» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 25 Sep 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம்
ஊசி மல்லிகை (JASMINUM AURICULATUM VAHL)

முல்லை (JASMINUM AURICULATUM, VAHL; OLEACEAE)

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :

மைய லின்றிமலர் கொய்வ
ணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய
செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு
காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல்
வண்ணமே.

திருக்கருப்பறியலூர் (தலை ஞாயிறு மேலைக் காழி) குற்றம் பொறுத்த நாதர் - கோல்வளையம்மை கோயில் வைத்தீசுவரன் கோயில், திருப்புன்கூர் மண்ணிப் பள்ளம் வழியாக இவ்வூரை அடையலாம். இவ்வூர்க்கோயிலுக்கு கொகுடிக்கோயில் என்ற பெயரும் உண்டு.

முல்லை என்பது கொகுடி, தளவம், முல்லை தளவம் என்னும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ஜாஸ்மின் (JASMIN) என்பதாகும். அறிவியல் பெயராக ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம் (JASMINUM AURICULATUM VAHL) எனவும் அழைக்கப்படுகிறது.

திருவாரூர் நாகப்பட்டினம் சாலையில் உள்ள ஊர்களில் ஒன்று சிக்கல். வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு அதை எடுக்க முயன்ற போது முடியாமல் சிக்கித் கொண்டதால் சிக்கல் என்பது இந்த ஊரின் பெயர் ஆயிற்று. மல்லிகை வளம் என்பது இதன் வேறு பெயர்.

இறைவன் நவநீதேஸ்வரர், வெண்ணெய் நாதர், வெண்ணெய் பிரான் எனப்படுகிறார்.

இறைவி சத்யதாட்சி, வேல் நெடுங்கண்ணி எனப் பெறுகிறாள்.

தலவிருட்சம் குடமல்லிகை, இங்குள்ள தீர்த்தங்கள் சீரபுஷ்கரணி, கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம் என்பவையாகும்.

இங்குள்ள தீர்த்தங்களில் ஆலயத்தின் மேற்கே உள்ள தீர்த்தம் கயா தீர்த்தம் எனப்படுகிறது. பெருமாள் வாமன அவதாரம் காலத்தில் வாமன கோலத்தில் இங்கு நீராடி சிவனை வழிபட்டாராம். எனவே இந்தப் பெருமாளுக்கு காய மாதவர் என்று பெயர்.

சிக்கல் சிவாலயத்தில் தியாகராஜருக்கு சன்னதி உண்டு. இந்த தியாகராஜர் சப்தவிடங்க தலங்களில் இடம் பெறாதவர். தியாகராஜர், சிக்கல் சிவாலயத்தில் உள்ள முருகப் பெருமான் பக்தர்களால் பெரிதும் வழிபட கூடியவர்.

இக்கோயிலில் சனீஸ்வரனுக்கு தனிச் சன்னதி உண்டு.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தில் முல்லைக்கு வேறு பெயர்களாக கணிகை, கற்பு, கெச்சம், வாளபிளப்பி என அழைக்கப்படுவதும் உண்டு.

முல்லை செடி, கொடி என 2 வகைகளில் இருக்கிறது. இது எல்லா விற்பனை மண்ணிலும் வளரக்கூடிய தன்மையுடையது. இது சிலபகுதிகளில் பிச்சிப்பூ எனவும் அழைக்கப்படுவதுண்டு.

மருத்துவப் பயன்கள்
முல்லைப் பூவை வாழை நாரிலோ, நூலிலோ சரமாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டால் தலையில் உள்ள நீர்க்கோர்வை போகும். இதன் மணம் நுகரும்போது சித்தப்பிரமை விலகும் எனச் சொல்லப்படுகிறது. இம் மலர்களை நுகர்வதால் மனது புத்துயிர் பெற்று சாந்தமடைகிறது. கோபம் தணிகிறது. இருதயம் மென்மை பெறுகிறது. ஆகவே, இம்மலரின் வாசனையை நுகர்வது மிக நல்லது.

ஆயர்வேதம்
* புதிய முல்லைப் பூக்களை இடித்து அதன் சாற்றை இரணங்கள் மீது பூசினால் குணம் பெறுகிறது.

* வாய்ப்புண் குணம்பெற இவற்றைக் கஷாயமிட்டு வாய் கொப்பளிப்பார்கள்.

* பூக்களை வறுத்து இடித்து நெய்யில் கலந்து மார்பகங்கள் மீது பூசினால் சீழ் கட்டிகள் உடைந்து வெளியேறும்.

* பூக்களை மாதவிலக்கை சரி செய்யவும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கவும் பயன்படுத்துகின்றார்கள்.

* பூக்களிலிருந்து நறுமணம் கொண்ட “ஹேர் ஆயில்” தயாரிக்கினறனர். செடியை அப்படியே கஷாயம் இட்டுக் குடிப்பதால் பேதி, வயிற்று வலி, உடல்வலி, மஞ்சள் காமாலை குணம் பெறுகிறது. இலைகளை வெண்ணெயில் கலந்து சாப்பிடுவதால் இரத்தப்போக்கு கட்டுப்படுகிறது.

இந்தச் செடியை விதை நோய்கள், அடிக்கடி இரத்தப் போக்கு ஏற்படும் நோய்கள், உடலில் விஷம் ஏறுதல், தோல்நோய்கள், வாய்ப்புண், ஈறு சீழ் பிடித்தல், கண், காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு இதன் பூக்களை இடித்து அதன் சாற்றை 10 அல்லது 20 மில்லி வரை தடவுவார்கள்.

இலைகளைக் கஷாயமிட்டு 40 அல்லது 80 மில்லிவரை தருவார்கள். இதன் வேரை அரைத்து இடுப்பு பகுதியில் அக்குள் மற்றும் உடல் மடிப்புகளில் வரும் ‘ரிங்வார்மஸ்’ என்னும் படை நோய்களைக் குணமாக்கப் பூசுவார்கள்.

சிறநீரகக்கற்கள், இதய நோய்கள், உடல் எரிச்சல், வயிற்றுப் புண், சிறுநீர் அடைப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
திருக்கருகாவூர், திருக்காவிரிப் பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர், வடதிருமுல்லைவாயில் ஆகிய திருக்கோயில்களில் முல்லைக்கொடியும், திருஉசாத்தானம், திருஇலம்பையங்கோட்டூர் ஆகிய திருக்கோயில்களில் மல்லிகையும் (JASMINUM SAMBAC), திருக்கடவூரில் பிஞ்சிலம் (JASMINUM GRANDIFLORUM) என்னும் பெருமல்லிகையும் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணி ஈசுவரர் கொடியிடை நாயகி கோயிலில் முல்லை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. சென்னைக்கு மேற்கில் 16 கி.மீ. தொலைவில் உள்ள அம்பத்தூரிலிருந்து, வடமேற்கே 3 கி.மீ. ஆவடி நிலையத்திலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர். முருகன் பூஜித்த திருவூர் தொண்டைமான் என்னும் மன்னன், தன் யானையின் காலைச் சுற்றிக் கொண்ட முல்லைக் கொடிகளை வாளால் வெட்டியபோது இறைவன் மீதும் பட்டதாகவும், இறைவன்மேல் வாளால் வெட்டிய வடு காணப்படுகிறது எனவும் புராணங்கள் கூறுகின்றன. இது செண்பகாரண்யம் எனவும், திருமுல்லை வாயில் எனவும் புகழப்படுகிறது. இறைவனுடன் சேர்த்து முல்லையும் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

தென் திருமுல்லைவாயில் (திருமுல்லைவாயில்) முல்லை வனநாதர் அணிகொண்ட கோதையம்மை கோயிலில் தலவிருட்சமாக முல்லை வணங்கப்படுகிறது. இக்கோயில் சீர்காழிக்கு கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இக்கோயிலில் தெய்வத்துடன் இணைத்து முல்லை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
தமிழ் நிலத்தை பாகுபடுத்துவதிலும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என முல்லை முதலில் வருகின்றது. மேலும் பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, கலித்தொகையில் முல்லைக் கலி, ஐங்குறு நூற்றில் 5வது பகுதி முல்லை, அகநானூற்றில் 4 எண்ணுள்ள பாக்கள் (நாலுநனி முல்லை) எனவும் சிறப்பித்துள்ளன.

மேலும் ஒழுக்கம் என்னும் பகுதியில் 12 வகைப்படுத்தியுள்ளதாவது, அரச முல்லை, பார்ப்பன் முல்லை, கணியன் முல்லை, மூதின் முல்லை, அவைய முல்லை, ஏறாண் முல்லை, வல்லாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மறமுல்லை, குடை முல்லை, சால்புமுல்லை இது தவிர பருவத்தைக் குறிக்க கார்முல்லை எனவும் குறிப்பர்.

கடையேழு வள்ளல்களில், பாரி தனது தேரினைப் பரிசாக வழங்கிய பெருமை பெற்றது முல்லைக் கொடி என்பது வரலாறு. திரு முல்லைவாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப் பாடி எனப் பல ஊர் பெயர்களிலும் முல்லை இடம் பெற்றுள்ளது.

இதனை பித்திகம், பிச்சிப்பூ எனவும் வழங்குவர். இதன் அரும்பு சிவந்த புறத்தை உடையதென்றும், பசிய காலை உடையதென்றும், புலவர்கள் கூறுவர். இது முல்லையினத்தைச் சார்ந்தது. இதனை ‘செம்முல்லை’ என்று நச்சினார்க்கினியர் கூறுவார். இம்மலர் மிகுந்த மணமுடையது. இந்நாளில் இதனைப் பிச்சிப்பூ எனக் கூறுவர்.

சங்க இலக்கியப் பெயராக பித்திகம், தளவம் எனவும், உலக வழக்குப் பெயராக பிச்சிப்பூ, பிச்சி எனவும் குறிக்கப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டில் தலைவன் பித்திகத்து அழகிய இதழ்களை உடைய பூவைத் தொடுத்து அழகினை உடைய ஒரு வடத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறான் என்பார் கபிலர்.

“வஞ்சி பித்திகம் சிந்து வாரம்” என்பது குறிஞ்சிப்பாடலில் வரும் அடியாகும். இது படர் கொடியாகும். திருக்கடையூர் சிவன் கோவிலின் தலவிருட்சம் பிச்சி எனக் குறித்து வைத்துள்ளதைக் காணலாம்.

பித்திகை மலர்களைக் குருக்கத்தி மலர்களுடன் கலந்து உழவர் தனிமகள் மலர் விற்பாள் என்பது நற்றிணை கூறும் நற்செய்தியாகும்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply