதது, பற்றாக்குறையான மின்சாரம், அனைத்து கிராமத்திலும் மும்முனை மின்சாரம் இல்லாதது போன்ற காரணங்களால் இன்று விவசாயம் சுருங்கி, பல கிராமங்களில் விவசாயம் இல்லாமல் விளை நிலங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. விவசாயத்திற்கு மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் விவசாயிகளை அரசின் கொத்தடிமைக் கடன்காரர்களாக மாற்றியதும் அரசின் இன்னொரு சாதனை.
விவசாய விளைபொருளுக்கு போதிய விலை நிர்ணயம் இல்லாததால், ரூ. 10 ஆயிரம் முதலீட்டில் அறுவடை செய்யப்படும் ஒரு விளைபொருள், சந்தையில் வெறும் ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டால் எப்படி விவசாயம் லாபகரமாக இருக்கும்? எந்த விவசாயிதான் தொடர்ந்து நஷ்டத்திற்கு ஒரு தொழில் செய்ய முடியும்? ஒவ்வொரு சாகுபடியின்போதும் இந்நிலை நீடிப்பதால், சூதாட்டத்தில் என்றாவது ஒரு நாள் ஜெயித்து லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் மாறி, மாறி கடன் கொடுத்து அவர்களை கடைசிவரை கடன்காரர்களாக அசிங்கப்படுத்துவதைவிட, விவசாய விளைபொருள்களுக்கு போதிய விலை நிர்ணயம் கிடைக்கச் செய்தாலே விவசாயிகள் லாபமடைவார்கள். நாட்டில் விவசாயத் தொழில் செழித்தோங்கும். விவசாயிகள் கூனிக்குறுகி மற்றவர்களிடம் கையேந்தி நிற்காமல் கெüரவமாக இருப்பார்கள்.
உரம் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ. 1.25 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கக்தக்கது என்றாலும், இதன் மூலம் விவசாயமோ, விவசாயிகளோ பயனடைவதைவிட ஒரு சில நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களுமே பயனடைவார்கள் என்பது தான் உண்மை.
இந்நிலையில், இந்த மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினால் அவர்கள் தனியாக இயற்கை உரம் மற்றும் செயற்கை உரங்களைப் பெற உதவியாக இருக்கும். விவசாயிகள் முழுமையாகப் பயனடைவார்கள். முதலாளி வர்க்கங்களை காப்பாற்றக் காட்டும் ஆர்வத்தில் 50 சதம்கூட விவசாய மற்றும் நடுத்தர மக்களைக் காப்பாற்ற அரசு முன் வருவதில்லை. மேலும் அவர்களை நசுக்கி வருகிறது என்றே கூறலாம்.
விவசாயத்தைப் பெருக்க ஆக்கப்பூர்வமான, நடைமுறைக்கு சாத்தியப்படும் நிலைகளை உருவாக்கி, கிராமப்புறங்களில் விவசாயம் செழிக்க வைக்க, விவசாய விளைபொருள்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்து ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா வல்லரசாகும் என்பது வெறும் கனவாகப் போய்விடும்.
நன்றி: தினமணி
Tags: agriculture, Nallathan sonnanga, super power india, உணவு, பசுமைப் புரட்சி, வல்லரசு இந்தியா, விவசாயத் துறை
Wednesday, 15 Jul 2009
தீவிரவாதமா? பயங்கரவாதமா? - உதயை மு. வீரையன்
உலகமெங்கும் தீவிரவாதமும்; பயங்கரவாதமும் மனித சமுதாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பேசப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் ‘தாலிபான்’, ‘அல்-காய்தா’ மற்றும் இலங்கையில் ‘விடுதலைப் புலிகள்’ மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது; உலக நாடுகளும் இந்த இயக்கங்களுக்குத் தடைவிதித்துள்ளன.
2001 செப்டம்பர் 11. அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக வளாகம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவும், உலக நாடுகளும் அச்சம் கொண்டன. இந்தப் பயங்கரவாதம் களையப்பட வேண்டும் என உலக நாடுகள் ஒருமித்த குரல் எழுப்பின.
இப்போது எங்கும் தீவிரவாதம் என்பதும், பயங்கரவாதம் என்பதும் ஒரே பொருளில் கையாளப்படுகின்றன. ஆனால் தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு. இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது நல்லது.
தீவிரவாதிகளுக்குக் கொள்கையும் உண்டு; கோரிக்கைகளும் உண்டு; வரித்துக் கொண்ட கொள்கைக்காக வருத்திக் கொள்ளும் மனம் படைத்தவர்கள்; கொண்ட கொள்கைக்காகவே உடல், பொருள், உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காதவர்கள்; அவர்கள் புரட்சியாளர்கள். அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கக் கூடாது.
அவ்வாறு சித்திரிக்கப் புகுந்தால் வாஞ்சிநாதன், பகத்சிங், நேதாஜி இவர்களையெல்லாம் ‘பயங்கரவாதிகள்’ என்று கூற நேரிடும். அரவிந்தர், பாரதி, வ.உ.சி., இவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எதிரிகளே தீர்மானிக்கின்றனர்’ என்பது புரட்சியாளரின் பொன்மொழி.
எதிரி அகிம்சைவாதியாக இருந்தால் நாம் உண்ணாவிரதம் இருக்கலாம். எதிரி கொடுங்கோலனாக இருந்தால் நாமும் தீவிரவாதியாக மாற்றப்படுவோம் என்பதுதான் வரலாறு. பகைவன் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்தால் நாம் பூங்கொத்துகளைக் கொண்டு போக முடியுமா?
பகத்சிங்கும், அவன் தோழர்களும் எப்போது புரட்சிப் பாதைக்கு மாறினர்? ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் காவல்துறையால் தாக்கப்பட்டு, அதன் காரணமாக மரணமடைந்ததால் அவரைத் தாக்கியவர்களைப் பழிவாங்க முடிவு செய்தனர். லாகூர் காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து வெளியே வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்சை பகத்சிங்கும், இராஜகுருவும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆட்சியை எதிர்க்குமுகமாக நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீச்சும் நடைபெற்றது.
1914 ஆகஸ்ட் 4 - இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் தொடங்கியது. ஜெர்மனிக்கு ஆதரவாக இந்தியப் புரட்சியாளர்கள் செயல்பட்டனர். தமிழகப் புரட்சியாளன் செண்பகராமன் ஜெர்மனியின் உதவியோடு நீர்மூழ்கிக் கப்பலில் தமிழகக் கடலோரம் வரைவந்து வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றான். இது ஆங்கில ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை.
இந்திய சுதந்திர வரலாற்றில் மிதவாதிகளும் இருந்தனர்; தீவிரவாதிகளும் இருந்தனர். இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகள் ஒரு பிரிவாகவும், தீவிரவாதிகள் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டனர். அரசியல் குறிக்கோள், அதை அடைகின்ற முறை ஆகியவற்றில் இரு பிரிவினரும் வேறுபட்டு நின்றனர்.
மிதவாதிகள், இங்கிலாந்தின் குடியேற்ற நாடாக இநதியா விளங்கி சுய ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதிகளோ எந்த அன்னியக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாகாமல் இந்தியா முழுச் சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகத் திகழ வேண்டும் என்று முழங்கினர்.
மேலும் தீவிரவாதிகள் முழுச் சுதந்திரம் பெற முயன்றதோடு, அரசியல் சுதந்திரம் பெறாது சமூகச் சீர்திருத்தம், கல்விச் சீர்திருத்தம், தொழில் விரிவடைதல் முதலிய எதுவும் நடைபெற முடியாது எனவும் கருதினர். விண்ணப்பம் கொடுப்பதும், வேண்டுகோள் விடுவதும், ஆங்கிலேயரின் தயவு வேண்டி நிற்பதும் ‘பைத்தியக்காரச் செயல்கள்’ என்றும் கருதினர்.
அரவிந்தர் ‘வந்தே மாதரம்’ ஏட்டில் 1907 ஏப்ரல் 11 முதல் 23 வரை சாத்வீக மறுப்புக் கட்டுரைகள் எழுதினார். ‘சாத்வீக மறுப்பு’ என்பது ‘புறக்கணிப்பு’ என்பதுதான் என்றும், இது ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கும், அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கும் துணைபோகாமல் இருப்பதுதான் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இக்கொள்கையே பின்னாளில் காந்தியடிகளின் ஆயுதமாகப் பயன்பட்டது.
மிதவாதிகளோ தீவிரவாதிகளோ சாத்வீக மறுப்பு எனப்படும் ஒத்துழையாமைக் கொள்கையினை ஏற்கவில்லை. ஆங்கிலேயரின் பொருள்கள், அரசுப்பணி, பட்டம், பதவி முதலியவற்றைப் புறக்கணித்தல் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்தல் நல்ல பயனை விளைவிக்காது எனவும், வேலைநிறுத்தங்களை அரசாங்கம் அடக்குமுறையால் ஒடுக்கும் என்றும் மிதவாதிகள் கூறினர்.
தேசியத்தை அரசியல் கோட்பாடாகக் கருதாமல் தீவிரவாதிகள் அதனை ஒரு சமயநெறியாகவும் கருதினர். தேசத்தை வழிபடுவதன் மூலமாக இறைவனை வழிபடுவதாக அரவிந்தர் முதலிய தீவிரவாதிகள் நம்பினர். அடக்குமுறைகளைக் கண்டு அவர்கள் அச்சம் கொள்ளவில்லை. அடக்குமுறை கூட ஆண்டவனின் சோதனை என நினைத்தனர்.
‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், ”நமது முதலாவது தேவை நாட்டுப்பற்றை சமயநிலைக்கு உயர்த்தி அதற்கென வாழ அல்லது சாகத் துணிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
1905-ம் ஆண்டில் காங்கிரஸிற்குள்ளே புரையோடிப் போயிருந்த பிளவு தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகளாகி வெளிப்படையாகத் தெரிந்தன. கோகலே மிதவாதிகளின் தலைவராகவும், திலகர் தீவிரவாதிகளின் தலைவராகவும் மதிக்கப்பட்டனர்.
திலகர் இவ்வாறு தீவிரவாதி, மிதவாதி என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. தீவிரவாதி எனப்படுவோர் அவர்களைவிடத் தீவிரமான புதிய சக்தி எழுகின்றபோது மிதவாதிகள் ஆகிவிடுவர் என்று குறிப்பிட்டார். எனினும் இவ்வாறு பிரித்துப் பார்ப்பதே அன்றைய சூழ்நிலையில் பொருத்தமாக இருந்தது.
1905-க்குப் பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்தான் தீவிரவாதிகளின் இயக்கம். இவ்வாறு உலகம் முழுவதும் அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக புரட்சியாளர்கள் தலையெடுத்துள்ளனர். இந்த இயக்கம் சரியா முறையா என்ற கேள்விக்கு உடனடியாகப் பதில் கூறுவது எளிதானதல்ல.
மாத்யூ அர்னால்டு ஒரு கவிதையில் கூறுகிறான்: ”அரசியல் கொலைகளைச் செய்தவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் ‘வெற்றி வீரர்கள்’ என்றும், பிடிபட்டு உயிர் துறப்பார்களாயின் ‘தியாகிகள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் ஒருபோதும் ‘குற்றவாளிகள்’ என்று கருதப்படவில்லை.”
இத்தாலிய விடுதலைச் சிற்பியான மாஜினி எண்ணிய குறிக்கோளினைத் தேசத்தின் பொருட்டு நிறைவேற்றச் சதியையும், கொலையையும் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளதை புரட்சியாளர்கள் தாரகமந்திரமாகக் கொண்டனர். இந்தியப் புரட்சியாளர்களும் வன்முறையில் அடக்குபவர்களைச் சட்டவழியில் பணிய வைக்க முடியாதபோது, வன்முறையே ஆயுதமாகிறது என்றனர்.
அயர்லாந்து புரட்சியாளர்கள் ஐரோப்பாவில் ஏற்கப்பட்டதுபோல இந்தியப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளும் ஐரோப்பியர் பலரால் ஏற்கப்பட்டது. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை அரசியல் தீவிரவாதம் இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றே எதிர்த்தனர்.
காந்தியடிகளும் இதனை ஏற்கவில்லை. கொள்கை நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. அதை அடையும் வழிமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இந்திய தேசிய காங்கிரஸில் காந்தியடிகளுக்கு உடன்பாடு இல்லாதபோதும் பகத்சிங் முதலிய தீவிரவாதிகளைப் பாராட்டும் தீர்மானம் அவர் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பகத்சிங்கைக் காப்பாற்ற முயலவில்லை என்று மக்கள் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர் என்பது மக்களின் மனப்போக்கைக் காட்டுகிறது.
1857-ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்கள் புரட்சியை ‘சிப்பாய்க் கலகம்’ என ஆங்கிலேய அரசு வர்ணித்தது. அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம்தான். இப்புரட்சியால் இந்திய அரசியல் களத்தில் ஏற்பட்ட விளைவுகளை மறக்க முடியுமா?
ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களின் அமைதியான வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதில்லை. ”வன்முறைக்கு அல்லாது அவர்கள் எப்போது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள்?” என்று மிதவாதியான அன்னிபெசன்ட் அம்மையாரே கேட்டார்.
எனவே தீவிரவாதம் சரியா, தவறா என்ற கேள்விக்கு அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்பவே பதில் கூற முடியும். அரசியல் என்பது நீதிநெறிக்கு உட்பட்டதாக இருந்தால் அகிம்சையே போதுமானது; தீவிரவாதம் தேவையற்றதாகிவிடும். இருட்டைப் போக்குவதற்கு ஆர்ப்பாட்டமும், போராட்டமும் தேவையில்லாதது; ஒரு சிறிய விளக்கேற்றி வைத்தாலே போதும்.
நன்றி: தினமணி
Monday, 4 May 2009
நல்லாத்தான் சொன்னாங்க
நியாயம்தான் சட்டம் - தினமணி கட்டுரை
-வாரண்ட் பாலா
உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.
இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா? என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும் கூட அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.
நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை. ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் “”வெளியில் இருக்கிறோம்” இல்லையென்றால் “”சிறையில்தானே இருப்போம்?”
சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஒன்றுமே இல்லை என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து.
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான் “சட்டம்’.
எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.
நாம் முன்னரே படித்தவாறு சட்டம் என்பது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார், யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம் அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டில் எந்த விதத்திலும் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வாருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாருமேஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும் தான்.
சட்டம் என்பது நாம் நினைப்பது போல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்புணர்வு பெற இருக்கிற சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.
இந்திய அரசமைப்புதான் இந்தியாவின் தலையாய சட்டம். இதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்ற வேண்டும்.
இதில் என்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் கடமையைச் செய்வதில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.
உரிமையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கூட அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா? இதற்கு என்ன காரணம்? யாருமே கடமையைச் செய்யாதுதான். ஒருவர் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன் மூலமாக பல பேருக்கு கிடைக்க வேண்டிய உரிமை பலனாகக் கிடைக்கும். எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படிக் கிடைக்கும்?
சாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவை எவை எத்தன்மை வாய்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.
இந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது, எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது.
எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும் போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.
எந்த ஒரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவது உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.
இந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்பு தண்டா ஏதும் செய்து விடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.
ஒருவேளை தப்பு தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் “” முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்”.
நாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக “நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் வாதாடலாம்!” நம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. இனி விதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா?
உங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில் பேசிக் கொண்டு இருக்கிறேனோ அதே அடிப்படையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும். இப்படி வாதாடுவது உங்களின் அடிப்படை உரிமை. அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.
நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.
வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரே நாளில் நிவாரணம் பெற்றனர்.
“நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்’ என்ற கருத்தை ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக் கூடாது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நமக்குள்ள அளவுகடந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். அப்படி பாதித்து விட்டால் அதுதான் “குற்றம்’.
அதேபோல தனக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கும் உண்டு என நினைக்க வேண்டும். அப்படி இல்லை என்று நினைக்கிற இடம்தான் “பிரச்னையின் ஆரம்பம்’.
குற்றம், பிரச்னை ஆகிய இரண்டும் முற்றிலுமாகக் களையப்பட வேண்டும். குடிமக்கள் அனைவரும் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
நன்றி: தினமணி
Tags: India, Indian law, IPC, Nallathan sonnanga, இந்திய அரசமைப்பு, இந்திய தண்டனைச் சட்டம், கட்டுரை, சட்டம், தினமணி, வாரண்ட் பாலா
Sunday, 5 Apr 2009
தாய் பூமியை மறக்காதீர்கள்: மாணவர்களுக்கு சிவகுமார் அறிவுரை
‘‘புறவாழ்க்கைக்கும், பொருளாதாரத் தேவைக்கும் மட்டும் தான் ஆங்கில வழிக்கல்வி உதவும். அகவாழ்க்கைக்கும், ஆன்ம சுகத்திற்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது” என்று நடிகர் சிவகுமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தாய் பூமியை மறந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் வழிகாட்டி கல்வி கண்காட்சி கருத்தரங்கில், ‘வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி’ என்ற தலைப்பில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:
”மாணவர்களாகிய உங்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் அனைத்தையும் பெற்றோரே பார்த்துக்கொள்வதால் நீங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். நான்
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் போது, என் அம்மாவிடம், ‘புகை பிடிக்க மாட்டேன். மது அருந்த மாட்டேன். பெண் சகவாசம் கொள்ள மாட்டேன்’ என்று காந்தி வழியில் சத்தியம் செய்துவிட்டு வந்தேன். அதை இன்று வரை கடைபிடிக்கிறேன்.
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தத்துவத்தை நாம் பின்பற்ற வேண்டும். நீங்கள் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல மொழிகளைக் கற்ற பாரதியாரே தமிழ் மொழி போல் சிறந்தது இல்லை என்று கூறியுள்ளார். மகாத்மா காந்தி தனது சுயசரிதையை தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதியுள்ளார். புறவாழ்க்கைக்கும், பொருளாதாரத் தேவைக்கும் மட்டும் தான் ஆங்கில வழிக்கல்வி உதவும். அகவாழ்க்கைக்கும், ஆன்ம சுகத்திற்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்கள் எல்லாம் நமது தாய்மொழியின் சிறப்புகள். நமது அகவாழ்க்கைக்கும், ஆன்ம சுகத்திற்கும் தாய்மொழியே உதவுகிறது.
மனித வாழ்க்கையில் எல்லாம் பெற்றவன் என்று எவரும் கிடையாது. ஆகையால், வாழ்க்கையில் எக்காரணங்களுக்காகவும் லட்சியங்களை விட்டுவிடக் கூடாது. மற்றவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நாடு, மொழி, கலாசாரத்தை மறக்கவே கூடாது.
நீங்கள் படிப்பதற்கோ, வேலைக்காகவோ வெளிநாட்டிற்குச் செல்லுங்கள். ஆனால், தாய் பூமியை மறந்து விடாதீர்கள்” என்றார் சிவகுமார்.
Tags: Mother language, Motherland, Nallathan sonnanga, Sivakumar, காந்தி சுயசரிதை, சிவகுமார், தாய் பூமி, தாய்மொழிக் கல்வி
Wednesday, 11 Mar 2009
மடியில் கனமில்லாவிட்டால்…
எஸ்.குலசேகரன் - பத்திரிகையாளர்
இந்தியா 60-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடியுள்ளது. 15-வது பொதுத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. 60 வருட சுதந்திர ஆட்சியில், நாடு வளம் பெற்றுள்ளதா என்றால், ஆமாம் என்பது ஓரளவு உண்மையே. வளம் பெற்றவர்கள் நாட்டின் அடிப்படை குடிமக்கள் அல்ல. மக்களின் பிரதிநிதிகள்தான். நாட்டில் லஞ்சமும், முறைகேடுகளும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதும் உண்மையே.
நாட்டின் இன்றைய நிலைக்கு முழு காரணமும் அரசியல்வாதிகளே என்றால் தப்பாகாது. சுதந்திர போராட்டக் கால உணர்வுகள் அரசியல்வாதிகளிடம் நீடித்திருந்தால், தேசப்பிதாவின் கனவுகள் நனவாகி இருக்கும்.
அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்ட லஞ்ச ஊழல், முறைகேடு வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. யாரும் தண்டனை பெறுவது கிடையாது.
இது போன்ற குற்றவாளிகளை தப்பிக்க விடுவதால், நாட்டில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் வளர்ந்து கொண்டே போகிறது. அரசியல்வாதிகளோ, ”நாங்கள் உத்தமர்கள், கறைபடாத கரங்களைக் கொண்டவர்கள்” என்று, மேடைகளில் முழக்கமிடுகின்றனர்.
அவர்கள் உண்மையிலேயே குற்றமற்றவர்கள் என்றால், தங்களின் தேர்தல் அறிக்கையில் கீழ்கண்டவற்றை எல்லாம் சேர்ப்பார்களா…
* நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வ்நதால், அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், லஞ்ச முறைகேடுகளை மட்டும் விசாரிக்க தேர்தல் ஆணையம் போன்று, சுதந்திரமாகச் செயல்படும் ஆணையம் ஒன்றை அமைப்போம். இந்த ஆணையம், சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாட்டில் இயங்கும்.
* அரசியல்வாதிகள் செய்யும் முறைகேடுகளை பொது மக்கள் ஆதாரத்துடன் இந்த ஆணையத்தில் முறையிடலாம்.
* தண்டனை பெறும் அரசியல்வாதிகள், மீண்டும் எந்த கட்சியிலும் உறுப்பினராக முடியாதபடியும், அரசு பொறுப்புகளை வகிக்க முடியாத வகையிலும், ஆணைய அமைப்பு விதிகளில் சேர்க்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.
* நாங்கள் மாநில ஆட்சிக்கு வந்தால், தற்போது அரசுத் துறைகளில் புற்று போல் வளர்ந்துவிட்ட லஞ்ச முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்வோம். இத்தகைய வழக்குகளை நடத்த, அரசு, அரசியல் குறுக்கீடு இல்லாத சுதந்திரமான ஆணையம் ஒன்றை மாநில அளவில் அமைத்து, அதை சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாட்டில் இயங்கச் செய்வோம்.
* எமது கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கம், உரிமைகளுக்காகப் போராடுவதும், ஆதரவளிப்பதும் போல் எமது தொழிற்சங்கத்தைச் சார்ந்த அல்லது ஆதரவு பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவதையும், முறைகேடுகளில் ஈடுபடுவதையும் அனுமதிக்க மாட்டோம்.
* தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைத்தால், ஓட்டு வங்கிகளை மனதில் கொண்டு, பயனற்ற திட்டங்களை நிறைவேற்ற மாட்டோம். மக்களுக்கும், நாட்டின் வளத்திற்கும் தேவையான திட்டங்களை மட்டுமே வேகமாக நிறைவேற்றுவோம்.
* தேர்தலில் தோல்வியுற்றாலும், அதை ஏற்றுக் கொண்டு, அடுத்த ஆட்சியில் வரும் கட்சியின் நல்ல திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்போம். நாட்டிற்கு நல்லதை, நாங்கள் செய்தால் என்ன, வேறு கட்சி செய்தால் என்ன என்ற நல்லெண்ணத்துடன், நாட்டின் நலத்தை மட்டுமே நினைப்போம். தேர்தல் வெற்றி பிரதானமல்ல. நாட்டின் நலமும், வளமுமே முக்கியம் என்று எமது கட்சி சார்பில் உறுதி கூறுகிறோம்.
* தேர்தல் களத்தில் எமது கட்சி ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளும். தேர்தலின் போது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரிக்க மாட்டோம். கட்சித் தொண்டர்களை ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் பணிக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.
* தேர்தல் பிரசாரங்களை தொலைக்காட்சி, வானொலி, பொதுக் கூட்டங்கள், தெருமுனை மற்றும் வேன் பிரசாங்கள் மூலம் மட்டுமே நடத்துவோம். பிரசார மேடைகளில் கூட ஆரத்தி எடுப்பது, குழ்நதைகளுக்கு பெயர் சூட்டுதல் போன்றவைகளுக்கு பணம், பரிசு பொருட்கள் எதுவும் கொடுக்க மாட்டோம்.
இந்த கொள்கைகளை அவ்வாறு சேர்க்கும் கட்சிகளுக்கு மட்டுமே, மக்கள் ஓடடுப் போட வேண்டும். நமது தேர்தல் ஜனநாயகத்தை உலகம் போற்றிடிட மக்கள் நாம் தான் முன் வர வேண்டும்.
சம்பாத்தியம் செய்திட அரசியலல்ல; அரசியல் புனிதமானது. நாட்டிற்கும், மக்களுக்கும் தொண்டு செய்யவே அரசியலில் ஈடுபடுகிறோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்த, வாக்காளர்களாகிய நாம்தான் முன் வர வேண்டும்.
இதெல்லாம் சாத்தியமா? நம் அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் உடன்படுவார்களா? அவர்கள் அனைவரும் உத்தமர்கள் தானா? உத்தமர்கள் என்றால், உறுதிமொழிகளை ஏற்று, கட்சியின் தேர்தல் பிரகடனமாக அறிவிப்பீர்களா?
நாட்டின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், தேர்தல் களங்களில் முறைகேடுகளும் ஒழிந்து, நாடு செழித்து, வளம் பெற, இப்போது அருமையான வாய்ப்பு வந்துள்ளது. இதை நாம் விட்டு விடலாமா?
வாக்காளர்களே சிந்தியுங்கள்..
நன்றி: தினமலர்
Tags: Dinamalar, Nallathan sonnanga, Political view, S Kulasekaran, TN politics, அரசியல் கட்டுரை, அரசியல்வாதிகள், எஸ்.குலசேகரன், குடியரசு தின விழா
Tuesday, 3 Feb 2009
மக்கள் எவ்வழி; ஆட்சியும் அவ்வழி! - என்.முருகன்
அமெரிக்காவின் 44-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பராக் ஒபாமா பதவியேற்ற போதும், அதற்கு முன்பு தேர்தலை ஒட்டி நடந்த விவாதங்களைக் கூர்ந்து கவனித்தபோதும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக அமைப்பும், இங்கே மக்களாட்சி செயல்படும் விதமும் கவலை அளிக்கிறது.
ஜனநாயகம் மக்களுக்கு சுபீட்சத்தை அளிக்க முடியாது எனவும், படிப்பறிவு இல்லாதவர்கள் கையில் ஓட்டுரிமை கிடைத்தால் சுயநல அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை உருவாக்கி ஊழல் சாம்ராஜ்யங்களை உருவாக்கி விடுவார்கள் எனவும், பல அரசியல் தத்துவ மேதைகள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் ஜனநாயகம்தான் சரியான ஆட்சி முறை என்பதை சிறுபான்மை இனத்தவரான ஒபாமாவை தேர்நதெடுத்ததன் மூலம் அமெரிக்காவிலுள்ள பெரும்பான்மை வெள்ளை இனத்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.
அவரது பதவியேற்பு நிகழ்ச்சி ஜனவரி 20-ம் தேதி எனினும் அதற்கான நடவடிக்கைகள் 17-ம் தேதியே தொடங்கின. அன்று ஒபாமா பிலடெல்ஃபியாவில் ரயிலில் ஏறி, வாஷிங்டன் நோக்கித் தனது பயணத்தை தொடங்கினார். 1861-ல் அதிபராகப் பதவியேற்க ஆப்ரஹாம்லிங்கன் இதேபோல் ரயில் பயணத்தை ஜனவரி 17-ல் தொடங்கியதுதான் தனக்கு வழிகாட்டி எனக் கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடங்கி 20-ம் தேதி வாஷிங்டன் நகரை வந்தடைந்தார்.
219 கிலோ மீட்டர் பயணத்தின்போது வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தங்களின் வருங்கால அதிபரை வாழ்த்தி வழியனுப்பினார்கள். பல நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட ஒபாமா செய்த காரியங்களில் ஒன்று ஜனவரி 19-ம் தேதி ஒரு விருந்தில் கலந்துகொண்டு அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரை ‘அமெரிக்காவின் கதாநாயகன்’ என வருணித்ததுதான்.
அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் நவம்பர் 5-ம் தேதி ஒபாமா ஆற்றிய உரையில், எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் மெக்கைன் தனக்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்துச் செய்தி அளித்ததாகக் கூறினார். ‘என்னை எதிர்த்து தேர்தலில் கடுமையாகப் போரிட்டவர் மெக்கைன். அதைவிட கடுமையாக நம் நாட்டின் ஜனநாயக நெறிகளை காப்பாற்ற வியத்நாமில் யுத்த வீரராகப் போரிட்டு, தன்னை மிகச் சிறந்த தியாகியாக உருவாக்கிக் கொண்டவர் அவர்’ என மனதாரப் பாராட்டினார்.
அப்படியே நம் நாட்டிற்கு வாருங்கள். என்றைக்காவது ஒரு நாள் ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு பிரதமரோ, முதல்வரோ தன்னை எதிர்த்து தோல்வியுற்ற கட்சியின் தலைவரை புகழ்ந்ததுண்டா? தமிழ்நாட்டில் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினர் தேர்தல் முடிவு வெளிவந்த நாளில் இரவில் பல வாகனங்களில் உருட்டுக் கட்டைகளுடன் பல நகரங்களில் வலம் வந்து தோற்ற கட்சியினரை தாக்கியதையும், அவர்களின் வீடுகளின் மீது கல்லெறிந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். ஒரு கட்சியின் தலைவர் மரணமடைந்த போது மாற்றுக் கட்சித் தலைவர் மலர்வளையம் வைக்கச்செல்லும் போது எதிர்த்து கோஷமிட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் நாம் கண்டிருக்கிறோம்.
எம்.ஜி.ஆர். இறந்தபோது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களில் ஒருவர், கடப்பாறை கொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை இடித்துத் தரைமட்டமாக்கியதை இன்னமும் நாம் மறக்கவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல கொள்கைகளை கடுமமையாக விமர்சித்து வெற்றி பெற்றவர் ஒபாமா. ஆனால் புஷ் குடும்பத்தினருடன் ஒபாமா குடும்பத்தினர் விருந்துண்டு, பின் திருமதி புஷ், திருமதி ஒபாமாவை அழைத்துக் கொண்டு அதிபர் மாளிகையை சுற்றிக் காட்டி, அதன் அம்சங்களை விளக்கிச் சொல்லியிருக்கிறார். முந்தைய அதிபர் புஷ் தனது மனைவியுடன் வாஷிங்டன் விமான நிலையத்தில் சாதாரண பயணிகளுடன் ஒரு விமானத்தில் ஏறி டெக்ஸாஸ் மாகாணத்திற்கு பறந்து சென்று தனது இல்லத்தை அடைந்திருக்கிறார்.
அப்படியே இங்கே வருவோம். 2009-ம் ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியோ அல்லது மூன்றாவது அணியின் தலைவியாகிய மாயாவதியோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய பிரதமராகவிருக்கும் தலைவருடன் ஒரு விருந்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டு நாட்டு நிலைமையை அலசிப் பேசி தனது கருத்தினைக் கூறி அன்புடன் விடை பெறுவாரா?
பதவியிலிருந்து இறங்கிவிட்ட குடியரசுத் தலைவர்கள் தங்களுக்கு அரசு வீடுகள் வேண்டும் எனக் கேட்டுப் பெறுகிறார்கள். பல எம்.பி.க்களும், அமைச்சர்களும் அரசு வீடுகளை காலி செய்ய பல மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் புஷ் புதிய அதிபர் பதவி ஏற்றவுடன், எட்டு வருடம் தங்கி இருந்த வெள்ளை மாளிகையைக் காலி செய்துவிட்டு ஒரு விமானத்தில் மற்ற பயணிகளுடன் டிக்கெட் வாங்கி தனது ஊருக்குப் பயணம் செய்கிறார்.
ஒபாமா பதவி ஏற்பு நிகழ்ச்சியை வாஷிங்டன் டி.சி. நகரில் கண்டுகளிக்க அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும் 20 லட்சம் மக்கள் கூடியுள்ளார்கள். சுமார் 10 லட்சம் கார்களில் தலைநகருக்குள் நுழைந்து அதிபர் பெயர், உருவம் பொறித்த பனியன்களை வாங்கி அணிந்து கொண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மகிழ்ந்துள்ளனர்.
நமது நாட்டில் சுமார் 2 லட்சம் பேர் தலைநகர் தில்லியில் ஒரே நேரத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கூடி ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியுமா? குப்பை கூளங்கள், அடிதடிகள் இல்லாத கட்சி மாநாடுகளை நம் நாட்டில் நடத்த முடியவில்லை, ஏன்?
அதற்குக் காரணம், ஜனநாயகத்தின் சிறப்பும் மாண்பும் நம்மில் ஊடுருவவில்லை. அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் ‘ஆட்சியும் அதிகாரமும் எங்களுடையது’ என்பதை மக்கள் பிரகடனம் செய்வதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகச் சீரிய அம்சம். அவர்களின் தேர்தல் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அதிபரை தேர்ந்தெடுத்தாலும் அதிகார மமதை அதிபருக்கோ அல்லது துணை அதிபருக்கோ ஏற்பட்டதில்லை. தேர்தல் நேர சொற்பொழிவுகளின்போது நான் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.
நம் உள்ளூர் தேர்தலில் உணவு, உடை மற்றம் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை அமெரிக்காவின் சராசரி மனிதர் யாரும் நம்பவே மறுக்கிறார்கள். பதவியிலிருந்தபோது புஷ் எந்த மேம்பாலத்தையும் வண்ண ஒளிகளுடன் கூடிய சீரியல் பல்புகள் அலங்காரத்துடன் திறந்து வைத்ததில்லை. தாற்காலிக வேலையிலிருப்பவர்களை நிரந்தரமாக்கும் பணி நியமன உத்தரவுகளை அதிபர் நேரில் வழங்கியதில்லை.
நமது நாட்டில் ஜனநாயகம் உருவாக வேண்டும் என தீவிரமாக முயற்சித்த நமது தேசத் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் ஜனநாயகத்தைப் போற்றிப் பாராட்டும் இளம் பட்டதாரிகளாக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தவர்கள். அவர்கள் உருவாக்கித் தந்த இந்திய ஜனநாயகம், மேலைநாடுகளையும் விட சிறந்தது என்பதுதான் உண்மை. உதாரணமாக, கிரேக்க, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைவிட இந்தியாவில் அரசியல் கட்சிகள் எல்லாவற்றிற்கும் தனிக்கொடிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு மண்டபத்தில் குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடந்தால் அங்கே பறக்கும் கொடி அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியே! வெளியே பேனரில் கட்சியின் பெயர் இருக்குமே தவிர தனிக்கொடி கிடையாது.
இங்கே சுமார் 1,476 கட்சிகளுக்கும் அதே எண்ணிக்கையில் கொடிகள். ஆனால் ஜனநாயகத்தை மாற்றி, மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்று இலவசங்களை அளித்து, கூட்டணி அரசாங்கம் என்ற வியாபார அரசியலை, நமது அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக இருந்து அரசியல் கட்சிகளை உருவாக்கிய தியாகச் செம்மல்கள் கற்பனை செய்திருக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுமாதிரியான கேலிக்கூத்துகள் நடக்க முடியாதபடி, தடுக்கும் ஷரத்துகள் நம் அரசியல் சட்டத்தில் இல்லை.
தமிழகத்தில் தற்போது நடந்த ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக நெறிமுறைகளுக்கு சாவு மணி அடித்ததையும், அதே காலகட்டத்தில் ஜனநாயகத்தை சீரும் சிறப்புமாக செழிக்கச் செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்ததையும் ஒரே நேரத்தில் கண்ட நாம் சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவமேதைகள் சொன்னபடி ஜனநாயகம் கேடு விளைவிக்கும் என்பதை ஒத்துக்கொள்வதாலும் ஜனநாயகததின் நற்பண்புகளை நம்புவதா என்று தெரியாமல் விழிக்கிறோம்.
அமெரிக்கா போன்ற முதிர்ந்த ஜனநாயக நாடுகளில் மக்கள் அரசியல்வாதிகளை வழிநடத்துகிறார்கள். அரசியல்வாதிகள் தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை, வெளியுறவுக் கொள்கைகளை வழிநடத்துகிறார்கள். மக்களது உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் மக்களாட்சி என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள் அவர்கள். இங்கேயோ, மக்கள் விலைகொடுத்து வாங்கப்படும் பொருள்கள் என்று கருதி செயல்படுகிறார்கள் நமது அரசியல்வாதிகள். மக்கள் விழித்துக்கொண்டு, அரசியல்வாதிகளைத் தங்களது கட்டுக்குள் வைத்திருக்கத் தங்களிடம் தரப்பட்டிருக்கும் ஆயுதமான வாக்குச் சீட்டை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத காரணத்தால், வாக்குச் சீட்டு கரன்சி நோட்டுக்குப் பண்டமாற்றம் செய்யப்படுகிறது. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோளாறு.
ஆக, வின்ஸ்டன் சர்ச்சில் கூறியபடி மக்கள் தங்களுக்கு ஏற்ற அரசினை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதே சரி. நம் மக்களால் சரியான அரசைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
நன்றி: தினமணி
































