Friday, 24 Jul 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
கற்பூரம், கோவில்களில் பயன்படுத்தப்படும் முக்கிய புனிதமிகு எரிபொருளாகும். கற்பூரம் வைத்து சத்தியம் செய்வது என்றால் அது இறைவனையே நேரில் வைத்து சாட்சி அளிப்பது போன்றதாகும். ஆலயங்களில் இறைவனுக்கு கற்பூர தீபத்தை ஏற்றுவார்கள்.
கற்பூரம் கொசுக்களையும், ஈ, எறும்பு, பூச்சிகளையும் விரட்டுகிறது. வலியையும் போக்குகிறது.
தோற்றம் : கற்பூர மரம் எப்பொழுதும் பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கும் ஒரு மரமாகும்.
காணப்படுமிடம்
இவை உண்மையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இந்தியாவில் டேராடூன், சஹாரன் பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளில் இவற்றை அதிகளவில் காணலாம்.
மருத்துவ குணங்கள்
இதிலிருந்து எடுக்கப்படுகின்ற பிசினில் இருந்து கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. இதனைத் தவிர இதன் கட்டைகள், கொம்புகளைச் சிறு துண்டுகளாகச் செய்து தண்ணீரில் போட்டு கஷாயமிட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம்
இது இதயம், மூளைக்கு சக்தியூட்டுகிறது. உடலில் சேர்ந்துள்ள அசுத்தங்களைப் போக்கி குணப்படுத்துகிறது. வெண்புள்ளிகள், வெண்குஷ்டம, கல்லீரல் குறைபாடுகளுக்கும் இவை மிகவும் பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை:
கற்பூரத்தை வேறு சில எண்ணெய்ப் பொருட்களுடன் சேர்த்து இடுப்பு வலி, மூட்டுகளில் வரும் வலிகளுக்குப் பூசலாம். சொறி, நமைச்சல், எரிச்சல் உள்ள இடங்களில் இதனைப் பூசினால், அவை குணம் பெறும்.
கற்பூரத்தை முகர்வதன் மூலம் மூக்கில் இரத்தம் கசிதலைத் தடுத்து நிறுத்துகிறது. இதனைச் சிறந்த வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
பல் வலியைப் போக்குகிறது. காது வலிக்கு இதனுடன் கொத்தமல்லிச் சாற்றைக் கலந்து பூசலாம். புண்களிலிருந்து இரத்தம் கசிதலையும், எரிச்சலையும் இவை தடுத்து நிறுத்துகிறது. நாள்பட்ட இருமல், சளித்தொல்லைகளுக்கும் இதனை நிவாரண மருந்தாகப் பரிந்துரைக்கின்றார்கள்.
ஆயுர்வேதம்
தொற்றுப் பாதிப்புகள், சீழ்க்கட்டிகள் உருவாதல் போன்றவற்றிற்கு இதனை வெண்ணெயுடன் கலந்து மருந்தாகக் கொடுப்பார்கள். சிறுநீர் கழிவதில் ஏற்படும் சிக்கல்கள், ஆஸ்துமா குறைபாடுகளுக்கும் இவை மிகவும் உதவுகிறது.
மூட்டுத் தசைகளில் ஏற்படும் தசைப்பிடிப்பு, இதய செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள், சுவாச மண்டலக் குறைபாடுகள், காக்காய் வலிப்பு, மனக்குழப்பம், நாள்பட்ட இருமல், பேதி, சீதபேதி போன்ற பிரச்னைகளுக்கு இவை பயனாகிறது.
அளவு : இதனை 125 மில்லி கிராம் முதல் 300 மில்லி கிராம் வரையிலும் ஒரு வேளைக்குரிய மருந்தாகப் பயன்படுத்தலாம்.
கற்பூரத்தின் அபூர்வ மருத்துவ குணங்கள்
கற்பூரத்திற்கு “சூடம்” என்று பெயர். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. எளிதில் ஆவியாகும் தன்மை இதற்கு உண்டு என்பதால், காற்றிலுள்ள நச்சுகளை அகற்றி சுத்தமாக்கி விடுகின்றது. அதனால்தான் வழிபாட்டு முறைகளில் கூட சூடம் ஏற்றும் முறையை நமது முன்னோர்கள் புகுத்தியுள்ளார்கள்.
இது பல்வேறு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வலியைப் போக்கும் தன்மை, கபத்தை அகற்றும் தன்மை கிருமிகளைக் கொல்லும் தன்மை, தோலுக்கு சக்தியூட்டும் தன்மை ஆகியவை இதில் மிகுந்துள்ளன.
எனவே, மேற்கண்டவர்களுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளில் கற்பூரம் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக தலைவலி தைலம், உடல்வலி தைலம், புண்களைக் குணமாக்கும் மருந்து ஆகியவற்றில் சூடத்தின் பங்கு இன்றியமையாதது.
கடுகு எண்ணெயில் சூடத்தைக் கரைத்து சூரிய ஒளியில் வைத்து எடுத்தால், அது சிறந்த தைலமாக மாறிவிடும்.
சளி, குளிர்காய்ச்சல், தசைச் சுளுக்கு ஆகியவற்றையும் போக்கும் வல்லமை கற்பூரத்திற்கு உண்டு.
இது சிறந்த நச்சுக் கொல்லியாக இருப்பதால், பற்பசை மற்றும் பற்பொடி தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும் தோல் நோய் சம்பந்தமான மருந்துகளும் தயாரிக்க இது பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இது சிறந்த பூச்சுக்கொல்லியும் கூட. வீட்டிலுள்ள பெட்டிகள், சூட்கேஸ்கள், பீரோக்கள் அகியவற்றில் சூடத்தையோ அல்லது கற்பூரமர இலைகளையோ போட்டு வைத்தால் போதும், கரப்பான் பூச்சிகளோ, அல்லது அத்துப்பூச்சிகளோ அருகில் அண்டாது.
விஷக்கிருமிகளில் இருந்து நமது தோலைப் பாதுக்காக்கும் மருந்தாகப் பய்னபடும் இந்தக் கற்பூரம், அதைப் பளபளபாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகின்றது.
முகத்தில் உள்ள குழிகளையும், கரும் புள்ளிகளையும் போக்க துணை புரிகின்றது.
பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக அமைந்த ராணி மேரி அந்துவானேயும், அவரது அரண்மனைப் பெண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள கற்பூரத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அதாவது, முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் கற்பூரத்தையும் சேர்த்து குழப்பி, அதை முகத்தில் பூசியுள்ளார்கள். இதை ஒரு மணி நேரம் முகத்தில் ஊறவிட்டால், தோலின் உட்பகுதி வரை ஊடுருவி முகத்திற்குப் பொலிவும், அழகும் கிடைக்கும்.
கற்பூரம் பொதுவாக கசப்புத் தன்மை உடையது. ஆனால் இனிப்பு வகைகள் தயாரிக்கவும் இது உதவுகின்றது. மேற்கு வங்க மக்கள் குடிநீரில் சிறிது கற்பூரத்தை கரைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
புண்கள் வெட்டுக் காயத்திற்கு
நீண்ட நாள் ஆறாத புண்கள் - வெட்டுக் காயங்கள் எதுவாக இருந்தாலும், ஆஸ்பத்திரிக்குச் சென்று ஊசி மருந்துகளைப் போட்டு அதிக செலவு செய்ய வேண்டாம்.
சிறிதளவு கற்பூரம், சாம்பிராணி ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயில் போட்டு அதைக் காய்ச்சி, சூடு ஆறிய பின் அந்த எண்ணெயைப் புண்களின் மீது தடவினால் போதும். இரண்டே நாட்களில் புண்கள் இருந்த அடிச்சுவடே தெரியாமல் போய்விடும்.
அழுகிய நிலையில், எவ்வளவு பெரிய புண்களாக இருந்தாலும், அவற்றைக் குணமாக்கிவிடும்.
சங்க இலக்கியம்
கற்பூரம் தமிழ்நாட்டு பொருளல்ல எனவும், இது சீனாவுக்கு அருகாமையில் உள்ள தைவான் நாட்டில் இருந்துதான் சோழர்களின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது எனவும் அறிய முடிகிறது. கற்பூரம், பச்சைக் கற்பூரம் என நாம் குறிப்பிடும் பசு கற்பூரம் பற்றிய அரிய தகவல் ராஜ ராஜ சோழன் கல்வெட்டில் காணப்படுகிறது. ஆலய வழிபாடுகளில் சோடச பூஜை மற்றும் விசேஷ பூஜைகளில் பலவிதமான அடுக்கு விளக்குகள் 108, 1008 போன்ற எண்ணிக்கையில் விளக்குகளைப் பயன்படுத்துவார்கள்.
ஆயிரக்கணக்கான திரிகளை மிக எளிதாக எரிய வைக்க திரியின் நுனியில் சிறிது கற்பூரத்தை வைத்து திரிப்பார்கள். பின்னர் எரிய வைத்தால் எளிமையாக எரியத் தொடங்கும். இவ்வாறாக நுழைந்த கற்பூரம்தான் காலத்தால் அழியாத கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
ராஜ ராஜன் கல்வெட்டில் ‘செம்பியன் மாதேவி கற்பூர திரியிட்டு எரிய அரங்கணிய பொன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் விக்ரம சோழன் காலத்தில், மணவில் கூத்தன் காளிங்கராயன் கல்வெட்டில் கற்பூர தீபம் பற்றிய குறிப்புகளும் காணக்கிடக்கின்றன.
இக்காலத்தில் சோழப் பேரரசர்களுக்குக் குருநாதர்களாக சைவ ஆசாரியர்கள் விளங்கினார்கள். இருப்பினும் வழிபாட்டுமுறை நூல்களில் கற்பூரம் பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. ஆனால் தேவார திருமுறைகளில் தீபம்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது திருமறை.
“விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இடவல்லர்க்கு கரும்பினுள் கட்டி போல்வார் கடவுள் வீரட்டனாரே” என தேவாரம் குறிக்கிறது.
தூபம், தீபம், நிவேதனம் என்பதே சரியான பூஜை முறை என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.
இருப்பினும் காலப்போக்கில் தீப வழிபாடு குறைந்து கற்பூரம் ஏற்றி வழிபடுவதைக் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர் என்பதை அறியலாம்.
கற்பூரத்திலும் போலிகள் இடம் பெறுவதால் அதில் ஏற்படும் புகை காரணமாக ஆலயத்தின் கருவறை மாசு அடைகிறது என்பதால் நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பிரபலமடைய வைத்து வருகின்றனர் என்பது கூடுதலான தகவலாகும்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































