» Stalin has no talent, Ramadoss critisises .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Saturday, 6 Jun 2009

Stalin has no talent, Ramadoss critisises

திறமையற்ற ஸ்டாலின்: ராமதாஸ் தாக்கு

ருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்தும் தமிழ்நாட்டை 14 ஆவது இடத்திற்குத்தான் கொண்டுவர முடிந்தது. எந்த திறமையும் இல்லாத துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று ராமதாஸ் கேட்டுள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட்டு தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க பெற்ற வெற்றியானது விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று பல்வேறு பத்திரிகைகளும் கருத்து தெரிவித்துள்ளன. இந்த தேர்தலே போலியான தேர்தல் என்று பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றின் ஆசிரியரே கட்டுரை எழுதும் அளவிற்கு மிக மோசமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைவிட தலைகுனிவு என்னவென்றால், தேர்தல் மூலம் தமிழக மக்கள் ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பதாக இலங்கை அதிபர் ராஜப‌க்சே ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது தான்.

இலங்கையில் நடந்த இனஅழிப்பு போருக்கு ஆதரவாக தேர்தலில் மக்கள் தீர்ப்பு அமைந்ததாக ராஜப‌க்சே தெரிவித்துள்ளார். இதனால் தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி உலக தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக இந்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், போரின் கடைசி நாளில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. இதற்கு பின்னர் வெளியான தேர்தல் முடிவு தங்களுக்கு ஆதரவாக அமைந்திருப்பதாக ராஜப‌க்சே கூறுவது எத்தனை பெரிய தலைகுனிவு நமக்கு.

முதலமைச்சர் கருணாநிதி இப்போது மீண்டும் மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். தி.மு.க எப்போதெல்லாம் பலவீனம் அடைகிறதோ, அப்போதெல்லாம் மா‌நில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு பிரச்சனைகளை கருணாநிதி கையில் எடுத்துக் கொள்வார். மத்திய ஆட்சியில் முன்பு தாம் பெற்றதைபோல, நினைத்த துறைகளை பெற முடியாததாலும், தாம் விரும்பியவர்களுக்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர முடியாததாலும், 2004ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது தி.மு.க பலவீனமாகி விட்டதே என்ற பயத்தில் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி முழக்கத்தை கிளப்பி இருக்கிறார்.

2004ஆம் ஆண்டு நாங்கள் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற போது, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் கருணாநிதி மாநில சுயாட்சி முழக்கத்தை எழுப்பியுள்ளார். இவரது மனசாட்சி என்று கூறப்பட்ட மறைந்த முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி புத்தகத்தை தலையணைக்கு கீழே வைத்து படுத்துக் கொண்டாலே அது கிடைத்துவிடும் போலும். அந்த புத்தகத்தை வெளியிட்டதை தவிர, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இதுவரை மாநில சுயாட்சிக்காக எதையும் செய்யவில்லை.

இலங்கை போரின் இறுதியில் ஒரே நாளில் 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து கருணாநிதி மவுனம் சாதித்து வருகிறார். இந்திய ஆதரவில் இந்தியாவின் போரைத் தான் நாங்கள் நடத்தினோம் என்றும், போரை நிறுத்த இந்தியா வற்புறுத்தவில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் ஐ.நா.வின் சிறப்பு செயலர் விஜய் நம்பியார் ஆகியோர் அவ்வப்போது இலங்கை சென்று வந்தது போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அல்ல; போரை ஊக்கப்படுத்தி இலங்கை அரசை பாராட்டுவதற்காகவே அவர்கள் சென்று வந்ததாக லண்டனில் இருந்து வெளிவரும் “மை டெலிகிராப்’ பத்திரிகையாளர் ரி‌ச்சர்டு டிக்சன் எழுதியுள்ளார்.

இதே கருத்தை நான், வைகோ, நெடுமாறன் போன்றோர் தெரிவித்து வந்தோம். தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா.வோ, இந்திய அதிகாரிகளோ விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இவற்றில் எல்லாம் கருணாநிதிக்கு அக்கறை இல்லை.

இலங்கை தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசோ, தமிழக அரசோ எதுவும் செய்யாது. இந்த விஷயத்தில் மேலை நாடுகள் தலையிட்டுதான் அங்கு அமைதியான தீர்வை கொண்டு வர முடியும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ப‌ல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதனை கூறினால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை எதிர்க்கட்சிகள் ஆராய்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி எங்களுக்கு உபதேசம் செய்கிறார். ஆனால் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது, இடிஅமீன் ஆட்சியில் இடைத்தேர்தலே தேவையில்லை என்று கூறியவர் தான் கருணாநிதி. முதலமைச்சர் கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கி இருக்கிறார். இது எல்லோரும் எதிர்பார்த்தது தான். அனுபவம் வாய்ந்த 5 முறை முதலமைச்சரான கருணாநிதியே தமிழகத்தை இந்தியாவில் 14வது இடத்திற்கு தான் கொண்டு செல்ல முடிந்தது. ஆனால், எந்த திறமையும் இல்லாத துணை முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை” எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.

Related Posts Title


Leave a Reply