Archive for the 'American news' Category
Tuesday, 16 Feb 2010
முதலை வாகனம் விற்பனைக்கு

முதலைகளின் மோசமானது அலிகேட்டர். இறந்துபோன அலிகேட்டர் ஒன்றின் தோல் மற்றும் உடல் பாகங்களை மண்ணில் புதைத்து ஒன்றுக்கும் உதவாமல் போகச்செய்வதை விட இரண்டு சக்கர வாகனத்தில் பொருத்தினால் என்ன? இப்படி யோசித்த ஜிம் ஜாப்லன் (45) கேட்டர் பைக் என்றழைக்கப்படும் இந்த இரண்டுசக்கர வாகனத்தை டிசைன் செய்தார்.
ப்ளோரிடாவில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வரும் இவர், விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு நன்கொடை வசூலித்துத் தரும் நோக்கத்தில் இந்த வித்தியாசமான வாகனத்தை
விற்பனைக்கு ம் விட்டிருக்கிறார். இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.36 லட்சம் தான் என்றாலும் நன்கொடை மூலம் ரூ.54 லட்சம் வரை திரட்ட திட்டம். அதற்காக இவர் இந்த வாகனத்தில் ஜம்மென்று ஏறிக்கொண்டு, தான் காப்பாற்றிய பர்மா மலைப்பாம்பையும் தோளில் சுற்றிக்கொண்டு வலம் வருகிறார். ரூ.5400 வீதம் 1000 சீட்டுகளை, பார்ப்பவரிடம் எல்லாம் வேகமாக விற்று வருகிறார் ஜாப்லன்.

10 அடி நீளமுள்ள இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முதலையின் உடல் பாகங்களில் தலையைத் தவிர மற்றவற்றை கழட்டி எடுக்கமுடியும். தலையின் பின்பக்கத்தில் வேகம் காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் குலுக்கலில் யாரோ ஒருவருக்கு சொந்தமாகப் போகிறது இந்த வித்தியாசமான மோட்டார் பைக்.
Tags: American news
Tuesday, 2 Feb 2010
அமெரிக்க நகருக்கு மகாத்மா காந்தியின் பெயர்!

அமெரிக்காவில் டெக்சாஸ் நகருக்கு அருகே தென்மேற்கு ஹூஸ்டனில் வரும் ஒரு பகுதியான ஹில்க்ராப்ட் என்ற இடத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 141 ஆவது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஹில்கிராப்ட் பகுதிக்குள் நுழைந்தால் இந்தியாவிலுள்ள ஏதோ ஒரு நகருக்குள் நுழைந்தது போன்ற தோற்றம் தானாகவே ஏற்படும். எங்கு திரும்பினாலும் இந்தியத் தலைகளாகவே தெரியும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதால் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இங்கு வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் ஹில்கிராப்ட் பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்குமாறு நகர நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். அவர்களுடைய 7 வருட ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் ஹில்கிராப்ட் பகுதி மகாத்மா காந்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கான விழாவில், நகர மேயர் ஆன்னைஸ் பார்க்கர் இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தார். அப்போது ஹூஸ்டன் நகரத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார்.
ஊரின் பெயரை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தக கட்டட உரிமையாளர்களில் 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவேண்டும். அப்போது தான் அந்த கோரிக்கையை நகர நிர்வாகம் பரிசீலிக்கும். ஹில்கிராப்ட் பகுதியை பெயர் மாற்றிக் கோரி 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்ததால் இந்த பெயர் மாற்றம் நிகழந்துள்ளது.
Monday, 1 Feb 2010
அமெரிக்க தபால் தலைகளில் இந்துக் கடவுள்கள் :
இந்திய நிறுவனம் குதூகலத் தொடக்கம்

அமெரிக்காவில் இந்துக் கடவுள்களின் உருவங்கள் கொண்ட தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் ஜோராக இருக்கிறது.
அமெரிக்காவில், அமெரிக்க அஞ்சல்துறை மட்டுமல்லாது தனியாரும் தபால் தலைகள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்ற யுஎஸ்ஏ போஸ்டேஜ் டாட் காம் நிறுவனம் அட்லாண்டாவில் உள்ள இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது. இந்நிறுவனம்தான் இந்து க் கடவுள்களை தபால் தலைகளில் அச்சிட்டு வெளியிடுகிறது. வழக்கமான தபால் தலைகள் போலவே இவற்றையும் தபால்களை அனுப்ப பயன்படுத்ததலாம்.
பிசி போஸ்டேஜ் என்ற நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் இந்த தபால்தலையின் விலை 44 செண்டுகள்.
தனியாரும் தபால் தலைகள் வெளியிட அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளானாலும் இச்சட்டப்படி தபால்தலைகளை வெளியிடும் முதல் நிறுவனம் யுஎஸ்ஏ போஸ்டேஜ் டாட்காம்தான். இந்துக் கடவுள்களைத் தாங்கி வரும் இந்த தபால் தலைகளுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Tags: American news, Hindu Gods, US stamps
Wednesday, 27 Jan 2010
டைகர் உட்ஸை பிரியமாட்டார் மனைவி எலின்

கோல்ப் மன்னனாகப் பகலிலும் காதல் மன்னனாக இரவிலும் திகழ்ந்த டைகர் உட்ஸை அவர் மனைவி எலின் நார்டிக் ரென். விவாகரத்து செய்வதாக இல்லை என செய்திகள் கூறுகின்றன. மனைவி எலின் உடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வரும் டைகர் உட்ஸ் 12 க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தது சமீபத்தில் வெட்ட வெளிச்சமானது.
இதைத் தொடர்ந்து அவருடைய வாழ்வில் புயல் வீசியது. அவருடைய மனைவி எலின் விவாகரத்து கோரவிருக்கிறார் எனக் கூறப்பட்டது. தனனுடைய தவறுகள் வெளி உலகிற்கு தெரியவந்ததைத் தொடர்ந்து கூனிக்குறுகிப் போன டைகர் உட்ஸ், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டார். குடும்ப வாழ்க்கையை தொடர விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். அவருடைய மனைவி எலினின் முடிவு தான் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செக்ஸ் போதையில் மீள அதற்கான சிகிச்சை ஒன்றை டைகர் உட்ஸ் மேற்கொண்டு வருகிறார். அவருடன் மனைவி எலினும் இருந்திருக்கிறார். ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு டைகர் உட்ஸுடன் வீட்டுக்குத் திரும்பியிருக்கும் எலின் சந்தோஷமாகவே காணப்படுவதாக செய்தித்தளங்கள் கூறுகின்றன.
எலின், டைகர் உட்ஸிடமிருந்து விவாகரத்து கோர மாட்டார் என்றும் அந்த செய்தித்தளங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய குழந்தைகள் அப்பா இல்லாமல் போய்விடக்கூடாது எனக் கருதும் எலின், டைகர் உட்ஸுடன் இணைந்து வாழ்ந்தாலும் முன்புப் போல காதல் வாழ்க்கை வாழாமல் நண்பராகவே பழகுவார் எனக் கூறப்படுகிறது.
Tags: American news
Monday, 25 Jan 2010
பிராட் பிட்டை பிரிகிறார் ஏஞ்சலினா ஜூலி!

பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜூலியும் அவருடைய கணவரான பிராட் பிட்டும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் பிரிந்து செல்வது சட்டப்படி அறிவிக்கப்படவிருக்கிறது.
விவாகரத்து செய்திகளை இருவருமே மறுத்து வந்தாலும் இப்போது அதற்கு முந்தைய சட்ட நடைமுறைகளை இருவரும் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
விவாகரத்து மற்றும் சொத்துப் பிரித்தலுக்கான அனைத்து சட்ட ஆவணங்களும் கையெழுத்தாகிவிட்டதாக ஜூலி மற்றும் பிட் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கணவர் பிராட் பிட்டுக்கு 1,435 கோடி ரூபாயை ஜீவனாம்சமாகத் தருவார் ஜூலி என்கிறார்கள்.
2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜூலி - பிட் 5 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதில் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. மேலும் 3 குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
இந்த ஆறு குழந்தைகளில் தத்தெடுத்த 3 குழந்தைகள் இருவரது கூட்டுப் பொறுப்பிலும் இருப்பார்கள். இதற்காக தனி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளனராம். விரைவில் இருவரும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர். தாங்கள் பிரிவதற்கான காரணத்தை இன்னும் இருவருமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: American news, ஏஞ்சலினா ஜூலி, பிராட் பிட்
Friday, 22 Jan 2010
இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் : விடியோ

உயிரிழந்த தாய் மற்றும் சேயை அடுத்த சில நிமிடங்களில் உயிர்ப்பித்த அதிசயம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்நிகழ்வு நிகழ்ந்ததால் ‘கிறிஸ்துமஸ் அதிசயம்’ என்றே அதிசயிக்கிறது அப்பெண்ணின் குடும்பம்.
கொலாராடோவில் மெமொரியல் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ட்ரேஸி என்ற பெண் சேர்க்கப்பட்டார். கிறிஸ்துமஸ் தினத்தன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பிரசவ அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், பிரசவ சமயத்தில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. நாடி துடிப்பது நின்று விட்டது பேச்சு மூச்சற்றுப் போனார் ட்ரேஸி. அவருடைய வயிற்றில் இருந்த குழந்தைக்கு என்னவாயிற்று என்பது சட்டென தெரிய வரவில்லை.
ட்ரேஸி இறந்துவிட்டதாக முடிவுக்கு வந்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையையாவது காப்பாற்றலாமே என்று தீர்மானித்தனர்.
குழந்தையை வெளியே எடுத்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அதுவும் அசைவில்லாமல் இருந்தது. ஓரிரு நிமிடங்கள் கழிந்தன. இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தாய் ட்ரேஸியின் உடலில் அசைவுகள் தெரிந்தன. அவருடைய இதயம் சீராக இயங்கத் தொடங்கியது. இந்த அதிசயம் நிகழ்ந்த அடுத்த நொடி வெளியே இருந்த குழந்தையும் மூச்சு விடத் தொடங்கியது. மருத்துவர்கள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
ட்ரேஸியின் கணவர் ஹெர்மன்ஸ்டோர்ஃபர் இதுகுறித்து கூறுகையில், “அன்று இரவு என் உறவினர்கள் பலரும் மருத்துவமனையில்தான் குழுமியிருந்தனர். ட்ரேஸி இறந்துவிட்ட செய்தியை அவர்களிடம் மறைக்க முடியவில்லை. ஆனால் மனைவியும் என் குழந்தையும் அதியசயமாக உயிர் பிழைத்து என்னை துக்கத்தில் இருந்து மீட்டெடுத்து, மனதை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டனர்” என்றிருக்கிறார்.
விடியோ:
Tags: American news
Thursday, 21 Jan 2010
குழந்தையை சரிவர பராமரிக்காத அன்னா கோர்னிகோவாவின் தாய் கைது

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிகோவாவின் தாயார் குழந்தையை சரிவரக் கவனிக்காத காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.
டென்னிஸ் விளையாட்டில் தன்னுடைய ஆட்டத்திறமையோடு அழகாலும் பிரபல்யம் அடைந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா கோர்னிகோவா. இவருடைய தாயார் அலா விளாடிமிரோனா கோர்னிகோவா. அன்னா கோர்னிகாவோவின் அப்பாவை விட்டு பிரிந்துவிட்ட இவர், புதிய துணையோடு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஆலன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் புளோரிடாவில் உள்ள வீட்டில் வைத்து அலா விளாடிமிரோனா கோர்னிகோவா கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் அவருடைய மகனை அவர் சரிவர கவனிக்காததால் அவன் காயம் பட்டுக் கொண்டான் என்பதே.

புளோரிடாவில் உள்ள வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு கடைக்குச் சென்றிருக்கிறார் இவர். சுமார் 50 நிமிடம் கழித்து வீட்டுக்கு வந்தவரை வாசலில் வைத்தே கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டினுள்ளே இருந்த குழந்தை ஆலன் இரண்டாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியே வெளியே முயற்சி செய்திருக்கிறான். ஜன்னல் சுவரில் தொங்கியபடி இறங்க முயன்றவன் அங்கிருந்து கீழே விழுந்திருக்கிறான். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து விழுந்த அவனுக்கு கைகால் மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவனுடைய அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையின் நிலையைக் கண்டு கோபமடைந்து, அவனுடைய தாயாரான அலா விளாடிமிரோனா கோர்னிகோவா மீது காவல்துறையில் புகார் செய்துவிட்டார். ஓடோடி வந்த காவல்துறை விசாரணையின் முடிவில் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அந்தத் தாயைக் கேட்டால், “அவன்தாங்க வரமாட்டேன்னு சொன்னான். அதனால் அவனை போன் பக்கத்தில இருக்கச் சொல்லிட்டு, அவனுடைய பாதுகாப்புக்காகத்தான் வீட்டை பூட்டிட்டுப் போனேன்” என்று புலம்புகிறார்.
அப்பா வேறு வேறு என்றாலும் அன்னாகோர்னிகோவாவும் ஆலனும் அக்கா, தம்பியாக அன்புடன் பழகி வந்தனர். தாயார் கைது செய்யப்படுவதற்கு முன்தினம் கூட தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அன்னா கோர்னிகோவா, ‘அவனும் சராசரி குழந்தைதான். அங்கே இங்கேன்னு அவன் ஓடிக்கிட்டே இருப்பான். ஒரு நிமிஷம்கூட ஒரு இடத்தில் நிக்க மாட்டான்’ என்று தம்பி ஆலன் பற்றி தம்பட்டம் அடித்திருந்தார். இப்ப என்ன சொல்வாரோ?
Tags: Alla Kournikova, Allan, American news, Anna Kournikova, Anna Kournikova and half-brother Allan
Thursday, 21 Jan 2010
அமெரிக்க படகுக் கண்காட்சியில் அசத்திய அணில்!

அமெரிக்கா, மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் மினியேபலிஸ். இந்த நகரை மிசிசிபி ஆறும் மின்னசோட்டா ஆறும் தொட்டுச் செல்வதால் நீராடுவதும், படகுப் பயணமும் வெகு பிரசித்தம். அதனால் இங்கு ஆண்டுதோறும் படகுக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ‘38ஆவது மினியேபலிஸ் படகுக் கண்காட்சி’ நேற்று (20 ஆம் தேதி) தொடங்கியது.
24 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் விதவிதமான வடிவங்களில் பிரமாண்ட படகுகள் பங்குகொண்ட நிலையில் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறது குட்டி அணில் ஒன்று. சின்ன மோட்டார் படகின் பின்னால் சிறிய நீர்ச்சறுக்கு பலகையில் தன்னுடைய குட்டிக்கால்களை ஊன்றியபடி, கயிற்றை தன்னுடைய கைகளில் பிடித்தபடி நீரில் சுற்றி வருகிறது இந்த அணில்.
ட்விக்கி என்ற இந்த அணிலை, 1978 ஆம் ஆண்டுவாக்கில் இயற்கை சீற்றம் ஒன்றின் போது காப்பாற்றிய லெளஆன் மற்றும் அவருடைய (மறைந்த) கணவர் சுக்கும் அதற்கு நீர்ச்சறுக்கு விளையாட்டையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
இந்த படகுக் கண்காட்சிதான் என்றில்லை ஐரோப்பியாவில் நடைபெறும் பல்வேறு படகுக் கண்காட்சிகளிலும் கலந்துகொண்ட தன்னுடைய திறமையைக் காட்டிவருகிறது ட்விக்கி. அதுமட்டுமல்ல தன்னுடைய திறமைக்குக் கிடைத்த பரிசாக இந்த அணில் பிரபல டிவி ஷோக்களான குட்மார்னிங் அமெரிக்கா, தி ரோஸி ஓடொனால்டு ஷோ மற்றும் லேட் நைட் வித் டேவிட் லெட்டர்மேன் ஷோக்களில் இடம் பெற்றிருக்கிறது.
மேலும் மூன்று திரைப்படங்களிலும் ட்விக்கி நடித்திருக்கிறது.
ட்விக்கிக்கு மட்டுமல்லாது இரண்டு குட்டி குதிரைகள், பிரான்ஸ் தேசத்து பூடில் இன நாய், தவளை, பூனை, ஆர்மடிலோ என்ற குட்டி மிருகம் ஆகியவற்றுக்கும் நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக் கொடுத்திருக்கும் லெளஆன், ட்விக்கிக்கு இணையாக ஓலி என்ற மற்றொரு அணிலுக்கும் சறுக்கு விளையாட்டை கற்றுத் தந்திருக்கிறார்.
Wednesday, 20 Jan 2010
அமெரிக்க ஆண்களுக்காக வந்திருக்கும் ஆளுயர பெண் பொம்மை

ஆண், பெண் இருபாலரின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்யும் உபகரணங்கள் மேற்கத்தைய நாடுகளில் மிகவும் சகஜம். இப்போது அதில் ஒரு முன்னேற்றம். கடந்த வாரம் அமெரிக்கா, லாஸ்வெகாஸ் நகரில் நடந்த ‘வயது வந்தோருக்கான கண்காட்சி’ ஒன்றில் ரப்பரால் ஆன ஆளுயர பெண் பொம்மையை அறிமுகபடுத்தினர்.
“5 அடி 7அங்குல உயரமுள்ள இந்த பெண் பொம்மை நடக்காது. ஆனால் பேசும். சமைக்காது ஆனால்… ஆண்களின் மூடுக்கு ஏற்ப நல்ல துணையாக இருக்கும். உங்களுக்குப் பிடித்ததெல்லாம் இதற்கும் பிடிக்கும்” என்கிறார் ‘ரூக்ஸி’ என்ற இந்த பெண் பொம்மையை தயாரித்த ட்ரூகாம்பேனியன் நிறுவனத்தின் தலைவர் டக்ளஸ் ஹைன்ஸ்.
மொத்தத்தில் உங்கள் மனைவி போல இருக்காது என்கிறார்கள். ‘ரூக்ஸி’ யை கேர்ள் ஃப்ரண்டாக்க வேண்டுமானால் 3 லட்ச ரூபாய் அழ வேண்டியிருக்கும்.
Tags: American news, roxxxy
Tuesday, 19 Jan 2010
நியூயார்க் நகர சின்ன வீடு ரூ.9.5 கோடிக்கு விற்பனை

நியூயார்க் நகரின் சின்ன வீடு என்று இதை சொல்லலாம். நீளத்தில், அகலத்தில், அழகில், அலங்காரத்தில் என எல்லாவற்றிலும் பிரமாண்டம் காட்டும் நியூயார்க் நகர வீடுகளுக்கு இடையே வெறும் 10 அடி அகல இடத்தில் 42 அடி நீளத்திற்கு, 1873இல் கட்டப்பட்ட வீடு இது. அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டதும், அதிக அளவில் பொதுமக்கள் பார்வையிட்ட வீடும் இதுதான்.
மன்ஹாட்டன் பகுதியில் பெட்ஃபோர்டு வீதியில் உள்ள இந்த வீட்டின் எண் 75 1/2. எண் 75 வீட்டுக்கும் எண் 77 வீட்டுக்கும் இடையே சிறிய சந்தாக இருந்த இந்த இடத்தில் வீட்டைக் கட்டி விட்டார்கள். எட்டரை அடி அகலம் கொண்ட இரண்டு படுக்கை அறைகள், இரண்டு கழிவறைகள் கொண்ட இந்தவீடு விற்பனைக்கு வரும்போதெல்லாம் பரபரப்பை கிளப்பிவிடும்.
2000ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த வீட்டை ரூ.7.2 கோடி கொடுத்து ஒருவர் வாங்கினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த வீடு விற்பனைக்கு வந்தபோது அதன் மதிப்பு ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுத்துக்கொண்டிருப்பதாலும், இந்த வீட்டின் குறுகிய தோற்றமும் விலை மதிப்பை குறைத்துவிட்டன. தற்போது இந்த வீட்டை 2.1 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார் ஒருவர். அவர் அங்கு வசிக்கப் போவதில்லை என்பதற்கு, ரியல் எஸ்டேட் இணையதளங்களில் வந்த விளம்பரமே சாட்சி. நியூயார்க் நகரத்தின் சின்ன வீடான இந்த வீட்டை 10ஆயிரம் டாலர் மாத வாடகைக்கு விடத் தயார் என்று விளம்பரம் கொடுத்துவிட்டார் வாங்கியவர்.
































