Tuesday, 9 Jun 2009
குளிர் 100 டிகிரி -திரை விமர்சனம்

நடிப்பு: சஞ்சீவ், ரியா, கார்த்திக், ரோஹித், அபிஷேக், சையது, சுஜாதா
ஒளிப்பதிவு: எல்.கே. விஜய்
இயக்கம்: அனிதா உதீப்
இசை: போ போ சஷி
கல்லூரியை தாண்டி பள்ளிக்குள் நுழைந்துவிட்ட ராகிங் கொடுமையை உரித்துக்காட்ட வந்திருக்கிறது குளிர் 100 டிகிரி.
ரவுடிக் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் சுஜாதா. தன் மகன் சஞ்சீவ்வும் அப்பனைப் போலவே ரவுடியாகக் கூடாது என்பதற்காக ஊட்டி கான்வென்ட் ஒன்றில் சேர்க்கிறார், அங்கும் ரவுடித்தனம் சுற்றிவருவது தெரியாமல்.
பள்ளிக்கு புதிதாக வரும் சஞ்சீவை மாணவர்கள் ரோஹித், அபிஷேக், சைய்யது மூவரும் ராகிங் செய்கின்றனர். அதையெல்லாம் சமாளித்து விடுகிறார் சஞ்சீவ். பள்ளியில் மாணவர்கள் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதில் சஞ்சீவை நிற்கவைத்து வெற்றிபெற வைக்கிறார் கார்த்திக் என்ற மாணவர். அவர் மீது கோபப்படும் ரோஹித் கும்பல், கார்த்திக்கை கொல்கிறது. தன் நண்பனைக் கொன்ற மூவரையும் சஞ்சீவ் பழி வாங்குகிறார்.
ஆசிரியரைக்கூட துணியை போர்த்தி மூடி அடிக்கும் சஞ்சீவ் வில்லனா கதாநாயகனா புரியவில்லை. ஆனால் சஞ்சீவ் முகத்தில் வசீகரத்துடன் நடிப்பும் மின்னுகிறது. ரியா செய்யும் சுட்டித்தனத்தால் படத்தில் காமெடி இல்லாத குறை தீர்ந்து விடுகிறது.
மாணவர் தேர்தலில் சஞ்சீவை வெற்றிபெற வைத்ததற்காக கார்த்திக்கை கொல்வது திக் என்றால் அதற்கு பழிக்கு பழியாக அந்த மூன்று மாணவர்களையும் சஞ்சீவ் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டுவது திக் திக் தான். ஆனால் 4 மாணவர்கள் இறந்ததை ரொம்ப சாதாரணமாக விபத்து என்று காவல்துறை வழக்கை முடிப்பதைத்தான் நம்ப முடியவில்லை.
எல்.கே. விஜய்யின் ஒளிப்பதிவில் ஊட்டி இன்னும் அழகாகத் தெரிகிறது. இசையமைப்பாளர் போ போ சஷியின் இசையில் சில பாடல்கள் தாலாட்டுகின்றன. சில ஆட்டம்போட வைக்கின்றன.
பெண் இயக்குநர் அனிதா உதீப் அறிமுகப் படத்தை நடுங்க நடுங்க கொடுத்தாலும், நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார்.
































