» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 21 Aug 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம் (MADHUCA LATIFOLIA)

சுந்தரர் பாடிய தேவாரம் - பாடல் :
ஆடுமின் அன்புடை யீர்அடிக்
காட்பட்டதூளி கொண்டு
சூடுமின் தொண்டருள் ளீர்உம்
ரோடெமர்சூழ வந்து
வாடும்இவ் வாழ்க்கைதன்
னைவருந்த தாமல்திருந்தச் சென்று
பாடுமின் பத்தருள் ளீர்பழ
மண்ணிப்படிக்க ரையே.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவில், நாராயண குப்பம், மலைமஞ்சனூர் என்ற இரு கிராமங்கள். அந்த ஊரிலே, என் தாய் இருந்தார். பாட்டி வீட்டுச் சீதனமாக என் தாய்க்கு ஐந்து ஏக்கர் நிலமும் ஒரு மாமரமும், இலுப்பை மரமும் கொடுத்தார்கள்.

பெரிய நிலக்கிழார், பண்ணையார் போன்றோர் திருமணத்தின் போது மாமரத்தையும், இலுப்பை மரத்தையும் சீதனமாகக் கொடுப்பது பெரும் கவுரவமாக நினைப்பார்கள். அது நன்மையாக முடியும் என்றும் கருதுவார்கள்.

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது அந்த மரத்தினடியில் விளையாடி இருக்கின்றேன். பூக்களைச் சாப்பிட்டு இருக்கிறேன். இந்த எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றேன். இலுப்பை எண்ணெயை மூலிகை எண்ணெய் என்பார்கள். மண்ணெண்ணெய் பற்றாக்குறை காலத்தில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி வைத்து இருப்பதையும் நான் பார்த்து இருக்கின்றேன். அந்த மரம் இப்போது பார்க்கவும் கிடைப்பது இல்லை.

என் தாயார் அடிக்கடி இலுப்பை மரத்தைப்பற்றி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். எங்கள் மூலிகைப் பண்ணையில் நூறு இலுப்பை மரங்களை வைத்து வளர்த்துக் கொண்டு வருகிறேன். இலுப்பைப் பூக்களைத் தின்பண்டமாகப் பயன்படுத்துவார்கள். அதை அதிகளவு சாப்பிட்டால் போதை ஏறும். ஆதிவாசிகள், கிராமிய மக்கள் இதிலிருந்து நாட்டுச் சாராயம் தயாரித்துக் குடிப்பது வழக்கம். இலுப்பை விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பார்கள். அதை அப்படியே வைத்தால் வெண்ணெயாக மாறிவிடும். சில பேராசை பிடித்த வியாபாரிகள் நெய்யிலே இலுப்பை எண்ணெயைக் கலப்படம் செய்தும் விற்பார்கள். இந்த இலுப்பை மரம் அழியக்கூடாது என்பதற்காக, மக்கள் இதனை நன்கு அறிய வேண்டும் என்பதற்காகவும் கோயில்களில் இதை நட்டு பாதுகாக்கப்படுகின்றன.

சில கோயில்களில் தெய்வத்துடன் சேர்த்தும் இம்மரம் வணங்கப்படுகின்றது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பார்கள். பயன்தரும் மரங்களை வளருங்கள் நன்மை கிடைக்கும்.

பானங்களில் சோமபானம், சுறாபானம் எனும் மதுபானங்கள் பழங்காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இலுப்பை மரச்சாராயம்தான் அந்த சுறாப் பானமாகவும், சோம பானமாகவும் இருக்கலாம் எனறு கூறப்படுகின்றது.

இந்த மரத்தின் மகிமை என்னவென்றால், இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தை குடிப்பழக்கத்தை மறக்கடிக்க பயன்படுத்துகின்றார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதைப்போல இலுப்பை மரச்சாராயத்தைக் கொண்டே குடியை மறக்கடிக்கச் செய்கின்றார்கள்.

இலுப்பை மரத்திற்கு ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் “மதுக்கா இண்டிகா” என்பார்கள். “மதுக்கா” என்றால் சாராயம் என்றும், “இண்டிகா” என்றால் இந்திய நாட்டுச் சாராயம் என்றும் அறியப்பட்டு இருக்கின்றது.

இந்த மரங்கள் “தெய்வீக மருத்துவம்” மூலிகைப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மரம் அழியக்கூடாது என்பதால், இந்து, ஜைனர், புத்தர் முனிவர்களின் ஆலயங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தெய்வத்தோடு இந்த மரங்களையும் சேர்த்து வணங்கும் பழக்கம் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் இது சிவன், விஷ்ணு கோயில்களில் குறிப்பாக வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பது பழமொழி. நமக்கு சர்க்கரை கரும்புகளிலிருந்து கிடைக்கின்றது. ஆனால், முன்னொரு காலத்தில் கோயில்களில் காணப்படும் இலுப்பை மரங்களின் பூக்களில் இருந்தே சர்க்கரை பெறப்பட்டது. காட்டு வாசிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் சிறந்த உணவுப் பொருளாகவும், ஊட்டச்சத்து மிக்க பானமாகவும் விளங்கிய இலுப்பை மரப்பூக்களில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.

காடுகளில் இலுப்பை பூ, பூக்கத் துவங்கிய உடனேயே, மரத்தின் சீழ், செடி, கொடிகளை செதுக்கிச் சுத்தப்படுத்தி விடுவார்கள். பூக்கள் உதிர உதிர அங்கேயே முகாமிட்டு, பொறுக்கி சேகரித்து உலர்த்தி, மரக் கொட்டைகளுடனும், சிறிது அரிசியுடனும் சேர்த்து உணவாக உண்பார்கள். பசி, பட்டினியைப்போக்க பெருமளவில் உதவிய இந்த இலுப்பை உண்மையில் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.

இந்த மரத்தின் பூக்களை அரிந்து கொதிக்க வைத்து, அல்வா மாதிரியோ, உருண்டைகளாகச் செய்தோ தின்பண்டங்களாக மலைவாழ் மக்கள் விற்பார்கள். இராஜஸ்தான், குஜராத், மகாரஷ்டிரம் மாநிலங்களில் இலுப்பைப் பூக்களைக் கொண்டு மதுபானம் தயாரிக்கின்றார்கள். ஒரு டன் உலர்ந்த இலுப்பைப் பூக்களிலிருந்து வீரியமுள்ள 405 லிட்டர் ஆல்கஹால் தயாரிக்கலாம்.

இலுப்பை மரத்தின் பூக்கள் விதை, பழம், பிசின், தோல், பட்டை, மரக்கட்டை, இலை, வேர்ப்பட்டை உட்பட எல்லாப் பொருட்களுமே மிகவும் பயன்படுகின்றது.

இந்தியாவிலுள்ள வனப் பிரதேசங்களை அழகான முறையில் அலங்கரிக்கும் மரங்களில் இலுப்பை மரம் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இலுப்பை மர விதைகளிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெய், அடர்த்தியாகவும் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

இவை உடனடியாக உறைந்து வெண்ணெய் போல் ஆகிவிடுவதால் இதனை வெண்ணெய் மரம் என்றும் கூறுவார்கள்.

காட்டுவாசிகளின் மிக முக்கியமான உணவுப் பொருளாக இலுப்பை மரப்பழங்கள் விளங்குகின்றன. காடு, மலை, குன்றுப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்பவர்கள், இலப்பை மரப்பழங்களை அதிகளவில் விரும்பி உண்ணுகின்றனர்.

மஹ்வாப் பூக்களிலிருந்து அருமையான சுவைமிக்க பானம் வெளிப்படுகின்றது. இதனை ருசிப்பதற்காகவே மான் போன்ற வன விலங்குகள் இப்பூக்களைத் தேடி பல மைல் தொலைவுகளுக்கு பயணிப்பதை வனவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மான்களைப் போன்றே மைனா, மயில்கள், கிளிகள் கூட இலுப்பை மரத்தை நோக்கி மாலை நேரங்களில் படையெடுக்கின்றன. அதனால், இலுப்பை மரம் மயில், கிளிகளின் சரணாலயமாகக் காணப்படுகின்றது. மேலும், இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதிகளில் மான்களும் நிறைந்து இருக்கும். கஸ்தூரி மணம் வீசும் மஹ்வாப் பூக்களும், அழகான கரும் பச்சை நிற இலுப்பை இலைகளும் மரங்களுக்கு அழகையும், வனப்பையும் தருவதுடன் பார்ப்போர் கண்களையும் பரவசப்படுத்துகிறது. இலுப்பை மர இலைகளை காய்கறிகளுடன் கலந்து ‘புட்டிங்’ போன்ற இனிப்பு தின்பண்டங்களும் தயாரிக்கின்றார்கள்.

தோற்றம் : இலுப்பை மரத்தின் இலைகள் தோல்களைப் போன்று தடித்து இருக்கும். இவை 13 முதல் 20 செ.மீ வரை நீளம் கொண்டதாக இருக்கும். சுமார் 2.5 முதல் 3.5 செ.மீ. வரையில் அகலமுள்ளதாக இவை காணப்படுகின்றன. இதன் பூக்கள் இரண்டரை முதல் 5 செ.மீ. நீளமுள்ள மலர்க் காம்புகளுடன் ஒன்றேகால் செ.மீ. சுற்றளவுடன் கூடியதாக காணப்டுகின்றது.

மலரின் இதழ்களிலிருந்து கஸ்தூரி மணம் கமழ்கிறது. இம்மரத்தின் பழம் இரண்டரை முதல் ஐந்து செ.மீ. நீளமுடையதாகக் காணப்படுகிறது. இதில் 1 முதல் 4 எண்ணிக்கை வரையில் பழுப்பு நிறத்தில் விதைகள் இருக்கும்.

பல்லாண்டுகள் வாழக்கூடிய பெரிய மரமாக இவை வளர்கின்றன. இம்மரத்தின் தண்டுப்பகுதி பழுப்பு, சாம்பல் கருமை நிறங்களில் காணப்படுகின்றது.

இதன் கிளைகளிலிருந்து இலைகளை உடைத்தால் பால் போன்ற திரவம் கசிகிறது.

மரங்கள் கப்பல்களைக் கட்டவும், இரயில்வே தண்டவாள கட்டைகளைச் செய்யவும், விறகு எரிக்கவும் பயன்படுகின்றது. இதிலிருந்து அதிகளவிலான கலோரிச்சத்து கிடைக்கின்றது. ஆனால், இதிலுள்ள மெளரின் என்னும் சத்து தோல் அரிப்பைத் தரவல்லதாகக் கூறப்படுகின்றது.

நல்ல குணங்கள்

இலைகள் : இலுப்பை மரத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இலைகள் உதிரத் தொடங்கும். புதிய இலைகள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் துளிர்க்க ஆரம்பிக்கும்.

பூக்கள் : இதன் பூப்பூக்கும் காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலாகும். இலுப்பை மரப்பூக்களை சாறுபிழிந்து அதனை மிகச்சிறந்த பானமாகப் பயன்படுத்தலாம். மிகச்சிறந்த ஊட்டச்சத்தையும், உடல் நலனையும் தரவல்லதாக இந்தப் பானம் விளங்குகின்றது.

பழங்கள் : ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் பழங்கள் காய்க்கத் துவங்கும். மஹ்வாப் பழங்கள் பச்சை நிறத்தில் காணப்படும். இதில் ஒன்று முதல் நான்கு பழுப்புநிற விதைகள் இருக்கும். இதனை அரைத்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் இருந்து ஊதுபத்திகள், சோப்புகள், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மரம் : பொருளாதாரத்தில் முக்கியமான பலன்கள் பலவற்றை இலுப்பை மரம் தருகிறது. இலுப்பை மரக் கட்டைகளைக் கொண்டு பலவிதமான நாற்காலிகள், ஜன்னல்கள் உட்பட பல உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குடல் புழுக்களை நீக்கம் செய்யும் தன்மை மஹ்வா மரப் பொருட்களுக்கு இருக்கின்றது. பற்களில் ஏற்படும் தொற்றுப் பாதிப்புகள், மூட்டுவலி, நீரிழிவு நோய், தோல் நோய்களுக்கு இலுப்பை மரப்பொருட்கள் மிகவும் பயன்படுவதாக ஆயுர்வேத மருத்துவ நூல்களில் காணப்படுகின்றது.

மரப்பட்டை : இலுப்பை மரப்பட்டையில் 17 சதவீத அளவில் டானின் சத்து நிறைந்தள்ளது. சாயமேற்றவும், தோல் பதனிடுதலிலும் இவை மிகவும் உதவுகின்றது.

மரக்கட்டைத்தோடு : 1 சதவீத அளவு ஈரப்பதம் காணப்படுகிறது. இது தவிர, 28.6 சதவீத அளவு லிக்னின், 52.68 சதவீத அளவு நார்ச்சத்து ஆகியவை அடங்கியிருப்பதும் அறியப்பட்டு இருக்கின்றது.

மருத்துவ குணங்கள்

பட்டை : இலுப்பை மரப்பட்டை, பசியைத் தூண்டுகிறது. வெப்பத்தை உண்டாக்குகிறது. இதனை ஊறவைத்த நீரைக் கொண்டு புண், சொறி, போன்றவற்றைக் கழுவப் பயன்படுத்தலாம். அந்தப் பட்டையைக் கஷாயமிட்டு நீரிழிவு, கீல்வாதம், இரத்தம், கசியும் பல் ஈறுகளை கொப்பளிக்கும் மருந்தாகவும், உள்நாக்கு வீக்கத்திற்கான மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

குதிரைகளின் வயிற்று வலியைப் போக்கி குணப்படுத்த, இதனை குதிரைகளுக்குக் கொடுப்பார்கள். இதன் பட்டை எண்ணெய், கால்கடுவனைப் போக்கி குணப்படுத்துவதுடன், மண்டைச் சூட்டையும் தணிக்கிறது.

சொறி, சிரங்கு, புண்கள், காக்காய் வலிப்பு, சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல், வயிற்றில் நாக்குப்பூச்சிகள் வளருதல், இரத்தச்சிதைவு, கல்லீரல் நோய்கள், வயிற்றக் கோளாறுகள், நுரையீரல் நோய்கள், தோல் தொற்றுப் பாதிப்புகள், தலைவலி, மூட்டுவலி, மூலம் போன்ற நோய்களுக்கு மஹ்வா மரத்தண்டு, கட்டைகள், பூக்கள், விதைகள் போன்றவை பயன்படுவதாக ஆங்கில மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் : இலுப்பை கொட்டையிலிருந்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகிறது. இதனைக் கொண்டு இடுப்புப் பகுதியைத் தேய்த்தால், இடுப்பு வலி குணம்பெற்று விடுகிறது. உடல் வனப்பும் அடைகிறது. மூலநோய் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம். மார்புச்சளி, ஜலதோஷம், மார்பு வலிகளுக்கு இலப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்கம் எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை நீரிலிட்டுக் கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற கலவையை ஏழு நாட்களுக்கு நெஞ்சில் தடவுவதன் மூலம் குணம்  பெறுகிறது.

பிண்ணாக்கு : இலுப்பைப் பிண்ணாக்கு 10 கிராம் அளவு எடுத்து, தண்ணீர்விட்டு அரைத்து அதில் 50 மில்லி அளவு நீரை விட்டு கலக்கிக் கொடுத்து, தற்கொலைக்காக உண்ட நஞ்சினை வெளிக் கொணரலாம்.

சுவை : இலைகள் துவர்ப்புத்தன்மை உடையது. பூ இனிக்கும்.

இயல்பு : இலுப்பை மரம் பொதுவாக உஷ்ணமும், வறட்சியும் கொண்டு இருக்கின்றது.

அளவு : இலுப்பைப் பூக்களை அதிகளவில் தின்பண்டமாகச் சாப்பிடுவார்கள். இதனை 49 கிராம் முதல் 60 கிராம் வரையில் ஒரு வேளைக்கு சாப்பிடலாம்.

மருத்துவம் : உடலுறவுச் பிரச்னைகளைக் குணப்படுத்துகிறது. மேலும், ஆண்மைப் பிரச்னைகளைப் போக்கி குணப்படுத்த மஹ்வா பூக்கள் மிகவும் உதவுகிறது என்று யுனானி மருத்துவ களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் பழம் வயிற்றைச் சுத்தம் செய்வதுடன், மலச் சிக்கலையும் போக்குகிறது. சிறுநீரைப் பிரிக்கிறது. மூட்டு வலி, இடுப்பு வலி, குளிர்ச்சியால் வரும் தலைவலிகளைப் போக்கி குணப்படுத்தவும் இலுப்பைப் பழம் உதவுகிறது. இதன் பழமும், கொட்டையும் வயிற்றைச் சுத்தம் செய்வதுடன், பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. வாயுத் தொல்லைகளைப் போக்கி குணப்படுத்துகிறது. ஜலதோஷத்தினால் வரும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆனால், இது பரம்பரையாக வரும் தலைவலி நோய் உள்ளவர்க்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் இத்துடன் குளிர்ச்சியும், ஈரமும் கொண்ட பொருட்களைக் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன் கிடைக்கும். இலுப்பை மர இலைகளை மார்பில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இலுப்பைப் பூக்களைக் குடிநீர் செய்து கொடுத்தால், இருமல், சூட்டுக் காய்ச்சல், தண்ணீர் தாகம் போய்விடும். பூக்களை பால் விட்டரைத்துக் கொடுத்தால் உடல் இளைப்பு போய்விடும். காய்ந்த பூக்களை வதக்கி வீக்கங்களில் வைத்து ஒத்தடம் இட்டால், அந்த இடங்களில் வியர்வை தோன்றி வீக்கங்கள் குறைந்து கொண்டே வரும்.

இலுப்பை மரப்பட்டையைக் கொண்டு வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய், கால் கடுவனைப் போக்குகிறது. மண்டைச் சூட்டைத் தணிக்கிறது. புண், சொறிகளையும் குணப்படுத்துகிறது.

வாயுத்தொல்லையைப் போக்கவும், நச்சுத்தன்மையை மறக்கடிக்கவும், இலுப்பை விதையின் மீதுள்ள ஓட்டை நீக்கி உள்பருப்பை நசுக்கி, வதக்கி ஒற்றடமிடலாம். வித்தின் ஓட்டை எடுத்துவிட்டு இடித்து புட்டு போல் அவித்து சூட்டுடன் ஆலையில் இட்டு ஆட்டி எடுத்தால் நெய் தேறும். சுமார் 100 பங்குக்கு 30 பங்கு நெய் கிடைக்கும். இதனை ‘இலுப்பை எண்ணெய்’ என்றும் கூறுவார்கள். இது கரப்பான், சிரங்கு, புண்களை உண்டாக்கும் என்றாலும், இடுப்பு வலியைப் போக்கி குணப்படுத்துகிறது.

இலுப்பைப்பூ 50 கிராம் அளவில் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மி.லி அளவிற்கு காய்ச்சி, வடிகட்டி, தினசரி காலை வேளைகளில் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணம்பெறும். இது போலவே, இலுப்பை மரத்தின் பட்டையும் 50 கிராம் அளவில் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டர் அளவிற்கு சுண்டி வரும் வரை அவற்றைக் கொதிக்க வைக்க வேண்டும். இதனை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இலுப்பை எண்ணெயை வெது வெதுப்பாக சூடுபடுத்தி தடவி வருவதுடன், சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து வந்தால், இடுப்பு வலி மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்றவை குணப்படுகிறது.

இலுப்பைப் பிண்ணாக்கு 10 கிராம் அளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து அதில் 50 மில்லி நீரை விட்டு கலக்கிக் கொடுத்தால் விஷத்தை முறிக்கிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தை வெளியேற்றி உயிரைக் காப்பாற்றுகிறது.

பிற செய்திகள்

பழங்காலத்தில் கோயில்களை எழுப்பும்போது, அங்கு கண்டிப்பாக ஒரு இலுப்பை மரத்தையும் நடுவார்கள். இம்மரத்தின் பூக்கள், பழங்கள் மற்றும் இலைகளைக் கொண்டு சுற்றுப்புறத்தில் வாழும் மக்கள் மருத்துவமும் செய்து கொள்வார்கள்.

இலுப்பை மரத்தின் பூக்களில் இருந்து வரும மணம், சுவைகளுக்காகவே பல வகையான பறவையினங்கள் வருகை தருகின்றன. இதன் பழம், சப்போட்டா பழத்தின் சுவையைக் கொண்டிருக்கிறது. இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெய் தோல்நோய்களைப் போக்கவும், சோப்பு, மெழுகுவர்த்தி, கிரீஸ், கெட்டியான கொழுப்பு தயாரிக்கவும் உதவுகிறது. இலைகளும், பூக்களும் கறவை மாடுகளுக்கு நல்ல தீவனமாகும். இம்மரக்கட்டைகள் பல கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது. இலுப்பைப் பழத்திலிருந்து மதுபானங்களும் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான பொருளாதார மற்றும் மருத்துவ பயன்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்த இலுப்பை மரம் ஒரு தெய்வீக மரமாகும்.

இலுப்பை மரங்களை எப்படி பராமரிக்கலாம்?

தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலுப்பை மரம் ஒரு வெப்ப மண்டல மரமாகும். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 750 மில்லி லிட்டருக்கு மேல் மழை பொழியும் பிரதேசங்களில் இதனை நன்றாக வளர்க்கலாம். அதாவது, தமிழ் நாட்டின் தட்ப வெப்ப நிலையில் இம்மரம் நன்றாக வளரும். மேலும் மணல் நிறைந்த பிரதேசங்கள், பெரிய பெரிய கற்கள் நிறைந்த பகுதிகள், களிமண் பாங்கான பகுதிகள், சுண்ணாம்பு கற்கள் நிறைந்த பகுதிகள், படுகை நிலங்களில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருஇரும்பைமாகளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) திருவனந்தபுரம் ஆகிய திருக்கோயில்களில் இலுப்பை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. திருப்பழ மண்ணிப் படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்காலம் வழங்கி வருகிறது.

இம்மரம் கடலூர் இரும்பையில் உள்ள மகாலீஸ்வரர் சிவன் கோயிலிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயிலிலும் காணப்படுகின்றன. இதுபோலவே, ஈரோடு கொடி மடை செங்குன்றத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில், ராமநாதபுரம் இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், நாகை இலுப்பைப்பட்டு படிக்கரைநாதர் சிவன் கோயில், நாகை இலுப்பைப்பட்டு படிக்கரை நாதர் சிவன் கோயில் உள்ளிட்ட பல சிவன் கோயில்களிலும் இந்த மரம் காணப்படுகிறது.

பழமண்ணிலுள்ள நீலகண்டேஸ்வரர், கோயிலில் இம்மரத்தை வளர்க்க பிரபு விரும்பியதாகவும், இம்மரத்தை வணங்குவோர் தென்கிழக்குப் பகுதியில் அதிகளவில் இருப்பதால், அங்கு இதனை பரப்பச் செய்ததாகவும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இலுப்பை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு கோயில்களில் விளக்கு எரிக்கின்றார்கள். இலுப்பை எண்ணெயைக் கொண்டு கோயில்களில் விளக்கு எரிப்பதனால் தெய்வம் நம்மீது அருள் புரியும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

சோழ மன்னர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகளில் இம்மரம் மிகுந்த தெய்வீகப்பற்றுடன் வளர்க்கப்பட்டது. மேலும், பாண்டிய மன்னர்களும் கூட அடிக்கடி சோழப்பகுதிகளில் இலுப்பை மரங்களுக்கு அடியில் வந்து வணங்கிச் செல்வதுடன், இலுப்பை எண்ணெயை மிகவும் போற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இலுப்பை எண்ணெயைக் கொண்டு கோயில்களில் விளக்கேற்றுவதை மிகுந்த தெய்வீக பாரம்பரியத்தோடு போற்றி வந்தார்கள்.

சிவன் கடவுளோடு இம்மரம் ஒப்பிடப்படுகிறது. சிவபெருமானை “மதுகா” என்றும் அழைப்பார்கள். “மதுகா” என்பது தேனைப் போன்ற இனிப்பூட்டும் பொருள் என்று அர்த்தமாகும். இலுப்பை மரத்தையும் இப்பெயரைக் கொண்டுதான் அழைக்கின்றார்கள்.

திருப்பழமண்ணிப்படிக்கரை (PINCODE - 609 202) என்னும் ஊர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே 13 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் இலுப்பைப்பட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு நீலகண்டர், அமிர்தவல்லியம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலுப்பை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருக்கொடிமாடச் செங்குன்றூர் (PINCODE-637 211) என்னும் ஊர் ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் திருச்செங்கோடு என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு அர்த்தநாரீசுவரர், பாகம் பிரியாள் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலுப்பை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply