» Talk with medical students, Ramadoss ask CM .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Monday, 13 Jul 2009

Talk with medical students, Ramadoss ask CM

மருத்துவ மாணவர்களுடன் பேசுங்கள்: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள மருத்துவ மாணவர்களை அழைத்து உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை பட்டப்பயிற்சி மருத்துவர்களும் கடந்த 2 வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அரசு பொது மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, புறநோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலை நீடிப்பது பொது நலனுக்கு உகந்ததல்ல.

போராட்டம் நடத்துகின்ற பயிற்சி மருத்துவர்களின் நிலைப்பாடு மற்றும் அரசின் நிலை ஆகியவற்றை ஆராயும் போது, இடையில் ஒரு மெல்லிய இழை தான் வித்தியாசமாக இருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு இலவசங்களுக்கு பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிற மாநில அரசுக்கு ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வரும் பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்பதால் ஏற்படுகிற ஒரு சில கோடி கூடுதல் செலவு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்திவிடாது.

2007-ம் ஆண்டில் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் அப்போது நடைமுறைக்கே வராத ஒரு திட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில் மட்டும் பயிற்சி மருத்துவர்களும், அவர்களோடு இணைந்து மருத்துவ மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படும்படி அப்போதைய மத்திய நலவாழ்வுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஆலோசனை கூறினார்.

ஆனால், இன்றைக்கு பயிற்சி மருத்துவர்கள் நடைமுறையில் உள்ள ஒரு குறைப்பாட்டை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துகின்றனர். இதர மாநிலங்களுக்கு நிகராக தமிழகத்தில் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.

போராட்டம் நடத்தி வருகிற பயிற்சி மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகண்டு பொதுநலனை காக்க வேண்டும் என பா.ம.க. மட்டுமின்றி 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, அரசும், முதல்-அமைச்சரும் இதில் கவுரவம் பார்க்காமல், போராட்டம் நடத்தி வருகிற மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Posts Title


Leave a Reply