Kachchativu: Karunanidhi plays drama, jaya blames
கச்சத்தீவு: கருணாநிதியின் கபட நாடகம்: ஜெயலலிதா
கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி கபடநாடகம் ஆடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
‘1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தரப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அப்போது பேரவையில் கருணாநிதி ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை.
அப்போது முதல்வராக இருந்த அவர், இதுகுறித்து பெரிய அளவில் போராட்டம் ஏதும் நடத்தினாரா?
மேற்கு வங்கத்தில் பெருபாரி பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்றபோது மேற்கு வங்க அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த முறையை பின்பற்றியாவது உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்குத் தொடர்ந்தாரா?
‘இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பகுதியை வேறு நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்’ என்று 1960-ல் உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்தது.
அதனால் இப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக பெருபாரி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கச்சத்தீவைத் தரக் கூடாது என மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தவில்லை.
கடந்த 18-ம் தேதி பேரவையில் பேசிய முதல்வர், கச்சத் தீவு பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பேராசையால் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சில சமயம் தெரியாமல் எல்லையைத் தாண்டுவது இயற்கை. இதற்காக அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், அவர்கள் பிடித்த மீன்களைக் கைப்பற்றியும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், படகுகளைப் பறிமுதல் செய்தும் துன்புறுத்துகின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையில் மீனவர்கள் பேராசை கொண்டவர்கள் என்று கூறிய முதல்வர் தான் கூறியதை வாபஸ் பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
“”கச்சத் தீவை மீட்க தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், அது விரைவில் நடக்கக் கூடியதாகத் தெரியவில்லை” என்று பேரவையில் நான் பேசியதை முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கச்சத் தீவை மீட்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் அப்போது சுட்டிக்காட்டினேன்.
கச்சத் தீவு பிரச்னை மற்றொரு நாட்டுடனான பிரச்னை. அதை மீட்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. மாநில முதல்வருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால், அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான், கச்சத் தீவை மீட்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
கடந்த 3 ஆண்டுகளாக முதல்வராக உள்ள கருணாநிதி, மத்திய அரசையும் கையில் வைத்துக் கொண்டு, கச்சத் தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்?
இலங்கைத் தமிழர் பிரச்னை போல் கச்சத் தீவு பிரச்னையிலும் ‘கடிதம் எழுதுகிறேன்’, ‘தந்தி அடிக்கிறேன்’ என்று மீண்டும் கபட நாடகங்களை முதல்வர் அரங்கேற்றக் கூடாது.
தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் பெறுவதற்கு நேரில் தில்லி சென்று உணர்வுகளை வெளிப்படுத்தியதைப் போல, கச்சத் தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை கருணாநிதி உடனே எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.