Friday, 22 May 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
கன்னியாகுமரி அகத்தீஸ்வரம்
அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம்
அகத்தி மரம்(SWAMP PEA)
அகத்தி மரம் பொதுவாக வெற்றிலைத் தோட்டத்தில் பயிரிட்டு அம்மரத்தின் மீது வெற்றிலைக் கொடியைப் படரச் செய்வார்கள்.
அகத்திக் கீரையை ஆடுகள் மிகவும் விரும்பித் தின்னும். இதனால் அதிக அளவில் பாலும் சுரக்கும்.
அகத்திக் கீரையை சமைத்து கீரையாக சாப்பிடுவதும் உண்டு. ஒரு நோய்க்கு சிகிச்சை பெறும்போது அகத்திக் கீரையை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது மருந்தின் தன்மையைக் குறைக்கும் என்பார்கள். அகத்திக்கீரையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது.
மருத்துவப் பயன்கள்
அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது. இதற்கு அகத்திக் கீரையை நன்றாகச் சுத்தம் செய்து 4 மடங்கு வெங்காயம் சேர்த்து சூப் தயாரித்து தினசரி 1 வேளை குடிக்கலாம்.
இலைகளை அரைத்து காயங்கள் மீது பற்றுப் போடலாம். கீரையைச் சமைத்து சாப்பிட்டால் பேதியாகும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
அகத்தியின் வேறு பெயர்களாக அச்சம், முனி, கரீரம் என அழைக்கப்படுகிறது. தாவரப்பெயர் SESBANIA GRANDIFLORA என்பதாகும். சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என பலவகை அகத்திகள் உள்ளன. இதிலும் அகத்தி - செவ்வகத்தி என 2 பிரிவு உள்ளது. இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்றே. வெள்ளைப் பூவுடையது அகத்தி எனவும், சிவப்பு நிறம் கொண்டது செவ்வகத்தி எனவும் அறியலாம். இதன் இலை, பூ, பட்டை, வேர் எனும் பாகங்கள் பயன்படுகின்றன. இவை கார்ப்புத் தன்மை கொண்டவை. இலை குளிர்ச்சி தரும், மலம் இளக்கும், புழுக்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை.
இது மருந்தின் தன்மையை முறிக்கும், உடல் பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் பெற்றவை.
அடிக்கடி சாப்பிட்டால் ரத்தத்தைக் கெடச்செய்து, சொறி, சிரங்குகளை உண்டாக்கும். ரத்தம் குறைந்து, உடம்பு வெளுக்கும், உடல் வீக்கமடையும், வயிற்று கடுப்பு, பேதி போன்றவை உண்டாகும். ஆனால், வயிற்றில் உள்ள புழுக்கள் மடியும்.
வேறு வகையான காய்ச்சல் கொண்டவர்களுக்கு உடம்பில் மேலாகப் பூசினால் சூடு குறையும், தலையில் பூசிக் குளித்தால் சொறி நீங்கும்.
அகத்திக் கீரைச்சாறு ஒரு பங்கும், தேன் ஐந்து பங்கும் சேர்த்து கலந்து ஊறவைத்து தலை உச்சியில் விரல்களால் தடவி வந்தால் குழந்தைகளுக்கு நீர்க்கோவையும், மூக்கில் விட்டால் தலைவலியும் நீங்கும்.
பூக்கள் : இதன் பூக்களின் சாற்றை கண்ணில் பிழிந்தால் கண்நோய் நீங்கும்.
இலைகள் : இலைகளைச் சமைத்து சாப்பிட்டால் வெயில், புகையிலை, சுருட்டு போன்றவற்றால் ஏற்பட்ட நோய்கள் போகும். சாறுபிழிந்து மூக்கில் விட்டால் தலைவலி குணமாகும். மண்டைச் சளி வெளியேறும். சில பஸ்பங்கள் செய்யப் பயன்படுகிறது.
பூ : மூக்கின் வழியாய் ஒழுகுகின்ற இரத்தப்போக்கை நிறுத்தி சூடு தணிக்கும்.
மரப்பட்டை : இதனை முறைப்படி குடிநீர் செய்து அம்மைக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்குக் கொடுத்து வரலாம். தண்டின் சாறு பெரியம்மையைக் குணப்படுத்தும்.
மேலும் தண்ணீர் தாகம், உடல் எரிச்சல், கை எரிச்சல், ஆண் உறுப்பின் எரிச்சல் போன்றவற்றைக் குணமாக்கும்.
இப்பட்டையுடன், ஊமத்தை வேர் சம அளவாகச் சேர்த்து அரைத்து வாத வீக்கத்துக்கும், கீல் வாயுக்களுக்கு பற்றும் போடலாம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீஸ்வரம் எனும் ஊர் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 6கி.மீ. தொலைவிலும், நாகர்கோயிலில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கொட்டாரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இந்த அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் அகத்திய முனிவர் தன் மனைவி லோப முத்திரையுடன் வந்து அகத்தீஸ்வரர் மற்றும் அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி தெய்வங்களை வழிபட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்தக் கோவிலின் தலவிருட்சமரமாக அகத்தி மரம் உள்ளது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































