» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 7 Aug 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர்
சிவன் கோவில் தலவிருட்சம்
இலந்தை (ZIZIPHUS MAVRITIANA)

இலந்தை ZIZIPHUS JUJUBA LAMK; RHAMNACEAE

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :

உளரொளியை உள்ளத்தினுள்ளே நின்ற
ஓங்காரத் துட்பொருள்தான்
ஆயினானை
விளரொளியை விடுகடர்கள்
இரண்டும் ஒன்றும் விண்ணோடு
மண் ஆகாசமாயினானை
வளரொளியை மரகதத்தி னுருவி
னானை வானவர்க ளெப்பொழுதும்
வாழ்த்தியேத்தும்
கிளரொளியைக் கீழ்வேளூராளுங்
கோவைக் கேடிலியை
நாடுமவர் கேடிலாரே

இம்மரம் அடர்ந்த பச்சை நிறமுடையது. இது சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும். கருஞ்சாம்பல் நிறமுடைய கடினமான பட்டைகளை உடையது. வெப்பம், குளிர்ச்சி சீதோஷ்ண நிலைகளைத் தாங்கி நிற்கும். வேர் மிகவும் ஆழமிக்கது.

கடலூர் மாவட்டம் ஓமாம் புலியூரில் உள்ள பிரணவ வாக்கிரபுரிஸ்வரர் கோவிலில் சிவனுடனும், ஈரோடு மாவட்டம் திருநணாவில் உள்ள சங்கனேஸ்வரர் கோவிலில் சிவனுடனும், நாகபட்டினத்தில் உள்ள கீழ் வேளூரில் அட்சயலிங்கேஸ்வரர் சிவனுடனும், இராமநாதபுரம் உத்திரகோச மங்கையில் மங்கலநாதர் கோயிலில் சிவனுடனும், திருவாரூரில் உள்ள குரங்கனில் முட்டத்தில் வாலீஸ்வரர் கோவிலில் சிவனுடனும் இணைந்து உள்ளது.

சிவனுக்கும், விஷ்ணுக்கும் உகந்த மரமாகும். ஓமாம் புலியூரில் உள்ள பிரணவாக்கிரபுரீஸ்வரர் ஆலய ஸ்தல புராண வரலாறு இதன் பெருமையை விளக்கிக் காட்டுகிறது. அது என்னவென்றால், கடவுளர் சிவனும், சிவகாமி சுந்தரியும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் விளக்கங்களை இம்மரத்தடியில்தான் பெற்றார்கள் என்று கூறுகிறது. குருபகவான் இதனை விளக்கினார் எனவும் கூறுகிறது.

கிருஷ்ணனைத் திருமணம் செய்து கொள்வதற்காக, ராதா துளசியை வணங்கி இறைவன் நாராயணனையும் வணங்கி தர்மதவஜ் ராஜாவிற்கும் ராணிக்கும் மகளாகப் பிறந்து, 100 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து, அதில் இலைகளையும் பழங்களையும் தண்ணீரையும் மட்டுமே உண்டு, முப்பத்தைந்து ஆண்டுகாலம் காற்றை மட்டுமே சுவாசித்து, 40,000 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து, 10,000 ஆண்டுகள் ஒரே காலில் தவமிருந்தாள் எனவும் பலவாறு கூறுகிறது.

திருக்குர்ஆனும், இலந்தைப்பழமும்

“அன்றியும் நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரேயில்) இறங்கக் கண்டார். ஸித்ரத்துல் முந்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.அதன் சமீபத்தில் தான் ஜன்னத் துல்மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது. ஸித்ரத்துல் முன்தஹா (இலந்தை) என்னம் அம்மரத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், (அவருடைய) பார்வை விடவுமில்லை. திடமாக அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப்பெரியதைக் கண்டார்.

(திருக்குர் ஆன் பகுதி 27, அத்தியாயம் 53, சூராயே அந்நஜம், வசனம் 13 முதல் 18 வரை)

“(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும், இன்னும் நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும் ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும், அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புக்களில் (அமர்ந்திருப்பர்) நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும் (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்”.

(திருக்குர் ஆன் பாகம் 27, அத்தியாயம் 56, சூராயே அல்வாகி ஆ வசனம் 28 முதல் 38 வரை).

அவற்றில் கசப்பான காய்கறிகளும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன. இதுவே அவர்கள் நிராகரித்தற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி சொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறொருவருக்கும் நாம் கூலி கொடுப்பதில்லை.

(திருக்குர் ஆன் பாகம் 27 அத்தியாயம் 56, சூராயே பைஃ வசனம் 16, 17)

நபிகள் நாயகமும், இலந்தைப்பழமும்

ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர் பழங்களில் இலந்தைப் பழம்தான் முதலில் இடம் பெற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை அபு நயீம் அவர்களின் திப்பே நபுவி, இமாம் இப்னுல் கைய்யூம் அவர்களின் திப்பே நபுவி அரபு மொழிப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானுலகத்திற்கு மேராஜ் பயணத்தை மேற்கொண்டபோது அங்கு பெரிய அளவிலான இலந்தைப்பழத்தை (ஸித்ரத்துல் முன்தஹா) கணடார்கள் என்று ஹஜ்ரத் மாலிக்பின் சாஅசஃகா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை புகாரி ஹதீஸ் தொகுப்பு ஊர்ஜிதம் செய்கிறது.

இலந்தைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

வேதங்களிலும், திருக்குர் ஆனிலும், நபி மொழிகளிலும், சிறப்பிடம் பெற்ற இலந்தைப்பழம் சொர்க்கத்தின் பழமாகத் திகழ்கின்றது. இது மூக்கடைப்பு நோய், மண்டைச் சளி, இளைப்பு, ஆஸ்துமா, தோல் வியாதிகள், விபச்சார நோய்கள், சளி, ஜீரம் ஆகியவைகளைக் குணமாக்கச் சிறந்த மருந்தாக அமைந்திருக்கின்றது என்று சமீபத்தில் டெல்லியில் உள்ள ஹம்தர்த் பல்கலைக்கழகத்திலும், ஹங்கேரி நாட்டிலும் நடைபெற்ற விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவிக்கின்றது.

இலந்தைப்பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகளவில் இருக்கின்றது. இதை எரித்து அதன் சாம்பலை ஆய்வு செய்து பார்த்த போது இதில் கால்ஷியம், காடிமம், காப்பர் இரும்புச்சத்து, மெர்குரி, மெக்னீசியம், மாங்கனிசு, ஈயம், ஜீங்க் அகிய உலோகச் சத்துக்கள் கணிசமான அளவில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.இதனால் இலந்தைப்பழம் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை வாய்ந்தது.

ஃபங்கஸ் கிருமிகளால் உண்டாகும் தோல் நோய்கள், விபச்சாரத்தில் ஈடுபட்டதால் உண்டாகும் மேக நோய்கள், நுரையீரலைப் பாதிக்கச் செய்யும் கிருமிகளை சாகடிக்கும் மருத்துவத்தன்மை இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இலந்தைப்பழத்தின் வகைகள்

இலந்தை மரங்களை வீடுகளிலும், நிலங்களிலும் வளர்ப்பார்கள். காடுகளில் தானாகவும் விளைகின்றது. இலந்தைகளில் பலவகைகள் உள்ளன. நாட்டு இலந்தை - இது புளிப்பாக இருக்கும். காட்டு இலந்தை புளிப்பாகவும், துவர்ப்பாகவும் இருக்கும். இவைகள் அனைத்து இடங்களிலும் காணப்படும். சீமை இலந்தை அதிக மருத்துவக் குணங்கள் கொண்டதாகும். இதன் மரம், பஞ்சாப், இமாலயா, காஷ்மீர், தமிழகத்தில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் உள்ள ஜவ்வாது மலைகளிலும் அதிகளவில் காணப்படுகிறது என்று சமீபத்தில் மத்திய அரசின் யுனானி ஆராய்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்பழத்தின் தோல் சிவப்பாக இருக்கும். அதில் சுருக்கங்களும் இருக்கும். சதைப்பகுதி விதையுடன் ஒட்டியிருக்கும். இம்மரத்தின் அனைத்துப்பொருட்களும் மருந்தாகப் பயன்படுகிறது. சீமை இலந்தை அல்லது மார்க்கெட்டுகளிலும் நவீன முறையில் இனவிருத்திக் கலவையால் விற்கப்படும் பெரிதளவிலான இலந்தைப் பழங்களையும் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் பதம்படுத்தி உலர்ந்த நிலையில் விற்கப்படும் இலந்தைப் பழங்களையும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

10 பழங்கள் முதல் 30 பழங்கள் வரை உணவாகச் சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடல் உஷ்ணத்தைத் தணிக்கிறது. கல்லீரல், மண்ணீரல் வலியைக் குணமாக்குகிறது. உஷ்ணத்தால் உண்டாகும் கண்வலிக்கு இதைப் பசையாக்கிப் பூசினால் குணம் பெறும்.

கொட்டைகளை இடித்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் வறண்ட இருமல், பேதி ஆகியவை குணம்பெறும். இதைக் காசினி விதைகளுடன் கலந்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பித்தம், அதிக உஷ்ணம், அம்மை நோய், கொப்புளங்கள், அரிப்பு ஆகியவை குணம்பெறும்.

நாட்டு இலந்தைப்பழம் குடல் மற்றும் வயிற்றில் வாழும் நாக்குப் பூச்சிகளைச் சாகடிக்கும். வயிற்றுப்புண், அடிக்கடி உண்டாகும் பேதி, சீதபேதியைக் குணமாக்கும். விதைகளைக் கட்டிகளின் மீது அரைத்துப் பூசினால், கட்டிகள் உடைந்து கரையும். இலைகளைக் கஷாயமாக்கி லேசான சூட்டில் குடித்தால் வலி குறையும்.

இலந்தை இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவிற்கு மோரில் கலந்து கொடுத்தால் வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் குணம்பெறும். இதைப் பவளப் பஸ்பம் தயாரிக்கவும் மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள்.

துளிரையும், மரக்கட்டையையும் நன்றாக அரைத்துப் பசையாக்கி, கட்டிகள், கொப்புளங்கள் மீது பற்றுப் போட்டால் உடைந்து குணம் பெறும். இதைத் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் அதன் நீரை மட்டும் குடித்தால் பேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணம்பெறும்.

உலர்ந்த பழக்கொட்டையை நீக்கிப் பழத்தைச் சாப்பிட்டால், சளித் தொல்லைகள் நீங்கும். பழச்சாற்றுடன் சிறிதளவு மிளகாயும், உப்பும் சேர்த்து அரைத்து உலர வைத்துக் கடுக்காய் அளவிற்கு காலையில் சாப்பிட்டால் கேஸ்ட்ரபுள், உப்பிசம் நீங்கும். மரப்பட்டையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் குடித்தால் ஜுரம் குறையும்.

இலந்தை வேரை கஷாயமாக்கிக் குடித்தால் உடலுக்குச் சிறந்த டானிக்காகும். இதைத் தண்ணீரில் வைத்து அரைத்து பசையாக்கித் தொப்புளின் கீழ்ப்பகுதியில் பூசினால் சிறுநீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம், வயிற்று வீக்கம் வலி குணம் பெறும். மரப்பட்டையைப் பவுடராக்கி 3 கிராம் அளவில் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் அமோபையாஸிஸ், சீதபேதி, பேதி, குணம்பெறும்.

இலந்தைத் துளிர்களுடன், கருவேல இலைகள் கலந்து 25 கிராம் அளவில் பவுடராக்கியோ கஷாயமாக்கியோ குடித்தால் உடல் உஷ்ணம் தணியும்.

ஈறுகளில் வீக்கம், வலி, சீழ்வடிதல் இரத்தம் கொட்டுதல் ஆகியவை குணமாக்க மரப் பட்டையை நெய்யில் கலந்து பற்பசையாக ஈறுகளின் மீது பூசி மசாஜ் செய்யலாம்.

3 கிராம் பூக்களைத் தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மாதவிலக்கு சரிவர வெளியேறாத பிரச்சினை குணம்பெறும்.

இலந்தைப் பூக்களுடன், வெற்றிலைக் காம்புகளை உடைத்துச் சம அளவில் எடுத்து, அதில் பாதி அளவிற்கு சுண்ணாம்பு சேர்த்து, இரண்டு வேளை சாப்பிட்டால் மாதவிலக்கு தாராளமாக வெளியேறும்.

இலந்தைப் பழங்கள் மூளைப் பதட்டத்தை நீக்கி இயற்கையான தூக்கத்தைத் தருகிறது. இதன் வேரைக் கஷாயமாக்கிக் குடித்தால் ஜுரம் நீங்கும்.இதைப் பவுடராக்கிக் குடித்தால் நாள்பட்ட புண்களும், இரணங்களும் குணமாகும். பழங்களை அல்லது அதன் சர்பத்தைக் குடித்தால் அசுத்தமான உடல் திரவங்கள் வெளியேறும். இரத்தப்போக்கு நின்றுவிடும். அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். சுவையில்லாத பழங்கள் முழங்கால் மூட்டுத் தேய்வைக் குணமாக்கும்.

அரபு நாட்டு மருத்துவர்களும், நம் நாட்டு யுனானி மருத்துவர்களும், உன்னாப் என்று அழைக்கப்படும் சீமை இலந்தைப் பழத்தைக் கொண்டு, கீழ்க்காணும் மருந்துகளைத தயாரித்து, தேவையான அளவிற்கு யுனானி நாட்டு மருந்துக் கடைகளிலும் விற்கின்றார்கள். அவற்றையும் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

காச நோய் : காசநோய், வறண்ட இருமல், நுரையீரல் பாதிப்பை குணப்படுத்த ஷர்பத் ஏஜாஸ் டானிக்கை 25 மில்லி லிட்டர் அளவில் காலை, மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.

வெட்டை நோய் : வெட்டை, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை ஆகியவைகளால் ஏற்படும் நோய்கள், முகப்பருக்கள், கட்டிகள், சொறி, சிரங்கு, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், இரத்தக் கொதிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்த ஷர்பத் உன்னாப் 25 மில்லி லிட்டர் முதல் 40 மில்லி லிட்டர் தண்ணீருடன் காலை மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.

ஆஸ்துமா : மூக்கடைப்பு, மண்டைச்சளி, மார்புச்சளி, இளைப்பு, ஆஸ்துமா, கடுமையான இருமல், பிராங்கட்டிஸ் என்னும் நுரையீரலின் இளைப்பு நோயை கட்டுப்படுத்த லவூத் சவிஸ்தான் லேகியத்தை 10 கிராம் முதல் 20 கிராம் வரை காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் போதும், அர்கே காவுஜபான் கஷாயத்துடன் வெது வெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.

இருமல் சளி, ஜுரம் : ஜோஷினா என்ற பெயரில் ஹம்தர்த் கம்பெனி தயாரிக்கின்ற இந்த டானிக்கை இரண்டு டீஸ்பூன் அளவில் காலை, மாலை இரண்டு வேளை வெந்நீருடன் குடித்தால் சாதாரண சளி, ஜுரம், தொண்டை கரகரப்பு, தொண்டைவலி, மூக்கடைப்பு, இளைப்பு, இதனால் ஏற்படும் ஜுரம் ஆகியவை குணம்பெறும்.

மலச்சிக்கல் : ஷர்பத் அர்ஜரினி 25 மில்லி கிராம் சிறிது தண்ணீரில் கலந்து குடித்தால் அம்மை ஜீரமும், அம்மை நோயும் குணம்பெறும். சளியும் வெளியேறும்.

அம்மை நோய் : ஷர்பத் காக்ஸி 25 மில்லி கிராம் சிறிது தண்ணீரில் கலந்து குடித்தால் அம்மை ஜுரமும், அம்மை நோயும் குணம்பெறும். சளியும் வெளியேறும்.

ஆஸ்துமா இளைப்பு : ஷர்பத் ஜுஃபா முஷர்பத் ஸதர், ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை 25 மில்லி அளவிற்கு தினமும் இரண்டு வேளை வெந்நீருடன் சாப்பிட்டால் மார்புச்சளி வெளியேறும் ஆஸ்துமா நோய் குணம் பெறும்.

இரத்த சுத்தி : ஷர்பத் முரக்கப் முஸஃபி கூன் டானிக்கை 25 மில்லி அளவிற்குத் தண்ணீரில் கலந்து குடித்தால் ஃபங்கஸ், ரிங்வாம்ஸ், படை, சொறி, சிரங்கு, விபச்சார நோய்கள் அனைத்தும் குணம் பெறும்.

மூட்டுவலி : ஷர்பத் உஷ்பர் டானிக்கை 5 டீஸ்பூன் அளவில் தினமும் இரண்டு வேளை குடித்தால் தோல் நோய்கள், கை, கால் கழுத்து எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தைக் குணப்படுத்தும்.

இலந்தை பழம் சாப்பிடும் வழக்கம் பழங்காலத்தில் காணப்படுகிறது. கடந்த 400 ஆண்டு காலமாக இந்தியாவிலும் சீனாவிலும் ஆயுர்வேத மருந்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் இலையைக் கொதிக்க வைத்து பாலுடன் கலந்து நச்சுத்தழும்புகள் மீது தடவினால் குணமாகும். தடைபட்ட சிறுநீர் நன்றாகப் பிரியும். இதன் இலையை மையாக்கி கண்ணுக்கு பூசலாம். இலைகளைப் பசையாக்கி இருமுறை தடவி வந்தால் வெப்பக் கொப்புளங்கள் குணமாகும். தொடர்ந்து போகும் இரத்தப் போக்கை நிறுத்தும் பண்பு இதன் பட்டைக்கு உண்டு.

வீட்டில் கைவசம் வைத்திருக்க வேண்டிய பேதி மருந்துகளில் இதுவும் ஒன்று. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்தை உண்டாக்குகிறது. உலர்ந்த பழங்களும் பயன்படுகின்றன. பித்தத்தை நீக்குகிறது. இதன் விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து இன்னும் சில எண்ணெய் கலந்து, வலி எடுக்கும் பகுதிகளில் தடவி வரலாம். இதன் சாறு பசியை உண்டுபண்ணி ஆத்ம திருப்தியை உண்டாக்குகிறது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருக்கீழ்வேளூர், திருநணா, திருஒமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இலந்தை மரம் வணங்கப்படுகிறது.

திருஒமாம்புலியூர் (PINCODE - 608 306) என்னும் ஊர் சிதம்பரத்துக்குத் தென் மேற்கே 30 கி.மீ. தூரத்திலும், குத்தாலம் புகைவண்டி நிலையத்துக்கு வடக்கே 18 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இவ்வூர் ஓமமாம் புலியூர் எனவும் அழைக்கப்படுகிறது.

இங்கு துயரந்தீர்த்தநாதர், பூங்கொடி நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலந்தை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருக்கீழ்வேளூர் (PINCODE - 611 104) என்னும் ஊர் திருவாரூருக்குக் கிழக்கே 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு கேடியலியப்பர், வனமுலைநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலந்தை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருநணா (PINCODE - 636 301) என்னும் ஊர் ஈரோட்டிலிருந்து வடக்கே 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் பவானி முக்கூடல் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சங்குமுகநாதேசுரர், வேதமங்கை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலந்தை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருக்குரங்கணில் முட்டம் (PINCODE - 631 703) என்னும் ஊர் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வாலீச்சுவரர், இறையார் வளையம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலந்தை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருவெண்பாக்கம் (PINCODE - 602 023) என்னும் ஊர் திருவள்ளூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் திருவிளம்பூர், திருவுளம்புதூர் எனவும் அழைக்கப்படுகிறது.

இங்கு வெண்பாக்கநாதர், ஊன்றீசுவரர், கனவாய் மொழியம்மைம, மின்னலொளியம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் இலந்தை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply