Friday, 13 Nov 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம்
களா மரம்(CARISSA CARANDAS L.)
கரியல் என்ற ஊர் திருநெல்வேலி - ராஜபாளையம் ரோட்டில் 21 கி.மீ.ல் அமைந்துள்ளது. இங்குள்ள நிச்சேபா ஆற்றில் 12-2-1948ல் தேசபிதா காந்திஜியின் அஸ்தி கரைக்கப்பட்டது என்பது விசேஷ செய்தி ஆகும்.
கரியலில் பால்வண்ண நாதர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதில் ஒப்பனை அம்மன் சிலையும் உள்ளது.
யுனானி மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது ஒரு முட்களுடைய மரத்தின் பழமாகும். திராட்சையைப் போன்றிருக்கும். பழுத்தபின் இனிப்பாக இருக்கும். சிவப்பு நிறமாக மாறிவிடும். இதனுள் 2 அல்லது 3 விதைகள் இருக்கும். இவ்விதைகள் வெண்மை நிறத்தில் அகன்றிருக்கும். மல்லிகையைப் போல வாசனையுடைய மலர்கள், கிளைகளின் முனைகளில் சிவப்புநிற இலைகள் பூக்கள் போலவே காணப்படும்.
பச்சை வண்ண இலைகள் பளபளப்புடன் காணப்படும். பவழநிறத்தில் காய்களும், இவை முற்றிய நிலையில் கறுப்பாகவும் இருக்கும். கண் கவரும் குறுமரம். கண்களுக்கு மருந்துதரும் கனிகள். சாப்பாட்டுக்கு சுவையூட்டும் ஊறுகாய் முதலியவை தரும் மரமே களா மரமாகும்.
காரிசா கராண்டஸ் (CARISSA CARANDAS L.) எனும் அறிவியல் பெயர் கொண்டு “அப்போசைனேசி” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும்.
வறட்சியான முட்புதர் காடுகளிலே நிறைய காணப்படும் மரம். புதராக வளர்ந்திருக்கும் மணல் மற்றும் பாறைப் பகுதிகளில் காணலாம். சுமார் 5 மீட்டர் உயரம வரை வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் பூத்தாலும் மார்ச்சு, ஏப்ரலில் அதிகம் பூக்கும்.
இயல்பு : குளிர்ச்சி, ஈரம் கொண்டது.
முக்கிய குணங்கள் : இதன் காய் மலச்சிக்கலை நீக்கும். வயிற்று வேக்காடு மற்றும் அழற்சியை நீக்குவதுடன் சக்தியையும் தருகிறது. இதன் பழமும் மலச்சிக்கலை நீக்குகிறது. பித்தக் கொதிப்பு மற்றும் தாகத்தைத் தணிக்கிறது. வயிற்று வேக்காட்டைத் தணித்து சக்தியைத் தருகிறது.
பயன்படுத்தும் முறை : இதன் காயுடன் உப்பு சேர்த்து தின்பண்டமாகவும் மற்றும் ஊறுகாய் தயாரித்து உணவிலும் சேர்த்துக் கொள்வார்கள். பித்தம் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது மிகவும் சிறந்ததாகும்.
மேலும் வயிற்றுக்குச் சக்தியளிக்கிறது. இதன் பழத்தைச் சாப்பிடுவதால் பித்தம் மற்றும் தாகம் தணிகிறது. அதிக பசியை உண்டாக்குகிறது. பித்தத்தால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்துகிறது.
முக்கிய குணங்கள் : வாயுத் தொல்லையை அகற்றும். அதிகப் பசியை உண்டாக்கும்.
தீய விளைவுகள் : வயிற்றை உப்புசம் அடைய செய்கிறது. மெதுவாக ஜீரணிக்கும் தன்மையுடையது. மற்றும் ஆண்மைக்குத் தீங்கு விளைவிக்கும்.
தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் உப்பு, சர்க்கரை மற்றும் மிளகு கலந்து பயன்படுத்த வேண்டும்.
பழம் : பழுத்த பழங்கள் பசியை அதிகரிக்கின்றது.
* பித்தத்தைக் குறைக்கிறது.
* தாகத்தைத் தணிக்கிறது.
* பேதியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்த வல்லது.
காய் : காயைச் சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்குகிறது.
காயை ஊறுகாயாகத் தயார் செய்து சாப்பிட்டால் பசியை அதிகரிக்கிறது. ஆனால் ஆண்மை சக்தியை பலவீனப்படுத்திவிடுகிறது.
இலைகள் : காட்டு களா மரத்தின் இலைகள் 6 கிராம் எடுத்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க வைக்கவும். இதேபோல் தினசரி தயாரித்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் காக்கை வலிப்பு நோய் குணம்பெற்றுவிடும். இளைஞர்கள் 12 கிராம் இலைகள் வரை அரைத்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.
உலர்ந்த களாவை தண்ணீரில் ஊற வைத்தால் இதில் காயின் மருத்துவ குணங்கள் உண்டாகிவிடுகின்றன. உஷ்ணத்தால் ஏற்படும் சொட்டு மூத்திரம் இதனால் குணம்பெறுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இதை அரைத்து பூசினால் ஈக்கள் உட்காருவதில்லை. இதை சட்னி அல்லது காய்கறியுடன் சமைத்து சாப்பிடுவதால் ஈறுகளின் நோய்கள் குணம் பெறுகின்றன.
களாக்காயின் பால் தோலின்மீது படும்போது சிலருக்கு கொப்புளம் உண்டாகிவிடும். ஜுரம் உண்டாகும். அந்நேரத்தில் களா இலைகளைக் கஷாயம் செய்து குடித்தால் முறிவு ஏற்பட்டு ஜுரம் நீங்கிவிடும்.
இலைகளை இடித்து அதன் சாற்றை தேனில் கலந்து குடிப்பதால் வறண்ட இருமல் குணம்பெறுகிறது. முதல்நாள் காலையில் களா இலைகளின் சாறு குடிக்க வைக்கவும். அடுத்த நாள் 12 கிராம். இப்படி 10 நாட்களில் 120 கிராம் வரை 10 மடங்கு அளவில் தினசரி அதிகரித்துக் கொண்டே போகவும். இப்படி காலையில் குடிக்க வைப்பதால் கிட்னி ஃபெயிலியர் நோய் (DROPSY) மற்றும் சிறுநீரக, கல்லீரல் நோய்கள் குணம்பெறுகின்றன என்று யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இதன் இலைகள் பித்தத்தை அதிகரிக்கின்றன. இம்மரப்பட்டையை கஷாயம் இட்டு குடித்தால் சிறுநீர் தாராளமாகப் பிரிகிறது.
களா விதைகளை எண்ணெயில் கொதிக்க வைத்து அந்த எண்ணெயைப் பூசினால் கால் பாதங்கள், உள்ளங்கை வெடிப்பை குணமாக்குகின்றன. அதிகமாக சாப்பிடுவதால் நுரையீரலுக்கும், இந்திரியத்திலும் கோளாறுகள் ஏற்படும். இதைத் தடுக்க முறிவு மருந்தாக உப்பு, வெல்லம், இஞ்சி சேர்த்து பயன்படுத்தலாம்.
சித்த மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
பூக்கள் : கண்களில் ஏற்படும் நோய்களுக்கு இதன் பூக்களை நன்றாகக் கசக்கி தினசரி காலை வேளையில் 3 துளிகள் விட்டு வந்தால் குணம்பெறும் மையில் களாப்பூ சேர்க்கப்படுகிறது.
காய் : சாப்பாட்டை ஜீரணிக்க உதவுகிறது. பசியை உண்டாக்குகிறது.
பழம் : இதனைச் சாப்பிட்டால் இரைப்பை வலிமை பெறுகிறது. உடம்பு சூடு தணிகிறது. ஆண்மை அதிகரிக்கிறது. அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் உண்டாக்கும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளதால் சொறி, கரப்பான் வராமல் தடுக்கிறது.
விதை : விதையில் இருந்து எண்ணெய் எடுத்து சொறிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
வேர் : குழந்தை பிறந்ததும் அழுக்கு, சூடு ஆகியவற்றைப் போக்கிவிடும் மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர். நாக்கு பூச்சிகளுக்கும், வயிற்று நோய்களுக்கும் மருந்தாகிறது.
தழை : விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சலுக்கு இதிலிருந்து எடுக்கப்படும் கஷாயம் மருந்தாகிறது.
* காயுடன், இஞ்சியைச் சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் சாப்பிட்டால், பசியின்மை, சுவை தெரியாமை, இரத்தத்தில் உள்ள பித்தம், அடங்காத தாகம், பித்தக் குமட்டல் ஆகியவை போகும்.
* வேரை உலரவைத்து பொடியாகச் செய்து சம அளவு சர்க்கரை கலந்து 3 கிராம் அளவு இருவேளை சாப்பிட்டு வந்தால் தாகம், அதிக வியர்வை தீரும்.
* இப்பழத்தை உணவு சாப்பிட்டபின் சாப்பிட்டால் விரைவில் ஜீரணம் ஆக்கும்.
* சுத்தமான பூவை நல்லெண்ணெயில் இட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டு துளிகள் தினமும் கண்களில் விட்டு வந்தால் கண்ணில் உள்ள வெண் படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப் படலம் தீரும்.
* 50 கிராம் அளவு வேரை நசுக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு 5-ல் ஒரு பங்காக ஆகும் அளவு காய்ச்சி வடிகட்டி 2 வேளை 50 மி.லி. அளவு கொடுத்து வந்தால் பிள்ளைப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
கரியல் பால்வண்ணநாதர் ஆலயம், பொதிகை மலை (பாபநாசம்) பாபநாசர், பாபவிநாசர் ஆலயம் ஆகியவற்றில் களாமரத்தைத் தெய்வமாக வணங்குகிறார்கள்.
பொதிகை மலை (PINCODE-627 425)க்கு திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். இவ்வூர் பாபநாசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு பாபநாசர், பாப விநாசகர், லோக நாயகி, உலகம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் களா மரத்தையும் சேர்த்து வணங்குகிறார்கள். இதேபோல் பாபநாசம் என்னும் பொதிகை மலையில் பாபநாசர், பாப விநாசகர், லோகநாயகி, உலகம்மை தெய்வச்சிலைகள் கொண்ட பெரிய கோவில் ஒன்று இருக்கின்றது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இக்கோவிலில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக அகத்திய முனிவருக்கும் லோபா முத்திரைக்கும் திருமணக் கோலம் காட்டிய புண்ணிய தலமாகும்.
திருநெல்வேலி, தென்காசி, அம்பா சமுத்திரம் ஊர் மக்கள் இங்கு அதிகளவில் இறைவனை தரிசிக்க வருகின்றார்கள். இங்கு அகத்தியர் கோவிலும், அகத்தியர் நீர் வீழ்ச்சியும் உள்ளது. இங்கிருக்கும் நடராஜரை அனுகு சபாபதி என்று அழைக்கின்றார்கள். இது திருவாசகத்தில் இடம் பெற்ற மிகப் பழமையான கோயிலாகும். (தபால் நிலைய பின்கோடு 627 425).
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































