» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 12 Jun 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம்
அலரிச் செடி ( L)
அலரி NERIUM ODORATUM, SOLAND, APOCYANACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்

நின்னடியே வழிபடுவான்
திமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல்
என்றடற்கூற் றுரைத்த
பொன்னடியே பரவி நாளும்
பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.

இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் மிகவும் புகழ்பெற்றது. தமிழகம், ஆந்திர மக்கள் அதிக அளவில் வணங்கும் இந்த ஆலயத்திற்கு இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்து மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் காணிக்கைகளைச் செலுத்துகின்றார்கள். பணமாகவும், பொருளாகவும் செலுத்தப்படும், இந்த காணிக்கை மூலம் உலகத்திலேயே அதிக வசூலாகும் கோவில் இது என்றும் கூறப்படுகிறது.

வெங்கடாஜலபதி பெருமானுக்கு அலரிப் பூக்களைக் கொண்டு பூஜை செய்யப்படுகின்றது. புரட்டாசி மாதத்தில் விசேஷமாக இந்து சமுதாய மக்கள் விரதம் இருந்து வெங்கடாஜலபதிக்கு அலரிப் பூக்களைக் கொண்டு விசேஷ வழிபாடு நடத்துவதும் உண்டு. அலரிப்பூக்கள் பொதுவாக சிவன், விஷ்ணு ஆலயங்களின் தலவிருட்ச மரமாக அமைந்துள்ளது.

இந்தச் செடி புகை மண்டலத்தைச் சுத்தம் செய்கிறது. தொழிற்சாலைகளால் வெளியேற்ற்படும் கழிவுப்பொருட்களால் உண்டாகும் மாசு, நச்சுத் தன்மையை உறிஞ்சிக் கொண்டு சுத்தம் செய்கிறது. எனவே தொழிற்சாலைகளைச் சுற்றி அலரிச்செடிகளை வளர்ப்பது பல வகைகளில் நன்மை தரும். அலரிச் செடியைப் பற்றி யுனானி மருத்துவ நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அலரியில் மூன்று வகை உண்டு.

இதனை கணீர், குல்ஜங்கி, பாரசீகத்தில் கர்ஸெஜ்ரா, அரபியில் தப்லி மற்றும் ரசமுல்மார் என்பார்கள். சுமார் 8,9 அடி உயரமான இந்தச் செடியில் வருடம் முழுவதும் பூக்கள் இருக்கின்றன. இந்த செடியின் ஒவ்வொரு பாகமும் விஷத்தன்மை கொண்டவை. கிராம மக்கள் தற்கொலை செய்துகொள்ள இதன் பூக்களையும், இலைகளையும் அரைத்து சாப்பிடுவார்கள்.

பொதுவாக ஆற்றங்கரை கால்வாய்களிலும், விவசாய நிலங்களின் தண்ணீர் கால்வாய்களிலும் காணப்படுகிறது. வெள்ளை நிற பூக்கள் கொண்ட அலரி, சிவப்பு நிற பூக்கள் கொண்ட அலரி, மஞ்சள் நிற பூக்கள் கொண்ட அலரி என அலரியில் 3 வகைகள் உண்டு. இந்த 3 வகையான செடிகளிலும் மருத்துவத்தன்மைகள் உள்ளன. குறிப்பாக சிவப்பு நிற பூக்களைத்தான் சிவபெருமானுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். இதில் அதிக அளவில் மருத்துவ குணங்களும் உள்ளன. இனி ஒவ்வொரு நிற அலரிப்பூக்கள் கொண்ட செடி வகையின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

குறிப்பு : சாதாரண மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் அலரி பூ இலைகளைத் தானாகவே வயிற்றுக்கு சாப்பிடும் வகையில் மருந்தாக பயன்படுத்தக் கூடாது. மேல் பூச்சு மருத்துவர்களின் மேற்பார்வையில் பதப்படுத்தி மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

சிவப்பு நிற அலரிப்பூக்கள்
கண்களைத் தாக்கும் ‘மெட்ராஸ் ஐ’, கண் அழற்சி, வீக்கம், புண் முதலியவை குணம் பெற, இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கழுவச் செய்வார்கள். வேரை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து சொரியாசிஸ், குஷ்ட நோய் நீங்கிட பூசுவார்கள். சில ஆறாத புண்களில் கிருமிக் புழு ஏற்பட்டு அழுகிவிடும். இலைகளை அரைத்து எண்ணெயில் கலந்து கட்டு கட்டினால் அந்தக் கிருமிகள் செத்துவிடும். புண் விரைவில் குணம்பெறும். இதனை, அன்னியருடன் தொடர்பு கொள்வதால் உண்டாகும் வெட்டைப் புண்ணைக் கழுவுவதற்கும் லோஷனாகப் பயன்படுத்துவார்கள்.

அலரிவேரை பச்சைத் தண்ணீரில் அரைத்து மூலக் கட்டிகளின் மீது பூசி, அதன்பின் மூலக்கட்டிகளின் மீது படும்படி புகை பிடித்தால் மூலக்கட்டிகள் சுருங்கி விடுகின்றன. சிலருக்கு ரத்தம் கெட்டு விடுவதால் தோல் கரடு முரடாக மாட்டுத் தோல்போல் காணப்படும். இதற்கு அலரிச்செடி பட்டையை அரைத்து தினசரி தோல் மீது பூசுவதால் தோல் மென்மையாகிவிடும். இலைகளைக் கொதிக்க வைத்து அரைத்து எண்ணெயில் கலந்து மூட்டு வலியின் மீது பூசினால் வலி குறைகிறது.

ஞாயிற்றுக்கிழமை பகலில் சிவப்பு நிற பூக்கள் கொண்ட செடியின் இலைகள், பூக்கள், காம்புகள் மூன்றையும் சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் கலந்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்தச் சாற்றில் கனமான துணியை 3 முறை நனைத்து உலர வைத்துக் கொள்ளவும். இந்தத் துணியைக் கிழித்து திரியாகத் திரித்து விளக்கெண்ணெயில் நனைத்து அகல் விளக்கு வெளிச்சத்தில் எத்தனை முறை உடல் உறவு கொண்டாலும் வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியேறாது என யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற அலரிப்பூக்கள்

இது மிகவும் விஷம் கொண்ட செடி என்பதால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தச் செடியின் பட்டை மிகவும் கசப்பாக இருக்கும். பேதியை உண்டாக்கும், மூளைக்காய்ச்சல், ஜுரம், உடல் வலியைப் போக்கும். இதன் விதைகளில் எடுக்கப்படும் எண்ணெய் வாந்தி, பேதியை உண்டாக்கும்.

வெள்ளை நிற அலரிப்பூக்கள்
இதன் அனைத்துப் பாகங்களும் விஷம் கொண்டவை. எனவே மேல் பூச்சுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இலைகளை உலரவைத்து, அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை முகர்ந்தால் தும்மல் வரும். அப்போது, மண்டையில் அடைத்துக் கொண்டிருக்கும் மண்டைச் சளி அசுத்தம் எல்லாம் வெளியேறி விடும்.

இதன் குச்சியைப் பல்தேய்க்கும் பிரஷ்ஷாகப் பயன்படுத்துவதால், சில நாட்களில் ஆடுகின்ற பற்களும் கெட்டியாகிவிடும், புழுக்களும் இறந்துவிடும்.

இச்செடியில் விளையும் காய்களுக்குள் விதைகள் இருக்கும். இதை அரைத்து, கேழ்வரகு அளவுக்கு மருத்துவர்கள் ஆண்மை இழந்தவர்களுக்குத் தருவார்கள். அதனால் ஆண்மைக்கு நன்கு வலிமை கிடைக்கின்றது. இலைகளை அரைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டி கரைகிறது. அழுகிய புண், தோல் நோய்கள் குணம் பெறுகின்றன.

முகத்தில் ஏற்படும் வங்கு இந்த பூக்களைப் பூசுவதால் மறைந்துவிடுகிறது. இதன் இலைகளைக் கஷாயம் வைத்து மண்டையைக் கழுவச்செய்வதால் வழுக்கை நீங்கி விடுகிறது. அரிப்பும் குறைகிறது. கால்நடைகளுக்கும், மிருகங்களுக்கும் உண்டாகும் அரிப்பும் இதனால் குணமாகி விடுகின்றது.

பேதிக்கு மருந்து கொடுத்த பின், இந்த இலைகளின் சாற்றை வெண்புள்ளிகள் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கின்றது. இந்தச் செடியின் இலைகளைக் கஷாயமாக்கி செல், கரையான் ஏற்படும் இடத்தில் தெளித்தால் அவைகள் செத்து விடுகின்றன. அலரிப்பூக்கள் அழகாக இருக்கும். மலர்களில் மங்களகரமாக இருக்கும். செடிகளுக்குச் சிலர் பூஜை செய்வார்கள்.

வேதநூல்களில் மூன்று விதமான அலரிப் பூக்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. தோட்டங்களிலும், கோவில்களிலும் வெள்ளைப் பூக்களைக் கொண்ட அலரிச்செடிகளை வைப்பார்கள். தண்ணீர் கால்வாய்களிலும், ஏரிக்கரை ஓரங்களிலும், ஆற்றங்கரையோரங்களிலும் சிவப்பு நிறப்பூக்களைக் கொண்ட அலரி தானாகவே விளையும். காடுகளில் மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட அலரி காணப்படும்.

இலையின் மேல்பாகம் சுத்தமாகவும் கீழ்பாகம், கரடு முரடாகவும் இருக்கும். இலைகளில் மெல்லிய வெள்ளை நிற நரம்புகள் காணப்படும். பூக்கள் உதிர்ந்த பிறகு காய்கள் உருவாகும். 6 முதல் 9 அங்குலம் வரை நீளமான காய்களில் கருப்பு நிற விதைகள் இருக்கும். விதைகளின் மீது மெல்லிய பஞ்சு போன்ற நார் இருக்கும். அலரிச் செடியின் அனைத்துப் பாகங்களும் நாட்டு மருந்துக் கடைகளில் உலர வைத்து விற்கப்படுகிறது. அதையும் வாங்கி பயன்படுத்தலாம்.

அலரிச் செடி ஆறாத புண்களையும் குணமாக்கும் மருத்துவத்தன்மை கொண்டதாகும். அலரி இலைகளை அரைத்து அப்படியே அழுகிப் போன புண்களின் மீது கட்டிவிடலாம். உலர்ந்த இலையைப் பொடியாக்கி குழிவிழுந்த புண்களின் மீது தூவலாம்.

ஆண் குறியில் புண் நமைச்சல், மருக்கள், கொப்புளம், அரிப்பு, மோதிர புண், வெடிப்பு, தடிப்பு, நரம்பு வலி ஆகியவை குணமாக்க அலரி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி லோஷனாகத் தடவலாம். இப்படி தினசரி 3 வேளை கழுவிவிட்டு உலர்ந்த அலரி இலைகளின் பவுடரைப் போட்டு கட்டு கட்டலாம்.

உடலுறவு வியாதியால் ஏற்படும் அரையாப்பு கட்டியை ஆபரேஷன் இன்றி கரைக்க இலைகளை அரைத்து பசையாக்கி பற்று போடலாம். காயங்கள் மீதும் இதை கட்டுப்போடலாம்.

ஆண்மை சக்தியை அதிகரிக்க அலரிச்செடி மாமருந்தாக பயன்படுகிறது. யுனானி மருத்துவத்தில் ஆண் உறுப்புக்கு சக்தி தரும் நூற்றக்கணக்கான மசாஜ் எண்ணெயில் அலரி வேரை கலக்கின்றார்கள்.

மலைவாழ் மக்களிலும் சில கிராமங்களிலும் அலரிச்செடியை, பூஜை செய்துவிட்டுதான் முதல் இரவைக் கொண்டாடுவார்கள். இந்த 21 ஆம் நூற்றாண்டு காலத்தில் இரவு விளக்கு பயன்படுத்துவதைப் போல் பழங்காலத்தில் அலரித் திரியின் அகல் விளக்குகளை எரிய வைத்து உடலுறவு விளையாட்டுகளை விளையாடுவார்களாம்.

ஒவ்வொரு ஆண்மகனும் மணிக்கணக்கில் உடலுறவு செய்து கொள்ள விரும்புவான். சீக்கிரத்தில் இந்திரியம் வெளியேறக்கூடாது என்று ஆசைப்படுவான். இந்திரியத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வான். ஆயினும் சீக்கிரம் இந்திரியம் வெளியேறிவிடும். குடும்பப் பெண்கள் இந்திரியம் சீக்கிரம் வெளியேறுவதை விரும்பமாட்டார்கள்.

தன் கணவன் மணிக்கணக்கில் அவைளை உற்சாகப்படுத்த வேண்டும் என துடித்துக் கொண்டிருப்பாள். ஆனால், விபச்சாரிகள் அல்லது கள்ளக்காதலிகள் சீக்கிரத்தில் முடித்துக்கொள்ள விரும்புவார்கள்.

வெள்ளைப் பூக்களைக் கொண்ட அலரிச் செடியின் வேரைப் பசும் பாலில் கொதிக்க வைத்து, வேர் முழுவதும் வெந்துபோன பின் அதைப் பிழிந்து சக்கையை வெளியே போட்டுவிட வேண்டும். அந்தப் பாலைத் தயிராக்கி வெண்ணெய் எடுத்து, வெண்ணெயிலிருந்து நெய் எடுத்து, அந்த நெய்யைக் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு சொட்டுகள் இந்த நெய்யை ஆண் உறுப்பின் மீது லேசாக பூசி மசாஜ் செய்தால் விரைப்பில்லாமல் இருக்கும் ஆண் உறுப்பில் விரைப்பு ஏற்படும். இழந்த ஆண்மையை மீண்டும் பெறும். ஆண்மைச் சக்தி அதிகரிக்கும்.

இளமையில் சுய இன்பத்தாலும், போதை மருந்து, கஞ்சா போன்றவை பயன்படுத்துவதாலும் விபச்சாரிகளிடம் வெட்டை நோய் வாங்கியதால் பாதிக்கப்பட்ட மர்ம உறுப்பின் நரம்புகளை சீராக்கவும், சுருங்கிபோன ஆண்குறியைச் சம நிலையில் கொண்டு வரவும், அலரி நெய்யைப் பூசலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் ஆண்மைக் கோளாறுகளுக்கு அலரிப் பூக்கள் நல்ல மருந்தாகும்.

ரிங் வார்ம்ஸ், பங்கல் என்னும் படை அக்குள், தொடை மற்றும் இடுப்பைச் சுற்றி வரும். அதைக் குணமாக்க அலரி இலைகளைத் திராட்சை காடியில் (வினிகர்) அரைத்து பூசினால் 2 நாட்களுக்குள் குணமாகும்.

அலரிப் பூக்கள் அல்லது இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சம அளவில் நல்லெண்ணெயைத் கலந்து கொதிக்க வைத்து, நீர் முழுவதும் சுண்டிய பிறகு எண்ணெயைப் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நாள்பட்ட உடல் வலிகளுக்கும் இதை மசாஜ் எண்ணையாகப் பயன்படுத்தலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
திருநெடுங்களம், திருக்கரவீரம், திருக்கள்ளில் ஆகிய திருக்கோயில்களின் தலவிருட்சமாக அலரி வணங்கப்படுகிறது.

திருக்கரவீரம் (PINCODE - 610 104) என்னும் ஊர் திருவாரூர் To குடந்தை சாலையில் 10கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் கரையபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கரவீநாதர், பிரத்தியட்ச மின்னம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் அலரிச் செடியாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் அலரிச் செடியையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

சங்க இலக்கியம்
சங்க இலக்கியத்தில் ‘கணவிரம்’ எனப் பயிலப்படும் புதர்ச்செடி ‘செவ்வலரி’ ஆகும். இதில் வெள்ளலரியும் உண்டு. இச்செடி கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதனை யாரும் சூடுவதில்லை. இது சிவனுக்குரிய மலர் என்பர்.

அலரும் மலருக்குக் காரணப் பொதுப்பெயராக “அலரி” என்ற ஒரு பெயரும் உண்டு. அலரிப்பூ அடுக்காகவும், தொகுப்பாகவும் அலர்வது. நக்கீரர் இதனைக் ‘கணவீரம்’ என்று கூறுவர்.

“பெருந்தண கணவீரே நறுந்தண் மாலை துணையற அறுத்துவத் தூங்க நாற்றி” என திருமுருகாற்றுப் படையிலும், “சினைவளர் வேங்கை கணவிரி காந்தர்” என பரிபாடலிலும் காணலாம்.

அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலும், பரிமேலழகரும், சாத்தனாரும், இளஞ்சேரனாரும், தாயங்கண்ணாரும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இதன் தாவரக் குடும்பத்தில் 155 பேரினங்களும், ஏறக்குறைய 1000 சிற்றினங்களும் உலகின் வெப்பமான பகுதிகளில் வளர்கின்றன. இக்குடும்பத்தில் 39 பேரினங்கள் இந்தியாவில் உள்ளன என்பது கூடுதலான தகவலாகும்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply