Friday, 14 Aug 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
(SILK COTTON TREE)
இது இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் வளரும் மரவகையைச் சேர்ந்தது.
கோங்கு
BOMBAX MALABARICUM, DC:BOMBACACEAE
சுந்தரர் பாடிய தேவாரம் - பாடல் :
குளிர்தரு திங்கள் கங்கை
குரவோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமே லுடையான்
விடையான் விரைசேர்
தளிர்தரு கோங்கு வேங்கை
தடமாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே.
சித்த மருத்துவம்
இதன் இலை, பூ, விதை, பட்டை, கோந்து, பஞ்சு, வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இம்மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, வெள்ளைப்பாடு இவை விலகும். விந்துவும், அணுக்களும் பலப்படும்.
இதன் வேறு பெயர்களாக சான்மனி, பூரணி, பொங்கர், மோசம் என வழங்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவில் வெப்ப பிரதேசங்களில் வளரும் வகுப்பைச் சேர்ந்தது. இதன் பூக்கள் குங்குமம் போல் சிவப்பாக இருக்கும். இலவமரம், முள்ளிலவு மரம் இவற்றின் குணம், பெரும்பாலும் ஒன்றைப் போல் இருக்கும்.
மருத்துவப் பயன்கள்
மேக நோய், பேதி போன்ற நோய்கள் தீர்க்கும்.
இலை : இலையை அரைத்து பசுவின் பாலில் கலக்கிக் கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
பூ : பூவைக் குடிநீரிலிட்டு கொடுக்க மலக்கட்டு, நீர்க்கட்டு போகும். காய்ந்த பூவுடன் கசகசா சேர்த்தரைத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி சர்க்கரை சேர்த்து காய்ச்சி தினசரி மூன்று வேளை கொடுக்க இரத்தப்பித்தம் போகும்.
கோந்து : இலவம் கோந்தைத் தூளாகச் செய்து 5 அல்லது 10 கிராம் எடை அளவு இளநீரில் கலந்து தினசரி 3 அல்லது 4 முறை கொடுத்து வந்தால் நீண்ட நாள்பட்ட வெள்ளைப்பாடு, அஜீரணபேதி, சீதபேதி போகும்.
யுனானி மருத்துவம்
தோற்றம் : சேன்பல் பெரியதோர் மரமாகும். இதன் கிளைகள் மீது ஐந்து ஐந்து இலைகள் தோன்றும்.இதன் பூக்கள் செந்நிறமானவை, அழகானவை. இதன் பழம் எருக்கம் பழம் போல் இருக்கும். இப்பழத்திலிருந்து மிருதுவான பருததி வெளிப்படும். இதனைத் தலையணை, விரிப்புகளில் நிரப்பப் பயன்படுத்துவர். இம்மரத்தின் வேர், துளையுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை ‘மோஸ்லி சேன்பஹ்ல் கேஜடு’ என்னும் பெயரில் மருந்தாகப் பயன்படுத்தப்படும். இதன் பிசின் மோச்சரஸ் என்னும் பெயரில் மருந்துடன் கலந்து பயன்படுத்தப்படும்.
இயல்பு : மோஸ்லி சேன்பல் - வெப்பம், குளிர்ச்சி, (முதல் நிலை) கொண்டது.
முக்கிய குணங்கள்
ஆண்மை விருத்தியை ஏற்படுத்தும். இந்திரியத்தை சுரக்கச் செய்யும். ஆணுறுப்பைத் திடப்படுத்தும். உடலைப் பருமனாக்கும்.
ஆண்மை விருத்திக்கும், இந்திரியச் சுரத்தலுக்கும், ஆணுறுப்பைத் திடப்படுத்தவும், உடல் பருமனுக்கும் லேகியம் மற்றும் சூரணங்களில் கலந்து பயன்படுத்துவர். 12 கிராம் மோஸ்லி சேன்பல் சூரணத்தில் கால் பாகம் நீர்விட்டு நன்கு கலந்து இத்துடன் 12 கிராம் கற்கண்டு கலந்து 40 நாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தி, உடலுறவின்றிக் கட்டுப்பாட்டுடன் இருப்பின் ஆண்மைச் சக்தியும், உடல் வலிவும் சிறந்து தோன்றும்.
தீய விளைவுகள் : குளிர்ச்சியான உடலமைப்புள்ளவர்களுக்கு இது தீங்கிழைக்கும்.
தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் வெண்சர்க்கரை, சதாவர் கலந்து பயன்படுத்தவும்.
சிறப்புக் குறிகள்
ஆண்மைக்குச் சக்தியளிக்கும். இந்திரியத்தைக் கெட்டிப்படுத்தும். இதற்குப் பெரும்பாலான மாற்று மருந்து சாலாமிஸ்ரி, ஷக்காகல்.
அளவு : 7 கிராம் முதல் 12 கிராம் வரை பயன்படுத்தவும்.
[10:52:58 AM] Ganasekar: இலவு பிசின்
தோற்றம் : மோச்சரஸ் சேன்பல் மரத்தின் பிசின் ஆகும். இதன் நிறம் கருப்பு ஆகும்.
இயல்பு : குளிர்ச்சி, வறட்சி கொண்டது.
முக்கிய குணங்கள்
மலச்சிக்கலை நீக்கும். ஆணுறுப்பு விரைப்பு உண்டாக்கும். விந்துவைத் திடமாக்குகிறது. ஈரத்தன்மையை உலர்த்துகிறது.
பயன்படுத்தும் முறை
இதைத் தனியாக அல்லது வேறு சில மருந்துகளுடன் கலந்து, விந்து அடிக்கடி வெளியேறுதல், விந்து குறைபாடு, சிறுநீர் அடங்காமை, அதிகமான மாதவிடாய் போக்கு, வெள்ளைப்பாடு போன்ற நோய்களுக்கு பவுடராக்கி, அல்லது லேகியம் தயாரித்து சாப்பிடுவார்கள். இது மலச்சிக்கலை நீக்குவதுடன், பற்களை உறுதி செய்யவும், பற்பொடியாகப் பயன்படுகிறது.
முக்கிய பயன்கள் : ஆணுறுப்பு விரைப்பு ஏற்படச் செய்கிறது. இந்திரியத்தைத் திடமடையச் செய்கிறது.
அளவு : 3 கிராம் முதல் 5 கிராம் வரை பயன்படுத்தவும்.
தீயவிளைவுகள் : அஜீரணம், கபம், கோழையை உண்டாக்குகிறது.
தீயவிளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் சூடான பொருட்கள் (கரம் மசாலா, இலவங்கப்பட்டை) கலந்து பயன்படுத்தலாம்.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இலவமரம் செந்நிறமான பூக்களை உடையது. நெடிது உயர்ந்து வளர்ந்த கிளைகள் உடையது. மரத்தில் குவிந்த முட்டு முட்டான தடித்த முட்கள் இருக்கும். சங்க இலக்கியப் பெயராக இலவு, இலவம் எனவும், உலக வழக்குப்பெயராக முள்ளிலவு, இலவம், பஞ்சு மரம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. நெருப்பு போன்ற சிவந்த நிறமுள்ள மலர்களையுடைய பெரிய மரம். இப்பூ குறிஞசிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது. யானைகள் தங்களின் தினவைப் போக்கிக் கொள்ள முள்ளமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும். இம்மரம் பாலை நிலத்தில் வளரும். இவ்வுண்மைகளைக் சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
“ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் காணலாம்.
இம்மரத்தில் பெருங்காற்று மோதுவதால் இதன் மலர்கள் கீழே விழுவது இடியுடன் கூடிய நெருப்பு வானத்தில் இருந்து தரையில் வீழ்வதைப் போல இருந்ததாம். மேலும், மூதூரில் ஏற்பட்டுள்ள நெய் விளக்குகளிலிருந்து விழும் சுடரைப் போல இருந்தது எனவும், கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றிய சுடர் விளக்கின் அழகுடன் தோன்றும் எனவும் கூறியுள்ளனர். மேலும், மலரின் செம்மை நிறத்தை பரணடி என்பவர் சான்றோரின் நாவிற்கு உவமைப்படுத்தி பெருமைப்படுத்தியுள்ளார்.
இம்மரத்தின் காய் வெடிக்கும் போது, அதன் முதுகுப்புறத்தில் தோன்றும் கோடு அணிலின் புறத்தில் தோன்றும் கோடுகளைப் போல உள்ளது எனவும் வர்ணித்துள்ளனர்.
“தீக்காடாக மலர்ந்திருக்கும் இலவ மரத்தின் மேல் ஒரு மயில் ஏறியமர்ந்ததாம்”. இக்காட்சி நெருப்பில் இறங்கிய மகளிரைப் போல இருந்தது என உவமைப்படுத்தியுள்ளனர். கோயில்களின் புறத்தே பந்தல் போடுவதற்கு இவை வரிசையாக வளர்க்கப்பட்டதாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய திருக்கோயில்களில் கோங்கு தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
திருமங்கலக்குடி புராணேசுரர், பிராணநாதர் மங்களநாயகி கோயில் தலவிருட்சமாக கோங்கிலம் உள்ளது.
இவ்வூர் ஆடுதுறைக்கு 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு இலவமரம் தெய்வத்துடன் சேர்த்து வணங்கப்படுகிறது.
திருக்கைச்சினம் (திருக்கச்சினம்) கைச்சினநாதர் வெள்ளையம்மை (வெள்ளைநாயகி எனவும் கூறுவர்) கோயில் தலவிருட்சமாக கோங்கு இலவ மரம் விளங்குகிறது.
இவ்வூர் திருவாரூருக்கு 3 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டிக்கு 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்திரனின் கைச்சின்னம் லிங்கத்தில் பொருந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றது என புராணங்ள் கூறுகின்றன. இக்கோயில் தலவிருட்சம் தெய்வத்துடன் சேர்த்து வணங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































