Friday, 29 May 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம்
அகர் அகில் மரம் (அகில் சந்தன மரம்)
(AQUILARIA AGALLOCHA LINN.)
அகில்
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத்
தேவர்கள்
ஏத்தானே யேந்துநன் மாமுனி
வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக்
காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல்வினை
யடராவே
இது திருவாரூருக்குத் தெற்கே எட்டேகால் மைல் தூரத்தில் உள்ளது. இங்கு அகில் மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இது அகரு மரம் எனவும் குறிப்பிடப்பெறும். தமிழக மலைக்காடுகளில் வளரும் இம்மரம் சிறகு போன்ற கூட்டு இலைகளையும், சமமில்லாத சிற்றிலைகளையும் உடையது. முன்பு இமயமலையின் கீழ்நாடு பகுதிகள், அஸ்ஸாம், தென்னாடு போன்ற பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.
தற்போது அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது. இது ‘அகிலாரியாஅகலோச்சா லின்’ ‘AQUILARIA AGALLOCHA LINN’ என்னும் அறிவியல் பெயர் கொண்டு ‘மெலியசேயியே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
சித்த மருத்துவம்
பயன் உள்ள பகுதிகளாக கட்டையும், பிசினும் உள்ளது. சித்த மருத்துவத்தில் அகருக் கட்டை, அகிற்கட்டை, பூழில், காகதுண்டம் என அழைக்கப்படுகிறது. கார்ப்பு சுவையுள்ளது. இம்மரத்துக்கு வெப்ப முண்டாக்கும், பித்தநீர் பெருக்கும், வீக்கம் குறைக்கும் தன்மைகள் உள்ளன. இதன் கட்டையினால் மூக்கு அடைப்பு, ஒற்றைத் தலைவலி, வாதம், நமைச்சல், சிலவகை காய்ச்சல், வாந்தி, ருசியற்ற தன்மை, சோர்வு ஆகியவை நீங்கும். தளர்ச்சியான உடல் வலுவாகும்.
ஆயுர்வேத மருத்துவம்
கட்டை : இதனை நீர்விட்டு சந்தனம் போல அரைத்து உடலில் பூசி வந்தால் தளர்ச்சியான உடல் கெட்டியாகும்.
* இதன் புகை வாசனையால் சிலவகைக் காய்ச்சல் குணமாகும்.
* முகர்ந்து பார்த்தாலும், அல்லது இதன் புகை உடல் மீது பட்டாலும் சோர்வு, வாந்தி, ருசியற்ற தன்மை தீரும். புண்களுக்குக் கூட புகையை உபயோகிக்கலாம்.
தூள் : இதன் தூள் ஆண்மை பெருக்கத்துக்காக செய்யப்படுகின்ற மருந்துகளில் சேர்க்கப் பயன்படுகிறது.
தைலம் : அகில்கட்டை, குடிநீர், நல்லெண்ணெய், பசுவின் பால் 1 படி அளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து, அதில் அதிமதுரம், தான்றிக் காய்த் தோல் வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து, கலந்து, எரித்துப் பதமாக வடித்தெடுத்துக் கொண்டு வாரம் 2 முறை தலை முழுகி வந்தால் நீர்க்கோவை, பீனிசம், மேகம் ஆகியவை குணமாகும்.
பொடி : 100 மி.லி கொதிக்கும் நீரில் அகில்பொடி 20 கிராம் போட்டு 180 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி 20 மி.லி.யாகச் சுண்ட வைத்து, சாச்கரையைச் சேர்த்து காலை, மதியம், மாலையெனச் சாப்பிட்டால் உடலுக்குக் கிளர்ச்சியும், பலமும் உண்டாகிறது.
பிற செய்திகள் : மரத்தின் கட்டைப்பகுதி எண்ணெய் நிரம்பியது, பயனுள்ளது. இதனை AGAR WOOD எனவும், EAGLE WOOD எனவும் அழைப்பர். ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, அஜீரணம், கை, கால் விளங்காமை முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் மேல் பூச்சாகப் பூசி வந்தால் சிலவகை தோல் வியாதிகளைப் போக்குகிறது.
யுனானி மருத்துவம்
இயல்பு : உஷ்ணம்-2, வறட்சி-2.
பயன்படும் உறுப்பு : விறகு
பண்புகளும் பயன்களும் : இதயம், மூளை, கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு வலிமை தருகிறது. வாயுத்தொல்லையை நீக்குகிறது. “ஜலவாரிஷே ஊது” என்பது இதன் புகழ்பெற்ற கலவையாகும். இது இரைப்பை பலவீனம், பசியின்மையைப் போக்கப் பயன்படுகிறது. ஆண்மைச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளுடன் கலந்து சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க இதை வாயில் வைத்துச் சுவைப்பார்கள். சிறுநீரக பலவீனத்தைப் போக்கவும், வயிற்றுக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கும் பயன்படும்.
தீய விளைவுகள் : உஷ்ண குணம் உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
தீர்க்கும் நோய்கள் : இதயம், மூளை, கல்லீரல், இரைப்பை பலவீனம், வாயுத்தொல்லை, ஆண்மைக்குறைவு, சிறுநீரக பலவீனம்.
சிறப்புக் குறிகள் : இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்கு வலிமை தருகிறது.
அளவு : 3 கிராம் முதல் 4 கிராம் வரை பயன்படுத்தவும்.
அனுபானங்களும் பத்தியங்களும் : இத்துடன் கற்பூரம் மற்றும் ரோஜா கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்று மருந்தாக இலவங்கப் பட்டை, கரன்ஃபல், குங்குமம் முதலியவற்றைப் பயன்படுத்தலாம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
திருக்காறாயில் என்னும் திருக்கோயிலில் அகில் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இது அகருமரம் எனவும் அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களில் காழ்வை என்று குறிஞ்சிப் பாட்டிலும், ‘அகரு’ என்று பரிபாடலிலும் குறிப்பிடப்படுகின்றது. ‘காழ்வை’ என்பதற்கு பரிமேலழகர் ‘அகில்’ என்று உரை எழுதியுள்ளார்.
இது மிகவும் வன்மையான வைரம் பாய்ந்த மரம், எப்பொழுதும் தழைத்திருக்கும் தன்மையுடையது. தமிழ்நாட்டில் பெருமளவில் வளர்வதாகக் குறிப்புகள் காணப்படவில்லை.
இத்தாவரக் குடும்பத்தில் 11 பேரினங்கள் இந்தியாவில் வளர்கின்றன. 2 இனங்கள் அஸ்ஸாம், பூட்டான் காடுகள் மலைப்பகுதிகளில் வளர்கின்றன. மேலும் கிழக்காசியா, மலேயா, சீனா, மலாக்கா முதலிய பகுதிகளிலும் காணப்படுகிறது எனவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































