Echo of Srilanka Tamils issue: ADMK MLAs quit from assembly

Posted on Tuesday 30 June 2009

இலங்கைத் தமிழர் பிரச்னை: அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்

லங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் கோஷங்களை எழுப்பிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இலங்கைப் பிரச்னை தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பேச அனுமதி கேட்டனர். ‘இலங்கைத் தமிழரைக் காப்பாற்று’ என கோஷமிட்டனர். ‘சபை விதிகளுக்கு முரணாக கோஷங்களை எழுப்பும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற வேண்டும்’ என, முதல்வர் கருணாநிதி, சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

‘சபை விதிகளுக்கு முரணாக கோஷம் போடக் கூடாது. அமருங்கள்’ என, சபாநாயகர் ஆவுடையப்பன் எச்சரித்தப் பின்னரும் தொடர்ந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பவே அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறினர்.

சுதர்சனம் - காங்: என்ன பிரச்னை என்று சொல்லாமல், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் போட்டால் யாரைக் காப்பாற்றுவது? செங்கோட்டையன், பன்னீர் செல்வம் போன்றோரை காப்பாற்றுவதா? இவ்வாறு விதிகளை மீறி செயல்படுவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி தீர்வு காண வேண்டும்.

(மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, மகேந்திரன், சிவபுண்ணியம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர்) கம்யூனிஸ்டுகள் பேசிப்பேசியே வீணாகப் போய்விட்டனர். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது.

மணி - பா.ம.க: முக்கியமான பிரச்னைகள் குறித்த தீர்மானங்கள் சபையில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

(மீண்டும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, சிவபுண்ணியம் ஆகியோர் பேச எழுந்து நின்றனர்)

முதல்வர் கருணாநிதி: மூன்று பேரில் யார் பேசுவது என்று முடிவு செய்யட்டும்.

சபாநாயகர்: நான் தள்ளுபடி செய்த பிரச்னைகளை மீண்டும் எடுத்து இங்கே பேசக்கூடாது. சபை விதியை மீறாதீர்கள்.

சிவபுண்ணியம் - கம்யூ: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம் என்ன பிரச்னை என்று ஒரு நிமிடம் கேட்டு பதிவு செய்துவிட்டு அதை எடுக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்து இருக்கலாம்.

சபாநாயகர்: அவர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு வந்து, விதிகளுக்கு முரணாக கோஷம் போடுகின்றனர். எதற்காக கோஷம் போட்டனர் என்றே தெரியவில்லை.

முதல்வர்: இப்போது உங்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டதா?

பாலபாரதி - மார்க்சிஸ்ட்: சபையில் கருத்து சொல்லவும், வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சிக்கு உரிமை உண்டு. ஒரு கட்சியின் உரிமையை விமர்சிக்க காங்கிரசுக்கு என்ன உரிமை உள்ளது?

அமைச்சர் பொன்முடி: அ.தி.மு.க., ஆட்சியில், சபையில் இருந்து தூக்கிப் போட்ட சம்பவம் கூட நடந்தது. கோஷம் போட்டவர்களை வெளியேற்றுவது மரபு. அதைத் தான் பின்பற்றினர்.

பீட்டர் அல்போன்ஸ்: சபையை விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்ற உரிமை ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் உண்டு. அ.தி.மு.க., ஆட்சியில் எழுந்து நின்றாலே, “நீங்கள் எந்த விதியின் படி எழுந்து நிற்கிறீர்கள்’ என்று கேட்பர். அதற்கு ஒரு முறை, “தலைவிதியால் எழுந்து நிற்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.

நானும், பரிதி இளம்வழுதியும் சில நேரங்களில் வேஷ்டி அணியாமல் பேன்ட் அணிந்து வர வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே ஒத்திகை பார்த்துவிட்டு இங்கு நடந்துகொள்கின்றனர். அதை ஏற்கலாமா? அ.தி.மு.க.,வினர் இன்று அவையில் எழுப்பிய பிரச்னையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாலபாரதி கூறுகிறார். அப்படியென்றால் அவைக்கு வெளியே ஒரு கூட்டம் நடந்துள்ளது தெரிகிறது. (பீட்டர் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்)

அமைச்சர் அன்பழகன்: சபாநாயகர் யாருக்கு அனுமதி கொடுக்கிறாரோ அவர்கள் தான் பேச வேண்டும். பீட்டர் அல்போன்ஸ் பேச்சாளர் என்பதால், பேசிக்கொண்டே வந்துவிட்டார். கோஷம் போடுதல் போன்ற விதிமுறை மீறலை தினந்தோறும் செய்தால் ஒரு கட்சியை, அவையில் இருந்து ஒரு மாதம் வெளியேற்றலாம் என தீர்மானம் கூட நிறைவேற்றலாம்.

மணி கொடுத்த தீர்மானத்தை சபாநாயகர் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்கலாம். சபாநாயகர் அனுமதித்தால் அது குறித்து பேசலாம். (இதைத் தொடர்ந்து பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்) இவ்வாறு விவாதம் நடந்தது.

admin @ 11:57 pm
Filed under: news
Babri Masjid demolition report finally submitted

Posted on Tuesday 30 June 2009

பாபர் மசூதி இடிப்பு: விசாரணை அறிக்கை தாக்கல்

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், 17 ஆண்டுகளுக்குப் பின், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்தது.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையில், கமிஷன் ஒன்றை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார். 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதிக்குள் கமிஷன் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து 48 முறை கமிஷனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக கடந்த மார்ச் மாதம் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளாக லிபரான் கமிஷன் நடத்திய விசாரணையின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார் மற்றும் உ.பி., மாநில முன் னாள் முதல்வர் கல்யாண்சிங், பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி, முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வி.பி.சிங் உட்பட பலரிடம் விசாரணை நடந்தது. அவர்கள் எல்லாம் கமிஷனின் முன்
ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அதுமட்டுமின்றி, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப் பட்டது. மசூதி இடிக்கப்பட்ட போது அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றியும் கேட்டறியப்பட்டது. கடைசியாக 2005ம் ஆண்டில் கடைசி சாட்சியிடம் லிபரான் கமிஷன் விசாரணை நடத்தி முடித்தது. அதன்பின் அறிக்கையை தொகுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

தற்போது, லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கையை நேற்று சமர்ப்பித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் உடனிருந்தார்.

நான்கு தொகுதிகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கமிஷனின் அறிக்கையை உள்துறை அமைச்சகம் பரிசீலித்து, அதன்பின் நடவடிக்கை எடுக்கும்.

அதன் பின் அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் பார்லிமென்டில் வைக்கப்படும். கமிஷனின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“அறிக்கையில் உள்ள விவரங்களை நான் தெரிவிக்க மாட்டேன். பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பித்து விட்டேன். அறிக்கையில் பல விவரங்களை தெரிவித்துள்ளேன். அதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதன்பின், அறிக்கை பற்றி மீடியாக்கள் பாராட்டுத் தெரிவிக்கலாம் அல்லது கண்டனம் தெரிவிக்கலாம்.

சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், பலர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததாலும், கமிஷனின் பதவிக்காலத்தை பல முறை நீட்டிக்க வேண்டியது நேரிட்டது. அறிக்கையை படித்துப் பார்த்து அதனடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதன்பின் நடவடிக்கை அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்யும். இந்த அறிக்கையானது பார்லிமென்டின் உரிமை
தொடர்பானது. அதனால், அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களையோ அல்லது யாருக்காவது தண்டனை தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது குறித்தோ எதுவும் இப்போது தெரிவிக்க முடியாது. இதற்காக நான் வாய் திறக்க மாட்டேன். அறிக்கை வெளியாகும் போது, அதில் உள்ள விவரங்கள் தெரிய வரும்”என்றார்.

admin @ 11:54 pm
Filed under: news
Surya gives 10 % from his income to poors

Posted on Tuesday 30 June 2009

ஏழைகளுக்கு உதவ வருமானத்தில் 10% ஒதுக்கிய சூர்யா!

கிவ் இந்தியா என்ற  அமைப்பு நடத்தும் ‘கொடுத்தலில் மகிழ்ச்சி வாரம்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, தன்னுடைய  அடுத்தப் படம் முதல் கிடைக்கும் சம்பளத்தில் 10 சதவிகிதத்தை ஏழை மக்களுக்கு ஒதுக்கப் போவதாகவும், மாதத்தில் ஒருமுறை தன்னார்வ அமைப்புகளோடு ஒரு நாள் பொழுதை கழிசக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

கிவ் இந்தியா அமைப்பு, இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டும் நிகழ்வுக்கான அறிமுக நிகழ்ச்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடத்தியது.

“கொடுத்தலில் மகிழ்ச்சி வாரம்’ என்ற நிகழ்ச்சி இந்தியா முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனி நபர் ஆகியோர் நிதி திரட்டுவர்.

அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவும் வண்ணம் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தினார்.

ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாதேவன் “செப்டம்பர் 30 தேதி பிரதான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சேர்ந்து உணவுத் திருவிழா நடத்தவுள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும்” என்றார்.

இதன் ஒரு பகுதியாக, கூன்ச் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நடிகை ஸ்ரேயா, கிவ் இந்தியா அமைப்பின் தலைவர் என்.வகுல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

admin @ 11:48 pm
Filed under: news
Increase in NRG wages: MK Stalin promise to take steps

Posted on Monday 29 June 2009

தினக் கூலியை உயர்த்த நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

vice-cm-tamilnadu.jpg

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினக் கூலியை ரூ.100 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கூறியதாவது:

”தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முறைகேடுகள் இன்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.

இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம்தான் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது.

இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுவோருக்கு ஒரு நாள் கூலியாக ரூ.80 அளிக்கப்பட்டு வருகிறது. இதனை உயர்த்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அக்கோரிக்கைகளை பரிசீலித்து, தினக் கூலியை ரூ.100 ஆக உயர்த்துவது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு என்பதை 150 நாள்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் இது குறித்து பேசப்பட்டது.

இந்நிலையில் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகள் மற்றும் திட்டத்தின் குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்பை ஏற்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும் என அரசு கருதுகிறது.

இதற்காக மாநிலம் தழுவிய இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தி 1299 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், குறைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார் ஸ்டாலின்.

admin @ 11:12 pm
Filed under: news
6 Persons killed in 2 diverse accidents

Posted on Monday 29 June 2009

விழுப்புரத்தில் 2 இடங்களில் கோர விபத்து: 6 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெவ்வேறு இடங்களில் நடந்த இரு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதுவை அரசின் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுச்சேரி வாதனூரைச் சேர்ந்த நாகராஜ் (39) பஸ்ஸை ஓட்டிச் சென்றார். பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் எஸ்ஏடி திரையரங்கம் அருகே ஆதிபராசக்திக்கு புதிதாக கோயில் கட்டப்படுகிறது. அக் கோயிலின் வெளிப்புறத்தில் ஓர் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் கோயிலின் அலங்கார வளைவு மீது மோதியது. இதில் பஸ் நொறுங்கியது. அலங்கார வளைவு நொறுங்கி பஸ்ஸின் மேல் விழுந்தது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த குழந்தை மகன் காமராஜ் (45), கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடதாதம்பட்டி முருகன் மகன் கண்ணன், சிவகங்கை மாவட்டம், நாவன்னபுதூரைச் சேர்ந்த முருகன் மனைவி சந்தியா (35), தருமபுரி கொல்லுப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி முத்துவேல் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விழுப்புரம் நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.

இன்னொரு விபத்தில் இருவர் பலி: விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் சென்றது. விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு அருகே எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் அரசு பஸ் டிரைவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சேகர் (48), லாரி டிரைவர் வந்தவாசி சந்திரசேகர் மகன் வேலு (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் பஸ்ஸில் பயணம் செய்த பெரம்பலூர் அரசாங்கம் (19), திருச்சி அருணாச்சலம் (23), அரியலூர் அண்ணாதுரை (32) உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

admin @ 10:45 pm
Filed under: news
MBBS rank list released today

Posted on Monday 29 June 2009

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 14,167 மாணவர்களுக்கு இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் சங்கர் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். 2 மாணவிகள் உள்பட 8 பேர் 200க்கு 200 பெற்றுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த ரேங்க் பட்டியல் ஒட்டப்படுள்ளது.

மேலும் சுகாதாரத் துறையின் www.tnhealth.org இணையத் தளத்திலும் ரேங்க் பட்டியலைக் காணலாம்.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 283 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

இதற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி முதல் நடக்கும்.

admin @ 6:30 am
Filed under: news
Marxist carelessness leads to defeat: Baradhan

Posted on Monday 29 June 2009

bardhan.jpgமார்க்சிஸ்டுளின் அலட்சியமே தோல்விக்கு காரணம்: பரதன்

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் தோல்விக்கு காரணம் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் அலட்சியப் போக்குதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

”மேற்கு வங்கத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு விவசாயச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதோடு நிறுத்தியிருக்காமல் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாதது அரசின் அலட்சியப் போக்கினை காட்டுகிறது. இதனை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றுவிட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நிர்வாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கலக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதும் மிகப்பெரிய குறையாகும்.

அவர்கள் கூட்டணி அரசு என்பதை மறந்துவிட்டு ஒரு கட்சி ஆட்சி போல் நடந்து கொண்டதும் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாகும்” எனக் கூறினார் பரதன்.

admin @ 3:36 am
Filed under: news
Do not talk about ethnic integration: Vaiko advice Karunanidhi

Posted on Monday 29 June 2009

vaiko1.jpgஇன ஒற்றுமை பற்றி கருணாநிதி பேசுவதா?: வைகோ

ஈழத்தில் நடத்திய இன அழிப்புப் போருக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் துணை போய்விட்டு இன ஒற்றுமை பற்றி கருணாநிதி பேசுவது அபத்தமானது என்று வைகோ குற்றம் சாட்டினார்.

விழுப்புரம் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வைகோ பேசியது:

“எல்லோரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் இதுபோல் நடந்திருக்குமா என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கையில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரஸ் அரசுக்கு துணை போய்விட்டு இப்போது இவ்வாறு பேசுவது அபத்தமானது. ஈழத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இப்போது இன ஒற்றுமை பற்றி பேசுகிறார் கருணாநிதி.

ஈழப் பிரச்னை காரணமாக 14 பேர் தீக்குளித்தனர். அவர்களுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்தாரா? ஏன் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளித்தனரே அவர்களுக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றிருக்கிறது. நகரங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கு இவர்கள் வாரி இறைத்த பணத்தால் பயன் ஏற்படவில்லை. கிராமப்புற மக்களுக்கு பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் அவர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு மனப் போராட்டம் ஏற்பட்டு மாறி வாக்களித்துவிட்டனர்.

இதனை வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்ற வேண்டும். நகரங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை கிராமப் புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஈழப்போர் மீண்டும் வெடிக்கும். பிரபாகரன் இறந்துவிடவில்லை; உயிருடன் உள்ளார். ராமாயணத்தில் இந்திரஜித் தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி போர் தொடுத்ததாக கம்பன் கூறுவான். அதற்கு இணையான வீரர் பிரபாகரன்.

தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஈழப்போர் ஓயாது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவினர் நான் போட்டியிட்ட தொகுதியில் நன்றாகத் தேர்தல் பணியாற்றினர். பண பலத்தால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்’ என்றார் வைகோ.

இக் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் ஏ.கே.மணி தலைமை தாங்கினார். மாநில பொருளர் ஆர்.மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

admin @ 2:53 am
Filed under: news
Don’t care insulting persons: Karunanadhi

Posted on Sunday 28 June 2009

karunanadhi-kamal.jpg காயப்படுத்துபவரை விரோதியாக என்ன மாட்டேன்: கருணாநிதி

கருணாநிதி எழுதிய “சுருளிமலை’ என்ற நாவல், “நீயின்றி நானில்லை’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதும் அவரே. உதய்கிரண், மீராஜாஸ்மின், கார்த்திகா, மனோரமா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தை இளவேனில் இயக்குகிறார். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கருணாநிதி பேசியதாவது:

நான் எழுதிய “சுருளிமலை’ என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இளவேனில் முரசொலியில் நான் எழுதிய கடிதங்களைத் தொடர்ந்து படிப்பவர். அவற்றுள் நான் பயன்படுத்திய “நீயின்றி நானில்லை’ என்ற வார்த்தைகளை இந்தப் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்.

“நீயின்றி நானில்லை’ படம், பெண் உரிமை, மகளிர் மேம்பாடு ஆகியவற்றுக்காகப் போராடும் ஓர் இளைஞனைப் பற்றியது. அந்தப் போராட்டத்தில் ஏற்படுகிற சுழற்சிகளை நல்ல கதைக் களத்தில் சொல்வதுதான் கதை.

இங்கு ஏவி.எம்.சரவணன், வி.சி.குகநாதன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் பேசியபோது, சிலர் என்னைக் காயப்படுத்தியதை சுட்டிக்காட்டினர். என்னைக் காயப்படுத்துபவரை விரோதியாக என்ன மாட்டேன்.

இன்றைக்குக் காயப்படுத்தியவர்கள் 10 நாள்கள் கழித்து காயத்துக்கு மருந்து போட வருவார்கள். அப்போது அவர்களுக்கு விருந்து வைத்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்தப் படத்துக்குக் கிடைக்கும் ஊதியத்தையும் வழக்கம்போல நலிந்தவர்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளேன்.

கேளிக்கை வரியை ரத்து செய்ததால் உள்ளாட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் பல நலத்திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என பலரும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். அதனால் மீண்டும் கேளிக்கை வரியை அமல்படுத்த அரசு யோசித்துவருகிறது. இதன்மூலம் ஏற்படும் ரூ.50 கோடி இழப்பை அரசு தாங்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அந்த கோரிக்கை முறையாகப் பரிசீலிக்கப்படும் என்றார்.

கமல்ஹாசன் பேசும்போது நான் எழுதிய பல வசனங்களைப் படித்துதான் இன்றும் பலர் நடிப்புத்துறைக்கு வந்து புகழ்பெறுகிறார்கள் எனக் கூறினார். கமல்ஹாசனை இதே ஸ்டுடியோவில் சின்னஞ்சிறு பிள்ளையாக நடித்ததிலிருந்து நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து இன்று உலக திரைப்படத் துறையில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதுவரை நான் நன்கு அறிவேன்.

“தசாவதாரம்’ படப்பிடிப்பின்போது அவர் ஏற்ற பெண் வேடத்தில் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார் கமல். மாடியில் எழுதிக்கொண்டிருந்த என்னிடம் என் உதவியாளர் “”உங்களைத் தேடி ஒரு அம்மா வந்திருக்கிறார்” என்றார். நானும் வரச்சொல்லி யார் என்று கேட்டேன். அப்போது “என்னைத் தெரியவில்லையா?’ என கமல் கேட்டார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு வந்து “யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு!

பிறகு கமல் கூறிய பிறகுதான் அடையாளம் தெரிந்தது. அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அதன் வாசனை கூட இன்னும் காயவில்லை. அந்த அளவுக்கு கலையின் மீது ஈடுபாடு கொண்ட கமல் போன்றவர்கள் என் எழுத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் மகிழ்ச்சி.

முன்னதாக, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) கட்டிய மருத்துவமனையை கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் கமல்ஹாசன் பேசும்போது…

நான் பேனா பிடித்ததற்குக் காரணம் கருணாநிதியின் எழுத்துகள்தான். அவர் எழுதிய வசனங்களை மனப்பாடம் செய்துதான் என்னைப் போன்றவர்கள் தமிழை எழுதவே கற்றுக்கொண்டோம்.

மக்கள் நலனுக்காக அரசு ஆவணங்களில் கையெழுத்திட மட்டும் முதல்வர் தனது பேனாவைப் பயன்படுத்தக்கூடாது. எங்களுடைய கலையுலகத்துக்காகவும் அவர் அடிக்கடி தனது பேனாவைப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், “பெப்ஸி’ தலைவர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.முருகேசன், இயக்குநர் கே.பாக்யராஜ், இளவேனில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, உதய்கிரண், நடிகை மனோரமா, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

admin @ 11:18 pm
Filed under: news
Sania, Chia pair exiled from wimbledon womens doubles

Posted on Sunday 28 June 2009

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் போட்டி : சானியா, சியா ஜோடி தோல்வி

sania1.jpg

ண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ஏற்கனவே ஒற்றையர் போட்டியில் வெளியேறி விட்டார்.

இந்த நிலையில் நேற்று மகளிர் இரட்டையர் 2வது சுற்று ஆட்டத்தில் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்தவர் தைபேயைச் சேர்ந்த சியா ஜங் சுவாங் ஆவார்.

இருவரும் இணைந்து, அல்லா குத்யாவ்த்சேவா - மோனிகா நிகலஸ்கு ஜோடியை சந்தித்தனர்.

இந்தப் போட்டியில், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வியுற்றது.

தற்போது சானியா கலப்பு இரட்டையர் போட்டியில் மட்டும் மிஞ்சியிருக்கிறார். மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆடி வரும் சானியா 2வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin @ 11:36 am
Filed under: news