» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 9 Oct 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம்
எட்டி (STRYCHNOS NUX-VOMICA)

இம்மரம் இந்தியாவின் வெப்ப பகுதிகளிலும், இலங்கை, சீனா, தென் ஆஸ்திரேலியா, கிழக்கு இந்திய தீவுகள், கொச்சி ஆகிய இடங்களில் தானாகவே காடுகளிலும், நாடுகளின் உள் பாகங்களிலும் பயிராகிறது. இது 40 முதல் 50 அடி வரையில் வளரும்.

இதன் பழம் பார்ப்பதற்கு மிக அழகாகவும், சிவப்பு கலந்த மஞ்சள் வண்ணத்தில் உட்புறம் வெள்ளையாகவும், பசபசப்பாகவும், விதைகள் நெடுக்காகவும் இருக்கும். 2லிருந்து 5 விதைகள் காணப்படும்.

மருத்துவப் பயன்பாட்டுக்கு இதன் இலை, பழம், விதை, மரப்பட்டை, வேர்ப்பட்டை எனப் பலவும் பயன்படுகின்றன. இவை அனைத்தும் கசப்புச் சுவை கொண்டதாக இருக்கும். வாயு நோயை தன்னிலைப்படுத்தி, நரம்புகளுக்கு வலிமை தந்து, வாந்தியையும், பேதியையும் உண்டாக்கும் குணம் கொண்டது.

சித்த மருத்துவம்
இலைகள் : நீரில் இதன் இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி, வாயு நோயுள்ளவர்களுக்கு குளிப்பாட்டலாம். இளந்தளிரை துணியில் கட்டி அடுப்பு சுடு சாம்பலில் சொருகி, சற்று வெந்தபின் எடுத்து அம்மியிலிட்டு அரைத்து, அதனுடன் வெண்ணெயை சேர்த்துக் குழைத்து கட்டிகளின் மீது தடவி வந்தால், மெல்ல மெல்ல கட்டி அமுங்கி விடும்.

பழச்சாறு : இதன் பழங்களை லேசாக வதக்கி, இதன் ஓடுகளையும், கொட்டைகளையும் நீக்கி, உள்ளே உள்ள சதையை எடுத்து ஒரு துணியில் கட்டிப் பிழிந்து எடுத்த சாறுடன், அதே அளவு எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி, சீல் வீக்கங்களுக்குப் பற்று போடலாம்.

தொழுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சில பஸ்பங்கள், செந்தூரம், மாத்திரை போன்றவை இந்தச் சாற்றின் துணையுடன் தயாரிக்கப்படுகின்றன. பெரு எட்டித் தைலம், சிறு எட்டித் தைலம் ஆகியவை சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படுகின்றன.

விதை : இது வட்டமாகவும், நடுவில் ஒரு குழியுடையதாகவும் இருக்கும். எளிதில் உடையாது. இது கைக்கறுப்பு, ஜன்னி, கடிவிஷம், வாதவலி, கட்டி, கரப்பான், மயக்கம், ஜுரம், சொட்டு நீர், நீர்க்கோவை ஆகியவற்றைப் போக்குகிறது. பேதியை உண்டாக்குகிறது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி, பேதியை ஏற்படுத்தி கை விரல்கள் துடித்தலும், நடுக்கமும், கொருக்கு இழுப்பும் ஏற்படும். குதிரை வலியையும் உண்டாக்கும்.

தகுந்த மருந்து உட்கொள்ளாவிடில் மரணமும் ஏற்படுத்தும். இதன் கொட்டையைப் பொடியாக்கி தனியாகக் கொடுப்பது நமது மருத்துவத்தில் கூறப்படவில்லை என்றாலும் மேலை நாட்டு மருத்துவர்கள் வழங்குகின்றனர்.

ஆனால் நாட்டு மருத்துவத்தில் கொட்டைகளைச் சேர்த்து செய்யப்படுகின்ற மருந்துப் பொருட்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இவ்வித மருந்துகளால், மேலும் சில நோய்களும் குணமாகிட அனுபவம் வாய்ந்தவர்களால் வழங்கப்படும் மருந்துகளும் காரணமாக அமைந்துள்ளன.

உதாரணமாக குடித்தைலம், முடித் தைலம், பிடித்தைலம், துளைத்தைலம், மகாவிட முட்டித் தைலமாக வழங்கப்படுகின்றன.

பிடித்தைலம், சிறுவிட முட்டித் தைலம், இலகு விடமுட்டித் தைலம் எனவும், இரசகெந்தி மெழுகு எனவும், நந்திமை, மூசாம்பரம் எனவும் நூல் விளக்கங்களில் காணக்கிடைக்கின்றன.

எட்டிக்கொட்டை ஊறல் குடிநீர்
எட்டிக்கொட்டைத்தூள் 2 கிராம், வெந்நீர் 12 அவுன்ஸ் அளவில் 60 நிமிடம் ஊறவைத்து இதில் 1/2 அவுன்ஸ் அளவு வீதம் தினமும் 3 முறை கொடுக்க நீரேற்றம், நரம்பு நோய்கள் போக்கி, உடலுக்கு ஊட்டம் தருகிறது என்கின்றனர் மேலை நாட்டு மருத்துவர்கள். இதனை மிக எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும்.

டின்சர் : எட்டிக்கொட்டையை நுண்ணிய பொடியாக்கி ரெக்டிபைட் ஆல்கஹால் 20 அவுன்ஸ் அளவில் 2 நாள் ஊறவைத்து வடிகட்டி 10 அல்லது 20 துளி அளவு கொடுத்தால் நரம்புகள் வலிமை பெறுகிறது.

எட்டிக்கொட்டை சத்து
எட்டிக்கொட்டையை ரெக்டிபைட் ஆல்கஹாலில், பிட்டு போல வேக வைத்து உலரவைத்து பொடியாக்கி கசப்பு போகுமளவுக்கு கொஞ்சங் கொஞ்சமாகக் காய்ச்சி, வடித்து அடியில் தங்கியுள்ளதை மெழுகுபதமாகக் காய்ச்சிக் கொடுக்க அக்னி மந்தத்தை நீக்குகிறது.

எட்டிக்கொட்டை உப்பு
கொட்டையிலிருந்து ஒரு வகையான உப்பு எடுக்கப்படுகிறது. இது சிறு மணலைப்போல, பழுப்பு நிறமாய், வாசனையற்றதாய் கசப்பாக இருக்கும். தண்ணீரில் கரையாது. இது கடுமையான விஷம் போன்றதாகும். அளவுடன் கொடுக்க வேண்டும்.

இது பக்கவாதம், கண் புகைச்சல், அந்திமாலை, பைத்தியம், ஜன்னி, காக்கை வலிப்பு, சாராயம் குடிப்பதால் ஏற்படும் விஷம், பாம்புக்கடி, ஆசனக் கட்டி முதலியவற்றை நீக்கும் என மேனாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மரப்பட்டை : மேல் தோலைச் சீவி வெய்யிலில் காயவைத்து, தூளாக்கி 1,2 குண்டுமணி அளவு ஜுரம் வலி நோய்களுக்கு தரப்படுகிறது. இதே அளவுடன் உப்புக்கல் ஒன்று சேர்த்து மென்று தின்றால் தேள்கடி விஷம் நீங்கும். இப்பட்டையைச் சேர்த்து செய்யப்படும் தைலங்கள் தோலைப் பற்றிய நோயிலும், தொழுநோயிலும் பூச்சுத் தைலமாக வழங்கப்படுகிறது.

வேர்ப்பட்டை : இது முப்பிணி, காதடைப்பு, சூதக வலி, வாயுநோய்கள், வலி, விஷம் முதலியவற்றைப் போக்குகிறது.

சூரணம்
எட்டி வேரின் மேல் தோலை எடுத்து எலுமிச்சம் பழரசம் விட்டு அரைத்துப் பொடியாக்கியதை கடலை அளவு சிவனார் வேம்பும், தும்பையும் சேர்ந்த குடிநீரில் சேர்த்து கொடுத்தால் மேற்கண்ட நோய்கள் தீரும். வறுத்த அரிசிக் கஞ்சியைக் கொடுத்து வரவேண்டும்.

குடிநீர்
சுமார் 10 கிராம் எடை வேர்ப் பட்டையை நசுக்கி, கொதிக்கும் 100 மி.லி. அளவு வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, தினமும் ஒரு வேளை 50 மி.லி. அளவு ஊறல் குடிநீரைக் கொடுக்க சூதகவலி போகும்.

வேர்ப்பொடி
இதன் நுண்ணிய பொடியை மூக்கில் விட்டால் கடி விஷங்கள் தீருமென சில நூல்களில் கருத்துகள் காணக் கிடைக்கின்றன.

எட்டிவித்து
இது காம இச்சையை எழுப்பும், பலத்தைத்தரும் எனும் குணங்கள் உள்ளதால் சிலர் காம இச்சையை பெருக்கச் செய்ய வேண்டும் என சிறிது சிறிதாக சாப்பிடத் தொடங்கி, பின்னர் அளவுகளை உயர்த்திக் கொண்டே போகும் நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதன் காரணமாக பின்நாளில் விந்து நீர்த்து, அடிக்கடி வெளிப்பட நேரிடும்.

இதனை அளவுக்கதிகமாக உட்கொள்ளும் போது ஆயாசம் தோன்றி, மூச்சு அடைபடும். பின்னர் இசிவு ஏற்படும். இவ்வலி 1,2 நிமிடங்கள் தொடர்ந்து ஏற்படும். பின்னர் வியர்வை வெளியாகும். இதுபோல பலமுறை ஏற்பட்டு, உயிரைப் போக்கிவிடும். எனவே எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

பிற குறிப்பு
பக்கவாதம் ஏற்பட்ட உடன் இதனை உபயோகிக்கக் கூடாது. இதற்கு எதிர் பொருள்களாக ரசம், பூரம், வீரம், துவர்ப்பு பொருட்கள் விளங்குகின்றன.

இந்திய மருத்துவத்தில் அபின், மிளகுடன் சமஅளவில் மாத்திரையாகக் செய்யப்பட்டு, வெற்றிலைச் சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது.

சில மருத்துவத்தில் விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட களிம்பு முகமுடக்கு வாத நோய் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

யுனானி மருத்துவம்
தோற்றம் :
இது ஒரு மரத்தின் விதையாகும். வெளுப்பான சாம்பல் நிறத்திலும், உட்புறம் வெண்மை நிறத்திலும் இருக்கும். சுவையில் மிகவும் கசப்பாக இருக்கும்.

வளரும் இடம் : இந்தியா, இலங்கை, கொச்சின், சீனா, மேற்கு இந்திய தீவுகள்.

இயல்பு : உஷ்ணம் வறட்சி (மூன்றாம் நிலை)

பயன்படும் உறுப்புகள் : விதைகள்.

பண்புகளும் பயன்களும் : வயிறு மற்றும் இதயத்திற்கு சக்தி தருகிறது. ஆண்மைச் சக்தியை அதிகரிக்கிறது. சிறுநீர்ப்பைக்குச் சக்தியைத் தருகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.

தோள்பட்டை வலி, சளியால் உண்டாகும் நோய், பக்கவாதம், வாய்க்கோணல், மூட்டுவலி, இடுப்புவலி ஆகிய நோய்களுக்கு அதிகளவில் பயன்படுகிறது. ஆண்மைச் சக்தியை அதிகரிக்கவும், பசியின்மையைப் போக்கவும் பயன்படுத்துவார்கள். குடல்நோய் காரணமாக மலச்சிக்கல் உண்டாவதைத் தடுக்கப் பயன்படுத்துவர, இருமல், ஆஸ்துமா, காசநோய்களில் பயன்படும். முதுமைக் காலத்தில் சிறுநீர் அதிகமாகப் பிரிவதைத் தடுக்கிறது. விதையைச் சிறிது உரைத்து வீக்கம், கட்டி உள்ள இடத்திலும், பிளேக் நோயால் உண்டாகும் கட்டிகள் மீதும் பூசுவார்கள்.

விதையை நல்லெண்ணெயுடன் சுடவைத்து வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் மூட்டுவலி உள்ள இடத்தில் மசாஜ் செய்யலாம். காச நோயால் இரத்தம் அசுத்தமாகி விடும், அதைச் சுத்தமாக்கப் பயன்படுத்துவார்கள். இதன் கூட்டு மருந்தாகிய மாஜுன்லணா லேகியம், அஜாராகி மாத்திரைகளில், அஜாராகி அதிகளவில் பயன்படுகிறது.

அஜாராகி விதையை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
அஜாராகி ஒரு விஷமுள்ள மருந்தாகும். சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்தவற்குப் பலமுறைகள் இருக்கின்றன.

1. விதையை 1 வாரம் அல்லது 10 நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோலை நீக்கவிட வேண்டும். பின்பு வெந்நீரில் கொதிக்க வைத்து மேற்புறத்தை மீண்டும் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு அதை உலர வைத்து மெல்லியதாக உடைத்துப் பயன்படுத்தலாம்.

2. விதையை 1 வாரத்திற்குத் தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோலை நீக்கி பசும்பாலில் கொதிக்க வைக்க வேண்டும். அது பால்கோவா போல் மாறிவிடும். பின்பு, வெந்நீரில் நன்றாகக்கழுவி உலரவைத்து பவுடராக்கிப் பயன்படுத்தலாம்.

தீய விளைவுகள் : விதையை 3 கிராம் அளவில் சாப்பிட்டால் சில நிமிடங்களில் உறுப்புகள் வலிப்பால் இழுக்கும், கைநாடி துடிக்கும், உடல் உஷ்ணம் சிறிதளவு அதிகரிக்கும், உடலிலிருந்து வியர்வை கொட்டும், விக்கல் வரும், மூச்சுத்திணறல் ஏற்படும், முகம் நீல நிறமாகி விடும், கண்கள் சிறிது வெளியே வந்து விடும். வாய்க் கோணலாகி விடும், உடல் சோர்ந்து விடும்; இறுதியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் உண்டாகும்.

தணிக்கும் முறை : விஷத்தை நீக்க பசுநெய் மற்றும் பாலை அடிக்கடி குடிக்க வைத்து வாந்தி எடுக்கச்செய்ய வேண்டும்.

அல்லது வாயின் வழியாகக் குழாயை வயிற்றுக்குள்விட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் மற்ற விஷ முறிவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

தீர்க்கும் நோய்கள் : தோள்பட்டை வலி, பக்க வாதம், இதய பலவீனம், மூட்டுவலி, இடுப்புவலி, ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா, காசநோய், கட்டி, வீக்கம், சளியால் உண்டாகும் நோய்கள்.

பொதுக்குறிகள் : சுத்தம செய்யாமல், அதிகளவில் உபயோகப்படுத்தினால் வலிப்பும், மூளை பாதிப்பும் ஏற்படும். மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தினால் கொப்புளங்கள் உண்டாகும்.

சிறப்புக் குறிகள் : நரம்புகளுக்குச் சக்தியைத் தருகிறது.

அளவு : 50 மில்லி கிராம் முதல் 175 மில்லி கிராம் வரை பயன்படுத்தவும்.

அனுபானங்கள், பத்தியங்கள் : இத்துடன் சர்க்கரை, பிசின் வரும் பொருட்கள், எண்ணெய்ப் பொருட்கள் கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்று மருந்தாகப் பலாவா பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட மருந்துகள் : 1. ஹப்பே அஜாராகி, 2. மாஜுன் அஜாராகி, 3. மாஜுன் லணா.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
ஊத்தங்கரை அங்காள பரமேஸ்வரி அம்மன், முருகர் கோயில்களில் தலவிருட்சமாக ‘எட்டி’ வணங்கப்படுகிறது.

முற்காலத்தில் தொண்டை நாட்டில், 24 கோட்டங்களுக்கு ஒன்றாகிய வேங்கடக் கோட்டத்துத் தொண்டைமான் பேராற்றூர் நாட்டு மும்முடிச் சோழபுரமென்றும், ஆற்றூர் வளநாட்டு மும்முடிச் சோழபுரமென்றும், கல்வெட்டுகளில் காணப்படும் திருக்காளத்தி என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் தலவிருட்சமாக எட்டி மரம் தெய்வத்துடன் சேர்த்து வணங்கப்படுகிறது.

எட்டியின் வேறு பெயர்களாக காஞ்சிரம், விடமுட்டி (விஷ முஷ்டி) எனவும் அழைக்கப்படுகிறது. இது “ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா” (STRYCHNOS NUX VOMICAL) என்னும் தாவரவியல் பெயர் கொண்டு “லோகனியேசியே” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் இது POISON NUT, QUAKER BUTTONS எனவும் குறிக்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply