தமிழகத்தில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்
தமிழகத்தில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
காவல், உள்துறை, தீயணைப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:
ஒரு லட்சம் பேருக்கு எவ்வளவு போலீசார் இருக்க வேண்டுமென கணக்கு உள்ளது. இதன்படி, மேற்குவங்கத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 92 போலீசாரும், கர்நாடகாவில் 94, ஆந்திராவில் 96, கேரளாவில் 128, குஜராத்தில் 130 என உள்ளது. தேசிய சராசரி 122 ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு 133 போலீசார் உள்ளனர்.போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா, உ.பி., மாநிலங்கள், தமிழகத்தை விட மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் பெரியவை என்பதால், அவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. நாட்டில் உள்ள கடும் குற்றவாளிகள் அடைக்கப்படுவது டில்லியில் உள்ள திகார் சிறையில் தான். அந்த சிறையின் பாதுகாப்புப் பணி, தமிழக சிறப்பு போலீஸ் படையிடம் தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
எந்தளவுக்கு தமிழக போலீஸ் நம்பிக்கையை பெற்றுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.இந்த அரசு பொறுப்பேற்றபோது, 12 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர் பணயிடங்கள் காலியாக இருந்தன. அவற்றை உடனே நிரப்ப முதல்வர் உத்தரவிட்டு, 11 ஆயிரத்து 24 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர். 310 பேர் கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், 4,000 காலியிடங் களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.கடந்த ஆண்டு, தமிழகத்தில் முக்கியமான நான்கு நக்சலைட்களை போலீசார் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அர்த்தநாரீஸ்வரர் என்ற மாணிக்கம், ஜோலார் பேட்டை சிவா, சாமிநாதன், கிருஷ்ணகிரி கோபால் ஆகியோர் பிடிபட்டுள்ளனர்.கொடைக்கானலில் பயிற்சி முகாம் துவக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்ததை ஆரம்பத்திலேயே முறியடித்து, தமிழகத்தில் வேரூன்ற விடாமல் தடுத்தது போலீசார் தான். தடை செய்யப்பட்ட இயக்கங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்ததால் தான், பல மாநிலங்களில் தீவிரவாதம் தலைதூக்கியபோதிலும் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Related Posts Title































