Friday, 16 Oct 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்
ஏழிலைப்பாலை(DITA-BARK)
ஏழிலைப்பாலை - ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி எனவும் அழைக்கப்படுவதுண்டு. முன்பெல்லாம் மலேரியாக் காய்ச்சலுக்கு மருந்து இதன் பட்டையிலிருந்துதான் பெறப்பட்டது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது. இம்மரம் தீப்பெட்டித் தொழில், பென்சில், ஓட்டுப் பலகை என செய்வதற்குப் பயன்படுகிறது. நகர்ப்புறப்பகுதிகளில் வளர்க்க ஏற்றது.
தாவர அறிவியல் பெயராக ‘அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ்’ (ALSTONIA SCHOLARIS) என வழங்கப்படுகிறது. இது ‘அபோசைனேசியே’ எனும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். ஸ்காலாரிஸ் என்பது பள்ளி சம்பந்தப்பட்டது எனப்பொருள் தரும். அதாவது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ‘சிலேட்’ (பலகை)க்கு இதன் மரச்சட்டங்கள் உபயோகிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
7 இலைகள் இருப்பதைக் கண்டு வால்மீகி முனிவர், இராமாயனத்தில் ‘சப்த சாதா’ எனக் குறிப்பிட்டுள்ளார். வடஇந்தியாவில் இதனை ‘சப்த பர்னா’ எனவும் அழைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை ஆதிவாசிகள் இம்மரத்தில் பேய், பிசாசுகள் உள்ளன என நம்புகின்றனர். இதனால் சைத்தான் மரம் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதையும் காணலாம்.
சாதாரணமாகப் பசுமைமாறாக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தியா, ஜாவா, ஆஸ்திரேலியா, தமிழக மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளிலும், குன்றுப் பகுதிகளிலும் காணலாம்.
சுமார் 20-30 மீட்டருக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து, கிருஸ்துமஸ் மரம்போல வளர்ந்து காட்சி தரும்.
பச்சை, வெள்ளை, பூக்கள் பூத்துக் குலுங்கும். வாசனை கொண்டவை. செப்டம்பர், நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் அதிகம் பூக்கும்.
பொதுவான பயன்கள்
இம்மரப்பட்டை, வேர்ப பட்டை, இலைகள், பூ, காய் ஆகியவற்றில் 11 வகையான ஆல்கலாய்டுகள் காணப்படுவதால் ஆல்கலாய்டுகளின் சுரங்கம் எனவும் கருதலாம்.
தழை, பூவில் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஒரு வகையான நறுமணப் பொருளைக் கரைத்தெடுக்கப் பயனாகிறது. மேலும் நீராவி மூலம் தைலம் தயார் செய்யப்படுகிறது. நான்கு வகையான ஆல்கஹால் உள்ளன.
மரப்பட்டை : மரப்பட்டையிலிருந்து ஒரு வகை திரவமும், டிஞ்சரும் தயாரிக்கப்பட்டு மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றன.
மரப்பால் : மரப்பாலும் மருத்துவத்துக்கு பயனாகிறது.
மரம் : மரத்தை அறுத்து ஓடும் நீரில் பதப்படுத்தினால் உழைப்புத் திறன் கூடும் எனவும் கண்டுள்ளனர்.
அஸ்ஸாம் பகுதிகளில் உள்ள மரங்கள் தேயிலைப் பெட்டிகள், கரும்பலகை, விலை குறைவான நாற்காலி மேஜைகள் செய்யவும், ஓட்டுப்பலகைகள், பென்சில்கள், தீக்குச்சிகள், தீப்பெட்டிகள், காகிதம் தயாரிக்கவும் பயன்படும்.
சித்த மருத்துவம்
தழை : வறுத்துப் பொடித்த இலையை, சீழ்வடியும் புண்களுக்கு மேலாக வைத்துக் கட்டி வந்தால் குணம்பெறும்.
* இஞ்சிச்சாற்றுடன், இலையின் சாறும் கலந்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்குத் தருவதும் உண்டு.
மரப்பட்டை : பட்டைக்கு துவர்க்கும், புழுக் கொல்லும், முறை வெப்பமகற்றும், வலுவாக்கும் செயல்கள் உண்டு. நீண்ட நாள் வயிற்றப்போக்கை கட்டுப்படுத்தவும், இரத்த பேதியைக் குணமாக்கவும் சிபாரிசு செய்யப்படுகிறது.
* காய்ச்சலில் இருந்து குணம் பெற்றவர்களுக்கு வயிற்றின் தசைப்பகுதியில் வலுவூட்டி, ஜீரண சக்தியை மேம்படுத்தக் கூடியதாகும்.
* சுண்டெலிகளுக்கு நஞ்சாகவும் உபயோகப்படுகிறது.
* முறைக்காய்ச்சலுக்குத தரப்படுகிறது. சூதகத்தை உண்டாக்குகிறது. பால் பெருக்கும் பண்புகள் கொண்டது.
மரம் : மரத்தைத் தண்ணீர்விட்டுத் தேய்த்து, மூட்டு வலிக்கும், புண்களுக்கும் மருந்துபோல் பூசலாம்.
சின்னச்செடிகளின் சாம்பல் : பிளவைக் கட்டிகளின் மேல் சாம்பலைப் பூசினால், உடனடியாகப் பழுத்து உடையும்.
வேர் : வேரை உலரவைத்து பொடியாக்கி, நுண்புழு, விரைவிலி, சூலை, குன்மம், அண்ட வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த உபயோகிக்கலாம்.
பால் : பசுமையான மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாலினை, புண்களுக்கு இடலாம். கீல்வாதத்துக்கும் தேய்க்கலாம். காதுவலிக்கும் கூட எண்ணெயுடன் சேர்த்து உபயோகப்படுத்தலாம்.
பிற செய்திகள்
நெடிது உயரும் இதனை அழகு மரமாகவும் வீட்டின் எதிரில், பெரிய பெரிய கட்டிடங்களின் இருபுறமும் வளர்க்கலாம். வருவாயை ஈட்டித்தரும் இம்மரத்தை, நிலத்தில் நட்டு வளர்ப்பதால் ஏனைய பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது.
ஏழிலைப்பாலை (DITA-BARK)
ஏழிலைப்பாலையின் வேறு பெயராக சப்தபர்ணி எனவும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவில் பயிராகின்ற மரம். இதன் பட்டை 6,7 அங்குல கனமுடையது. இதன் உட்புறம் மஞ்சள் நிறமாகவும், மணமே இல்லாமலும் இருக்கும்.
மேலும் இது பஞ்சு போன்று காணப்படும். கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டு புழுக்கொல்லியாகவும், உரமாக்கியாகவும், முறை வெப்பமகற்றியாகவும் செயல்படுகிறது.
சூலை, நுண்புழு, புண், பெருநோய், குன்மம், சீதபேதி, விரை வீக்கம், ஐயப்பெருக்கு, முப்பிணி முதலியவற்றை நீக்குகிறது. இதன் மருத்துவ பகுதிகளாக பட்டையும் வேரும் உதவுகிறது.
பட்டை : இதன் பட்டையை இடித்து 5-10 கிராம் எடுத்து 100 மி.லி. தண்ணீரில் 1 மணி நேரம் மூடி வைத்து ஊறவைத்து 25-50 மி.லி. அளவு வீதம், தினமும் 3 முறை கொடுத்து வந்தால் நாள்பட்ட சீதபேதி, சுரத்துக்கு பின்னர் ஏற்படும் வலிமைக் குறைவு ஆகியவை நீங்கும்.
வேர் : இதன் வேரை உலர்த்திப் பொடித்து, 25 குன்றிமணி எடை அளவு கொடுத்து வந்தால் ஐயப்பெருக்கு, நுண்புழு, விரைவலி, சூலை, குன்மம், அண்டவாதம், குட்டம், புண், தாபம் ஆகியவை தீரும்.
வாத, பித்த கபங்களால் ஏற்படும் கோளாறுகள் போகும். ஆங்கில மருத்துவ நூல்களில் இதுபற்றிக் கூறப்பட்டு இருப்பதாவது :
எழிலைப்பாலை மரத்தின் தண்டு - காய்ச்சல், உடல்நலக் குறைபாடுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாள்பட்ட பேதி, சீதபேதி, பித்த ஜுரம், புண்கள், மலேரியா காய்ச்சல் போன்றவற்றை நலப்படுத்த உதவுகிறது.
பால்போன்று வடியும் இதன் சாற்றை வயிற்றுப்புண், மூட்டு வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். தலைவலிக்கு இதன் சாற்றைப்பூசலாம். பால் சுரப்புத் தன்மையையும் இவை அதிகப்படுத்துகிறது.
அஜீரணத்தினால் வரும் அனைத்துவிதமான குறைபாடுகளுக்கும் ஏழிலைப்பாலை நல்ல மருந்தாக விளங்குகிறது.
அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுக்கடுப்பு போன்றவையும் குணம்பெற இந்த மரம் மிகவும் உதவுகிறது.
மேலும், இவை கல்லீரல் குறைபாடுகளையும் போக்குகிறது. இதன் இலைகளைக் கஷாயமிட்டு தோல் நோய்களுக்கு மருந்தாகத் தரலாம். தொழு நோய்,தோலில் ஏற்படும் புண்கள், வெடிப்புகள், சிராய்ப்புகளை இவை போக்குகிறது.
ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், கட்டிகள், இதய நோய்கள், வயிற்றுப்பூச்சிகளின் தொல்லைகள், குளிர் ஜுரம், யானைக்கால் வியாதி போன்றவற்றையும் இந்த மரம் குணப்படுத்த உதவுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் தண்டு, இலைகள், பால் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
கிராம மக்கள் இந்த மரத்தை “சாத்தான்களின் மரம்” என்றே அழைத்து வந்தனர். மேற்குக்கரைப் பகுதிகளில் இந்த மரம் அதிகளவில் காணப்படுகிறது.
சாத்தான்களின் புகலிடமாக இந்த மரம் நம்பப்படுவதால் பலர் இம்மரத்தின் பக்கம் செல்வதில்லை. ஒதுக்கப்பட்ட மரமாகவே இம்மரத்தைக் கருதுவதால் பலர் இம்மரத்தின் சாயலை அடைவதையே தவிர்க்கின்றனர்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சமாக ஏழிலைப்பாலை வணங்கப்படுகிறது.
இம்மரத்தின் தண்டுப்பகுதியில் டைட்டாமைன், அக்கிடானின், அகிக்காகுச்சின், அகிசாரின், அகிட்டின், அக்கிராட்டின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன.
இதுதவிர, இதன் வேர்த் தண்டில் பீட்டா ஸிடோஸ்டிரால், எக்கிடாமின், அக்குவாம் மிசின், எக்கிடாமிடின், டூபோடாவீன் போன்றவை உள்ளன. ஸுடோ அக்குவாமிடின், பிக்ரினைன், பிக்ராலினால் போன்ற பொருட்கள் இலைகள், தண்டுப்பகுதிகள், வேரில் காணப்படுகின்றன. இதன் இலைகளில் நாரிலைன் காணப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































