Sunday, 24 Jan 2010
இனி இருட்டு ஏரியா படம் கிடையாது : தேசிய விருது பெற்ற பாலா பேட்டி

நான் கடவுள் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார் அவர். அப்போது அவர் பேசுகையில், தேசிய விருதை தன்னுடைய குரு பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்.
“என்னை விட மிகப்பெரிய இயக்குனர்கள் மணிரத்னம், பாலுமகேந்திரா, கே.பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். தேசிய விருது கிடைத்திருப்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது; கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இறக்கை கட்டி பறப்பது போல் இருக்கிறது. அதே நேரம் இந்த விருது எனக்கு கிடைத்ததற்காக என்னை விட அதிகம் சந்தோஷப்படும் இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்கள். ஒருவர் என் குரு பாலுமகேந்திரா, இன்னொருவர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாம்மா. இந்த தேசிய விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் எப்போதுமே எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து படம் எடுக்க மாட்டேன். நான் கடவுள் படத்தையும் விருது எதிர்பார்ப்புடன் எடுக்கவில்லை. என்னை நம்பி வந்த நடிகர் - நடிகைகளுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என நினைப்பேன். என்னைவிட அவர்கள்தான் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டார்கள். பூஜா முகம் முழுக்க கறுப்பு மை பூசி, கண்களில் லென்ஸ் வைத்து கஷ்டப்பட்டு நடித்தார். அவர்களுக்கெல்லாம் விருது கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது.
என்னுடைய அடுத்த படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். இனிமேல் நீ இருட்டு ஏரியாவுக்குள் போகக்கூடாது என இமையராஜாவும், பாலு மகேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். அதுபோன்ற படங்களை இனி இயக்க மாட்டேன். இனி நான் இயக்கும் படங்கள் சராசரி மனிதர்களைப் பற்றியதாக இருக்கும்” என்றார் பாலா.

































January 24th, 2010 at 11:25 pm
all the best bala sir ellam valla eraivan ungalukku nenda ayulayum nalla seyal theranayum tharattum.