Friday, 17 Jul 2009
கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் மறைவு

முதுபெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் (90) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.
கடந்த சில மாதங்களாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவருடைய பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இசையில் பிரபலமான பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகள் பட்டம்மாள். அவருடைய தாயார் காந்திமதி சிறந்த பாடகி. தாயிடமே முறைப்படி கர்நாடக இசைக் கலையைப் பயின்ற பட்டம்மாள் 1932-ல் தனது பத்தாவது வயதிலேயே ரசிக ரஞ்சனி சபாவில் மேடையேறி முதல் கச்சேரி செய்து அசத்தினார்.
பத்ம பூஷண், பத்ம விபூஷண், கான சரஸ்வதி மற்றும் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் விருதுகள் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் டி.கே. பட்டம்மாள்.
































