 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
ம.கருப்பபையா, தஞ்சாவூர்.
|
 |
சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு சார்பில் இலவச மின்மோட்டார் வழங்கப்படுமாமே?
|
 |
குறைவான திறன் கொண்ட பம்பு செட்டுகளை மாற்றுவதன் மூலம் இருபது சதவித மின்சாரம் சேமிக்க முடியுமென்று முதல்வர் சொல்கிறார். அரசியல் விழாக்களுக்கு இவர்கள் கொக்கி போடுவதை நிறுத்தினாலே நாற்பது சதவீதம் சேமிக்கலாம். இதையும் தனது பேச்சில் இவர் கொக்கி போட்டு இழுத்திருந்தால், இந்த இலவசங்களை இவர் தவிர்த்திருக்கலாம்.
|
|
 |
எம்.அப்துல் ஹமீது, தேனி.
|
 |
சுதந்தர தினத்தில் காஷ்மீர் முதல்வர் மீது ‘ஷு’ வீசப்பட்டிருக்கிறதே?
|
 |
காலனி ஆதிக்கம் போனதற்காகத்தான் சுதந்தரத்தையே நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அந்தச் சுதந்திரத்தில் இப்படியொரு காலணி ஆதிக்கம் பெருகுவது வரவேற்கக்கூடியதல்ல, முளையிலேயே இது வேரறுக்கப்பட வேண்டிய விஷயம்.
|
|
 |
கே.ரங்கநாதன், காரமடை.
|
 |
அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காமன் வெல்த் போட்டியில் ஏகப்பட்ட ஊழலாமே?
|
 |
விளையாட்டுன்னா இது மாதிரி விளையாட்டு எங்கேயும் நடந்திருக்கக்கூடாதுன்னு விளையாடிட்டாங்க போல. மொத்தத்தில் காமன்வெல்த் என்றால் பொதுச் சொத்து - அனைவருக்குமானது என்று பொருள். இதைத்தான் இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்களோ என்னவோ!
|
|
 |
ஏ.வெற்றிகொண்டான், திருச்சி-2.
|
 |
மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் இட ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்துவது சிரமம். எனவே அந்த முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டுமென்று கலைஞர் சொல்கிறாரே?
|
 |
அவர் சொல்வது சரிதான். இதைப் புற நோயாளிகள் பிரிவிலேயே குணப்படுத்த வேண்டும். இதை உள் நோயாளியாக அனுமதிக்கக்கூடாது. இதை உணர்ந்து மத்திய அரசும் பணிந்துவிடும் என்றே தோன்றுகிறது.
|
|
 |
ஆர்.மாரிசாமி, குடியாத்தம்.
|
 |
அமைச்சர் பதவிகளுக்கு அ.தி.மு.க.வில் இப்போதே போட்டி போடுகிறார்களாமே?
|
 |
அட, இவ்வளவு சீக்கிரமாய் நாம் விலை போய்விட்டோமா? யாரும் என்கிட்ட சொல்லலையே? நான் என்ன விலைக்குப் போனேங்க? யாராவது செல்லுங்களேன்.
|
|
 |
எஸ்.திருவேங்கடம், மதுரை.
|
 |
வருங்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதை இப்போதே செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்கிறாரே ராகுல்காந்தி?
|
 |
மன்மோகன் சிங் உண்மையில் பிரதமரல்ல என்று எல்லாக் கட்சியினரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது சரியாப் போச்சு! இந்தவொரு வாக்குமூலத்திற்கு ராகுலுக்கு இவ்வளவு நாளா பிடித்தது! ராகுலின் உள்நோக்கம், ஆசை வெட்டவெளிச்சமாகிவிட்டது.
|
|
 |
சை.ஞானமுத்து, வீரசோழகன்.
|
 |
தற்போது கடவுள் யார் கையில்?
|
 |
படம் என்றால் அந்தந்த ஏரியா டிஸ்டிரிபியூட்டர் கையில்! சிலை என்றால் அந்தந்த அறங்காவலர்கள் கையில்! தத்துவம் என்றால் ஆன்மிகத்தலைவர் கையில்!
|
|
 |
வி.சாமிநாதன், அம்பத்தூர்.
|
 |
ஒரு குடும்பத்தில் யார் ஆட்சி தேவை?
|
 |
எங்குமே இன்று கூட்டணிதான் நல்லா இருக்கு. அதுதான் மைனாரிட்டியைக் கூட மெஜாரிட்டியாக்குகிறது என்பேன். எனவே எனது ஃபேவரைட் கூட்டணி ஆட்சிதான்!
|
|
 |
சி.எஸ்ஏ. கொடுங்கையூர்.
|
 |
நடிகர் பாண்டியராஜன் அவர் அளவிற்கு தன் மகனை உருவாக்குகிறராமே?
|
 |
நாயகனுக்கு உயரம் தேவையில்லை என்று நீரூபித்து பல உயர்ந்த நடிகர்களைத் தாண்டி உயரம் தொட்டவர் பாண்டியராஜன். பெரிய பெரிய நாயகர்கள் போல் பல ஆண்டுக் காலமாகத் திரையுலகில் தாக்குப் பிடித்தும் வருகிறார். தன் மகனைத் தன்னைவிட உயர வைத்துப் பார்க்கும் இவரது ஆசை தவறல்லவே!
|
|
 |
டி.இருதயராஜ், தேவகோட்டை.
|
 |
மனிதனுக்கு அடக்கம் இல்லையென்றால்?
|
 |
அவனது வாழ்க்கை முடக்கமாகும். பிறகு அன்றாட எழுப்புதலுக்கே அவனுக்கு பிசியோதெரபி தேவைப்படும்.
|
|
 |
கே.ஆர்.அமுதன், திருநெல்வேலி.
|
 |
மேலவையால் என்ன பயன்?
|
 |
அரசியலில் நடக்க முடியாதவர்களுக்கான விஞ்ச் இது! விஞ்ச்சில் போகிறவர்கள் படியேறுகிறவர்களைவிட வேகமாயப் போய் அதே வேகத்தில் பஞ்சாமிர்தங்களையும் வேகமாய் பெறுவார்கள். அதனால்தான் படியேறும் பக்தர்களைவிட இந்த பல்லக்கு பக்தர்களுக்குள் போட்டாபோட்டி!
|
|
 |
பே.திருமாமுருகன், கன்னியாகுமரி.
|
 |
வசை பாடுவதில் வல்லவர்கள் யார்?
|
 |
அன்று காளமேகப் புலவர் நேற்று ஆண்டாள் கவியரசர். இன்று கலைஞரும், ஜெயலலிதாவும்.
|
|
 |
பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.
|
 |
விரைந்து நீதி கிடைக்காததற்கு வழக்கறிஞர்களைக் காரணமாகச் சொல்வது சரியா?
|
 |
ஓரளவு சரி. வாய்தா வழக்கறிஞர்களும் ‘பிசி’ வழக்கறிஞர்களும் மனம் வைத்தால் வழக்குகளை விரைவுபடுத்த முடியும். இந்நிலையில் நீதிபதிகளும் ஒரு காரணம் என்பதை ஓர் ஆந்திர நீதிபதி வெட்ட வெளிச்சம் போட்டிருக்கிறார். குண்டூர் நீதிபதி சத்தியநாராயணமூர்த்தி ஒரே நாளில் 111 தீர்ப்புகளை வழங்கி முடித்திருக்கிறார். நீதிபதிகள் மனம் வைத்தால் வழக்கறிஞர்களை விரைவுபடுத்தி, வழக்குகளையும் விரைவுபடுத்தி உடனுக்குடன் தீர்ப்பு வழங்கமுடியும் என்பது இவர் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிற்கு இன்று நிறைய சத்திய நாராயணமூர்த்திகள் தேவைப்படுகிறார்கள்.
|
|
 |
பி.ராஜன், பாளையங்கோட்டை.
|
 |
கமல் மலையாள நடிகர்களைப் பற்றி இன்னமும் பெருமையாகச் சொல்கிறாரே?
|
 |
கமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படவுலகில் தன்னை இணைத்துக் கொண்டு அவ்வப்போது நடித்து வருபவர். கேரள நடிகர்கள் புறக்கணித்ததற்கு ஒரு வேளை ஏதோ ஒரு வகையில் அவர்கள் புண்பட்டிருக்கலாம். மலையாள இரசிகர்களிடம் கமலுக்கு அசைக்க முடியாத இடம் உண்டு. இதுபோதும். மற்றபடி கமல் இந்தப் பிரச்னையை மிக அழகுறக் கையாண்டு மலையாள நடிகர்களை நன்கு உயர்ந்து பார்க்க வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
|
|
 |
கே.அருண்குமார், பாண்டிச்சேரி.
|
 |
மாவோயிஸ்டுகளின் அட்டகாசங்கள் குறையவில்லையே?
|
 |
பஞ்சாபியத் தீவிரவாதிகளைவிடவா இவர்கள் வல்லவர்கள். காலிஸ்தான்வாதிகளின் வாலை இந்தியா ஒட்ட நறுக்கவில்லையா? மாவோயிஸ்டுகளும் முடக்கப் படத்தான் போகிறார்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.
|
|
 |
நா.குமார், பாண்டிச்சேரி.
|
 |
சென்னையின் புதிய பெருமை ஏதும்?
|
 |
எக்ஸ்பிரஸ் அவென்யூ எனும் வணிக வளாகத்தைச் சென்னை வரும்போது தவறாமல் காணுங்கள். பெருமையும் பூரிப்பும் ஒருங்கே ஏற்படாவிட்டால் என்னைக் கேளுங்கள். ஏதேது! ஏதும் வெளிநாட்டுக் கட்டடத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என மலைப்பீர்கள். இந்திய நகரங்களுள் எந்த நகரத்தில் இப்படி ஒரு வளாகம் இருக்கிறது காட்டுங்கள் என்று சவாலே விடலாம்.
|
|
 |
எஸ்.டெய்சி, பெங்களூரு-2.
|
 |
மலையாளம் செம்மொழி ஆகிறதாமே?
|
 |
தமிழிலிருந்து பிறந்த மொழிக்கே செம்மொழி விருதா? மகிழ்வோம்! தமிழுக்கு இதனால் மேலும் பெருமையே. எனவே ஏக்கம் கொள்ள வேண்டியது இல்லை.
|
|
 |
எம்.சையது, திருப்பூர்.
|
 |
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வந்தவிட்டதே?
|
 |
சட்டத்தில் பல ஓட்டைகள்; நீதியமைப்புகளில் பல சந்துகள்; குற்றத்தை நிரூபிப்பதில் காவல் துறையின் கோட்டை விடல்கள். இவற்றை மீறி நியாயம் கிடைத்திருக்கிறது. ஆனால் பத்து வருடங்கள்! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்கிற பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.
|
|
 |
தி.முருகன், கரூர்.
|
 |
கலைஞரின் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது போலிருக்கிறதே?
|
 |
இல்லை. சிறுதாவூர் சீமாட்டி என்று இவர் ஒருவருக்குச் சூட்டியிருக்கும் புதுப்பட்டம் இவரது நல்ல நகைச்சுவை உணர்வு வற்றாதையே காட்டுகிறது!
|
|
 |
அ.குப்புசாமி, திருவாரூர்.
|
 |
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்குப் பெரியார் விருதாமே?
|
 |
நமக்கு நாமே திட்டத்தை தி.மு.க. சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது.
|
|
 |
எம்.டில்லி, பெரம்பூர்.
|
 |
ஆந்திர ஜகன் காங்கிரஸின் எதிர்ப்புக்கு அடங்குவாரா?
|
 |
அநேகமாகமாட்டார். ஜகனின் ஆதரவாளர்கள் இப்போது ஜகா வாங்குவதால் ஜகன் தன் இரங்கற் சுற்றுப் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜகன் தனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து ஜகமே (உலகமே) தனக்குப் பின்னால் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார், பாவம்!
|
|
 |
|
|