சாமோவ் நாட்டில் சுனாமி தாக்கி 120 பேர் பலி

பசிபிக் கடலில் நியூசிலாந்து நாட்டுக்கு வடக்கே பிஜி நாட்டுக்கு கிழக்கே சாமோவ் என்ற குட்டி நாடு உள்ளது. இதை ஒட்டி அமெரிக்கன் சாமோவ் என்ற இன்னொரு குட்டி தீவும் மற்றும் 11 தீவுகளும் உள்ளன.
இதில் சாமோவ் சுதந்திர நாடு, அமெரிக்கன் சாமோவ் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
இன்று அதிகாலை 6.48 மணிக்கு சாமோவ் நாட்டுக்கு தெற்கே 160 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்க மையம் இருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.3 புள்ளிகளாக இருந்தது.
நில நடுக்கத்தால் சாமோவ் மற்றும் அமெரிக்கன் சாமோவில் பயங்கரமாக கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியே ஓடினார்கள்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பலியானார்கள். மீண்டும் நிலநடுக்கம் வரலாம் என்ற பீதியில் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்கள் கழித்து திடீரென சுனாமி அலைகள் இரு தீவுகளையும் தாக்கின.
15 அடியில் இருந்து 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து அடுத்தடுத்து தாக்கின. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். அவர்களை கடல் அலை இழுத்து சென்றது.
1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அலைகள் நிலப்பரப்புக்குள் வந்தன. அலை தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்தன. ரோட்டில் சென்ற கார் மற்றும் வாகனங்களையும் அலைகள் இழுத்து சென்றன.
சாமோவ் நாட்டில் உள்ள தாலாமோவ், லாலாமனு, மதாவு, டபுவா, கவுதாவி, லோடோ போகா, சவுசங், அமெரிக்கன் சாமோவில் உள்ள லிபோன், பைதோகி ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.
இரு பகுதிகளிலும் சுனாமி அலையில் சிக்கி 120 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயிரக் கணக்கானோரை காணவில்லை.
சாமோவ் நாட்டில் உள்ள லாலாமனு ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
அமெரிக்கன் சாமோவ் கடற்கரை நகரில் ஏராளமான சுற்றுலா விடுதி, பொழுது போக்கு பூங்காக்கள் இருந்தன. சுனாமியால் இவை நாசமாகின இங்கும் ஏராளமானோர் பலியானார்கள். பலர் உடல்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கின்றன.
சுனாமி அலை ஊருக்குள் புகுந்ததும் மக்கள் அலறியடித்து உள்புறத்தில் உள்ள மேடான பகுதிக்கு ஓடினார்கள். அவர்கள் பீதியில் இன்னும் கடற்கரை பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் விரைந்து உள்ளனர். அவர்கள் பிணங்களை மீட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
சாமோவ் நாடு சாவே, உபோலு என்ற இரு தீவுகளையும், 10 சிறு தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் அபியா. முதலில் ஜெர்மனி ஆதிக்கத்திலும், பின்னர் நியூசிலாந்து ஆதிக்கத்திலும் இருந்தது. 1962-ம் ஆண்டு சுதந்திர நாடானது. இங்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
அமெரிக்கன் சாமோவ் துதுலியா என்ற தீவில் உள்ளது. இதன் தலை நகரம் பாகாபகோ அங்கு 65 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அமெரிக்க கடற்படை தளம் இங்கு இருக்கிறது.
சாமோவ் அருகே உள்ள நியூசிலாந்து, பிஜி தீவு, டோங்கோ ஹவாய் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அங்கு சுனாமி தாக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து அங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
சுனாமி பற்றி அறிந்ததும் கவலை அடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.