» Aairathil Oruvan : Selvaraghavan meets media .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Monday, 18 Jan 2010

Aairathil Oruvan : Selvaraghavan meets media

நான் இயக்கிய படங்களில் சிறந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ : செல்வராகவன்

aayirathil-oruvan-team.jpg

நா
ன் இயக்கிய படங்களில் சிறந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. பெரிய வரவேற்பு கிடைத்தால் இதன் இரண்டாம் பாகத்தையும் நிச்சயம் எடுப்பேன்” என்று திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கூறினார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியானது. ரசிகர்களின் விருப்பத்துக்குக்கேற்ப படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டு 20 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வராகவன், படம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவருடைய பேட்டி வருமாறு:

படத்தில் சோழர், பாண்டியர் கால சரித்திரம் திரித்து கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே.?

“சரித்திரத் தகவல்கள் அனைத்தையும் தஞ்சைப் பல்கலைக்கழக ஆவணங்களிலிருந்தும் ஏராளமான கல்வெட்டுகளிலிருந்தும் முறையாகப் பெற்றோம். சினிமாவுக்காக சில இடங்களில் கற்பனை கலக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, சரித்திரத்தைத் திரித்துக் கூறவில்லை.”

படத்தில் இடம்பெறும் இலக்கிய வசனங்கள் மற்றும் சில காட்சிகள் ரசிகர்களுக்குப் புரியுமா?

படத்தை உன்னிப்பாகப் பார்த்தால் நிச்சயம் புரியும். தவிர, தமிழ் நமது தாய்மொழி என்பதால் அந்த இலக்கியத் தமிழுக்கு, உரைநடைத் தமிழில் ‘சப் டைட்டில்’ போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

சில காட்சிகளைப் பற்றி சர்ச்சையான கருத்துகள் வருவது உண்மைதான். ஒரு படத்தில் சண்டைக் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; பாடல் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நாமாக ஒரு எல்லையை வைத்துக்கொண்டோம். அதையே தமிழ்ப் படத்தில் எதிர்பார்க்கிறோம்.

‘ஹாரிபாட்டர்’, “மம்மி’, “அவதார்’ போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது அதில் லாஜிக் பார்ப்பதில்லை; குறை கண்டுபிடிப்பதில்லை; பாராட்ட மட்டுமே செய்கிறோம். ஆனால், அதே முயற்சியை ஒரு தமிழ்ப் படத்தில் செய்தால் விமர்சனங்கள் எழுகின்றன. மக்களின் ரசனைத்திறன் மேம்பட்டால் தமிழில் பல புதிய, வித்தியாசமான படைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு ஹாலிவுட்படத்தின் தழுவல் என்ற விமர்சனம் எழுந்துள்ளதே.?

நிச்சயமாக இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய ‘டீம் ஒர்க்’தான். இது ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல் என நிரூபித்தால் சினிமாத்துறையை விட்டே விலகிக்கொள்கிறேன்.

நான் இயக்கிய படங்களில் சிறந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’தான். படத்துக்கு நல்ல ‘ஓபனிங்’ கிடைத்துள்ளது. பெரிய வரவேற்பு கிடைத்தால் இதன் இரண்டாம் பாகத்தையும் நிச்சயம் எடுப்பேன். அதில், முதல் பாகத்தில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகளைத் திருத்திக்கொள்வேன்” என்றார் செல்வராகவன்.

Related Posts Title


Leave a Reply