» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 18 Sep 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
(DATURA METEL, LINN)

ஊமத்தை(DATURA METEL, LINN:SOLANACEAE)

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்
எறியார்பூங் கொன்றையி
னோடும் இளமத்தம்
வெளியாருஞ் செஞ்சடை யார
நினைத்தானை
மறியாருங் கையுடையானை
மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்
லார்க்கிடர் சேராவே.

இது மிகவும் விஷம் கொண்ட செடியாகும். இதைச் சாப்பிடுபவர்கள் பைத்தியமாகி விஷமேறி, செத்து விடுவார்கள். எனவே, இதை மருத்துவர்கள் மட்டுமே முறையாகப் பயன்படுத்துவார்கள்.

இது பற்களுடைய அகன்ற இலைகளையும், வாய் அகன்று நீண்ட குழலைப் போன்ற வடிவமுடைய மலர்களையும், முள் நிறைந்த காய்களையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் காணப்படுகிறது.

வெள்ளூமத்தை (காட்டுமத்தை), கருவூமத்தை, பொன்னூமத்தை, மருளூமத்தை எனவும் வகைவகையாக உள்ளது.

இது ‘ததூரா மெடெல்’ DATURA METEL என்னும் அறிவியல் பெயர் கொண்டு, ‘சொலனாசியே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

ஆயுர்வேத மருத்துவப் பயன்கள்

ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் வளர்கிறது. இந்தியாவில் தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில், தரிசு நிலங்களில் என தானாகவே வளரக்கூடியது. மிகவும் அரிதாக கிடைக்கும் வகையே கரு ஊமத்தையாகும். மருத்துவ குணம் அதிகம் உள்ளதும் இதுவேயாகும்.

இசிவு வேதனை அகற்றுதல், வாந்தி, மூர்ச்சை உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் ஆகியவை மருத்துவ உபயோகங்களுக்குப் பயனாகின்றன. நாய்க்கடிப் புண், குழிப்புண், கட்டிகள், நஞ்சு ஆகியவற்றை நீக்கும் குணம் கொண்டுள்ளது.

இலை : இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.

* இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.

* இலை, பூ, விதை, மூன்றையும் சம அளவாக எடுத்து பாலாவியில், பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணல் குணமாகும்.

* இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.

* இலைச்சாற்றை 2, 3 துளி அளவு வெல்லத்தில் கடைந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுத்து பத்தியமாக இருந்து வந்தால் வெறி நாய்க்கடி விஷம் தீரும். உப்பு, புளியை நீக்கி, பால், மோர், சோறு மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி புண்ணில் கட்டினால் புண் ஆறும்.

* இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காயெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி ஒரு சில துளிகளைக் காதுகளில் விட்டு வந்தால் ஏற்படும் காதுவலி குணமாகும்.

* இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால்  புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.

காய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.

பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.

விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.

* 50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.

வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது.

பிற செய்திகள் : இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இதன் சாறு கொனேரியா நோய்க்கு தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்க்கடியான “ஹைடிரோஃபோபியா”வுக்கு மருந்தாகிறது. யுனானி மருத்துவத்தில் இதனை நெய் தயாரித்து பால் உணர்வைத் தூண்டும் சக்தியாக குறியின் மீது தடவியும், உள்ளுக்கும் தரப்படுவதாக மருத்துவக் குறிப்புகளில் காணப்படுகின்றன.

யுனானி மருத்துவம்
தோற்றம்
: இச்செடி கத்தரிக்காய் செடியைப் போன்று, ஆனால் அதைவிடப் பெரியதாக இருக்கும். இலைகளும் கத்தரிக்காய் இலையைப் போன்றே இருக்கும். இது வெண்மை மற்றும் நீலம் என இரண்டு வகையான நிறத்தில் கிடைக்கின்றது. வெண்மை நிறம் கொண்ட பூக்கள் “நாதஸ்வர” வடிவில் இருக்கும்.

இதன் பழம் அக்ரோட்டை விட பெரியதாக இருக்கும். இதன் மேல் மெல்லிய முட்கள் இருக்கும். இதன் விதைகள் ‘சிமாக்’ எனும் பழத்தின் விதையைப் போன்று இருக்கும். இதன் இலைகள் மற்றும் விதைகள் மருந்தாகப் பயன்படுகிறது.

இயல்பு : குளரிச்சி - வறட்சி (நான்காம் நிலை)

முக்கிய குணங்கள் : தோலில் உணர்ச்சியற்ற தன்மையை உண்டாக்குகிறது. மற்றும் வறட்சியை ஏற்படுத்துகிறது. மூளைக்கு ஊக்கத்தை அளிக்கிறது. போதை மற்றும் ஜன்னியை உண்டாக்குகிறது. தூக்கத்தை வரவழைக்கிறது.

பயன்படுத்தும் முறை
: இதன் எண்ணெயைப் பல முறைகளில் பயன்படுத்தி மூட்டுவலி, ‘ஸயாடிகார்’ எனும் பின்தொடை நரம்புவலி, தோள்பட்டை வலி ஆகியவற்றிற்கு மசாஜ் எண்ணெயாகப் பயன்படுத்துவார்கள். தலைவலியைப் போக்க இதை நெற்றியில் பூசுவார்கள்.

ஆஸ்துமா நோயைப் போக்க இதன் இலையை எரித்து அதன் புகையை முகரச் செய்வார்கள். அல்லது புகைபிடிக்கும் குழாயில் வைத்துப் புகைபிடிக்கச் செய்வார்கள்.

இதன் விதைகளை மற்ற பொருத்தமான மருந்துகளுடன் சேர்த்து மாத்திரை தயாரித்து இருமல் மற்றும் ஆஸ்துமாவிற்கு சாப்பிடச் செய்வார்கள். மேலும், ஜலதோஷத்தைப் போக்கவும், விட்டு விட்டு வரும் ஜுரத்தைப் போக்கவும் இதைக் கொடுப்பார்கள்.

முக்கிய பயன்கள் : உடல் வலிக்கு நிவாரணியாகப் பயன்படும். உடலுறுப்புகளில் உணர்ச்சியற்ற தன்மையை உண்டாக்கும். இது போதைத் தன்மையை உண்டாக்கும்.

அளவு : 16 மில்லி கிராம் முதல் 63 மில்லி கிராம் வரை பயன்படுத்தவும். (1 கிராம் அல்லது 1.5 கிராம் உயிரைக் கொல்லும் அளவாகும்)

தீய விளைவுகள் : ஜன்னி (Delillum) மற்றும் பைத்தியம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

தீய விளைவுகளைச் சரிசெய்யும் முறை : இத்துடன் மிளகு, சோம்பு கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக அபினியைப் பயன்படுத்தலாம்.

தலசவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருமணஞ்சேரி எனும் திருக்கோயிலில் தலவிருட்சமாக ஊமத்தை வணங்கப்படுகிறது.

திருமணஞ்சேரியில் உள்ளது அருள் வள்ளனாய கேசுவரர் யாழின் மென்மொழியம்மை கோயில். இங்கு ஊமத்தை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

இது மன்மதன் பூசித்த தலம். இருபெண்கள் கர்ப்பமாக இருந்த போது, தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்துகொள்ள உறுதி அளித்து, ஒருத்தி ஆமையைப் பெற்றெடுத்தும், மற்றொருத்தி தனது பெண்ணைக் கொடுக்காமல் போனதால், அந்த ஆமை பூஜை செய்து சிவபெருமானால் அதே பெண்ணுடன் திருமணம் செய்யப்பட்டு ஆமை உருவம் நீங்கிய தலமாகும். சமயக் குறவர்களால் பாடல் பெற்ற தலம்.

இது மாயூரத்துக்கு அடுத்த குத்தாலம் இரயில் நிலையத்தில் இறங்கி வடகிழக்காக 3/4 மைல் சென்று குத்தாலத்தை அடைந்து அங்கிருந்து வடகிழக்காக 2 மைல் சென்று திருவேள்விக்குடியை அடைந்து, எதிர் கொள்பாடியை அடைந்து அங்கிருந்து கால் மைல் சென்றால் திருமணஞ்சேரியை அடையலாம்.

இங்கு ஊமத்தை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply