» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 17 Jul 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம்
ஆல மரம் ()

FICUS BENGALENSIS LINN:MORACEAE

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல்
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை
கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பில
லந்துறைக்
கோளெஞ் செல்வனைக் கூறிட
கிற்றியே

இந்து, ஜைனம் மற்றும் புத்த சாமியார்கள், மடாதிபதிகள் கையில் ஒரு தண்டு இருக்கும். இது மிகவும் புனிதமானது என்று கருதுகிறார்கள். இந்தத் தண்டு ஆலமரக் கிளைகளால்தான் தயாரிப்பார்கள்.

காஞ்சி சங்கராச்சாரியாரிடம் இருக்கும் புனித தண்டம் மத முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கு சக்தியும், தார்மீக நெறியும் உண்டு என்றும், இதை கையில் வைத்திருந்தால்தான் மடாதிபதிக்கான தகுதி உண்டு என்பதும் ஐதீகம்.

சங்கர மடத்தில் இதுபோல் மூன்று தண்டங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. இரண்டு தண்டங்கள் புனிதமான ஆலமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கு முந்தியவை என்று தெரிகிறது.

மனிதர்களை ஞானிகளாக்கும் ஆல மரத்திற்கு தனி மகிமை உண்டு. ஜைன மதத்தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள், இந்து மதத்தலைவர்கள் ஆல மரத்தை புனித மரம் என்று கூறி அதன் அடியில் தியானம் இருந்து ஞானம் பெற்றிருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. கோயில் மடாதிபதிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் தண்டும் ஆலமரத்திலிருந்தே செய்யப்படுகிறது என்றே கூறப்படுகிறது. ஆலமரத்தைப் பயபக்தியுடன் சுற்றி வரும் பழக்கத்தை இன்று காண முடிகின்றது.

நிம்மதியைத் தேடி அலையும் மனிதன், ஆல மரத்தடியில் சில நாட்கள் தவம் இருந்து பார்க்கட்டும் மனதிற்கு அமைதி கிடைத்துவிடும்.

இயற்கையான ஏ.சி. குளுமை தரும் ஆல மரம்

கோடை வந்தாலே நம்மவர்களில் வசதியுள்ளோர் கோடை வாசஸ்தலங்களுக்குச் சென்று விடுகின்றனர். அங்கு போவதற்கு முக்கியமான காரணம் குளுமை மீதான காதல்தான். கோடை என்னும் வெயில் கொடுமையிலிருந்து விடுபட்டு குளுமை என்னும் காதலியை நோக்கி புறப்பட்டுச் செல்லும் குடும்பங்கள் இன்று நாள்தோறும் பெருகிக் கொண்டே போகின்றன.

வீட்டிலேயே பல ஆயிரம் ரூபாய் செலவில் ஏர்கண்டிஷன்களைப் போட்டுக்கொண்டு, தனது உடலைக் குளுமைப்படுத்திக் கொள்பவர்கள் நகரங்களில் மிகவும் அதிகம். ஆனால், பழங்காலம் முதற்கொண்டே காணப்படுகின்ற ஆலமரம் ஒரு இயற்கையான ஏர்கண்டிஷனராக விளங்கி வருவதைக் காணலாம்.

இம்மரத்தின் அடியில் தங்கினால் உடல் சூடு எல்லாம் பறந்து போய்விடும். உடல் குளிர்ச்சியடைந்து மனம் தெளிந்துவிடும். இதனால்தான் இந்த ஆல மரத்தை சாலையோரங்களில் அதிகளவில் வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டுவிட்டது.

ஜைன மதத்தில் ஒரு தீர்த்தங்கரர் இருந்தார். அவர் கை எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும். கடும் காய்ச்சல், உடல்சூடு உள்ளவர்கள் அவரிடம் வந்தால், அவருடைய கை அவர்கள் மீது பட்டாலே உள்ளம் குளிர்ந்து விடும். ஜுரம் நீங்கி உடல் நலப்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஜைனர்களிடத்தில் இருக்கிறது.

பொதுவாகவே, ஆலமரம் குளிர்ச்சியைத் தருவதுடன், வெளிச்சூட்டை உட்கிரகித்துக் கொண்டு, சாந்தமான அமைதியையும் தருகிறது. உடல்நலனைக் கூட்டி, மனஅமைதியை மேம்படுத்துகிறது. எனவே, ஆலமர நிழலைப் பெற அனைவரும் ஆவல் கொள்ள வேண்டும்.

இன்னும் வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தோட்டத்துக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.

தோற்றம் : ஆலமரம் அகலமாக வேரூன்றி பரவக் கூடியது. இது என்றும் பசுமையுடனும், கிளைகளிலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி வளர்ந்து வேரூன்றி, அவை தண்டாகி, வளரக்கூடியதாக விளங்குகின்றது. இந்த மரத்துப்பட்டை மிருதுவான சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. இதன் இலைகள் தடித்து, முட்டை வடிவில் இருக்கின்றன. மலர்களில் ஆண், பெண் இனங்கள் உண்டு. இவை கனிகளாக மாறி முதிர்ச்சி அடைகிறது. இது சுமார் 70 முதல் 100 அடி உயரம் வரையில் வளர்கிறது. 25 முதல் 30 அடி வரையில் கனமாக வளர்கிறது.

காணப்படுமிடம்: ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரம் வரையிலுள்ள இடங்களில் இவை பரவலாக வளர்கின்றது.

ஆரம்பத்தில் இவை வளரும் போது, பக்கத்திலுள்ள மரங்களைச் சார்ந்து, அதன் மேல் படர்ந்து வளரும். பாறை மற்றும் மற்ற மரங்களில் பறவைகளின் எச்சத்திலுள்ள விதைகள் முளைத்து பின்னர் வேர்கள், விழுதுகளாக கீழ்நோக்கி வளர்ந்து, மண்ணில் கால்பதித்து பரந்து விரிந்து மிகப் பெரியதாக ஆலமரம் வளர்ச்சியடைகிறது.

பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் முதல் அஸ்ஸாம் பள்ளத்தாக்குகள், இமாலயக் காட்டுப் பிரதேசங்கள், பீகார், சோட்டா நாக்பூர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரம், தென்னிந்திய காடுகள், மத்திய இந்தியப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.

இயல்பு : குளிர்ச்சியும், வறட்சியும் கொண்டது. சிலர் இதனை ஈரம் எனக் கருதுகிறார்கள். இதன் பால் மூன்றாம் நிலையில் குளிர்ச்சி, வறட்சியைக் கொண்டது.

பயன்படும் உறுப்புகள்
ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

சில இடங்களில் ஆல மரம் மிகவும் விரிந்து, பரந்து வளர்கின்றது. அதற்குக் கீழே பல நூறு பேர் தாராளமாக இளைப்பாற நிற்கலாம். இதன் கிளைகளில் ஒன்றன் பின் ஒன்றாக இலைகள் தோன்றுகின்றன. இதன் இலைகளை நசுக்கும்போது அதிலிருந்து பால் கசிகிறது.

இதன் கனி சுமார் அரை அங்குல நீளமுடையதாக விளங்குகின்றது. இவை சுத்தமாகவும், பஞ்சு போன்றும் இருக்கும். இது பழுத்தபின் செந்நிறமாக மாறிவிடுகிறது. இவை இனிப்பு, கசப்பு, புளிப்பு கலந்த நிலையில் காணப்படும். குளிர்காலத்திலும், கோடை ஆரம்பிக்கும் சமயத்திலும் கனி முற்றி பக்குவப்படுகிறது. பஞ்சாப் பகுதியில் ஒரு வகை ஆல மரம் இருக்கிறது. இது குட்டையாக வளரும். ஆனால், முழு அளவு மரமும், பெரிய ஆலமரத்தைப் போலவே காணப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்
ஆல மரம் முழுமையாகப் பயன் தரத்தக்க ஒரு மரமாகும். குறிப்பாக ஆண்மை, பெண்மைப் பிரச்னைகள், வெள்ளைப் படுதல், இரத்தப்போக்கு, துரிதஸ்கலிதம் வெளியாகுதல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக இவை விளங்குகிறது.

ஞாபக சக்தியைக் கூட்டுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற வெப்பப் பிரதேச நாடுகளில், சூட்டு உடல் நிலை உள்ளவர்களுக்கு தலைசிறந்த பொக்கிஷமாக இம்மரம் விளங்குகிறது. இது தொடர்பாக ஒரு கதையும் சொல்லப்படுவதும் உண்டு.

ஒரு இடத்தில் சில நாடோடிகள் கூட்டமாக தங்கி இருந்தார்கள். அதில் ஒரு கூடாரத்தில் நரை முடியுடன் கூடிய முதியவர் ஒருவரும் இருந்தார். அவருடன் ஆறு இளம் பெண்கள் தங்கி சேவை செய்து கொண்டிருந்தனர். தினசரி காலை, மாலை வேளைகளில் இவருக்கு அந்த இளம்பெண்கள் செய்யும் சேவைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒருவர், அந்த பெரியவரிடம், “அந்தப் பெண்கள் உங்களுக்கு மகள்களா? அல்லது பேத்திகளா?” என்ற சந்தேகத்தில் கேட்டார். இதனைக் கேட்டு கடுங்கோபங் கொண்ட அந்தப் பெரியவர், “இவர்கள் எனக்கு மகள்களோ, பேத்திகளோ இல்லை. இவர்களெல்லாம் என் மனைவிமார்கள்” என்று சொன்னார். அந்த ஆறு இளம் பெண்களும் இவருடன் அன்புடனும், பாசத்துடனும் இருப்பதைப் பார்த்து, “இத்தனைப் பெண்களும் எப்படி சந்தோஷமாக இருக்கின்றார்கள். அவர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது?” என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய பெரியவர் “அதோ! எதிரில் இருக்கின்ற அந்த ஆலமரம்தான எனக்கு பெரும் உடல் பலத்தையும் ஆண்மைக்கு வலிமையையும், வீரியத்தையும் கொடுக்கிறது. இந்த ஆலமரத்தின் அனைத்துப் பகுதிகளும் குறிப்பாக, கொம்புகள், பட்டை, விழுது, இலைகள், கனி உட்பட எல்லா உறுப்புகளும் மிகச் சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகின்றது” என்றார். அவற்றை இங்கு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஆலமர வேரின் மருத்துவ குணங்கள்

செடி, கொடி மரங்களின் வேருக்கும், வேர்பட்டைக்கும் மகத்தான மருத்துவ குணங்கள் உள்ளது. சில சமயம் வேரால் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துகள் “ஊசி மருந்து” போல் துரிதமாக வேலை செய்யும். ஆலமரம் நிறைய வேர்கள் கொண்ட மரமாகும். இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் கொள்வார்கள். இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

* வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் குணம்பெறும்.

புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

ஆலமரத்துப்பட்டையை நிழலில் உலர்த்தி, அதனை 12 கிராம் அளவில் அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்தும் கஷாயமிட வேண்டும். அவை சுண்டி மூன்றில் ஒரு பங்கு ஆகும் போது, அதில் ஒரு கிராம் உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கவும். இதுபோல தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், காலநிலை மாறுபாடுகளால் வரும் காய்ச்சல் போன்றவை குணமாகி நலப்படும்.

ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

ஆல மரத்துப் பட்டையை எரித்து, அதனை புண்களின் மிது பூசுவதால், புண்களிலிருந்து நீர் வடியும் போக்கு தடுக்கப்பட்டுவிடுகிறது. மேலும், புண்கள் ஆறிவிடுகின்றன. அது போலவே, ஆலமரப்பட்டையை எரிக்காமல் தூளாக்கியும் பயன்படுத்தலாம்.

இந்த மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

ஆலம் பழத்தின் மருத்துவ குணங்கள்

ஆலம்பழங்கள் நல்ல மருந்தாகப் பயன் தருகிறது. இதைச் சுத்தம் செய்தும் சாப்பிடுவார்கள். பறவைகள் இதை விரும்பி சாப்பிடும். இது செக்ஸ் பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். இது போலவே நன்றாகப் பழுத்த கனியையும் நிழலில் உலர்த்தி சாப்பிடலாம். இதன் மூலம் ஞாபக சக்தி மேம்படுகிறது. உடல் கட்டுக்கோப்பு அடைகிறது. ஆலமரத்துக்கனி அஜீரணத்தைத் தரும். இருப்பினும், பல நோய்களுக்கு நிவாரணமாக அமைகின்றது.

பசுங்கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

ஆல மரப்பட்டையின் மருத்துவ குணங்கள்

மரத்தின் பட்டையை தனியாக செதுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதைச் சிறிய துண்டுகளாக வெட்டி பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

24 கிராம் அளவு பட்டையை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்தக் கொதிக்க வைக்க வேண்டும். அவை சுண்டி பாதியாக ஆன பிறகு, அதனை வடிகட்டி, சுத்தப்படுத்தி அதில் பசு நெய் 12 கிராம், 12 கிராம் வெண்ணெய் சேர்த்து வெது வெதுப்பான சூட்டுடன் குடிக்கவும். முற்றிப்போன மூலநோய்க்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

ஆல மரத்துப் பட்டையை உலர்த்தி 3 கிராம் அளவு எடுத்துக் அதனை கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அவை சுண்டி பாதியாக ஆன பின், அதில் உப்பு, கற்கண்டு இவற்றைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் இருமல் குணம் பெறுகிறது.

ஆலமரத்து வேர்ப்பட்டையை நிழலில் உலர்த்தி கஞ்சியில் கலந்து காலை, மாலை வேளைகளில் மூன்று கிராம் அளவுகளில் கொடுத்து வர பேதி குணம் பெறுகிறது.

ஆலமரப்பட்டையை நிழலில் உலர்த்தி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரு பங்கு வெண்ணெய் கலந்து பொடிபோல் செய்து கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை இரு வேளைகளிலும் தலா 6 கிராம் அளவு வரையில் எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் ஞாபக சக்தி கூடுகிறது. மருந்து சாப்பிடும் நேரங்களில் புளிப்புப் பொருட்கள் உண்பதை தவிர்த்து வருவது நல்லது. ஆல மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தி வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனை தடவுதன் மூலம் பல் ஈறுகள், தாடைகள் வலிமை பெறுகின்றன. இந்தக் கஷாயத்தை பஞ்சில் நனைத்து சிறு குழந்தைகளின் வாயைக் கொப்பளிக்க வைப்பதால் பல் குறைபாடுகள் குணம் பெறுகின்றன.

ஆலமரத்துப் பட்டை 12 கிராம் அளவு எடுத்து, அதனை அரை லிட்டர் தண்ணீரில் அரைத்து, அதில் கற்கண்டைச் சேர்த்து வெட்டை நோய்க்கு மருந்தாகத் தரலாம்.

ஆலங்குச்சிகளின் மருத்துவ குணங்கள்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். ஆல மரக்குச்சிகளால் பற்களைச் சுத்தம் செய்தால் ஈறுகளும் பற்களும் வலிமை பெறுகின்றன.  ஆலமரக் குச்சிகளை எரித்து, கரியாக்கி அதனை மூலத்திற்கான மருந்து தயாரிக்கப் பயன்படுத்துகின்றார்கள்.

மருந்து தயாரிக்க ஆலங்குச்சிகளை எரித்து, கரியாக்கிக் கொள்ள வேண்டும். இதனை நன்கு அரைத்து மூன்று கிராம் அளவுகளைக் கொண்ட சிறு சிறு பொட்டலமாகக் கட்டிக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் நல்ல தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் இரத்த மூலம் குணம் பெறும். வெண்ணெயில் 101 முறை கழுவி அதில் அந்தக் கரியை தேவைக்கேற்ப அரைத்துப் போட்டு பசை தயாரித்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை வேளைகளில் மல ஜலம் கழித்து சுத்தம் செய்து கொண்ட பின் மூலக்கட்டி உள்ள இடங்களில் இதனைத் தடவி வருவது நல்லது.

ஆல மரப்பூக்களின் மருத்துவ குணங்கள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆலமரத்தை தினசரி சுற்றி வந்து பூஜை செய்யும் பழக்கம் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்து இன்று வரை உள்ளது. சிலர் ஆல மரத்தின் பூக்களை விரதம் இருந்தப் பின் சாப்பிடுவார்கள். நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். இதனால் குழந்தைப் பாக்கியம் ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.

உண்மையில் ஆலமரப் பூக்களுக்குத்தான் குழந்தைப் பாக்கியம் தரும் மருத்துவ குணம் இருப்பதாக யுனானி மருத்துவம் கூறுகிறது.  ஆலமரப் பூக்களை ஊற வைத்து, செக்ஸ் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தலாம்.

ஆலமரப் பூக்களைத் தாங்கியுள்ள காம்புகளை நிழலில் உலர்த்தி, தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு வெண்ணெய் சேர்த்து ஒரு கப் அளவில் தினசரி ஏழு நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் கலந்த சிறுநீர், இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து போதல், கிரந்தி நோய், சிறநீரக வறட்சி போன்ற நோய்கள் குணம் பெறுகிறது.

ஆல மரத்தில் பூக்களைத் தாங்கியுள்ள மலர்க்காம்புகளைப் பறித்து நிழலில் உலர்த்தி, தண்ணீர் விட்டு நன்றாக சேர்த்து பாலுடன் காலை நேரத்தில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரிய ஒழுக்கு, உடலுறவின் போது சீக்கிரமாக இந்திரியம் வெளியேறிவிடுதல் போன்றவை குணப்படுகிறது.

ஆலமரத்தின் மலர்க்காம்புகளை, அத்திமரப் பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சம எடை அளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் பயன்படுத்தலாம். இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலை போய் குணப்படும்.

தேங்காய் சதைப்பகுதியை எடுத்து அதில் ஒரு பகுதியில் துளையிட வேண்டும். அதில் தால்மகானா 24 கிராம், அபின் 3 கிராம் ஆகியவற்றை அரைத்துக் கலக்க வேண்டும். அதில் ஆலமரத்துப் பாலைப் போட்டு நிரப்ப வேண்டும். அதனைத் தேங்காய்த் துண்டுகளில் வைக்க வேண்டும். அதனைத் துணியில் சுற்றி கோதுமைக் குவியலில் போட்டு மூடிவிட வேண்டும்.

நாற்பது நாட்கள் கழித்து அதனை நன்றாக அரைக்க வேண்டும். இதனை பட்டாணி அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொண்டு தினசரி ஒரு வேளை சாப்பிடுவதால் ஆண்மைக்கு வலிமை கிடைக்கும். இந்திரியம் அதிகளவில் சுரக்கும்.

ஆல மர விழுதுகளின் மருத்துவ குணங்கள்

ஆல மரத்தின் விழுதுகளை “ஆலமரத்தின் தாடி” என்றும் அழைப்பார்கள். மரத்திலிருந்து பூமியை நோக்கி நிறைய விழுதுகள் வரும். இதை வெட்டாமல் விட்டால், பூமியில் பதிந்து வேர் பிடிக்கும். இந்த விழுதுகள் நல்ல மருந்தாக அமைந்திருக்கின்றன. ஆல மர விழுதுகள் இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. ஆஸ்துமா, வெள்ளைப்பாடு, வெட்டை, தளர்ந்த மார்பகங்கள், வாந்தி, ஆண்மைக் குறைவு, தொழுநோய், பித்தக்காய்ச்சல், உடல் சூடு பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன் தருகிறது.

மெல்லிய ஆலமர விழுதுகளை இடித்துத் தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தினசரி தலைக்குப் பூசினால் முடி உதிரல் குணம்பெறும்.

தொங்கிய மார்பகங்கள் விரைப்படையவும், கவர்ச்சியாகக் காட்சி தரவும், ஆல மர விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும் சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்களில் பூசலாம். இதனால் மார்பகங்களின் இயல்பு நிலை திரும்பும்.

ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.

ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.

ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

ஆலமர விழுதுகளை நன்றாக அரைத்து, நிழலில் உலர வைக்க வேண்டும். பிறகு, இதனை நன்கு அரைத்துப் பவுடராக்கி 24 கிராம் அளவு எடுத்து அதை மூங்கிலுப்பு, சத்தேகுலான்ச்சா, ஏலக்காய் ஒவ்வொன்றும் ஆறு கிராம் அளவுகள், காஃபூர் ரியாஹீ அரை கிராம், கற்கண்டு எல்லாவற்றையும் எடுத்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இவற்றை மூன்று கிராம் அளவு ஷர்பத்ஏஜாஸ் உடன் சாப்பிடச் செய்யலாம். இதனால் காசநோயால் வரும் நாள்பட்ட ஜுரம் மற்றும் அடிக்கடி வரும் ஜுரம் குணம்பெறும்.

ஆலமர விழுதுகளை நிழலில் உலர வைத்து, அதை தேவையான போது எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் கொடுப்பதனால் இருமல் மற்றும் ஆஸ்துமா நோய் குணம் பெறுகிறது.

ஆல மரத்து விழுதுகளை உலர்த்தி, அரைத்து அதனை ஐந்து முதல் ஆறு கிராம் வரையில் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, டீக்கு பதிலாகத் தொடர்ந்து குடித்து வந்தால் மூளைக்கு சக்தி கிடைக்கிறது. ஜலதோஷம் குணப்படுகிறது. தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருக்கும் வெள்ளைப்பாடு நோய் குணம் பெறுகிறது.

ஆலமர விழுதுகள் ஜீரண சக்தியைக் கொடுப்பதுடன் இரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்கிறது. பலவிதமான நோய்களைத் தீர்த்து வைக்க மிகவும் உதவுகிறது.

ஆலமர விழுதுகளை நன்றாக இடித்து, நசுக்கி, சாறு பிழிந்து சில நாட்களுக்குக் குடிப்பதால் சிறுநீர்ப்பைக் குறைபாடுகள். வெட்டை நோய்கள் போன்றவை குணப்படுகிறது.

ஆலமர விழுதுகளை எரித்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துத் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

பித்தக் காய்ச்சலை குணப்படுத்த ஆலமர விழுதுகளைக் கஷாயமிட்டு, டீக்குப் பதிலாகக் குடிக்கச் செய்யலாம்.

தொழுநோய், கிரந்தி, இரத்தம் அசுத்தம் அடைந்து இருப்பது போன்ற நிலைமைகளில் ஆல மர விழுதுகள் 24 கிராமில், கருஞ்சீரகம் 5 கிராம் கலந்து அரைத்துத் தரலாம். இதனால் இரத்தம் தூய்மைப்படுகிறது.

ஆலமர இலைகளின் மருத்துவ குணங்கள்

ஆல மரத்தின் இலைகள் இயற்கையான, சுத்தமான காற்றை அளிப்பதுடன் பல நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்திருக்கின்றது. இதைப் பவுடராக்கி வைத்துக் கொள்ளலாம்.

இலைகள் ஆண்மைக் கோளாறுகள், குழந்தை பாக்கியம் இல்லாமை, இடுப்பு வலி, வாந்தி, இரத்த மூலம், ஞாபக மறதி, எப்போதும் தூங்கிக் கொணிடே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருத்தல், ஜலதோஷம், இந்திரியம் குறைவாக சுரத்தல், இந்திரியத்தில் உயிரணுக்கள் குறைவு போன்றவை நீங்கிடப் பயன் அளிக்கிறது.

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

முழு வளர்ச்சியடையாத ஆலமரத்து மொட்டுக்கள் பத்து எண்ணிக்கைகளை எடுத்து, இலைத்தூளில் கலந்து குடிக்கச் செய்வதால் இடுப்புவலி குணம் பெறுகிறது.

ஆலமரத்தின் மிருதுவான சிகப்பு நிறத்திலுள்ள புதிய இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்து புட்டிகளில் போட்டு வைத்தக் கொள்ள வேண்டும். தேவைப்படும் போது 5 அல்லது 6 கிராம் அளவு அரை லிட்டர் தண்ணிரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அளவு சுண்டி, பாதியாக ஆன பிறகு, வடிகட்டி அதில் வெண்ணெய் சேர்த்து டீயைப் போல சூடாகக் குடிக்க வேண்டும். இது மூளைக்கு சக்தியைக் கொடுப்பதுடன், ஜலதோஷத்தை நலப்படுத்தும் சிறந்த நிவாரணியாகவும் விளங்குகிறது.

ஆல மரத்தின் மிருதுவான இலைகள் ஒரு கிராம் அளவு எடுத்து 15 கிராம் அளவு தண்ணீரில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் கற்கண்டு கலந்து குடிக்கக் கொடுப்பதால் ஞாபக மறிதி நோய் குணம் பெறுகிறது.

ஆலமர இலைகள் 2 கிராமில், இலவங்கம் 7 எண்ணிக்கைகளைப் போட்டு தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுப்பதால், வாந்தி உடனடியாக நின்றுவிடுகிறது.

ஆல மரத்தின் இலைகள் 2 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு அரைத்து தினசரி குடிக்கக் கொடுப்பதால் மூலத்தின் போது இரத்தம் கசிவது குணப்படும்.

ஆல மரத்தினுடைய முற்றிய இலைகளை நிழலில் உலர்த்தி, அதனை ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க விட வேண்டும். அவை சுண்ணடி கால் பங்காக ஆன பிறகு, அதில் ஒரு கிராம் உப்பு சேர்த்து காலை, மாலை இரு வேளைகளிலும் குடிக்கச் செய்யலாம். இதனால் அதிகளவு வரும் தூக்கம் போய் விடுகிறது.

ஆல மரத்தின் சிவப்பு நிற இலைகளைப் பவுடராக்கி, அதைக் கொஞ்சம் நெய்யில் போட்டு வறுக்க வேண்டும். இதனைக் கொஞ்சம் அல்வாவில், கலந்து சாப்பிடுவதால், உடல் கட்டுக்கோப்பு அடைகிறது.

ஆல மர இலைகளை நிழலில் உலர வைத்து, நன்றாக அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து கொடுப்பதானல் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் வெள்ளைப்பாடு நோய்களுக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

ஆலமர இலைகளை எரித்து ஆளி விதை எண்ணெயில் கலந்து சொட்டைத் தலையில் வைத்துப் பூசினால் மிகவும் பயன் தருகிறது.

ஆல மரத்தின் பழுத்த இலைகளை எரித்து, அதன் சாம்பலை மெழுகு, நெய் கலந்து பசையாகச் செய்து புண்களின் மீது பூசலாம்.

ஆல மர இலைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, அதனை வடிகட்டி, தேன் மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதனால் இரத்தம் தூய்மைப்படுகிறது. இரத்தத்தில் மதுப்பொருட்களின் அளவுகளும் குறைந்து விடுகிறது.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது. 6 கிராம் ஆல மர இலைகள் மூட்டுவலிக்கு நல்லது.

வீக்கம், காயம், புண்கள், கொப்புளங்களை நலப்படுத்த ஆலமர இலைகளை சூடுபடுத்தி, அதில் எள் எண் ணெயைக் கலந்து வீக்கத்தின் மீது வைத்துக் கட்டி விடலாம். புண்கள், காயங்களின் தொற்றுப் பாதிப்புகளைக் குணப்படுத்த ஆலமர இலைகளைச் சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டலாம்.

ஆலமரப்பாலின் மருத்துவ குணங்கள்
ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

பால் சேகரிக்கும் முறை
ஆல மரத்தின் பால் பலவிதமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இதனை காலை, மாலை வேளைகளில் சேகரிக்க வேண்டும். இதற்காக, ஆலமரத்தின் வேர் மற்றும் கனத்த நோய்களின் முனைப் பகுதியில் ஒரு பெரிய ஓட்டை போட்டு விட வேண்டும். கொஞ்ச நேரத்தில் அதில் பால் சுரந்து சேர்ந்து விடும். இதனை மண் சட்டியில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

முதல் நாள் ஒரு சொட்டு, அடுத்த நாள் மற்றொரு சொட்டு, மூன்றாவது நாள் மூன்று சொட்டுக்களைச் சாப்பிட வேண்டும். அடுத்து ஒரு வாரத்துக்கு ஆல மரத்துப் பாலை மூன்று சொட்டுக்கள் என தொடர்ந்து கொடுத்து வந்தால், பால்வினை நோய்களான வெட்டை, கிராந்தி, ஞாபக மறதி, உடலுறவின் போது சீக்கிரமாக விந்து வெளியேறிவிடுதல் போன்ற பிரச்சினைகைள் இவை குணப்படுத்துகிறது.

ஆலமரத்துப் பாலில் பஞ்சினை நனைத்து வீக்கங்களின் மீது பூசினால், அவை சீக்கிரமாகக் குணமாகும். இந்தப் பாலை வீக்கம் உருவாவதன் ஆரம்பக் கட்டத்திலிருந்தே பூசி வந்தால், வீக்கம் வளர்வது தடைப்பட்டுவிடும். சிறிய வீக்கங்கட்டியாக இருந்தால் அவை குணம் அடைந்து விடும். அது பெரியதாக இருந்தால், அவை உடைந்துவிடும்.

உதட்டுப் பகுதிகளில் தோன்றும் புண்கள், காயங்களைப் போக்கி குணப்படுத்த இந்த ஆலமரத்துப்பாலைத் தடவலாம். இதன் மூலம் உடனடியாக நிவாரணம் கிடைக்கின்றது.

தொப்புள் பகுதியில் ஆலமரத்துப் பாலைப் போட்டு நன்றாகப் பூசி விடுவதனால் பேதியைக் கட்டுப்படுத்தி விடலாம். சிறு குழந்தைகளுக்கு வரும் பேதியைக் கட்டுபடுத்த தினசரி 3 கிராம் அளவு காலை வேளையில் தரலாம்.

பற்கள் வலுவிழந்து ஆடிக்கொண்டு இருந்தால், ஆலமரத்துப் பாலை நனைத்த துணியைக் பற்களின் இடையில் வைத்தால் பற்கள் சுலபமாகக் கழன்றவிடும். ஆடும் பற்களைத் தவிர, வேறு பக்கத்திலுள்ள பற்களைப் பாதிக்காத வகையில் தடவ வேண்டியது மிக முக்கியமான அம்சமாகும்.

பலவிதமான உடல் நலக் குறைபாடுகளால் வரும் வலிகளைப் போக்க ஆலமரத்துப் பாலை வலியுள்ள இடங்களில் பூசலாம்.

ஆலமரத்துப் பாலைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இடுப்புவலி குணப்படுகிறது.

குழந்தைகளுக்கு பச்சயைாக பேதி கழிந்தால், அவர்களுக்கு பத்து சொட்டு ஆலமரத்துப் பாலை பத்தாஷாவில் போட்டு மூன்று நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்தினால் பேதி நின்று விடுகிறது.

வெண்ணெயில் பத்து சொட்டு ஆல மரத்துப் பாலைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். அடுத்த நாள் அதிலிருந்து மூன்று கிராம் அளவில் எடுத்து சாப்பிட்டு வரலாம். ஒவ்வொரு நாளும் சேர்க்கும் பாலின் அளவு ஒரு சொட்டு அதிகமாக்கிக் கொண்டே வர வேண்டும். அது இருபத்தைந்து சொட்டுகள் என்ற நிலையில் வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒரு சொட்டு அளவு குறைத்துக் கொண்டே பத்து சொட்டுக்கள் வரை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது எந்த மருந்து சாப்பிடுவதையும் நிறத்திவிடலாம். இது பலவிதமான மூல நோய்களுக்கான நிவாரணியாக விளங்குகிறது.

ஆல மரத்துப்பாலை காதுகளில் விடுவதால் காதுளிலுள்ள பூச்சிகள் செத்து விடுகின்றன. இதற்காக, முதலில் காதுகளில் ஆட்டுப் பாலையும், கொஞ்ச நேரம் கழித்து இரண்டு, மூன்று சொட்டுக்கள் ஆல மரத்துப் பாலையும் விடலாம். இதனால் காது நோய்கள் குணப்படுகின்றன.

புண்களின் மேல் ஆலமரத்துப் பாலைப் பூசவதனால் குணம் பெறுகின்றது. மூக்குகளில் உருவாகும் புண், காயங்களைப் போக்கி குணப்படுத்த ஆலமரத்துப் பாலை நுனியில் நனைத்துத் தடவ வேண்டும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருஅன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு முதலிய சிவத்திருத்தலங்களிலும் திருமெய்யம், திருவில்லிபுத்தூர் முதலிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாக ஆலமரம் வணங்கப்படுகிறது.

சிதம்பரம் அருகில் தில்லை திருச்சிற்றம்பலம் (PINCODE : 608 001) என்ற ஊர் உள்ளது. இவ்வூரைக் கோயில் என்றம் அழைப்பார்கள். இங்கு, திருமூலநாதர், உமையம்மை, சிவகாமியம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ‘ஆலமரம்; ஆகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருப்பேரன்பில் ஆலந்துறை (PINCODE - 621 702) என்னும் ஊர் லால்குடிக்கு கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சத்தியவாகீசுவரர், செளந்தரநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆல மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆல மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருப்பழுவூர் (PINCODE - 621 707) என்னும் திருவையாற்றுக்கு வடக்கில் 16 கி.மீ. தொலைவிலுள்ள அரியலூருக்கு 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் கீழைப்பழுவூர் என்றும் அழைக்கப்படுகிறது.

திருஆலம்பொழில் (PINCODE - 613 103) என்னும் ஊர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறுச் சாலையில் 10 கி.மீ. சென்று திருக்கண்டியூரை அடையலாம். மேலும் 2 கி.மீ. தூரத்தில் இவ்வூரை அடையலாம்.

இங்கு ஆத்மநாதர், ஞானாம்பிகை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆலமரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருநெல்வாயில் அறத்துறை (PINCODE - 605 111) பெண்ணாகடத்துக்குத் தென் மேற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு அறத் துறையப்பர், ஆனந்த ஈஸ்வரர், ஆனந்த நாயகி ஆலயம் உள்ளது. இக்கோயில்களின் தலவிருட்சம் ஆலமரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருஆலங்காடு (PINCLODE - 631 210) என்னும் ஊர் சென்னையிலிருந்து 64 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு ஊர்த்துவதாண்டவப் பெருமாள், வண்டார் குழலம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆலமரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருக்கச்சூர் ஆலக்கோயில் (PINCODE - 603 204) என்னும் ஊர் சிங்கப் பெருமாள் கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வடமேற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு விருந்திட்ட வரதர். மருந்தீசுவரர் (கோமுகம்) அஞ்சனாட்சியார், உமையம்மை, இருள் நீக்கித்தாயார் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆல மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

ஆலந்துறை (PINCODE - 639 101) என்னும் ஊர் திருச்சி - கரூர் சாலையில் ஜீயபுரம் தாண்டியதும் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் அந்தநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வடதீர்த்தநாதர், ஆலந்துறை மகாதேவர், பாலசுந்தரி, பாசெளந்தர நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆல மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆல மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அரியலூர் பழுவூர் வடமூல நாதர் அருந்தவநாயகி கோயிலில் ஆலமரம் தலவிருட்சமாக உள்ளது.

அரியலூருக்குத் தெற்கே 12கி.மீ. தூரத்தில் உள்ளது. பரசுராமர், அந்தணர்களைக் கொண்டு 3 காலமும் பூஜை நடத்த கட்டளையைச் செய்துள்ளனர்.

சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யர், அகோர மூர்த்தி, நடராஜர் பிரம்மவித்யாநாயகி அஷ்டபுஜ துர்க்கை, காளி கோயிலில் தலவிருட்சமாக ஆலமரம் உள்ளது.

சீர்காழி பூம்புகார் மார்க்கத்தில் அமைந்துள்ளது. மூன்று வகை சிறப்புடைய கோயில், இது திருவெண்காடு, ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வூர் வால்மீகி இராமாயணத்தில் இடம்பெற்ற பழமை வாய்ந்தது. மயிலாடுதுறை சிதம்பரம் நடராஜர் - சிவகாமி சுந்தரி அம்மன் கோயிலில் தலவிருட்சமாக இம்மரம் உள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது சிதம்பரம். மற்ற கோயில்களில் மூலவர் உற்சவர் என 2 மூர்த்திகள் உண்டு. ஆனால், இக்கோயிலில் இரண்டுமே ஒருவராக உள்ளது சிறப்பான தகவல்.

இக்கோயிலில் தில்லை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் தவம் செய்து பூஜை புரிந்த கோவில் என்பதாலவ் இது புலியூர் எனவும் பெயர் உண்டானது.

சங்க இலக்கியம்

‘ஆல்’ எனவும் ‘ஆலம்’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் ஆலமரம் மிகப்பாரவி வளரும் பெருமரமாகும். இதன் கிளைகள் நீண்டு, தழைத்து நாற்புறமும் பரவி நிழல் பரப்பி நிற்கும்.

இறைவன் ‘அன்று ஆலின் கீழ் இருந்து அறமுரைத்தான்’ என்பார் மணிவாசகர். இதனால் இம் மரத்தைக் ‘கடவுள் ஆலம்’ என்று நற்றிணையில் பெரும் பதுமனார் கூறுவார். சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று கூறும் சங்க நூல்கள் “ஆல் கெழு கடவுள்” என திருமுருகாற்றுப் படையிலும்”, “ஆல் அமர் செல்வன் அணிகால் பெருவிறல்” “ஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழா” என கலித் தொகையும் கூறுகிறது.

மாமரத்தின் கீழும், ஆலமரத்தின் கீழும் உறையும் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித் தொழுவிலே பாய்ந்தார் என்று கூறும் கலித்தொகை நூலும் விளக்கமாகக் கூறுகின்றது.

இறைவன் தங்கி இருக்கும் இடமாவதன்றி, ஆலமரமானது பேரரசர்கள் தமது பெரும் படையுடன் தங்கியிருக்கவும் நிழல் பரப்பும். பெரியவர் என்று பேர்படைத்த அலெக்ஸாண்டர் தமது ஏழாயிரம் போர் வீரர்களுடன் இளைப்பாறுவதற்கு இடம் தந்தது ஆலம் மரம்தான் என்பது வரலாறு.

ஆல, அரசு, அத்தி முதலிய மரங்களும் பூத்து காய்ப்பனவே எனினும் இவற்றின் பூக்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘பூவாதே காய்க்கும் மரமும் உள.’ என்ற வரிகள் இதனால் எழுந்ததே.

ஆலமரத்தின் கிளைகனின்று விழுதுகள் உண்டாகி, கீழ்நோக்கி வளர்ந்து மண்ணில் ஊன்றிப் பருத்து நிழல் பரப்பும் கிளைகளைத் தாங்கி நிற்கும் என்ற உண்மையை புலவர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்.

“பல்வீழ் ஆலம் போல” என அகநானூற்றிலும், “அழல் புரை குழை கொழு நிழல் தரும் பலசினை ஆலமும் கடம்பும்”. என பரிபாடலிலும் காணலாம்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Related Posts Title


Leave a Reply