மருத்துவத்திற்கு பயிற்சியா, போராட்டத்திற்கு பயிற்சியா?: முதல்வர் சந்தேகம்
மாணவர்கள், மருத்துவத்திற்கு பயிற்சி பெறுகின்றனரா, போராட்டத்திற்கு பயிற்சி பெறுகின்றனரா என்று முதல்வர் கருணாநிதி சந்தேகம் எழுப்பினார்.
பயிற்சி டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நடந்தது. இதில், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.
விவாதத்திற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது:
”மாணவர்கள், மருத்துவத்திற்கு பயிற்சி பெறுகின்றனரா, போராட்டத்திற்கு பயிற்சி பெறுகின்றனரா என்று தெரியவில்லை. மற்ற அரசியல் கட்சிகளை விட, போராட்டத்தின் இலக்கணம் கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். முதலில் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டும்; அதன் பின், நோட்டீஸ் கொடுக்க வேண்டும்; அதற்கடுத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த போராட்டத்தை கம்யூனிஸ்ட்கள் ஆதரித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பயிற்சி டாக்டர்கள், இந்த அரசையோ, அமைச்சரையோ சந்தித்து எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இவர்கள் தலைகீழாக, எடுத்ததும் போராட்டத்தை ஆரம்பித்து விட்டு, கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள் என்று ஆரம்பித்திருக்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் பயிற்சி டாக்டர்களை தனியாகக் கருதுவதில்லை. பயிற்சிக் காலத்திலேயே, டாக்டர்களாகக் கருதப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பயிற்சி பெறும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகம்; மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவு. உங்களுக்கு சரி என்றால், மற்ற மாநிலங்களைத் துணைக்கு அழைத்து இங்கே வாதாடுகிறீர்கள். எங்களுக்கு சரி எனப்படும் போது, மற்ற மாநிலங்களைத் துணைக்கு அழைத்தால், நீங்கள் உடன்படுவதில்லையே? இந்த தேதியிலிருந்து போராட்டம் நடத்தப்போகிறோம் என்று பயிற்சி டாக்டர்கள் அறிவித்தனரா? எங்களை யாராவது அணுகினரா; இல்லை. ‘இவர்களைப் போய் ஏன் அணுக வேண்டும்; சட்டசபை இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்து செயல்பட்டால், அது நல்லதல்ல; முறையும் அல்ல.
ரத்த தானம் செய்வது போராட்டமல்ல; அது ஒரு பயிற்சி. ரத்த தானம் செய்கிறோம் என்று ஒருவர் படுக்கையில் படுத்து, அதை போராட்டம் என்று சொன்னால், எங்களைப் போல் பயந்தாங்கொள்ளி அரசு வேண்டுமானால் அதற்கு பயப்படலாம். வேறு அரசாக இருந்தால், ‘பரவாயில்லை; ரத்த தானம் செய்யட்டும். இன்று எவ்வளவு பேருக்கு செய்தீர்கள்; நன்றி. நாளை ஆயிரம் பேருக்கு ரத்த தானம் செய்யுங்கள்’ என்று கேட்கிற அரசாக இருந்தால், உங்களுக்கு ஆபத்து. தானம் செய்கிற அளவிற்கு, உங்கள் உடலில் ரத்தம் இல்லாமல் போய்விடும். எனவே, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பயிற்சி டாக்டர்களை அமைச்சர் பன்னீர்செல்வம் அழைத்துப் பேசுவார். அவர்கள் வந்தால் அமைச்சர் பேசுவார். பேசுவதற்கு நீங்கள் அனுப்பி வைத்தால் பேசுவார்.
இந்த போராட்டம் நீடிக்க வேண்டும் என்று கருதுபவர்களில் யாராவது உங்களில் இருந்தால், அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். அரசும், பயிற்சி டாக்டர்களும் ஒன்றாகச் செயல்பட, மக்களுக்கு பயன்பட உதவுங்கள். கட்சித் தலைவர்கள் எடுத்துக் கூறிய கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல், மீண்டும் அதைப் பற்றி பரிசீலனை செய்து, என்ன செய்யலாம்; எப்படி அவர்களை திருப்தியடையச் செய்யலாம் என்பதைப் பற்றி கண்டிப்பாக எண்ணிப் பார்ப்போம்” இவ்வாறு முதல்வர் பேசினார்.
Related Posts Title































