நம்பிக்கை இல்லை: இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு
தி.மு.க.,வின் அராஜகம் மற்றும் இந்திய தேர்தல் கமிஷனில் சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நியாயமாக இடைத்தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால், தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.க., கூறியுள்ளது.
குன்னூரில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை நடைபெற்றுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் திமுகவினர் அராஜகம், வன்முறை வெறியாட்டம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பான அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளையும் அரங்கேற்றி போலி
வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
அதிகாரிகளை மிரட்டி..: அரசு அதிகாரிகளை மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், காவல்துறையினரின் ஒத்துழைப்பை பெற்றும் ஜனநாயகத்தை படுகொலை செய்தும் போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது.
இந்நிலையில் பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளில் அடுத்த மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளுங்கட்சியினரால் பகிரங்கமாக நடத்தப்பட்டுவரும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார்களையும், மனுக்களையும் கொடுத்துள்ளன. ஆனால், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 51 லட்சம் வாக்குகள் குறைவாக உள்ளன. அதிமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களை திமுக ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளனர். திமுகவினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் தேர்தல் ஆணையத்தின் மீதும், அரசின் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது.
பல்வேறு உலக நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் தமிழக அரசும், மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைதான் பயன்படுத்துவோம் என பிடிவாதமாக உள்ளன.
தற்போது தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியிலுள்ள சூழலில், அறிவிக்கப்பட்டுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும், நியாயமாகவும் நடத்த முடியுமென்ற நம்பிக்கை அதிமுகவிற்கு ஏற்படவில்லை.
எனவே, அடுத்த மாதம் 18ம்தேதி நடைபெறவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டுமென இச்செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Posts Title































