Monday, 30 Nov 2009
பிராண்டிக்கு பிரதமரின் பெயர் : பல்கேரிய மக்களின் நன்றி

பல்கேரியா நாட்டின் கிராம மக்கள் தாங்கள் தயாரிக்கும் பிராண்டி வகை மதுவுக்கு, தங்கள் பிரதமரின் பெயரை வைத்துள்ளனர். மது மீதான வரிவிதிப்பிற்கான மசோதா பாராளுமன்றத்தில் வராமல் தடுத்ததற்காக, பிரதமர் பொய்கோ போரிஸ்செளக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உள்ளூர் சரக்கு ஒன்றுக்கு ‘போரிஸோவ்கா’ என்று கிராமத்தினர் பெயர் வைத்துள்ளனர்.
பல்கேரிய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு 30 லிட்டர் வரை ‘ராகியா’ என்கிற பிராண்டி வகை மதுவை வரி கொடுக்காமல் தயாரித்துக் கொள்ளலாம்.
பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த வைன் மற்றும் மதுவகைகள் மீது விதிக்கப்படவிருந்த வரியை பல்கேரியா பாராளுமன்றம் வராமல் தடுத்துவிட்டது. முன்னதாக, அந்த மதுவகைகள் மீது 2010 முதல் வரிவிதிக்கும் முன்வடிவை பாராளுமன்ற பட்ஜெட் குழு சமர்ப்பித்திருந்தது. இந்த முன்வடிவை கடந்த புதன்கிழமை அன்று பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், முன்னாள் தீயணைப்புப் படை வீரரும், கராத்தே கலையில் கருப்பு பெல்ட் வாங்கியவருமான பிரதமர் போரிசெள அந்த மசோதாவை வராமல் தடுத்து, கிடப்பில் போட வைத்துவிட்டார்.
ஆக, பிரதமரின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சோபியா என்ற நகருக்கு 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கபாடாவோ என்ற கிராமத்தினர், இவ்வாண்டு தாங்கள் தயாரித்த புதுவகை ராகியா என்ற பிராண்டிக்கு ‘போரிஸோவ்கா’ என்று பிரதமரின் பெயரை வைப்பதாக முடிவு செய்துள்ளனர். மேலும், தாங்கள் தயாரித்த வோட்கா வகை மதுவுக்கு ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் நினைவாக ‘புடின்கா’ என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து பல்கேரிய கிராம மனிதர் ஒருவர் கூறுகையில் நாங்கள் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் குடி மன்னர்கள் என்பதால் மட்டுமே சந்தோஷப்படவில்லை. வீட்டில் மது தயாரிக்கும் எங்கள் பாரம்பரிய பண்பாட்டை காப்பாற்றியதற்காகவே பிரதமருக்கு நன்றி கூறுவதுடன் நாங்களும் சந்தோஷமடைந்திருக்கிறோம்” என்கிறார்.
“சாதாரண மக்கள், மதுக்கடைகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதை தடுப்பது நமது கடமை” என்று மக்களுக்கு சாதகமாக பதில் கூறியிருக்கிறார் பிரதமர் போரிசெள.
மதுவகைக்கு பிரதமரின் பெயரை வைத்த கிராமத்தினர், அதில் சில பாட்டில்களை பரிசாக, பிரதமருக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.
வீட்டுக்கு வீடு தயாரிக்கப்படும் மதுவுக்கு வரி விதிக்கும் திட்டம் நின்றுபோனதால், 5 சதவீதமாக இருந்த சூதாட்டத்தின் மீதான வரியை 15 சதவிகிதமாக ஏற்றியிருக்கிறது பல்கேரியா பாராளுமன்றம்.
































