Monday, 4 May 2009
சென்னை அணி கலக்கலில் கலங்கிய டெக்கான் சார்ஜர்ஸ்

தென்னாப்பிரிக்கா, ஈஸ்ட் லண்டன் நகரில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 78 ரன் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை ருசித்தது தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.
ஐ.பி.எல்., டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியில், நேற்றைய 29 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் களம் இறங்கிய சென்னை அணிக்கு ஹைடனும் (43) முரளி விஜய்யும் (31) நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அடுத்ததாகக் களமிறங்கிய தோனி, ரெய்னா ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. ரெய்னா 32 ரன் எடுத்து வெளியேற, தோனி 58 எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்த, 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது.
கடினமான இலக்கை அடையும் இலட்சியத்தோடு களமிறங்கிய டெக்கான் சார்ஜர்சிஸ்கு ஆரம்பத்திலேயே அடி கொடுத்தது சென்னை அணி. ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை அது பறிகொடுத்திருந்தது. டெக்கான அணியை ஓரளவுக்கு முன்னுக்குக் கொண்டுவந்த டுவைன் ஸ்மித் (49) ரன் எடுத்து வெளியேற, டெக்கான் சார்ஜர்ஸ் அணி காற்று இறக்கப்பட்ட டயராய் 14.4 ஓவரில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
சென்னை வீரர் ஜகாதியும் (4 விக்கெட்) முரளிதரனும் (2 விக்கெட்) சுழலில் மிரட்டினர். அதிரடியாக ஆடி வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் அணிகளின் வெற்றிப் பட்டியலில் சென்னை கிங்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Tuesday, 28 Apr 2009
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவில் 29 ஆட்டங்கள்
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆட்டங்கள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்துக்கு மாற்றப்பட்டன. மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி ஹரூண் லோர்கட் கூறியதாவது:
”புதிய திட்டத்தின் படி மொத்தம் நடைபெற உள்ள 49 ஆட்டங்களில் இந்தியாவில் 8 இடங்களில் 29 ஆட்டங்கள் நடைபெறும். இலங்கையில் 3 இடங்களில் 12 ஆட்டங்களும், வங்கதேசத்தில் 2 இடங்களில் 8 ஆட்டங்களும் நடைபெறும்.
2 காலிறுதி ஆட்டங்கள் வங்கதேசத்திலும், தலா ஒரு காலிறுதி ஆட்டம் இந்தியாவிலும், இலங்கையிலும், தலா ஓர் அரை இறுதி ஆட்டம் இந்தியாவிலும், இலங்கையிலும், இறுதி ஆட்டம் இந்தியாவிலும் நடைபெறும்.
போட்டியின் தொடக்க நிகழ்ச்சி பிப்ரவரி 18-ல் பெங்களூரிலும், முதல் ஆட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி பிப்ரவரி 19-ல் வங்கதேசத்திலும் நடைபெறும்.
பாகிஸ்தானில் 14 ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. அவற்றில் 8 ஆட்டங்கள் இந்தியாவிலும், 4 ஆட்டங்கள் இலங்கையிலும், 2 ஆட்டங்கள் வங்கதேசத்திலும் நடைபெறும்” என்றார்.
போட்டியின் செயலகமாக லாகூர் அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியின் செயலகமாக மும்பை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 24 Apr 2009
என் வெற்றிக்கு முன்னால் இருக்கிறார் அஞ்சலி:
மனைவி குறித்து சச்சின் பெருமிதம்

சச்சினின் கிரிக்கெட் போலவே அவருடைய குடும்பப் பாசமும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள். பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).
சச்சினைக் கண்டாலே அலறும் உலகப் பந்துவீச்சாளர்கள் அவருடைய மறுபக்கத்தை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள். கிரிக்கெட்டை தவிர்த்து சச்சினின குடும்பப் பிணைப்பைப் பற்றி அறியும்போது நமக்கும் ஆச்சர்யம் வருகிறது.
கிரிக்கெட் நுணுக்கங்களைப் போல குடும்ப நுணுக்கங்களான அன்பு, பாசம், அக்கறை, நகைச்சுவை எல்லாம் கலந்து கட்டியவர் சச்சின்.
பேட்டால் பந்தை அடித்து ரன்களைக் குவிக்கும் சச்சின், அன்பால் மனங்களை அடித்து அதே அன்பை நிறையவே பெறுபவர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,
”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.
மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.
அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.
”என்னுடைய மன உறுதிக்கு அஞ்சலிதான் தூண். நான் தொய்வடையும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள் அவள். அதன் பிறகு என்னுடைய அம்மா. இவர்கள் இருவரும்தான் என் வாழ்க்கையின் பெரும்பான்மை பகுதியை ஆள்பவர்கள். மேலும் தற்போது அந்த குரூப்பில் என் குட்டி மகள் சாராவும் சேர்ந்துவிட்டாள்” என்றார்.
சச்சின் தன்னுடைய பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளில் உச்சி முகர்வது மகளும் மகனும் தங்கள் கைகளால் செய்து அனுப்பிய வாழ்த்து அட்டைகளைத்தான்.
”அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்க்கும்போது தந்தையுடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதேநேரம் மனைவியின் வாழ்த்தும் எனக்கு முக்கியமானது” என்கிறார் சச்சின்.
அவருடையப் பிறந்தநாளின்போது நடந்த மறக்க முடியாத ஒன்றைப் பற்றி கேட்டால், ”1998 ஏப்ரல் 24ஆம் தேதி சார்ஜாவில் நடந்த ட்ரைஆங்குலர் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு உதவியது” என்று நினைவுகூர்கிறார்.
உங்கள் எதிர்கால கனவு என்ன என்றால், ”நம்மை மறந்து உறங்கும் போதுதானே கனவு வரும்?” என்று கலாய்ப்பவர், ”உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்று சொல்கிறார்.
சச்சின் சகலகலா வல்லவர்தான். பின்னே, என்னதான் மாபெரும் சாதனையாளராக இருந்தாலும் வீட்டில் பொண்டாட்டி மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆம்பளைக்கு தனித்தகுதி வேண்டாமா என்ன?
Monday, 20 Apr 2009
ஐ.பி.எல்., கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு, ஹைடன், பார்த்திவ் படேல் ஜோடி அபார துவக்கம் அளித்தது. அதிரடியில் மிரட்டிய ஹைடன் 65 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பார்த்திவ் (30) ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய ரெய்னா (28), தோனி (16), பிளின்டாப் (22*) நம்பிக்கை அளிக்க, 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தது சென்னை அணி. காலிஸ் (24), உத்தப்பா (20), டிராவிட் (20) மட்டுமே சற்று நேரம் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்களான பிரவீண் (0), ரோஸ் டெய்லர் (1), பீட்டர்சன் (0), கோஹ்லி (11), பிஸ்னோய் (0), வினய் (5), ஸ்டைன் (0) ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி,87 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. பந்து வீச்சில் அசத்திய முரளிதரன் 3, பாலாஜி 2 விக்கெட் வீழ்த்தினர். முரளிதரன், ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Friday, 17 Apr 2009
ஐ.பி.எல்., போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் இன்று துவக்கம்
கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே ஐ.பி.எல்., போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் இன்று துவங்குகிறது. இன்று இரு போட்டிகள் நடக்கிறது. முதலில், தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணியும் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் (மதியம் 2.00 மணி) மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் நடப்பு சாமபியனான, வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பீட்டர்சன் தலைமையிலான பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் (இரவு 7.30 மணி) சந்திக்கிறது.
8 அணிகள் மோதும் இந்த ஐ.பி.எல்., போட்டி இன்று தொடங்கி மே 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அணிகள் ஒவ்வொன்றும் தலா இரு முறை மோதும். மொத்தம் 59 ஆட்டங்கள். 59 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளில் 90 சதவிகிதம் விற்றுவிட்டதாக ஐ.பி.எல்., தலைவர் லலித்மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., போட்டிகள் அனைத்ததையும் சோனி மேக்ஸ் சேனல் ஒளிபரப்புகிறது.
Friday, 10 Apr 2009
சூப்பர் கார்ட்டூன்: புக்கனனை கிழித்த சதீஷ் ஆச்சார்யா

ஐ.பி.எல்.- 2 போட்டிகள் ஏப்ரல் 18ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் தொடங்குகிறது. இதற்கிடையில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் புக்கனன் தன்னுடைய சூப்பர் ஐடியாவை வெளியிட்டார்.அதாவது, மேட்சுக்கு மேட்ச் இவர் அணித் தலைவரை மாற்றுவாராம். நமக்கே சிரிப்பு வருதுன்னா கார்ட்டூனிஸ்களைக் கேட்கணுமா என்ன?
பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா தன்னுடைய பாணியில் புக்கனனின் முடிவை கிழித்த கார்ட்டூன்தான் இது.
Tuesday, 7 Apr 2009
இந்தியாவின் வெற்றியைப் பறித்த மழை!:
இருந்தாலும் தொடரை வென்று சாதனை
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 379 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 434 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் நியூசிலாந்துக்கு 617 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து இருந்தது. டெய்லர் 69 ரன்னிலும், பிராங்ளின் 26 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போதிய வெளிச்சமின்மையால் நேற்றைய ஆட்டம் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 30 நிமிடம் முன்னதாக இன்றைய ஆட்டம் தொடங்கியது.
தோல்வியை தவிர்க்க மேலும் 449 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து ஆடியது. டெய்லர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்த ஜோடியை ஒரு வழியாக ஹர்பஜன் சிங் பிரித்தார். அவரது பந்தில் டெய்லர் போல்டு ஆனார். அவர் 165 பந்தில் 16 பவுண் டரியுடன் 107 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 226 ஆக இருந்தது. 5-வது விக்கெட் ஜோடி 142 ரன் எடுத்தது.
கேப்டன் டோனி தெண்டுல்கரை பந்துவீச அழைத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது. அவரது பந்தில் மேக்குல்லம் (6), பிராங்ளின் (49) ஆட்டம் இழந்தனர்.
மதிய உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்து இருந்தது.
ஹர்பஜன் சிங்கின் மாயாஜால பந்தில் நியூசிலாந்து அணியின் 8-வது விக்கெட் வீழ்ந்தது. சவுத்தி 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்தியாவின் வெற்றி மழையால் கை நழுவி போனது.
இந்தியா 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. 2-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
ஏற்கனவே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்து இருந்தது. காம்பீர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு பெற்றார்.
Monday, 30 Mar 2009
டிராவில் முடிந்தது 2-வது டெஸ்ட் போட்டி
காம்பீர், லஷ்மண் ஆகியோரின் சதத்தால் நியூஸீலாந்து அணிக்கு எதிராக நேப்பியரில் நடந்து வந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியா-நியூஸீலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்து வந்தது.
நியூஸீலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 619 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ-ஆன்’ ஆனது. இதனால் 314 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கம்பீர் 14 ரன்னுடனும், டிராவிட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கையை விட்டு நழுவிய போட்டியை ‘டிரா’ செய்யும் முடிவுடன் களம் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் திராவிட்டும், காம்பீரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அணியின் எண்ணிக்கை 163 ரன்களை எட்டிய போது, டிராவிட் ஆட்டம் இழந்தார். வெட்டோரி பந்து வீச்சில் ஷாட் லெக் திசையில் நின்ற ஜேமி ஹாவ் கேட்ச் செய்ததாக நடுவர் இயான் கவுல்டு அவுட் கொடுத்தார். திராவிட் 220 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.
அடுத்து சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினார்.
4-வது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. கம்பீர் 102 ரன்களுடனும், டெண்டுல்கர் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 8 ரன் சேர்ப்பதற்குள் டெண்டுல்கர் ஆட்டம் இழந்தார். இவர் 131 பந்தில் 64 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த லஷ்மண் அபாரமாக விளையாடினார். மறுமுனையில் இருந்த காம்பீர் 137 ரன்கள் குவித்திருந்த போது பாட்டீல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய யுவராஜ் சிங் 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நின்ற லஷ்மண் (124) சதம் அடித்தார்.
இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 476 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டம் டிரா செய்வதாக நடுவர் அறிவித்தார்.
3வது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.
Tuesday, 24 Mar 2009
ஐ.பி.எல்., போட்டிகள்: தென் ஆப்ரிக்காவில் ஏப்ரல் 18 முதல் துவக்கம்
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) தொடர், தென் ஆப்ரிக்காவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் வரும் ஏப்., 18 ம் தேதி முதல் துவங்குகிறது. இத்தகவலை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சார்பில் இரண்டாவது கட்ட ‘டுவென்டி-20′ தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரல் 10ம் தேதி துவங்கவிருந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, இந்தியாவில் நடத்த மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாதுகாப்பு கருத்தில் கொண்டு மத்திய அரசும் அனுமதி அளிப்பதில் தயக்கம் காட்டிவந்தது. இதனால் உடனடியாக தொடரை வெளிநாட்டுக்கு மாற்ற முடிவு செய்தது ஐ.பி.எல்., நிர்வாகம். இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் பரிசீலனையில் இருந்தன.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி வாய்ப்பைப் பெற்றது தென் ஆப்பரிக்கா. தொடரை நடத்த தென் ஆப்ரிக்கா அதிக விருப்பம் தெரிவித்தது. தவிர, பாதுகாப்புக்கும் உறுதி அளித்தது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டுடன், நேற்று கலந்து ஆலோசித்த ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி இறுதி முடிவை அறிவித்தார்.
இதன்படி தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., ‘டுவென்டி-20′ தொடர் ஏப்., 18 முதல்…: ஐ.பி.எல்., தொடரின் போட்டிகள் வரும் ஏப்ரல் 18 முதல் மே 24 வரை நடக்க உள்ளன. மொத்தம் உள்ள 59 போட்டிகள் 5 வாரங்களில் நடக்க உள்ளது. 22 நாட்களுக்கு தலா 2 போட்டிகள் நடத் தப்பட உள்ளன. போட்டிகள் டர்பன், கேப்டவுன், புளோயம்போன்டைன், போர்ட்ஸ் எலிசபெத், பிரிடோரியா, ஜோகனஸ்பர்க் ஆகிய ஆறு இடங்கள் தேர்வு செய்யப் பட் டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்க உள்ளது.
இது குறித்து லலித்மோடி கூறுகையில்,
”நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தொடரை இந்தியாவில் நடத்த முடியவில்லை. இது மிகவும் தர்மசங்கடமான நிலை. தொடரை தள்ளி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வெளிநாட்டில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடரை நடத்த அனுமதி அளித்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டுக்கு நன்றி. தவிர, அனைத்து வகையிலும் ஆதரவு அளித்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கும், பி.சி.சி.ஐ., நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறது. நியூசிலாந்து தொடரை முடித்து விட்டு இந்திய அணியினர், வரும் ஏப்.,8 ம்தேதி திரும்புகின்றனர். அவர்களுக்கு சிறிய ஓய்வு அளிக்கும் விதமாக போட்டிகள் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
Saturday, 21 Mar 2009
நியூசிலாந்து வீழ்ந்தது: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா- நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஹேமில்டன் நகரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 279 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 520 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது. பிளைன் 24 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளைனுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் ரோஸ் டெய்லர் 4 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்டர் 21 ரன்களுடனும், பிராங்கிளின் 14 ரன்களுடனும் வெளியேறினார்கள்.
67 ரன் எடுத்திருந்தபோது பிளைன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கேப்டன் வெட்டோரி 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களாக இருந்தது. மெக்குல்லமும், ஓபிரைனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 42 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுகளே இருந்தன. எனவே நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டை காப்பாற்றியதுடன் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தேவையான 242 ரன்களை கடந்தனர். இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.
ஓபிரைன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் பந்தில் லட்சுமனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மெக்குல்லத்துடன் மார்ட்டின் 10-வது விக்கெட் ஜோடியாக சேர்ந்தார். சிறிது நேரத்தில் மெக்குல்லவும் அவுட் ஆனார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்தார். இத்துடன் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்திருந்தது.
39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்கில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக காம்பீர், டிராவிட் களம் இறங்கினார்கள். டிராவிட் நிதானமாக ஆட காம்பீர் விளாசினார். 5.2 ஓவரிலேயே வெற்றிக்கு தேவையான 39 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. காம்பீர் 30 ரன்களுடனும் டிராவிட் 8 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் வென்று இருப்பதன் மூலம் 33 வருடத்துக்கு பிறகு இந்தியா நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
































