Monday, 19 Jan 2009
அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் 44ஆவது அதிபராக, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா இன்று பதவி ஏற்கிறார்.
கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். 48 வயதான ஒபாமா, அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று நடக்கும் விழாவில் புதிய அதிபராக அவர் பதவியேற்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக அவர், மனைவி மிச்சல் மற்றும் மகள்களுடன் பிலடெல்பியாவில் இருந்து தனி ரயிலில் வாஷிங்டன் வந்தார்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கு பக்கத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு(இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 8.30 மணி) பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முதலில் இசை நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, துணை அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்கிறார்.
பின்னர் இந்திய நேரப்படி இரவு 10.30 மணி அளவில், பராக் ஒபாமா அதிபராக பதவியேற்கிறார்.அவருக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஒபாமா உரையாற்றுகிறார்.
இந்த பதவி ஏற்பு விழாவையொட்டி, வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Monday, 12 Jan 2009
இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி ஒபாமாவிற்கு மின்கடிதம்

இலங்கைப் போரால் இன்னலுற்று வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் விதமாக புது முயற்சி ஒன்றை எடுத்திருக்கின்றன நல்இதயங்கள் சில.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஓபாமாவிற்கு லட்சம் மின்கடிதம் அனுப்பி அவருடைய ஆதரவுடன் இலங்கைப் போரை நிறுத்தும், ஈழத் தமிழர்களுக்கு விடியலைக் காட்டும் உன்னத முயற்சி இது.
நீங்களும் இந்த முயற்சியில் கை(யெழுத்துப் போட்டு)கோர்த்துக் கொள்ளுங்கள்.
கீழ்க்காணும் இணையதளத்திற்குச் சென்றால் யார், என்ன என்று கேட்காமல் ஒரு மனு கிடைக்கும். கையெழுத்திட்டு ஒபாமாவிற்கு தட்டிவிடுங்கள், அவ்வளவுதான்.
ஒடுக்கப்பட்டவர்களின் புதிய நாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் ஒபாமாவின் அறிவுறுத்தலுக்காவது இலங்கை அரசாங்கம் இறங்கி வருகிறதா இல்லையா
பார்த்து விடலாம்.
நீங்கள் செல்லவேண்டிய தளம்: http://www.tamilsforobama.com/sign/letter.html
Thursday, 18 Dec 2008
சிறந்த மனிதர் பராக் ஒபாமா: டைம் இதழ் தேர்வு

வாஷிங்டன்: 2008ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக, அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள பராக் ஒபாமாவை டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 1927 முதல் ஆண்டின் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வருகிறது, டைம் வார இதழ்.
அந்த வகையில், 2008-ன் சிறந்த மனிதராக, அமெரிக்க அதிபராக, அந்நாட்டின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்கவுள்ள பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியலில் நம்பிக்கை, எதிர்காலத்தை நோக்கிய இலட்சியம், இவர் மீது அமெரிக்க மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு, ஒபாமாவை இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க செயலர் ஹென்றி பால்சன், பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர் சாரா பாலின் மற்றும் சீனாவின் ஸாங் யிமோவு ஆகியோரைப் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பெற்றுள்ளார், ஒபாமா.
2007ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ‘டைம்ஸ்’ இதழ் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Thursday, 13 Nov 2008
இந்தியாவுடனான உறவு முக்கியமானது: ஒபாமா
டெல்லி: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் புதன்கிழமை காலை தொலைபேசியில் உரையாடினார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துக்கொண்டார். அவருடைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்றும் அவர் அப்போது கூறினார். ஒபாமாவின் வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முன்பு நிதியமைச்சராகவும் தற்போது பிரதமராகவும் இருந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் ஆற்றிவரும் சேவையை ஒபாமா பாராட்டினார்.
அமெரிக்க இந்திய உறவானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உலகளவில் அனைத்து முக்கிய பிரச்னைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் ஒபாமா குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அமெரிக்க உறவு நன்றாக இருந்து வந்துள்ளது. அதை மேலும் மேம்படுத்த வேண்டும். அத்துடன் எதிர்வரும் சவால்களை ஒபாமா தலைமையிலான நிர்வாகம் திறமையாக எதிர்கொண்டு வெற்றியடைய தமது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.
பேச்சின்போது ஒபாமாவையும் அவரது மனைவியையும் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவுக்கு வர தானும் விருப்பத்துடன் இருப்பதாக ஒபாமா கூறியுள்ளார்.
இதற்கு முன்பே மன்மோகன் சிங்கிடம் பேச ஒபாமா முயற்சித்தார். பிரதமர் வெளிநாட்டுச் (ஓமன், கத்தார் விஜயம்) சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவருடன் ஒபாமாவால் தொடர்புகொள்ள முடியவில்லை.
Wednesday, 5 Nov 2008
அமெரிக்க அதிபராகும் ஒபாமாவிற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து!
சென்னை: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒபாமாவிற்கு முதல்வர் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,
‘ஒபாமாவின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான நல்லுறவில் புதிய அத்தியாயம் ஏற்படும் என்று நம்புகிறேன்.
மாற்றத்தை வேண்டி அமெரிக்க மக்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
Wednesday, 5 Nov 2008
வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் கறுப்பர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அபார வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் 44ஆவது அதிபராக 2009 ஜனவரி 20ஆம் தேதி அவர் பதவியேற்கிறார்.
வெள்ளை மாளிகையில் நுழையப் போகும் முதல் கறுப்பர் என்ற பெருமை ஒபாமமாவுக்குக் கிடைத்திருக்கிறது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற, மொத்தமுள்ள 538 தேர்வுக்குழு உறுப்பினர்களில் 270 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒபாமாவுக்கு 349 தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்மெக்கைனுக்கு 173 தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை அமெரிக்கர்களுக்கே யாரென்று தெரியாத ஒபாமா, இன்றைக்கு அமெரிக்க அதிபராகி உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
இந்தத் தேர்தலில் ஒபாமா பல சாதனைகளை புரிந்துள்ளார்.
* ஜான் எப்.கென்னடிக்குப் பிறகு அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முதல் செனட் உறுப்பினர் ஒபாமா.
* ஹவாய் தீவில் பிறந்த ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறை.
* லிங்கன், யுலிசெஸ் எஸ். கிராண்டுக்குப் பிறகு இலினாய் மாகாணத்தில் இருந்து அதிபராகும் நபரும் ஒபாமாதான்.
* இளம் வயதில் அதிபரானவர்கள் பட்டியலில் ரூஸ்வெல்ட் (42), கென்னடி (43), பில் கிளிண்டன் (46 ஆண்டுகள் 5 மாதம்), யுலிசெஸ் எஸ். கிராண்ட் (46 ஆண்டுகள் 10 மாதம்) ஆகியோரை அடுத்து 5ஆவதாக இணைகிறார் ஒபாமா (47 ஆண்டுகள் 5 மாதம்).
* அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் அதிக செலவு செய்ததும் இந்தத் தேர்தலில்தான். ஒபாமா தேர்தல் பிரசார நிதியாகத் திரட்டியது மட்டுமே 60 கோடி டாலர் (2,940 கோடி ரூபாய்).
ஒபாமாவின் இந்தச் சரித்திர வெற்றிக்கு உலகம் முழுக்கவிருந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக அவரது தந்தையின் நாடான கென்யா உற்சாகத்தில் மிதக்கிறது.
Tuesday, 4 Nov 2008
44ஆவது அமெரிக்க அதிபரானார் பராக் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றிபெற்று புது வரலாறு படைத்தார். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் ஒபாமா அதிக இடங்களைப் பெற்று அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு(47) குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன்(72) கடும் போட்டி கொடுத்தார்.
ஆனாலும் அமெரிக்க மக்களின் அபரிதமான ஆதரவில் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா முடிசூடினார்.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 488 தொகுதிகளில் பராக் ஒபாமா 333 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்படும் ஃபுளோரிடா, ஓஹையோ, கலிபோர்னியா ஆகிய முக்கிய இடங்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி அபரிதமான வெற்றியைப் பெற்றுள்ளது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கெய்ன் 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இன்னும் 50 தொகுதிகளின் வாக்கு முடிவுகள் வெளியாக உள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது என்பதால், அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தோல்வியுற்ற ஜான் மெக்கெய்ன், வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிகாகோவில் உள்ள கிராண்ட் பார்க் பகுதியில் மெக்கெய்ன் ஆற்றிய உரையில்,
”அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக நடந்த பரபரப்பான பிரசாரத்திற்கிடையே இருவரும் கடுமையாகப் போட்டியிட்டாலும் அது நாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் அமெரிக்காவிற்காகவே.
இத்தேர்தலில் வென்றதன் மூலம் தனக்கும், அமெரிக்காவுக்கும் ஒபாமா ஒருசேர புகழ் சேர்த்துள்ளார். அமெரிக்கா சந்தித்து வரும் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்று மெக்கெய்ன் கூறினார்.
அமெரிக்காவில் கடந்த 1960ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிற்குப் பின்னர் அதிக வாக்குகள் பதிவானது தற்போதைய தேர்தலில்தான் என்று கூறப்படுகிறது.
பராக் ஒபாமா அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அந்நாட்டு அதிபராக முறைப்படி பொறுப்பேற்கிறார்.
Monday, 3 Nov 2008
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: சாதனை படைப்பாரா ஒபாமா?

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் திங்கள்கிழைமை உச்சகட்டத்தை எட்டியது.
வெற்றி பெற்றால் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற உள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா முந்துவதாகத் தோன்றினாலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனும் தீவிரமான கடைசிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒபாமாவை ஆதரித்தாலும் சில மாகாணங்களில் மிகக் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது. எனவே ஒபாமாவும் தீவிரப் பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டார்.
மெக்கைனுக்கு ஒஹையோ மாகாணம் முக்கியமானது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் ஒஹையோவில் வெற்றிபெறாமல் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
நெவடாவில் ஒபாமா சிறிது முன்னிலையில் இருந்தாலும் வடக்கு கரோலினாவில் மெக்கைன் முன்னிலையில் உள்ளார். மிசெளரியில் இழுபறி காணப்படுகிறது.
ஆனால் எல்லா கருத்துக்கணிப்புகள் மாறக்கூடும். இளம் வாக்காளர்களில் எவ்வளவு பேரும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் எவ்வளவு பேரும் முதியவர்களில் எவ்வளவு பேரும் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்து முடிவுகள் மாறக்கூடும் என அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகும் முதல் கறுப்பினத்தவர் என்கிற பெயரை பாரக் ஒபாமா பெறுவாரா அல்லது கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மெக்கைன் வெற்றிமாலை சூடுவாரா என்று நாளை புதன்கிழமை தெரியும்.
Tuesday, 28 Oct 2008
ஓபாமாவை கொல்ல சதி!: இளைஞர்கள் கைது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்டாளராகப் போட்டியிடும் பராக் ஓபாமா உள்பட 100 கறுப்பர்களை சுட்டுக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நவம்பர் 4ஆம் தேதி நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கறுப்பர் இனத்தவரான பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னும் போட்டியிடுகின்றனர்.
பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், அவரை கொல்ல சதி நடந்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டேனியல் கோவர்ட் (20), ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஷெலசல்மன் (18) இவர்கள் இருவரும் இணைந்து கடந்த மாதம் இண்டர்நெட்டில் தொடர்பு கொண்டு பேசினர். ஒரு ஆயுதக் கடையை கொள்ளையடித்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எடுத்துக்கொண்டு, டென்னசி மாநிலத்தில் கறுப்பர் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அங்கு 100 கறுப்பினத்தவர்களைச் சுட்டுக் கொல்வது என்றும், பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமாவை சுட்டுக் கொல்வது என்றும் சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.
இந்தச் சதித் திட்டத்தை மோப்பம் பிடித்துவிட்ட அமெரிக்க காவல் துறை, அந்த 2 இளைஞர்களையும் கைது செய்தது. இந்த இருவரும் அமெரிக்காவை அமெரிக்கர்கள்தான் ஆளவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். இந்தச் சதித் திட்டத்தில் தங்கள் உயிரைத் தரவும் அவர்கள் தயாராக இருந்திருக்கின்றனர்.
தேர்தல் உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்தச் சதித் திட்டம் அமெரிக்காவில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் ஓபாமாவை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Monday, 14 Jul 2008
ஒபாமா தீவிரவாதியா?
அமெரிக்காவை கலக்கும் ஒபாமா கார்ட்டூன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பேரக் ஒபாமாவை, அவருடைய மனைவியை இஸ்லாமியர்கள் போல, தீவிரவாதிகள் போல சித்திரித்து வெளியிடப்பட்டுள்ள கார்ட்டூன் ஒன்று அமெரிக்காவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நேற்று கடைகளுக்கு வந்த பிரபல வார இதழான ‘தி நியூ யார்க்கர்’ இதழின் அட்டையில் பேரக் ஒபாமா மற்றும் அவருடைய மனைவி குறித்து கார்ட்டூன் ஒன்று இடம்பெற்றது.
அந்தக் கார்ட்டூனில் ஒபாமாவின் மனைவியான மிச்செலி, தீவிரவாதிகளுக்கே உரிய உடையை மாட்டிக்கொண்டு, தோளில் நீண்ட துப்பாக்கி ஒன்றை தொங்க விட்டிருப்பதுப் போலவும், அவருடைய தோளில் ஒபாமா கை வைத்திருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் அலுவலக அறையின் முனபாக இருப்பதுப்போலவும், சுவரில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் ஒன்று தொங்குவதுப் போலவும், கீழே உள்ள தணல் பெட்டியில் அமெரிக்கக் கொடி எரிந்துக்கொண்டிருப்பதுப் போலவும் கார்ட்டூனில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
‘தி பாலிடிக்ஸ் ஆப் பியர்- The politics of fear‘என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரைக்காக ஓவியர் பேரி பிலிட் இதை வரைந்துள்ளார்.
அமெரிக்க மக்களிடையே புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த கார்ட்டூன் குறித்து ஒபாமா தரப்பினர் கூறுகையில், மோசமான வக்கிர உணர்வில் வரையப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டு இது. இதை அமெரிக்க மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்கின்றனர்
நியூயார்க்கர் இதழ் சார்பாக ‘ஒபாமா குறித்து மிகச்’சரியாகவே பிரதிபலித்துள்ளோம்’ என்று கூறப்படுகிறது. மேலும் இதே இதழில் ஒபாமாவுக்கு எதிரான பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டுள்ளன.
































