நீயா நானா? : மரத்தோடு மோதிய க்ரேன் கவிழ்ந்து பாதியான வீடு

150 வருட ஓக் (20 அடி மிச்சமிருந்த) மரத்திற்கும் 90 அடி உயரமும், 50 டன் எடையும் கொண்ட க்ரேனுக்கும் நடந்த போட்டியில், க்ரேன் கவிழ்ந்து வீடு ஒன்று பாதியாகப் பிளந்தது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த கெவின் மற்றும் மிச்சேல் மெக்கார்த்தியின் வீட்டுக்குப் பின்புறம் தான் அந்த ஓக் மரம் இருந்தது. அதை அப்புறப்படுத்த எண்ணிய அவர்கள்,க்ரேன் ஒன்றை வரவழைத்தனர். கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி சாய்ந்தப் பின் 20 அடி ஓக் மரத்தின் மிச்சம் பூமியில் உறுதியாக நிலைத்திருந்தது. அதை வேரோடு பிடுங்கிவிடும் முயற்சியில் க்ரேன் ஈடுபட்டது. அந்த முயற்சியின்போது பாதியில் மரம் முறிய, க்ரேன் தள்ளாட்டத்துடன் கெவின் வீடு மீது கவிழ்ந்தது. வீடு சரிபாதியாக பிளந்து கொண்டது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த க்ரேன் ஓட்டுநரை ஏணி வைத்துதான் இறக்கவேண்டியிருந்தது. இந்த விபத்தின்போது யாரும் வீட்டில் இல்லை என்பதால் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை.
மரத்தை அப்புறப்படுத்த செய்த முயற்சியில் வீட்டை பறிகொடுத்த கெவின் தம்பதிக்கு அன்றைக்கு சோதனையான நாள் போலிருக்கு. வெளியே சென்றிருந்த கெவினின் மனைவி மிச்சேல், விபத்து ஒன்றில் சிக்கி காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்துவிட்டு வீடு திரும்புகையில் வீட்டையே பறிகொடுத்த சோகம் நடந்து முடிந்திருந்தது. ‘பட்டக் காலிலேயே படும்’ என்பது அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.
Related Posts Title































