ஆஸ்பிரின் ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மாரடைப்பு வராமல் தடுக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, ஆரோக்கியமானவர்கள் கூட விழுங்கி வைக்கும் ஆஸ்பிரின் மாத்திரையால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வாழ்க்கையில் கவலையே இல்லாதவர்கள் உள்பட உலகில் லட்சக்கணக்கான பேர் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தினசரி ஒரு ஆஸ்பிரின் மாத்திரையாவது எடுத்துக்கொள்கிறார்கள்.
தேவையில்லாமல் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பா கண்ட இதயத்துறை மருத்துவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
‘ஆரோக்கியமானவர்கள் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் மட்டும் மாரடைப்பில் இருந்து தப்பிவிட முடியாது. அதற்கு மாறாக, ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் பலரும் உள் உறுப்பில் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று குண்டு ஒன்றை வீசியிருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்..
‘ஆனால், இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் தகுந்த, நல்ல பலன்களைக் கொடுக்கிறது. அவர்கள் தொடர்ந்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளவேண்டும்’என்று அறிவுரை கூறினர்..
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையுடன் கொலாஸ்ட்ராலை குறைக்க உதவும் பாலிபில் போன்ற மாத்திரையையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்பிரினின் நன்மையைப் பெறலாம்.
50யில் இருந்து 75 வயது வரையிலான 29 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களில் பலருக்கும் காலில் இருந்த தமனிகள் பலவீனமாக இருந்தன. இது எதிர்காலத்தில் இதய நோயை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாகும். ஆனால், அது பற்றி ஏதும் அறியாதவர்களாக அவர்கள் இருந்தனர். மேலும், அதில் பலரும் கடந்த 8 வருடமாக தொடர்ந்து ஆஸ்பிரின் எடுத்து வருபவர்கள்.
ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டவர்கள், எடுத்துக் கொள்ளாதவர்கள் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும், ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் உடலில் இதய நோயைத் தடுப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
ஸ்காட்லாண்டில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பா கண்ட இதயத்துறை மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவ பேராசிரியர் ஜெரி ஃபோக்ஸ் கருத்து கூறுகையில், “பொதுவாக, ஆரோக்கியமான மக்களுக்கு ஆஸ்பிரினை பரிந்துரை செய்யக்கூடாது என்று எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவுகளை தடுப்பதில் ஒரு சிறிய பங்கையே ஆஸ்பிரின் ஆற்றுகிறது. ஆனால் அது உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. ரத்தக்கசிவானது மரணத்தைக் கூட வரவழைக்கும்” என்கிறார்.
முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஒர் ஆய்வில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமானவர்களில் ஐவரில் ஒருவருக்கும் மட்டும் தான் மாரடைப்பு வரும் பாதிப்பு குறைகிறது என்றும் ஆனால், அதில் மூவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.
இதய நோய்க்கு எதிரான ஆஸ்பிரினின் செயல்பாடு என்பது அதை எடுத்துக்கொள்பவரின் உடல்நிலை, வாழ்க்கை முறை, மனஅழுத்தம் பரம்பரையை வைத்து மாறுபடுகிறது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனை இன்றி அநாயாசமாக ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்காதீர்கள் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.