Tuesday, 2 Feb 2010
தமிழ்ப் படம் : திரை விமர்சனம்

தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்து வந்திருக்கும் படம்தான் ‘தமிழ்ப் படம்’.
மதுரைக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமத்தின் ஒரு பெயர் சினிமாபட்டி. இந்த கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடுகின்றனர். காரணம், இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் நடிக்க கோடம்பாக்கம் போய் விடுகிறார்கள். கொஞ்சம் பெரிய ஆள் ஆனவுடன் ‘அடுத்த முதல்வர்’ எனச் சொல்லிக் கொண்டு அரசியலிலும் நுழைகின்றனர். இதனால் கடுப்பாகும் அரசுகள் இந்த கிராமத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் கடுப்படுக்கின்றன. அதனால் பஞ்சாயத்தில் எடுத்த தீர்மானப்படி ஆண் சிசுக் கொலை நடத்தப்படுகிறது.
பெரியார்தாசனின் மனைவிக்குப் பிறக்கும் ஆண் குழந்தையை, மருத்துவச்சி பரவை முனியம்மா காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். பெரியவனாகும் அந்த குழந்தைதான் கதாநாயகன் ஷிவா. குடிசைப் பகுதியில் வசிக்கும் அவர், ரகசிய போலீசில் வேலைப் பார்ப்பதால் ரவுடிகளை அடித்துத் துவைக்கிறார். க்ளைமாக்சில் தாதாக்களின் தலைவனை கைது செய்து நீதிமன்றத்தில், நீதிக்காக நிறுத்துகிறார்.
காலம் மாறினாலும் தன்னை மாற்றிக்கொள்ளாத தமிழ்ப் படங்களை ஒவ்வொரு காட்சியிலும் காய்ச்சி எடுக்கிறார்கள் ‘தமிழ்ப் படம்’ படத்தில். கருத்தம்மா படத்தைப் போல் துவங்கும் கதையில், பெண் சிசு கள்ளிப்பாலால் கொல்லப்படுகிறது என்றால் இதில் ஆண் சிசு –கள்ளிப்பால் எனத் துவங்குகிறது. முதல் காட்சியே சொல்லிவிடுகிறது கதை எந்த வழியில் பயணிக்கப்போகிறது என்று.
ரவுடிகளின் அட்டகாசத்தை கண்டு விட்டு ஓடி வரும் சிறுவன் பாட்டியிடம் கூற, ‘நீ பெரியவனா ஆகனும்னா சைக்கிள் பெடலை சுத்து’ என்கிறார் பாட்டி. அவனும் சைக்கிள் பெடலைச் சுற்ற சில நொடிகளில் பெரியவனாகிவிடுகிறான். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களை துவைத்தெடுத்து, நாட்டில் உள்ள அத்தனை ஆக்ஷன் நாயகர்களையும் நெற்றிப்பொட்டில்அடிக்கிறார்.
கதாநாயகி திஷா பாண்டேவுடன் ஷிவா பாடும் காதல் பாட்டான ‘ஓ மகசியா’ பாடல் பல பாடல்களில் வரும் ஹம்மிங்கையெல்லாம் வைத்து முழுப்பாடலாக்கப்பட்டு கிண்டல் அடிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியின் அம்மா அழகு கதாநாயகனிடம், ‘என் பொண்ணு கோடீஸ்வரி. நீயோ ஏழை. உனக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது?’ என்கிறார். அத்துடன் வேலைக்காரனிடம் ‘காபி கொண்டா’ என்கிறார். ‘கோடீஸ்வரன் ஆகிக் காட்டுகிறேன்!’ என்று சவால்விடும் நாயகன் இஸ்த்ரி போட்டும், பேப்பர் போட்டும், பால் விற்றும் கோடீஸ்வரனாகி அழகு வீட்டுக்குச் செல்கிறார். அப்போது வேலைக்காரன் காபி கொண்டுவர, ‘அடடே, காபி கைக்கு வர்றதுக்குள்ள கோடீஸ்வரனாயிட்டியே!’ என்று அழகு சொல்லும்போது சிரிப்பால் நம் அடி வயிறு வலிப்பது நிஜம்.
ஒட்டுமொத்தமாகத் தமிழ்ப் படங்களை, அதன் அபத்தமான காட்சிகளை சுட்டிக்காட்டி துகிலுரித்திருக்கிறார்கள். கடைசியில் புது வில்லன் வருவார் என எதிர்பார்க்கும் நிலையில், பரவை முனியம்மாவை ரவுடிகளின் பாஸ் போல காண்பித்து அங்கும் நையாண்டியை நிலை நாட்டியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்திற்கு வரும் வழக்கை சில நொடிகளில் விசாரிக்கும் நீதிபதி வி.எஸ் .ராகவன், ‘தீர்ப்பை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கலாம் என்றுதான் நினைத்தேன். அன்றைக்கு என் அக்கா வீட்டில் ஒரு விழா இருப்பதால் இப்பவே தீர்ப்பை சொல்லிடறேன்’ என்று தீர்ப்பு சொல்வது சூப்பர்ரக காமெடி.
தமிழ்ப் படங்களை கிண்டல் அடித்தே தமிழ்ப்படம் கொடுத்திருக்கும் இயக்குநர் அமுதன் துணிச்சலானவர் மட்டுமல்ல திறமையானவரும் கூட.
































