Friday, 5 Jun 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம்
அசோக மரம் (SARACA ASOKA)
பெரியாழ்வார் பாடிய திருமொழி - பாடல் :
வளைத்துவைத் தேனினிப்
போகலொட் டேனுன்ற னிந்திர
ஞாலங்களால்
ஒளித்திரல் நின்திரு வானைகண்
டாய்நீ யொருவர்கும்
மெய்யன்னல்லை
அளித்தெங்கும் நாடு நகரமும்
தம்முடைத் தீவினை
தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்த
முடைத்திரு மாலிருஞ்
சோலை யெந்தாய்!
குறைகளைத் தட்டிக் கேட்கும் அன்பான குடும்பத் தலைவன் இருக்கும் வரை அந்தக் குடும்பத்தில் ஒழுங்கும், கட்டுக்கோப்பும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும். இது குடும்பங்களில் மட்டுமல்ல, மூலிகைகளிலும் தான் என்பதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா?
ஆம்! அசோக மரத்தை நாம் பார்த்து இருக்கிறோம். தோட்டங்கள், சாலை யோரங்கள், பூங்காக்களில் அழகுக்காகத்தான் வளர்த்திருப்பார்கள் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், நம்மிடம் இருக்கும் குறைபாடுகளைக் களைந்தெடுக்கவே இவை நடப்பட்டதோ என்று கருதும் அளவிற்கு இதில் அதிசயத்தக்க குணங்கள் காணப்படுகிறது.
தொன்று தொட்டு பழங்காலம் முதற்கொண்டே மக்களால் அறியப்படுகின்ற இந்த மரத்தைப் பற்றி ராமாயணம், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்களில் எல்லாம் கூறப்பட்டுள்ளது. புத்த பிரான் இம்மரத்தின் அடியில்தான் பிறந்தார் என்றும் நம்பப்டுவதால் புத்தர்கள் இம்மரத்தை மிகவும் போற்றுகின்றனர்.
பெண்களுக்கு வருகின்ற எல்லா விதமான குறைபாடுகளையும் முழுமையாகத் தீர்த்து வைக்கும் குணம் இவற்றுக்கு இருப்பதால் இதனைப் பெண்களின் மரம் என்று கூடச் சொல்வார்கள்.
புத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் இம்மரத்தைப் பெரிதும் போற்றுகிறார்கள். காமதேனுவின் வில்லிலுள்ள ஐந்து கணைகளில் இம்மரத்தின் பூக்களும் ஒன்றாக நம்பப்படுகின்றது. மாயாதேவி சித்தார்த்தரை ஈன்றெடுத்தது இந்த மரத்தின் அடியில்தான். இலங்கையில் ஒரு அசோக மரத்தின் அடியில்தான் சீதாப்பிராட்டியார் சிறைவைக்கப்பட்டிருந்தார். இம்மரம் நன்கு செழித்து வளர பெண்களின் பாதம் இதன்மேல் பட வேண்டும். பெண்கள், தமது வலது காலால் இம்மரத்தை உதைத்தால் நன்கு பூக்கள் பூக்கும் என்றெல்லாம் பல விதமான நம்பிக்கைகள் இம்மரத்தைப்பற்றிக் கூறப்படுகின்றன. இம்மரத்தின் பூக்களை நீரில் போட்டு யார் ஒருவர் தமது குழந்தைகளுக்குக் கொடுக்கிறாரோ, அந்தக் குழந்தை துக்கம், சோகத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விடும் எனும் நம்பிக்கைகள் உண்டு.
விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, இம்மரம் பெண்களுக்கு வரும் எல்லா விதமான நோய் நொடிகளையும் தீர்த்து வைக்கிறது. குழந்தை இல்லாமல், தவிக்கும் பெண்களுக்கு மலட்டுத் தன்மையை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்கிறது. இது தவிர சிறுநீரகப் பிரச்சினைகள் அல்சர் புண்கள், பித்தக் குறைபாடுகளையும் இவை குணப்படுத்துகின்றது. வெட்டை, தீப்புண், மூல நோய்களுக்கு இவை நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.
உண்மைச் சம்பவம்
பிரபலமான அச்சகத் தொழில் அதிபருடைய மனைவிக்கு பலவிதமான கர்ப்பப்பைப் பிரச்னைகள் இருந்தது. அவருக்குப் பல மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
23 வயதான அந்த இளம் பெண்ணுக்கு அளவு கடந்த மாதவிலக்கு பல மாதங்கள் தொடர்ந்து இருந்ததால், ‘ஹிஸ்டீரியா’ எனும் மனநோயும் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல சாப்பிடும் மாததிரைகள்தான் அதிகரித்ததே தவிர எந்த முன்னேற்றமும் அறியப்படவில்லை.
நிலைமையை மிகவும் மோசமாகி இரண்டு கருப்பைகளையும் அகற்றுவதுதான் வழி என்று மருத்துவர்கள் தீர்மானித்தனர். திருமணம் ஆன புதிய தம்பதி, குழந்தை பெற்றெடுக்காத நிலையில் கர்ப்பப்பையை எடுத்து விடுவதற்கு பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நேரத்தில்தான் அவர் என்னிடம் வந்தார்.
அவருக்கு 10 கிராம் அசோகா மரப்பட்டையைக் கஷாயமாகத் தயாரித்து தினசரி இரண்டு வேளைகள் சாப்பிடக் கொடுத்தேன். தொடர்ந்து இரண்டு மாதச் சிகிச்சையில் கர்ப்பப்பைக் கோளாறுகள் அத்தனையும் நலம் பெற்று, இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கின்றார். கிட்டதட்ட இருபத்தினான்கு ஆண்டுகள் கழிந்தப் பிறகும, இன்றுவரை கர்ப்பப்பையில் எந்தப் பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.
நாட்டின் எல்லா பாகங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படும் இந்த அசோக மரம், சாலையோரங்களில், அலுவலகங்கள், தோட்டங்களில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றது.
மருத்துவ குணம்
‘அசோகா’, ‘சாரகா’ என்ற இரு பெயர்களைக் கொண்டிருக்கின்றது. அசோகு என்றால் சோகமே இல்லாதது என்றும் செழிப்புள்ள மரம் என்றும் பொருள்.
இவ்வாறு பல நம்பிக்கைகளுக்குச் சொந்தம் கொண்டாடும் இந்த அசோக மரத்தில் மருத்துவ குணங்கள் பெருமளவில் நிறைந்து காணப்படுகின்றன.
நம் நாட்டில் வங்கத்திலும் மற்றும் தக்காண தீபகற்பப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும் அசோக மரத்தை அதிகளவில் காணலாம. இலங்கை, பர்மா, இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளிலும் நீர்வளம் மிகுந்த இடங்களிலும் இவை நன்றாக வளர்கின்றது.
தோற்றம்: மாமரத்தின் இலைகளைப் போல இலைகளும், மஞ்சள் நிறத்தில் பூக்களும் இவை கொண்டிருக்கின்றது. முதிர்ந்த காய்கள் கருப்பாகவும், சுவையில் கசப்பாகவும் இருக்கும்.
நடுத்தர உயரத்தில் வளர்கின்ற இந்த மரம், அதிகபட்சமாக 28 அடி உயரம் வரையிலும் வளரும். இந்த நிலையில் அடிமரம் 20 செ.மீ. விட்டமுடையதாக இருக்கும். மரத்தின் தலைப் பகுதியில் 6 மீட்டர் சுற்றளவிற்கு அடர்ந்த தழையமைப்பைக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்பகுதி பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.
இதன் இலைகள் கூட்டாக வளரும். ஒரு அடி நீளத்தில் இந்த கூட்டிலைகள் வளரும். அதில் 4 முதல் 6 ஜோடி சிற்றிலைகள் இருக்கும். இந்த இலைகள் ஒவ்வொன்றும் சுமார் அரை அடி நீளத்தில் ஈட்டி போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் துளிர் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். முதிர்ந்த இலைகளோ விறைத்துக் கொண்டிருக்கும். குளிர்காலம் முடியும் காலங்களில் துளிர் இலைகளை அதிகளவில் காணலாம். அப்போது அவை மிக அழகாகக் காட்சி தரும்.
ஜனவரி, மார்ச் மாதங்களின்போது மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும், வானத்தை நோக்கிய நிலையில், பூக்கள் அடர்ந்த செண்டுகளாக, முற்றிய இலைகளிலிருந்து உருவாகும்.
முதலில் மஞ்சள் நிறத்தில் தொடங்கி பின்னர் குங்குமச் சிவப்பு நிறத்தைப் பெற்றுவிடும். இம்மரத்தின் பூக்களில், மகரந்தத் துகள்கள் பூக்களை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இப்பூக்கள் நல்ல நறுமண முடையவை.
இதிலிருந்து வெளிப்படும் காய்கள் புளியின் வடிவில் இருக்கும். முதலில் சிவப்பு, பிறகு பச்சை, முடிவில் கருப்பு என்ற நிலையில் மாறிவிடும். இந்தக் காய்கள் சுமார் முக்கால் இன்ச் நீளமும், இரண்டு இன்ச் அகலமும் கொண்டு நெற்றுக்களாக முதிர்ந்துவிடும். மே, ஜுன் மாதங்களில் இவைகளை அதிகளவில் காணலாம். இதில் 4 முதல் 8 தடித்த விதைகள் காணப்படும். எப்போதும் நிழல் தரும் இந்த மரம் ஒரு அழகுமிக்க மரமாகும்.
மருத்துவப் பண்புகள்: அசோக மரத்தில் மிக அதிகளவிலான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இம்மரத்தின் தண்டுப் பகுதி, இலைகள், பூக்கள் மற்றும் விதைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பட்டையின் குணங்கள்: பொதுவாக அசோக மரத்தின் பட்டை இரத்த பேதி, இரத்தப் போக்கு, தீப்புண்கள், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு இவை மிகவும் பயன்படுகிறது. நரம்புகளை ஊக்கப்படுத்தவும், வலிமை நிவாரணப்படுத்தவும் இவை மிகவும் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயங்களில் இம்மரப்பட்டை மிகச்சிறந்த பலன் அளிக்கின்றது.
5 கிராம் பட்டையுடன் நீரும் சேர்த்து கொதிக்க வைத்து 3 அவுன்ஸ் அளவிற்கு சுண்டியதும், தினமும் 2-3 வேளைகளுக்குக் கொடுத்து வந்தால், இரத்தப்போக்கு நின்றுவிடும். கருப்பை பலவீனம் குணமாகும், வலிமை பெறும்.
அசோக மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் ஆகியவற்றை எடுத்து அரைத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து வடிகட்டி 30 மில்லி அளவில் 3-4 வேளைகளுக்குத் தினமும் சாப்பிட்டு வந்தால், ஒரு வாரத்தில் நாள்பட்ட இரத்தப்போக்கு நின்றுவிடும்.
அசோக மரப்பட்டை, மாதுளம் வேர்ப் பட்டை, மாதுளம் பழ ஓடு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை வேளைகளில் சுடு தண்ணீரில் எடுத்துக் கொள்வதன் மூலம் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பப்பைக் கோளாறுகள், வாயுத் தொல்லைகள் நீங்கும். இதனைத் தொடர்ந்து 3-4 மாதங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மையும் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும் சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
யுனானி மருத்துவம்: ஐந்து கிராம் அசோக மரப் பட்டையைப் பவுடராக்கி தினசரி 3 கிராம் அளவில் தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கும். இதுபோல பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கு, இரத்தசோகை, கருப்பை வளர்ச்சியடையாமை, கருப்பை சிறுத்து சுருங்கி விடுதல், கர்ப்பப்பைக் குழாய் அடைப்புகள், வெள்ளைப் படுதல், கர்ப்பப்பைப் புண், குழந்தை பாக்கியமின்மை போன்ற பல பிரச்னைகளுக்கும் இம்மரப்பட்டை மிகவும் உதவுகின்றது என்று பல யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பூக்கள்: அசோக மரப்பூக்கள் இரத்தப்போக்கு, சீழ் கலந்த இரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. இம்மலர்களை உலர்த்திப் பொடி செய்து சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகக் கொடுக்கலாம்.
இதுபோலவே, இம்மரப் பூக்களை, மாம்பருப்புடன் சம அளவு எடுத்துப் பொடி செய்து கலந்து, மூன்று சிட்டிகை அளவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால் சீதபேதி, இரத்தபேதி குணம் பெறும். மேலும் இப்பூக்களைப் பொடி செய்து ஒரு கிராம் வீதம் தினசரி ஐந்து வேளை சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும் என யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது.
பிற குறிப்புகள்
இம்மரத்தின் மொட்டுகள், விதைகள், தண்டுப்பகுதிகளைக் கொண்டு இரத்தக் கொதிப்பு, இரத்தச் சிதைவு, மாதவிடாய்க் கோளாறுகள், கால் மூட்டுவலி, பின் தொடை நரம்பு வலி, நரம்புக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.
அசோக மரத்தண்டை பாலில் கொதிக்க வைத்து மாதவிடாய்க் கோளாறுகளுக்கும், விதைகள் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பைப் பிரச்னைகளுக்கும் மருந்தாகத் தரலாம். சிறுநீர்ப்பையில் இரத்தப்பெருக்கு ஏற்படுவதை இவை தடுத்து நிறுத்துவதுடன், பெண்களின் மன அழுத்தம், மன உளைச்சலையும் குணப்படுத்துகிறது. தொழுநோய், தீப்புண்கள், சொறி, சிரங்குகளுக்கும் இப்பூக்கள் உதவுகின்றன.
அல்சர் புண்கள், மூலம், பருத்தொல்லைகள், பித்தக் கொதிப்புகளை இம்மரத்தின் தண்டுப் பகுதியும், பூக்களும் நலப்படுத்துகின்றன.
அசோக மர இலைகள் வயிற்றுப் புடைச்சாலை குணப்படுத்துகின்றன. விதைகள் எலும்புகளின் சிதைவுகள், அழற்சிகளுக்கு நலன் தருகின்றன. இரத்தக் குழாய்களில் உண்டாகியுள்ள கட்டிகளைப் போக்கச் செய்கின்றன.
யுனானி மருத்துவத்தில் இதனைக் கொண்டு கீழ்க்கண்ட மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
* மஸ்தூரின் டானிக் இரண்டு டீஸ்பூன் காலை, மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
* சபாரி பாக் - ஒரு டீஸ்பூன் வீதம் தினசரி இரண்டு வேளை சாப்பிடலாம்.
* மாஜுன் மக்வி ரஹம் லேகியத்தை காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம், தினசரி இரண்டு வேளை சாப்பிடலாம். ஹோமியோபதியில் அசோக டானிக் என்ற பெயரில் கிடைக்கின்றது. அவற்றையும் பயன்படுத்தலாம்.
இம்மரத்தண்டில் காட்டக்கால், ஸ்டிரலால்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேற்கண்ட பொருட்கள் அனைத்திலும் மருத்துவப் பண்புகள் நிறைந்து இருப்பது அறியப்பட்டு உள்ளது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்
திருமாலிருஞ்சோலையெனும் திருமால் கோவிலில் அசோக மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியப் பெயராக பிண்டி எனவும், வேறு பெயராக செயலை எனவும், பிற்கால இலக்கிய பெயராக அசோகு எனவும், உலக வழக்குப் பெயராக அசோக மரம் எனவும் அழைக்கப்படுகிறது.. தழைத்திருக்கும் செவ்விய தளிர்களை உடையது. செக்கச்சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது. தற்போது தென்னிந்தியாவில், பெங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்பட்டு வரும் மரமாகும்.
‘அசோகு’ என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கபிலரும் குறிஞ்சிப்பாட்டில் இம்மரத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.
‘பகன்றை பலாசம் புல்பூம் பிண்டி’ என வரும் குறிஞ்சிப் பாட்டடி மூலம் இதனைக் காணலாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்விரு பெயர்களையும் குறிப்பிடுகின்றனர். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரும் குறிப்பிட்டுள்ளார்.
இம்மரத்தின் தளிரை ஆடவரும், மகளிரும் காதில் செருகிக் கொள்வர் எனவும், இதனைக் குரங்குகள் உணவாகக் கொள்ளும் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமங்கையாழ்வார், ஒரு கற்பனை செய்கிறார். அதில் ‘நெருப்பை ஒத்து மலர்ந்த இம்மலர்களைப் பார்த்த வண்டினம் மரம் எரிவதாக எண்ணி அஞ்சும்’ என குறித்துள்ளார். மக்களுக்கன்றி தெய்வத்திற்கும் இம்மலர் உகந்தது என திருமுருகாற்றுப் படையில் முருகப்பெருமான் ‘செயலைத் தண் தளிர் துயல் வரு காதினன்’ என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகளிரது உடல் நிறத்திற்கு இத்தளிர் உவமைப்படுத்தியுள்ளமையை நற்றிணையிலும் காணலாம்.
‘சாய் குழைப்பிண்டித் தவிர் காதில் தையினாள் பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்’ என பரிபாடல் விளக்குகிறது.
சமண சமயத்தில் அருக தேவனை, பூமலி அசோகின் புனை நிழலில் அமர்ந்தவன் என்பர். மேலும், காமதேவன் கொண்ட ஐம்மலர்க்கணைகளில் அசோக மலரும் ஒன்றாகும். காமனால் எய்யப்பட்டால் கவர்ச்சியூட்டும் அசோகு, துயரும் செய்யும் என்றும், மகளிர் உதைத்தால் அசோகு மரம் மலரும் என்றும் கூறுவர்.
தமிழ்நாட்டில் ‘சராக்கா’ என்ற பேரினத்தில் ஒரு சிற்றினமாக ‘இண்டிகா’ எனப்படும் பிண்டி மட்டும் வளர்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது.
இம்மரங்களைக் கொண்ட அசோக வனத்தில்தான் இராவணன் கவர்ந்து சென்ற இராமனது மனைவியாகிய சீதையைச் சிறை வைத்தான் என இராமகாதை கூறுவதையும் காணலாம்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































