Saturday, 18 Jul 2009
சிரஞ்சீவி கட்சிக்கு சூரியன் சின்னம்: தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. முறையீடு
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சி சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. ரெயில் என்ஜின் சின்னம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த சின்னம் ரோடு ரோலர் சின்னம் போன்று இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனால் சூரியன், தள்ளுவண்டி ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு பிரஜா ராஜ்ஜியம் கட்சி கோரிக்கை வைத்தது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் அக்கட்சிக்கு சூரியன் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இதுபற்றி தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்,
ஆந்திர சினிமா நடிகர் சிரஞ்சீவி கட்சிக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞரிடம் இன்று மாலை பேசுகிறேன். அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. பயன்படுத்தும் உதயசூரியன் சின்னத்தை சிரஞ்சீவிக்கு ஒதுக்கியது குறித்து தேர்தல் கமிஷனிடம் முறையிடுவதுதான் ஒரே வழி. ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் தி.மு.க.வின் கிளைகள் செயல்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் நிறைய குழப்பம் ஏற்படும். அதனால் முறையீடு செய்வது குறித்து தலைவரிடம் ஆலோசனை செய்துதான் இதில் முடிவு எடுக்கப்படும்”என்றார்.
































