» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 28 Aug 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம் (PHOENIX DACTYLIFERA LINN)

பாலைவனப் பிரதேசங்களில் பிரபலமாக வளரும் ஒரு மரம், பேரீச்சம் பழ மரமாகும். இதனை முஸ்லிம் மரம் என்றும் கூறுவார்கள். இதனை முஸ்லிம்களும் போற்றுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இம் மரத்தைப்பற்றி அதிகளவில் சிலாகித்துக் கூறியுள்ளார்கள். முஸ்லிம்களின் வேதமான திருமறை குர்ஆனும், இதனைப் போற்றி புகழ்ந்து கூறுகிறது.

ஆனால், கடல் கடந்து, பலநூறு கி.மீ. தொலைவில் உள்ள தமிழ்நாடும், தமிழ் மக்களும் இம்மரத்தைப் போற்றுவதும், இதனைப் பயன்படுத்துவதும் ஒரு ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது.

மருத்துவப் பயன்கள்

சிற்றீச்சம் பிசின்
பிசினை சிறிய அளவில் நீரில் கலந்து சாப்பிட்டால் அஜீரண பேதி, சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் போகும்.

சிற்றீச்சம் கொட்டை
கண்ணில் விழும் பூவிற்கு, இதன் கொட்டையைப் பால் அல்லது தண்ணீரில் தேய்த்து சிறிது கண்ணில் தீட்டலாம்.

சிற்றீச்சம் குருத்து
குருத்தைத் தின்பதால் பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு பிரச்னைகள் போகும்.

சிற்றீச்சம் பாய்
சிற்றீச்சம் பாயில் உறங்கினால், உஷ்ணம் உண்டாகும். பித்தம் நீங்கும், கபச்சினம் நீங்கும்.

பேரீச்சம் கச்சூர்
பேரீச்சங்காயின் பருப்பை நீக்கி, அதைத் தேனில் ஊறவிட்டு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு குணமடைவதுடன், வாய்வுத் தொல்லை அடியோடும் நீங்கும்.

காய் வடகம்
இதன் காய்களைப் பிளந்து விதையை நீக்கி அதற்குள் சுக்கு, மாம்பருப்பு, சிறுநாகப்பூ, கசகசா ஆகியவை தலா 10 கிராம் அளவு எடுத்து தூளாக்கி சீலை மண் செய்து, புடம் போட்டு பின் சீலையை அகற்றி அரைத்து சுண்டைக் காய் அளவு உருட்டி, தினசரி 2, 3 உருண்டைகளாக 3, 4 வேளைக்கு கொடுத்து வந்தால் இரத்தபேதி போகும். பலபேர் இதனை உணவு போல சாப்பிடுகின்றனர்.

பழம்
நீரை சுரப்பிக்கும் பித்தம், மூர்ச்சை ஜுரம், தண்ணீர் தாகம், இரத்தபித்தம், மதுமேகநோய், மலக்கட்டு முதலியவற்றைச் சீராக்கும். இதனை யுனானி மருத்துவர்கள் அதிகமாகப் பயன்படுத்தச் செய்கின்றனர்.

பேரீச்சம் பாய்
பேரீச்சம் ஓலைப்பாயில் படுத்து உறங்கினால் வாத குன்மம், சோம்பல் நீங்கும். பசி, வெப்பம் ஆகியவற்றை உண்டாக்கும்.

பேரீச்சை
இது பேரிந்து, நாட்டிந்து, சிற்றிந்து எனப் பல்வேறுபடும். பேரிந்து அரேபியாவில் உள்ளது. இதனிலைகள் நடுத்தண்டில் தென்னை போல் பல கிளைத்து நடுநரம்புடன் கூடியவை. இதன் குலை, பல காய்களைப் பெற்றிருக்கும். மரம், சற்றேறக்குறைய 60 அடி உயரமிருக்கும். ஓலையால் பாய் முடைவர். மட்டையால் கூடை முதலியவை கட்டுவர். பழம் - உணவு, குதிரையுணவு, சாராயமாக்கவும் உதவுவதாக அகராதிகள் தெரிவிக்கின்றன.

தற்போது கொட்டையுடனும், கொட்டை நீக்கியும் விற்பனையில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாக முன்னணியில் வியாபாரம் ஆகும் பழமாகவும் பிரபலமாகியுள்ளது.

உலர வைத்த பேரீச்சையானது கஜ்ஜுர் எனப்பெயர் பெற்று ஹோமங்களிலும், வேள்விகள், யாகங்களில் அக்னி பகவானுக்கு இடப்படும். பால், தயிர், தேன் போன்றவற்றுடன் கஜ்ஜுரும் இடப்படுகிறது.

இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் முக்கியமான பொருளாக பயன்படுகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.

ஈச்சங்கள்ளு
ஈச்சங்கள்ளு உள் அழலி, பிரமேகம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை நீக்கும். உடலில் குளிர்ச்சியும், பித்த கோபம், வீக்கம் ஆகியவை உண்டாக்கும்.

உபயோகிக்கும் முறை
இதை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். அளவு அதிகமானால் புத்தி தடுமாறும். மருந்தாக பாவித்து சில தினங்கள் குடித்தால் போதுமானது. இதனை நீண்ட நாள் பழக்கமாக வைத்துக் கொள்ளக் கூடாது. உள் அழல் சாந்தப்பட்டவுடன் நிறுத்திவிட வேண்டும். தினமும் ஒரு வேளை 3 அவுன்ஸ் அளவில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு வரலாம்.

ஈச்சாங் கற்கண்டு
இது மருந்துகளையும், புத்தியையும் கெடுக்கும் எனவும், காச நோய், சுவாச நோய்களையும் மேலும் சில நோய்களையும் உண்டாக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உபயோகிக்கும் முறை
இதனை மருந்து சாப்பிடும் காலத்தில் உபயோகிக்கக் கூடாது. இது மருந்துகளின் வீரியத்தை அடக்கி அதன் குணத்தை முற்றிலுமாக கெடுத்துவிடும். இதனை தொடர் பழக்கமாக வைத்து சாப்பிட்டு வந்தால் சளி சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

ஈச்சம் வெல்லம்
இது புத்தி மந்தம், பித்த கோபம் போன்றவற்றை உண்டாக்கும்.

உபயோகிக்கும் முறை
இந்த வெல்லமானது சாதாரணமாகக் கரும்பில் இருந்து செய்யப்படுகின்ற நல்ல வெல்லத்தைவிட ருசிகரமானது. இதனைப் பழக்கமாக உபயோகிக்கக் கூடாது. இதனால் பாரிச வாதம், திமிர் வாதம் போன்றவை ஏற்படும்.

வகையினங்கள்
கானூன், லுனிகார்குன், வன்பாக்யுன் ஆகிய வகையினங்கள் காணப்படுகின்றன. சிந்து மாகாணப் பகுதிகளில் லோஹர், தொட்டியர், இதுல்ஷாஹி போன்ற வகையினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் லோஹர் அலி போன்றவை தரம் வாய்ந்தவையாகும்.

அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்
பேரீச்சம் பழத்தில் பலவகையான உப்புச்சத்துக்களும், இரும்புச் சத்துக்களும், வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. டானின், மியூஸிலேஜ் போன்றவை கொட்டைகளிலும், பழச்சதைப் பகுதிகளிலும் இருக்கின்றன.

பேரீச்சம்பழச் சதையில் அதிகபட்ச அளவில் சர்க்கரைப் பொருட்களும், நீர்ச்சத்தும் இருக்கும். நார்ச்சத்து சர்க்கரையில் கரையா வேதிப்பொருட்களும் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.

1. சத்துப்பொருட்கள் நிறைந்து இருப்பதால் பேரீச்சம் பழங்கள் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக விளங்குகிறது.

2. ஆண்மைக்கு சக்தியளிக்க வல்லது. சுய இன்பப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் இரகசிய பிரச்னைகளுக்கு பேரீச்சம் பழம் சிறந்த மருந்தாகும்.

3. இரும்புச்சத்து அதிகளவில் கொண்டு இருப்பதால் இரத்தத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய வல்லது.

4. சிறுநீரை வெளிக் கொணர்கிறது.

5. உடல் குண்டாக விரும்புகிறவர்கள் பேரீச்சம் பழத்தை வெள்ளரிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

6. இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது. நீர்த்துப்போன இந்திரியத்தை கெட்டிப்படுத்துகிறது. யுனானி மருத்துவர்கள் இதனைக் கொண்டுதான் “மாஜுன் ஆரத் குர்மா” என்ற பெயரில் லேகியம் தயாரிக்கின்றார்கள். ஆண்மைக் கோளாறு, குழந்தை பாக்கியமின்மை போன்ற குறைபாடுகளைப் போக்குகின்றன. நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்த உதவுகிறது.

7. மாரடைப்பு, இதய நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் நல்ல மருந்தாகும்.

8. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டி ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது.

9. பேரீச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து அதைப் பிழிந்து எடுத்துப் பின் அந்தத் தண்ணீரைக் குடிப்பதால் பலவீனத்தைப் போக்க முடியும் என்று நபி மருத்துவம் கூறுகிறது.

10. பேரீச்சம் பழத்தில் சர்க்கரைச் சத்து அதிகளவில் இருந்தாலும், சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இதைப் பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படுவதில்லை. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. எனவேதான், நோன்பு வைப்பதால் ஏற்படும் களைப்பு, அசதி, பலவீனம் போன்றவற்றிற்கு பேரீச்சம்பழம் சிறந்த மருந்து ஆகும்.

11. கை, கால் இயங்காமை, பேச முடியாமை, “லக்வா” என்னும் பாரிச வாயு, இளம் பிள்ளைவாதம் போன்ற நரம்பு வியாதிகளுக்குப் பேரீச்சம்பழ லேகியம் மிகவும் பயனுள்ள மருந்தாகும்.

12. பேரீச்சம் பழங்கள் உடலில் உள்ள குளுமையை அகற்றுகின்றன. இரத்தத்தில் உஷ்ணத்தை அதிகரிக்கின்றது. இரத்த ஓட்டத்தைச் சரி செய்கிறது.

13. நரம்புகளுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. பாரிசவாயு நோயைக் குணப்படுத்த பேரீச்சங்கலவை கொண்ட “லபூப் கபீர்” “லபூப் ஆஜம்” போன்ற லேகியங்கள் பயன்படுகின்றன.

14. காய்ச்சல், பெரியம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலுடன் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். பருவ வயது அடைந்த பெண்கள், வளரும் குழந்தைகள், பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சம் பழத்தை பாலுடன் தருவது நல்ல ஊட்டச்சத்து தரும் உணவாகும்.

15. உடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வெப்பத்தை ஊட்டுகிறது. இதயத்திற்கு சக்தி தருகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

16. எகிப்து, பெர்ஸியா, அரேபியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் பிரதான உணவுப்பொருளில் பேரீச்சம் பழங்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது. வீட்டு விலங்குகளும் இதனை அதிகளவில் தின்னுகின்றன.

17. பேரீச்சம்பழங்களை நாய்கள், குதிரைகள், ஓட்டகங்கள் நன்றாகச் சாப்பிடும். பாலைவன விலங்குகளுக்குச் சிறந்த தீவனமாகவும் இவை விளங்குகிறது.

18. பேரீச்சம்பழத்தின் சதைப்பகுதி சீதபேதியைப் போக்கும்.

19. பாதாம் கொட்டை, பிஸ்தா, ஏலக்காய், நறுமணப் பொருட்கள் போன்ற பொருட்களுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுவதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. சோர்வு, அசதி, களைப்பு மறைகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது. ஆண்மை அதிகரிக்கிறது.

20. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் நோய்க்கு பேரீச்சம்பழம் மிகவும் நல்ல மருந்தாகும். முறை ஜுரத்தையும் பேரீச்சம்பழம் குணப்படுத்துகின்றன.

பேரீச்சம் பழக்கொட்டை காபி
பேரீச்சம் பழ விதைகளை வறுத்து உலர்த்தி, பவுடராக்கி, அதனைக் கொண்டு காபியும் தயாரிக்கிறார்கள். பாலைவனப் பிரதேசங்களில் இதற்கு நல்ல மவுசு உண்டு. ஒற்றைத்தலைவலி, தலைவலியைக் குணமாக்க பேரீச்சம்பழக் கொட்டை லேகியம் உதவுகிறது.

பேரீச்சம் பழக் கொட்டைகளை எரித்து, புகைபிடித்து மூலநோயைப் போக்கடிக்கப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாகப் பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், ஜீரண சக்தியூட்டியாகவும் விளங்குகிறது.

பேரீச்சம்பழ மர பயன்கள்
மர வேலைப்பாடுகளுக்கு ஏற்றது. கட்டிட உபயோகத்திற்கும், மேஜை நாற்காலி போன்றவை தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.

கிளைகள் (மட்டைகள்) : கூடை, கயிறு, பாய், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைத் தயார் செய்யலாம்.

இலைகள் : கூரை போடவும், வேலி அமைக்கவும், விசிறி மற்றும் அழகிய திரைகள் செய்யவும் பயன்படுத்தலாம்.

பழக்கொட்டைகள் : ஊற வைத்து தூளாக்கி கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சிறந்த தீவனமாக தயாரிக்கப்படுகிறது. பேரீச்சம்பழ கொட்டைகள் மூலம் தயாரிக்கப்பட்ட தீவனத்தில் 1.82 சதம் முதல் 5.2 சதம் புரதச்சத்தும், 6.8 முதல் 9.32 சதம் கொழுப்புச்சத்தும், 65.5 சதம் மாவுச் சத்தும், 6.4 முதல் 13.6 சதம் நார்ச்சத்மு, 0.89 முதல் 1.57 சதம் சாம்பல் சத்தும், 7.17 முதல் 6 சரம் ஈரப்பதமம் உள்ளன.

கொட்டைகளில் 6.8 சதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் சோப்பு மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இராசாயன முறையில் அதிலிருந்து 65 சதம் வரை ஆக்ஸாலில் அமிலம் எடுக்கப்படுகிறது.

பேரீச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்
* 100 கிராம் பழத்தில் 250 கலோரி சத்து உள்ளது. 6 கிராம் புரதச்சத்து, 25 கிராம் மாவுச்சத்து, 1 கிராம் இரும்புச் சத்து, 6 கிராம் சாம்பல் சத்து, 1.1. கிராம் கொழுப்பு சத்து, 2 கிராம் பாஸ்பரஸ் சத்து, 0.7 கிராம் பொட்டாசியம் சத்து ஆகியவை உள்ளன. வைட்டமின் A, வைட்டமின் B2, வைட்டமின் C ஆகிய சத்துக்களும் உள்ளன.

* பேரீச்சம் பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவப் பலன்களும் உள்ளன. 5 பழங்களில் (45 கிராம்) 115 கலோரிச்சத்து உள்ளது. இது நம் ஒரு நாள் உணவிற்கு சமம்.

* பேரீச்சம்பழம் இரத்த விருத்திக்குப் பயன்படுகிறது. மேலும் இரத்தசோகை, மூச்சுத்திணறல், இருதய நோய், புற்று நோய், குடல் நோய், ஈரல் நோய், பல்ஈறு நோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு, எலும்பு மூட்டுவலி கோளாறு, கர்ப்பப்பைக் கோளாறு போன்ற பல்வேறு நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருப்பது பேரீச்சம்பழம் என்றால் அது மிகையில்லை.

* பேரீச்சம்பழத்தில் இருந்து இனிப்புகள், மிட்டாய், சாக்லேட், சாலட், பிரட், பிஸ்கட் வகைகள், ஜாம், ஜெல்லி, சிரப், ஜுஸ், சாஸ், ஊறுகாய் வகைகள், சட்னி, பேக்கரி பேஸ்ட், சர்க்கரை பவுடர் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.

பிற செய்திகள்
உழவர் பெருமக்களே, அதிக அளவில் இல்லை என்றாலும், சிறிய அளவில் ஒவ்வொரு விவசாயியும் பேரீச்சம் பழ மரங்களைச் சாகுபடி செய்யுங்கள்.
வீட்டிற்கு ஒரு மரம் வைத்தாலும் அந்த மரம் நம்மை வாழ வைக்கும். உடல் நலத்துடன் வைத்திருக்கும் என்பதை மறவாதீர்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
ஈச்சங்குடி, திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சமாக ஈச்சை மரம் வணங்கப்படுகிறது. இது தவிர, பல சிவன் கோயில்களிலும் இவை தலவிருட்ச மரமாக விளங்குவது ஒரு முக்கியமான செய்தியாகும்.

பழனி போன்ற முருகர் கோயில்களில் பஞ்சாமிர்தமாக வழங்கப்படுகின்ற கனிகளில் பேரீச்சம்பழம் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்து சமுதாய மக்களும் போற்றும் இம்மரம் தற்போது தமிழகத்தில் வேகமாக வளர்க்கப்படுவது ஒரு ஆனந்தம் தரும் செய்திதான்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply