Sunday, 12 Jul 2009
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்: பயிற்சி டாக்டர்கள் முடிவு
தமிழகம் முழுவதும் போராட்டம் செய்து வரும் பயிற்சி மருத்துவர்கள், திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவர்கள் மற்றும் பல் மருத்துவப் பயிற்சி மருத்துவர்கள் மொத்தம் 4,050 பேர் முதல்வர் கருணாநிதி அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது எனக் கூறி கடந்த 12 தினங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
முதலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், அந்தத் திட்டத்தை மாற்றி அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பயிற்சி மருத்துவர்கள் ஓர் ஆண்டு பயிற்சியை ஆஜர் பட்டியலின்படி முடித்தால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுத முடியும். ஆண்டுக்கு 12 நாள்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக் கொள்ள பயிற்சி மருத்துவர்களுக்குச் சலுகை உண்டு.
பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திங்கள்கிழமையன்று 13-வது நாளாகத் தொடர்கிறது. இதையடுத்து 2010 மார்ச்சுடன் பயிற்சிக் காலம் முடிவடையாத நிலை ஏற்பட்டு, முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுத முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது. ஏனெனில் அவர்களுக்கு வகுப்புகளில் 80 சதவீத வருகை இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அதிகாரிகளின் இத்தகைய மிரட்டலுக்குப் பயப்படாமல் தங்கள் போராட்டம் தொடரும் என்றார் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் சபீசன்.
































