Monday, 31 Aug 2009
அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் ஆனந்த ஜானுக்கு 59 வருட சிறை

அமெரிக்காவில் பிரபல ஃபேஷன் டிசைனராக வலம் வந்தவர் இந்தியரான ஆனந்த ஜான். இவருக்கு, மாடல் அழகிகளை கற்பழித்தது மற்றும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் 59 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ நகர நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாரீஸ் ஹில்டன், மேரி பிளிஜ் உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபல மாடல்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர் ஆனந்த் ஜான். புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்த ஆனந்த் ஜான் மீது, கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டுவரையில் 14 முதல் 21 வயது வரையுள்ள மாடல் அழகிகளை கற்பழித்தது மற்றும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அவர் மீதான இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் ஆனந்த் ஜானுக்கு எதிராக 9 இளம்பெண்கள் சாட்சியம் அளித்தனர்.
இந்த இறுதிக்கட்ட விசாரணையின்போது ஆனந்த் ஜான் தனக்காக தானே வாதாடினார். தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
































