Saturday, 4 Jul 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருச்செங்காட்டாங்குடி
ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம்
அத்தி மரம்
(மந்தாரை)
()

மகத நாட்டை ஆண்டு வந்த மகத மன்னவருக்கு விபுகை என்பவள் மனைவி. இவர் அசுரர் குலத்தைச் சேர்ந்தவர். அவளுக்கு யானைத் தலையும், அசுர உடலும் உடைய மகன் ஒருவன் பிறந்தான். பெற்றோர் அவனுக்கு கஜமுகாசுரன் எனப் பெயர் வைத்து இறைவனை நோக்கித் தவம் செய்ய வைத்தனர். ஈசனும் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அவனோ யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் எனக் கேட்டான். இறைவனும் தந்தார். வரம் பெற்ற அசுரன் பல கொடுமைகளைச் செய்தான் . இவனிடமிருந்து தேவர்களைக் காக்க விநாயகப் பெருமான் அவதரித்தார். இவன் பெற்ற வரத்தின் சிறப்பை அறிந்து ஆயுதங்களால் கொல்லாமல் தன் தும்பிக்கையின் வலக் கொம்பை உடைத்து அசுரன் மீது வீசிக் கொன்றார்.

அவனோ மீண்டும் வர பலத்தால் பெருச்சாளி உருக் கொண்டு கணபதியோடு சண்டையிட வந்தபோது அவனது ஆற்றலை அடக்கி தீமைகள் நிகழாதவாறு காப்பாற்றினார்.

கணபதி கஜமுகனைக் கொன்றபோது உடம்பிலிருந்து வெளியேறிய இரத்தம் இத்தலத்தை இரத்தக் காடாக்கியதால் இது செங்காடு எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்வூர் கணபதிச்சரம் எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் இங்கு அமுது படையல் திருவிழா எனவும் நடக்கிறது. திருஅமுது செய்ய திருமடத்துக்கு அழைக்கும் நிகழ்வும், திருமடத்தில் கறி அமுது நிவேதனம் நடப்பதும் விடிய விடிய நடைபெறும் விழாவாகும். சீராளன் பிள்ளையார் கோயிலும், சீராளன் பள்ளியும், குளமும் இன்றும் உள்ளது.

பிள்ளையில்லாதவர்கள் இங்கு நடக்கும் ‘அமுது படையல்’ திருநாளில் வழங்கப்படும் பிரசாதத்தை உண்பதால் மலடு நீங்கும். மழலை பிறக்கும். சந்ததி செழிக்கும், சந்தானம் பெருகும் என்பதால் இறைவனோடு அத்தி மரத்தையும் சேர்த்து வணங்குகின்றனர்.

ஆத்தி, வல்லாதி எனவும் அழைக்கப்படுகிறது. இது அடர்ந்த தழையமைப்புடைய சிறிய மரம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கால்நடை ஜீவராசிகளுக்குத் தீவனம் தரும். பீடித்தொழில் செய்வோருக்கு ஏற்ற மரம். கடின மரத் தன்மையும், மண்ணுக்கு தழைச்சத்தையும் தரும் அற்புத மரம்.

இது ‘பஹுனியா ரெஸிமோசா’ எனும் அறிவியல் பெயர் கொண்டு ‘சிசால் பினியாய்டியே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மரம் 16, 17ம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பு பெற்றுள்ளது எனவும் கூறப்படுவதுண்டு. இது இந்தியாவின் தென் பகுதிகளில் காணப்படும் மரமாகும். தமிழகத்தின் சில மாவட்டங்களிலும், சிறுசிறு குன்றுகளின் அடிவாரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

இது ஒரு இலையுதிர் மரமாகும். எப்பேர்ப்பட்ட வெப்பத்தையும் தாங்கி வளர்ந்திடும். சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும். நன்றாக வளரக் கூடிய சூழ்நிலையில் 15 மீட்டர் உயரத்தையும் எட்டிவிடும்.

பிப்ரவரி மாதத்தில் இலை உதிர்க்கும். மார்ச் மாதத்திலிலேயே துளிர்க்கும். மார்ச் முதல் ஜூன் மாதங்களில் பூக்கள் தோன்றும. இது பயறுவகைக் குடும்பத்தைச் சேர்ந்த மரம் எனவும் கூறுவர்.

மரத்தின் பயன்கள்

* இலை, பட்டை, விதை, மரம் என பலவும் உபயோகமாகிறது.

இலை : 5 மாநிலங்களில் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர். எருமைகள் இத்தழையை விரும்பித் தின்கின்றன.

பட்டை : உள்பட்டையில் இருந்து நார் உரித்து பல உபயோகங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

* முற்காலத்தில் தீக்குச்சியால் வெடிக்கப்படும் துப்பாக்கியில் இப்பட்டை தீக்குச்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பட்டையை நீரில் இட்டு கொதிக்க வைத்தபின் உலர்த்தி இடித்து வைத்துக் கொள்வர். இதனால் துரிதமாக எரியாமல் கனிந்து கொண்டே நீண்ட நேரம் வரை இருக்கும்.

விதை : சில இடங்களில் சாப்பிட பயன்படுத்துகின்றனர்.

மரம் : அடிக்கடி வெட்டப்பட்டு பெரிய மரமாக வளருவதில்லை. எனினும் இது கருமை நிறத்துடன் கடினமாக இருக்கும். சுமார் ஒரு கன மீட்டர் மரத்தின் எடை 640 முதல் 900 கிலோகிராம் வரை உள்ளது. சாதாரண உபயோகங்களுக்குப் பயனாகின்றது.

சித்த மருத்துவப் பயன்கள்

கோந்து : இம்மரத்தில் வடியும் பிசின் ஒரு சில மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.

தழை : தழையைக் கஷாயமாக்கி மலேரியா காய்ச்சல் சமயத்தில் வரும் தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

பட்டை : இது துவர்ப்பாக இருக்கும். சீதபேதிக்கு உபயோகப்படுகிறது. வீக்கங்கள் குறைய பட்டையை அரைத்தும் இடலாம். பித்தநீர் சுரக்கச் செய்யும் பண்பும் உள்ளது.

பிற செய்திகள் : 500 மில்லி அளவிற்கு மேல் மழையுள்ள இடங்களில் வளரும். எல்லா வகையான மண் வயல்களுக்கும் ஏற்றது. வறட்சியைத் தாங்கும் தன்மையும் கொண்டது. இதனைக் கிராமங்களில் பயிரிடுவது அவசியம். மேலும், புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்களில் நட்டு வளர்க்கலாம். நகரங்களில் வீடுகளின் எதிரில் வளர்த்தால் இரைச்சல், தூசு, மாசு குறையும்.

இதில் 37 பேரினங்கள் உள்ளதாகவும், 10 பேரினங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இதில் ‘ஆத்தி’ எனும் பேரில் மட்டும் 3 சிறுமரங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை மூன்றும் ஒரே மாதிரியானவை. கபிலர், கோவிலுர்கிழார் கூறும் ஆத்தி “பஹுனிய பர்பூரியா” எனவும், இதனை மந்தாரை என்றும் கூறுவர். ஞானசம்பந்த பெருமாள் கொக்கு மந்தாரை என்பார். இதனை மந்தாரம், திருவாத்தி, திருவாட்சி எனவும் அழைப்பர். ‘பஹுனியா டொமேன்டோசா’ எனப்படுவது காட்டாத்தி எனவும் ‘ஹோலி மெளன்டன் எபனி’ என ஆங்கிலத்தில் குறிப்பர்.

இன்னொரு அத்திமரம் கருஞ்சிவப்பு நிறமானது. இதனை “பஹுனியா ரசிமோசா” என்பர். இது திருக்கோயில்களில் வளர்க்கப்படுகிறது. இதற்கு “பர்பிள் பஹுனியா” என்ற பெயரும் உண்டு. இது இந்தியாவில் பஞ்சாப் முதல் இலங்கை வரையிலே வளர்கிறது. சீனா, மலேசியா நாடுகளிலும் காணப்படுகிறது.

சங்க இலக்கியம்

“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர் வரினும்” (புறநானூறு பாடல்..)

மூவேந்தர்களும் தத்தம் குடிமைப்பூவை உரிமை மலராக மதித்தனர், போற்றினர், குடிப் பெருமை கொண்டனர். ஒரு முறை இருபெருஞ் சோழ மன்னர்களும் தமக்குரிய ஆத்தி மலரை சூடிக்கொண்டு போருக்கு எழுந்துள்ளனர். சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டுள்ளான். சோழன் நெடுங்கிள்ளி அடைபட்டிருந்தான். இவ்விருவரையும் சமாதானப்படுத்த புலவர் கோமான் கோவூர்கிழார் உறையூர் முற்றிருந்த நலங்கிள்ளியை நோக்கிக் கூறியதை இங்கே காணலாம்.

“சோழவேந்தே! நின்னோடு பொருபவன் கண்ணியில பனையினது வெளிய தோடில்லை ஆதலின் அவன் சேரனும் அல்லன், கரிய கோட்டினை உடைய வேம்பின் தாரணியாமையின் அவன் பாண்டியனும் அல்ல… உனது கண்ணியும் ஆத்தி பூவால் மாலை அணிந்து வந்துள்ளான். இருவரும் வெல்லுதல் என்பதும் இயலாது. இதில் ஒருவர் தோற்றாலும் ஆத்தி தோற்பது போலத்தானே, போரிடுதல் வேண்டாமே” எனக் கூறி போரினை நிறுத்தியுள்ளார் என்பதும் இலக்கியச் செய்திகளாகும்.

காலப்போக்கில் ‘ஆர்’ ஆட்சி அருகி ‘ஆத்தி’ ஆட்சி பெருகுகிறது. உலக வழக்கில் இரண்டும் உலவின. இது காட்டாத்தி, திருவாத்தி எனவும் சேக்கிழார் குறிப்பார். திருச்செங்காட்டாங் குடித்திருக்கோவிலன் திருமரம் காட்டாத்தி ஆகும். அவ்வை பாடிய ஆத்திசூடி, புறநானூறு, அகநானூறு, நற்றினை, குறுந்தொகை ஆகியவற்றிலும் பல இடங்களில் சிறப்பு பெற்றுள்ளது. ஆத்தி மரக்காடு நிறைந்திருந்தமையின் ஆர்க்காடு மாவட்டங்கள் தோன்றலாயின். ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு முற்காலத்தில் சோழர் குலக் குறுநில மன்னர்கள் ஆண்டனர்.

ஆர்க்காட்டில் வாழ்ந்த சோழர் குல மன்னன் அழிசி, இவனது மகன் பெயர் சேந்தன், இவருடைய காலத்திலும் ஆர்க்காடு வளம் பெற்று எழிலோடு விளங்கியது. மேலும் ஆர் என்னும் பெயரால் பெற்ற மற்றோர் ஊர் - ஆர் + ஊர் = ஆரூர். இவ்வூர் தெய்வத் தொடர்பினால் திருவாரூர் ஆயிற்று. இதனை மனுச்சோழன் காலத்தில் சோழர் தலைநகர் என்பர்.

குறிஞ்சிப்பாட்டில் ‘அடும்பர் ஆத்தி நெடுங் கொடி அவரை’ என்ற அடியில் இடம்பெற்ற ஆத்தி என்பது ஒரு சிறுமரம். இதன் மலர் கருச்சிவப்பு நிறமாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயராக ஆத்தி எனவும், வேறு பெயராக ஆர் எனவும், பிற்கால இலக்கியப் பெயராக காட்டாத்தி, திருவாத்தி, ஆத்தி எனவும், உலக வழக்குப் பெயராக ஆத்தி, மந்தாரை, காட்டாத்தி எனவும் தாவரப் பெயராக ‘பஹுனியா ரசிமோசா’ எனவும் குறிக்கப்படுகிறது.

முடி மன்னர் குடிகளில் முன்தோன்றி மூத்த குடியில் முதற்குடி சோழர் பெருங்குடி - சோழ மன்னர் தம் குடிப்பூ ‘ஆத்தி’ - இதனைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணலாம். பிற சங்க இலக்கியங்களில் அதிலும் புறநானூற்றில் ஆத்தி மலர் ‘ஆர்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதில் மூவேந்தர்களின் குடிமலர்களும் கூறப்படுகின்றன.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருச்செங்காட்டாங்குடி ஆத்தி வனநாதர் கோயில் தலவிருட்சமாக ஆத்தி மரம் வணங்கப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என 3 சிறப்புகளை ஒன்றாய்ப் பெற்ற தலம், விநாயகர் கஜமுக அரக்கனைக் கொன்ற பாவம் தீர ஈசனை வழிபட்ட தலம். சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்து படையலிட்ட சிறுத்தொண்ட நாயனரின் பக்தி சிறப்பை உணர்த்திய தலம்.

குரு, லிங்க, சங்கமம் என்ற மூன்றாலும் பெரும் புகழ் படைத்த தலம் திருச்செங்காட்டாங்குடி. இத்தலம் நாகை மாவட்டம் நன்னிலம், நாகை சாலையில் உள்ள திருமருகல் நகரின் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் போன்ற நகரங்களில் இருந்தும் நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது.

இறைவன் உத்தரா பதியார் - கணபதிசுரர், மந்திரபுரீசர், சக்திபுரீசர், பிரம்ம புரீசர், இந்திரபுரீசர், ஆத்தி வனநாதர் பாஸ்காபுரீசர், சமுத்திர புரீசர் என வணங்கப்படுகிறார். இறைவி திருகு சூழலுமை நாயகி, தீர்த்தம் சத்ய புஷகரணி, சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என 9 தீர்த்தங்கள் உள்ளன. இக் கோவிலின் தலவிருட்சமாக ஆத்தி வணங்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply